PDA

View Full Version : தவளையும் ... குயிலும்..! நிறைவுப்பகுதி..!



கலைவேந்தன்
19-04-2012, 04:17 PM
தவளையும் குயிலும்..!!

அந்தவனத்துக்கே ஒரு
நந்தவனப்பெருமையுண்டு..
குரங்குகளும் கோகிலங்களும்
கூடிக்களித்திருந்த வனம்..
சொந்தங்கள் எல்லாம் கூடிப்பரிமளித்து
வந்தவரை எல்லாம் வாழவைக்கும் வனம்..

அப்படியொருவனத்தில்
அடர்ந்ததோர் ஆலமரத்தில்
ஆலையில்லாஊருக்கு இலுப்பையாயும்
சேலையில்லா மகளுக்கு தாவணியாயும்
இன்னிசை விருந்தளிக்க
பண்ணுடன் இசைத்தது
ஒரு கரகரப்பிரியைத் தவளை..!
விடியலில் தொடங்கி இரவின்
முடியல் வரை அதன் இசைப்
படையல் தொடர்ந்தது..

ஆனந்த ராகம் இசைப்பதாய் எண்ணி
அடிக்குரலில் துடிக்கவைத்தது..
மற்ற உயிரினங்களின் உயிர்கள்
ஊசலாடின என்றாலும்
அடங்கா மருமகளை அடக்கவியலா
அத்தையவளைப்போலவே
அத்தவளையை அடக்க
எத்தகு வழியுமின்றி
மொத்தமாய் விழித்தன..

அமைதியானவரின் அடக்கம் கண்டு
ஆட்டம் போடும்
குடிகாரனைப்போலவே
உற்சாகம் பெற்றே
வனங்களின் இனங்களை
வதைத்தது அத்தவளை..!!


தொடரும்..

கலைவேந்தன்
19-04-2012, 04:34 PM
பகுதி * 2

அந்த வனமே அதிரடியாகவும்
கற்களால் எறிந்தும் பண்பட்ட
சொற்களால் எறிந்தும்
விற்களைக்கொண்டே வளைத்த நாணிலும்
மிரட்டி அடிபணிய எடுக்கப்பட்ட முயற்சிகள்
ஊழல்கட்சிகளுக்கே
மீண்டும்மீண்டும் வாக்களிக்கும்
கோழைவாக்காளரைப்போல்
சற்றும் மனம் தளரா
தொய்விலாக் குரலில்
தொடர்ந்தது தவளை..

முற்களாய் வதைக்கும் நக்கலும்
கிளைக்குழந்தைக் கொம்புகளைக் கொண்டே
உதைக்கும் முயற்சியும்
வனவரசனுக்கான குமுறலும் கோபமும்
விட்டெறிந்த செங்கற்களும்
விரயமாய்ப்போனதில்
விட்டுத்தொலைத்தன விலங்குகளனைத்தும்..!

எல்லா பொல்லாக்கணங்களுக்கும்
என்றேனும் விடியலுண்டே..
செல்லாக் காசுகளும் சிலநேரம்
சேவைகள் பெறுமே..

நந்தவனமாய அந்த நொந்தவனத்திற்கு
வந்தனள் கோகிலம் வரமாய் அனைவர்க்கும்..
தன் துல்லிய குரலால் பாடிய கோகிலம்
சொல்லி சொல்லி அடித்தது
தவளையின் ஆணவத்தை..
ஆலமரத்தின் பொந்துக்குள் தப்பித்து
ஓலமிட்டே பிழைத்த அத்தவளைக்கு
ஓர் ஆப்பாய் வந்ததாம் கோகிலம்..
ஆம் விடியலுக்காய் வியர்த்த விலங்குகளுக்கு
ஓர் வாய்ப்பாய் வந்ததாம் ஆங்கே..

வறண்ட பாலையில் வடிந்ததொரு வேனல் மேகம்
மருண்ட வனமக்களுக்கு
வரமாய் கோகிலம் தன்
ஸ்வரத்தை கொடுத்தே
ஸ்திரமும் கண்டது..!!

தொடரும்..!!

Dr.சுந்தரராஜ் தயாளன்
19-04-2012, 04:46 PM
நன்றாய் இருக்கிறது...தொடருங்கள் :)

ஆதி
20-04-2012, 04:43 AM
வாழ்க்கை வரலாறு மாதிரியே தோணுது ஐயா..

அடுத்த அத்யாயத்தில் பிடிக்கிறேன், தொடருங்கள்..

தாமரை
20-04-2012, 06:40 AM
முதல் பாடலில்

குரங்குகளும் கோகிலங்களும்
கூடிக்களித்திருந்த வனம்..

என்றீர்கள்... பின்னர் இரண்டாம் பாடலில்

நந்தவனமாய அந்த நொந்தவனத்திற்கு
வந்தனள் கோகிலம் வரமாய் அனைவர்க்கும்..
தன் துல்லிய குரலால் பாடிய கோகிலம்
சொல்லி சொல்லி அடித்தது
தவளையின் ஆணவத்தை..

