PDA

View Full Version : என் ஊர்....!!!!!சிவா.ஜி
12-04-2012, 08:48 PM
இந்தப்பதிவை ஏன் இந்தப்பகுதியில் தொடங்கினேன்....நம் ஊரைப்பற்றிய நினைவுகள் என்றுமே சுவையான சம்பவங்கள்தானே.....மட்டுமல்லாது...மிகச் சுகமான சம்பவங்களும் கூட..

மன்ற உறவுகள்...இன்று சொந்த ஊர் விட்டு....வாழ்க்கையின் நகர்த்துகலுக்குள்ளாகி....நகரம் நாடியிருக்கலாம்.....நாடுகள்....மாறியிருக்கலாம்....ஆனால்...மனதின் உள்ளில்....அவர்கள் வளர்ந்த....அவர்களை வளர்த்த சொந்த ஊரின் நினைவுகள்.....இன்பமாய் உள்ளத்தில் அமர்ந்திருக்கும்.

தங்களின் சொந்த ஊரின் நினைவுகளை....பகிர்ந்துகொள்ளுங்கள் உறவுகளே......!!!

அமரன்
12-04-2012, 08:54 PM
பாஸ்..

ஆயிரங்கள் தொடும்போது பிரத்யேகப் பதிவு கொடுத்தது ஒரு காலம்.. 20000 என நீங்கள் சொன்ன பின் மீண்டும் கொடுக்கலாமோ என்று எண்ணினேன். அதையே சற்று வித்தியாசமாக கொடுக்க வைத்து விட்டீர்கள்..

பிறந்த மண்ணையும் மன்றத்தையும் என்னாலும் மறக்க முடியாது. மன்றத்தில் இருபதாயிரம் தொடும் இந்த நேரத்தில் எந்தன் ஊரை நினைவு கூருகிறேன்..

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=24181

நன்றி பாஸ்

சிவா.ஜி
12-04-2012, 09:01 PM
பாஸ்...நான் மன்றம் வராத நாட்களில் பதிந்த இந்த இரத்தினப் பதிவைக் காணக்கொடுத்தமைக்கு நன்றி. தெள்ளுதமிழில் சொல்லிச் சென்ற உள்ளம் கவர்ந்த சொந்த ஊரின் நினைவுகளை உங்கள் எழுத்தில் வாசிக்க வாசிக்க....நல்லக் காற்றை சுவாசித்ததைப்போல உணர்ந்தேன்.

இந்த சுவாசத்தை...மற்ற மன்ற உறவுகளிடமிருந்தும் பெற்று சுவாசிக்கும் ஆவலுடனே இத் திரியைத் தொடங்கினேன்.

அமரன்
12-04-2012, 09:08 PM
ஆமாம் பாஸ்..

என் ஊர் எனும் போது நிமிரும் நெஞ்சும், அகலும் விழிகளில் ஏறும் அகலும், காண்போர் மனசுக்கு சாமரமாகும். அந்த சுகம் தரும் திரியாக இது நீளும்.

சிவா.ஜி
12-04-2012, 09:18 PM
மிக உண்மை பாஸ்.

அன்பு உறவுகளே உங்கள் சொந்த ஊரைப்பற்றி சுவைபட சொல்லுங்கள்.....வாசிக்கும் உறவுகள்....ஒரு பதிவுக்கும் அடுத்தவரின் தன் ஊரைப் பற்றிய பதிவுக்கும் இடையில்...சற்று இடைவெளிக் கொடுக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.

வாசித்ததை சிலாகிக்க சந்தர்ப்பம் வேண்டுமென்பதாலேயேதான்.....!!!

புரிதலுக்கு நன்றி....உள்ளம் திறவுங்கள் உறவுகளே....!!!

jayanth
14-04-2012, 05:00 AM
பாஸ்..

ஆயிரங்கள் தொடும்போது பிரத்யேகப் பதிவு கொடுத்தது ஒரு காலம்.. 20000 என நீங்கள் சொன்ன பின் மீண்டும் கொடுக்கலாமோ என்று எண்ணினேன். அதையே சற்று வித்தியாசமாக கொடுக்க வைத்து விட்டீர்கள்..

பிறந்த மண்ணையும் மன்றத்தையும் என்னாலும் மறக்க முடியாது. மன்றத்தில் இருபதாயிரம் தொடும் இந்த நேரத்தில் எந்தன் ஊரை நினைவு கூருகிறேன்..

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=24181

நன்றி பாஸ்


திரி கண்டேன்...!!!. அமரன் அவர்களின் எழுத்தில் நான் பிறந்த மண் மட்டக்களப்பின் பசுமையான நினைவுகள் என் மனத்திரையில் நிழல் போல் ஓட ஆரம்பித்திருக்கின்றது. எண்ணங்கள் கோர்வையாகும்போது திரியில் பகிர ஆசை.

Dr.சுந்தரராஜ் தயாளன்
14-04-2012, 05:22 AM
என் ஊரைக்குறித்து பகிர்ந்துகொள்ள நானும் ஆசைப்படுகிறேன் :)

சிவா.ஜி
14-04-2012, 06:31 PM
வாங்க ஜெயந்த்....வாங்க டாக்டர் சார்...உங்களின் மனம் திறத்துலுக்காகத்தானே இந்தப் பகுதி....சொல்லுங்கள்....கேட்க மிக ஆவலாய் இருக்கிறோம்.

ராஜா
14-04-2012, 07:01 PM
வாழ்வின் காற்றுப்போக்கில், எங்கெங்கோ புலம்பெயர நேர்ந்தாலும், சொந்த ஊர் நினைவுகள் சுகமாய், சோலைப்பசுமையாய், என்றென்றும் நெஞ்சில் தித்திக்கும்..

அத்தகைய ஒரு ஆனந்த அசைபோடலுக்கு களம் அமைத்துத் தந்திருக்கும் எங்கள் சிவாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி..!

கலையரசி
15-04-2012, 06:40 AM
இத்திரியைத் துவங்கி எழுதச் சொன்ன சிவாஜி சாருக்கு என் மனமார்ந்த நன்றி.

இரண்டு மூன்று பக்கங்களுக்குள் முடித்து விட நினைத்தால் அது நீண்டு கொண்டே செல்கிறது. அடுத்த பதிவில் முடிக்க முயல்கிறேன்.

இனி என் ஊருக்குச் செல்வோம்.

நான் பிறந்த ஊர் காரைக்கால். ஆனால் நன்றாக நினைவு தெரிந்தது முதல் வளர்ந்த ஊர் திருநள்ளாறு என்பதால் என் ஊர் என்றதுமே முதலில் நினைவுக்கு வருவது இவ்வூர் தான்.


காரையிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தள்ளியிருக்கும் கிராமம் தான் திருநள்ளாறு. இவ்வூர் சனிப்பெயர்ச்சிக்குப் பெயர் பெற்ற ஊர். சனியால் பிடிக்கப்பட்டு நாடிழந்து அவதியுற்ற நளன், இவ்வூரில் உள்ள குளத்தில் குளித்து, தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் வழிபட்ட பிறகு, துன்பங்கள் அனைத்தும் நீங்கி நலம் பெற்றதாக தலப் புராணம் கூறுகிறது. எனவே ஒவ்வொரு சனிப்பெயர்ச்சியின் போதும், இவ்வூருக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.

பத்துப் பனிரெண்டு தெருக்களுடன் கூடிய சற்றே பெரிய கிராமம் திருநள்ளாறு. இவ்வூரைச் சுற்றிப் பேட்டை, செல்லூர், சுப்பராயபுரம் எனக்குட்டிக் குட்டிக் கிராமங்கள் இருந்தன.

இவ்வூரின் நடுநிலைப் பள்ளிக்குத் தலைமை யாசிரியராக என் தந்தை பொறுப்பேற்ற போது, நான் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அதுவரை காரையில் குடியிருந்த நாங்கள், தந்தையின் பணிமாற்றம் காரணமாகத் திருநள்ளாற்றுக்குக் குடி பெயர்ந்தோம்.

இப்பள்ளியின் வளாகத்திலேயே எங்களுக்கு வீடு ஒதுக்கப் பட்டிருந்தது. இப்பள்ளிக்கூட வீட்டு நினைவுகள் தாம் என்றென்றும் பசுமையான நினைவுகளாக என் நினைவுக் குறிப்பில் இடம் பெற்றுள்ளன.

’அரசினர் நடுநிலைப் பள்ளி,’ என்ற பெயர் தாங்கிய பலகையைச் சுமந்த வண்ணம், பள்ளியின் இரும்புக் கதவு காட்சியளிக்கும். அதைச் சுற்றி நான்கு புறமும் ஓங்கிய மதிற் சுவர்கள். இரும்புக்கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தால், ஒரு பெரிய மைதானம். அதில் கிழக்குப் பக்கம் வாதாம் மரமும் இடப்பக்கம் ஒரு பெரிய வேப்ப மரமும் இருந்தன. வேப்பமரத்தைத் தாண்டிப் போனால் எங்களது வீடு. வாசற் புறமும் அடுப்பங்கரையும் கூரையால் வேய்ந்தது. நடுவில் ஒரு ஹால் மட்டும் ஓட்டு வீடு. வேப்பரமரமும் வாதாம் மரமும் வானுயர வளர்ந்து, தம் கிளைகளைப் ப்ரப்பிக் கொண்டு மைதானம் முழுவதையும், வெயிலை அண்டவிடாமல் காத்தமையால், எங்கள் வீடு எப்போதுமே குளு குளு என்றிருக்கும்.

பருவநிலை மாறுதலுக்கேற்ப, வாதாம் மரமும் தன் கோலத்தை மாற்றிக் கொண்டு விதவிதமாய்க் காட்சியளிக்கும். இலையுதிர் காலத்தில் இலைகள் அனைத்தும் மஞ்சளாகவும் சிவப்பாகவும் மாறி மைதானம் முழுக்கக் கொட்டிக் கிடக்கும். இலைமுழுதும் கொட்டி மொட்டையான பிறகு, இளவேனிற் காலத்தில் ஒவ்வொரு சிறு காம்பின் முனையிலும் கைகளைக் குவித்து வணக்கம் செய்வது போல் கூம்பு கூம்பாக துளிர்த்து நிற்கும் காட்சி! அடடா! எவ்வளவு அருமையான காட்சி!

ஏப்ரல் மாதத்தில் வேப்பமரப் பூக்கள் மைதானம் முழுக்க பாய் விரித்தது போல் கொட்டிக் கிடக்கும். இவை சுழட்டி விடப்பட்டப் பம்பரம் போல் சர் சர் என்று சுழன்று தரையில் விழும் காட்சியை இன்றைக்கெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அம்மா தரையில் தடுக்கைப் போட்டு இப்பூக்களைச் சேகரித்து வெயிலில் காய வைத்து சுவையான வேப்பம்பூ ரசம் வைப்பார்.

