PDA

View Full Version : நதிமூலம் (நாவல்) (46) -நட்சத்ரன்natchatran
05-03-2005, 06:16 AM
நதிமூலம் (நாவல்)

-நட்சத்ரன்

அத்தியாயம்-46

" என்னப்பா மூர்த்தீ! டீக்கா ட்ரெஸ் பண்ணிட்டு அதுக்குள்ளியும் வந்துட்டே! மணி ஒம்பதுதான் ஆகுது! நானே இப்பத்தாம்ப்பா கடையெவே தொறந்தேன் என்று ஆச்சர்யப்பட்டான் சேகர்.

"ராத்திரி விடியவிடியத் தூக்கமே வரலே சேகர்! நீ வேறெ நல்லாக் கெளப்பி விட்டுட்டியா..." சோகமாய் புலம்பினான் மூர்த்தி.

"நா என்னத்தெ கெளப்பி விட்டேன்! இதெல்லாம் வயசுக் கோளாறுப்பா! இருபதுலே வராமே எழுபதுலேயா வரும்?"

"அத விடு! சுசீலா ப்ரெண்டு ஒத்துப்பாளாப்பா?"

"அதெல்லாம் பேசிக்கிறேம்ப்பா! இப்ப சுசீலா இங்கே வருவா! அப்ப நீயே அவகிட்டே பேசிக்கெ!"

"அய்யய்யோ! நான் பேசுறதா! அதெல்லாம் சரிப்படாதுப்பா!"

"உனக்குன்னு சொன்னா ஒத்துப்பாளுங்க மூர்த்தி! அவளும் ப்ளஸ் ட்டூ வரைக்கும் படிச்சிருக்கா போலருக்கு! எனக்கே அவ மேலெ ஒரு கண்ணிருக்கு! அவ பேருகூட..."

"என்னப்பா அவ பேரு?"

"வாய்க்குள்லேயே இருக்குது! வரமாட்டேங்குது! இரு யோசிச்சு சொல்றேன்!"

சேகர் யோசித்தபடி கத்திரிக்கோலால் ஒரு துணியை வெட்டிக்கொண்டிருந்தான். அப்போது சேகரை நோக்கி கையில் ஒரு மஞ்சள் பையுடன் சுசீலா வந்தாள்.

"அங்கே பாருப்பா! எப்டி தழுக் புழுக்குன்னு வர்ரான்னு! இப்பிடி நடந்துவந்தா எவம்ப்பா சும்மா விடுவான்?"

"ஏய்! சும்மாருப்பா! ஒன்னோட ஆளப்பத்தி நீயே இப்டி கமெண்ட் அடிச்சா அடுத்தவன் சும்மாருப்பானா!"

"இதெல்லாம் பாத்தா முடியுமா? வேண்ணா நீயும் சைட் அடிச்சுக்கோப்பா! காசா, பணமா!"

அதற்குள் அவர்கள் பேசுவதைக் கேட்டபடி நெருங்கி வந்துவிட்ட சுசீலா உண்மையிலேயெ தழுக் புழுக்கென்று சதைப்பற்றுடன்தானிருந்தாள்! மாநிறம்தான் என்றாலும் முகக் களையானவள்தான் சுசீலா! படிக்கும்போதே ஒரு கால்சட்டை விடலை வட்டம் அவளைச் சுற்றிச்சுற்றி வந்ததை மூர்த்தியும் அறிவான். அவனுக்கும் அவ்வப்போது ராத்திரி கனாக்களில் வந்து இன்பமூட்டியவள்தான் இந்த சுசீலா. ஒரு வகுப்பு குறைவாகப் படித்தாலும் அப்போதே நல்ல வாட்டசாட்டமாய் நல்ல பாவாடை சட்டையில் வலம்வருவாள் சுசி! மானசீகமாக அவளிடமும் உறவு கொண்டிருக்கிறான் மூர்த்தி! யாருக்கு மச்சமோ அவனுக்குத்தானே அழகிகள் கிடைப்பார்கள்?

பத்தியும் பத்தாமலும் உடம்பை ஒட்டி அவள் கட்டியிருந்த வெளிர்நீலப் பூப்போட்ட சேலையும் கையை அழுத்தி சிறு சதைமேட்டை அவள் கைகளில் உருவாக்கியிருந்த டைட்டான ஜாக்கெட்டும் அவள் உடம்பின் வளத்தை எடுப்பாக்கிக்காட்டின. நாலைந்து மாசத்துக்கு முந்தி எங்கோ தெருவில் பார்த்தபோது இருந்ததைவிட இப்போது ஒரு சுற்று பெருத்திருந்தாள் சுசீலா.

