PDA

View Full Version : விட்டு விடுதலையாகி.....!!!சிவா.ஜி
08-05-2012, 07:24 PM
சென்னையிலிருந்து சிங்கப்பூர் வழியாக தென்கொரியா தலைநகரம் சியோலுக்குப் போகும் அந்த விமானத்தில் தனது பக்கத்து இருக்கையில் அமர்ந்தவரை, போர்டிங் கார்ட் வாங்குமிடத்திலேயே பார்த்திருந்தான் புகழேந்தி. அவன் பணிபுரியும் நிறுவனத்தால் அலுவலக வேலையாய் சியோலுக்கு அனுப்பட்டு, பயணிக்கிறான். ஐம்பது சொச்ச வயதிலிருந்த அவரது செயல்களில் இருந்த சிறிதான தடுமாற்றம் அவரைக் கவனிக்க வைத்தது. சந்திரமுகி படத்தில் கொலுசைப் பற்றி ரஜினி பேசும்போது ஜோதிகாவின் முகம் மாறுமே அந்த பாவனை அவரது முகத்தில் அடிக்கடி வந்து போனது. அவரது உள்ளுக்குள் ஏதோ ஒன்று அடிக்கடி அவரை அப்படி மாற்றுகிறது என்று தெரிந்தது. இருக்கையில் வந்து அமர்ந்தவுடன் சீட் பெல்ட்டை மாட்டிக் கொண்டார்...சற்று நேரம் கழித்து மீண்டும் அவிழ்த்தார். முன் இருக்கையின் பின்னாலிருந்தப் பையிலிருந்த புத்தகத்தை எடுத்தார்...சட சடவென பக்கங்களைப் புரட்டினார். மீண்டும் மூடி அதற்குள்ளேயே வைத்துவிட்டார்.


அவரது அந்த செய்கைகளை நிதானமாகப் பார்த்துக்கொண்டிருந்த புகழேந்தி, அவர் ஏதோ தொந்தரவான சிந்தனைகளின் துரத்தலில் சிக்கிக்கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்தான். அவரிடம் பேச வேண்டுமென்ற ஆர்வத்துடன்,


“ஹலோ சார், ஐயேம் புகழேந்தி, சியோலுக்கு போறேன்...நீங்களும் சியோலுக்கா?”


சட்டென்று அவன் பேசவும், அவரது பார்வையில் லேசான திடுக்கிடல் தெரிந்தது. அவர் அதை எதிர்பார்க்கவில்லையென்பது தெரிந்தது. சற்றுநேரம் அவனை உற்றுப் பார்த்தவர் பதிலேதும் சொல்லாமல் மீண்டும் அந்தப் புத்தகத்தை எடுத்துப் புரட்டத்தொடங்கினார். புகழேந்தி ஒருவிதத்தில் அவரது இந்த செய்கையை எதிர்பார்த்திருந்தான்.. புன்னகையுடன் தனது அலைபேசியை எடுத்து உயிரிழக்க வைத்தான். பெல்ட்டைக் கட்டிக்கொண்டான். அவன் செய்வதை ஓரக் கண்ணால் பார்த்த அவரும் அவசரமாய் தனது அலைபேசியை எடுத்து அணைத்தார். இரவுநேரப் பயணம் என்பதாலும், விமானத்துக்குள் குளிர் அதிகமாய் இருந்ததாலும், பணிப்பெண்ணை அழைத்து போர்த்திக்கொள்ள போர்வைக் கேட்டான். கொண்டுவந்து கொடுத்தவளிடம், அவரும் போர்வைக் கேட்டார். புகழேந்தி லேசாய் சிரித்துக்கொண்டான்.


விமானம் எந்தக் குலுங்கலும் இல்லாமல் நகரத்தொடங்கியதும், விமானத்துக்குள் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளின் விளக்கத்தை மூன்று பணிப்பெண்கள் இயந்திரமாய் சொல்லத் தொடங்கினார்கள். விமானம் வேகம் கூட்டி மேலெழுந்தது. தனது மூக்கை சற்றே மேலே தூக்கி சரிவாய் உயரம் கூட்டியது. சற்று நேரத்துக்குப் பிறகு தனது பைசா கோபுர நிலையிலிருந்து, படுத்துக்கொண்ட நிலைக்கு வந்ததும், சீட்பெல்ட்டை கழற்றிக்கொள்ளலாம் என்ற அறிவிப்பு வந்ததும், அதற்காகவே காத்துக்கொண்டிருந்தவரைப் போல அவசரமாய் பெல்ட்டைக் கழற்றிவிட்டு, வேகமாய் விமானத்தின் பின் பக்கத்திற்குப் போனவரை திரும்பிப்பார்த்தான் புகழேந்தி. கழிவறைக்குப் போகிறார்போலிருக்கிறது என நினைத்தவனின் எண்ணம் தவறு என்பது அவர் கையில் விஸ்கி நிரம்பிய கோப்பையுடன் வந்து அமர்ந்ததும் தெரிந்தது.


இன்னும் சற்று நேரத்தில் அவர்களே தேவைப்படும் அனைவருக்கும் வழங்குவார்கள். ஆனால் இவரோ அதுவரைக் கூடக் காத்திருக்க இயலாமல் நேரிடையாய் சென்று வாங்கி வந்துவிட்டிருக்கிறார். அவரைத் துரத்தும் அந்த ஏதோ ஒன்றின் ஆக்ரமிப்பிலிருந்து தாற்காலிகமாய் தப்பித்துக்கொள்ள போதையைத் துணைக்கழைக்கிறாரா...அல்லது...தீவிரக்குடியரா......யோசித்துக்கொண்டிருந்தவன் அவர் அடுத்து செய்ததைப் பார்த்ததும் ஆச்சர்யப்பட்டான். விஸ்கி நிரம்பிய அந்தக் கோப்பையை தனக்கு முன்னாலிருந்த ட்ரேயில் வைத்துவிட்டு, கண்களை இறுக மூடிக்கொண்டார். வாய் எதையோ முணுமுணுத்தது. கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. சட்டென்று கண் திறந்தவர் கோப்பையை எடுத்து ஒரே மடக்கில் வாயில் ஊற்றிக்கொண்டு தலையை சிலுப்பிக்கொண்டார். உடல் லேசாய் குலுங்கியது. தலைக்கு மேலிருந்த அழைப்பு மணியை அழுத்தினார். வந்து நின்ற பணிப்பெண்னிடம் இன்னுமோர் கோப்பைக் கேட்டார். கொண்டு வந்து கொடுத்ததும், அதையும் ஒரே மடக்கில் குடித்தார்.


இப்போது அவரது முகத்தில் அந்த ஜோதிகாத்தனம் இல்லை. அமைதியாய் இருந்தது. புகழேந்தியைத் திரும்பிப்பார்த்தவர்,


“ஹை, ஐயேம் பாஸ்கரன். நானும் சியோலுக்குத்தான் போறேன். ஆனா என் குடும்பம் நான் மஸ்கட் போறதாத்தான் நினைச்சிக்கிட்டிருக்காங்க. நான் அங்கருந்து லீவுல வந்துட்டு திரும்பப்போறதா என் பொண்டாட்டி நினைச்சிக்கிட்டிருக்கா...ஆனா நான் அங்க இருக்கும்போதே இந்த வேலைக்கான இண்டர்வியூல கலந்துகிட்டு செலக்ட் ஆகி இப்ப சியோலுக்குப் போறேங்கறது அவளுக்கும் என் பையனுங்களுக்கும் தெரியாது. அவ்ளோ சீக்ரெட்டா இதையெல்லாம் செஞ்சேன்”


இதை சொல்லும்போது அவரது கண்கள் லேசான குரூரத்தைக் காட்டியது.


தான் அறிமுகப்படுத்திக்கொண்டபோது ஒரு வார்த்தையும் பேசாமல் மௌனம் காத்தவர்...தான் கேட்காமலேயே இப்படி கொட்டித் தீர்ப்பதைப் பார்த்து அவனுக்கு ஆச்சர்யமே வரவில்லை. அதேபோல இவன் எந்த பதிலும் சொல்லாவிட்டாலும் அவர் இன்னும் பேசுவார் என்று அவனுக்குத் தெரியும். பேசினார்,


“கொஞ்ச நாளா என் மனசுக்குள்ளேயே தர்க்கம் பண்ணி, நிறைய யோசிச்சு....ஒரு அவஸ்தையில இருந்தேன். நான் செய்யப்போறதைப் பத்தி யார்கிட்டயாவது மனசுவிட்டுப் பேசனும்ன்னு தோணுச்சு...நீங்க யாரோ...இனி சந்திப்போமா தெரியாது...அதான் இதையெல்லாம் உங்கக்கிட்ட சொல்றேன். என்னடா இவன் குடும்பத்துக்குக் கூட தெரியாம வேற நாட்டுக்குப் போறானேன்னு நினைக்கிறீங்களா...எல்லாரும் கண்டிப்பா அப்படித்தான் நினைப்பாங்க. வெறுத்துப் போயிட்டேன் சார். 27 வருஷமா வெளிநாட்டுல இருக்கேன். ஒரு சாதாரண டெக்னீஷியனாத்தான் மொதமொதல்ல வேலைக்குப் போனேன். அப்புறம் அதே கம்பெனியில மேனேஜரா ஆனேன். மொதல்ல ரெண்டு வருஷத்துக்கு ஒரு வாட்டி ஊருக்கு வந்துகிட்டிருந்தேன்..அப்புறம் ஒரு வருஷமாச்சு, அதுக்கப்புறம் ஆறு மாசத்துக்கு ஒரு வாட்டி.....”


எங்களை நெருங்கிவிட்ட குளிர்பான மற்றும் மதுபான வண்டியைப் பார்த்ததும், அவர்கள் கேட்காமலேயே,


“ஒன் விஸ்கி வித் சோடா”


எனக் கேட்டு வாங்கிக் குடித்துவிட்டு,


“நீங்க குடிக்கமாட்டீங்களா?”


