PDA

View Full Version : பெரிய வீட்டு ரகசியம் (குறுங்கதை)இராஜிசங்கர்
11-05-2012, 07:52 AM
"மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்
மரம் மண்ணின் உயிர்
மரம் ஒரு வரம்"
இவ்வாறு பல நூறு வாசகங்கள் தாங்கிய பேரணியின் தலைவன் தனஞ்செயன்.

அன்றும் வழக்கம் போல் விழிப்புணர்வு பேரணியை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.உடலின் ரத்தம் வியர்வையாக வெளியேறுகிறதோ என்று சந்தேகிக்கும் அளவு கடும் வெயில்.

"கொஞ்சம் அந்த காத்தாடிய போடுமா.." என்று சொல்லிக் கொண்டே வீட்டில் நுழைகிறார்.

"என்னங்க..பயங்கர வெயில் போல?இப்படி தொப்பு தொப்பா வியர்த்திருக்கு?"?காபி , டீ எதாவது குடிக்குறேகளா?",வாஞ்சையுடன் கேட்டாள் மனைவி வடிவு.

"இல்ல வடிவு.உனக்கு எத்தன தடவ சொல்றது?காபி , டீ எல்லாம் இனி குடிக்க போறதில்லை.ஒரே அருகம்புல்ச் சாறு தான்னு"

"சரி சரி கோவிக்காதிங்க.கொண்டு வரேன்"

"நாங்கெல்லாம் இயற்கையோட ரசிகர்கள்.இனியாவது மறக்காதே",கையில் சாற்றுக் கப்புடன் வீடு வாசற்படியில் அமர்ந்தார்.

வீடு வாசலில் நிறைய மரங்கள், செடி கொடிகள் எல்லாம் வளர்ந்திருந்தன.மா, பலா, வாழை, கத்தரி, தக்காளி, ரோஜா, மல்லிகை, என்று நறுமணம் நிறைந்திருந்தது.இந்த வகைத் தோட்டத்திற்க்காக வீட்டுக்கு முன் கொஞ்சம் இடம் விட்டுக் கட்டியதை அன்றைய பேரணியில் பலரும் வெகுவாகப் பாராட்டியதை நினைத்து ஒரு வெற்றிப் புன்னகை வெளிவந்தது.

அப்போது தான் கண்டார், அந்த ரோஜாச் செடிக்கு அருகில் ஒரு வேம்புச் செடி தளிர்க்க ஆரம்பித்திருந்தது.
என்ன தான் வேம்பு பல மருத்துவ குணங்கள் கொண்டிருந்தாலும் அதன் வேர் நீண்டு பரவும்.எதிர்காலத்தில் அது அந்த கட்டிடத்திற்கு ஆபத்தாகக் கூட அமையும்.யோசித்துப் பார்த்தார்.30 லட்ச ரூபாய் சொத்து வீண் போவதை அவர் எப்படி பார்த்துக் கொண்டிருப்பார்?வேரோடு பிடுங்கி ஓரமாய் எரிந்து விட்டார் அச்செடியை.

எதிர் வீட்டுச் சுவரில் அடுத்த நாள் பேரணிக்கான சுவரொட்டி: "மரங்களின் காவலன் திரு.தனஞ்செயன் அவர்கள் கொடியசைத்து பேரணியைத் துவக்கி வைப்பார்"

பெரிய வீட்டு விவகாரங்கள் பாவம் அந்த சுவரொட்டி அடித்தவனுக்கு தெரிய வாய்ப்பில்லை தானே?

(மனிதன் இன்னும் மாறவே இல்லை.பயனிருந்தால் ஆதரிப்பதும், தேவதூதன் போல் அதைக் காப்பதும், பயனில்லை எனும் போது யாரும் அறியாமல் அழித்து விடுவதும் இன்றும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.இந்த தனஞ்செயன் யாரோ ஒருவனில்லை.நம் அனைவருக்குள்ளும் இப்படி ஒரு மனிதன் இருக்கத் தான் செய்கிறான்.)

சிவா.ஜி
11-05-2012, 10:31 AM
அந்த சின்ன வேப்பஞ்செடியை பிடுங்கி எறிந்ததில் தனஞ்செயன் சறுக்கிவிடுகிறான். மரம் வளர் எனச் சொன்னவன்...தன் சொத்துக்காக மரம் அழித்ததை குத்திக்காட்டிய கதைக்கு பாராட்டுக்கள் ராஜிசங்கர். நல்லதொரு கரு...கையாண்ட விதமும் அருமை. இன்னும் படையுங்கள்.