மூர்த்தி ஆ என்று வாய் பிளந்து பார்த்துக்கொண்டிருப்பதை எப்படியோ உணர்ந்து கொண்ட சுசீலா கூச்சத்தில் லேசாய் நெளிந்து பின் சுதாரித்து "எப்ப வந்தீங்க?" என்று மூர்த்தியின் கண்களை நேராகப் பார்த்துக் கேட்டாள்.

"ம்ம்! நாளைஞ்சு நாளாச்சு! எக்சாம் லீவுக்கு வந்திருக்கேன்!" என்றான் மூர்த்தி சன்னமான குரலில்.

"நல்லாச் சத்தமாப் பேசுங்க! ஏன் இப்டி வெக்கப்படுறீங்க! நாங்கதான் படிக்காமெ களை பறிச்சுக்கிட்டு நாத்துநட்டுக்கிட்டு திரியிறோம்! நீங்களாவது படிச்சு பெரிய்ய இன்ஜினீயரா வந்து இந்த ஊருக்கு ஆத்தைக் கடக்க ஒரு நல்ல பாலமா கட்டிக்குடுங்க!"

"நான் சிவில் கெடையாது! மெக்கானிக்கல்!"

"எனக்கு என்ன ஒங்க படிப்புபத்தி தெரியும்! மரமண்டு நானு. நீங்கதானே இந்த சுத்துப்பட்டு பதினெட்டுக் கிராமத்துலேயும் ரொம்ப மார்க்காம்!"

சிரித்துக்கொண்டான் மூர்த்தி.

"ஏண்டி! நீ உண்மையாவே மரமண்டுதாண்டி! மூர்த்தி சுத்துப்பட்டுக் கிராமத்துலே பர்ஸ்ட் ரேங்க் இல்லடி! மாவட்டத்துக்கே அவன்தான் பர்ஸ்ட்! ஆமா...! உன்னையெ எப்போ வரச்சொன்னேன்! இப்பத்தான் வர்றே! ஏழுமணிக்கு வீட்டுக்கு வாடின்னா கடையெத் தொறந்தபிறகு எதுக்குடி வந்தே?" என்று அவளை செல்லமாய்க் கடிந்துகொண்டான் சேகர்.

சுசீலா எதுவும் பதில் சொல்லவில்லை.அவள் ஏதோ சொல்ல வாயெடுத்து மூர்த்தி இருப்பதால் சொல்லாமல் விட்டுவிட்டாள்.

மூர்த்திக்கு ஒரு மாதிரி கூச்சமாயிருந்தது. ஆற்றங்கரைப்பக்கம் திரும்பி அங்கிருந்த தூர் பெருத்த புளியமரத்தைப் பார்த்தான். அதன் அடர்ந்த பசிய கிளைகளில் குட்டிப் பாம்புகளைப் போல புளியம்ப்ஞ்சுகள் நெளிநெள்யாய்த் தொங்கிக்கொண்டிருந்தன. அவன் மனக்கண்ணில் இப்போது நந்தினி வந்தாள். ஒரு புளியம்பிஞ்சை அவன் வாயில் திணித்துவிட்டு அவன் மடியில் ஒரு செல்ல நாய்க் குட்டியைப்போல படுத்துக்கொண்டாள்.

தன் தலையை உதறிக்கொண்டான் மூர்த்தி. அவன் காதுகளில் நந்தினியின் மயக்கமொழிகள் மெதுவாய் ஒவ்வொன்றாய் விழுந்து அவனுள் ஒரு கிளுகிளுப்பை உண்டுபண்ணின.

மூர்த்திக்கு முதுகைக் காட்டியபடி சுசீலா பக்கம் திரும்பி அவளிடம் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தான் சேகர். அவன் அவளிடம் சொன்ன சில வார்த்தைகள் சங்கேதமாய் இருந்ததால் மூர்த்திக்குப் புரியவில்லை. மத்தியானம்தானே வரச்சொல்லியிருப்பதாகச் சொன்னான் சேகர். இப்படி காலையிலேயே இப்போ எதுக்கு வந்தாள் இந்த சுசீலா?

"சரி ஓம் பிரண்டு பேரு என்ன சொன்னே? வாய்க்குள்ளேயே இருக்கு வரமாட்டேங்குது!" என்று சுசீலாவின் இடையில் கிள்ளியபடி கேட்டான் சேகர்.

"ஆ! என்று செல்லமாய் கத்திவிட்டு, சேகரின் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளியபடி, அவ பேரு அங்கையர்க்கண்ணி", என்றாள் சுசீலா.

"இவ்ளோ பெரிய பேரெ அவளுக்கு எவண்டி வச்சேன்? வாய்க்குள்ளேயே நுழையாத பேரா இருக்கு?!"