பள்ளி அமைந்திருந்த தெரு தான் ஊரின் முக்கிய வீதி. காரையிலிருந்து அம்பகரத்தூர், பேரளம் செல்லும் பேருந்துகள் இந்த வீதி வழியாகவே செல்லும். இத்தெருவின் நடுநாயகமாகப் பள்ளி அமைந்திருந்தது. பள்ளியின் இடப்புறம் ஏழெட்டு க்ட்டிடங்கள் தள்ளி தபால் நிலையம், அதிலிருந்து நாலைந்து கட்டிடங்கள் தாண்டி பேருந்து நிலையம். இதன் பக்கத்தில் சிறிய கடைத் தெரு இருந்தது. மளிகை, காய்கறி போன்ற மிகவும் இன்றியமையாத பொருட்கள் தவிர மற்ற சாமான்கள், துணிமணி வாங்க காரைக்குத் தான் செல்ல வேண்டும். நல்ல தரமான ஹோட்டல்களோ, தங்கும் விடுதிகளோ இங்குக் கிடையாது.

பள்ளியின் இடப்பக்கத்தில் கொஞ்ச தூரத்தில் காவல் நிலையம். கிராமம் என்பதால் எல்லாமே கூப்பிடு தூரத்தில் தான்.


எங்கள் தெருவிற்குப் பக்கத்துத் தெருவில் தான் கோவில் அமைந்திருந்தது. எங்கள் வீட்டிலிருந்து பார்த்தால் கோயிலின் சொர்க்க வாசல் தெரியும். ஏகாதசி அன்று மட்டும் இக்கதவு திறக்கப்படும். அதற்குப் பக்கத்தில் ஒரு பெரிய குளம் இருந்தது. இப்போது இந்தக் குளம் இருந்த இடம் தெரியாமல் தூர்த்துக் கட்டிடங்களை எழுப்பி விட்டார்கள்.

எங்கள் வீட்டுக்கு நேர் எதிரே இரண்டு மூன்று குடிசைகள். அதில் யார் யார் இருந்தார்கள் என்பதெல்லாம் இப்போது நினைவிலில்லை. அதில் ஒன்று மட்டும் அம்மணி வீடு.

அம்மணி மலையாளி. அன்றலர்ந்த ரோஜா மலர் போல அவ்வளவு அழகாக இருப்பார். அவரது அம்மாவின் கட்டுக்காவலை மீறி எப்போதாவது எங்கள் வீட்டுக்கு ஓடி வருவார். அம்மாவும் துரத்திக் கொண்டே பின்னால் வருவார். எங்கள் வீட்டு வாசலில் இருக்கும் கனகாம்பரத்தைக் காட்டி, ”இதைப் பறித்துக் கொள்ளவா?” என்று கேட்பார். நாங்கள் சரி என்று தலையாட்டியவுடன், அதைப் பறித்துக் கொண்டு நல்ல பிள்ளையாக தம் அம்மாவுடன் வீட்டுக்குத் திரும்பி விடுவார்.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்பதால் இவரது மனநிலை பிறழ்ந்து விட்டதாக என் அம்மா மூலம் கேள்விப்பட்டேன். மனநோய் பற்றிய விழிப்புணர்வு அப்போது இல்லாத காரணத்தால், எல்லோரும் இவரைப் பைத்தியம் என்றே கிண்டலாகக் குறிப்பிட்டனர்..

அவருக்குப் பேய் பிடித்திருப்பதாகச் சொல்லி அம்மணியின் அம்மா, மந்திரவாதிகள் பலரை வீட்டுக்கு வரவழைத்தார். பேயை விரட்டுகிறேன் என்ற பெயரில் அம்மந்திரவாதிகள் அப்பெண்ணை என்ன பாடு படுத்தினார்க்ளோ, எப்படியெல்லாம் கொடுமை செய்தார்களோ என இப்போது நினைத்துப் பார்க்கும் போது நெஞ்சம் நடுங்குகிறது..


எங்கள் வீட்டுக்கு வருகை தரும் விருந்தினரைக் கோவிலுக்கு அழைத்துப் போவது என் வேலை. சுவாரசியமாக விளையாடிக் கொண்டிருக்கையில் என்னைக் கூப்பிட்டு, வீட்டுக்கு வந்தவர்களைக் கோவிலுக்கு அழைத்துச் செல்லச் சொல்வார் அம்மா. என்னைத் தவிர மற்ற அனைவரும் விளையாட்டைத் தொடர, நான் மட்டும் பாதியில் கைவிட்டுக் கோயிலுக்குச் செல்லும் போது கடுப்பாக இருக்கும். ஏற்கெனவே பார்த்துப் பார்த்துச் சலித்துப் போன இடங்களுக்குத் திரும்பத் திரும்ப உறவினரை அழைத்துச் சென்று காண்பித்தல், பிடிக்காத வேலையாகவிருந்தாலும், அம்மாவின் உத்தரவுக்குப் பய்ந்து வேறு வழியில்லாமல் செய்து வர வேண்டியதாயிற்று. எனவே ’கோயிலுள்ள(!) ஊரில் குடியிருக்க வேண்டாம்,’ என்ற புது மொழி, அப்போது எனக்குள்ளே உதயமாயிற்று.

கோயிலுக்கு எதிரில் இருந்த சன்னதி தெருவில் தான் பெரும்பாலான தோழிகளின் வீடுகள் அமைந்திருந்தன. அதனால் அடிக்கடி நான் அங்குச் செல்வது வழக்கம். அதற்கு நேர் எதிரே தேர் ஒன்று நிறுத்தப் பட்டிருக்கும். நாங்கள் அந்த ஊரில் இருந்தவரை அது ஓடிப் பார்த்ததில்லை. காரைக்கால் வந்த பிறகு அந்தத் தேர் ஓடியது பற்றிக் கேள்விப்பட்டேன். தேரை இழுக்கும் போது ஏற்பட்ட கோளாறினால், தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளானது என்றும், அதில் சிலரது கால்கள் (என் நண்பியின் அண்ணன் உட்பட) முறிந்து விட்டன என்றும் கேள்விப்பட்டேன்.

அந்தத் தேரடிக்குப் பக்கத்தில் தெப்பக்குளமிருந்தது. சன்னதி தெருவிலிருந்தவர்கள் இந்தக் குளத்தில் தான் நீராடுவார்கள். இக்குளத்தைப் பற்றி எழுதுகையில் என் தோழி சுந்தரியின் நினைவு வருவதைத் தவிர்க்க இயலவில்லை. அவளுடன் இக்குளத்துக்கு ஓரிருமுறை நான் சென்றிருக்கிறேன்.

எனக்கு நீச்சல் தெரியாதென்பதால், கரையில் ஏக்கத்துடன் (சற்றுப் பொறாமையுடனும் தான்) அவளைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்க, அவள் மூச்சைத் ’தம்’ கட்டிக் குளத்துக்குள் மூழ்குவதும், பின் நீந்திக் கொண்டே குளத்தைச் சுற்றி சுற்றிக் குதியாட்டம் போட்ட வண்ணமுமாய் இருப்பாள். சில சமயம் குளத்துக்குள் போனவளைக் காணோமே என நான் பதட்டத்துடன் பார்க்க, அவளோ தண்ணீருக்கடியில் தம் பிடித்துக் கொண்டே சென்று நட்டநடுவில் திடீரென்று மேலெழும்பி, அங்கிருக்கும் கோபுரத்தைத் தொட்டுக் கொண்டு சிரிப்பாள்.

எனக்குத் தெரியாத ஒன்று, அவளுக்குத் தெரிந்திருப்பதில் அலாதிப் பெருமை அவளுக்கு. ஒன்பதாவது வகுப்பில் இவள் தேர்ச்சி பெறாமையால், எனக்கும் இவளுக்கும் இருந்த நட்பில் இடைவெளி விழுந்து விட்டது.

பல ஆண்டுகள் கழித்து காரையில் இவளைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதாகச் சொன்னாள். கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அது தான் அவளுடனான கடைசிச் சந்திப்பு. தெப்பக் குளத்தின் நீர்க்குமிழி போலவே, அவளது வாழ்வும் புற்று நோய் காரணமாக அற்பாயுசிளில் முடிந்து போன விஷயம் தெரிய வந்த போது மனம் மிகவும் வேதனைக்குள்ளானது.

(தொடரும்)

ராஜா
15-04-2012, 08:03 AM
தெளிந்த நீரோட்டம் போன்ற வர்ணனை..

அழகாகச் சொல்கிறீர்கள்..

தொடருங்கள் கலை..!

கீதம்
15-04-2012, 08:55 AM
ஊர் பற்றிச் சொல்லத் துவங்கியதும் மடை திறந்த வெள்ளமெனப் பாயும் நினைவுகளும் அவற்றுக்கு ஈடு கொடுக்கும் எழுத்துக்களும் வெகு அற்புதம்.

பள்ளிக்கூட வீடும், மரங்களும் பற்றிய வர்ணனை அலாதி ரசனை. பாராட்டுகள் அக்கா.

பழகிய மனிதர்கள் பற்றிய மனம் கனக்கும் ஞபகக் குறிப்புகளோடு உங்களுடனேயே நாங்களும் பயணித்துவருகிறோம், திருநள்ளாற்றின் வீதிகளில்.

தொடரும் நினைவுகளுக்காய் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

கீதம்
15-04-2012, 09:18 AM
காலத்தின் கட்டாயத்தால் தத்தம் ஊர்களைப் பிரிந்து வாழ்ந்தாலும், அவற்றின் நினைவுகளின் பெரும்பாரம் சுமந்து தவிக்கும் பலரையும் இளைப்பாற்றும் வகையில் ஓர் அருமையானத் திரியைத் துவங்கியிருக்கும் சிவாஜி அண்ணாவுக்கு என் மனம் நிறைந்த நன்றியும் பாராட்டும்.

அனைவரது ஊர்களைப் பற்றியும் அனைவரையும் அறியச் செய்யும் அற்புத முயற்சி இது.

நாஞ்சில் த.க.ஜெய்
15-04-2012, 11:07 AM
அரியதோர் பதிவு நினைவலைகளின் தொகுப்பினை இந்த தொகுப்பு தொகுக்கின்ற வேளையில் நானும் சேர்ந்தே அவர்களின் நினைவலைகளிநூடே பயணிக்கிறேன் ....

M.Jagadeesan
15-04-2012, 05:36 PM
கலையரசியின் ஊர்நினைவுகள் , நம்மை அந்த ஊருக்கே அழைத்துச் செல்கின்றன.

சிவா.ஜி
15-04-2012, 08:10 PM
கலையரசி மேடத்தின் எழுத்தைப் பற்றி சொல்லவும் வேண்டுமா? அதுவும் மனதுக்கு நெருக்கமான தான் வளர்ந்த ஊரைப்பற்றி எழுதும்போது பாவாடைக் கட்டிய சிறுமியாகவே மாறித்தான்...வார்த்தைகளை வடித்திருப்பார்.