“குடிப்பேன் சார். எப்பயாவது பார்ட்டியிலதான். ஆனா ட்ராவல்ல குடிக்கிற பழக்கம் இல்ல”


என்றதும்,


“நான் ட்ராவல்ல நிறைய குடிப்பேன். வீக் எண்ட்ல ரூம்ல குடிப்பேன், பர்மிட் வெச்சிருக்கேன்...மூணு வருஷம் முன்னால வரைக்கும் வீட்டுக்கு லீவுல போகும்போதும் நான் வாங்கிட்டுப் போற பாட்டிலை சனி, ஞாயிறுல குடிப்பேன். அதுக்கும் வேட்டு வெச்சிட்டா சார் என் பொண்டாட்டி. பசங்க வளர்ந்துட்டாங்களாம்...அவங்க முன்னாடி குடிச்சா அவங்களுக்கும் அந்தக் கெட்டப் பழக்கம் வந்துடுமாம்...இப்பல்லாம் பசங்களுக்கு யார் சார் சொல்லித்தரனும்...ஊர்ல பாருங்க பத்தாவது படிக்கிற பையன் டாஸ்மாக் கியூவுல நின்னு குவார்ட்டர் வாங்கிட்டுப் போய் பசங்களோட சேந்து அடிக்கிறான்..என்னவோ என் பசங்க குடிக்கவே குடிக்கறதில்லன்னு அவளுக்கு நெனப்பு...பெரியவன் இஞ்சினீரிங் செகண்ட் இயர் படிக்கிறான்..நான் இருக்கும்போதே ரெண்டு வாட்டி குடிச்சிட்டு வெங்காயம் சாப்ப்ட்டுட்டு, பாடி ஸ்ப்ரேவை ஃபுல்லா அடிச்சிக்கிட்டு வந்தான். என் பொண்டாட்டிக்கு வெங்காய வாசனையும், ஸ்ப்ரே வாசனையும்தான் தெரிஞ்சுது. ஆனா என்னை ஏமாத்த முடியுமா...ஆனாலும் நான் அவகிட்ட அத சொல்லல...அவ அவங்க மேல நம்பிக்கை வெச்சிருக்கா...வெச்சுட்டுப் போகட்டும்...”


சற்று நேரம் அமைதியாக இருந்தார். அதற்குள் அவரது கண்கள் நன்றாக சிவந்துவிட்டிருந்தன. மூன்று பேர் அமரக்கூடிய அந்த வரிசையில் ஜன்னல் பக்கமிருந்தவர்...எத்தனைநாள் தூக்கமில்லாமல் இருந்தாரோ...வந்து அமர்ந்ததும் தூங்க ஆரம்பித்தவர்...இன்னும் தூங்கிக்கொண்டே இருந்தார். நடுவிலிருந்த இருக்கையில் புகழேந்தி அமர்ந்திருந்தான்.


“விருந்தாளி வாழ்க்கை சார். எனக்குன்னு ஒரு கப்போர்ட் கூட இல்ல. நான் கொண்டுகிட்டு போற பெட்டிதான் நான் திரும்பி வர்ற வரைக்கும் எனக்கு கப்போர்ட். ரொம்பப்பேருக்கு என்னை யாருன்னே தெரியல...எதையாவது மனசு விட்டுப் பேசக்கூட ஃபிரண்டுங்க இல்ல. வைஃப்கிட்ட பேசலான்னா...பசங்களோட எதிர்காலம், வாங்கிப்போட்டிருக்கிற சொத்துங்க...அவங்க குடும்பத்துல நடக்குற விஷயங்க...அவ தங்கைக்கு பணம் வேணும்....இப்படிதான் பேசறா....கொஞ்சம் நெருக்கமா போனா....எனக்கு இண்ட்ரஸ்ட் இல்லீங்க...பசங்க பெரியவங்களாயிட்டாங்க...ஒரு வயசுக்கு மேல இதையெல்லாம் நிறுத்திடனும்...இது இருந்தாத்தான் நமக்குள்ள அந்நியோன்யம் இருக்குமா...இல்லாமலேயே சும்மா பேசிக்கிட்டிருந்தாலே போதுன்னு லெக்சர் அடிக்கிறா...52 வயசுல இதெல்லாம் தேவையில்லன்னு யார் சார் சொன்னது. நான் சொல்றது புரியுதுல்ல...ஹாங்... மனசு பூரா ஒரு வெறுமை வந்துடிச்சு. லாஸ்ட் சிக்ஸ் மன்த்தா நான் அவகிட்ட போன்லக்கூட ரொம்ப கம்மியாத்தான் பேசியிருக்கேன். மூணு மாசம் முன்னாடிதான் ஒரு பிலிப்பினோ ஆளை சந்திச்சேன். பொண்டாட்டி, குடும்பம் எல்லாத்தையும் விட்டுட்டு தனியா ஜாலியா வாழ்க்கையை எஞ்ஜாய் பண்ணிக்கிட்டிருக்கான். ஆறு மாசத்துக்கு ஒரு தடவ...லீவுல அவன் நினைச்ச நாட்டுக்குப் போறான் சந்தோஷமா ஜாலியா எஞ்ஜாய் பண்ணிட்டு உற்சாகமா திரும்பி வரான். இவ்வளவுக்கும் அவன் என்னைவிட அஞ்சு வயசு பெரியவன்...அதான் நானும் தீர்மானிச்சுட்டேன். போதும்...இவங்களுக்காக உழைச்சு சேத்தது. நான் இல்லன்னாலும் அவங்களால சந்தோஷமா வாழ முடியுற அளவுக்கு சொத்தும் பணமும் இருக்கு...இனிமே என்னோட வாழ்க்கையை நான் வாழப்போறேன்...சந்தோஷமா அனுபவிக்கப்போறேன்...கொரியாவுல காண்ட்ராக்ட் மேரேஜ் எல்லாம் இருக்காம்....”


இதை சொல்லும்போது மீண்டும் அவருக்கு அந்த ஜோதிகா முகபாவம் வந்துவிட்டது. புகழேந்தி இப்போது அதிர்ச்சியடைந்தான். என்ன ஒரு விபரீத முடிவு...எப்படி இப்படி இவரால் அனைத்தையும் விலக்கிவிட்டு ஒரு வாழ்க்கையை தேர்ந்தெடுக்க முடிந்தது...எவ்வளவுதான் கசப்பு இருந்தாலும்...இந்த முடிவு சரியில்லையே...இதை எப்படி இவருக்குச் சொல்வது...சொன்னாலும் கேட்கும் மன நிலையில் இவர் இருக்கிறாரா....இருந்தாலும் பேசிப்பார்க்கலாம் என நினைத்தான்


சார்....வேண்டாம் சார். உங்க முடிவு சரியில்ல...இப்படி ஆரம்பிக்க நினைத்தவன் சட்டென்று மாற்றிக்கொண்டு,


“சார்...உங்க வேதனை புரியுது. இத்தனை வருஷமா இந்தக் குடும்பத்துக்காக உழைச்சவருக்கு அதுக்கு ஏத்த ட்ரீட்மெண்ட் கிடைக்கலன்னா மனசு வேதனைபடுந்தான். ஆனா ஒரு செகண்ட் நினச்சுப் பாருங்க...இப்போதைக்கு உங்க முடிவு சந்தோஷத்தக் குடுக்கும்...ஆனா...வயசாகி தளர்ந்துபோய்...ஆதரவு தேவைப்படற நேரத்துல உங்க பக்கத்துல யாருமே இருக்க மாட்டாங்களே சார்.....”


“காச தூக்கிப்போட்டா ஆயிரம் வேலக்காரங்க வருவாங்க நீங்க என்ன சார் உலகம் தெரியாம பேசிக்கிட்டிருக்கீங்க....இப்பவே என்னை உதாசீனப்படுத்துறவங்க நான் தளர்ந்து போயிட்டா எனக்கு ஆதரவா இருப்பாங்கன்னு நினைக்கிறீங்களா? ஏதாவது ஹோம்லக் கொண்டுபோய் போட்டுடுவாங்க...என் பொண்டாட்டிக்கு அவளோட பசங்க எதிர்காலமும், அவங்க வாழ்க்கையும்தான் முக்கியம்..”


“சார் தப்பா எடுத்துக்காதீங்க...நீங்க உங்க வைஃப்ப சரியா புரிஞ்சிக்கலன்னு நினைக்கிறேன். நீங்க மட்டுமே இந்தக் குடும்பத்துக்காக கஷ்டப்பட்டதா நெனைக்காதீங்க...உங்க அளவுக்கு, இன்னும் சொல்லப்போனா உங்களவிட அதிகமா இழந்ததும், கஷ்டப்பட்டதும் உங்க மனைவிதான். இத்தனை வருஷமா உங்களைப் பிரிஞ்சிருந்து, தன்னோட சின்னச் சின்ன ஆசைகளைக் கூட அடக்கி வெச்சுக்கிட்டு, யாரோடையும் தன்னோட அந்தரங்க எண்ணங்களை பகிர்ந்துக்க முடியாம, பிள்ளைகளையும் வளர்த்து ஆளாக்கி....நெனைச்சுப் பாருங்க சார்....அவங்களை இப்படி ஒரேயடியா உதறிட்டுப் போறது ரொம்ப தப்பு சார்”


“ஹலோ....எது தப்பு எது ரைட்டுன்னு எனக்குத் தெரியும். நல்ல பொஷிசனுக்கு வந்ததுக்கப்புறம் என்கூடவே வந்துடுங்க மஸ்கட்லயே இருக்கலாம்ன்னு நான் கூப்டப்ப அவ என்ன சொன்னா தெரியுமா....புள்ளைங்களோட படிப்பு இருக்கு, எங்க அப்பா அம்மாவை பாத்துக்க யாருமில்ல நாந்தான் பாத்துக்கனும், உங்க அப்பா வேற நம்மக் கூட இருக்கார், அவர யார் பாத்துக்குவாங்கன்னு கதை சொல்லி வரலன்னு சொல்லிட்டா...”


