PDA

View Full Version : ஒரு புளிய மரத்தின் கதை



கலையரசி
17-05-2012, 02:11 PM
காலச்சுவடு இதழின் நிறுவனர் சுந்தர ராமசாமி (1931 - 2005) அவர்கள் எழுதிய முதல் நாவல் இது. 1966 ஆம் ஆண்டு வெளிவந்தது. நவீன உரைநடையைப் பேச்சு வழக்கில் எழுதிய முதல் நாவல் என்ற வகையில், தமிழிலக்கியத்தில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது.

இவரின் சொந்த ஊர் நாகர்கோவில். மூன்று நாவல்களும் பல சிறுகதைகளும், கவிதைகளும் எழுதியிருக்கும் இவர், தகழி சிவசங்கரப் பிள்ளையின் புகழ்பெற்ற செம்மீன், தோட்டியின் மகன் என்ற நாவல்களைத் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார். ஜே.ஜே.சில குறிப்புகள் (1981), குழந்தைகள், பெண்கள், ஆண்கள்(1998) என்பன, இவர் எழுதிய மற்ற நாவல்கள்.

இந்நாவலில் கதைசொல்லியாக வரும் தாமோதர ஆசான் இரத்தமும் சதையும் கொண்ட, உயிர்த்துடிப்புள்ள ஒரு கதாபாத்திரம். அவர் கதை சொல்லும் பாங்கை நீங்களும் சுவைக்க, நாவலிலிருந்து கொஞ்சம்:-

”வெற்றிலை போட்டுத் துப்பி விட்டுச் சுற்றுமுற்றும் பார்ப்பார் ஆசான். ஹூம்...ஹூம் என்று அவசியமில்லாத ஆர்ப்பாட்டங்களுடன் புகையிலைச் சாற்றைத் தொண்டைக் குழியிலிருந்து வெளியேற்றிக் கொள்வார். கதை ஆரம்பமாகிறதென்று அர்த்தம்.

ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார் என்று அத்தைப் பாட்டிகள் பாணியில் கதை ஆரம்பம் ஆகாது. கதை உத்திகள் எல்லாம் அவரிடம் படிந்து போன சமாச்சாரம்.

சற்றுத் தள்ளி முளைத்திருக்கும் ஒரு செடியை இரண்டு வினாடிகள் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்து விட்டு ”அதென்ன செடி, தெரியுமா அது, யாருக்காவது? என்கிறார்.

நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்து விட்டுத் தலையை அசைக்கிறோம்.

இதெக் கொடுத்துத் தாலா தாலி கெட்டின புருஷனெக் கொன்னே போட்டா சண்டாளி. மனசு வருமா ஒரு பொம்பிளைக்கு? அடுத்தவன் களுத்தெக் கட்டிக்கிடணும்னு ஒரே நெனப்பா நெனச்சுத் துணிஞ்சிட்டாளே பாவி.

அப்படித்தான் செய்தாளே, புருஷன்காரன் என்ன நொண்டியா, சப்பாணியா, கூன்குருடா, இல்லே மேலே ஒண்ணு இருக்கட்டும்னு இன்னொருத்தியெ வச்சுக்கிட்டு இருந்தானா?

எப்படிப் போனாலும் அறுப்புக்கு நூறு கோட்டை நெல் வந்து விளும். நாள் ஒண்ணுக்குக் கொல்லேலே விளுற இலை அம்பதுக்குக் கொறயாது. அவுத்துவிட்டாத் தொளுவம் காலியாகுதுக்கு அரை மணி நேரமாகும்.

சவாரிக்கு மாடுபுடிக்குதுக்கு வந்தான் வடசேரி சந்தைக்கு. அரபிக் குதிரெ கணக்கா ரெண்டு மாட்டெப் புடிச்சுக்கிட்டு, அந்த மாபாவி தலையிலே ஆசையா வெச்சு முத்துதுக்கு மடி நெறயப் பூவும் வாங்கிட்டுத்தானே போனான் அண்ணைக்கும். பாலைத்தான் தாறான்னு வாங்கிக் குடிச்சான். ரெண்டு தவா ரெத்தம்மாட்டு வாந்தி எடுத்தான். குளோஸ்.