சொந்த ஊர் நினைவு என்பது நம்ம நாம் வாழ்ந்த அந்தக்காலத்துக்கே கொண்டுபோய்விடும் மந்திரவித்தை....அதே மந்திரவித்தையோடு மந்திரக்கோலை எழுதுகோலாய் பிடித்து எழுதியதைப்போன்ற எழுத்து. அனைத்தையும் நினைவுபடுத்தி, இடையில் நகைச்சுவையாய் தனக்குத்தோன்றிய ‘கோவிலுள்ள ஊரில் குடிருக்க வேண்டாம்’ என புதுமொழியை குறும்பாய் தெளிக்கும் எதார்த்தம்.

இடையில் பிரிந்த தோழி..நிரந்தரமாய் பிரிந்ததை வாசித்து மனம் வேதனையடைந்தது.

இன்னும் சொல்லுங்கள் மேடம்.

சிவா.ஜி
15-04-2012, 08:12 PM
வாழ்வின் காற்றுப்போக்கில், எங்கெங்கோ புலம்பெயர நேர்ந்தாலும், சொந்த ஊர் நினைவுகள் சுகமாய், சோலைப்பசுமையாய், என்றென்றும் நெஞ்சில் தித்திக்கும்..

அத்தகைய ஒரு ஆனந்த அசைபோடலுக்கு களம் அமைத்துத் தந்திருக்கும் எங்கள் சிவாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி..!

மிக மிக உண்மை ராஜா சார்....உலகின் எங்கோ ஒரு மூலையில் சந்திக்கும் யாரோ ஒருவர் நானும் உங்கள் ஊர்தான் எனச் சொல்லும்போது ஏற்படும் ஆனந்தத்துக்கும், அந்நியோந்யத்துக்கும் அளவில்லை.

உங்கள் பதிவையும் இத்திரி பெற்றதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி ராஜா சார்.

சிவா.ஜி
15-04-2012, 08:14 PM
ரொம்ப நன்றிம்மா கீதம் தங்கையே....இத்திரியில் உங்கள் நினைவலைகளையும் காணும்போது இன்னும் மகிழ்வேன்.

அனைவரின் எண்ணங்களையும் இங்கே ஆனந்தத் தொகுப்பாய்க் காண வேண்டுமென்ற பேராவல் எனக்கு.

jayanth
16-04-2012, 02:44 AM
இத்திரியைத் துவங்கி எழுதச் சொன்ன சிவாஜி சாருக்கு என் மனமார்ந்த நன்றி.

இரண்டு மூன்று பக்கங்களுக்குள் முடித்து விட நினைத்தால் அது நீண்டு கொண்டே செல்கிறது. அடுத்த பதிவில் முடிக்க முயல்கிறேன்.

இனி என் ஊருக்குச் செல்வோம்.

................................... தெப்பக் குளத்தின் நீர்க்குமிழி போலவே, அவளது வாழ்வும் புற்று நோய் காரணமாக அற்பாயுசிளில் முடிந்து போன விஷயம் தெரிய வந்த போது மனம் மிகவும் வேதனைக்குள்ளானது.

(தொடரும்)

அருமை...!!! தொடருங்கள் சகோதரி.

கலைவேந்தன்
16-04-2012, 03:13 PM
கலையரசியின் சொந்த ஊர் வர்ணனை என்னை அந்த ஊருக்கே அழைத்துச் சென்று மெய்யாக அனுபவிக்கும்படிச் செய்தது. மிக நல்ல ஊர். மிகத்துல்லிய வர்ணனை.. எழுத்துத் திறமையை தங்களிடம் கற்கவேண்டும் கலையரசி.. வியந்து நிற்கிறேன்.

தொடருங்கள்..!!

மதி
16-04-2012, 05:10 PM
அழகான வர்ணனையில் திருநள்ளாறு நம் கண்முன்னே விரிகிறது. மேலும் தொடருங்கள் அக்கா உங்கள் நினைவுகளை.!

கலையரசி
17-04-2012, 02:42 PM
’என் ஊர்’ தொடர்ச்சி.

தெப்பக் குளத்தைத் தாண்டி இன்னும் கொஞ்ச தூரம் போனால் ஒரு சினிமா கொட்டகை. அது தான் எங்களுக்கு அவ்வூரிலிருந்த ஒரே பொழுது போக்கு. நடுவில் தடுப்பு ஒன்றிருக்க, ஆண்கள் ஒருபுறமும், பெண்கள் மறுபுறமும் அமர்ந்து பார்ப்பார்கள். மணலை நன்கு குவித்து மேடாக்கி அதில் அமர்ந்து பார்ப்பது வழக்கம். படம் வெளியாகி ஐந்தாறு மாதங்கள் கழித்து நகரங்களில் எல்லாம் சுற்றி அரதப் பழசான பின்னரே இவ்வூருக்கு வரும்.

வார இதழ்களில் வரும் திரை விமர்சனங்களை ஏற்கெனவே படித்துப் பார்த்து, ’நல்ல படம், குடும்பத்தோடு பார்க்கலாம்,’ எனத் தீர்மானித்து வைத்திருப்பவற்றை மட்டுமே வீட்டில் பார்க்க அனுமதிப்பார்கள். அக்காலத்தில் ‘A’ சான்றிதழ் பெற்ற படங்களைக் குழந்தைகள் பார்க்க அனுமதி கிடையாது. இப்போது ஊடகங்கள் வாயிலாக எவ்விதத் தணிக்கையும் இன்றி, மட்டரகமான படங்கள், வீட்டின் நடுக்கூடத்தில் இறக்குமதி யாவதை என்னால் ஜீரணிக்க இயலவில்லை.

மாலை வேளையில் இக்கொட்டகையிலிருந்து ஒலிபெருக்கியில் திரையிசைப் பாடல்கள் ஒலித்த வண்ணமிருக்கும். போதுமான கூட்டம் வந்து கொட்டகை நிரம்பும் வரை, பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும். அது முடிந்து தில்லானா மோகனாம்பாள் படத்தின் பொன்னுசாமி குழுவினரின் நாதஸ்வர இசை ஒலித்தால், படம் துவங்கப் போகிறதென்று அர்த்தம். அன்றைய தினம் படம் பார்க்க எண்ணியிருப்பவர்கள், அந்த இன்னிசை முடிவதற்குள், அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடுவார்கள்.

கொட்டகையில் திரைப்படம் மாறியவுடன், மாடு பூட்டிய கட்டை வண்டியின் வெளிப்பக்கத்தில் புதுத் திரைப்படத்தின் பெரிய பெரிய போஸ்டர்களை ஒட்டியவண்ணம், தெருவில் போவோர் வருவோர்க்கெல்லாம் துண்டுச்சீட்டு கொடுத்துக் கொண்டு செல்வர். அதில். கதையின் சுருக்கத்தை வெளியிட்டு நம் ஆர்வத்தை அதிகப்படுத்தி, ’மீதியை வெள்ளித் திரையில் காண்க,’ என்று முடித்திருப்பர்.

அக்காலத்தில் சினிமா என்றால் மூன்று மணி நேரம் எல்லோரும் ஒன்றாய் அம்ர்ந்து அளவளாவுதல், உடன் கொண்டு சென்றிருக்கும் நொறுக்குத் தீனி, தின்பண்டங்களைக் காலி பண்ணுதல், படம் முடிந்து நடந்து வீட்டுக்கு வரும் வரை படத்தின் நிறைகுறைகளை அலசி ஆராய்தல் எனக் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாய்க் கூடிக் குதூகலிக்கும் ஒரு நிகழ்வாயிருந்தது. இன்றைக்கோ நமக்குப் பிடிக்கும் படங்களைப் படு அறுவை என்கின்றனர் நம் பிள்ளைகள்! அவர்களுக்குப் பிடித்தவற்றை நம்மால் ரசிக்க முடியாமல், தலைமுறை இடைவெளி தடுக்கிறது.

பள்ளியின் வலப்பக்கம் கொஞ்ச தூரம் நடந்து சென்றால், ’நளன்குளத்துக்குச் செல்லும் வழி,’ என்று ஒரு வளைவு வரும். கோவிலுக்குச் செல்லுமுன் இக்குளத்தில் குளித்துச் செல்ல வேண்டும் என்பது ஐதீகம். எனவே சனிப்பெயர்ச்சி திருவிழாவின் போது இவ்வூருக்கு வருகை தரும் பக்தர்கள் அனைவரும் தலையில் எண்ணெய், சீயக்காய் வைத்துக் கொண்டு இக்குளத்தில் மூழ்கி எழுவர். விழா முடிந்த பின் இக்குளத்தைப் பார்த்தால், எண்ணெய்க்கிணறு போல் காட்சியளிக்கும்!

உயர்நிலைப்பள்ளிக்கு இரண்டு கிலோமீட்டர் தள்ளியிருக்கும் தேனூருக்குத் தான் போக வேண்டும். அக்காலத்தில் ரிக்ஷாவோ, ஆட்டோவோ கிடையாது. திருநள்ளாற்றிலிருந்து தேனூருக்குப் பேருந்து வசதியும் கிடையாது. பையன்கள் சைக்கிளிலும் பெண்கள் நடந்தும் பள்ளிக்கு வருவார்கள். நான் தினந்தினம் இவ்வளவு தூரத்தை நடந்தே கடந்திருக்கிறேன் என்பதை இன்று நினைத்துப் பார்க்கும் போது வியப்பாக உள்ளது.

வேளாண்மையே கிராமத்து மக்களின் முக்கியத் தொழிலாக இருந்தது. நான் பள்ளி செல்லும் சாலையின் இருமருங்கிலும் கண்ணுக்கெட்டிய தூரம் பசுமையான வயல்வெளி கண்ணுக்கும் மனதுக்கும் விருந்தளிக்கும்.. இவ்வூருக்குப் பாசன வசதியளித்த அரசலாற்றுக்கிளை நதியின் பெயர் நூலாறு. ஒல்லியான ஆறுக்கு மிகவும் பொருத்தமான பெயர்!

என்னைப் பொறுத்தவரைப் பள்ளிக்கூட வளாகமே எனது சொர்க்கபுரியாகத் திகழ்ந்தது. ஏற்கெனவே மைதானத்தைப் பற்றியும், மரங்களைப் பற்றியும் எழுதியிருந்தேன் அல்லவா?

அம்மைதானத்தைத் தாண்டினால் வரிசையாக வகுப்பறைகள். ஒன்றில் நுழைந்தால் தொடர்வண்டி போல உட்புறம் இருந்த வழி மூலம் பள்ளியின் கடைசி அறை வரை சென்று விடலாம். பள்ளி விடுமுறை நாட்களில்’ஒளிஞ்சான் பிடிச்சி’ விளையாடுவதற்கு இத்தொடர் வகுப்பறைகள் மிகவும் வசதியாக இருந்தன.