“நியாயம்தான சார்...பசங்க படிப்புக் கூட ஓக்கே...ஆனா வயசான உங்க அப்பாவப் பாத்துக்கனுன்னு சொன்னது சரிதான சார். அதுவுமில்லாம, அவங்க அப்பா அம்மாவையும் பாத்துக்கிற கடமையும் அவங்களுக்கு இருக்கில்ல...”


“அதுக்குன்னு...எனக்கும் குடும்பத்தோட இருக்கனுன்னு ஆசை இருக்காதா..?”


“சார்...அதுக்கு நீங்க அந்த வேலையை விட்டுட்டு இந்தியாவுக்கே வந்திருக்கனும்...கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசைன்னா எப்படி சார்? பொருளாதாரத்தை உயர்த்திக்கறதுக்காக வெளிநாட்டுல வேலை செய்யறது தப்பில்ல....ஆனா ஒரு அளவுக்கு உயர்ந்ததுக்கப்புறமும்...தொடர்ந்து அங்கேயே இருந்து எதுக்கு சார் வாழ்க்கையைத் தொலைக்கனும்?”


“நீங்க ஈஸியா சொல்லிட்டீங்க...நான் ஆரம்பத்துல எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பேன், எவ்ளோ அவமானங்கள சந்திச்சிருப்பேன்னு உங்களுக்குத் தெரியுமா...இன்னைக்கு அத்தனைபேரும் என்னை மதிக்கிறானுங்கன்னா அதுக்குக் காரணம் இந்தப் பணமும், வசதியும்தான...இத்தனை வருஷம் வெளிநாட்டுல இருந்ததாலத்தான இதை அடைய முடிஞ்சுது?”


“ஒத்துக்கறேன் சார். ஆனா இப்ப நீங்க செய்யப்போற காரியத்தோட பின் விளைவுகளை யோசிச்சீங்களா...உங்களப் பொறுத்தவரைக்கும் நீங்க உங்க சொந்த விருப்பு வெறுப்புன்னு ரொம்ப சுயநலமா யோசிக்கிறீங்க. குடும்ப வாழ்க்கைங்கறது ஒரு கமிட்மெண்ட் சார். டக்குன்னு உதறித் தள்ளிட்டுப் போயிட முடியாது. புத்தரா மாறின சித்தார்த்தன் செஞ்சதும் தப்புதான். அவரோட மனைவி என்ன பாவம் பண்ணாங்க? அப்பா இருந்தும் இல்லாதவங்களா உங்க பிள்ளைங்களும், புருஷன் இருந்தும் இல்லாத விதவையா உங்க மனைவியும் வாழனுமா சார்? அடிபட்டவன் சொல்றேன் சார். சின்ன வயசுல எங்களை விட்டுட்டு எங்கப்பா ஓடிட்டாரு...அதுக்கப்புறம் என்னையும், என் தம்பி தங்கைகளையும் வளர்த்து ஆளாக்க எங்கம்மா எவ்ளோ கஷ்டப்பட்டாங்க தெரியுமா சார்..?”


“அந்த மாதிரி என் குடும்பம் கஷ்டப்பட தேவையில்ல....அதான் எல்லா வசதியும் இருக்கே....ஆசையே அழிவுக்குக் காரணம்ன்னு புத்தர் சொன்னாரு...ஆனா அத்தனைக்கும் ஆசைப்படுன்னு இன்னொருத்தர் சொல்றாரு..ஆசையே அழிவுக்குக் காரணம்ன்னு சொன்ன புத்தரை வணங்குற பக்கத்து நாட்டுக்காரங்க அழிக்கறதையே ஆசையா வெச்சுருக்காங்க...ஸோ...அவங்கவங்களுக்கு அவங்கவங்க நியாயங்கள். மன்னிச்சுடுங்க புகழேந்தி...இது எல்லாத்தையும் விட்டு விடுதலையாகி...சந்தோஷமான வாழ்க்கையை வாழறதுன்னு நான் தீர்மானிச்சுட்டேன்...இனி யாராலயும் அதை மாத்த முடியாது...குட்நைட்...”


பட்டென்று சொல்லிவிட்டு போர்வையை முழுக்க தலையோடுப் போர்த்திக்கொண்டு விட்டார்.


யாராலையும் மாத்தமுடியாதுன்னு ஈஸியா சொல்லிட்டாரு....ஆனா காலம் எல்லாத்தையும் மாத்தும்ன்னு அவருக்குப் புரியும்...என நினைத்துக்கொண்டே...நிகழ்ந்த உரையாடல்களின் தாக்கத்தில் தூக்கம் பிடிக்காமல் விழித்துக்கொண்டிருந்தான் புகழேந்தி.


புகழேந்தி நினைத்ததைப்போலவே காலம் அவரது முடிவை மாற்றித்தான் விட்டது. சியோலில் இருந்தபோது குடி அளவுக்கு மீறியதால் அவரது சிறுநீரகம் செயலிழந்ததும், அவரது நிறுவனத்தாரால் அவர் சொந்த நாட்டுக்குத் திரும்ப அனுப்பப்பட்டதும், கையில் காசு இல்லாமல் அனைத்தையும் காண்ட்ராக்ட் பெண்ணிடம் இழந்து, அவர் தன் சொந்த வீட்டுக்கு வந்ததும், மனைவியின் சிறுநீரக தானத்தால்..மிச்சமிருக்கிற வாழ்க்கையை வாழ்ந்து வருவதும்...இதையெல்லாவற்றையும்விட...அவரது இந்த இமாலயத் தவறைப் பற்றித் தப்பித்தவறிக்கூட குறிப்பிட்டுவிடாமல் அவரது மனைவி அவருக்கு ஆதரவாய் இருந்ததைப் பார்த்து...அந்த பிலிப்பினோ எவ்வளவு பாவம் செய்தவன்...தான் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவன் என்பதை பாஸ்கரன் உணர்ந்துகொண்டதையும் என்றாவது ஒருநாள் நிகழப்போகும் எதேச்சையான சந்திப்பில் புகழேந்தியும் தெரிந்துகொள்வான்.

அமரன்
08-05-2012, 09:15 PM
உணரலும், உணர்த்தப்படுதலும் உலர்ந்துவிடும் போது ஈரம் நிறைந்த கண்களுடன் வாழ்க்கையைக் கழிக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாவோர் பலருண்டு.ஒரு வர்க்கத்தின் ஒரு பக்கப் பதிவு கதை நெடுக உரை யாடல் வடிவில் விரவி இருந்தாலும், மறுபக்கத்தின் முடிவு சுருக்கென உணர்வுகளை ஊசியேற்றுகிறது. குடும்பப் பெண்ணின் நிலைப்பாட்டில், தன்னலத்தைக் காட்டிலும், கணவன், பிள்ளைகள், குடும்ப நலம் முக்கிய பங்காற்றுகி்றது என்பதைப் பல கணவர்கள் உணர மறுத்து விடுகின்றனர். மனைவியர் சிலரும் கணவனின் அபிலாசைகளை ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறார்கள், நியாயங்களைத் தமக்கே தாம் கற்பித்தபடி..

கதையில் நாயகியின் குண இயல்புகளை கணவன் உணரத் தலைப்படாமல் போனது, குறித்த வயதின் பின் பெண்கள் வேறு வாழ்க்கைக்குள் நுழைந்து விட்டோம் என்று எண்ணுவதும் என வாழ்க்கை நிதர்சனங்களை தொலைக்காட்சியாகக் காட்டியுள்ளீர்கள்.

பழைய சிவாவை காணும் காலம் கனிகிறது என்கிறது மனசு.

அன்புரசிகன்
09-05-2012, 01:19 AM
சாதாரண திரைப்படங்களில் நடந்ததையும் அதன் விளைவால் துடித்தெழும் கதாநாயகனை தான் காட்டுவார்கள்.

நீங்கள் அதையும் மீறி எதிர்காலத்தையும் எதிர்வுகூறியது அழகு. முன்பு எங்கோ சுஜாதாவின் கதையில் படித்தது. (கதை பெயர் ஞாபகம் இல்லை) ஒருவன் பண்ணாத அயோக்கியத்தனம் இல்லை. இறுதியில் ஒரு வரி. அவன் வீட்டுவாசலில் கதவை திறக்கையில் வௌவால் ஒன்று அவனது கையில் சிராய்த்தபடி பறந்தது. என்று முடித்திருந்தார். அவனுக்கு வரப்போகும் அழிவை மிக நாசூக்காக சொல்வது போல் குடிப்பழக்கத்தை மேலேயே அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள்.

சாதாரண மனிதனின் மனப்புழுங்கல்களையும் அதற்கான யதார்த்தத்தை எடுத்துரைப்பதையும் அழகாக யார்த்திருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள் அண்ணா.
----
(மனதில் தோன்றியது. இறுதி பந்தியை இன்னமும் சுருக்கியிருக்கலாம். விவரணம் கூடிவிட்டதாய் ஒரு உணர்வு. பாதகம் இல்லை)

செல்வா
09-05-2012, 02:51 AM
ஒரு நெடிய நாவலுக்கான கரு.
திரைகடலோடி திரவியம் தேடும் பலரின் வாழ்க்கைப் பதிவுகள் இன்னும் சரியாகச் சொல்லப்படாமலேயே இருக்கிறது தமிழில்.
அதிலும் குறிப்பாக அவர்களின் மனநிலைகளை, மனதளவில் கொள்ளும் பாதிப்புகளை சரியாகப் பதிவு செய்தவை மிக அரிதே.
இந்தக்கதை மிக மிக தாமதமாக வந்ததாகவே நான் சொல்வேன்.

