PDA

View Full Version : சொஃபுக்ளீசின் எலெக்த்ரா - 4



சொ.ஞானசம்பந்தன்
04-05-2012, 07:00 AM
( இளைஞர் இருவர் ஒரேஸ்த்தசின் அஸ்தி என்று சொல்லி வெண்கலப் பாத்திரம் ஒன்றைத் தருகின்றனர். கையில் வாங்கிய எலெக்த்ரா

இதுதானா மிச்சம் என்வாஞ்சைக் குரிய
ஒரேஸ்த்தசில் இருந்து ; இதுமட்டுந் தானுலகில்
எனக்குக் கூரருமையாய் இருந்தவனை நினைவூட்ட .
இப்படி உன்னை வரவேற்பேன் என்று எண்ணினேனா
இறுதியாய் உன்னைப் பிரிந்தபோது - இப்படி
ஒருகைப்பிடி வெறுமை ? இதுவாநான்
விடைதந்த பிரியமான குழந்தை ?
உயிர்பிழைக்க வெளியூர்க்கு அனுப்பி உன்னைக்
காப்பாற்ற முயன்ற தற்குப் பதிலாய்
நான்செத் திருந்தால் இருந்திருக்கும் எவ்வளவோ மேலாய் .
அன்றே நீயும் மாய்ந்திருப்பாய். இடம்பெற்று
இருப்பாய் தந்தையின் கல்லறையில். அதற்கு மாறாய்
வெளியூரில் , இக்கொடிய இறப்பு, இல்லுக்குத் தூரமாய்,
சகோதரிக்குத் தொலைவில். உடம்பைக் கழுவி
ஈமக் கடனுக்காய் உடையணி விக்கவோ
துயர்தரும் மீதியைப் பாசமிகு கைகளால்
சேகரிக்கும் கடமைதனைச் செம்மையாய்ச் செய்யவோ
நானங் கில்லை. அன்புக்கு உரியவனே,
உனக்காகச் செய்ய வேண்டிய தெல்லாம் அந்நியர்
வேலைஆயிற்று. இங்கே வீட்டுக்கு எங்களிடம்
சிறுதூசிப் பாத்திரமாய் நீவரும் வரையில்.
உன்னை வளர்த்தேன் வழக்கமாய்க் கடந்த நாள்களில்.
அன்னையின் குழந்தை என்பதைக் காட்டிலும் அதிகமாய்
என்மகவாய் நீயிருந்தாய்; வேறுயாரும் இல்லையுன்னைக்
கவனித்துக் கொள்ள நானன்றி ; சகோதரியென்
றழைப்பாய் என்னை, வேறுசகோதரி இல்லாததுபோல்.
நீஇல்லை இப்போது , முடிந்தது எல்லாம் ஒருநாளில்;
போயின யாவும் காற்றில் தூசிபோல்;
மாய்ந்தார் தந்தை , மாண்டாய்நீ , பிணமன்றி
நான்வேறு என்ன எல்லாரும் போனபின் என்னைவிட்டு ?

( தூதராய் வந்தவர் ஒரேஸ்த்தசை வளர்த்தவர் ; இளைஞர் இருவரும் ஒரேஸ்த்தசும் நண்பனும் . மாறுவேடம் நீக்கிய அவர்கலைக் கண்டு களிகூர்ந்தால் எலெக்த்ரா .
அரண்மனையுள் சென்ற ஒரேஸ்த்தஸ் தாயையும் புதுக் கணவனையும் கொன்றான் )

------------------------------------------------------------------------

தாமரை
04-05-2012, 07:09 AM
என்ன அழகான வசனங்கள். கருத்துச் செறிவு வியக்க வைக்கிறது. இவை மேடையில் கேட்க எவ்வளவு அழகாக இருந்திருக்கும்.

நினைக்கவே இனிக்கிறது.

சொ.ஞானசம்பந்தன்
05-05-2012, 07:22 AM
என்ன அழகான வசனங்கள். கருத்துச் செறிவு வியக்க வைக்கிறது. இவை மேடையில் கேட்க எவ்வளவு அழகாக இருந்திருக்கும்.

நினைக்கவே இனிக்கிறது.
மெய்தான் . கிரேக்க மூலத்தில் வாசித்தால் பிரமாதமாய் இருக்கும் . 1500 ஆண்டுக்குப் பின்னும் காலத்தை வென்று நிற்கும் படைப்புகளை இயற்றியோரை எவ்வளவு புகழ்ந்தாலும் தகும் . பின்னூட்டத்துக்கு மிகுந்த நன்றி .