கடைசி வகுப்பறை முடியும் இடத்தில் ஒரு சிறிய மைதானம். வாசல் பக்கத்திலிருக்கும் பெரிய மைதானத்தையும் இந்தச் சிறிய மைதானத்தையும் இணைப்பது நீண்ட ஒரு பாதை. ஓட்டப்பந்தயம் ஓடுவதற்கு இந்தப் பாதை மிகவும் உதவியாக இருந்தது.

புதைகாய் அல்லது ஏழாங்காய், குலை குலையா முந்திரிக்கா, ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரே பூ பூத்துதாம், கிச்சுக்கிச்சுத் தாம்பாளம், கல்லா மண்ணா, பல்லாங்குழி, தாயக்கட்டை, சில்லுக்கோடு, நொண்டியடித்தல், கண்ணாமூச்சி, ஒளிஞ்சான் பிடிச்சி என்று எத்தனையெத்தனை விளையாட்டுகள் விளையாடியிருக்கிறேன்? இவையனைத்துமே உடலுக்கு நல்ல பயிற்சி கொடுத்தவை என்பதோடு பெற்றோருக்கு எந்தச் செலவையும் வைக்காதவையல்லவா?

கிராமப்புறங்களில் கூட இன்று இவ்விளையாட்டுக்களைக் விளையாடுகிறார்களா என்று தெரியவில்லை. இப்போதெல்லாம் உடலைச் சிறிதும் அலட்டிக் கொள்ளாமல், கணிணிக்கு முன்னமர்ந்து கண்களைச் சிமிட்டாமல் மணிக்கணக்காக விதவிதமான கணிணி விளையாட்டுக்களை விளையாடுவதைத் தானே நம் குழந்தைகள் விரும்புகிறார்கள்?

பள்ளிக்கூட வீட்டில் ஜிம்மி என்ற நாய் எங்கள் விளையாட்டுத் தோழனாக இருந்தது. கல்வி இலாகா விதிகளின் படி நாய், பூனை எதையும் நாங்கள் வளர்க்கக் கூடாது. பள்ளி வளாகத்துக்குள்ளே எங்கள் வீடு அமைந்திருந்தமையால் இப்பிராணிகள் மாணவர் யாரையேனும் கடித்து விடக்கூடும் என்பதால் இந்தக் கட்டுப்பாடு.

ஜிம்மி ஒரு தெருநாய் தான். நாங்கள் ஒரு தடவை மீந்த சாதத்தை அதற்குப் போட்டதிலிருந்து, எவ்வளவு அடித்து விரட்டினாலும் போக மாட்டேன் என்று அடம் பிடித்துக் கொண்டு எங்கள் வீட்டிலேயே தங்கி விட்டது.

நாங்கள் ஓட்டப்பந்தயம் ஓடப்போகிறோம் என்றால் அதுவும் எங்கள் வரிசையில் வந்து நின்று விடும். ஒன்,டூ, த்ரீ சொல்லிவிட்டு நாங்கள் ஓடத் துவங்குமுன், ஜிம்மி நாலு கால் பாய்ச்சலில் பாய்ந்து சென்று இலக்கை எட்டிவிடும். எவ்வளவு முயன்றாலும் அதன் வேகத்துக்கு எங்களால் ஈடு கொடுக்க முடியவில்லை. எனவே ஓடுவது போல் பாசாங்கு செய்து விட்டு நாங்கள் நின்று விடுவோம். அது பாதி தூரம் பாய்ந்து ஓடி விட்டு நாங்கள் வரவில்லையென்று தெரிந்து கொண்டு ஏமாற்றத்துடன் திரும்பி எங்களிடமே ஓடி வரும். இப்படியாக அதை ஏமாற்றுவதில் எங்களுக்கு அலாதி மகிழ்ச்சி.

சில ஆண்டுகள் கழித்து ஜிம்மிக்கு நோய்த்தொற்று ஏற்பட்டதால் யாரைப் பார்த்தாலும் கடிக்க ஓடியது. பள்ளிக்குழந்தைகளைக் கடித்து விட்டால் விபரீதமாகிவிடும் என்ற எண்ணத்தில் முனிசிபல் அலுவலரிடம் ஜிம்மியைப் பிடித்துக் கொடுக்க ஏற்பாடு செய்தார் தந்தை.

செய்தி கேள்விப்பட்ட போது ஜிம்மியை விடுவிக்கச் சொல்லி அப்பாவிடம் சண்டை போட்டோம்.அழுது பார்த்தோம். பட்டினி கிடந்தோம். அவர் எதற்கும் மசியவில்லை. கடைசி வரை உறுதியாக இருந்து பிடித்துக் கொடுத்து விட்டார்.

நாய்வண்டிக் கூண்டுக்குள் ஜிம்மியைச் சிறை வைத்த பிறகு ”எப்படியாவது என்னைக் காப்பாற்று” என்று கெஞ்சுவது போல், அது கடைசியாகப் பார்த்த பார்வை, நீண்ட நாட்கள் என்னைச் சித்ரவதை செய்து கொண்டிருந்தது.

ஆர்வமுடன் ஓட்டப்பந்தய விளையாட்டில் பங்கெடுத்துக் கொண்டு தங்கப்பதக்கம் பெறும் ஒலிம்பிக் வீரனைப் போல் ஒரு கலக்குக் கலக்கிக் கொண்டிருந்த ஜிம்மி போன பிறகு, அந்த விளையாட்டில் சுத்தமாக ஆர்வம் குறைந்து போனது.


என் தந்தையின் பள்ளியில் கூட்டுபவராக வேலை செய்தவர் ஆண்டாளு. எங்கள் குடும்பத்தில் ஒருவராக ஆகி விட்ட அவரை ஆத்தா என்று அன்போடு அழைப்போம்.

நல்ல உயரம், மாநிறத்தை விட சற்று கூடுதலான நிறம், ஒடிசலான உடல் வாகு, வெற்றிலை போட்டுப் போட்டுக் காவியேறிய பற்கள், பின்பக்கம் அள்ளிச் செருகிய தலைமுடி இது தான் ஆண்டாளு ஆத்தா

1941 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போரின் போது ரங்கூனில் ஜப்பான் குண்டு மழை பொழிய, அதிலிருந்து தப்பி ஆயிரக் கணக்கான மைல்கள் நடந்தே இந்தியாவுக்கு வந்து சேர்ந்தவர்களில் அவரும் ஒருவர்

ஆடிப்பெருக்கு என்றழைக்கப்படும் ஆடி மாதம் 18 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டு ஆற்றில் புதுப்புனல் பொங்கி வரும். அன்று ஆத்தாவுடன் படைப்பதற்காக அம்மா கொடுத்த பொருட்களை எடுத்துக் கொண்டு நூலாற்றுக்குச் செல்வது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சி தந்த விஷயம்.

ஆற்றின் ஓரத்தில் கால்களைத் தண்ணீர்ல் நனைத்துக் கொண்டு நாங்கள் அமர்ந்திருக்க, ஆத்தா மட்டும் ஆற்றில் இறங்கிக் குளிப்பார். குளித்து விட்டு எடுத்துச் சென்ற பொருட்களை வைத்துப் படைப்பார். கற்பூரத்தை ஏற்றி படைத்து விட்டுத் தீபத்தை வெற்றிலையிலோ வாழையிலையிலோ வைத்து ஆற்றில் விடுவது அற்புதமான காட்சி!

என் பள்ளிப்படிப்பு முடிந்து, கல்லூரியில் சேர்வதற்காக திரும்பவும் காரைக்காலுக்கே குடி பெயர்ந்து வந்து விட்டோம். சில ஆண்டுகள் கழித்து ஆத்தா இறந்த செய்தி வந்து சாவுக்குப் போய் வந்தோம்.

அதற்குப் பிறகு திருநள்ளாற்றுக்குப் போகும் வாய்ப்பு ஒருமுறை கிட்டியது. எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து இந்த ஊருக்கு வந்து எங்களுடன் பழகி என் நினைவில் தங்கிவிட்ட ஆண்டாளு ஆத்தாவின் குடிசையிருந்த இடத்தைப் போய்ப் பார்த்தேன். கீற்று முழுவதுமாக கொட்டிவிட, மக்கிப் போய் ஒன்றிரண்டாக உடைந்த மூங்கில்கள் சில, அவ்விடத்தில் கிடந்தன..

சிலர் வாழ்க்கைப் பயணத்தில் கொஞ்ச தூரமே நம்முடன் பயணித்தாலும், அவர்களது நினைவுகள், அடி மனதில் அழியாத கோலங்களாக தங்கி, நம் நினைவுக் குறிப்புக்களில் இடம் பெற்று விடுகின்றன. அந்தச் சிலரில் ஆண்டாளு ஆத்தாவும் ஒருவர்.

தற்போது இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் பெருமளவில் திருநள்ளாறு கோவிலுக்கு வருகை தருவதால் கோவில் நகரம் என்ற சிறப்பை இவ்வூர்ப் பெற்றுள்ளது. எனவே அரசு இவ்வூரை மேம்படுத்த சில கோடி ரூபாயை ஒதுக்கியிருப்பதாய்க் கேள்வி. இத்தொகை இடைத்தரகர்களின் கஜானாவை நிரப்பாமல், உண்மையாகவே என் ஊரை மேம்படுத்தினால் மகிழ்வேன்.

இதுவரை எழுபதுகளில் நான் பார்த்த, நான் வளர்ந்த என் ஊரைப் பற்றியும், பழகிய நபர்களைப் பற்றியும் பசுமையான நினைவலைகளை உங்களோடு பகிர்ந்து கொண்டேன்.

என்னுடனே பயணித்து என் ஊரைச் சுற்றிப் பார்த்த உங்களனைவருக்கும் நன்றி கூறி இத்தொடரை முடிக்கின்றேன்..

கலையரசி
17-04-2012, 02:54 PM
தெளிந்த நீரோட்டம் போன்ற வர்ணனை..

அழகாகச் சொல்கிறீர்கள்..

தொடருங்கள் கலை..!

ஊக்கந்தரும் உங்களது பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி ராஜா!

கலையரசி
17-04-2012, 02:55 PM
ஊர் பற்றிச் சொல்லத் துவங்கியதும் மடை திறந்த வெள்ளமெனப் பாயும் நினைவுகளும் அவற்றுக்கு ஈடு கொடுக்கும் எழுத்துக்களும் வெகு அற்புதம்.

பள்ளிக்கூட வீடும், மரங்களும் பற்றிய வர்ணனை அலாதி ரசனை. பாராட்டுகள் அக்கா.