ஆசரியரின் அனுபவங்கள் கதைக்கு உயிரோட்டம் அளித்துள்ளது.

இந்தக் கதையை Rss Feedல் பார்த்துவிட்டு உடனடியாகப் பின்னூட்டமிட வேண்டும் என்றே பல அலுவல்களிடையேயும் உடனடியாக மன்றிற்கு வந்தேன்.

அமரன் கூறியபடி மீண்டும் பழைய சிவா அண்ணாவைப் பார்க்கிறேன் இந்தக் கதையில்.

இந்தக் கருவை அப்படியே விட்டு விடாமல் ஒரு நெடுங்கதையாக எழுதவேண்டும் என்று என் கோரிக்கையை சிவா அண்ணாவிடம் வைக்கிறேன்.

பல தேசங்களுக்கும் சுற்றி பல தரப்பட்ட மக்களையும் சந்தித்து, வாழ்ந்து நீங்கள் சேமித்து வைத்திருக்கும் அனுபவங்களின் தொகுப்பு
அதோடு மனதின் எண்ணங்களையும் கண்முன் ஓடவிடும் உங்கள் எழுத்தாற்றல் 'புயலிலே ஒரு தோணியை' விடவும் மேலான ஒரு நாவலைக் கொடுக்கும் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை.

கண்டிப்பாக உங்களிடமிருந்து இந்தப் பின்னணியைக் கொண்ட ஒரு நெடுங்கதையை எதிர்பார்க்கிறேன் அண்ணா.

வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் அண்ணா!

jayanth
09-05-2012, 03:42 AM
நாடு விட்டு நாடு சென்று, வாழும் வாழ்க்கையை இழந்து சம்பாதிப்பது வெகு சுலபம் என்று எண்ணுபவர்களுக்கு ஒரு சவுக்கடி...

பாராட்டுக்கள் சிவா...

கீதம்
09-05-2012, 03:53 AM
வெளிநாடுகளில்தான் பணி என்னும் நிரந்தர வாழ்க்கை வாழும் பெரும்பாலான ஆண்களின் மனநிலையை அழகாகப் பிரதிபலிக்கிறது கதை.

அவர்களைப் பொறுத்தவரை தாயக வாழ்க்கை குறுகிய காலமே தரப்பட்ட வரப்பிரசாதம் என்பதால் அக்குறுகிய காலத்தில் நிறைய நிறைவைக் காண முற்படுகிறார்கள்.

ஒரு அவசர வாழ்க்கையின் நிர்ப்பந்தம் அது. அதைத் தவறென்று சொல்ல இயலாது. அதுதான் இயல்பு. ஆனால் அவர்களின் மனைவியருக்கு கணவனின் மனநிலை புரிந்தாலும் அதற்கு உடன்படும் மனநிலையோ சூழலோ வாய்ப்பதில்லை.

குடும்பப் பொறுப்புகளைச் சுமந்துகொண்டு பதின்ம வயதுப் பிள்ளைகளையும் வளர்த்துக்கொண்டு ஒரு கயிற்றின்மேல் நடப்பது போல் மிகவும் நிதானத்துடனும் பொறுமையுடனும் கடமைகளை ஆற்றிக்கொண்டிருப்பவள்.

கணவன் மட்டுமல்லாது, குழந்தைகள், பெற்றோர், மாமனார், மாமியார் என்று எல்லாவித உறவுகளுடனும் ஒரு பிடிப்பைத் தக்கவைத்துக்கொண்டிருப்பவள்.

கணவன் உடனிருக்கும் வீடுகளில் கூட பல இடங்களில் தகப்பனுக்கும் பிள்ளைகளுக்கும் பாலமாய் நின்று வார்த்தைப் பரிமாற்றம் நிகழ்த்திக்கொண்டிருப்பவள்.

மகன் குடிப்பது தாய்க்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் நேரிடையாய்க் கேட்பதன் மூலம் பயம் விட்டுப்போய் நாளை நடுவீட்டில் அந்தப் பழக்கம் குடியேறிவிடவேண்டாமென்னும் எண்ணமாகவும் இருக்கலாம். கணவனைக் கண்டிப்பதன் மூலம் மகனுக்கு ஒரு தவறான உதாரணம் உருவாவதைத் தடுக்கிறாள்.

அத்தகைய மனைவி அமைந்திருப்பது ஒரு வரம். அதைச் சாபமென நினைத்து பாதை மாற்றத்துணிந்தது பாஸ்கரனின் அவசர புத்தி.

தான் எடுத்த முடிவில் உடன்படா மனத்தின் தவிப்பையும் குற்ற உணர்வையும் மறைக்க மதுவின் தேவை மிக அதிகமாகத் தேவைப்படுகிறது அவருக்கு. அந்த ஜோதிகாத்தனமும் அதனால்தான். (ஜோதிகாத்தனம் என்னும் வார்த்தைப் பயன்பாட்டை மிகவும் ரசித்தேன்.)

மிகவும் நல்லதொரு கருவைக் கதையாக்கியமைக்கு மனமார்ந்த பாராட்டுகள் சிவாஜி அண்ணா.

aren
09-05-2012, 10:52 AM
சிவா அருமையாக கதையை நகர்த்தியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

ஆனால் ஒன்று மட்டும் உண்மை. நம் வீட்டீலேயே நமக்கு துணிகளை வைக்க இடமில்லாமல் கொண்டு சென்ற பெட்டியிலேயே வைத்து இருக்கும் அவலும் எங்கள் வீட்டிலும் உண்டு.

நம்முடைய பணம் மட்டும் அவர்களுக்கு தேவைப்படுகிறது என்பது பல இடங்களில் நான் பார்த்திருக்கிறேன். ஆகையால் பாஸ்கரனின் வார்தைகளையும் நான் மதிக்கிறேன்.

உண்மைதான், நம் மக்கள் நம் மக்கள்தான். ஆனால் அவர்களும் சில சமயங்களில் நாம் சொல்வதை சரியாக புரிந்து கொள்வதில்லை. நாமும் வாழ்க்கையைத் துறந்து வெளி நாட்டில் கஷ்டப்படுகிறோம் என்று நினைப்பதில்லை.

இன்னும் நிறைய எழுதுங்கள் சிவாஜி. அடுத்த கதையைப் படிக்க ஆவலுடன் இருக்கிறேன்.

ravikrishnan
09-05-2012, 11:43 AM
பொதுவாகவே பெண்கள் குழந்தை பிறக்கும் முன் கணவனிடம் அதிகம் அன்புகாட்டுவார்கள்,குழந்தை பிறந்தபின் அதில்சிறிது தொய்வு ஏற்படுகிறது. காரணம் குழந்தைகளின் கவணிப்பு மற்றும் வீட்டின் பராமறிப்பு போன்றவற்றால்.
இந்த சம்பவத்தை பொறுத்தமட்டில் மனைவி கணவனிடம் அன்பு செலுதாத்தே காரணம்,மனைவி அன்பு காட்டாதபோது அது வெறு இடத்தில் கிடைக்கும்போது வாழ்வில் மாற்றம் எற்படுகிறது.
எனவே வாழ்கையின் ஆணிவேர் அன்பு, அரவணிப்பு விட்டுகொடுத்தல்.கதையை படிக்கும் போது மனதுக்குள் ஏதோ ஒரு இருக்கம் எற்படுகிறது.
வாழ்க! சிவா அவர்களே!! இது போன்று இன்னும் பல பதிவுகளை ஏதிர் பார்க்கிறோம், நன்றி!!.

redblack
09-05-2012, 12:00 PM
இது ஒரு படமாக மட்டும் அல்ல பாடமாக தெரிவித்த ஆசிரியருக்கு பாராட்டுக்கள்

கலையரசி
09-05-2012, 12:32 PM
“சார்...அதுக்கு நீங்க அந்த வேலையை விட்டுட்டு இந்தியாவுக்கே வந்திருக்கனும்...கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசைன்னா எப்படி சார்? பொருளாதாரத்தை உயர்த்திக்கறதுக்காக வெளிநாட்டுல வேலை செய்யறது தப்பில்ல....ஆனா ஒரு அளவுக்கு உயர்ந்ததுக்கப்புறமும்...தொடர்ந்து அங்கேயே இருந்து எதுக்கு சார் வாழ்க்கையைத் தொலைக்கனும்?”

பணம் மட்டுமே வாழ்க்கையில்லை என்பதை மனதில் படும்படி சொல்லியிருக்கிறீர்கள். போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்ற பொன்மொழிக்கேற்ப, ஓரளவு சம்பாதித்துப் பொருளாதார நிலையை உயர்த்திய பிறகு தொடர்ந்து வெளிநாட்டிலேயே இருந்து வாழ்க்கையைத் தொலைத்து விட்டு அதற்கு மனைவியைக் குற்றஞ்சாட்டுவதைக் கேள்விக்குள்ளாக்குகிறது கதை.

மனைவியின் இழப்புக்கள் பற்றிப் புகழேந்தி சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. அவள் குடும்ப நிர்வாகம், பிள்ளைகளின் கல்வி, வளர்ப்பு, பெரியோரைப் பேணுதல் முதலான அத்தனை பொறுப்புக்களையும் தலை மேல் சுமந்து கொண்டு தனிப்பட்ட தன் ஆசைகளை மனதிற்குள் போட்டுப் புதைத்து விட்டு யாரிடமும் புலம்பக்கூட வழியின்றி வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு செல்கிறாள். காண்டிராக்ட் மனைவியின் பரிவும் பாசமும் பணம் தீரும் வரை மட்டுமே. இறுதியில் எல்லாவற்றையும் தொலைத்து விட்டு வரும் கணவனுக்குத் தன் உயிரைத் துச்சமாக மதித்து உயிர்ப்பிச்சை அளிப்பவளும் மனைவியே.