இது தான் ஆசானுடைய எடுப்பு. கடைசியில் மண்ணைத் தூக்கி விண்ணில் நிறுத்திக் காட்டுகிறேன் என்று சொல்லி விட்டுத் துண்டை விரித்து ,மருந்துப் பெட்டிகளை அடுக்கும் செப்பிடு வித்தைக்காரன் போல், மீண்டும் வெற்றிலை போட்டுக் கொள்ள ஆரம்பித்து விடுவார். பின்னால் விஷம் கொடுத்தவளின் குழந்தைப் பருவத்தில் கதை ஆரம்பமாகும்”

புளிய மரத்தைப் பற்றிய பழைய சுவாரஸ்யமான கதைகள் அனைத்தையும் ஆசான் மூலமாகவே நாமும் தெரிந்து கொள்கிறோம். ஆனால் புளிய மரம் வெட்டப்படுவதற்கு முன்னாலேயே ஆசான் போய்ச் சேர்ந்து விடுகிறார். அவர் மறைவுக்குப் பின், நாவலின் சுவை குறைந்து விட்டதாகவே எனக்குத் தோன்றுகிறது. அந்தளவுக்கு ஆசான் படிப்பவர்களின் மனதைக் கொள்ளை கொண்டு விடுகிறார்.

அதற்குப் பிறகு காற்றாடி மரத்தோப்பு அழிக்கப்பட்டு நவீனப் பூங்காவான கதை விவரிக்கப்படுகிறது. நவீனமயம் என்ற பெயரில் இயற்கையை அழிக்கும் மனிதனின் பைத்தியக்காரத் தனத்தை இச்சிறு உரையாடல் மூலம் ஆசிரியர் கிண்டல் செய்கிறார்..

மரங்கள் விழுந்து சாய்வதைப் பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு வயோதிகர், மனம் பொறுக்க மாட்டாமல் இளைஞனிடம் கேட்கிறார்:-

”தம்பி, எதுக்குடேய் மரத்தெ வெட்டிச் சாய்க்கிறாங்க?”

”செடி வைக்கப் போறாங்க”

”எதுக்கு டேய், செடி வைக்கப் போறாங்க?”

”காத்துக்கு”

”மரத்தெக் காட்டிலும் செடியாடேய் கூடுதல் காத்துத் தரும்?”

”அளகுக்கு”

”செடிதான் அளகாட்டு இருக்குமோ?”

”உம்”

”செடி மரமாயுடாதோவ்?”

”மரமாட்டு வளராத செடி தான் வைப்பாங்க. இல்லை வெட்டி வெட்டி விடுவாங்க”

”வெட்டி வெட்டி விடுவாங்களா?”

”ஆமா”

”அட, பயித்தாரப் பசங்களா!”


இறுதியில் நகரசபை தேர்தலில் போட்டியிடும் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த வியாபாரிகள் இருவருக்கிடையே ஏற்படும் போட்டியும் பொறாமையும், புளிய மரத்தை அழிப்பதில் போய் முடிகிறது.

இந்நாவலின் கரு பற்றி ஆசிரியரே முதல் அத்தியாயத்தில் சொல்லியிருக்கிறார்:- .

”மறக்க முடியாத விஷயங்களும் சில உண்டு தானே? அதில் ஒன்று தான் புளியமரத்தின் கதையும்.

சொல்லப்போனால் புளியமரம் என்ன செய்தது? சும்மா நின்று கொண்டு தானே இருந்தது? மனிதனின் அலகிலா விளையாடல் களுக்கு மெளன சாட்சியாக நின்றதே அல்லாமல் எதிலாவது பங்கெடுத்துக் கொண்டதா? பட்டுக்கொண்டதா? மனித ஜாதிக்கு அது இழைத்த கொடுமை தான் என்ன? யாரைப் பார்த்துக் கை நீட்டிற்று? யாரை நோக்கிப் பல்லிளித்தது? யாருடனாவது சேர்ந்து கொண்டு, யாருக்கேனும் குழி பறித்ததா?

