PDA

View Full Version : இப்படியும் சம்பாதிக்கனுமா???சிவா.ஜி
10-05-2012, 11:52 AM
இந்தமுறை விடுமுறைக்கு ஊருக்குப் போயிருந்தபோது நிகழ்ந்த சம்பவம் இது. ஒரு தூரத்து சொந்தக்காரர் வீட்டுக்கு வந்திருந்தார். பேருந்துநிலையத்தில் சைக்கிள் ஸ்டாண்ட், மினரல் வாட்டர் வியாபாரம், ஐஸ்கிரீம் கடை என பல தொழில்கள் செய்பவர். வரவேற்று அமரச் செய்ததும் சில பல சொந்த விசாரிப்புகள், விஷயங்கள் முடிந்ததும் அவர் வந்ததற்கானக் காரணத்தை சொல்ல ஆரம்பித்தார்.


“நாங்க ஒரு பத்துபேர் சேந்து ஒரு ஹோம் தொடங்கலாம்ன்னு இருக்கோம்.”


“நல்ல விஷயம்தான் செய்யுங்க எந்த மாதிரியான ஹோம்?”


நான் கேட்டதும்,


“வயசான அப்பா அம்மாவை இங்கே அனாதரவா விட்டுட்டு அமெரிக்கா ஆஸ்த்ரேலியான்னு போய் குடும்பத்தோட செட்டில் ஆகிட்ட மகனுங்க எட்டிக்கூடப் பாக்காம...இருக்கிற சொத்தை வெச்சுக்கிட்டு கடைசிக்காலத்துல யாராவது வேலைக்காரங்களை துணைக்கு வெச்சுக்கிட்டு வாழ்ந்து சாகுங்கன்னு கைவிட்ட பெற்றோர்கள் கொஞ்சம் பேர் இந்த ஊர்ல இருக்காங்க. பெரிய வீடு சொத்து இருக்கு ஆனா பாத்துக்க யாருமில்ல...அவங்களுக்காகவும், எய்ட்ஸ் வந்து சொந்தக்காரங்களால ஒதுக்கப்பட்டவங்களுக்காகவும் இந்த ஹோமை நடத்தலான்னு இருக்கோம்.”


“அடடா...அருமையான விஷயம்”


இவரின் திட்டத்திலிருக்கும் விஷம் தெரியாமல் மனதார பாராட்டினேன்...கூடவே ஏதாவது டொனேஷனுக்கு வந்திருப்பாரோன்னு ஒரு எண்ணமும் எழுந்தது. தொடர்ந்து அவர் பேசியபோதுதான் தோன்றியது ‘என்னா ஒரு வில்லத்தனம்’


“நம்ம ஹோம்ல அவங்கள சேர்த்துக்கிட்டு, லக்ஸரியான லைஃப்ப வாழறதுக்கு எல்லா ஏற்பாடும் செய்வோம்...ஆனா அதுக்கு முன்னால அவங்க பேர்ல இருக்கிற சொத்துக்களை அவங்க இறந்த பிறகு இந்த ஹோமை நடத்துற ட்ரஸ்ட் பேருக்கு உயில் எழுதி வாங்கிடுவோம். எல்லாம் வயசானதுங்க...நோயாளிங்க...சீக்கிரமா டிக்கெட் வாங்கிடுவாங்க. இப்போதைக்கு நாம இன்வெஸ்ட் பண்ணப்போறது அந்த ஹோம் கட்டறதுக்கான செலவும், பராமரிப்புக்கான செலவும்தான். ஒண்ணுக்கு நூறா, ஆயிரமா சம்பாதிச்சிடலாம். அதனாலத்தான் உங்களையும் எங்க பார்ட்னரா சேர்ந்துக்குங்கன்னு கேக்க வந்தேன். ஒவ்வொருத்தரும் 20 லட்சம் முதலீடு செய்ய வேண்டியிருக்கும்...ஆனா...ஏதாவது ஒரு பெருசு மண்டையப் போட்டாலும் கோடியில வருமானம் வந்துடும்..பெருசுங்க கொஞ்சம் பேரை ஆல்ரெடி சரி பண்ணி வெச்சிருக்கோம். என்ன சொல்றீங்க?


அப்படியே அதிர்ச்சியில கொஞ்ச நேரம் உக்காந்துட்டேன். மனிதர்கள் இவ்வளவு கீழ்தரமா போவாங்களா? வெளியிலப் பாக்கறதுக்கு சேவை மாதிரி தெரியும்...உள்ளுக்குள்ள மிகப்பெரிய சதி. எனக்கு வெறுத்துப்போச்சு. வீட்டுக்கு வந்தவர்கிட்ட தப்பா பேசக்கூடாதுன்னு நினைச்சிட்டு இப்போதைக்கு அவ்ளோ பணம் என்னால இன்வெஸ்ட் செய்ய முடியாதுன்னு சொல்லி அவரை அனுப்பிட்டேன்.