வெளிநாட்டுப் பயண அனுபவங்கள் கதைக்குப் பலம் சேர்த்திருக்கின்றன. வெளிநாட்டிலிருந்து வந்து போகின்றவரின் நிலைமை ஒரு விருந்தாளியைப் போலத்தான் என்பதும் ஒரு கப்போர்டு கூட உரிமையில்லை எனப்தும் நிதர்சனமான உண்மை.

அன்புரசிகன் சொல்லியிருப்பது போல் மீதிக்கதை முழுவதையும் இறுதியில் விரிவாகச் சொல்லியிருக்க வேண்டாமோ என எனக்கும் தோன்றியது. இப்படித்தான் நடக்கும் என்பதைச் சூசகமாகச் சொல்லி முடித்திருந்தால் இன்னும் நன்றாயிருந்துக்குமோ?

மிக நல்ல கதை. பாராட்டுக்கள் சிவாஜி சார்! தொடர்ந்து எழுதுங்கள்!

KAMAKSHE
09-05-2012, 01:31 PM
அன்புள்ள சிவா.ஜி அவர்களுக்கு

உங்கள் கதையோட்டம் இரண்டே காதாபாத்திரங்கள் தான் என்றாலும் ஒரே மூச்சில் படித்து முடிக்கும் ஆவலைத் தூண்டியது. படித்தேன் . ரசித்தேன்.

எனக்குப் பிடித்த வரிகள் :-

அந்த ஜோதிகாத்தனம் இல்லை

மூன்று பேர் அமரக்கூடிய அந்த வரிசையில் ஜன்னல் பக்கமிருந்தவர்...எத்தனைநாள் தூக்கமில்லாமல் இருந்தாரோ...வந்து அமர்ந்ததும் தூங்க ஆரம்பித்தவர்...இன்னும் தூங்கிக்கொண்டே இருந்தார்.

மனதில் தோன்றிய கேள்வி:-

பாஸ்கரன் அதிகம் குடித்தார் என்பது தவறாய் இருக்கலாம்... ஆனால் அவரின் மன உளைச்சலின் காரணங்கள் ஞாயமாகத்தானே இருந்தன? ஏற்கனவே தண்டனை அனுபவித்தவருக்கு கதை இறுதியிலும் தண்டனையா? ( மனைவி பார்த்துக் கொண்டாலும்....)

இப்படி தோன்றுவதைத் தவிர்க்க இயலவில்லை...

இராஜேஸ்வரன்
09-05-2012, 03:06 PM
விருந்தாளி வாழ்க்கை சார். எனக்குன்னு ஒரு கப்போர்ட் கூட இல்ல. நான் கொண்டுகிட்டு போற பெட்டிதான் நான் திரும்பி வர்ற வரைக்கும் எனக்கு கப்போர்ட். ரொம்பப்பேருக்கு என்னை யாருன்னே தெரியல...எதையாவது மனசு விட்டுப் பேசக்கூட ஃபிரண்டுங்க இல்ல. வைஃப்கிட்ட பேசலான்னா...பசங்களோட எதிர்காலம், வாங்கிப்போட்டிருக்கிற சொத்துங்க...அவங்க குடும்பத்துல நடக்குற விஷயங்க...அவ தங்கைக்கு பணம் வேணும்....இப்படிதான் பேசறா....கொஞ்சம் நெருக்கமா போனா....எனக்கு இண்ட்ரஸ்ட் இல்லீங்க...பசங்க பெரியவங்களாயிட்டாங்க...ஒரு வயசுக்கு மேல இதையெல்லாம் நிறுத்திடனும்...இது இருந்தாத்தான் நமக்குள்ள அந்நியோன்யம் இருக்குமா...இல்லாமலேயே சும்மா பேசிக்கிட்டிருந்தாலே போதுன்னு லெக்சர் அடிக்கிறா...

வெளிநாடுகளில் வேலை செய்து குடும்பத்தை சிறந்த நிலைக்கு கொண்டு வரும் பலரின் வாழ்க்கை இப்படித்தான். மிகவும் அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.


மனைவியின் சிறுநீரக தானத்தால்..மிச்சமிருக்கிற வாழ்க்கையை வாழ்ந்து வருவதும்...இதையெல்லாவற்றையும்விட...அவரது இந்த இமாலயத் தவறைப் பற்றித் தப்பித்தவறிக்கூட குறிப்பிட்டுவிடாமல் அவரது மனைவி அவருக்கு ஆதரவாய் இருந்ததைப் பார்த்து...அந்த பிலிப்பினோ எவ்வளவு பாவம் செய்தவன்...தான் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவன் என்பதை பாஸ்கரன் உணர்ந்துகொண்டதையும்

உண்மையிலேயே இப்படிப்பட்ட மனைவி அமைய பாஸ்கரன் இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்டவர் என்பதுதான் நிஜம்.

அருமையான கதையை எங்களுக்கு கொடுத்த நண்பருக்கு நன்றி. பாராட்டுக்கள்.

சிவா.ஜி
09-05-2012, 07:44 PM
ரொம்ப நன்றி பாஸ். உங்க முதல் வாக்கியம் நிறைய விஷயங்களை சொல்லுது. கடைசி வாக்கியம்...என்னை மீண்டும் நானாகாச் சொல்லுது. நன்றி பாஸ்.

சிவா.ஜி
09-05-2012, 07:49 PM
ரொம்ப நன்றி அன்பு. நானும் கடைசி பத்தியை மிகச்சுருக்கமாய்தான் எழுத நினைத்தேன்...இப்படி....
“பழுதுபட்ட சிறுநீரகம்...அவரை வீடு சேர்த்தது...மனைவியின் தியாகம் அவரை வாழவைத்தது...மட்டுமல்ல...தவறை உணர வைத்தது”

சிவா.ஜி
09-05-2012, 07:50 PM
நன்றி செல்வா. பணிப்பளுவுக்கிடையிலும் இந்தக் கதைக்கு பின்னூட்டமிட வேண்டுமெனத் தோன்றிய உங்கள் எண்ணத்துக்கு மிக்க நன்றி.

சிவா.ஜி
09-05-2012, 07:51 PM
மிக்க நன்றி ஜெயந்த்.

சிவா.ஜி
09-05-2012, 07:53 PM
கதையின் அனைத்தையும் உள்வாங்கி....அலசியிட்ட பின்னூட்டத்திற்கு மிக்க நன்றிம்மா தங்கை கீதம். உங்களைப்போன்ற சிறந்த கதாசிரியரின் பாராட்டைப் பெற்றதில் கூடுதல் மகிழ்ச்சி.

சிவா.ஜி
09-05-2012, 07:55 PM
மனம் நிறைந்த நன்றி ஆரென். சிறந்த எழுத்தாளர் நீங்கள். உங்கள் ரசிகன் நான். என் எழுத்தைப் பாராட்டிய உங்கள் பெருந்தன்மைக்கு நன்றிகள்.

சிவா.ஜி
09-05-2012, 07:58 PM
’பொதுவாகவே பெண்கள் குழந்தை பிறக்கும் முன் கணவனிடம் அதிகம் அன்புகாட்டுவார்கள்,குழந்தை பிறந்தபின் அதில்சிறிது தொய்வு ஏற்படுகிறது. காரணம் குழந்தைகளின் கவணிப்பு மற்றும் வீட்டின் பராமறிப்பு போன்றவற்றால்.
இந்த சம்பவத்தை பொறுத்தமட்டில் மனைவி கணவனிடம் அன்பு செலுதாத்தே காரணம்,மனைவி அன்பு காட்டாதபோது அது வெறு இடத்தில் கிடைக்கும்போது வாழ்வில் மாற்றம் எற்படுகிறது.
எனவே வாழ்கையின் ஆணிவேர் அன்பு, அரவணிப்பு விட்டுகொடுத்தல்.’

மிக மிக உண்மை ரவிகிருஷ்ணன். உணர்ந்து இட்ட பின்னூட்டக் கருத்துக்கு மிக்க நன்றி.

சிவா.ஜி
09-05-2012, 07:59 PM
மிக்க நன்றி கலையரசி மேடம். நீங்கள் சொன்ன அந்தக் கடைசி பத்தியைப் பற்றி அன்புக்கு சொன்னதையே உங்களுக்கும் வழிமொழிகிறேன்.

சிவா.ஜி
09-05-2012, 07:59 PM
மிக்க நன்றி ரெட்ப்ளாக் நண்பரே.

சிவா.ஜி
09-05-2012, 08:02 PM
காமாக்*ஷி மேடம்....பாஸ்கரன் கடைசி நாட்களில் தண்டனை அடையவில்லை.......ஆசீர்வதிக்கப்பட்டார். உங்கள் மேலான பின்னூட்டக் கருத்துக்களுக்கு என் பனிவான நன்றிகள்.

சிவா.ஜி
09-05-2012, 08:03 PM
உண்மைதான் ராஜேஷ்வரன். ஆசீர்வதிக்கப்பட்டவர்தான் அந்த பாஸ்கரன். ஆசீர்வதித்தவர் அவரின் மனைவி. மனமார்ந்த நன்றிகள்.

KAMAKSHE
10-05-2012, 04:56 AM
காமாக்*ஷி மேடம்....பாஸ்கரன் கடைசி நாட்களில் தண்டனை அடையவில்லை.......ஆசீர்வதிக்கப்பட்டார். உங்கள் மேலான பின்னூட்டக் கருத்துக்களுக்கு என் பனிவான நன்றிகள்.


சிவாஜி அவ்ர்களே

கதையின் இந்தப் பகுதியில் அவரின் தப்புக்கான தண்டனை என்பது போல தோன்றியது எனக்கு....அதான் ....