ஆனால் நாட்டையும், பணத்தையும் பெண்டுகளையும் அதிகாரத்தையும், புகழையும் காயாக வைத்து விளையாடிய மனிதன், புளியமரத்தை மட்டும் விட்டு வைக்கிறேன் என்கிறானா? அதையும் காயாக வைத்து விளையாடித் தீர்த்து விட்டான். புளியமரம் அழிக்கப்பட்டது.”

வாய்ப்புக் கிடைத்தால் இந்நாவலை வாசிக்கத் தவறாதீர்கள்.

கீதம்
17-05-2012, 11:49 PM
வாசிக்கத் தூண்டும் தேர்ந்த விமர்சனத்துக்குப் பாராட்டு அக்கா. நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல் ஆசான் கதை சொல்லத் துவங்கும் யுத்தி ரசிக்கவைக்கிறது. மரத்தை அழித்து செடி நடும் விந்தை கண்டு மனம் படும் வேதனையைப் பிரதிபலிக்கும் வரிகளில் வெளிப்படுகிறது வேதனை விஞ்சிய விரக்தி.

இங்கே உள்ளூர் நூலகத்தில் சுந்தர ராமசாமி அவர்கள் எழுதிய சிறுகதைத் தொகுப்பு கிடைத்துப் படித்தேன் (மரியா தாமுவுக்கு எழுதிய கடிதம்) . ஜே ஜே சில குறிப்புகள் இருக்கிறது. ஆனால் இன்னும் என் கைக்கு கிடைக்கவில்லை. இந்த நாவலும் இருக்கிறதா என்று பார்க்கிறேன். இருந்தால் தவறாமல் வாசிப்பேன்.

கலையரசி
21-05-2012, 03:31 PM
உன் பாராட்டுக்கு மிக்க நன்றி கீதம்! நான் செய்வது விமர்சனம் என்று சொல்ல முடியாது. இந்நாவல் போன்று இலக்கியத்தரமிகுந்த நூல்களை விமர்சனம் செய்வதற்கு எனக்குத் தேர்ந்த ஞானம் வேண்டும்.
பிடித்த பகுதிகள் பற்றிச் சொல்லி மற்றவர்களுக்குப் படிக்க வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்த வேண்டும் என்பதே என் குறிக்கோள். உன் பின்னூட்டத்தைப் பார்த்தபோது என் எண்ணம் நிறைவேறியிருப்பதாகவே தோன்றுகிறது.

சிவா.ஜி
21-05-2012, 07:37 PM
மிக அருமையான தொடர்வு தகவல்...உங்கள் எழுத்துக்கள்....கைபிடித்து அழைத்துபோகுமிடம் சுந்தர ராமசாமியின் நாவலின் முதல் வரிகளை....மிக அழகான வரிகளை எங்களுக்கு அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றிகள் மேடம்.

ஆதவா
22-05-2012, 08:57 AM
வெகுநாட்களுக்கு முன்னர் இக்கதை படித்தேன். கொஞ்சம் கடினமான நடையாக இருந்தது அப்போது. இப்பொழுது படித்தால் தெரியும் எந்தளவுக்கு இலக்கியப்பயிற்சி இருக்கிறது என்று. அப்போதே படித்தவரையிலும் கதைப்போக்கும், நடையும் பிடித்திருந்தது.

இப்போது இதை கிளாஸிக் எடிசன் என்று விலையேற்றி விற்கிறார்கள்!!! !!!

கலையரசி
23-05-2012, 02:06 PM
மிக அருமையான தொடர்வு தகவல்...உங்கள் எழுத்துக்கள்....கைபிடித்து அழைத்துபோகுமிடம் சுந்தர ராமசாமியின் நாவலின் முதல் வரிகளை....மிக அழகான வரிகளை எங்களுக்கு அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றிகள் மேடம்.

