PDA

View Full Version : நதிமூலம் (நாவல்) (48) -நட்சத்ரன்



natchatran
05-03-2005, 06:21 AM
நதிமூலம் (நாவல்)

-நட்சத்ரன்

அத்தியாயம்-48

மயக்கத்திலிருந்து விடுபட்டபோது மூர்த்திக்கு ஒரு கணம் ஒன்றும் புரியவில்லை. மெதுவாய் இமைகளைத் திறந்து தலைசாய்த்துப் பார்த்தான். அவனருகில் கவலைதோய நின்றிருந்தார்கள் சேகரும் சுசீலாவும்.

"அப்பாடா! என்ன மூர்த்தி இப்படி கொஞ்ச நேரத்துலே கதிகலங்க வச்சுட்டெ! அடிக்கடி ஒனக்கு இப்பிடி மயக்கம் வருமா?" என்று கவலைதோயக் கேட்டான் சேகர்.

"எப்பவாவது லேசா தலை சுத்தும்.ஆனா இப்பிடி அன்கான்ஷியஸ் ஆனதில்லே" என்றான் மூர்த்தி. குரல் கம்மி பிசிறு தட்டியது.

"நீங்க தொபுக்கடீர்னு ஸ்டூல்லேர்ந்து விழுந்ததைப் பாத்தா ஒங்களுக்கு என்னமோ ஆயிடுச்சுன்னுதான் நெனைச்சோம்! ரெண்டுபேரும் வாரிச் சுருட்டிக்கிட்டு ஓடியாந்து பாத்தா, நீங்க மண்ணுலே விழுந்து கெடக்குறீங்க! நல்லவேளை, கீழே மணல் போட்டிருந்ததாலே அடியேதும்படலெ! இவரு ஒங்க மூக்குலெகூட விரலெ வச்சுப் பாத்தாரு! மூச்சு இருந்தது. அப்பறம்தான் எங்களுக்கு உசுரே வந்துச்சு!" அங்கலாய்த்துப் புலம்பினாள் சுசீலா.

"நீ கீழே விழுந்ததுமே சுசியும் நானும் காலையும் தலையும் பிடிச்சு அலாக்காத் தூக்கி வீட்டுக்குள்ளே கொண்டாந்துட்டோம்ப்பா! நீ மயக்கமாக் கெடக்குறதெ யாராவது பாத்துட்டா தப்பாப் போயிருமில்லையா! சும்மாவே ஊர்லெ நமக்கு பெத்தபேரா இருக்கு! கண்ணுலெ வெளக்கெண்ணெயே ஊத்திக்கிட்டு என்னையெ நோட்டம் வுட்டிட்டிருக்காங்கே!" என்றான் சேகர்.

"ஆமா இவ்ரு யோக்கியரு! தெனம் ஒருத்தி கூட சுத்திக்கிட்டு அலஞ்சா ஊரு பாக்காமெ என்ன பண்ணும்! கோயில் கட்டி சாமியா கும்புடும்!" என்றாள் சுசீலா.

"சீ போடி...நீ வேறே ஆரம்பிச்சுறாதே! அப்றம் நிறுத்தவே மாட்டே! நா திரும்ப ஏதாவது பண்ணணும் அப்றம்!" என்று அவளை அதட்டினான் சேகர்.

அப்போதுதான் மூர்த்திக்கு உறைத்தது, தான் படுத்திருப்பது சுசியும் சேகரும் சற்றுமுன் படுத்திருந்த பாயில்தான் என்பது! சட்டெனெ எழுந்து உட்கார்ந்த மூர்த்தியிடம் "ஏய்! பாத்துப்பா! ஏம்ப்பா இப்பிடி வேகமா ஏந்திரிக்குறே! திருப்பி ஒனக்கு மயக்கம் வந்துச்சுன்னா ஏங்கதி அதோகதிதான்! பேசாமெ கொஞ்சநேரம் படுத்திருந்துட்டு மயக்கம் தெளிஞ்சவொடனே ஏந்திருச்சு வா! எனக்குக் கொஞ்சம் தைக்கிற வேலையிருக்கு" என்று சொல்லிவிட்டு கீற்று வீட்டை விட்டு வெளியேறினான் சேகர்.