பழகிய மனிதர்கள் பற்றிய மனம் கனக்கும் ஞபகக் குறிப்புகளோடு உங்களுடனேயே நாங்களும் பயணித்துவருகிறோம், திருநள்ளாற்றின் வீதிகளில்.

தொடரும் நினைவுகளுக்காய் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

பாராட்டுக்களுக்கும் என்னுடனே பயணிப்பதற்கும் மிக்க நன்றி கீதம்!

கலையரசி
17-04-2012, 02:57 PM
அரியதோர் பதிவு நினைவலைகளின் தொகுப்பினை இந்த தொகுப்பு தொகுக்கின்ற வேளையில் நானும் சேர்ந்தே அவர்களின் நினைவலைகளிநூடே பயணிக்கிறேன் ....

என் நினைவலைகளுடன் பயணித்தமைக்கு மிக்க நன்றி ஜெய்!

கலையரசி
17-04-2012, 02:58 PM
கலையரசியின் ஊர்நினைவுகள் , நம்மை அந்த ஊருக்கே அழைத்துச் செல்கின்றன.

உங்களது பாராட்டு என்னை மேலும் எழுதத் தூண்டுகின்றது.
மிக்க நன்றி ஐயா!

கலைவேந்தன்
17-04-2012, 03:05 PM
அருமை கலையரசி. மிக்க ரசனையுடன் சிலாகித்து எழுதியுள்ளீர்கள். நீங்கள் சொன்ன டூரிங் டாக்கீஸ் அனுபவங்கள் முழுக்க முழுக்க அதே போன்றவைதான் எனக்கும்.

அதே எழுபதுகளில் சிறுவனாக ஓடிக்களித்த பள்ளி அனுபவங்களை நினைவூட்டினீர்கள்.

உங்களுக்கு ஜிம்மி போல் எனக்கு டாம்மி. அதுவும் தெருநாய் தான். வயதாகி மரித்துப் போனது. இறுதிவரை எங்கள் கூடவே இருந்த்து.
திருநள்ளாறு வர்ணனை கிட்டத்தட்ட காவிரிக்கரையாகிய எங்கள் திருமங்கலக்குடி சூரியனார் கோயில் போன்றே இருந்ததால் எங்கள் ஊரின் வர்ணனை போன்றே அனுபவித்தேன்.

ஆண்டாளு அம்மாளின் பாசமும் பரிவும் மனதை அசைத்தது.

உங்கள் எளிய நல்ல உள்ளத்திற்கு எந்த குறையும் இன்றி எல்லா வளங்களும் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

பாராட்டுகளும் நன்றிகளும் கலையரசி..!!

பி கு : நீங்கள் கூறியனவற்றில் விடுபட்டவை

1, எங்கள் ஊர் ரிகார்ட் டான்ஸ் ( மூன்று நான்கு நாட்கள் நடைபெறும் )
2. தோல் பொம்மை நாடகங்கள். ( ஒரு வாரம் தொடர்ந்து நடக்கும் )
3. நாடகங்கள் ( நல்லதங்காள் முதல் ராமாயணம் போன்றவை )

கலையரசி
17-04-2012, 03:08 PM
கலையரசி மேடத்தின் எழுத்தைப் பற்றி சொல்லவும் வேண்டுமா? அதுவும் மனதுக்கு நெருக்கமான தான் வளர்ந்த ஊரைப்பற்றி எழுதும்போது பாவாடைக் கட்டிய சிறுமியாகவே மாறித்தான்...வார்த்தைகளை வடித்திருப்பார்.

சொந்த ஊர் நினைவு என்பது நம்ம நாம் வாழ்ந்த அந்தக்காலத்துக்கே கொண்டுபோய்விடும் மந்திரவித்தை....அதே மந்திரவித்தையோடு மந்திரக்கோலை எழுதுகோலாய் பிடித்து எழுதியதைப்போன்ற எழுத்து. அனைத்தையும் நினைவுபடுத்தி, இடையில் நகைச்சுவையாய் தனக்குத்தோன்றிய ‘கோவிலுள்ள ஊரில் குடிருக்க வேண்டாம்’ என புதுமொழியை குறும்பாய் தெளிக்கும் எதார்த்தம்.

இடையில் பிரிந்த தோழி..நிரந்தரமாய் பிரிந்ததை வாசித்து மனம் வேதனையடைந்தது.

இன்னும் சொல்லுங்கள் மேடம்.

இந்தப் பதிவு துவக்கி, எழுதச் சொன்ன உங்களுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். தங்களது எழுத்தின் ரசிகை நான். உங்கள் வாயால் பாராட்டுக்களைக் கேட்கும் போது, மனம் ஆனந்தக் கூத்தாடுகிறது.
மிக்க நன்றி சிவாஜி சார்!

கலையரசி
17-04-2012, 03:19 PM
கலையரசியின் சொந்த ஊர் வர்ணனை என்னை அந்த ஊருக்கே அழைத்துச் சென்று மெய்யாக அனுபவிக்கும்படிச் செய்தது. மிக நல்ல ஊர். மிகத்துல்லிய வர்ணனை.. எழுத்துத் திறமையை தங்களிடம் கற்கவேண்டும் கலையரசி.. வியந்து நிற்கிறேன்.

தொடருங்கள்..!!


தங்களது மனந்திறந்த பாராட்டுக்களுக்கு உளமார்ந்த நன்றி கலை சார்!

கலையரசி
17-04-2012, 03:22 PM
அழகான வர்ணனையில் திருநள்ளாறு நம் கண்முன்னே விரிகிறது. மேலும் தொடருங்கள் அக்கா உங்கள் நினைவுகளை.!


பாராட்டுக்கு மிக்க நன்றி மதி!

கலையரசி
17-04-2012, 03:27 PM
அருமை கலையரசி. மிக்க ரசனையுடன் சிலாகித்து எழுதியுள்ளீர்கள். நீங்கள் சொன்ன டூரிங் டாக்கீஸ் அனுபவங்கள் முழுக்க முழுக்க அதே போன்றவைதான் எனக்கும்.

அதே எழுபதுகளில் சிறுவனாக ஓடிக்களித்த பள்ளி அனுபவங்களை நினைவூட்டினீர்கள்.

உங்களுக்கு ஜிம்மி போல் எனக்கு டாம்மி. அதுவும் தெருநாய் தான். வயதாகி மரித்துப் போனது. இறுதிவரை எங்கள் கூடவே இருந்த்து.
திருநள்ளாறு வர்ணனை கிட்டத்தட்ட காவிரிக்கரையாகிய எங்கள் திருமங்கலக்குடி சூரியனார் கோயில் போன்றே இருந்ததால் எங்கள் ஊரின் வர்ணனை போன்றே அனுபவித்தேன்.

ஆண்டாளு அம்மாளின் பாசமும் பரிவும் மனதை அசைத்தது.

உங்கள் எளிய நல்ல உள்ளத்திற்கு எந்த குறையும் இன்றி எல்லா வளங்களும் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

பாராட்டுகளும் நன்றிகளும் கலையரசி..!!

பி கு : நீங்கள் கூறியனவற்றில் விடுபட்டவை

1, எங்கள் ஊர் ரிகார்ட் டான்ஸ் ( மூன்று நான்கு நாட்கள் நடைபெறும் )
2. தோல் பொம்மை நாடகங்கள். ( ஒரு வாரம் தொடர்ந்து நடக்கும் )
3. நாடகங்கள் ( நல்லதங்காள் முதல் ராமாயணம் போன்றவை )

எழுத எழுத நீண்டு கொண்டே சென்ற நினைவலைகளை மிகவும் சிரமப்பட்டு சுருக்க வேண்டியதாயிற்று. என் அனுபவங்கள் போன்றதே உங்களுடையதும் என்றறியும் போது வியப்பாயிருக்கிறது.

தோல் பொம்மை, ந்லலதங்காள் நாடகம் இன்னும் என் எழுத்தில் விடுபட்டவற்றை நீங்கள் தொகுத்து எழுதுங்கள். படிக்க மிகவும் ஆர்வமாயிருக்கிறேன். சிவாஜி சார் எல்லோரையும் தானே அவரவர் அனுபவங்களை எழுத அழைத்திருக்கிறார்? எனவே கண்டிப்பாக எழுதுங்கள்.

உங்களது பாராட்டுக்கள் என்னை மென்மேலும் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டுகின்றன. மிக மிக நன்றி கலை சார்!

கலைவேந்தன்
17-04-2012, 03:40 PM
என் மன உணர்வுகளைக் கட்டுப்படுத்தி நீண்ட கட்டுரை எழுத இயலாதவாறு எனது இரத்த அழுத்தம் இருப்பதால் இவ்வளவு அழகாக என்னால் எழுத முடியுமா என்று தெரியவில்லை. இருப்பினும் முயற்சிக்கிறேன் கலையரசி.

சார் எல்லாம் வேண்டாம். வெறும் கலை போதும். ( ஸ்கூல்ல பசங்க சார் சார்னு அழைச்சு ரொம்ப போரடிச்சுப்போச்சுங்க மேடம்.. அதான்.. :) )
மீண்டும் நன்றிங்க..!!

கலையரசி
18-04-2012, 01:50 PM
என் மன உணர்வுகளைக் கட்டுப்படுத்தி நீண்ட கட்டுரை எழுத இயலாதவாறு எனது இரத்த அழுத்தம் இருப்பதால் இவ்வளவு அழகாக என்னால் எழுத முடியுமா என்று தெரியவில்லை. இருப்பினும் முயற்சிக்கிறேன் கலையரசி.

சார் எல்லாம் வேண்டாம். வெறும் கலை போதும். ( ஸ்கூல்ல பசங்க சார் சார்னு அழைச்சு ரொம்ப போரடிச்சுப்போச்சுங்க மேடம்.. அதான்.. :) )
மீண்டும் நன்றிங்க..!!

நாம் மனந்திறந்து எழுதத் துவங்கினால், வார்த்தைகள் கோர்வையாக வந்து விழும். உங்கள் அனுபவங்களைத் தெரிந்து கொள்ள ஆவலாயிருக்கிறேன். மிக்க நன்றி கலை!

சிவா.ஜி
18-04-2012, 07:16 PM
அழகான தொடர்ச்சி மேடம். அந்த நாளைய நினைவுகள் என்பது நோட்டுப்புத்தகத்தில் பாடம் செய்துவைத்த மயிலிறகைப்போன்றது....பக்கத்தைப் பிரித்து இறகைக் காணும்போது நாமும் அந்த இறகாய் மாறி சந்தோஷ வானில் பறவையாய் பறப்போம்...அதுவும் சொந்த ஊரின் நினைவென்றால்....கேட்கவே வேண்டாம்.

