PDA

View Full Version : இன்றைய மனிதர்கள் - மரபுவழிப்பார்வை யொன்று..!



கலைவேந்தன்
14-04-2012, 06:45 AM
http://www.merello.com/images/Photos%20Sketches/art_modern_art.-merello._transparent_portrait.jpg

இன்றைய மனிதர்கள் - மரபுவழிப்பார்வை யொன்று..!

வெள்ளமென தோன்றி நிற்கும் தன்னெரிச்சல் தான்தீர்க்க
கள்ளமாய்க் கலந்தேனும் களிதீரக் காண்கின்ற
குள்ள நரிக்கூட்டந்தான் கூடிக்கூடிப் பேசிடினும்
உள்ளம் நிறை நண்பரென உருவாகி நிற்பாரோ..?

உண்மைக்கு விலையில்லை பகட்டுக்கே பவிசெனவே
கண்மையால் கண்ணதுவின் கோணலை மறைத்தால் போல்
உண்மைக்கும் போற்றிவைத்த மாண்மைக்கும் பழிசேர்த்து
தண்மையின்றிப் பொய்பேசும் மூடர் தாம் நிலைப்பாரோ..?

நாளெல்லாம் கதைபேசி நேர்மைகுணம் தான் துறந்து
வேளைக்கொரு வாசகத்தைத் தேடுகின்ற அரசியலாய்
மூளையது பிறழ்ந்திவர் முன்னோரைத் தான்மறந்து
கீளையது தான்விட்டு வேறுகிளை பாய்கின்றார்..!

பழகிய கணம் தான்மறந்து பகட்டுக்குத் தான்மயங்கி
அழகிய கணங்களை அக்கணமே தான்மறந்து
நிழல்களின் பிரதிதனை நித்தியம் என நினைந்து
தழலுணரா எறும்பெனவே தான்கெட்டு அழிகின்றார்..

நிதர்சனம் அறியாமல் நிதானந் தானிழந்து
முதல்முதல் கண்டறிந்த முத்துக்களை தானெறிந்து
விதம் விதமாய் மலர்கண்டு வியந்துநிற்கும் வண்டினமாய்
இதயமதனைத் தொலைத்து இவ்வாழ்வைக் கழித்திடுவார்..!

இம்மனிதர் நிலைகண்டு சினமெதுவும் வரவில்லை
தம்மை உணராத தரமதனை அறியாத
பொம்மை மனிதரென நகைபுரிந்து நிற்கின்றேன்
இம்மையும் மறுமையும் துலங்கிட வாழ்த்துகின்றேன்..!

எனது 1001 ஆவது பதிவு.

கீதம்
27-04-2012, 03:44 AM
மரபு மறந்த மாந்தர் பற்றிய மரபுவழிப் பார்வை மனம் தொடுகிறது.

தம்மை உணராத, தரமதனை அறியாத பொய்மை மிகு பொம்மை மனிதர் பற்றி விளம்பியவை யாவும் மெய்யே.

சினந்து பயனில்லையென உணர்ந்ததும் நன்றே. உணர்ந்தவற்றை இங்கே உரைத்ததும் நன்றே.

மனம் தொட்டக் கவிதைக்கு மனமார்ந்த பாராட்டு.

நாகரா
05-05-2012, 07:39 AM
இருபது வரிகளில் மனிதம் மூடிய தோலுரிய
நான்கு வரிகளில் மன இதம் முகிழ
இருதயப் பார்வையின் உச்சந் தொடும்
அருங்கவி அற்புதம், வாழ்த்துக்கள் கலைவேந்தரே

கும்பகோணத்துப்பிள்ளை
31-12-2012, 11:52 PM
மனிதர் மனம் உரித்துகாட்டிய ஆசிரியர் பா:)

கலைவேந்தன்
26-01-2013, 06:36 AM
பாராட்டிய நண்பர்கள் கீதம் நாகரா மற்றும் கும்பகோணத்துப் பிள்ளை அனைவருக்கும் நன்றி.