"ம்ம்! உங்கப்பா வச்சிருப்பார்! என்ன கேள்வி இது! அவளைப் பெத்தவங்கதான் வச்சிருப்பாங்க!"

இப்போது சேகரின் விரல்கள் சுசீலாவின் பின்புறத்தைப் பதம் பார்த்துக்கொண்டிருந்தது.

"ஆ..! வலிக்குது...மெதுவாக் கிள்ள மாட்டியா! தடிமாடு!" என்று சேகரின் தலையில் ஒரு குட்டு வைத்தாள் சுசி.

"மத்யானம் அங்கயர்க்கண்ணியெ மறக்காமெக் கூட்டிக்கிட்டு வந்துரு.." அவனை உரசியபடி இழைந்துநின்ற சுசீலாவின் காதுகளில் முணுமுணுத்தான் சேகர்.

"அவ எதுக்கு?" என்று கிசுகிசுப்பாய் கேட்டாள் சுசீலா.

"அதெ அப்பறம் சொல்லுறேன்! நீ கூட்டிக்கிட்டு வா."

"ஏன் இந்த மொகரைக்கு நா மட்டும் பத்தலையாக்கும்?"

எனக்கில்லேடி! நம்ம மூர்த்திக்கு! ரொம்ப காஞ்சு கெடக்கிறாப்பிலே, பாவம்!

சுசீலா மூர்த்தியைப் பார்த்தாள். அவள் கண்களில் ஒரு பரிவின் ரேகை இழையோடிற்று.

பிறகு சேகர் பக்கம் திரும்பி, "சரி! மத்யானம் கட்டாயம் கூட்டிக்கிட்டு வந்திர்றேன்! அவளுக்கும் அவங்க ஊர்லே யாரும் கெடைக்காமத்தான் இங்கே வந்திருக்கா! மூர்த்தின்னா அவளும் ஒத்துப்பா! என்றாள் சுசீலா.

"அடி செருப்பாலே! அப்போ நான்னா ஒத்துக்க மாட்டாளோ?"

"ஆமா! நீயும் ஓம் மொகரக்கட்டையும்! ஒனக்கு ஒரு நாளைக்கு நானே ரெண்டுமூணு தரம் வேணும்! இதிலே அவ வேறெயா! என்னை விட்டுட்டு அவகிட்டே ஏதாவது வச்சுக்கிட்டே, அருவாமணையெ எடுத்து தலையெச்சீவி கையிலே குடுத்துருவேன், ஆமா!"

மூர்த்திக்கு திக்கென்றிருந்தது.

மூர்த்தியின் முகத்தை திரும்பிப்பார்த்த சேகர், "மூர்த்தி! என்ன பயந்துட்டியா! இவ அப்பிடித்தாம்ப்பா எங்கிட்டே வம்பிழுப்பா! அவ அப்பிடிப் பேசினா, இப்பவே வாடான்னு அர்த்தம்! என்றவன் "கொஞ்சம் கடையெப் பாத்துக்க, யாராவது துணி கொண்டு வந்தா வாங்கி வையி..." என்று சொல்லிவிட்டு கடையின் பின்புறமிருந்த கீற்று வீட்டுக்குள் அவசரமாய்ச் சென்று மறைந்தான்.

தலைகுனிந்தபடி அவனை பின்தொடர்ந்துபோனா சுசீலா. அவள் முகம் நிறம் மாறி சிவந்துபோயிருந்ததை ஓரக்கண்ணால் பார்த்தான் மூர்த்தி. அப்போது சுசீலா வெகு அழகாய்த் தெரிந்தாள்.

புளியமரத்தைப் பார்த்தபடி வெகுநேரம் உட்கார்ந்திருந்தான் மூர்த்தி. அவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. எங்காவது போகலாம் என்றால் சேகர் கடையை வேறு பார்த்துக்கணும்!

அப்போது அங்கு இந்திரா வந்தாள். சேகர் கடையில் இல்லாததைப் பார்த்து, "எங்க போச்சு இது?" என்று மூர்த்தியிடம் கேட்டவள், மூர்த்தியை அடையாளம் கண்டுகொண்டு, "அட மூர்த்தீ! நீங்க எப்ப வந்தீங்க?" என்று கண்ணகலக் கேட்டாள்.

"லீவுக்கு வந்தேன்! நாலைஞ்சு நாள் ஆச்சு"

"உங்களை உக்கார வச்சுட்டு இவரு எங்க போனாரு?"