புகழேந்தி நினைத்ததைப்போலவே காலம் அவரது முடிவை மாற்றித்தான் விட்டது. சியோலில் இருந்தபோது குடி அளவுக்கு மீறியதால் அவரது சிறுநீரகம் செயலிழந்ததும், அவரது நிறுவனத்தாரால் அவர் சொந்த நாட்டுக்குத் திரும்ப அனுப்பப்பட்டதும், கையில் காசு இல்லாமல் அனைத்தையும் காண்ட்ராக்ட் பெண்ணிடம் இழந்து, அவர் தன் சொந்த வீட்டுக்கு வந்ததும், மனைவியின் சிறுநீரக தானத்தால்..மிச்சமிருக்கிற வாழ்க்கையை வாழ்ந்து வருவதும்...இதையெல்லாவற்றையும்விட...அவரது இந்த இமாலயத் தவறைப் பற்றித்

ஜானகி
10-05-2012, 08:35 AM
அப்பப்பா.... ஒரு விமானப் பயணத்திற்குள் இப்படி ஒருபோராட்டமான வாழ்க்கைப் படமா...[ பாடமா ] ?

முன்பின் தெரியாத ஒரு சகபயணியிடம் திறந்துகாட்டிய மனதை, உரிமையுள்ள மனைவியுடன் பகிர்ந்திருந்தால்..பிரச்சனை பிறந்தேயிருக்காதோ ?

கதை அருமை... ஆனால் நிஜமாகவேண்டாம்...

Hega
10-05-2012, 08:37 AM
பணம் தேடி குடும்பத்தினை விட்டு கடல்கடந்து சென்றவர்கள் இதோ , அதோ என தம் தாய் நாட்டுக்கு திரும்புவதை தள்ளிபோடுவதனால் அவர்கள் தம்மையே பணத்தில் தொலைத்தவர்களாய் வாழ்வதை இன்றுபலர் வாழ்வில் காண முடிகிறது.

எல்லோருக்கும் பணம் வேண்டும், ஆனால் பணம் மட்டுமே வாழ்க்கையல்ல என்பதை மிக அழகாக சொல்லி இருக்கின்றீர்கள்.

இங்கும் அரபி நாடுகளுக்கு தொழில்தேடி செல்வோர் நிலையாவது ஓரிருவருடங்களுக்கொருமுறை தம் குடும்பத்தினை கண்டு மகிழ வாய்ப்பு கி்டைக்கும்..ஐரோப்ப நாடுகளுக்கு புலம்பெயர்ந்த பல குடும்பதலைவர்கள் நிலை இன்னும் மோசம்.

நாங்கள் எங்கள் அப்பாவை எனது கடைசிதங்கைக்கு ஆறுமாதமிருக்கும்போது பிரிந்தோம் , மீண்டும் அவரை சந்திக்கும் போதுஅவளுக்கு வயது 16.அம்மா அங்கே தனியே, அப்பா இங்கே தனியே.. குடும்பத்தில் புரிதல் எங்கே வரும். ஒன்றாய் சேர்ந்து குடும்ப விடயங்களை மனம்விட்டு பேசி செயல்படவேண்டியகாலத்தில் பிரிந்திருக்கும் பல தம்பதிகள் வாழ்வு வயதாகியபின் சரியான் புரிதலின்மையால மேன்மேலும் பிரச்சனைகளுக்குரியதாகவே ஆகிறது.


வெளி நாடென புறப்படல் தப்பல்ல..உடலில் வலு இருக்கும் காலத்தில் ஓரிருவருடங்களுழைத்து சேமித்து அதை கொண்டு சொந்த ஊரிலேயே போதுமெனும் மனதுடன் வாழ முடிவெடுக்கும் படி பணத்தின் மீதான என் ஆசைகள் விட்டகல்வதில்லை.

இந்த்கதையின் நாயகன் வாழ்க்கையும் அப்படியே.. மனைவின் பொறுப்புக்கள், குழந்தைவளர்ப்பு, தாய் தந்தை பேணல்கள் எல்லாமே சீராக நடபெற்றதால் தான் அவரால் அவ்வளவுகாலம் வெளி நாட்டில் நிம்மதியாக வாழ முடிந்தது என்பதை அவர் புரிந்திருக்கலாம். அவரின் உள்மனதேவைகளையும் மனைவி புரிந்துகொள்ள முயற்சித்திருக்கலாம். அவரவருக்கு அவரவர் வாழ்வுபற்றிய பார்வை மட்டுமே முக்கியமாக போனது. இது கற்பனைக் கதையானாலும் இப்படியும் ஒரு கோணமுண்டு என படிப்போரை சிந்திக்க வைத்த கதைபகிர்வுக்காய் சிவா அண்ணாவுக்கு என் மன்மார்ந்த பாராட்டுகள்.


சூப்பர் அண்ணா..

சிவா.ஜி
10-05-2012, 10:59 AM
அப்பப்பா.... ஒரு விமானப் பயணத்திற்குள் இப்படி ஒருபோராட்டமான வாழ்க்கைப் படமா...[ பாடமா ] ?

முன்பின் தெரியாத ஒரு சகபயணியிடம் திறந்துகாட்டிய மனதை, உரிமையுள்ள மனைவியுடன் பகிர்ந்திருந்தால்..பிரச்சனை பிறந்தேயிருக்காதோ ?

...
ரொம்ப சரியா சொன்னீங்க. கிடைத்த விடுமுறைகளில் இணையுடனும், பிள்ளைகளுடனும் மனதுவிட்டுப் பேசி, இருக்கும் நாட்களை மகிழ்வோடு அவர்களுடன் பகிர்ந்துகொண்டால்...எத்தனை நீண்ட பிரிவும் நேசத்தையும், பாசத்தையும் குறைக்காது.

மிக்க நன்றிங்க ஜானகி அவர்களே.

சிவா.ஜி
10-05-2012, 11:03 AM
மிகவும் அருமையானக் கருத்துக்கள்ம்மா ஹேகா. பணம் நமக்கு முதலாளி ஆகிவிட்டால்...நிம்மதி போய்விடும். நிறைய பேருக்கு இது தெரிந்தே இருந்தாலும்...தொடர்ந்து பணம் தேடுகிறார்கள். ஆனாலும் அவரவருக்கான ஆயிரம் காரணங்கள். எனவே குறை சொல்ல முடியாது...குற்றம் காண முடியாது.

எனக்குத் தெரிந்த ஒரு கேரள நண்பர் 65 வயதில் மீண்டும் வளைகுடா வந்து கஷ்டப்பட்டார். கேட்டால்...பெண்ணுக்கு தரவேண்டிய வரதட்சணை குறைந்துவிட்டதால்...இன்னும் பணம் தேவைப்படுகிறது என்றார். இன்னும் கொடுமை என்னவென்றால்...இவரது அத்தனை சம்பளமும் மாசாமாசம் மருமகனுக்கு அனுப்பப்பட வேண்டுமாம்...!!

ரொம்ப நன்றி தங்கையே.

ஆதி
10-05-2012, 08:00 PM
பிரச்சனை இரண்டு பக்கமும் இருக்கு

இரண்டு பக்கமும் மன அழுத்தங்கள், மனைவிக்கு தன் ஆசையை அடக்கி அடக்கி சாமியாரகிவிட்ட நிலை

கணவனுக்கு ஆசையை பெருக்கி பெருக்கி அதனை சாந்தி கொள்ள வைக்க இயலாத நிலை

இந்த மன அழுத்தம் அவரை எல்லா விடயத்திலும் குற்றப்பார்வை பார்க்க வைக்குது

ஓரளவுக்கு எல்லா விடயங்கள் சரியாக இருக்கும் இல்லறத்தில், தாம்பத்தியம் சரியாக இருந்துவிட்டால், பிரச்சனையே இல்லை, இல்லாவிட்டால் எல்லா பிரச்சனையும் இங்கிருந்துதான் ஆர்ம்பிக்கும்

இவரின் பிரச்சனையும் அப்படித்தான், அதனால்தான் தன் துணியை வைக்க ஒரு அறை கூட இல்லை, தன் பெட்டியிலையே வைக்க வேண்டிய சூழல் என்று பெரிதாக பேசுகிறார்

அந்த அளவு தன் மனைவி தன்னை ஒதுக்குவதாக எண்ணம் அவருக்கு

மனைவியின் மனநிலையையும் அவரு புரிஞ்சுக்கிட்டிருந்திருந்தா அவரால் பேசி எல்லாவற்றையும் சரி செய்திருக்க முடியும், அவர் பேசுவதை காட்டிலும் குறைகாணுவதில் அதிக கவனம் செலுத்திவிட்டார்

மிக கனமான கதை அண்ணா, பாராட்டுக்கள்

சிவா.ஜி
11-05-2012, 06:49 AM
சரியாச் சொன்னீங்க ஆதன். பிரச்சனை இரண்டு பக்கமும்தான். சற்றுநேர மனம்விட்டு பேசுதலே பல பிரச்சனைகளைத் தீர்க்கும். ஆனால் பேசத்தான் மறுக்கிறார்கள்....இந்த பிரச்சனையை சுமக்கிறவர்கள். நன்றி ஆதன்.

மஞ்சுபாஷிணி
12-05-2012, 04:51 PM
கதையை ஆழ்ந்து படித்துவிட்டு என் கருத்தை இடுகிறேன்பா....

Dr.சுந்தரராஜ் தயாளன்
12-05-2012, 05:24 PM
மிகவும் அருமையான கதை....வெளிநாடுகளில் வேலைக்குப்போகும் நம்மவர்களின் மனநிலையை /செயல்களை நன்றாக வெளிக்கொணர்ந்துள்ளீர்கள். நன்றி சிவா.ஜி அவர்களே.:)

மஞ்சுபாஷிணி
13-05-2012, 08:57 AM
கதையை படித்தேன் சிவா...

கருத்துகள் உள்பொதிந்திருக்கும் எப்பவுமே உங்கள் கதையில்...

கண்டிப்பா எல்லாருக்கும் ஒரு மெசெஜ் இருக்கும் அதில்....