உங்களுக்கு ஜிம்மியைப்போல எங்களுக்கும் ஒரு மணி இருந்தான். அவனும் தெருநாய்தான்...ஆனால் சம்பளம் வாங்காத காவல்காரனாய் எங்களுக்காக இருந்தான்.

அருமையான பதிவை அளித்து இந்த திரிக்கு சிறப்பு சேர்த்த உங்களுக்கு அன்பான நன்றிகள் மேடம்.

சிவா.ஜி
18-04-2012, 07:23 PM
பத்துப்பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் ஆந்திரா...இருபது இருபத்தைந்து கிலோமீட்டர்கள் தொலைவில் கர்நாடகா...ஊரைச் சுற்றிலும் அந்தக்காலத்து புண்ணியவான்கள் வெட்டிவைத்த ஏரிகள்...ஊருக்கே அடையாளமாய் உயர்ந்து நிற்கும் சையது-பாஷா மலை..... 30 சதவீதம் தெலுங்கு பேசும் மக்கள் 10 சதவீதம் கன்னடம் பேசும் மக்கள், 10 சதவீதம் உருது பேசும் இஸ்லாமிய மக்கள்...பாக்கியுள்ள இதெல்லாவற்றையும் கலந்து பேசும் தமிழ் மக்கள்....இதுதான் நான் பிறந்து சிலகாலம் வளர்ந்த மாங்கனிநகரம் கிருஷ்ணகிரி.(ஏன் கொஞ்சகாலம் என்பதை பிறகு சொல்கிறேன்)

தன்னில் விளைந்ததை சேலம் சந்தைக்கு அனுப்பி, அதற்கு சேலத்து மாம்பழம் என்ற நிரந்தரப் புகழைக் கொடுத்த தியாகி எங்கள் ஊர். இரயில் வசதியில்லாததால்...சாலைகளையே நம்பவேண்டியக் கட்டாயம். ஊருக்கு மத்தியில் ஒரு ரவுண்டானா...அதிலிருந்து புறப்படும் சாலைகளின் பெயர்களாலேயே அந்த தெருக்கள் அழைக்கப்பட்டன. சேலம் ரோடு, பெங்களூர் ரோடு, மெட்ராஸ்ரோடு, குப்பம் ரோடு, திருவண்ணாமலை ரோடு...என்பவை பிரதான தெருக்கள்.

இதில் திருவண்ணாமலை ரோடு என்ற தெருவில் இருந்த ஒரு ஓட்டுவீட்டில்தான் நான் பிறந்தேன்.(ஏன் பிறந்தேன்....இன்னும் விளங்கலையே) அந்த வீட்டுக்குப் பெயர் சித்தம்மா வீடு. கன்னடக்காரர்கள்.அதே தெருவில் குடியிருந்த நாகராஜன், ஆனந்தன், மதன், மோதி...என்ற நண்பர்கள். இதில் மதன் மட்டுமே வக்கீல்வீட்டுப் பிள்ளை மற்ற மூவரும் நாவிதர் குடும்பம். அதே தெருவின் முனையில் ஒரு தேர்முட்டி இருக்கும்(இப்ப இல்லை) அந்தத் தேர் ஓடி நான் இதுவரைக்கும் பார்த்ததில்லை....ஆனா அந்த தேர்நிலையிலிருந்து சற்று தள்ளி இருக்கும் ராசிவீதியின் முச்சந்தியில் வருடா வருடம் மாடுகள் ஓடும். வேடிக்கப் பார்த்த என்னையும் சில சமயம் அந்த மாடுகளைக் கட்டியிருந்த நீண்ட கயிறுகள் பதம் பார்த்தது...இப்போதும் கை எரிச்சலைக் கொடுக்கிறது. (வேடிக்கைப் பாக்கப் போணமா பாத்தமான்னு இல்லாம பத்து வயசுல பெரிய வீரணாட்டம் கயிறைப் பிடிச்சா...)கால்ல பட்டக் காகிதத்தை உதறித் தள்ளிவிட்டு ஓடுவதைப்போல என்னையும் என் நண்பர்களையும் அந்த மாடுகள் உதறிவிட்டு ஓடிவிடும்.

அப்போதெல்லாம் வீக்கமில்லாத கிருஷ்ணகிரி எங்கள் கைக்குள் அடக்கமாய்...சரியாகச் சொன்னால் காலுக்குள் அடக்கமாய் இருந்தது. இப்போது புறகர் பெருக்கத்தால் வீக்கம் அதிகமாகி.....விசுப் பட கமலா காமேஷ்..இப்போது இருப்பதைப்போல ஆகிவிட்டது. எங்கள் கால்கள் படாத இடமே எங்களூரில் இல்லை....இதனால்...அடி விழாத இடமே எங்கள் உடம்பில் இல்லை. காலையில் பள்ளிக்குச் செல்லும்போதே மாலையை மட்டுமே நினைக்கும் மனது. 5 மணிக்கு பள்ளிவிட்டதும்...ஓட்டஓட்டமாய் வீட்டுக்கு வந்து....காக்கிப் பையையோ...மஞ்சள் பையையோ....அம்மா அலற அலற வீட்டுக்குள் கடாசிவிட்டு....திரும்ப ஓடுவோம். என்ன முக்கியமான வேலை என்கிறீர்களா...நகருக்கு வெளியே நகராட்சிக் குப்பைக் கொட்டுமிடம் ஒன்று இருந்தது. காலையிலிருந்து சேகரித்தக் குப்பைகளை...மூன்று மணி வாக்கில்தான் அங்கே கொண்டு வந்து கொட்டுவார்கள்....அதைக் கிளறத்தான்...இந்த அரக்கப் பரக்க ஓட்டம்.

பல நூறு...ஆயிரம் உடைந்த உடையாத பொருள்களிலிருந்து...அவரவர்களுக்குத் தேவையான பொருட்களை சேகரித்துக்கொண்டு(பொறுக்கிக்கொண்டு சரியா இருக்குமோ...) எங்கள் தெருவில் முட்செடிகள் வளர்ந்து நிற்கும் ஒரு நிழலான மைதானப் பரப்புக்கு வந்து...தர ஆய்வு செய்து...தேவையானவை...தேவையற்றவை எனப் பிரிக்கும் வேலை நடக்கும். முடிவில் யாரிடம்...மற்ற அனைவருக்கும் கிடைத்ததிலேயே நல்ல பொருள் இருக்கிறதோ..அவனுக்கு தாக்குதல் நடக்கும்...இதில்...மற்றவர்களிடம் உள்ள நல்ல பொருளும்...உடைந்துவிடும் அபாயம் இருந்தாலும்...நம்மிடமில்லாதது அவனிடமும் இருக்கக்கூடாது என்ற நல்லெண்ணம் அனைவரிடமும் இருந்ததால்...அதை பெரிதாக எடுத்துக்கொண்டதில்லை.

பெங்களூர் சாலை நகரத்தை பின்னால் நிறுத்திவிட்டு முன்னோக்கிப் போகத்தொடங்கும் எல்லையில் இருந்த(இப்போதுமிருக்கும்) பகுதியின் பெயர் லண்டன்பேட்டை. அங்கிருந்துதான் சையது-பாஷா மலைமேல் ஏற முடியும். இதுவும் எங்கள் முற்றுகைக்கு அடிக்கடி ஆட்பட்ட இடம். மலைமேல் ஏறி சில்லென்ற குகைக்குள் சற்று பயத்துடனே நுழைந்து...அதற்குமேல் ஆளைப் பார்க்கமுடியாதக் கருமை சூழ்ந்துகொண்டதும்...அலறியடித்து ஓடி வருவது...பின் அங்கிருந்து துக்குளியூண்டாய் தெரியும் வீடுகளில் எங்கள் வீட்டை அடையாளம் காண முயற்சித்துக் குத்துமதிப்பாய்க் கண்டுபிடித்த சந்தோஷத்தில் மீண்டும் ஹோவென கத்திக்கொண்டே மலை இறங்குவது...என சாகசப் பயணமாய் இருக்கும்

நகரத்திலிருந்து மூன்றே கிலோமீட்டரில் எங்கள் கிராமம் அவதானப்பட்டி. அம்மாவைப் பெற்ற தாத்தா பாட்டி, மாமா, சித்தி என அனைவரும் அங்கேதான் இருந்தார்கள். அப்போது அம்மாவின் அப்பாவைப்பெற்ற தாத்தாவும் உயிருடன் இருந்தார். அங்கு போகும்போதெல்லாம் அந்தக் கொள்ளுத்தாத்தாவின் மடியில் உட்கார்ந்துகொண்டு...பழங்கதை கேட்டபடியே அந்த உழைப்பாளியின் தோள்மஞ்சத்தில் துயில் கொள்ளும் மன்னனாய் கழிந்த காலங்கள்...அங்கிருக்கும்போது சித்தி கரைத்து தரும் மோர் கலந்த கம்பங்கூழும், சாமைச் சோறும்...பச்சைக் கேழ்வரகு கதிர்களை கையில் வைத்துத் தேய்த்து...அந்த பசும் மஞ்சளும், பச்சையும், வெள்ளையும் கலந்த தானியங்களின் பால் ருசியும்.....பிட்ஸா பர்கரிலோ....இல்லை தம் பிரியாணியிலோ இல்லவே இல்லை.

அப்போதெல்லாம்...காட்டு யானைகளின் வரவு அந்தக் கிராமத்தில் அடிக்கடி நிகழும் நிகழ்வுகள்.(இப்போது அது மீண்டும் தொடங்கியிருக்கிறது...ஆனால்....புற்களால் வேயப்பட்டக் கூரைகள்தான் அந்நாளில் அவற்றின் இலக்கு...இந்நாளில்...அவை சாப்பிட அங்கு ஒன்றுமேயில்லை...விவசாய நிலமெல்லாம் கோழிப்பண்ணைகளாகவும், மலர்த்தோட்டங்களாகவும் மாறிவிட்டன) அதற்காகவே அங்கிருந்த கூரை வீடுகளின்(காரை வீடுகளே கிடையாது) சுவரில் ஆங்காங்கே துளையிட்டிருப்பார்கள். யானைகள் ஊருக்குள் நுழையும்போது வீட்டுக்கு உள்ளிருந்தே தீப்பந்தங்களை அந்த துளைகளின் வழியே வெளியே நீட்டி அவற்றை அச்சுறுத்துவார்கள். இது இல்லாமல் மலைப்பக்கம் ஒதுங்குபவர்களின் மேல் அடிக்கடி கரடிகளின் தாக்குதல்களும் நடக்கும். அதுவும் பெண்களைக் கண்டுவிட்டால்..மனிதனைப்போலவே இரண்டு கால்களால் வேகமாக ஓடிவரும். (நிறைய சினிமா பாக்குமோ)

வீரப்பன் பின்னாளில் ஆதிக்கம் செலுத்திய வனப்பிரதேசம்தான் இது. இங்கிருந்து தொடங்கி சத்தியமங்கலம் வரை அவரது ஏரியா பரவியிருந்தது. அங்கிருந்த மராட்டியர் ஒருவரின் மாந்தோப்பு எங்களின் தீம்பார்க். ஏறுவது, சறுக்குவது, ஊஞ்சலாடுவது...ஒளிந்துவிளையாடுவது என காய்ப்பில்லாக் காலங்களில் எங்கள் ஆரோக்கியம் வளர்த்த அதே தோப்பு...காய்ப்பு சமயத்தில்...காவல்காரரின் மூலம் வைக்கும் ஆப்பு. மாங்காய் திருடி மாட்டிக்கொண்டு...மாமரத்துக்கு அருகில் குத்துக்காலிட்டு உட்காரவைக்கப்பட்ட குற்றசரித்திரமும் உண்டு. அந்த நிலையில் தொடர்ந்து உட்கார்ந்திருப்பதே பெரும்பாடு....அதிலும் அந்த மாமரத்தின் சிவப்பு எறும்புகள் சூழ்ந்துகொண்டால்....அந்த சமயத்திலெல்லாம் காவல்காரர் துரத்தினாலும்...என்கவுண்ட்டரில் தப்பித்து ஓடும் தாதாவைப்போல ஓடிச்சென்று தாத்தாவிடம் அடைக்கலமாவோம்.

