PDA

View Full Version : பிறப்பொக்கும் எவ்வுயிர்க்கும் ( கதைக் கவிதை )இராஜிசங்கர்
09-05-2012, 09:53 AM
சாளரத்தின் வாசல் வழி சிட்டுக்களின் சலசலப்பு ;
காற்றில் கலந்து வரும் கனிந்த கீதம்;
பஞ்சணையில் படுத்துப் புரண்டு பார்க்கிறேன் ;
எழும்பச் சொல்லி விண்ணப்பிக்கின்றது விடிகாலைத் தேநீர் ;
எட்டுப் பேர் எட்டி நின்று சேவகம் செய்ய
எதிலும் மனமில்லாமல் விடிகிறது என் காலை;

வீடெங்கும் ஒளிர்கிறது பணத்தின் எதிரொளிப்பு
பார்த்தவுடன் பற்றிக் கொண்டது ஏதோவொரு உற்சாகம்
தங்கத்தை தடவிப் பார்த்துக் கொண்டே தாழ்வாரத்தில் நின்று பார்க்கிறேன்

கடல் சொன்ன ரகசியத்தை அவசரமாகக் கரைக்கு சொல்லும் கடலலைகள்
தந்தையின் தோள் கட்டிக்கொண்டு திருவிழாக் கடையை
வேடிக்கை பார்க்கும் விளையாட்டுப் பிள்ளையாய்க் கப்பல்கள்

விழிகள் விரித்து நான் வியந்திருக்க
கடல் என்ன சொன்னதோ சீற்றத்துடன் சீறி வந்தன சில்லென்ற அலைகள்
கரையை முத்தமிட்டே பழகிய முரட்டு அலைகள்
கரையையே விழுங்கும் அளவுக்கு சீறிப் பாய்ந்து வந்தது
கரை மேலென்ன இத்தனை காதலா என்று அதிர்ச்சியுடன் நான் நிற்க
சீற்றமிகு அலைகள் சினத்துடன் சிதைத்து விட்டது என் வீட்டையும்

செல்வமென்று நான் நினைத்த அனைத்தும் செல்லா இடம் நோக்கிச் சென்று விட்டது
உயிர் மட்டும் மிச்சமாய் நான் நிற்கிறேன் நாற்பதாயிரம் மைல் தாண்டி;

பகட்டாய் பணக்காரனாய் கண் விழித்தவன் இன்று
ஏழையாய் உறங்கப் போகிறேன்;
தொழிலால் ஏற்றத்தாழ்வு விளைத்த நான் இன்று
தொழிலின்றி நிற்கிறேன் நிராதரவாய்;

எதுவும் இல்லாத போது தெரிகிறது ஏழ்மையின் நிலைமை
பணத்தால் மனிதர்களை ஒதுக்கிய நான்
ஒதுங்கி நிற்கிறேன் எல்லாம் துறந்து ஊர் கரையில்;

ஜாதி மத பேதங்களை மறந்து விட்டேன்;
ஏற்றத் தாழ்வுகளை எரித்து விட்டேன்;
பணத்திமிரைப் புதைத்து விட்டேன்;
உழைக்க மட்டும் துணிந்த உடலோடு
நிற்கிறேன் - புது விடியலை நோக்கி

கீதம்
09-05-2012, 12:27 PM
இயற்கை சீற்றங்களுக்கு முன் வலியவனாவது? எளியவனாவது? எல்லோரும் சமமே...

வாழும் நாளில் உணர்ந்திடா உண்மையை வலிய வந்து உணர்த்துகிறது இயற்கை.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.... இறப்புமொக்கும் எல்லா உயிர்க்கும்....

இடைப்பட்ட வாழ்வில் மட்டும் ஏற்றத் தாழ்வுகள் ஏன் என்று சமப்படுத்திச் சென்றுவிட்டது பேரலை.

நேற்றைய கணவான் இன்று கையேந்தும் நிலையில்! காலத்தின் கோலம்!

கவிக்கதையும் கரு உணர்த்திய பாடமும் நன்று. பாராட்டுகள் இராஜி.

இராஜிசங்கர்
09-05-2012, 01:24 PM
நன்றி கீதம்..நான் கல்லூரி இறுதி ஆண்டு பயிலும் போது இந்த கவிதைக்கு வட்டார அளவில் முதல் பரிசு கிடைத்தது என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்வடைகிறேன்.

குறிப்பு:
----------
ஆங்கிலப் பதிவுக்கு அனுமதியில்லை என்பது எனக்கு தெரியாது.தவறுக்கு மன்னிக்கவும்.
இப்பொழுது தான் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.இது போல் ஒரு வலைத்தளத்தைத் தான் நான் தேடிக் கொண்டிருந்தேன்.
என் முயற்சி வீண் போகவில்லை.அருமை தமிழ் மன்றம்.மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்..
தமிழுக்கும் அமுதென்று பேர்..அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்..

கீதம்
09-05-2012, 10:05 PM
பிறப்பொக்கும் எவ்வுயிருக்கும் கவிதை வட்டார அளவில் முதல் பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள் இராஜி.

கீதம்
10-05-2012, 08:22 AM
ஆங்கிலப் பதிவுக்கு அனுமதியில்லை என்பது எனக்கு தெரியாது.தவறுக்கு மன்னிக்கவும்.
இப்பொழுது தான் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.இது போல் ஒரு வலைத்தளத்தைத் தான் நான் தேடிக் கொண்டிருந்தேன்.
என் முயற்சி வீண் போகவில்லை.அருமை தமிழ் மன்றம்.மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்..
தமிழுக்கும் அமுதென்று பேர்..அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்..

உங்கள் தமிழார்வம் கண்டு மிகவும் மகிழ்கிறேன் இராஜி. உங்கள் வருகையால் மன்றத்திற்கு மேலும் சிறப்பு சேர்கிறது. புரிதலுக்கு நன்றி இராஜி.

சிவா.ஜி
10-05-2012, 10:25 AM
இயற்கை சீற்றத்தால் உருக்குலைந்தவனின் வாழ்க்கையை கவிதையாய் வாசிக்க அருமையாய் இருக்கிறது. கீதம் சொன்னதைப்போல உங்கள் வரவு தமிழ் மன்றத்திற்கு சிறப்பு. வாழ்த்துக்கள் ராஜிசங்கர்.

(முதல் பரிசைப் பெற்றமைக்கு சிறப்பு வாழ்த்துக்கள்)

இராஜிசங்கர்
10-05-2012, 10:54 AM
நன்றி சிவா.ஜி

ஷீ-நிசி
11-05-2012, 01:27 AM
கவிதை பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள் நண்பரே


கடல் சொன்ன ரகசியத்தை அவசரமாகக் கரைக்கு சொல்லும் கடலலைகள்


ரசிக்க வைத்த வரிகள்....

சுனாமி, பூகம்பம் போன்ற இயற்றை சீற்றங்கள் அவ்வபோது மனித குலத்திற்கு அறைகூவல் விடுத்துக்கொண்டேதானிருக்கின்றன..

உணர்ந்தவன் மனிதனாகிறான்..

நாகரா
11-05-2012, 03:39 AM
கடல் கோள் சமத்துவத்தை போதிக்கும் ஞான வாளாய். கதைக்கவிதை அருமை, பரிசு பெற்றமைக்கும் வாழ்த்துக்கள் இராஜிசங்கர்.

இராஜிசங்கர்
11-05-2012, 04:12 AM
நன்றி ஷீ-நிசி & நாகராஜன்