ஆனா நிச்சயமா நான் இல்லன்னாலும் வேற யாராவது பணத்தாசை பிடிச்ச பணக்காரன் இன்னொருத்தனை சேர்த்துக்கிட்டு இந்தக் காரியத்தை செய்யத்தான் போறாங்க. அப்ப பாத்துக்கிறேன் அவங்களை. இருக்கவே இருக்கு விகடன்.

அன்புரசிகன்
10-05-2012, 12:45 PM
இதென்ன பகல் கொள்ளயா இருக்கு...

ஆதி
10-05-2012, 01:19 PM
என்ன வாழ்ந்துவிட போகிறார்கள் இப்படி எல்லாம் சம்பாத்தித்து

சிவா.ஜி
10-05-2012, 01:34 PM
பகல் கொள்ளையா....பயங்கரக் கொள்ளை அன்பு....இதுங்களுக்கு என்ன தண்டனைதான் கொடுப்பது..??

சிவா.ஜி
10-05-2012, 01:35 PM
அப்படியே வாழ்ந்தாலும் அதுவும் வாழ்க்கையா.....கேவலப்பிறவிகள் ஆதன்....எப்படியும் வாழ்வார்கள்.

த.ஜார்ஜ்
10-05-2012, 04:13 PM
எல்லாவற்றையும் வியாபாரமாக பார்க்க பழகி விட்ட ஜன நாயகம்.
யாரைக் கொன்றேனும் திடீர் பணக்காரனாகி விட துடிக்கும் ‘மனிதாபிமானம்’
சொல்லமுடியாது. ஈமு கோழி வளர்ப்பு மாதிரி இதுவும் பிரபலப்படுத்தப் படலாம்.

அமரன்
10-05-2012, 04:48 PM
புல்லுக்கு இறைக்கும் இந்த பொல்லாதவர்களால் நெல்லுக்கும் கொஞ்சம் பொசியுதே என மனமாற்றிக்கொள்வதா?
இப்படியானவர்களை அடி எடுத்து விடாதிருக்க வழி அடைப்பதா? ஏனையோரும் இவர்களைப் போல் தலையெடுக்காதிருக்க விடாமல் எண்ணக்கொலை செய்வதா?
ஏதாச்சும் செய்யனும் சிவாஜி.

கீதம்
10-05-2012, 10:52 PM
பாசமும் பராமரிப்பும் விலைபேசப்பட்டு அதிலும் லாபக்கணக்கு பார்க்கும் வியாபாரிகள்!

ஆதரவற்ற பிள்ளைகளை நொந்து ஆறுதல் தேடும் உள்ளங்களுக்கு வேறுவழியில்லை.

வலையென்று அறிந்தும் அதில் வீழத் தலைப்படும் வயோதிக நெஞ்சங்கள்.

தனித்தொரு தீவில் கைவிடப்பட்டிருப்பதை விடவும், ஓட்டைப் படகென்றாலும்

ஒத்த மனங்களோடு பயணிக்க உடன்பட்டுவிட்டன சில முதிய மனங்கள்.

பணம் பெற்றுக்கொண்டவர்கள் படகையாவது பராமரித்து பயணத்தை இலகுவாக்கவேண்டும், நட்டாற்றில் கைவிட்டுவிடாமல்.

மனத்தை மிகவும் நெகிழ்த்திய நிகழ்வு. இப்படிப்பட்ட மனிதர்களும் இருக்கிறார்கள் என்று அறியச் செய்தமைக்கு நன்றி அண்ணா.

jayanth
11-05-2012, 01:33 AM
பிணந்திண்ணி கழுகுகளை விட மோசமான மனிதர்கள்.

தாமரை
11-05-2012, 02:36 AM
அண்ணே சிவா.ஜி ஒரு பக்கம் மட்டுமே பார்த்திருக்கோம் இல்லியா? இதன் அடிப்படைக் காரணம் என்ன என்பதை யோசித்தால் கூட்டுக் குடும்பங்களின் சிதைவு என்றே எடுத்துக் கொள்ளலாம்.

இப்படிப் பட்ட ஒரு ஸ்தாபனத்திற்கு தன் சொத்து முழுதையும் எழுதி வைத்துவிட்டு வரத் தயாராக இருக்கும் வயோதிகர்களை எண்ணிப் பார்ப்போம்.

இதில் இரண்டு வகை இருப்பாங்க.

மக்கள் உறவினர்கள் இவர்களால் கவனிக்கப்படாமல் இருக்கும் தனி மனிதர்கள். இவர்களுக்குப் பின் அவங்க சொத்து யாருகிட்ட இருந்தா என்ன எனக் கவலைப்படாதவர்கள்.