சுரைபுடுக்கை எனச் சொல்லும் காய்ந்த சுரைக்காயை கயிறில் கட்டி...அந்தக் கயிறை என் இடுப்பில் கட்டி...எங்கள் கிணற்றில் எனக்கு நீச்சல் சொல்லிக்கொடுத்த மூன்றாவது மாமா(என் மாமனார்)...அதே நேரம்...மேலே கவலையில் மாட்டைக் கட்டி தண்ணீர் பாய்ச்சிக்கொண்டே..’ப்பா....ப்பா...’என்று மாட்டுடன் பேசிக்கொண்டிருந்த நான்காவது மாமா....அனைவரும் களைத்து...கிணற்று மேட்டுக்கு வந்ததும் தயாராய் குளிர்ந்த மோரை அங்கே கொண்டு வந்த சித்தி.....நினைக்க நினைக்க...மகிழ்கிறது மனசு.


இன்னும் கொஞ்சம் சொல்கிறேன்.....

கீதம்
19-04-2012, 01:59 AM
நெகிழ்ச்சியும், மகிழ்ச்சியும் நிறைந்த அழகான ஊர் நினைவுகள். உங்களுடைய பிரத்தியேக எழுத்து நடை, இன்னும் ரசிக்கவைக்கிறது. பாராட்டுகள் அண்ணா.

சின்ன வயதின் சேட்டைகளுடன் குறும்பாகக் கழித்த நாட்களின் நினைவுகளை மிகவும் ரசித்தேன். நாகரிக வளர்ச்சியால் ஊருக்கு உண்டாகியிருக்கும் மாற்றங்களை மனம் ஏற்காது தவிக்கும் தவிப்பையும் உணரமுடிகிறது.

தொடரும் பகுதிகளுக்காய் காத்திருக்கிறேன் அண்ணா.

கலைவேந்தன்
19-04-2012, 05:10 AM
கிருஷ்ணகிரிக்கே அழைத்துச்சென்றது உங்கள் ஊர்நினைவுகள். பொதுவில் பார்த்தால் அநேகருடைய அக்கால இளமை நினைவுகள் ஒன்றே போல் இருப்பதை உணரமுடிகிறது. தொடருங்கள் சிவா..!!

தாமரை
19-04-2012, 07:54 AM
"என் ஊர்"

இப்படிப் பெருமையாகச் சொல்லிக் கொள்வது எந்த ஊரை?

முதலிரண்டு ஆண்டுகள் வேம்படிதாளம்
அடுத்து 4-1/2 ஆண்டுகள் இளம்பிள்ளை
அடுத்து ஒரு வருடம் வேப்பம்பட்டி புதூர்
அடுத்து நாலுமாதம் காடையாம்பட்டி.

இப்படி ஊர் ஊர் ஊராகச் சுத்தி சேலம் வந்து சேர்ந்தபொழுது 8 வயசு ஆகிவிட்டது.

ஒவ்வொரு ஊருக்கும் பல நினைவுகள் உண்டு.

சேலத்திலேயே 4 வீடுகள் மாறியாச்சி. அதாவது நிலைத்ததா? 9 வருடங்கள் மட்டுமே சேலம். அதன் பின் திருச்சி, கல்லூரி வாழ்க்கை, மறுபடி சேலம், பெங்களுர், மும்பை, டெல்லி, அமெரிக்கா என்று சுற்றி கடைசியாக 2002 ல் பெங்களூர் வந்தாயிற்று. இங்கும் இரண்டு வீடுகள். முதல் வீடு 5 வருடம் இரண்டாம் வீடு 5 வது வருடம்.

சொல்லப்போனால் பெங்களூர் இன்னும் ஒரு வருடத்தில் நான் அதிகம் வசித்த ஊர் என்று பெயர் பெறப் போகிறது.

ஒவ்வொரு ஊருக்கும் சில நினைவுகள் நிரந்தரமாகப் பதிந்திருக்கின்றன.

ஒரு விஷயம் சிவா.ஜி. மலைமேல் இருந்து வீட்டைப் பார்க்கும் ஆர்வம் இன்னும் நமக்கு உண்டு. என்ன வித்தியாசம் என்றால் கூகுள் எர்த் மூலம் இப்போது தேடுகிறோம்.. :lachen001::lachen001::lachen001:

ஊரைப் பற்றி எழுதணுமானால் முதல் நான்கு ஊரைப்பற்றியும் எழுதணும்.

முதல் ஊர் - வேம்படிதாளம்.

என்ன நினைவு இருக்கு?

1. ஊரெல்லையில் இருக்கும் சேலம் - கோவை இருப்புப்பாதையில் ரெயிலின் கூவல் சத்தம். கூரை வீட்டில் தறி ஓடும் சத்தத்தையும் மிஞ்சிக் கேட்க, நடு வீதிக்கு ஓடி வந்து இரயிலுக்குக் காட்டும் டாட்டா!!!

2. அக்காமார்களுடனும் அவர்களின் தோழிகளுடனும் நொண்டியாட்டத்தில் ஒப்புக்குச் சப்பாணியாய் நான் மட்டும் நொண்டாமல் ஓடி ஓடி ஆடிய ஆட்டம்.

4. சின்ன பாட்டி வந்தால் கண்ணை மூடிக்கொள்வதும், சொந்தப்பாட்டி வந்தா சிரிக்கரதுமா செஞ்ச குறும்பு.

3. அந்த ஊரை விட்டு இளம்பிள்ளைக்கு மாட்டு வண்டியில் கிளம்பி இரவில் வந்த பொழுது கூடவே வந்த நிலா!

இதைத் தவிர வேறு நினைவுகள் இல்லை,

அகத்தியர் படத்திற்கு என்னைத் தூக்கிக் கொண்டு டூரிங் தியேட்டருக்குப் போனதா அக்கா சொல்லி இருக்காங்க. அக்காமார்களின் கையில் வளர்ந்ததால் வேம்படிதாளத்தில் அம்மா முக நினைவு குறைவு, அப்பா முகம் பார்த்த நினைவே இல்லை. சின்ன அண்ணன் கூடவே இருந்ததால் நினைவுண்டு. பெரிய அண்ணன் எப்பவும் தறியிலேயே வேலை செய்ததால் விளையாட வாய்ப்பு குறைச்சல்.

கீதம்
19-04-2012, 10:37 AM
ஆரம்பமாகிவிட்டதா அடுத்த நினைவுகள்? மிகவும் லயித்து எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுகள் தாமரை அவர்களே.

ஒன்றிரண்டு வயதில் பரிச்சயமான வேம்படிதாளத்து நினைவுகளை இன்னும் நினைவில் வைத்திருப்பது வியப்புதான்.

சிறுவயதில் எத்தனை ஊர்கள்! எத்தனை வாழ்வியல் மாற்றங்கள்! எத்தனை அனுபவங்கள்!

ஒவ்வொரு சமயமும் பள்ளியை மாற்றும்போது பழகிய நண்பர்களைப் பிரிவதை எண்ணி என் மகன் கலங்கும்போது என் மனம் வலிக்கும்.

உங்கள் வாழ்க்கையில் அது போன்ற தருணங்களில் எப்படி உணர்ந்திருப்பிர்கள் என்று அறிய ஆவலாக உள்ளது.

தாமரை
19-04-2012, 11:57 AM
என் ஊர் என்று நான் சொல்லி ஆரம்பிக்கணும்னா முதலில் இளம்பிள்ளையைத்தான் சொல்ல வேண்டும்.

இளம்பிள்ளை ஒரு செங்கோண முக்கோண வடிவான ஊர். முதல் கோணத்தில் மாரியம்மன் - காளியம்மன் கோவில், சந்தை அதிலிருந்து நேராகச் சென்றால் மூன்று நிமிட நடையில் நடராஜா தியேட்டர் அருகே 90 டிகிரியில் சாலை திரும்பும். இளம்பிள்ளையில் இருந்து கிளம்பும் ஒரே பஸ் அங்கிருந்துதான் கிளம்பும். தொண்ணூறு டிகிரி திரும்பி இரண்டு நிமிடம் நடந்தால் சித்தர்கோவில் முச்சந்தி வரும். அங்கிருந்து வெளிப்புறம் செல்லும் சாலை சேலம் செல்லும். உட்புறம் செல்லும் சாலை மீண்டும் மாரியம்மன் கோவிலுக்கே சென்று சேர்ந்து விடும். மாரியம்மன் கோவிலுக்கு எதிரில் பத்து ஏக்கருக்கு ஒரு ஏரி.

ஊருக்குள் ஒரு சுப்ரமணியர் கோவில், ஒரு பிள்ளையார் கோவில் ஒரு சௌடேஸ்வரி அம்மன் கோவில் என மூன்று கோவில்கள் உண்டு. சௌடேஸ்வரி அம்மன் கோவில் ஊர் மத்தி எனச் சொல்லலாம்.

ஒரு மணி நேரத்திற்கு ஒரு பேருந்து. சேலம் நோக்கியோ வேம்படிதாளம் நோக்கியோ செல்லும் ஊருக்குள்ள ஒரே ஒரு அம்பாசிடர் கார் பசுநீலக் கலர். மற்றபடி அந்தக் காலத்தின் மிகச் சிறந்த வாகனம் சைக்கிள் மட்டுமே. அதுவும் வேலைக்குச் செல்லும் அண்ணன்கள்/அப்பாக்கள் மட்டுமே சைக்கிள் வைத்திருப்பார்கள்.

எப்படிச் சுத்தினாலும் 10 நிமிசத்திற்குள் ஊரைச் சுத்தி முடிச்சிடலாம்.