இராஜிசங்கர்
11-05-2012, 10:34 AM
நன்றி சிவா.ஜி

தாமரை
11-05-2012, 12:07 PM
உடம்பில் ஊறிக் கடிக்கும் சிற்றெறும்பைக் நசுக்கிக் கொன்று விடுதல் போல் மரம்புடுங்கி வீசுவது அனிச்சை செயலாக ஊறிப் போயிருக்கிறது.. ஒரு வேளை அது சந்தன மரம், தேக்கு மரம், ஈட்டி மரம் (ரோஸ் வுட்) போல பசையுள்ள மரமாக இருந்திருந்தால் அப்படிச் செய்திருக்க மாட்டார் இல்லையா? எடுத்து பத்திரமான இடத்தில் நட்டிருப்பார். :)

வயல்களில் களையெடுப்பதும் இப்படிப்பட்ட செயல்தானே.

எது வளரணும், எது வாழணும்னு நாம முடிவு பண்ணறோம்.

ஆனால் நம்ம வாழ்க்கையும் முடிவும்???

கீதம்
11-05-2012, 01:27 PM
சுயநலத்தை சுவரொட்டிகளால் மறைத்து வாழும் ஒரு பெரிய வீட்டு இரகசியத்தை இப்படிப் போட்டு உடைத்துவிட்டீர்களே இராஜி!

ஊருக்குதான் உபதேசம், உனக்கும் எனக்கும் இல்லையென்பது போல் இப்படிப்பட்ட போலிக் கொள்கைவாதிகளால் கொள்கைகளுக்கும் களங்கம் உண்டாகும்.

தாமரை அவர்கள் சொல்வது போல் அதுவே வேம்பாயில்லாது ஒரு தேக்கோ, சந்தனமோ என்றால் மற்ற செடிகள் அழிந்தாலும் பரவாயில்லையென்று பத்திரப்படுத்துவார்.

பின்குறிப்பு நச். நம்மையே சுயபரிசோதனை செய்யத் தூண்டும் அருமையான கதைக்குப் பாராட்டுகள் இராஜி.

இராஜிசங்கர்
11-05-2012, 01:44 PM
நன்றி தாமரை & கீதம்

Dr.சுந்தரராஜ் தயாளன்
11-05-2012, 05:31 PM
ஊருக்கு உபதேசம் என்பதை உணர்த்திய சிறுகதை. மிகவும் நன்று...நன்றி இராஜிசங்கர்.:)

நாஞ்சில் த.க.ஜெய்
11-05-2012, 06:05 PM
உபதேசம் அருமை ....

jayanth
11-05-2012, 06:49 PM
ஊருக்கு உபதேசம்...
தனக்கு...???
.
.
.
சுயநலவாதி...

இராஜிசங்கர்
12-05-2012, 12:50 PM
நன்றி ஐயா

சிவா.ஜி
15-05-2012, 08:46 PM
அருமையானக் கருத்து சொல்லும் இந்தக் கதைக்கு ஐந்து நட்சத்திர அந்தஸ்து வழங்குகிறேன்(எதெதுக்கோ நட்சத்திரம் கிடைக்கும்போது....இந்த நல்லக் கருத்துள்ளக் கதைக்கு கிடைக்காமலிருந்தால் குற்றம்.)

அமரன்
15-05-2012, 08:57 PM
நல்ல கருவைத் தாங்கும் கதை. 50 இ காசுகள் பரிசு.

பிடுங்கிய வேம்பை வேறு பொருத்தமான இடத்தில் ஊன்றி வளர்த்திருந்தால் தனஞ்சயன் இன்னும் உயர்ந்திருப்பார்.

பாராட்டுகள் இராஜி.

இராஜிசங்கர்
16-05-2012, 05:46 AM
நன்றி சிவா அண்ணா & அமரன் அண்ணா

M.Jagadeesan
16-05-2012, 07:07 AM
வீட்டுக்கு முன்பாக வேப்பமரம் இருப்பது நல்லது. நச்சுக்கிருமிகள் அண்டாது. முருங்கை மரம்தான் வளர்க்கக் கூடாது. பேய் பிசாசுகள் அண்டும். பாவம் தனஞ்சயனுக்கு இது தெரியாது போலும்!

