PDA

View Full Version : நதிமூலம் (நாவல்) (47) -நட்சத்ரன்natchatran
05-03-2005, 06:18 AM
நதிமூலம் (நாவல்)

-நட்சத்ரன்

அத்தியாயம்-47

" விட்டத்தில் சுழலும் பேனைப் பார்த்தபடி மல்லாக்கப் படுத்துக்கிடந்தாள் தட்ஷிணி. சத்யா இறந்து ஏழெட்டு நாள் ஆகியும் கரிந்து போன அவள் முகம் இன்னும் தட்ஷிணியின் மனசைவிட்டு அகலவில்லை. சுழலும் பேனின் வட்டக் கோடுகளூடே சத்யாவின் சிதைந்து போன முகம் குழந்தை கிறுக்கிவைத்த கருப்பு மை ஓவியம்போல் சுழன்று கொண்டிருந்தது. முற்றிலும் எரிந்து சிதைந்திருந்த சத்யாவின் முகத்தைப் பார்த்தது தப்பாகிவிட்டது. போலீஸ் வருவதற்குள் கூட்டத்தோடு கூட்டமாய் தட்ஷிணியும் எட்டிப் பார்த்துவிட்டாள். அவள் முக்கியமாகப் பார்த்தது சத்யாவின் வயிற்றுப் பகுதியைத்தான்! அவளுக்கு மட்டுமே தெரிந்த அந்த அதிரகஸ்யம்-அந்தப் பிஞ்சுக் கரு-எரிந்து உருத்தெரியாமல் சிதைந்துபோயிருந்த கொடுமை இன்னும் தட்ஷிணியைப் பிடித்து உலுக்கிக்கொண்டிருந்தது. யாருக்கும் தெரியாமல் காற்றோடு கரைந்துபோன அடையாளம் தெரியாத ஒரு தூரத்துப் பறவையின் கூக்குரலாய் மறைந்துபோனது சத்யாவுக்குள் வளர்ந்த அந்தத் தளிர்.

"தட்ஷி! உனக்கு மட்டும்தாண்டி சொல்லிருக்கேன், எனக்குள்ளே கரு வளர்றதெ! குரு ஊருக்குப் போயிட்டார்! அவருக்கே இன்னம் தெரியாது!"

இப்படியா கொடூரமாய் முடிவெடுப்பாள் இந்த சத்யா! நினைத்து நினைத்து அழுதழுது காய்ந்துபோன கண்களில் இனி அழ ஏதுமில்லை. வேகமாய்க் கலைந்து கரையும் காலப் புதைமணலின் ஆழத்தில் கொஞ்சங் கொஞ்சமாய் மறைய ஆரம்பித்தாள் சத்யா. அவள் முகமும் குரலும் அசைவுகளும் வரவர தட்ஷிணியின் மனசில் நிறம்மாறி மங்கிவருவதை தட்ஷிணி உணர்ந்தாள். அவளுக்குள் இந்த வாழ்க்கை பற்றியும் இதன் நிலைத்தன்மை பற்றியுமான கேள்வி முளைவிட்டு வளர ஆரம்பித்தது.

சத்யாவின் முடிவு சத்யாவுக்கு மட்டுமான முடிவுபோல் தெரியாமல், தட்ஷிணிக்கும் இதில் ஏதோவொரு நூலிழைத் தொடர்பிருப்பதாய்ப்பட்டது தட்ஷிணிக்கு வியப்பாயும் பயமாயும் இருந்தது. அப்படிப்பட்ட தொடர்பை, அதேபோன்றதொரு எதிர்கால நிகழ்வை தன் வாழ்விலும் நினைத்துப்பார்த்து மீண்டும் மீண்டும் பயந்தாள் தட்ஷிணி. அடிக்கடி மனக்கண்ணில் தோன்றி கிலியுறச்செய்யும் அந்த நினைவிலிருந்து மீழ ஏதாவது உடனடியாய் செய்தாக வேண்டும். அதுவும் இப்போதே செய்தாகணும்! இல்லாவிட்டால் அவளுக்குப் பைத்தியம் பிடிப்பது உறுதி!

சத்யாவின் அப்பாபோல் தன் அப்பாவும் ஆகிவிட்டால்!? மூர்த்தியை ஓரங்கட்டி ஒதுக்கிவிட்டால்! என்னிடமிருந்து என் மூர்த்தியை அநியாயமாய் என்னிடமிருந்து பிரித்துவிட்டால்!