என்கிறீர்கள்..

கவனம் கவனம்..

M.Jagadeesan
20-04-2012, 07:17 AM
முதல் பாடலில்

குரங்குகளும் கோகிலங்களும்
கூடிக்களித்திருந்த வனம்..

என்றீர்கள்... பின்னர் இரண்டாம் பாடலில்

நந்தவனமாய அந்த நொந்தவனத்திற்கு
வந்தனள் கோகிலம் வரமாய் அனைவர்க்கும்..
தன் துல்லிய குரலால் பாடிய கோகிலம்
சொல்லி சொல்லி அடித்தது
தவளையின் ஆணவத்தை..

என்கிறீர்கள்..

கவனம் கவனம்..


"குரங்குகளும் கோகிலங்களும்
கூடிக் களித்திருந்த வனம் "

என்னும்போது , தற்போது அந்த நந்தவனத்தில் குரங்களும் , கோகிலங்களும் இல்லை என்பதுதானே பொருள்.

கலைவேந்தன்
20-04-2012, 01:40 PM
நன்றி தயாளன் மற்றும் ஆதன்.. தொடர்கிறேன்..!!

கலைவேந்தன்
20-04-2012, 01:42 PM
அவ்வனம் சிறப்புற்றிருந்ததாகக் குறிப்பிட்டு தவளையின் அட்டூழியத்தால் சீரிழந்திருந்தது என்பதாகக் கொள்ளலாம்.

கருத்துக்கு நன்றி தாமரை மற்றும் ஜெகதீசன் அவர்களே..

கலைவேந்தன்
20-04-2012, 02:32 PM
பகுதி * 3

http://3.bp.blogspot.com/_4-J9Uso1I6s/Sh8_I4mqHNI/AAAAAAAAAfE/ZmLuiRa9314/s400/nightingale-info0.gif

அந்த ஆலமரமே
ஓர் இசைக்கோயிலானது.
அந்தக் குயில் அங்கே தாலாட்டப்பட்டது..
நாராச ஒலிகளால் நரகங்கண்டவர்கள்
நவரச இசைவிருந்தில்
பரவசம் பெற்றனர்..

தாயின்மடியில் தனைமறந்து உறங்கின*
நேற்றுவரை அடம்பிடித்த
குட்டிக்குரங்குகள்..
ஒரு
புனிதத்தல வருகையாய்
ஒவ்வொரு விலங்கும்
அந்த ஆலமரத்தில்கூடி
தம்மை புனர்வசந்தத்தில்
புதுப்பித்துக் கொண்டன..
குயிலின் இசை நிறைவடைந்த
ஒவ்வொருமுறையும்
கைத்தட்டுகளால் அந்த
காடே அதிர்ந்தது..

இதுதான் கீதமென்று
கீதைமேல் கைவைக்காமல்
கிச்சுக்கிச்சின கிளிகள்..

தொலைதூரத்திலிருந்து
அலையலையாய் ஊர்ந்து
ஆலமரத்தின்கீழ் கூடிய*வாத்துகள்
வாத் வாத்தெனும் வாழ்த்தொலிகளால்
குயிலை நனைத்தன..

ஏகாந்த இசையில் எப்போதுமிருந்து
ஏங்கிய குயிலுக்கோ
ஏகோபித்த வாழ்த்துகள்
புதுமையாய் தோன்றின..

மீண்டும் மீண்டும் தன் குரல்வீணையை
மீட்டியது அக்குயில்..
விடிந்ததும் தெரியவில்லை.
விளக்குவைத்ததும் புரியவில்லை..
புரிந்தது என்னமோ அங்கே
குயிலின் இசை நர்த்தனம் மட்டுமே..!

தொடரும்..

தாமரை
20-04-2012, 06:01 PM
"குரங்குகளும் கோகிலங்களும்
கூடிக் களித்திருந்த வனம் "

என்னும்போது , தற்போது அந்த நந்தவனத்தில் குரங்களும் , கோகிலங்களும் இல்லை என்பதுதானே பொருள்.
அதை மட்டுமே இறந்த காலத்தில் சொல்லி இருந்தால் நீங்கள் சொன்னது சரி..


கதை முழுக்க இறந்தகாலம் என்பதால் தவறு.

கலைவேந்தன்
21-04-2012, 04:18 AM
நல்லது தாமரை. தவறுதான். ஏற்கிறேன். நன்றி.

கலைவேந்தன்
22-04-2012, 03:26 AM
பகுதி 4

அடுத்த நாளிரவு..
அனைவரின் உற்சாகம் மீண்டும் பொங்கவே
குயிலும் தன் தலையசைத்து
சந்தோஷத்தில் வாலசைத்து
ஒருகண் மூடி இறகுகள் சிலிர்த்து
தொன்டையைக் கனைத்து
தொடங்கியது இசையை..

