PDA

View Full Version : அறிதுயிலும் அதிசயக் கனாவும்கீதம்
21-04-2012, 06:38 AM
அறிதுயில் கொள்ளும் அழகுக் கண்மணி,
அறிவேனடி உன் அழும்பின் பின்னணி.

ஆக்கித் தருவேனடி பணியாரம்
ஏக்கந்தவிர்ப்பாய் என் மணியாரம்.

கட்டாயம் பண்ணுவேன் சீராளம்,
கணக்கற்று நீயுண்ணலாம் ஏராளம்.

கூடவே செய்வேனடி போளி,
கொஞ்சமும் செய்யவில்லை கேலி.

பாலப்பமும் இடியாப்பமும் புட்டும்
பக்குவமாய் உனக்கொருநாள் கிட்டும்.

பொங்கல் பூரி லட்டோடு முறுக்கும்
பாயசம் அதிரசம் தேன்குழலும் இருக்கும்.

இட்டிலியும் தோசையும் வடையும்
இன்னுமின்னும் உன்மனம் குடையும்
பலகாரங்களின் பெயர்களைச் சொல்லிடுவாய்,
சிலகாலத்தில் யாவும் சேரும் உன் வாய்!

வாரி வளைத்துத் தின்றிட நீயும்
வயிறு நிறைந்து உவப்பேன் நானும்.

ஆசைப்படும் அத்தனையும் அல்லது
அதில் ஒன்றேனும் கிடைக்கும் வரை...

பாசமுடன் நான் கொடுக்கப்
பருகிடுவாய் இப்பழங்கஞ்சி.
பசியறியாக் கனவொன்றுக்குக்
காத்திருப்பாய் கண் துஞ்சி!

M.Jagadeesan
21-04-2012, 07:00 AM
பாசமுடன் கொடுப்பது பழங்கஞ்சி ஆனாலும்
ஊசிப்போகும் பஜ்ஜிவடை அதற்கு ஈடாமோ?

ஏழ்மையின் ஏக்கத்தைக் கவிதை வடிவில் தந்தது அருமை! பாராட்டுக்கள் கீதம்!

Dr.சுந்தரராஜ் தயாளன்
21-04-2012, 10:07 AM
குறள் வெண்செந்துறை
இயைபுவில் இக்கவியை இட்டீர் இதமாய்
வியந்தேன் விரைந்தேன்நான் வீட்டிலுண்பேன் விதமாய்
:):D

bharindra
22-04-2012, 10:29 AM
இட்டீர் இதமாய்

கீதம்
22-04-2012, 10:41 AM
பாசமுடன் கொடுப்பது பழங்கஞ்சி ஆனாலும்
ஊசிப்போகும் பஜ்ஜிவடை அதற்கு ஈடாமோ?

ஏழ்மையின் ஏக்கத்தைக் கவிதை வடிவில் தந்தது அருமை! பாராட்டுக்கள் கீதம்!

தங்கள் ஊக்கமிகுப் பாராட்டுக்கு நன்றி ஐயா.

கீதம்
22-04-2012, 10:43 AM
குறள் வெண்செந்துறை
இயைபுவில் இக்கவியை இட்டீர் இதமாய்
வியந்தேன் விரைந்தேன்நான் வீட்டிலுண்பேன் விதமாய்
:):D

ஊக்கம் தரும் பாராட்டுக்கு நன்றி தயாளன் ஐயா.

கீதம்
22-04-2012, 10:47 AM
இட்டீர் இதமாய்

தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே. புதியவரான தாங்கள் பல பதிவுகளையும் படித்துக் கருத்திட்டு ஊக்கமளிப்பதற்கு மிகவும் நன்றி. தங்களைப் பற்றிய சிறு அறிமுகத்தை எங்களுடன் பகிர்ந்துகொள்ளலாமே..

இங்கு (http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=38) சென்று புதிய திரி துவக்கி, உங்களைப் பற்றிய அறிமுகத்தைத் தாருங்கள்.

vasikaran.g
22-04-2012, 12:15 PM
நல்ல மனதை களவு கொண்ட கவிதை ..வாழ்த்துக்கள் கீதம் அவர்களே..

ஆதி
24-04-2012, 01:24 PM
//வாரி வளைத்துத் தின்றிட நீயும்
வயிறு நிறைந்து உவப்பேன் நானும்.

ஆசைப்படும் அத்தனையும் அல்லது
அதில் ஒன்றேனும் கிடைக்கும் வரை...

பாசமுடன் நான் கொடுக்கப்
பருகிடுவாய் இப்பழங்கஞ்சி.
பசியறியாக் கனவொன்றுக்குக்
காத்திருப்பாய் கண் துஞ்சி!