மெதுவாய் எழுந்து பாத்ரூமுக்குப் போய் மேலுடைகளைக் களைந்துவிட்டு ஷவரைத் திருகிவிட்டாள் தட்ஷிணி. அழுதழுது வறண்டு பகபகவென எரிந்துகொண்டிருந்த கண்களிலிருந்து சூடான ஆவி வெளியானது. அதேநேரம், ஷவரின் நீர்த்திவலைகளூடே ஒரு குளிரான விருட்சத்தின் நிழல்போல் வந்துநின்றது மூர்த்தியின் உருவம்!

இத்தனை நாளா கிராமத்தில் என்ன பண்ணிட்டிருக்காரோ மூர்த்தி! அட! மூர்த்தியை அவர் இவர் என்று அழைக்கும் எண்ணம் எப்போது வந்தது எனக்கு?

"மூர்த்தி! எப்ப வருவீங்க மூர்த்தி! லீவு முடிஞ்சு எப்படா வருவே? சொல்லுடா!" நீர்த்திவலைகளூடே அவளது நிர்வாணத்தின் பேரழகைப் பார்த்து இம்மி இம்மியாய் ரசித்துக்கொண்டிருந்த மூர்த்தியின் நிழலிடம் வாய்விட்டுப் பேசினாள் தட்ஷிணி. சட்டென சுயத்துக்குத் திரும்பியவள், தான் இப்போது பேசியதை அம்மாவோ அப்பாவோ பாத்ரூமுக்கு வெளியிலிருந்து ஒட்டுக் கேட்டிருந்தால் என்ன ஆகும் என்று நினைத்துக் கொண்டாள். அவள் மீது பொழிந்த ஷவர்ப் பூக்கள் அவள் கூந்தலையும் தோள்பட்டையையும் மெலிதாய் வருடி வழிந்தன. அவை அவளுக்கு மூர்த்தியின் கைவிரல் வருடல்களாகவே தோணின.

சத்யா பற்றிய ரணகளமான நினைவுகளிலிருந்து இப்போது அவளைக் காப்பாற்றிக் கரையேற்றுவது இந்த மூர்த்தியின் இந்த நிழல்தான்! அவள் சற்றுமுன் உடனடியாகத் தேடிய அருமருந்து இதுதான்போல! மூர்த்தி பற்றிய நினைப்புக்கும் அவன் பிம்பத்துக்கும் இத்தனை வலிவா! இத்தனை ஆற்றலா! இத்தனை அழகா! இத்தனை இனிமையா! தலைமீது கொட்டிக்கொண்டிருந்த அருவி மூர்த்தியேதான்!

குளித்தாள். குளித்தாள்...குளித்துக்கொண்டேயிருந்தாள்! எவ்வளவு நேரமாச்சோ தெரியவில்லை! அம்மா கதவைத் தட்டி "எத்தனை நேரம்மா பாத்ரூமுக்குள்ளேயே அடஞ்சு கெடப்பே?" என்று உரக்கக் கேடபோதுதான் அவள் ஷவரை நிறுத்தினாள். அதற்குள் அவள் முற்றும் முழுசாய் மூர்த்திக்குள் குளித்திருந்தாள். அதற்குள் மானசீகமாய், மாயமாய், சூட்சுமமாய் தன்னை மூர்த்தியிடம் அணுஅணுவாய் ஒப்புக் கொடுத்து விட்டிருந்தாள் தட்ஷிணி!

"இந்தா வர்ரேம்மா! துணி துவைச்சேம்மா!" அம்மாவுக்கு பதில் சொல்லிவிட்டு அவசரமாய் சுவரோர ஸ்டாண்டிலிருந்து சந்தன சோப்பை எடுத்து தன் மேனியெங்கும் பூசிக்கொண்டாள். சோப்பின் மெல்லிய சந்தன வாசம் அவளுக்கு மீண்டும் மூர்த்தியை உயிர்ப்பித்து அவளருகே கொண்டுவந்தது. மூர்த்தியின் வலிய விரல்கள் சோப்புநுரைக்குள் மறைந்து அவளின் மேனிப்பரப்பை வருடின. அவள் துடித்துத் துடித்துத் துடித்தாள். அவளது ஈர உடல் துள்ளித் தடுமாறித் துவண்டு தரையில் வீழ்ந்தது...அப்படியே சுவரோரமாய் சாய்ந்து மல்லாந்து படுத்துக்கொண்டாள்... துடித்துக்கொண்டிருந்த அவளது உடல் மெதுவாய் மெதுமெதுவாய் அடங்கிற்று. ஆனாலும் அந்த மயக்கத்திலிருந்து அவள் தன்னிலைக்குத் திரும்ப வெகுநேரமாயிற்று! ஷவரின் அருவி இன்னும் அவள்மீது மெலிதாய்ப் பூத்தூவிக்கொண்டிருந்தது. அப்படியே அதேநிலையில் அசையாமல் கண்மூடி மயக்கத்தில் கிடந்தாள் தட்ஷிணி.