மூர்த்தி தவித்தான். அவளுக்கு எப்படிப் பதில் சொல்வது? மூர்த்தி நெளிவதைப் பார்த்த இந்திரா, "நீங்கதான் படிச்சு உருப்படியா வந்திருக்கீங்க! இந்த சேகரைப் பாருங்க! என்னையெ ஏமாத்திட்டு கண்டவளோட சுத்திக்கிட்டிருக்கு! நான் அதுக்கு அலுத்துப்போயிட்டேனாம்! அதோட விடல்லே! ஏம் தங்கச்சியையும் வளைச்சுப்போட்டு அவளக் கட்டிக்கிறேன்னு சத்தியமெல்லாம் பண்ணிட்டு இப்ப அவளையும் விட்டுருச்சு! ஆம்பளை இல்லாத வீடா எங்களுது... அதான் உங்களுக்குத் தெரியுமே, எங்கப்பா செத்து பத்துவருஷத்துக்கு மேலாச்சே, அதுனாலே இதெத்தான் நல்லது கெட்டதுக்கு அம்மா வச்சிருந்தது. இப்ப எங்களெ சுத்தமா தலைமுழுகிட்டு இந்த இவ இருக்காளே - சுசீலா - அவகூட சுத்திட்டிருக்கு!"

மூர்த்திக்கு தலை சுற்றியது. அவன் இந்திராவின் கண்களைப் பார்த்தான். அதில் கண்ணீர் சாரையாய்க் கொட்டி வழிந்தது.

மூர்த்தி பதறினான். இந்த நிலையில் யாரவது அவனைப் பார்த்துவிட்டால் தப்பாய்ப் போய்விடுமே!

"சரி! நான் போறேன்! சேகர் இப்போ எங்கே இருக்கும்னு எனக்குத் தெரியும்! சுசீலாவத்தான் பாக்கப் போயிருக்கும்! நீங்கவேறெ பாவம்! உங்களைக் கடைக்கிக் காவலாப் போட்டுட்டு போயிருச்சு! அப்ப வரட்டுமா..." மூக்கை உறிஞ்சிக்கொண்டாள் இந்திரா. முன்பு பார்த்ததைவிட இப்போது கொஞ்சம் உடம்பு இளைத்து சற்று வயசானவள்போல் தெரிந்தாள் இந்திரா. அவள் சீக்கிரமே முற்றிப்போனவள் என்பது மூர்த்திக்கு மட்டுமில்லை, கிராமத்துக்கே தெரியும்!

இந்திரா திரும்பிப் போவதையே பார்த்துக்கொண்டிருந்தான் மூர்த்தி. அவள் கால்கள் ஒன்றோடொன்று பின்னித் தடுமாறின. அவளிடம் பெண்மையின் நளினமோ வசியமோ கொஞ்சங்கூட மிஞ்சியிருக்கவில்லை. வறண்டு காய்ந்து வற்றலாகிப் போயிருந்தது அவள் பெண்மை.

மூர்த்தியின் மார்புப் பகுதியில் ஏதோ சில் உடைந்து கலகலத்தது. மனசுக்குள் ஒரு கூரான வலி வேர்விட்டு வேர்விட்டு வளர்ந்து அவன் கண்களுள் நீராய்த் ததும்பி வழிந்தது. சேகரும் சுசீலாவும் மூடப்பட்ட கீற்றுக் குடிலுக்குள்ளிருந்து இன்னும் வரவில்லை. இடக்கை மணிக்கட்டைத் திருப்பி கடிகாரத்தில் மணி பார்த்தான்.மணி பத்தரை.

ஏறுவெயில் தக்தகத்து ஆற்றங்கரை புளியமரக் கிளைகளில் மின்னி மிளிர்ந்தது.புளியமரத்தை உற்றுப்பார்த்தான் மூர்த்தி. அங்கு தொங்கிக்கொண்டிருந்த புளியம்பிஞ்சுகள் பாம்புகளாய் மாறி அவனைப்பார்த்துச் சீறின. அவன் திகிலுற்றான். கண்கள் கட்டி உலகம் இருண்டு போனதுபோலிருந்தது. எங்கும் ஒளியில்லை. கைகளும் உடம்பும் மரத்து சக்தியற்றுப்போவதை உணர்ந்தான் மூர்த்தி.

உட்கார்ந்திருந்த மர ஸ்டூலிலிருந்து தொப்பென்று தரையில் வீழ்ந்தான் மூர்த்தி. சத்தம் கேட்டு கீற்றுக்குடிசைக்குள்ளிருந்து சேகரும் சுசீலாவும் ஓடிவரும் காலடியோசை கிணற்றுக்குள்ளிருந்து கேட்பதுபோலிருந்தது மூர்த்திக்கு.

(தொடரும்..)