சாகற வரைக்கும் ஷோக்கா வாழணும்னு நினைக்கிற ஜாலி பேர்வழிகள்.

அவங்க பணத்தை எப்படிச் சம்பாதித்தாங்களோ என்ற கேள்வியும் எழுப்பபடுமே.. நாம் யாருக்காக இப்போது கவலைப்படுகிறோம் என யோசிப்போம்.

அவர்களுக்குச் சொத்து இருக்கிறது. ஆனால் சொந்த பந்தங்களோ அன்போ இல்லை.
அவர்களால் பலருக்கு வாழ்வளிக்கும் வகையில் வாழ முடியும். ஆனால் அவர்களோ சொகுசாக வாழ ஆசைப்படுகிறார்கள்.

சொல்லப் போனா இதில பாதி தப்பு பாதி சரி.

அதாவது இலாபத்திற்காக மட்டுமே இதை நடத்தினா தப்புதான்.

இருக்கறவனைச் சேர்த்துக்கறவங்க கூடவே இல்லாதவங்களையும் சேர்த்து அவர்களுக்கென்று சில சிறுதொழில்களைத் தந்து தெருவில் அனாதைப் பிணமா இல்லாம பலருக்கு கௌரவமான முடிவுகளைத் தருமுடியுமானால் அது சரி.

அதாவது இப்படிச் சேருகிற பணத்தில் ஆதரவற்ற குழந்தைகள் முதியோர்களுக்கு இல்லம் கட்டி தொழில்களை உண்டு பண்ணி கௌரவமாக வாழவைக்க முடியுமானால் அது நல்ல விஷயம்.

இரண்டாவதைத் தான் நீங்க எதிர்பார்த்தீங்க இல்லையா?

இதிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியதும் இருக்கு. செயல்கள் நல்லவை அல்லது கெட்டவையாக மாறுவது அதன் பிண்ணனியில் இருக்கும் நோக்கங்களினால்தான் இல்லையா?


அப்புறம் இன்னொரு விஷயம். நம்ம ஆளுங்க கணக்கில வீக்கா இருக்கலாம். ஆனால் கணக்கு எழுதறதில ஸ்ட்ராங். :).

இந்த நம்பிக்கையில்தான் பலர் டிரஸ்ட் என்ற பெயரில் அந்த வார்த்தைக்கே களங்கம் சேர்த்திகிட்டு இருக்காங்க. சொத்து என்று வரும்பொழுது கூடவே குறைந்த மதிப்பீடு என்ற வார்த்தையும் வந்து கறுப்புப்பணமும் வந்து விடுகிறது. அதனால் கணக்கு பார்த்தெல்லாம் இவர்களை ஒன்றும் செய்ய முடியாது. அப்படியே பிடித்தாலும் 20 வருஷம் வழக்கு நடந்து முடிவுக்கு வர்ரதுக்குள்ள இவங்க போய் சேர்ந்திடுவாங்க. இதைச் சட்டப்படி தவறு என்று சொல்லி ஜெயிக்க முடியாது. இது ஆசை. இதற்கு மேலும் பேராசைப்பட்டு இவர்கள் மரணத்தை விரைவு படுத்தல் என்னும் செயலில் இறங்கினால் மாத்திரமே மாட்டுவார்கள். அது ஓரளவு பணம் சேர்ந்ததும் இன்னும் வேகமாகச் சேர்க்கும் நோக்கில் இவர்கள் நடக்கும் பொழுதுதான் நடக்கும்.

எளியதை வலியது அடித்துச் சாப்பிடும் மிருக வாழ்க்கைதான் இதுவும்.

M.Jagadeesan
11-05-2012, 03:15 AM
வயதான முதியோர்கள் , வெளிநாட்டிலே வாழும் தங்களுடைய மகனுக்குத் தெரியாமல், அல்லது அவருடைய ஒப்புதலைப் பெறாமல், சொத்தை யாருடைய பெயருக்கும் எழுதி வைக்கமுடியாது. மேலும் இப்போதிருக்கும் பிள்ளைகள் , மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறார்கள். பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு, சொத்தை விற்றுக் காசாக்கிக் கையோடு எடுத்துச் சென்றுவிடுகிறார்கள்.

சிவா.ஜி
11-05-2012, 05:35 AM
ஆமாம் ஜார்ஜ்...சமீப காலங்களில் இந்த ஈமுவும் மனிதர்களை படுத்துகிறது. எல்லாமே பேராசையால்தான். நன்றி நண்பா.

சிவா.ஜி
11-05-2012, 05:37 AM
உண்மைதான் பாஸ். கெட்ட எண்னத்திலும் நல்லதாய் ஆதரவற்ரவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தால் நல்லதுதான். ஆனால் இவர்களின் நோக்கமே பெரும் பணம்தானே...பணமில்லாதவர்களை சீந்த மாட்டார்களே.

