PDA

View Full Version : வாழட்டும் உலகம்



அக்னி
18-05-2012, 02:57 PM
வாழட்டும் உலகம்
என்றென்றும்
எம்மை
உள்ளிருத்திக்கொண்டு...

சிறுகச் சிறுகச் சிதைந்து
உக்காத எலும்புகள் ஆனதும்தானே
உள்ளாக்கப்பட்டோம் மண்ணுள்...

குவிந்து கிடந்த போதிலும்
ஒரு மிருகம்கூடக் குதறவில்லை,
அவையும் நம் கூடவே
குவிக்கப்பட்டுக் கிடந்ததால்...
ஆனால்,
அந்தக் குறையும் இருக்கவில்லை,
குதறிய மனித வெறியர்களால்...

கதறியபோது
நமது வலிகளைக்
கண்டுகொள்ளாத உலகம்,
குதறிய வடுக்களாய்
நம்மைக் கண்டபின்
பதறுகின்றது...

அணுகுண்டென்றால்
ஓரணியில் திரளும் உலகம்,
அணுவணுவாய் அழிக்கப்படுகையில்
எதிரணியிற்கூட ஏன் இல்லை...

அணுவால் அழிக்கப்பட்டிருக்கலாம்,
இப்படி
அணுவணுவாய் அழிக்கப்பட்டதிலும்...
வடுக்கள் தொடர்ந்திருந்தாலும்
வலிகள் சட்டென முடிந்திருக்கும்...

இப்படிக்குச்,
சடலங்களில் வீழ்த்தப்பட்டுச்
சடலங்களில் புதைக்கப்பட்டச்
சடலங்கள்...

இப்படி இதை எழுதியது,
இந்த வேதனைகளைப் பட்டறியாத
நாளைய சடலமொன்று...

சிவா.ஜி
18-05-2012, 07:04 PM
வலிக்கிறது அக்னி. சடலம் சொல்லும் கவிதை.

M.Jagadeesan
19-05-2012, 01:16 AM
வாழ்கின்ற சடலங்கள் வீழ்கின்ற போதுதான்
வீழ்ந்துபட்ட சடலங்களின் வேதனை புரியும்
தாழ்வுற்ற மனிதனின் தரித்திர குணத்தால்
பாழ்பட்டுப் போனதேப் பைந்தமிழ்த் திருநாடு.

vasikaran.g
20-05-2012, 11:50 AM
சடலத்தின்
வழி
நம்
மனதில்
வலி .!

கவிதை இன்
வழி
உம
விழிகளில்
வழியும்
நீர்
பேனா
வழி
பெருக்கெடுத்ததோ ..

அருமை ..

kulakkottan
07-08-2012, 04:17 PM
அக்னி !ஈழத்தின் அவலம் இக்கவியில் தெரிகிறது எனக்கு !
ஒவ்வொரு தமிழனின் உள்ளத்து அக்கினியும் உங்கள் கவிதையில் எரிகிறது அக்னி!