PDA

View Full Version : சுயம்வரம்



M.Jagadeesan
17-05-2012, 07:52 AM
யாரோ கதவைத் தட்டும் ஓசை கேட்டது.

எழுந்து சென்று கதவைத் திறந்தார் தணிகாசலம்.

எதிரே புரோக்கர் பொன்னம்பலம் நின்று கொண்டிருந்தார்.

" வாங்க ! பொன்னம்பலம்! உள்ளே வாங்க! என்ன ! நான் சொன்ன மாதிரி பாப்பாவோட அழகுக்கும், அறிவுக்கும் ஏத்தமாதிரி வரன் கொண்டு வந்திருக்கீங்களா? "

" நாலு வரன் கொண்டு வந்திருக்கேன் தணிகாசலம். பாப்பாவ வரச் சொல்லுங்க ! போட்டோவைப் பார்க்கட்டும்; நீங்களும் பாருங்க ! ரெண்டுபேரும் கலந்து பேசி உங்க முடிவச் சொல்லுங்க! அடுத்த முகூர்த்தத்துலேயே கல்யாணத்தை முடிச்சிருவோம்! "

" பாப்பா! " தன் மகளை அழைத்தார் தணிகாசலம்.

" என்னப்பா ? " என்று கேட்டபடியே தணிகாசலத்தின் மகள் பாப்பா வந்தாள்.

" இப்படி உட்கார் ! புரோக்கர் நாலு வரன் கொண்டு வந்திருக்கார்; போட்டோவைப் பாத்து உன் முடிவைச் சொல்லு !"

" சரிப்பா !"

புரோக்கர் முதல் போட்டோவைக் காட்டி, " இவர்தான் பலாப்பழ மாப்பிள்ளை! " என்று சொன்னார்.

மாப்பிள்ளை கன்னங்கரேலென்று இருந்தார். முன்வரிசைப் பற்கள் வெளிப்புறமாக நீண்டிருந்தன.

இரண்டாவது போட்டோவைக் காட்டி, " இவர்தான் வெங்காய மாப்பிள்ளை " என்று சொன்னார்.

மாப்பிள்ளையின் உடல் குண்டாகவும், வாய் பெரிதாகவும் இருந்தது.

மூன்றாவது போட்டோவைக் காட்டி , " இவர்தான் விளாம்பழ மாப்பிள்ளை " என்று சொன்னார்.

மாப்பிள்ளை நீண்ட முடியுடனும், தாடியுடனும் காணப்பட்டார்.

நான்காவது போட்டோவைக் காட்டி, " இவர்தான் காஞ்சிரம் பழ மாப்பிள்ளை " என்று சொன்னார்.

மாப்பிள்ளை கோட் சூட் அணிந்து , சிவந்த நிறத்துடனும் அழகாகவும் , கவர்ச்சியாகவும் இருந்தார்.


இதையெல்லாம் கேட்ட தணிகாசலத்திற்கு முகம் சிவந்து , கோபம் மூக்குக்கு மேலே வந்துவிட்டது. ' அட சரிதான் நிறுத்தய்யா! என் பொண்ணுக்கு ஏத்த மாப்பிள்ளையா பாக்கச் சொன்னா , தள்ளு வண்டியில பழம் விக்குற பசங்களோட போட்டோவை எல்லாம் கொண்டு வந்து காட்டறியே! எழுந்து போய்யா வெளியில!" பொரிந்து தள்ளினார் தணிகாசலம்.

" கோபப்படாதீங்க தணிகாசலம்! மாப்பிள்ளைங்க நாலு பேரும் படிச்சு , நல்ல உத்தியோகத்துல இருக்காங்க ! கை நிறைய சம்பாதிக்கிறாங்க! நான் சொன்னது அவங்களோட குணத்தைப் பத்தி . பாப்பா ! நீதான் ரொம்ப அறிவாளியாச்சே! பாத்து சொல்லும்மா! உனக்கு யாரைப் பிடிச்சிருக்கு ?"

பாப்பா பத்து நிமிடம் யோசனை செய்தாள். பிறகு தன்னுடைய தந்தையைப் பார்த்து," அப்பா ! நான் சொல்றதைக் கொஞ்சம் பொறுமையாக் கேளுங்க ! கேட்டுட்டு உங்க முடிவைச் சொல்லுங்க!

இந்த வெங்காயம் இருக்கிறதே வெங்காயம்! அதை உரிக்க உரிக்க , உள்ளே ஒன்றும் இருக்காது; உரிப்பவர் கண்ணிலிருந்து கண்ணீர்தான் வரும். அதுபோல இந்த வெங்காய மாப்பிள்ளை ஒரு வாய்ச் சவடால் பேர்வழி! வாய்ப்பந்தல் போடுவதில் வல்லவராக இருப்பார். வாழ்க்கைக்குப் பிரயோஜனம் இல்லை; இவரைக் கட்டிக் கொண்டால், கவலையும், கண்ணீரும் தான் மிஞ்சும்.