அப்போதுதான்
தன் கரகரக்குரலால் குயிலின்
இசைத்தவத்தைக் கலைத்தது தவளை..

தனது குறுகிய குகையில் உடலைமறைத்து
தலைமட்டும் நீட்டியது தவளை
வஞ்சக மனிதன்
நெஞ்சகம் மறைத்து
கொஞ்சிய குரலில்
குழைவது போல
சிண்டுகள் முடிய முனைவது போல*
மண்டூகம் தனது
மவுனம் கலைத்தது..
மந்தமாய்க் கனைத்தது..!

சாகசம் அறியா மழலைக்குரலில்
குயிலும் வியந்து கேட்டது..
'' ஏதும் சொல்ல எத்தனமோ..?
பேதம் எதுவும் கண்டீரோ குரலில்..?
சாதகக்குறைவோ..? சங்கீதப்பிழையோ..?
ஏதுவாகினும் மனந்திறப்பாய்..''
என்றது குயிலும்
வலையில் வீழ்ந்திட
வசமாய் நின்றது..!

வாக்குக்கேட்கும் வஞ்சக அரசியல்வாதி
வாஞ்சையாய் மொழிவதுபோல்தான்
பலியாக்கும் ஆட்டின்
நலம்விசாரிக்கும் தொனிதான்..
நகை கேட்கும் நங்கைபோல்தான்..
சிகை கலைத்துக் கூறியது தவளை..
'' இம்மரத்தின் சொந்தக்காரன்..
இவ்வனத்தின் நல்லிணக்க தலைவன்
நாளும் மகிழ்விக்கும் நல்லவன் நான் தான்..
செவ்வையாய் இசைத்து
இவ்வனம் காக்கிறேன்..
நேற்றுமுதல் உன் சத்தமும் கேட்கிறேன்..
என் இன்குரல்தான் இங்கே
பலருக்கு பூபாளம்..
என் இசைக்கரம்தான் இங்கே
சிலருக்கு சிகைகோதும்..
என்னால் இங்கே
அனைவரும் மலர்கின்றனர்..
நேற்றுமுதல் ஏனோ
அனைவரும் அலறுகின்றனர்..''
என்ற
தவளையின் சூசக வாசகங்கள்
கவலையின் குழியில்
அழுத்தின குயிலை..!!

தொடரும்...

http://www.thoughtoftheweek.co.uk/images/icon/frog.jpg

கலைவேந்தன்
22-04-2012, 04:33 AM
பகுதி 5

http://images.tutorvista.com/contentimages/english/CBSEXENGLISH/Ch639/images/img4.jpeg

குயிலின் குதூகலம் வானைத்தொட்டது.
தன்படைப்பின் பெருமை கேட்பின்
வயமிழக்காதோர் எவருளர்..?
படைப்பின் பெருமை துய்ப்போர் புகழில்
அடையும் சிகரம் உலக இயல்பாம்..

’’என் இசையை விரும்பினாயா..?
என் குரலில் மயங்கினாயா..? ‘’
மீண்டும் மீண்டும் கேள்வியால்
வியந்தது குரலரசி..!

’’ ம்ம்ம்..பரவாயில்லை..
இசைமிக நீளம் என்பது தொல்லை.
குரலினிமை இனிதெனினும்
குரல்வளம் இன்னும் மெருகிடப்படலும்
இசைக்குறிப்பு இன்னும் மேம்படலும்
உன் குரலில் நான் கண்ட குறைகள்..’’

ஒரு சங்கீத வல்லுனரின் சாகசம்போலவும்
கல்விகற்கும் மாணவனுக்கு அறிவுரை போலவும்
காதலனுக்கு காதலியின்
கட்டளைகள் போலவும்..
அத்தவளை அழகாய் விமரிசனம் வைத்தது..

ஆணவம் அறியாக்குயிலும் அதனின்
ஏளனம் புரியாநிலையில் உரைத்தது:
‘’ அப்படியாயின் இன்னும் என்னை
செப்பனிட்டுக் கொள்வேன். நன்றியுனக்கு..
இப்படி புகழ்ந்தது உந்தன் பெருமை.
சுப்புடுகூட தோற்றார் பெருமை..’’
குயிலின் குரலில் உண்மை ஒலித்தது.
தவளையின் இறுமாப்பு ஏனோ ஒளிந்தது.
மேலும் குயிலின் வாசகம் அதனை
தாழா மனிதனின் சீரன்ன மிளிர்த்தது..