சிவா.ஜி
11-05-2012, 05:40 AM
வலையென்று தெரிந்தும் வீழத் தளைப்பட்ட வயோதிக நெஞ்சங்கள்.....வேறு வழி...??? பெற்ற பிள்ளையும், உற்றார் உறவினரும் கைவிட்ட பிறகு எங்கே செல்வார்கள் இந்த அன்புக்கும், ஆதரவுக்கும் ஏங்கும் பெரியவர்கள்? அவர்களின் நிராதரவை காசு பார்க்கப் பயன்படுத்தும் மோசக்காரர்கள். ஜார்ஜ் சொன்ன ‘மனிதாபிமானம்’தான் இவர்களின் மூலதனம் தங்கையே.

சிவா.ஜி
11-05-2012, 05:42 AM
உண்மைதான் தாமரை. கூட்டுக்குடும்பங்களின் சொர்க்க சுகம் மறைக்கப்பட்டதாலேயே விளையும் விபரீதங்கள் இவை. மேலும் இது அந்த பெற்றோர்கள் செய்யும் பிழையே. மகனை படிக்க வைப்பதே பெரும் பணம் சம்பாதிக்கத்தான் என அவனது மனதில் அந்த பேராசையை ஊட்டி வளர்த்துவிட்டு, அதன் வழி நடக்க அந்த மகன் தலைப்படும்போது நொந்து நோகிறார்கள்.

சிவா.ஜி
11-05-2012, 05:43 AM
ஆமாம் ஜெயந்த். பிணந்திண்ணிக் கழுகளைவிட மோசமானவர்கள்தான்....இந்தப் பெற்றோரின் பிள்ளைகளும், உறவினர்களும். நன்றி ஜெயந்த்.

சிவா.ஜி
11-05-2012, 05:45 AM
சரிதான் ஜகதீசன் அவர்களே. பிள்ளைகள் மிகவும் சாமர்த்தியமாகத்தான் நடந்துகொள்(ல்)கிறார்கள்.

தாமரை
11-05-2012, 06:48 AM
அப்படிச் சொல்ல இயலுமா என்று தெரியவில்லை ஜெகதீசன் ஐயா. ஏனென்றால் குடும்பச் சொத்து என்ற வார்த்தை மறைந்து கொண்டு இருக்கிறது. தாத்தாவின் சொத்து உயில், தானம், செட்டில்மெண்ட் இன்னபிற வகையறாக்களால் முழு உரிமை உள்ள சொத்தாகவே நீடிக்கிறது. எனவே சொத்துக்களை எழுதி வைக்க மக்களின் ஒப்புதல் தேவையில்லை. ஆனால் சமீபகாலத்தில் கொண்டுவரப்பட்ட ஒரு சட்டம் மட்டும் மனைவி ஒப்புதல் இல்லாமல் சுய சம்பாத்திய சொத்தாகவே இருந்தாலும் எழுதிவைக்க முடியாது என்கிறது. இது மட்டும்தான் இருக்கும் ஒரே பிடி.

உயில் எந்த நேரத்திலும் மாற்றப்படலாம் என்பதால் ஒன்று செட்டில்மெண்ட் அல்லது விற்பது என்பது மட்டுமே பிள்ளைகளின் எண்ணம். செட்டில்மெண்ட் என்றாலும் யாராவது உறவினர்கள் அனுபவ உரிமை கொண்டாடக் கூடும் என்பதால் பிள்ளைகள் சொத்தை விற்றுக் காசாக்கிக் கொள்கிறார்கள்.

இங்கு சேரும் முதியோர்கள் உபயோகமாக வாழ எண்ணாதவர்கள் என்பதால் நாம் கவலைப் படுவதில் உபயோகம் இருக்கிறதா என யோசிக்கவும் வேண்டும்.

g.r.senthil kumar
11-05-2012, 11:19 AM
அதிர்ந்து போய்விட்டென் சிவா

சிவா.ஜி
11-05-2012, 06:52 PM
ஆமாம் செந்தில்குமார். அவர் விவரித்து சொன்னபோது நானும் அதிர்ந்துவிட்டேன். இவ்வளவு கேவலமாகவா மனிதர்கள் இருப்பார்கள்...???

Hega
11-05-2012, 08:36 PM
எல்லாமே வியாபாரமாகி அன்பும், பண்பும் வற்றிபோகும் காலம் இதுவல்லவோ...

Dr.சுந்தரராஜ் தயாளன்
12-05-2012, 04:45 AM
மிகவும் கொடுமையான செய்தி

ஜானகி
12-05-2012, 05:45 AM
கலியின் கோரமான முகத்தில் இதுவும் ஒன்று ! இறைவா...உலகைக் காப்பாற்று !