அடுத்து விளாம்பழம் இருக்கிறதே விளாம்பழம்! உள்ளே இருக்கின்ற பழம் , மேலே இருக்கின்ற ஓட்டோடு, ஒட்டியும் ஒட்டாமலும் காணப்படும். மேலும் அந்தப் பழத்தை அப்படியே சாப்பிடவும் முடியாது; வெல்லத்தோடு பிசைந்து சாப்பிட்டால்தான் சுவையாக இருக்கும். அதுபோல இந்த விளாம்பழ மாப்பிள்ளை வாழ்க்கையோடு ஒட்டியும் ஒட்டாமலும் இருப்பார்; தனியாக இவரால் இயங்க முடியாது; மற்றவர்களைச் சார்ந்தே இருப்பார். இவரைக் கட்டிக் கொண்டால், வாழ்க்கையில் தனிமை இருக்குமே தவிர இனிமை இருக்காது.

அடுத்து இந்த காஞ்சிரம் பழம் இருக்கிறதே காஞ்சிரம் பழம், பார்ப்பதற்குப் பளபளப்பாக இருக்குமே தவிர பசியாறுவதற்கு உதவாது. அதுபோல இந்தக் காஞ்சிரம் பழ மாப்பிள்ளைப் பார்ப்பதற்கு டிப் டாப்பாக இருந்தாலும், வாழ்க்கையின் கஷ்ட நஷ்டங்களைத் தாங்கக்கூடிய வலிமை பெற்றவராக இருக்கமாட்டார். இவரைக் கட்டிக் கொண்டால் ஆடம்பர வாழ்க்கை வாழலாமே தவிர, அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ இயலாது. கடமை ஆற்ற இயலாது. கடன் கட்டுவதற்குத் தான் சம்பளம் சரியாக இருக்கும்.

இந்தப் பலாப்பழம் இருக்கிறதே பலாப்பழம்; வெளியில் பார்ப்பதற்குக் கரடு முரடாக இருந்தாலும் , உள்ளே இனிமையான சுளைகளைக் கொண்டிருக்கும். அதுபோல இந்தப் பலாப்பழ மாப்பிள்ளையும் பார்ப்பதற்குக் கருப்பாகவும், கரடு முரடாகவும் இருந்தாலும் , உண்மையில் குடும்பம் நடத்துவதற்குத் தேவையான நல்ல குணங்களைக் கொண்டிருப்பார்; நான் விரும்புவதும் இவரைத்தான்." என்று சொல்லி முடித்தாள் பாப்பா.

" பாப்பா ! அருமையான செலக் ஷன் !" என்று சொல்லித் தன் மகளைப் பாராட்டினார் தணிகாசலம்.

ஜானகி
17-05-2012, 07:59 AM
வாழைப்பழத்தைத் தோலுரிப்பது போல, வரன்களின் குணங்களைக் கண்டுகொண்டு, முடிவெடுத்த அந்தப் பெண்ணை மனைவியாக அடைபவன் பாக்கியசாலிதான் !

meera
17-05-2012, 08:22 AM
இன்று நம்மில் பலரும் தோற்றத்தை கொண்டு தப்பு தப்பாய் எடைபோட்டு ஏமாந்து போகிறோம்.

ஆழமான கருத்து ஐயா.

மதி
17-05-2012, 08:45 AM
நல்ல கருத்துள்ள கதை...!!

M.Jagadeesan
17-05-2012, 09:23 AM
ஜானகி, மீரா, மதி ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி!

மஞ்சுபாஷிணி
17-05-2012, 09:33 AM
பெண் ரொம்ப அறிவாளியா இருப்பதால் தான் புற அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்காம மனதைப்பார்த்து முடிவெடுத்திருக்கா... அருமையான கதை பகிர்வு ஜகதீசன்....

M.Jagadeesan
17-05-2012, 09:35 AM
தங்களின் பாராட்டுக்கு நன்றி மஞ்சுபாஷிணி அவர்களே!

கீதம்
18-05-2012, 12:07 AM
புத்திசாலிப் பெண் என்று தெரிந்துதான் தரகர் அந்த மணமகன்களின் குணத்தை சாடையாகச் சொல்லிப் புரியவைத்திருக்கிறார். நல்ல கருவும் கதையும் நன்று.பாராட்டுகள் ஐயா.

அழகுக்கும் தோற்றத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் குணத்துக்கும், மனத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

அழகாய் இருக்கும் காஞ்சிரப் பழங்கள் சந்தையில் விற்காது என்றொரு திரைப்பட பாடல் வரிகளில் கேட்டிருக்கிறேன். காஞ்சிரப் பழங்கள் என்பது யாவை? அறியத் தந்தால் மகிழ்வேன்.

அன்புரசிகன்
18-05-2012, 05:48 AM
கதைகளில் தான் இப்படி இருக்கு... யாதார்த்தம் பல மைல்கள் அப்பால் அல்லவா உள்ளது...
நல்ல கரு. வாழ்த்துக்கள் ஐயா...


ஏமாந்து போகிறோம்.


யாருக்கு இந்த றோம்???? :D

M.Jagadeesan
18-05-2012, 06:17 AM
அன்புரசிகனின் வாழ்த்துக்கு நன்றி!