’’ எனது குரலொன்றும் தெய்வீகமல்லதான்
காக்கைக்குஞ்சினைப்போல் பொன்குஞ்சு மட்டுமே..
ஆக்கம் நிறைந்த உன் ஆதங்கம்
தாக்கம் கொடுத்தது இன்னும் மிளிரவே..
தாயாய் வந்தாய் தயவும் புரிந்தாய்
சேயாய் உந்தன் அறிவுரை கேட்பேன்..
பண்படுத்து என்னை
பயன்படு எனக்கு.. நீயே என் குரு..! ‘’

குயிலின் இரக்கம் தவளைக்கு ஊட்டம்..
கொண்டது ஆட்டம் கொடுஞ்செயல் எண்ணமுடன்
கொடுமையைத் தொடர்ந்தது..!!

தொடரும்..!

கலைவேந்தன்
22-04-2012, 09:26 AM
பகுதி 6

http://southerncrossreview.org/78/nightingale.jpg

குயிலின் குரலால் குரோதம் கொண்ட
கொடூரத் தவளையின் குணம் அறியாமல்
எதார்த்தமாய் மனதில் இருப்பதைச் சொன்னது.
தன் படைப்பின் பெருமையை..அக்குயில்..!

இருதயமின்றி இரண்டகத்தவளையோ
குரூரத்தை அன்பில் தடவி
அக்கறைச் சால்வையை
அழகாய்ப் போர்த்தியது..!

'' பெருமைப்பட இதிலொன்றும்
பெரிதாய் இல்லை...
இன்னும் சாதகம் நீ பெற வேண்டும்..
மின்னும் தாரகை ஆகிடலாம் நீ..
என்னைப்போல ஏற்ற பயிற்சி
யார் தருவாரிவ் வனமதில் உனக்கு..?

என்னுடனிருந்தால் ஏற்றம் பெறுவாய்..
என்னிலும் யாரிடம் காண்பாய் பெருவாய்..?
தற்சமயம் நீ கற்றுக்குட்டியே..
என்வசம் நீவா வெற்றிகிட்டுமே.. ''

தவளையின் குரோதம் உணரா குயிலும்
அவலமாய் நம்பியே சரணடைந்ததுவே..

'' அன்பின் நண்ப..அருமை அருமை..
அறிந்தே மகிழ்ந்தேன் உனது பெருமை..
நீதான் இசையுலகின் மொசார்ட்* உணர்ந்தேன்..
நீதான் கானக்குரவன் அறிந்தேன்..
தான்சேன் உன்னில் அடக்கம் என்பேன்..
தருவாயுன் குருவுபதேசம்..
ஐயா நீவிர் அனைத்தும் கற்றவர்..
ஐயமின்றிப் பகிர்வேன் நாதத்தின் உரு நீ..
எனக்கும் தருவாய் அவ்வருள் முழுதும்..
என்னிசைநிலத்தை முழுதும் உழுதும்
கானப்பயிரை பயிர்த்திடு நீயும்..
நானுன்னடிமை இனி எந்நாளும்..!! ''

அந்தக்குயில் அத்தவளையின்
விரித்தவலையில் மாட்டியது ஐயகோ..!!

தொடரும்..

suriyamurali
22-04-2012, 09:47 AM
கவிதை நல்லா இருக்கு

bharindra
22-04-2012, 10:32 AM
நன்கு அருமை

கலைவேந்தன்
22-04-2012, 01:48 PM
நன்றி சூர்ய முரளி..!
நன்றி பாரிந்திரா..!

கலைவேந்தன்
22-04-2012, 01:49 PM
பகுதி 7

http://www.animalpictures1.com/data/media/88/Nightingale-7.jpg

பிறரைக்கெடுக்குமுன் வஞ்சகமாய் நடித்தல்
பிறப்பே அவருக்காய் என்பதாகச்சொல்லுதல்
உறவைக் கொடுத்து உயிரை எடுத்தல்
துறவறம் பூண்டாற்போலவே நடத்தல்
இவையாவும் வஞ்சகர்க் குணங்களாம்..

தயவு செய்தாற்போல்
இயல்பாய் நடித்த அத்தவளையோ
பயிற்சிக்கு கட்டணம் கட்டாயம் உண்டு..
பிறருக்கெனில் ஆயிரக்கணக்கில்
உறவானாய் உனக்கோ சற்றே குறைவு
கறாராய்ப்பேசி கச்சிதமாய் நடித்தது..!

ஏமாறப்பிறந்த எத்தனையோ பிறவிகள்
தேடினில் வையகம் முழுவதும் உண்டே..
குயிலின் இயல்பு தவளையின் நடிப்பில்
உயிரை வதைக்கப்போவது அறியாமல்
உடனே ஏற்றது தவளையின் ஆலோசனை..

ஊக்குவிக்க ஒருவர் கிடைத்தபின்
உற்சாகக் கவிமழை பொழிவதைப்போல்
பெற்றோரின் அனுமதி கிடைத்த காதலர்போல்
உற்றதோர் நம்பிக்கை ஊற்றுப்பெருக்கெடுக்க*
கற்றதனைத்தும் காட்டியது குயிலும்..