இதை செய்யாதே... இப்படி செய்தால் இப்படி ஆகிவிடும் என்ற சிறு கண்டிப்பும்.... இப்படி இருந்தால் நலமுடன் இப்படி வாழலாம் என்ற ஜாக்பாட்டும் இருக்கும்....

அந்த எல்லாமே இந்த கதையிலும் இருப்பது ப்ளஸ் பாயிண்ட்ஸ் சிவா....

திரை கடல் ஓடி திரவியம் தேடப்போகும் பாஸ்கரனைப்போல் நிறையப்பேர் இந்த அனுபவங்களை பெற்றிருப்பார்கள் கண்டிப்பாக....

குடும்பத்தின் மேல் பற்றுள்ளவர்கள் செய்யும் தியாகம் தான் தன் வயது, தன் இளமை, தன் சந்தோஷம் எல்லாமே சொந்த ஊரில் குடும்பத்தை விட்டு இத்தனை தூரம் பயணித்து அங்கே இயந்திரமாக வேலை செய்து இரண்டு வருடங்களுக்கொருமுறை சொந்த ஊருக்கு போகும்போது அவர்கள் முகத்தில் இருக்கும் பிரகாசத்தை கண்டால் தெரியும் ஏர்ப்போர்ட்டில்.... சின்னவயது சம்பளக்காரர்களில் தொடங்கி பிசினஸ்மேன்கள் வரை... எத்தனை சந்தோஷங்கள் டெம்பரரியாக கிடைத்தாலும் குடி, சிகரெட், கெட்ட பழக்கங்கள் என்று..... மனைவி, பிள்ளைகள், தாய் தந்தை, சகோதரர் சகோதரியர் நண்பர்கள் இவர்களை கண்டு இவர்களுடன் அளவளாவும்போது இருக்கும் சந்தோஷம் தான் உண்மையான நிலைத்திருக்கும் நீடித்திருக்கும் சந்தோஷங்கள்....

ஆதி சொன்னது போல.....

கணவன் அங்கே ஒற்றை மரமாய் உழைத்து ஒவ்வொரு நொடியும் காத்திருந்து ஊருக்கு ஓடி வரும்போது மனைவி அந்த கணவனை ஒரு குழந்தைக்கு தாயாகவும் எல்லா விவரங்களை பகிர்ந்துக்கொள்ள ஒரு தோழியாகவும் தோளில் சாய்த்துக்கொண்டு ஆறுதல் சொல்லும் மனைவியாகவும் சந்தோஷங்களை பகிரும் காதலியாகவும் சமயத்தில் கணவனுக்கே குழந்தையாகவும் இருந்து இத்தனை மாதங்கள் பிரிவினை இரண்டே மாதத்தில் கொட்டி தீர்க்கமுடியாது அன்பினை.. ஆனால் முடிந்த அளவு கணவன் மனம் கோணாதவாறு நடந்துக்கொண்டு குடும்பத்திலும் சந்தோஷம் குறையாமல் பார்த்துக்கொண்டிருந்தால் பாஸ்கரனின் மனம் வேறு இடத்தினை நாடிச்சென்றிருக்காது கண்டிப்பாக....

அதே போல் மனைவிக்கு எத்தனை பொறுப்புகள் இருக்கோ குடும்பத்தில் அத்தனை பொறுப்பும் கணவன் பிரிந்து பணம் சம்பாதிக்க போனாலும் கணவனுக்கும் இருக்கவேண்டும்... தன் மனைவி, தன் பெற்றோர், தன் பிள்ளைகள் இந்த அன்பில் துளி கூட குறையாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்... பிள்ளைகளுக்கு பெற்றோர் தான் ரோல் மாடல்... பிள்ளைகள் வளர்ந்துவிட்டதால் நம்மையே கேள்விகள் கேட்க நாம் வாய்ப்புகள் தராம பார்த்துக்கணும்.. வீக் எண்ட்ல குடிப்பது பிள்ளையும் இப்படி தவறு செய்வது தெரிந்து கேட்கமுடியவில்லை அல்லவா?

கதையின் போக்கு மிக மிக அருமை சிவா...

சம்பாதிக்க வெளிநாடு செல்லும் ஒவ்வொரு ஆணும் எந்த நிலையில் எப்படிப்பட்ட மன இறுக்கத்தில் இப்படி எல்லாம் நடக்க சாத்தியமாகிறது என்பதை மிக நுணுக்கமாக கதையில் பதித்திருக்கும் விதம் சுப்பர்ப் பா....

மனைவியின் கடமை எப்படி குடும்பத்தை காப்பதோ அதே போல் கணவனை காப்பதும் தான் என்பதையும் அழுத்தமாக சொல்லி இருப்பது சிறப்பு....

எங்கோ நடக்கும் ஒரு சில நிகழ்வுகள் பார்ப்பவர் செவி வழி கேட்பவர் சந்திப்பவர் உங்களைப்போன்ற அற்புதமான எழுத்தாளர்கள் கண்ணில் பட்டுவிட்டால் போதும் அந்த நிகழ்வு ஒரு அழகிய கதையாக எல்லோருக்கும் படிப்பினை தரும் ஒரு பாடமாக அமைத்துவிடுவீர்கள்....

உவமை சொல்வதில் உங்களை அடிச்சுக்கவே முடியாது போங்க... ஜோதிகா எக்ஸ்பரெஷன் ரஜினி கேட்டதுமே எப்படின்னு நீங்க போட்டதை ரசித்தேன்... உடனே நினைத்தும் பார்த்தேன்.. எங்கிருந்து உவமை எப்படி தான் கோர்க்க முடிகிறதோ இத்தனை அழகாக.....

கதையின் உயிரோட்டமே பாஸ்கரனின் வழிதவறி போனாலும் திருந்த ஒரு வாய்ப்பாக இறைவன் அவருக்கு தந்தது.... மனைவி என்பவள் வெறும் ஒரு ஜடமாக மட்டுமல்லாது கணவனுக்கு சிறுநீரக பாதிப்புன்னு சொன்னதுமே தன்னுடையது கணவனின் உடலில் பொருந்தும் அளவுக்கு மனைவியின் பாத்தியதை இருக்கிறது என்பதை மிக அழகாக உணர்த்தி இருக்கீங்க...

சம்சாரம் என்பது வீணை
சந்தோஷம் என்பது ராகம்
சலனங்கள் அதில் இல்லை
மணம் குணம் ஒன்றான முல்லை

ஆண் என்றாலும் பெண் என்றாலும் பிரிவினில் இல்லை வாழ்வு, புரிதலின்மையில் இல்லை சந்தோஷம் எத்தனை தொலைவு பிரிந்திருந்தாலும் பிரிவு வெறும் உடலுக்கு மட்டுமே என்பதை அழுத்தமாக சொன்ன அருமையான கதை பகிர்வு சிவா...

அன்பு வாழ்த்துகள் சிவா.....:icon_good:

சிவா.ஜி
13-05-2012, 10:55 AM
தங்கள் ஊக்கம் தரும் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி சுந்தர்ராஜ் அவர்களே.

சிவா.ஜி
13-05-2012, 11:02 AM
எப்பவுமே நான் ஆச்சர்யப்படும் பின்னூட்ட வித்தகி நீங்கள் மஞ்சு.எழுத்தை வாசித்து, உள்வாங்கி, தர்க்கித்து நல்லதையும் கெட்டதையும் உண்மையாக சொல்லும் உங்கள் பின்னூட்டம் என் கதைக்குக் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. பல இடங்களில் சந்தித்த மனிதர்களும், அவர்களுடைய பொருந்தாத வாதமும்தான் என்னை இந்தக் கதையை எழுத வைத்தது. கதையில் குறிப்பிட்ட பிலிப்பினோவைப் போல பலரை நான் சந்தித்திருக்கிறேன். அவர்களது கலாச்சாரத்துக்கு அது பொருந்தும்...ஆனால் அன்பால் கட்டப்பட்ட நமது கலாச்சாரத்துக்கு இந்த சிந்தனைப் பொருந்தாது என்பதை உணர மறந்துவிட்டார் பாஸ்கரன்.

ஐந்து வருடங்களாக விடுமுறைக்குப் போகாமல் உழைப்பவர்களையும் நான் சவுதியில் பார்த்திருகிறேன். ஆனால்...அவர்கள் விடுமுறைக்குச் சென்று திரும்ப வரும்போது அவ்வளவு உற்சாகமாய் இருப்பார்கள் அந்தக் குடும்பமும், அவர்களின் மனைவியும் காட்டிய அக்கறையும், அன்பும் அந்த உற்சாகத்தில் நிறைந்திருக்கும். இதுதான் நம் குடும்பம். நீங்கள் சொன்னதைப்போல பிரிவு மேலும் நெருக்கத்தைதான் உருவாக்கும்...நேரான சிந்தனையிருந்தால்.

உங்கள் மேலான, உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கு அன்பான நன்றிகள் மஞ்சு’க்கா’

மஞ்சுபாஷிணி
13-05-2012, 11:50 AM
கரெக்டா சொன்னீங்க சிவா....

பிலிப்பினோவை பார்த்து நம்ம பாஸ்கர் இப்படியும் வாழலாம்னு நினைத்ததே தப்பு.... ஒற்றுமைக்கும் அன்புக்கும் விருந்தோம்பலுக்கும் ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாடும் நம்ம இந்தியாவை தான் உதாரணமாக சொல்வாங்க.

இன்னைக்கு என்னப்பா லீவா? :)

சரி தம்பி சிவா :)

சிவா.ஜி
13-05-2012, 07:53 PM
லீவு இல்லைங்க...இணையம் தரும் இணைப்பைக் கையோடு அலுவலகம் எடுத்து வந்து உணவு இடைவேளையிலும், மற்ற ஓய்வு நேரங்களிலும் பயண்படுத்தினேன் ‘அக்கா’

மஞ்சுபாஷிணி
17-05-2012, 08:55 AM
லீவு இல்லைங்க...இணையம் தரும் இணைப்பைக் கையோடு அலுவலகம் எடுத்து வந்து உணவு இடைவேளையிலும், மற்ற ஓய்வு நேரங்களிலும் பயண்படுத்தினேன் ‘அக்கா’
அன்பா தம்பி அக்கா அக்கான்னு கூப்பிடும்போது எனக்கு ஒரே சந்தோஷம்.. :)

சிவா.ஜி
18-05-2012, 02:26 PM
எனக்கும்தான் ‘அக்கா’...ஹி...ஹி...!!