"தச்சீ! தச்சீ! என்னம்மா பண்றே இன்னம்?" மீண்டும் அம்மாவின் குரல். மயக்கம் தெளிந்து மெதுவாய் சுய நினைவுக்கு வந்தவள் அவசரமாய் பூத்துவாலையை எடுத்து துவட்டிக்கொண்டு குளியலறை வாசலைத் திறந்து அம்மாவை எட்டிப்பார்த்தாள். அப்போது அவளையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தாள் அம்மா. அவள் முகத்தில் குழப்பத்தின் ஆழமான ரேகை வேர்விட்டுப் படர்ந்த்திருந்தது.

"தச்சீ! உடம்புக்கு ஒண்ணுமில்லையே உனக்கு? என்னதான் சத்யா ஓம் ப்ரெண்டா இருந்தாலும் அதுக்காக இப்பிடியா?! எங்களுக்கு மட்டும் வருத்தம் இல்லேன்னு நினைச்சியா! என்னடீ பண்றது! எல்லாம் விதி! பொண்ணாப் பொறந்தா எல்லாம்தான் நடக்கும்!" அம்மாவில் குரலில் சுரத்தில்லை.

"அம்மா! இப்போ ஏம்மா இப்பிடி பொலம்புறே? இப்பத்தான் ஒருவாரங்களிச்சு நார்மல் கண்டிஷனுக்கு வந்துருக்கேன்! நீ என்னடாண்ணா திரும்பவும் ஆரம்பிக்கிறே!" அம்மாவிடம் சூடாகப் பேசிவிட்டு மீண்டும் கதவைச் சாத்திக் கொண்டாள் தட்ஷிணி.

அம்மா ஒரு அப்பாவி.அவளுக்கு எதை எப்போ எப்படிப் பேசணுங்கிறதெல்லாம் ஏதும் தெரியாது! அவ்வப்போது எதுக்காவது எதையாவது உளறிவைப்பாள். அதற்காக அப்பாவிடம் அவள் கடுமையாகத் திட்டுவாங்கிய தருணங்கள் பல. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இடையிலான சண்டை சச்சரவுகள் மிகவும் சகஜமாகிப்போன சமாச்சாரம்தான்!

குளியலறை ஹேங்கரில் தொங்கிய நைட்டிக்கு மாறி வெளிவந்தாள் தட்ஷிணி. அம்மாவிம் புலம்பல் இன்னும் விடாமல் கேட்டது, "மணி பத்தரைக்கு மேல் ஆச்சு! இன்னம் காலை சாப்பாடு சாப்பிடாமல் குளிக்கிறாளாம்! இப்பிடியா மணிக்கணக்கா குளிப்பா ஒரு வயசுப் பொண்ணு!"

தட்ஷிணிக்கு தலை சூடாகிக் கொண்டே வந்தது. அம்மாவை அப்படியே கடித்துக் குதறிவிடலாம் போல் கோபம் வந்தது. அவளை ஒரு முறை முறைத்துவிட்டு கோபத்தை அடக்கிக்கொண்டாள்.

"சாப்பிட சீக்கிரம் வாடி! வயிறு காஞ்சுடும்! லீவுக்கு வந்ததிலேர்ந்து இப்டி தெனம் தெனம் பட்டினிதான் கெடக்குறே! உனக்கு என்னதான் ஆச்சோ தெரியலே!" பொரிந்தபடியே கிச்சனுக்குப் போய் தோசை வார்க்க ஆரம்பித்தாள் அம்மா.

இப்போதுதான் தட்ஷிணிக்கு பயங்கரமாய்ப் பசியெடுப்பது தெரிந்தது. அவசரமாய் தலையைத் துவட்டி உலர்த்தியபடி சாப்பாட்டு மேஜைக்கு ஓடினாள். அம்மா வார்த்திருந்த முதல் தோசை சட்னி சாம்பார் ஊற்றப்பட்டு அவளுக்காகத் தட்டில் காத்திருந்தது. அதை வேகவேகமாய் விண்டு விழுங்க ஆரம்பித்தாள் தட்ஷிணி. அதில் மூர்த்தியின் வாசமும் சுவையும் நிரம்பிப்பெருகி அவளது அதீதப் பசியைக் கொஞ்சங் கொஞ்சமாய்த் தீர்க்க ஆரம்பித்தது.

(தொடரும்..)