தொட்டனைத்தூறும் தூயதோர் கேணிபோல்
கட்டுக்கோப்புடன் கானம் பொழிந்தது..
தொலைதூர விலங்குகள் தூரம் தொலைத்தன*
அலையலையாய் ஓடிவந்து ஆரவாரம் செய்தன..
கலையழகு மிக்கதோர் இசையமுது புசித்தன..

வந்த விலங்கினங்களிடம் வஞ்சகத்தவளையும்
சந்தம் கேட்டிட சந்தா கேட்டது..
சொந்தம் என் மரம் சொந்தம் என்குயில்
வந்தவர்க்கெல்லாம் கானவிருந்துக்காய்
தந்தே தீருக தனமழைபொழிக என்றே
தந்திர தவளையும் சுரண்டியது செல்வமதை..!

தொடரும்..!

கலைவேந்தன்
23-04-2012, 03:14 PM
பகுதி 8

http://www.timaverybirding.com/photos/albums/2011/06_June/costa-rica/Thrushes/slaty-backed-nightingale-thrush_01.jpg

அவ்வனத்தில் அடுத்தநாள்
தொடர்மழை தொடங்கியது..
வானப்படுகையின் வரப்பு கிழிந்ததோ
கடலில் கொண்ட சூழ் கருவுடைத்ததோ
வருணன் மனைவியுடன் ஊடல் கொண்டானோ
தருணமின்றித் தாக்கியது பேய்மழை..

மழையினால் மட்டற்ற மகிழ்ச்சி
மண்டூகங்களுக்கு மாளாது அல்லவா..?
கொண்டாட்டக்குதியலில்
குயிலை அருகிழுத்து
பயிற்சியெனும் பேரில்
உயிர்ச்சி குலைத்தது..

அக்கடும் மழையில் தன்னால்
இசைக்க வியலா நிலையைக் கூறியும்
இரக்கமே இல்லாத தவளையோ
அரக்கனாய் நின்று ஆட்டிப்படைத்தது..
பாவம் குயிலுக்கோ
குரலும் உடைந்தது..!

குளிரில் நடுங்கிய உடலைப் பொறுப்பதா?
பயிற்சியின் பேரில் நடக்கும்
கொடுமையை சகிப்பதா..?
அப்பாவிக்குயில் பரிதவித்துக் கூவியது..
ஆறுமணி நேர அடைமழையுடன்
ஆறாத ரணத்துடன் இசைமழையும்
இடைவிடாது தொடர்ந்தது அங்கே..!

தொடரும்..

கீதம்
24-04-2012, 11:03 PM
கூடா நட்பு, தன் பெருமை தானறியாத் தன்மை, வஞ்சகரின் கொஞ்சல் மொழியில் பேதமறியா பேதைமை போன்ற பல வாழ்வியல் குணங்களை சுட்டிநிற்கும் க(வி)தை.

அடங்கா மருமகளை அடக்கவழியின்றி விழிக்கும் அத்தையவளைப் போல்...

வாத் வாத் என வாழ்த்திய வாத்துக்கூட்டம்...

பெற்றோர் அனுமதி கிட்டிய காதலர் போல்...

வருணன் மனைவியுடன் கொண்ட ஊடல் காரணமாய் ஊற்றிய அடைமழை...

என வரிக்கு வரி ரசிக்கவைக்கும் வார்த்தையாடல்கள். மிகவும் ரசித்தேன்.

பாராட்டுகள். தொடருங்கள்.

கலைவேந்தன்
25-04-2012, 06:01 AM
தங்களின் இனிய அலசல் மகிழ்வைத்தந்தது கீதம் அவர்களே..! நன்றி..!

கலைவேந்தன்
25-04-2012, 06:01 AM
பகுதி 9

http://www.vinceedwin.com/fairytales/wp-content/uploads/2011/03/sample_cover2.jpg

ஓய்விலா இசையால் குரலும்
பேய்மழைப் பொழிவால் உடலும்
தேய்ந்து போய் வாடியது பாவம்..
ஓய்வும் உறக்கமும்
கெஞ்சின போதும்
தவளையின் தூண்டல்
அங்கே கூடிய கூட்டத்தின் வேண்டல்
மேலும் மேலும் குயிலை
பாடிட வைத்தது..ஆம் .. வாடிட வைத்தது..

வனத்தின் பன்முனை விலங்குகள் பலவும்
கனம் கனமாய் உணர்ந்தன இசையை..
நாட்பட நாட்பட*
கனமழையும் கான மழையும்
குறையவும் இல்லை.
விலங்குகள் பலவரவால்
தவளையின் பணவரவும்
பல்கிப்பெருகின..

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குறைகள்
சொல்லிச்சொல்லியே குதறியது தவளை..
எவ்விதத்திலும் மறுப்புரை கூறா
செவ்விய குயிலும் தேய்ந்தது நாட்பட..
ஒவ்வா நிலையில் தேய்ந்தது குரலும்..
தவளையும் சளைக்காமல் கூறியது குறையும்.