புளிய மரத்தைப் பற்றி ஆசிரியர் கூறியிருக்கும் இவ்வரிகளை நான் மிகவும் ரசித்ததால் தான் மன்றத்துக்கும் அறிமுகப்படுத்தினேன். நாவலை முழுதும் வாசித்தால் நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும். பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி சிவாஜி சார்!

கலையரசி
23-05-2012, 02:16 PM
வெகுநாட்களுக்கு முன்னர் இக்கதை படித்தேன். கொஞ்சம் கடினமான நடையாக இருந்தது அப்போது. இப்பொழுது படித்தால் தெரியும் எந்தளவுக்கு இலக்கியப்பயிற்சி இருக்கிறது என்று. அப்போதே படித்தவரையிலும் கதைப்போக்கும், நடையும் பிடித்திருந்தது.

இப்போது இதை கிளாஸிக் எடிசன் என்று விலையேற்றி விற்கிறார்கள்!!! !!!

இப்போது இதை வாசித்தபோது கடினமாக நான் உணரவில்லை. எனவே உங்கள் கருத்துப்படி எனக்கு இலக்கியப்பயிற்சி ஓரளவுக்கு இருக்கிறது என்று மகிழ்ச்சி கொள்கிறேன். ஒரு சில வட்டார வழக்குச் சொற்கள் மட்டும் புரியவில்லை. அதன் பொருளைப் புத்தகத்தின் இறுதியில் கொடுத்துள்ளனர்.

சில ஆண்டுகளுக்கு முன் லா.ச.ராவின் ’அபிதா’ படித்தேன். நடை கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருந்தது. என் அலுவலக நண்பர் ஒருவர் ஏதாவது புத்தகம் இருந்தால் கொடுங்கள் என்று கேட்டார். அப்போது அது என்னிடம் இருந்ததால் கொடுத்தேன். சின்னப் புத்தகம் தான். ஒரு வாரம் கழித்து எனக்குப் புரியவேயில்லை என்று திருப்பிக் கொடுத்து விட்டார். லா.ச.ராவின் நடையை விட சுந்தர ராமசாமியின் நடை எளிமையாக எளிதில் புரியும்படியாகவே இருக்கிறது

நீங்கள் சொல்லியிருப்பது போல கிளாசிக் வரிசை என்ற பெயரில் புத்தகத்தின் விலையைக் கூட்டி விற்கிறார்கள்.

சொ.ஞானசம்பந்தன்
28-05-2012, 06:38 AM
ஆசான் பாத்திரம் மிக அருமையாய் நூலில் சித்திரிக்கப்பட்டிருப்பதை நானும் வாசித்தபோது உணர்ந்தேன் . புளியமரம் இயற்கையைக் காலம் காலமாய் அழித்துவருவதற்குக் குறியீடு என நான் கருதுகிறேன் . ஆசான் மறைந்தபின் நூலின் சுவை குறைந்துவிடுவது மெய்தான் .

கலையரசி
30-05-2012, 02:01 PM
ஆசான் பாத்திரம் மிக அருமையாய் நூலில் சித்திரிக்கப்பட்டிருப்பதை நானும் வாசித்தபோது உணர்ந்தேன் . புளியமரம் இயற்கையைக் காலம் காலமாய் அழித்துவருவதற்குக் குறியீடு என நான் கருதுகிறேன் . ஆசான் மறைந்தபின் நூலின் சுவை குறைந்துவிடுவது மெய்தான் .
ஆம். நீங்கள் சொல்வது போல் இயற்கையை அழித்தலின் குறியீடாகவே புளிய மரம் சித்தரிக்கப்பட்டுள்ளது. தங்களது கருத்துக்கு நன்றி.