மஞ்சுபாஷிணி
16-05-2012, 07:29 AM
இந்த அவசர உலகத்தில் அவரவர் தன் நலத்தை மட்டுமே பார்த்துக்கொள்ளும் சுயநலம் மிகுந்ததாக ஆகிவிட்டது என்பதை உணர்த்தும் அருமையான கதை பகிர்வு ராஜி...

வேம்பு இருந்தால் எத்தனை நற்பயன்கள் அதனால் கிடைக்கும் என்று தெரிந்தே இப்படி செய்தார் என்றால் தன் வீடு இத்தனை லட்சம் பெருமானமுள்ள வீட்டுக்கு எதாவது ஆகிவிடக்கூடாது என்று பயந்து வீசிவிட்டார்.

மரம் வளர்ப்பதும் பிள்ளைகளை வளர்ப்பதும் ஒன்று தான்...

இன்று இவர் செய்த இச்செயல் பிற்காலத்தில் பிள்ளை வளர்ந்து ஐயோ இந்த வயசான அப்பா நொய்யி நொய்யின்னு உயிரெடுப்பார்... நிம்மதி இல்லை என்று முதியோர் இல்லத்தில் சேர்க்கும்போது உணர்வார்.. எத்தனை பெரிய தவறு செய்தோம் என்று....

வேண்டாம் என்று நாம் ஒதுக்கும் ஒரு நல்லவை பின்னாளில் நமக்கு எத்தனை பெரிய நலன் கொடுக்கும் என்று அறியாமல் போய்விட்டார்..

அருமையான கதை பகிர்வு ராஜி... அன்பு நன்றிகள் பகிர்வுக்கு....

இராஜிசங்கர்
16-05-2012, 08:00 AM
நன்றி M.Jagadeesan & மஞ்சுபாஷிணி

மதி
16-05-2012, 09:10 AM
நல்ல கருத்துள்ள கதை. பாராட்டுக்கள் இராஜிசங்கர்.

இராஜிசங்கர்
16-05-2012, 09:46 AM
நன்றி மதி

ஆதவா
03-07-2012, 05:29 AM
அத்தனை செடி வளர்த்த மனுசன், ஒரேயொரு வேம்பை பிடுங்கியெறிந்ததில் தவறிழைத்தவனாகிறானா?

கதைப்படி தனஞ்செயன் சுயலாபத்திற்காக, அல்லது சுயவிளம்பரத்திற்காக இயற்கை ஆர்வலராக இருப்பதாகக் காட்டப்படவில்லை. சரியாகச் சொன்னால் தாமரை அண்ணா சொன்னது போல களையெடுத்தல் எனும் வகையில் வேம்பைப் பிடுங்கியெறிதல் சேர்ந்துவிடுகிறது. ஒரு வேம்புக்காக தனது வீட்டை இழக்க யாரும் தயாராக மாட்டார்கள்!! தவிர மரங்களுக்கு அவர் இடம் விட்டு வீடு கட்டியிருக்கிறார்!!

என்னைப் பொறுத்தவரையிலும் தனஞ்செயன் சரியான செயலைத்தான் செய்திருக்கிறார்!!! நாம் எதிர்பார்ப்பது அவர் அதை மீண்டும் நட்டியிருக்கவேண்டும் என்று. அடுத்தவர்கள் மீதான நமது எதிர்பார்ப்புகள் எல்லாமே நம்மை மீறியதாகவும், அடுத்தவர் குணத்திலிருந்து பிசகாதவாறான செயலிலும் இருக்கிறது.... ஒவ்வொரு செயலுக்கும் ஒரு காரணமுண்டு!

நல்ல கதை, இச்சமயத்தில் தேவையானதும் கூட...

Keelai Naadaan
04-07-2012, 05:34 PM

என்னுடைய அபிப்ராயமும் இதுவே.

கதையில் சொல்ல வந்த கருத்து பாராட்டத்தக்கது.