"கிட்டத்தட்ட ஒருமணி நேரத்துக்கு மேலெ இப்பிடியே மயக்கத்துலே கெடக்குறீங்க மூர்த்தி! உங்க கண்ணுவேறே சுத்திச்சுத்தி சொழண்டுகிட்டே இருந்துச்சு! நானும் சேகரும் ரொம்பப் பயந்துட்டோம்!" என்றாள் சுசீலா, மூர்த்தியின் கண்களை ஆழ்ந்து பார்த்தபடி.

"என்னாச்சுன்னே தெரியலை சுசீலா! திடீர்னு யாரோ என்னெக் கூப்புடறாப்லெ இருந்துச்சு! அதும் ஒரு தெரிஞ்ச பொண்ணோட குரல் மாதிரி இருந்துச்சு! அப்றம் அப்டியே விழுந்ததுதான் தெரியும்!"

"எப்டியோ நல்லதுதான் நடந்துருக்கு மூர்த்தி ஒங்களுக்கு! இல்லாட்டி இவரு மாதிரி நீங்களும் ஆய்டுவீங்க! இவர்தான் பொம்பலெ பித்துப்பிடிச்சு அலையிறாரு ஊரூரா, காடுகாடா!" என்ற சுசீலா விடாமல் அவன் கண்களையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவள் பேசுவதை தையல் மெஷினுக்கு அருகிலிருந்து கேட்ட சேகர், "சக்கழுதே! இந்தப்பக்கம் வாடி! மூர்த்தி ரெஸ்ட் எடுக்கட்டும்! நானா அலையிறேன்! சும்மா இருந்தா எங்கடி வுடுறீங்க? எல்லா நாய்ங்களும் அரிப்பெடுத்து அலைவீங்க! அப்றம் பழியெ எங்க மேலெ போட்டுட்டுப் போயிடுவீங்க! உங்களையெல்லாம் நம்புறம்பாரு, என்னையெ நானே செருப்பாலெ அடிச்சிக்கணும்டி!" என்று பொரிந்துகொண்டிருந்தான்.

சுசீலா மூர்த்தியையே ஒரு கணம் ஆழமாகப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளது அகலமான, மை அப்பிய கருவிழிகள் அவனிடம் எதையோ சொல்ல வந்தன. அவனும் அவள் கண்களை ஊடுருவிப் பார்த்தான். எல்லாம் க்ஷண நேரம்தான்! அதற்குள் சேலையைத் தூக்கிப் பிடித்தபடி கோலமயிலெனத் தாவி வெளியேறிவிட்டாள் சுசி!

போதும். இது போதும். சேகருக்குக்கூட இந்த அபூர்வப் பார்வை கிட்டியிருக்குமா என்று தெரியவில்லை. கள்ளங்கபடமற்று சிரத்தையேதுமற்று வெளிப்படையாக உள்நுழைந்த தீபார்வையல்லவா இது! இதைவிடத் தித்திப்பு எந்த உறவில் இருக்கும்! இப்படியொரு க்ஷணக்கலப்புக்கு என்னதான் பேர்?

கீற்றுக்கூரையின் முகட்டைப் பார்த்தபடி யோசித்துக் கொண்டிருந்தான் மூர்த்தி. அவன் மனசில் சொல்லமுடியாத அமைதியொன்று குடிகொண்டது. எத்தனை காலம் உறவு என்பதா முக்கியம்! ஒரு க்ஷணம் எனினும் உறவின் கச்சிதம்தானே கணக்கு!

மூர்த்திக்கு சாப விமோசனம் கிட்டியது போலாயிற்று. போன ஜன்மத்து விட்டகுறை தொட்டகுறையை நிவர்த்திக்கவே அவனுக்கு இப்பிறவி கிட்டிற்றோ! வாழ்க்கை எவ்வளவு அழகானது! அதில் இந்த சுசீலாக்களின் பார்வைக்குத்தான் எத்தனை காந்தி! எத்தனை ஈர்ப்பு! எத்தனை வசீகரம்!

அவன் மூக்கில் நசுங்கிய மல்லிகை வாசம் கமகமத்தது. கோரைப்பாயின் ஓரமாய் ஒரு மல்லிகை மொட்டு உதிர்ந்து கிடந்தது. அதை வலதுகையால் எடுத்து முகர்ந்து பார்த்தான். இந்த சுசீலாதான் எப்படி மணக்கிறாள்!