(தங்கையை வாம்மா போம்மான்னு சொல்லுவாங்க ஆனா நான் அக்கான்னு சொல்றேன்...அதுல அவங்களுக்கும் எவ்ளோ சந்தோஷம்....)

மஞ்சுபாஷிணி
18-05-2012, 05:46 PM
எனக்கும்தான் ‘அக்கா’...ஹி...ஹி...!!

(தங்கையை வாம்மா போம்மான்னு சொல்லுவாங்க ஆனா நான் அக்கான்னு சொல்றேன்...அதுல அவங்களுக்கும் எவ்ளோ சந்தோஷம்....)i

:music-smiley-008::medium-smiley-080::medium-smiley-075:ஹை ஜாலி :)

சிவா.ஜி
18-05-2012, 07:41 PM
சந்தோஷத்தப்பாரு......

sarcharan
19-05-2012, 10:45 AM
சிந்திக்க வைக்கும் ஒரு நல்ல கதை சிவாண்ணா... பாராட்டுக்கள்.

சிவா.ஜி
19-05-2012, 04:47 PM
மிக்க நன்றி சரவணன்.

Keelai Naadaan
24-06-2012, 04:00 AM
”....ஆசையே அழிவுக்குக் காரணம்ன்னு புத்தர் சொன்னாரு...ஆனா அத்தனைக்கும் ஆசைப்படுன்னு இன்னொருத்தர் சொல்றாரு..ஆசையே அழிவுக்குக் காரணம்ன்னு சொன்ன புத்தரை வணங்குற பக்கத்து நாட்டுக்காரங்க அழிக்கறதையே ஆசையா வெச்சுருக்காங்க...ஸோ...அவங்கவங்களுக்கு அவங்கவங்க நியாயங்கள். மன்னிச்சுடுங்க புகழேந்தி...இது எல்லாத்தையும் விட்டு விடுதலையாகி...சந்தோஷமான வாழ்க்கையை வாழறதுன்னு நான் தீர்மானிச்சுட்டேன்...இனி யாராலயும் அதை மாத்த முடியாது...குட்நைட்...”
................................................................................................................................................................................................................................................................................................................

ஆசை என்பது பெருந் தீ.. எவ்வளவு கட்டைகளை போட்டாலும் தீ அணைவதில்லை.
அதே போல் எவ்வளவு அனுபவித்தாலும் ஆசைகள் அடங்குவதில்லை. என மகாபாரதத்தில் படித்த நினைவு.

அத்தனைக்கும் ஆசைப்படு என்பது உற்சாகம் ஊட்டும் வார்த்தையாகத்தான் யோசிக்க வேண்டும்.
நல்ல விதமான ஆசைகளுக்கு மட்டுமே இந்த வார்த்தையை யோசிக்க வேண்டும்.
புலியை பார்த்து பூனை சூடு போட்டு கொள்ள நினைப்பது விவேகமல்ல. அயல் நாட்டவரின் குடும்ப சூழ்நிலைகள் வேறு. நம் நாட்டு குடும்ப சூழ்நிலைகள் வேறு

விட்டு விடுதலையாவதற்கு குடும்பம் சிறைக்கூடமல்ல.. என்பதை கதையில் அழகாய் சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள். தங்கள் எழுத்து பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

(குடும்பம் என்ற அமைப்பை பற்றி உயர்ந்த எண்ணமே எனக்கும் உண்டு, என் பழைய நண்பர் ஒருவர் குடும்பம் என்ற அமைப்பை பற்றி அதிகம் விமர்சிப்பார்.
அவருடன் வாதிட்டு வெல்ல முடியாது. அந்த மாதிரி மாற்றுக் கருத்துகள் தந்தால் இந்த பிரச்னையின் மறுபக்கத்தையும் பார்க்கலாம்.)

சிவா.ஜி
25-06-2012, 10:26 AM
உண்மைதான் கீழைநாடான். குடும்பம் ஒரு சிறைச்சாலையில்லை....அது பூத்துக்குலுங்கும் நந்தவனம். அனுபவிக்கத் தெரிந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள்....அன்பானவர்கள்.

உங்கள் நண்பரைப்போல சிலருண்டு...அவர்களின் மாற்றுக்கருத்துக்களும் விவாதிக்கப்படவேண்டியதே.

நல்லதொரு கதாசிரியரின் மேலான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

சுகந்தப்ரீதன்
25-06-2012, 07:53 PM
ஒருபொருள் இருதோற்றம் குறைபாடு பார்ப்பவனிடமா? படைத்தவனிடமா? எனக்கு பதில் சொல்ல தெரியலைண்ணா.. இழப்புங்கிறது இருபக்கமும் இருக்கிறது... அதேபோல யோசிச்சி பார்க்கும்போது நியாயங்கிறது இருதரப்புலேயும் இருக்குங்கிற உண்மையும் விளங்குது... ஆனா நாம எல்லாத்தையும் நம்பளோட நிலையில் நின்றுமட்டுமே பார்க்க பழகிவிட்டோம்.. அதனால நம்பளோட கஸ்டமும் நஷ்டமும் மட்டும்தான் நம் கண்களுக்கு பெருசா தெரியுது... மற்றவர்களின் வலியும் வருத்தமும் நமக்கு புரிவதேயில்லை..!! அதேசமயம் அடுத்தவர் நிலையில் நின்றும் நம் பிரச்சனைகளை நாம் அணுக ஆரம்பிக்கும்போது, அங்கே அவர்கள் தரப்பு நியாயங்கள் உணரபடுவதோடு அடுத்தடுத்து சரியான புரிதல் ஏற்பட்டு வாழ்வில் வசந்தம் வளர்வதற்க்கும் அது வழிவகுக்கிறது..!! அதற்கு இருதரப்பின் ஒத்துழைப்பும் மிகமிக அவசியங்கிறதை உணர்த்திய அதே சமயம் ஒருகை ஓசை எழுப்பாதுங்கிறதை நேர்மையோட கதையில பதிவு செஞ்சிருக்கும் உங்களோட நேர்த்தி எனக்கு ரொம்ப புடிச்சிருக்குண்ணா..!!

பொதுவாவே நமக்கெல்லாம் காலம் கடந்துதான் ஞானம் பிறக்குது... பாஸ்கரன் ஐயாவாவது பரவாயில்லை கடைசியில கரை சேர்ந்துவிட்டார்... புகழேந்தி போன்ற இளைஞர்கள் பொருளாதார போராட்டத்தில் வளைகுடாவின் வளைவில் சிக்கிக்கொள்ளும்போது, சமயத்தில் அவர்களின் ஒழுக்கமே மற்றவர்களால் கேள்விக்குள்ளாக்கபட்டு விரதம் இருந்தவனின் வெம்மையும் வேதனையும் மௌனத்தை மட்டுமே பதிலாக தந்துவிட்டு செல்லவேண்டிய துயரமும் நேர்ந்துவிடுகிறது..!! வெளியில் இருந்து பார்ப்பவர்களால் ஒருபோதும் உணர முடிவதில்லை... பட்டினி கிடப்பவனுக்கும் விரதம் இருப்பவனுக்குமான வித்தியாசத்தை..!!

அண்ணா… நீங்க என்ன நினைச்சி இந்த தலைப்பை வச்சீங்களோ தெரியாது… கதையின் போக்கும் அதன் தலைப்பும் எனக்கு பாரதியின் இந்த சிட்டுகுருவியை போலேங்கிற பாடலைதான் நினைவூட்டுகிறது;

எட்டு திசையும் பறந்து திரிகுவை
ஏறியக் காற்றில் விரைவொடு நீந்துவை
மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ்
வானொளி யென்னும் மதுவின் சுவையுண்டு

பெட்டையி னோடின்பம் பேசிக் களிப்புற்று
பீடையி லாததோர் கூடு கட்டிக்கொண்டு
முட்டைதருங் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி
முந்த வுணவு கொடுத்தன்பு செய்திங்கு

முற்றத்தி லேயுங் கழனி வெளியிலும்
முன்கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்துண்டு
மற்றப் பொழுது கதைசொல்லித் தூங்கிப்பின்
வைகறை யாகுமுன் பாடி விழிப்புற்று

விட்டு விடுதலை யாகிநிற் பாயிந்தச்
சிட்டு குருவியைப் போலே…!!

(ம்ம்ம்.. ஆசை தோசை அப்பளம் வடை… இங்கே சிறுவன் கையில் சிக்குண்ட சிறுதும்பி போலல்லவா இருக்கு நம்ப நிலைமை..?!)

சிவா.ஜி
08-07-2012, 08:18 PM
ரொம்ப தெளிவா சொல்லியிருக்க சுபி. இந்த வயசுக்கு இவ்ளோ ஞானம்....தாங்காதுப்பா சாமி...!!!

உண்மைதான்...பாஸ்கரன்களை விடு...விட்டு விடுதலையாகிப்போனாலும் கட்டி இழுத்துவர பல காரணிகள் உண்டு. ஆனால்.....புகழேந்திகள்....அதனால்தான் அவனை நான் வேலை தேடி வெளிநாடு செல்பவனாகக் காட்டவில்லை. புகழேந்திகள் மீது எனக்கு இருக்கும் அக்கறையால்.

பாரதியின் வரிகளைப் போட்டு எனக்குப் பெருமை சேர்த்துட்ட....ரொம்ப நன்றி தம்பி.