Log in

View Full Version : ஒரு ப(ஞ்சதந்திர)ட்டக் கதை



rambal
07-04-2003, 05:24 PM
ஒரு ப(ஞ்சதந்திர)ட்டக் கதை

அரையாடை உடுத்திய
கிழவன்
பேரக் குழந்தைகளுக்கு
பட்டம் செய்ய
காகிதம் வாங்கினான்..

வாங்கிய
காகிதத்தை
கிழவன் பேச்சைக் கேளாத
கிழவனின் குரங்குகள்
ஆளாளுக்கு பங்கு போட்டு
கத்தரித்து
அவரவரிஷ்டம் போல்
வண்ணம் பூசியது..

இப்பொழுது பட்டம் தயாராக
பறப்பதற்கு...
கிழவன் பேச்சைக் கேளா
குரங்குகள்
அதனதன் கொள்கை நூலை
எடுத்து பட்டத்தை பறக்க விட்டன..

கிழவன் வாங்கிவந்த
கொள்கை நூலை
வைத்து வியாபாரம் பண்ணிய வியாபாரி
நட்டமடைந்தான் பிறிதொரு நாளில்..

இதைக் கண்டு வேதனை தாங்கா
கிழவனும்
பட்டம் பறப்பதை காணச் சகியாமல்
'ஹே ராம்' என்றே உயிர்
துடித்து செத்தான்..

பறப்பது தங்களுக்கு
வாங்கிவந்த பட்டமென்று
தெரியாமல்
வேடிக்கை பார்த்தது
ஒரு கூட்டம்..

இதைத் தெரிந்து கொண்ட
குரங்குகள்
அடித்த கொட்டம் இருக்கிறதே..
அப்பப்பா..

பிறிதொரு நாளில்
அந்தப் பட்டம் தங்களுடையது
என்று அறிந்த கூட்டம்
ஒன்றும் செய்ய இயலாமல்
வேடிக்கையிஅத் தொடர்ந்தது..

பட்டம் முள்ளில் சிக்கி
கசங்கி கிழிந்ததும்
புதிய பட்டம்
புதிய கொள்கை நூல்..
பட்டம் பறக்கிறது
கன ஜோராக...

இப்பொழுது ஒரு
சிறு மாற்றம்..
வேடிக்கை பார்க்கும் கூட்டமே
காகிதம் வாங்கிக் கொடுக்கிறது..
கொள்கை நூல்
நைந்து போனது பற்றியெல்லாம்
கவலையேபடாமல்...

இப்படித்தான்
குரங்குகள்
பட்டம் விட..
ஒரு கூட்டம்
வேடிக்கை பார்க்க..

முதன் முதலில்
காகிதம் வாங்கிக் கொடுத்த
கிழவன்...
அவனைத்தான் மறந்து போயாச்சே..

அவன் கொள்கை நூல்..
அதுவும் நைந்து
பல துண்டாகிப் போய்விட்டது...

அப்படி என்றால் காகிதம்..
பணம் உள்ளவர்களுக்கும்
குரங்குகளுக்கும் மட்டுமே...

அப்படி என்றால் பேரக்குழந்தைகள்...
அவர்கள்
கோகோ கோலாவும் காபி பப்களிலும்
எதைப் பற்றியும் கவலைப்படாமல்...

இளசு
07-04-2003, 06:04 PM
குறியீடுகளில் , "குறிப்புகளும்" கொடுத்து
உம் சிந்தனை உயரம் அளவுக்கு வளர
குனிந்து என்னை ஏற்றிப் பறக்கும் கவிக்குயிலுக்கு
களிமண்ணின் வந்தனம்,,,,,,

மிக்க நன்றி ராம்....மிக நல்ல சிந்தனை...ரொம்ப யோசிக்க வைக்கிறது!
பஞ்சசீலம், சோஷலிசம், செகூலரிசம், இன்று...........(??).....
வண்ணக்கனவுகள் கலைந்த வறட்சியில் உதடுகள் வெடிக்கிறது

rambal
08-04-2003, 03:55 PM
பாராட்டிய அண்ணனுக்கு நன்றி..

poo
08-04-2003, 06:10 PM
அப்பா.... என்னவொரு அநாவசியமாய் வந்து விழுகிறது வார்த்தைகள்... குறிப்பாய் நீ சொல்பவை எல்லாம் குறிப்பாக சில குரங்குகளால் உணரப்பட வேண்டும்...

-பாராட்டுக்கள் ராம்!!!

rambal
09-04-2003, 04:27 PM
வாழ்த்திய பூவிற்கு நன்றி..

Narathar
10-04-2003, 06:57 AM
உங்கள் கவிதையின் முழுப்பலமே அந்த கடைசிவரிகள் தான்
வாழ்த்துக்கள் ராம்பால்.......... தொடருங்கள்


அப்படி என்றால் பேரக்குழந்தைகள்...
அவர்கள்
கோகோ கோலாவும் காபி பப்களிலும்
எதைப் பற்றியும் கவலைப்படாமல்...

gankrish
10-04-2003, 07:27 AM
கவிதை நல்லா இருக்கு. ஆனா சரியா புரியவில்லை. இது நம் அரசாங்கத்தை குறிப்பிடுகிறதா.. கொஞ்சம் விளக்கவும் ராம்.

Nanban
11-04-2003, 06:00 AM
குரங்குகளும்
குல்லாய் போட்டுக்கொண்டதினால்
விவரம் புரியவில்லை
கிழவனின் மக்களுக்கு.

குரங்கைக் கட்டுப்பாட்டில் வைக்க
கிழவன் கொடுத்த குச்சியையும்
குரங்குகளிடமே கொடுத்து
வேடிக்கைப் பார்த்தோம்.

பட்டம் பறக்கவிட
மேடான இடம் வேண்டுமென்று கேட்ட
குரங்குகளுக்கு
மண்டியிட்டு, மனித மேடையிட்டு
உயரமும் கொடுத்தோம்...........

இப்பொழுது பட்டம்
பறக்கிறதா, இல்லையா என்று கூட
எங்களுக்குத் தெரியவில்லை.
பார்த்துச் சொல்ல பக்கத்தில் ஆருமுண்டோ?

rambal
11-04-2003, 07:12 AM
பார்த்து சொல்ல வேண்டியவரும்
காந்தாரியாய் இருப்பதால்
அவருக்கும்
ஒன்றும் தெரியவில்லை..

தீயவற்றை பார்க்க மாட்டேன்
என்று இருக்கும் ஒரு நல்ல குரங்கும்
கண்ணை மூடிக் கொண்டதால்
அதற்கும் ஒன்றும் தெரியவில்லை..

பொறுத்திருப்போம்..
வழிப்போக்கன் எவராவது
வந்து பட்ட நிலமை
சொல்லும் வரை..

kavitha
28-01-2004, 06:47 AM
மீண்டும் பட்டம் விடப்போகிறோம்!