தான் மயங்கி விழுந்தது இப்படியொரு அனுபவத்துக்காகத்தானோ! வாழ்க்கையில் எது எப்போது எப்படி நடக்குமோ யார் கண்டது!

திடீரென அவனுள் அடிக்கடி சுழலும் முகங்களின் வட்டச்சுழல் எழும்பி அலையாடியது. மாறிமாறி எண்ணற்ற பெண்முகங்கள் அச்சுழலில் பிம்பங்களாய்ச் சுற்றிச் சுழன்றன. கடைசியில் அந்தச்சுழல் நிதானத்துக்கு வந்து நிலைத்தது. கடைசியாய் அச்சுழலில் மிஞ்சிநின்றது தட்ஷிணியின் முகம்!

எத்தனை ரம்மியமானது அம்முகம்! அதனுடன்தானே அவன் சற்றுமுன் இருண்மையின் ஆழத்தில் நின்று உறவாடினான். அவன் மயக்கத்தின் இருளில் மூழ்கியிருந்த கணங்களில் கனவாய் அவனை ஆக்ரமித்து அவனிடம் சல்லாபம் செய்தது தட்ஷிணியின் முகம்தானே! தட்ஷிணியின் அந்த அதிகமும் இல்லாத குறைவும் இல்லாத அளவான கூந்தல் கன்னங்கரேலென ஈரமாய் வழவழப்பாய் அவன் மார்பில் படிந்து அவன் முகத்தை மூழ்கடித்ததே! அவளது அணைப்பின் உக்கிரம் தாங்காமல் அவனுக்கு மூச்சுத்திணறிற்றே!

தட்ஷிணியின் அந்த நிழல் விடாமல் முனைந்து அவனை தன்னுள் முற்றும் முழுசாய் நுழைத்துக் கொண்டதே! இத்தனை நேரமும் கனவாய், நிஜமாய், மாயமாய் சூட்சுமமாய் ஆக்ரமித்து அவனை மயக்கத்திலாழ்த்தியது அவள்தானே! அட! இப்படியெல்லாம் நடக்குமா என்ன! இந்த உறவைப்பற்றி எப்படிச் சொல்வது! யாரிடம் இதைப்போய்ச் சொல்வது! சொன்னால்தான் யாராவது நம்புவார்களா என்ன!

என் முகத்தில் எதைக்கண்டு என்னை அப்படி என்னை விழுங்குவதுபோல் பார்த்தாள் சுசீலா! பெண்கள் மாயாவிகள்! அவர்களுக்கு ஓர் ஆணின் மனசில் உள்ளதெல்லாம் அப்பட்டமாகத் தெரியும் என்று அவன் எங்கோ படித்திருந்தது இப்போது அவனுக்குச் சட்டென ஞாபகத்துக்கு வந்தது.முதலில் தட்ஷிணியோடு சூட்சுமக் கலப்பு, பிறகு சுசீலாவோடு கண்கலப்பு! ரெண்டுபேரும் இங்கு ஒரே புள்ளியில் இணைந்துவிட்டார்கள். ரெண்டுபேரும் ஒன்றாகி ஒன்று கலந்துவிட்டார்கள் அவனுள்! இரு கலப்பையும் எவ்வகையிலும் குறைத்து மதிப்பிட்டுவிட இயலாது. இரண்டுமே கனமானவைதான். இரண்டுமே அவனுக்கு அதிசயம்தான்! அபூர்வம்தான்!

மெதுவாய் மண்தரையில் விரிக்கப்பட்டு ஜில்லென்றிருந்த கோரைப்பாயிலிருந்து எழுந்து தட்டிக் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தான் மூர்த்தி. அவன் உடல் லேசாகி பஞ்சுபோல் ஆகியிருந்தது. கால்கள் மரத்துப் போனதுபோலிருந்தன. தலையில் சுள்ளென்று படிந்த உச்சிவெயில் அவனுக்கு உணக்கையாய் இன்பமாய் இருந்தது. முன்புறத் திண்னையில் சேகரின் கால்கள் தையல் மெஷினின் பெடலை ஒரு லயத்தோடு இயக்கிக்கொண்டிருந்தன. அவன் பின்னே சுசீலா உட்கார்ந்திருந்தாள். அவள் கண்கள் அலைபாய்ந்து கொண்டிருந்தன.