இராஜேஸ்வரன்
01-06-2012, 06:12 AM
திரு சுந்தர ராமசாமியின் 'ஒரு புளிய மரத்தின் கதை' நாவலைப் பற்றி நீங்கள் சொல்லியிருக்கும் விதமே அதை படிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது. புத்தகத்தை எப்படியாவது பெற்று படிக்க முயலுகிறேன். நன்றி.

கௌதமன்
01-06-2012, 06:03 PM
நான் தினமும் 'காலச்சுவடு' என்று பெயர் பதிக்கப்பட்ட, காம்பவுண்ட் சுவர்களுக்குள் கிருஷ்ணன் சிலையிருக்கும் சு.ரா. வின் வீட்டைத் தாண்டித்தான் அலுவலகம் செல்கிறேன். புளியமரத்தின் கதையையும் சு.ரா.வையும் ஞாபகப் படுத்தியதற்கு நன்றி கலையரசி.

கலையரசி
09-06-2012, 02:52 PM
திரு சுந்தர ராமசாமியின் 'ஒரு புளிய மரத்தின் கதை' நாவலைப் பற்றி நீங்கள் சொல்லியிருக்கும் விதமே அதை படிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது. புத்தகத்தை எப்படியாவது பெற்று படிக்க முயலுகிறேன். நன்றி.

படிக்கும் ஆவலைத் தூண்டும் விதமாக இருக்கிறது என்றறிந்து மகிழ்ச்சி. படித்த பின் உங்கள் எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

கலையரசி
09-06-2012, 02:55 PM
நான் தினமும் 'காலச்சுவடு' என்று பெயர் பதிக்கப்பட்ட, காம்பவுண்ட் சுவர்களுக்குள் கிருஷ்ணன் சிலையிருக்கும் சு.ரா. வின் வீட்டைத் தாண்டித்தான் அலுவலகம் செல்கிறேன். புளியமரத்தின் கதையையும் சு.ரா.வையும் ஞாபகப் படுத்தியதற்கு நன்றி கலையரசி.

பெரிய எழுத்தாளரின் வீட்டைத் தினந்தினம் பார்ப்பதே பரவசம் தான். புளிய மரத்தின் கதையைப் படித்து விட்டு உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள மறக்காதீர்கள்.

ஜான்
09-06-2012, 05:26 PM
புளிய மரத்தின் கதை மற்றும் ஒரு கடலோர கிராமத்தின் கதை(தோப்பில் முகமது மீரான்) இத்துடன் கோபல்ல கிராமம் (ராஜநாராயணன்)---இம்மூன்றையும் எப்படியாவது படித்துவிட்டால் போதும்......மூன்று தலைமுறை தமிழகம் பற்றிய அறிவு வசப்பட்டு விடும்

vasikaran.g
16-06-2012, 11:28 AM
அறிய நாவல்
பலருக்கும்
தெரியபடுத்த
நீங்கள்
எழுதிய
முனஊட்டம்
அருமை கலை அரசி மேடம்.

கலையரசி
26-06-2012, 01:19 PM
புளிய மரத்தின் கதை மற்றும் ஒரு கடலோர கிராமத்தின் கதை(தோப்பில் முகமது மீரான்) இத்துடன் கோபல்ல கிராமம் (ராஜநாராயணன்)---இம்மூன்றையும் எப்படியாவது படித்துவிட்டால் போதும்......மூன்று தலைமுறை தமிழகம் பற்றிய அறிவு வசப்பட்டு விடும்

ஒரு கடலோரக் கிராமத்தின் கதையை இன்னும் நான் வாசிக்கவில்லை. நீங்கள் சொல்லியிருக்கும் இம்மூன்று நாவல்களுமே முக்கியமானவை தாம். கருத்துக்கு மிக்க நன்றி ஜான்!

கலையரசி
26-06-2012, 01:24 PM
அறிய நாவல்
பலருக்கும்
தெரியபடுத்த
நீங்கள்
எழுதிய
முனஊட்டம்
அருமை கலை அரசி மேடம்.

பாராட்டுக்கு மிக்க நன்றி வசிகரன்!