//

இந்த மூன்று வரிகளில் கவிதையின் முழு ஆழமும் ஒளிந்திருக்கிறது

முதலிரு வரியில் தாயின் மனம், பிள்ளை வயிறு நிறைய அவள் வயிறு நிறையும்

அடுத்த இரு வரிகளில், பிள்ளைக்கு சொல்லிக் கொடுக்கும் லட்சியம், அத்தனைக்கும் ஆசைப்படு, அதில் ஒன்றையேனும் அடையும் வரை போராடு, எனும் நெஞ்சுரத்தையும் ஊட்டுகிறது

கடைசி ஈரிருவரி, உனக்கு எல்லாம் செய்த்தரத்தான் ஆசை ஆனால் தற்போதைய நிலை இதுதான் என்று சொல்லும் மொழி, அந்த கஞ்சி கூட அரை வயிற்றுக்குத்தான், அதனால் தான் ப*சியறியா கன*வு காண் துஞ்சி என்று பாடுகிறாள்

வாழ்த்துக்க*ள் அக்கா

ந.க
30-10-2012, 07:39 AM
பணியாரங்களைப் பணிய வைக்கும் பழங்கஞ்சி

உங்கள் கவிதைகளில்
பாலகப் பசியாற்றி
பழங்கஞ்சி படு மோட்சம் காண்கிறது
முடிவில் முத்தியாய்.
நிறைவான கவிதை.
நீடிக்க வேண்டும் உங்கள் மானிடப் பார்வை.
வாழ்த்துகளோடு.

கீதம்
30-10-2012, 08:13 AM

விரிவான விமர்சனத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஆதி.

கீதம்
30-10-2012, 08:14 AM
நல்ல மனதை களவு கொண்ட கவிதை ..வாழ்த்துக்கள் கீதம் அவர்களே..

ஊக்கம் தரும் பின்னூட்டத்துக்கு மிகவும் நன்றி வசீகரன்.

பணியாரங்களைப் பணிய வைக்கும் பழங்கஞ்சி

உங்கள் கவிதைகளில்
பாலகப் பசியாற்றி
பழங்கஞ்சி படு மோட்சம் காண்கிறது
முடிவில் முத்தியாய்.
நிறைவான கவிதை.
நீடிக்க வேண்டும் உங்கள் மானிடப் பார்வை.
வாழ்த்துகளோடு.

தங்கள் விமர்சனப் பின்னூட்டத்துக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி கண்ணப்பு அவர்களே.

நாஞ்சில் த.க.ஜெய்
05-11-2012, 05:26 PM
கனவுகள் பலவாகினும் இன்னும் காலம் வரவில்லையென பக்குவ பரிபாலனை செய்து இன்றைய பசி ஆற்றும் தாய்க்கு ஈடாகுமா சுவையான பதார்த்தங்கள் ...

குணமதி
06-11-2012, 02:07 AM
அடுக்கடுக்காய் உணவுப் பண்டங்கள் சொல்லி
கொடுக்குங் கஞ்சியைக் குடிக்கச் கூறி

இல்லா நிலையிலும் ஏக்கம் தீர்க்கும்
நல்ல கருத்து நம்பிக்கை வளர்க்கும்!

(குறிப்பு : 'அறிதுயில்' என்ற சொல்லை 'டெலிபதி' யைக் குறிக்க மறைமலையடிகள் பயன்படுத்தினார்;
இன்னும் சிலர், அதனை 'இப்நாடிச' உறக்கத்தைக் குறிக்கப் பயன்படுத்துகின்றனர்)

கீதம்
06-11-2012, 09:03 AM
கனவுகள் பலவாகினும் இன்னும் காலம் வரவில்லையென பக்குவ பரிபாலனை செய்து இன்றைய பசி ஆற்றும் தாய்க்கு ஈடாகுமா சுவையான பதார்த்தங்கள் ...

சுவைமிகுப் பின்னூட்டத்துக்கு நன்றி ஜெய்.

கீதம்
06-11-2012, 09:06 AM
அடுக்கடுக்காய் உணவுப் பண்டங்கள் சொல்லி
கொடுக்குங் கஞ்சியைக் குடிக்கச் கூறி

இல்லா நிலையிலும் ஏக்கம் தீர்க்கும்
நல்ல கருத்து நம்பிக்கை வளர்க்கும்!

(குறிப்பு : 'அறிதுயில்' என்ற சொல்லை 'டெலிபதி' யைக் குறிக்க மறைமலையடிகள் பயன்படுத்தினார்;
இன்னும் சிலர், அதனை 'இப்நாடிச' உறக்கத்தைக் குறிக்கப் பயன்படுத்துகின்றனர்)

கவிதை பற்றிய அழகானப் பின்னூட்டத்துக்கும், அறிதுயில் பற்றிய அறியாத் தகவல்களுக்கும் நன்றி குணமதி அவர்களே...

நான் இங்கு 'அறிந்தே கொள்ளும் துயில்' (பாசாங்குத் தூக்கம்) என்பதைக் குறிப்பிடவே அறிதுயில் என்று குறிப்பிட்டேன். அதற்குரிய பொருளை அறிந்தேன். நன்றி.

rema
06-11-2012, 12:08 PM
கண்களை பணிக்கச் செய்த ஏழைத் தாயின் விலைமதிப்பில்லா பாசம் ! அதை வார்த்தையாக்கிய விதம் மிக நன்று !