மூர்த்தி மீண்டும் சுசீலாவைப் பார்த்தபடி சேகருக்கருகில் சென்றான்.

"இப்பிடி உக்காரு மூர்த்தி" என்ற சேகர், "நீ மயக்கத்துலே கெடந்தப்போ ஒன்னோட வாயி என்னவெல்லாம் ஒளறுச்சு தெரியுமா? ஏதோ ஒரு பொண்ணோட பேரெ அடிக்கடி சொல்லிக்கிட்டேருந்தே தெரியுமா?"

"என்ன பேரு சேகர்?"

"ஏதோ புதுப்பேரா இருந்துச்சு! ஒம்மேலே ஏதோ பேய்பிசாசு பூந்துருச்சோன்னு கவலையாய்டுச்சு மூர்த்தி!"

"பேயில்லெ சேகர்! அது தட்ஷிணி!"

"அப்பிடீன்னா?"

"அப்படீன்னா... அவ என் ப்ரெண்டு! காலேஜ்லெ ஏங்கூடப் படிக்கிறா!"

"ரெண்டா, லவ்வா! அவபேரச் சொல்லிக்கிட்டு இப்பிடிப் பொலம்புறே!"

"சாரி சேகர்! ஓங்கிட்டே சொல்லாமெ மறைச்சுட்டேன்! அவளெ நான்..."

"லவ் பண்றீங்க! அதானே மூர்த்தி?" என்றாள் சுசீலா.

"ஆமா!"

"அவதாம்ப்பா உன்னைத் தடுத்திருக்கா! இல்லாட்டி இந்நேரம் சவுக்குத்தோப்புலெ போயி அங்கையர்க்கண்ணியோட வலைக்குள்ளே விழுந்து சிக்கிச் சின்னாபின்னமாயிருப்பே!"

"அதெல்லாம் ஒண்ணுமில்லே சேகர்! நா எதுலேயும் அப்படியொண்ணும் சிக்கிக்க மாட்டேன்!"

"நீ உண்மையிலேயே பெரிய ஆளுதாம்ப்பா மூர்த்தி! எல்லா அனுபவமும் உனக்கு வேணும்னு நெனைக்கிறே! அதானே?"

"ஆமாப்பா! எனக்கு இப்போ சவுக்கத்தோப்புக்கு போகத் தோணலே! ஆனா, அங்கையர்க்கண்ணியெ பாக்கணும்போலருக்கு!"

"அதெதுக்கு மூர்த்தி! அதெல்லாம் மறந்துருங்க இனி! அதான் நீங்க அந்த தச்சிணியெ லவ் பண்றீங்களே!" என்றாள் சுசீலா.

"அதுக்கில்லே! சும்மா...சும்மாதான்! சும்மா அவளைப் பாக்கணும்போலருக்கு!" என்று இழுத்தபடி சேகருக்கருகில் கிடந்த மரஸ்டூலில் அமர்ந்தான் மூர்த்தி.

தைத்துக்கொண்டிருக்கும் துணியைப் பார்த்தபடி தையல் மெஷினை இசைபோல் இயக்கிக்கொண்டிருந்த சேகர், "எதுக்குடி மூர்த்தியோட ஆசையெக் கெடுக்கணும்! நாளைக்கி அவளெ கடைக்கிக் கூட்டிட்டு வா!" என்றான்.

"சரி" என்ற சுசீலா குனிந்தபடி துணி தைத்த சேகரின் முதுகுப்புறத்தில் தெரிந்த மூர்த்தியின் முகத்தையே உறுத்துப் பார்த்தப்டியிருந்தாள். அவளது கருவிழிகள் அவனது கருவிழிகளோடு புதையுண்டு மூழ்கி நீர்கசிந்து உருகின.

(தொடரும்..)

பரஞ்சோதி
05-03-2005, 06:49 AM
நட்சத்திரன் அண்ணா,

நீண்ட நாட்களாக உங்கள் கதையை படிக்கவில்லை. இன்று படித்து முடிக்கிறேன்.

கருத்துகள் இல்லை என்றாலும் தொடர்ந்து எழுதும் உங்களுக்கு எனது வணக்கங்களும் நன்றிகளும்.