'' இன்னும் பயிற்சிகள் தேவை உனக்கு..
என்னுடைய குரலைக் கவனித்தாயா..?
எத்தனை வலிமை எத்தனை இனிமை..?
அத்தனை திறமை உனக்கும் வேண்டும்..
கடந்திட்ட இரவில் கனத்தது உன்குரல்
இடைப்பட்ட இசையில் பிசிறடித்தது காண்..
குரல் ஏன் நடுக்கம்..? இசை ஏன் ஒடுக்கம்..?
இன்னும் பயிற்சிகள் தேவை உனக்கு..
உனக்கான வாசகர் கூட்டம் பெரிது
ஆயினும் பயிற்சிகள் குறைவே உனக்கு..
இன்னும் திறமைகள் வேண்டும் உனக்கு..
எனது பயிற்சிக்கட்டணம் இன்னும்
உனது கணக்கில் செலவில் இருக்கு..''

இரக்கமற்ற தவளை குயிலின் குரல்வளை
நெரித்தது மேலும் .. மேலும் ... மேலும்..!

அடுத்த பகுதியில் நிறைவுபெறும்..!!

கீதம்
25-04-2012, 06:08 AM
இந்தக் கடைசித் தருணத்திலாவது தன் குரலையும் உயிரையும் காப்பாற்றிக் கொள்ள முனைந்திருக்கவேண்டும் அக்குயில்.

மடமையால் மண்டூகத்திடம் மாட்டிக் கொண்டு படும் அவஸ்தை பரிதாபம்தான்.

கலைவேந்தன்
25-04-2012, 02:44 PM
உண்மைதான் கீதம்.. அந்த சோகத்தைத்தான் இறுதிப்பகுதியில் சொல்லவிருக்கிறேன்.

இறுதிப்பகுதி முடிந்ததும் இக்கவிதை பற்றிய ஒரு விளக்கமும் தரவிருக்கிறேன்.

நன்றி கீதம்..!

கலைவேந்தன்
25-04-2012, 04:31 PM
நிறைவுப்பகுதி

நாளும் தேய்ந்தே நலிந்தது குயிலும்
யாரும் இல்லை காக்கவும் உயிரை
குரல்வளை நெரிந்தது குதூகலம் இழந்தது..
இதயம் வலித்தது முகமும் வெளிர்ந்தது..
களையும் இழந்தது கலையும் இழந்தது
குரலும் குழறியே கூக்குரலானது..

வனவாசகர்கள் வழிமறந்து போயினர்..
பணவரவும் தவளைக்கு குறைந்தது..
நல்லோர் வாழ்ந்தால் நச்சிடும் உறவினர்
இல்லாராகில் எச்சிலாய் மதிப்பரே..
இன்னிசைக் குயிலின் இம்சையும் கூடி
முன்னிசை யானது ஓர் பெரும் கனவாய்..
ஆயினும் பாராட்டும் கைத்தட்டலுமே
ஆகின குயிலின் ஏக்கங்களாகவே..!

குயிலின் நிலையதைக் கண்டும் தவளையோ
இல்லாதவளை இம்சிக்கும் காமுகனாய்
போலாதவை சொல்லி புறமதில் தாக்கியது..
‘’ முட்டாள் பறவையே முடிந்தது உன்கதை
உடல்வனப்பிருந்தால் உடனிருப்பர் காமுகர்
வனப்பிழந்தவளோ வறுமையில் ஏகுவள்
சினமிகும் முன் சீர்செய் உன்குரல்.
பிணமாகிடுவாய் பின்விளைவிதுதான்..! ‘’

நான்கு காமுகர் கையகப்பட்ட
நனி இளம்பெண்ணாய்ச் சிலிர்த்தனள் குயிலாள்
இழப்பினை எண்ணி சுவாசம் மறந்தது குயிலும்
எங்கோ நரம்புகள் வெடித்தன..ஐயகோ
செங்கோலோச்சிய குயில்
துறந்தது இன்னுயிர்..
துடித்துத் துடித்து அடங்கியது உயிரும்..!

சற்றும் இரங்கா தவளையும்
குற்றம் தன்னது இல்லையென
சுற்றிலுமிருந்த கூட்டத்தில் உரைத்தது..
‘’ என்ன தான் செய்வது நானும் சொல்க..
முட்டாள் குயிலது முடிந்தவரை முயன்றேன்
அதீத நடுக்கம்.. அதீத இயலாமை
அதிதிகள் மனதை மயக்கவல்லாமல்
அநியாயமாக இறந்தது..
சுயமாகச் சிந்திக்க இயலாதகுயிலது
உயரம் என்னது என்னை எட்டுமோ..?’’