இராஜிசங்கர்
05-07-2012, 05:56 AM

பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி ஆதவா அண்ணா & கீழைநாடான் அவர்களே..
தனஞ்செயன் சுய விளம்பரத்திற்காக சுற்றுச்சூழல் ஆர்வலர் என்று பாத்திர வடிவமைப்பு செய்து தான் யோசித்து வைத்திருந்தேன்.
எழுதும் போது அதை கருத்தில் கொள்ளாமல் எழுதி விட்டேன். தவறினைச் சுட்டிக் காட்டிய உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் ...

ராஜா
19-07-2012, 06:43 AM
எனக்கு தனஞ்செயன் செய்தது அப்படி ஒன்றும் தவறாகத் தெரியவில்லை..

வேம்பைப் பிடுங்கியது, தன் கட்டிடத்துக்கு ஊறுவிளைவிக்குமே என்றுதானே.. மற்றபடி, வேறு பல தாவரங்களை வளர்த்தும், விழிப்புணர்வு ஊட்டியும் இயற்கைக் காவலராகத்தானே விளங்குகிறார்..

ராஜா
19-07-2012, 06:45 AM
ஆதவாவின் கருத்தைத் தற்போதுதான் கண்ணுற்றேன்.. வழிமொழிகிறேன்..

சுகந்தப்ரீதன்
19-07-2012, 10:13 PM
உங்க கதையை படிச்சதும்... எனக்கு மறுபடியும் பட்டுகோட்டையாரின் வரிகளே நினைவில் நின்றாடுகிறது..!!

”புரளிகட்டிப் பொருளைத் தட்டும் சந்தை - பச்சை
புளுகை விற்றுக் சலுகை பெற்ற மந்தை - இதில்
போலிகளும் காலிகளும் பொம்மலாட்டம்
ஆடுகின்ற விந்தை சொன்னால் நிந்தை!!”

கதையின் மூலம் கருத்துடன் சொல்லிய ரகசியம் நன்று..!! பாராட்டுக்கள்..!!:icon_b: ஆனாலும் அரசியல்ல இதெல்லாம் ரொம்ப சகஜமுங்க..!!
அப்புறம் கதைக்கு தலைப்பிடும்போது சற்று கவனம் எடுத்துக்கொள்ளுங்கள்... எதிரொலியை மட்டுபடுத்துவதற்காக சொன்னேன்..!!:)

இராஜிசங்கர்
22-07-2012, 08:22 AM
நன்றிங்க ராஜா & சுகந்தப்ரீதன்

கலைவேந்தன்
03-08-2012, 05:12 AM
இக்கதையை முதலில் வாசித்து என் கருத்தை முதலில் கூறி இருந்தால் நான் இயற்கைக்கு எதிரானவன் என்னும் பெயரெடுத்திருப்பேனோ..?

இன்றும் பல கட்டிடங்களின் மேல் ஆல் மரம் வளர்வதைக் காண்கிறோம். நாம் முதலில் செய்யும் காரியம் அவற்றினை வேறோடு பிடுங்கி எறிவது தான். இல்லையெனில் ஆல் தழைத்து கட்டிடம் தகர்த்து ஆளைக் காலி செய்திருக்கும்.

மனிதனின் உயிர் காக்கப்படவேண்டும் என்றால் வனவிலங்குகள் கூடக் கொல்லப்படலாம் என்று சட்டமிட்டவன் மனிதன் தானே..?

அக்குறுஞ்செடி வளர்ந்து வேர்விட்டு வீட்டைத் தகர்க்கும் என்றெண்ணி அதனைக் களைந்ததில் என்ன மாபெரும் தவறு இருக்கின்றது..?

ஒரு வேளை தனஞ்செயன் சுற்றுச்சூழல் பற்றிய பிரச்சாரத்தில் ஈடுபடாதிருந்திருந்தால் அவரது இச்செய்கை பிராக்டிகல் ஆகக் கருதப்பட்டிருக்குமோ..?

கதை சொல்ல விழைந்த கருத்து நன்று. ஆயின் சொல்லப்பட்ட சம்பவம் பொருந்தவில்லை. இதனையே பெரிய மரத்தைச் சாய்த்து விலைக்கு விற்பதாக அவரைக்காட்டி இருந்தால் ஒருவேளை கதாசிரியையின் நோக்கம் நிறைவேறி இருக்கலாமோ என்னவோ..

விவாதிக்க வைத்த கதைக்கு பாராட்டுகள் ராஜி.