ஆங்காரம் மிகுந்த அத்தவளையும்
ஆங்கே அரசு நடாத்தியதே..
அவ்வனம் சென்றீரென்றால்
அம்மண்டூகம் இன்னும் அங்கே
இசையாய்ப்பொழிவதைக் கேட்பீர் நன்றே..
வசையது பற்றிக் கவலையும் இல்லை
வாழ்க்கையைப்பற்றிய நியதியும் இல்லை..
கூர்ந்து பார்ப்பீர் அக்கம்பக்கம்..
ஓராயிரம் தவளைகள் உங்கள் பக்கம்..!
http://images.nationalgeographic.com/wpf/media-live/photos/000/337/cache/nightingale-island-oil-spill-penguins-dead_33703_600x450.jpg

நிறைவுபெற்றது..!

கலைவேந்தன்
25-04-2012, 04:33 PM
இனி,

இக்கவிதைத் தொடர் பற்றிய சில விளக்கம்.

என் மகனுக்கு பத்தாம்வகுப்பில் ஆங்கிலப்பாடம் கற்றுத்தந்த வேளையில் திரு விக்ரம் சேட்டின் THE FROG AND NIGHTINGALE என்னும் கவிதைப்பகுதியை சொல்லித்தந்தேன். சொல்லித்தரும்போது நான் வியந்தேன். அத்தனை அருமையாக உருக்கமாக படைக்கப்பட்டிருந்தது அக்கவிதை. அதை நீங்கள் கீழே வாசிக்கத்தருகிறேன்.

The Frog and the Nightingale
written by Vikram Seth.

Once upon a time a frog
Croaked away in Bingle Bog
Every night from dusk to dawn
He croaked awn and awn and awn
Other creatures loathed his voice,
But, alas, they had no choice,
And the crass cacophony
Blared out from the sumac tree
At whose foot the frog each night
Minstrelled on till morning night

Neither stones nor prayers nor sticks.
Insults or complaints or bricks
Stilled the frogs determination
To display his heart's elation.
But one night a nightingale
In the moonlight cold and pale
Perched upon the sumac tree
Casting forth her melody
Dumbstruck sat the gaping frog
And the whole admiring bog
Stared towards the sumac, rapt,

And, when she had ended, clapped,
Ducks had swum and herons waded
To her as she serenaded
And a solitary loon
Wept, beneath the summer moon.
Toads and teals and tiddlers, captured
By her voice, cheered on, enraptured:
“Bravo!” “Too divine!” “Encore!”
So the nightingale once more,
Quite unused to such applause,
Sang till dawn without a pause.

Next night when the Nightingale
Shook her head and twitched her tail,
Closed an eye and fluffed a wing
And had cleared her throat to sing
She was startled by a croak.
“Sorry – was that you who spoke?”
She enquired when the frog
Hopped towards her from the bog.
“Yes,” the frog replied. “You see,
I'm the frog who owns this tree
In this bog I've long been known
For my splendid baritone
And, of course, I wield my pen
For Bog Trumpet now and then”

“Did you… did you like my song?”
“Not too bad – but far too long.
The technique was fine of course,
But it lacked a certain force”.
“Oh!” the nightingale confessed.
Greatly flattered and impressed
That a critic of such note
Had discussed her art and throat:
“I don't think the song's divine.
But – oh, well – at least it's mine”.

“That's not much to boast about”.
Said the heartless frog. “Without
Proper training such as I
- And few others can supply.
You'll remain a mere beginner.
But with me you'll be a winner”
“Dearest frog”, the nightingale
Breathed: “This is a fairy tale –
And you are Mozart in disguise
Come to earth before my eyes”.

“Well I charge a modest fee.”
“Oh!” “But it won't hurt, you'll see”
Now the nightingale inspired,
Flushed with confidence, and fired
With both art and adoration,
Sang – and was a huge sensation.
Animals for miles around
Flocked towards the magic sound,
And the frog with great precision
Counted heads and charged admission.

Though next morning it was raining,
He began her vocal training.
“But I can't sing in this weather”
“Come my dear – we'll sing together.
Just put on your scarf and sash,
Koo-oh-ah! ko-ash! ko-ash!”
So the frog and nightingale
Journeyed up and down the scale
For six hours, till she was shivering
and her voice was hoarse and quivering.

Though subdued and sleep deprived,
In the night her throat revived,
And the sumac tree was bowed,
With a breathless, titled crowd:
Owl of Sandwich, Duck of Kent,
Mallard and Milady Trent,
Martin Cardinal Mephisto,
And the Coot of Monte Cristo,
Ladies with tiaras glittering
In the interval sat twittering –
And the frog observed them glitter
With a joy both sweet and bitter.

Every day the frog who'd sold her
Songs for silver tried to scold her:
“You must practice even longer
Till your voice, like mine grows stronger.
In the second song last night
You got nervous in mid-flight.
And, my dear, lay on more trills:
Audiences enjoy such frills.
You must make your public happier:
Give them something sharper snappier.
We must aim for better billings.
You still owe me sixty shillings.”

Day by day the nightingale
Grew more sorrowful and pale.
Night on night her tired song
Zipped and trilled and bounced along,
Till the birds and beasts grew tired
At a voice so uninspired
And the ticket office gross
Crashed, and she grew more morose -
For her ears were now addicted
To applause quite unrestricted,
And to sing into the night
All alone gave no delight.

Now the frog puffed up with rage.
“Brainless bird – you're on the stage –
Use your wits and follow fashion.
Puff your lungs out with your passion.”
Trembling, terrified to fail,
Blind with tears, the nightingale
Heard him out in silence, tried,
Puffed up, burst a vein, and died.

Said the frog: “I tried to teach her,
But she was a stupid creature –
Far too nervous, far too tense.
Far too prone to influence.
Well, poor bird – she should have known
That your song must be your own.
That's why I sing with panache:
“Koo-oh-ah! ko-ash! ko-ash!”
And the foghorn of the frog
Blared unrivalled through the bog.

அக்கவிதை தந்த தாக்கம் சொல்லி மாளாது.

சொல்வோர் பேச்சைக்கேட்டு சுய அறிவின்றி நடக்கும் மனிதர் எத்தனை பெரிய திறமையாளராயிருப்பினும் இறுதியில் சந்திக்கும் நிலை இதுதான் என்று கொள்வதா..?

ஏமாறும் மனிதர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வர் என்பதை கொள்வதா..?

சாதுரியமான சாகசகமான பேச்சுகளுக்கு மயங்கும் மனிதர்கள் நிலைமை இதுதான் எனக்கொள்வதா..?

இக்கவிதை உணர்த்தும் கருத்துகள் மிகப்பல..

அக்கவிதையை மொழிபெயர்த்துத் தந்தே ஆகவேண்டும் என்னும் என் தாகத்தில் அக்கவிதை எனக்களித்த தாக்கத்தில் எழுதியே விட்டேன்.

விக்ரம் சேட் அளவுக்கு நான் விற்பன்னன் அல்ல. என்னால் இயன்றவரை புதுக்கவிதை வடிவிலும் இயன்றவரை சந்தங்களும் எதுகைகளும் மோனைகளும் அணிகளும் பயன்படுத்தி உங்கள் முன் சமர்ப்பித்துவிட்டேன்.

எத்தனை கவிதைகள் எழுதினாலும் எனக்கு என் சில கவிதைகள் தந்த வியத்தகு மனநிலை சொல்லி மாளாது.

இக்கவிதையும் அவற்றிலொன்றே..!!

வாசித்து கருத்தளிக்கும் அனைவருக்கும் என் நன்றிகள். குற்றங்குறைகளைக் காண்பித்தால் மேலும் நன்றியுடையவனாவேன்..!

நன்றி வணக்கம்..!

கீதம்
02-05-2012, 02:29 AM
ஆங்கிலக் கவிதையின் தாக்கத்தால் விளைந்த இக்கவிதையும் தரத்தில் நிகரே.

தன் திறமை அறியாது, சேரக் கூடாதவருடன் சேர்ந்து தன் பெருமை அழியும் பேதைகளுக்குத் தக்கதோர் பாடம்.

சிரத்தை எடுத்து அழகுத் தமிழில் அளித்தமைக்காக, தங்களுக்கு மிகுந்த நன்றியும் பாராட்டும்.

தாக்கமுண்டாக்கிய ஆங்கிலக் கவிதையைப் பகிர்ந்தமைக்கும் கூடுதல் நன்றி.

கலைவேந்தன்
09-07-2012, 03:43 AM
தங்கள் பாராட்டுக்கும் இ பணப் பரிசு அளித்து உக்குவித்தமைக்கும் தங்கள் மனம் கவர்ந்த பதிவுகளில் இதுவும் ஒன்றாய் அமைந்தமைக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் கீதம்..!

ஜானகி
09-07-2012, 04:24 AM
கவின்மிகு கானகத்தே நடந்த நாடகத்தை அழகு தமிழால் படம் பிடித்துக்காட்டவைத்த ஆங்கிலப் பாடலுக்கு நன்றி..
தொடரட்டும் உங்கள் கவிப்பயணம்...
இனியாகிலும் விழித்துக்கொள்ளட்டும் பேதைக் குயில்கள்....

கலைவேந்தன்
02-08-2012, 08:43 AM
கவின்மிகு கானகத்தே நடந்த நாடகத்தை அழகு தமிழால் படம் பிடித்துக்காட்டவைத்த ஆங்கிலப் பாடலுக்கு நன்றி..
தொடரட்டும் உங்கள் கவிப்பயணம்...
இனியாகிலும் விழித்துக்கொள்ளட்டும் பேதைக் குயில்கள்....

தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி ஜானகி அவர்களே..! இன்னும் எத்தனைப் பேதைக்குயில்கள் சாகுந்தருவாயில் சிக்கித்தவிக்கின்றனவோ.. அவைகளுக்கு இக்கவிதை சமர்ப்பனம்.