எங்க வீடு இருந்தது அந்தச் சித்தர்கோவில் பிரிவு அருகே. கையோட்டு வீடு. ரோட்டை விட்டு உள்ளே தள்ளி இருக்கு, வீட்டின் முன்னால் தென்னையோலையால் வேய்ந்த நிரந்தரப் பந்தலும் உண்டு. எனக்கு பொழுது போகாட்டி அந்தப் பந்தல் மேல் ஏறி அங்கிருந்து தொபீர்னு குதிப்பேன்.

விளையாட்டுத் தோழர்கள் என்று பார்த்தால் சந்திரன், நாகராஜ் போன்று சற்றே எங்களை விட வயதில் மூத்தவர்களும், ராகவன், இட்டாயி, கலா என்று எங்கள் வயதை ஒத்தவர்களும் மற்றும் அக்காக்களின் தோழிகளும் தான்.

கஞ்சமலையின் எல்லையில் சித்தர்கோவிலுக்கு மிக அருகில் அமைந்த ஊர். சித்தர்கோவில் மூன்று கிலோமீட்டர் தொலைவுதான். பழனி புகழ் போகரின் குரு காலாங்கிநாதர் தான் அங்கிருந்தச் சித்தர். போகர் காலாங்க நாதருடன் இங்கேதான் இருந்து மருத்துவம் பயின்றதாகச் சொல்வார்கள்.

இரும்புத்தாது நிறைந்த இடம் என்பதால் இங்கே ஒரு காந்தக் கேணி உண்டு. அந்தக் காந்தத் தீர்த்தத்தில் உப்பு மிளகு இட்டுக் குளித்தால் தோல்சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை களையுமாம்.

இங்கே ஓடை ஒன்றும் உண்டு. வருடத்திற்கு ஒன்பது மாதத்திற்கு மேல் இந்த ஓடையில் தண்ணீர் வரும். ஓடக்கரை ஓரம் சின்ன சின்னதாகக் கேணிகளும் உண்டு. ஐந்தடி ஆழத்திலேயே வற்றாமல் ஊரும் கிணறுகள் இவை. எத்தனைத் தண்ணீர் பஞ்சம் என்றாலும் இவை வற்றியதே இல்லை.

அங்கே ஒரு தெப்பக் குளமும் இருந்தது, அந்தக் காலத்தில் நீர் நிறைந்து இருக்கும். இப்போது வறண்டு போய்க் கிடக்கிறது.

மலைக்குக் கீழ் சித்தர் மற்றும் சிவன் கோவில். சிறிய மலையின் மேல் முருகன் கோவில். படியேறிச் சென்றால் நிறைய முன்னோர்கள் இருப்பார்கள், அந்தக் காலத்தில் சாந்தமாக இருந்த இவர்கள் காலம் மாற மாற இப்பொழுது பெரிய ரௌடிகளாக மாறிவிட்டார்கள்.

ஒரு முறை இந்த முருகன் கோவிலில் இருந்து இறங்கும் பொழுது விழுந்து ஒரு பத்துபடிகள் உருண்டு பின்னர் எழுந்து இருக்கிறேன்.

சித்தர் கோவில், நடராஜா தியேட்டர் இரண்டை விட்டால் வேறு பொழுது போக்கு கிடையாது. சந்தைக்குக் கூட அம்மா அழைத்துச் சென்றால்தான் உண்டு. ஒரே ஒரு சந்தோஷம் பங்குனி மாசத் தேர்த்திருவிழா.

ஊரே ஜேஜேன்னு இருக்கும் அப்போ. மிகப் பெரிய தேர். இந்த முக்கோணப் பாதையில் மட்டுமே வரும். ஊருக்குள் தெருத்தெருவா போகாது. திருவிழான்னா அந்தக் காலத்தில அரிச்சந்திரா, பவளக்கொடி, சித்திரவல்லி (ஒட்ட நாடகம்) இப்படி ஒரு நாடகம் இருக்கும். கரகாட்டமும் நையாண்டி மேளமும் களைகட்டும். இராட்டினங்கள் சந்தைப் பேட்டையில் போடப்பட்டு 1 பைசா 2 பைசாவிற்கு சிறந்த பொழுதுபோக்காக அமையும். ஒரு விஷயத்திற்கு மட்டும் எங்களுக்குப் போக அனுமதியில்லை. அது ரெகார்ட் டேன்ஸ். :)

எங்களுடைய வாரநாட்கள் ரொம்பவே எளிமை. காலை பல் விளக்கின பின்னால் ஒரு பைசாவிற்கு மரவள்ளிக் கிழங்கு. அப்புறம் குளியல். கோதுமை களியை மோரில் கரைத்து வெங்காயம் கடித்துக் கொண்டே குடித்துவிட்டால் பள்ளிக்குத் தயார். எந்த கல்யாணத்திலோ கொடுத்த தாம்பூலப் பைதான் எங்களின் பள்ளிப்பை. அதற்குள் சிலேட்டும் இரண்டு புத்தகமும்தான். மூணாவது போகும்போதுதான் 5 புத்தகம். நோட்டுப் புத்தகம்.

பள்ளியிலேயே காமராஜர் தயவில் மதிய உணவு. கோதுமை நொய்யில் செய்த ரவை, மக்காச்சோள ரவை இப்படி எதாவது மிக எளிமையானதாக இருக்கும். மாலை 4 மணிக்கு பள்ளி விட்டால் வீட்டிற்கு முன்பு விளையாடுவது அல்லது அப்பா வாங்கிவந்த முத்துகாமிக்ஸ், அம்புலிமாமா, பொம்மைவீடு போன்ற புத்தகங்கள் படிப்பது என்று நாள் ஓடிவிடும் மண்ணெண்ணெய் விளக்கிலிருந்து 25 வாட்ஸ் பல்பிற்கு மாறினாலும் இரவு 8:00 மணிக்கு வரும் இளையபாரதம் நிகழ்ச்சியை அந்தக் கால வால்வு ரேடியோவில் கேட்ட உடன் தூங்கப் போய்விடுவோம்.

ரேடியோ எங்களுக்கு அப்போது முக்கியத் தோழன். திரைப்படப் பாடல்கள், நாடகங்கள், ஒலிச்சித்திரங்கள், பட்டிமன்றங்கள், செய்திகள் என எல்லாவற்றையும் கேட்போம். ஆனால் மற்றபடி கர்நாடக இசை, இசைமேதைகளின் பாட்டுகள் இவை எல்லாம் நாங்கள் அறியாதவை. சிலோன் ஸ்டேஷன் கூட அப்பொழுது கேட்கமுடியும். திருச்சி, சென்னை, கோவை, சிலோன் என நான்கு ஸ்டேஷன்கள் மிக பிரசித்தம்.

ஊருக்குள் சுத்தற மாதிரி ஒரு இடம்னா அது எதுவும் இல்லை. எங்க போனாலும் ஒண்ணுமில்லை. நடராஜா தியேட்டர் பக்கத்தில் உள்ள கடைகளில் பெரிய பணியாரம், பரோட்டா, பூரி மற்றும் பலகாரங்கள் கிடைக்கும். எப்பவாவது அம்மா காசு கொடுத்து வீட்டிற்கு வாங்கிவரச் சொன்னால் உண்டு. கடையில் ஒக்காந்து சாப்பிடறதெல்லாம் கெட்டபசங்க வேலை.

நடராஜா தியேட்டரில்தான் சினிமா ரசனை ஆரம்பித்தது. ராஜாவின் ரோஜா, சிவகாமியின் செல்வன், டாக்டர் சிவா, நல்ல நேரம் எங்க வீட்டுப் பிள்ளை, ஆதி பராசக்தி, வெள்ளிக்கிழமை விரதம்,நாளை நமதே, உலகம் சுற்றும் வாலிபன், அன்னமிட்ட கை, சவாலே சமாளி, திருவிளையாடல், சரஸ்வதி சபதம் இப்படி எத்தனையோ படங்கள். எல்லாம் அம்மா, அக்கா, நான் என் சின்ன அண்ணன் நாலு பேரும் போனது. அப்பா சினிமா பார்க்க மாட்டார். மூத்த அண்ணன் தன்னோட ஃபிரண்ட்ஸோடதான் போவார்.

எங்க அக்காக்கள் அங்கே இருந்த கூட்டுறவுச் சங்கத்தில் நூல் நூற்கப் போவாங்க, அதில கொஞ்சம் சைட்ல காசு வாங்கிக் காலைக் காட்சிக்கு இந்திப்படம் போவாங்களாம். எனக்கு இது தெரிஞ்சது அவங்க யாதோங்கீ பாரத் படம் பார்த்துட்டு வந்த பின்னாலதான். அதுவும் நாளை நமதே படம் பார்த்தப்ப இது அந்தப்படமில்ல ன அவர்கள் குசுகுருத்தபோது.

எங்க வீட்டிற்கு எதிர்ல ஒரு வயல். பெரிய கருங்கல் காம்பவுண்ட் போட்டிருக்கும். அது சித்தர்கோவில் முச்சந்தியில் முடியும் இடத்தில் ஒரு கேணி இருக்கும். அங்கிருந்து உப்புதண்ணீர் கொண்டு வந்து சிமெண்ட் தொட்டிகளில் நிரப்பி வப்பாங்க.
சிமெண்ட் தொட்டி அப்ப எனக்கு நெஞ்சு வரைக்கும் இருக்கும்.

ஒருதடவை எதுக்கு சொம்பில நீர் மொள்ளப் போனப்ப தண்ணி எட்டலை. எக்கி மொண்டபோது தொபுக்குன்னு தலைக் குப்புற தொட்டியில் விழுந்திட்டேன். நெஞ்சுவரைக்கும் தண்ணி காலை தூக்கி உதைக்கிறேன். கத்துனா முட்டைதான் வருது. மூக்கு கண்ணெல்லாம் எரிஞ்சது.

அப்ப ஓடி வந்த அக்கா காப்பாத்தினாங்களோ.. உங்க கிட்ட பேசிகிட்டு இருக்கேன்.

என்னடா ஊரைப் பத்தி இவ்வளவுதானான்னு யோசிக்காதீங்க. நான் ரம்ப நல்ல பையன். ஊர்சுத்தவே போகமாட்டேன். தனியா வெளிய போனதே கிடையாது, ஃபிரண்ட்ஸோட சுத்தனதும் கிடையாது,

அப்படி வெளிய போனா என்ன நடக்கும் தெரியுமா?

உடனே ஒரு தறி பட்டறையில் தார் பிடிக்க சேர்த்து விட்டுருவாங்க. ஊருக்குள்ள நிறைய தறிப்பட்டறைகள் இருப்பதால் வேலை ஈசியா கிடைக்கும்.

ஊர்ல விவசாயம் கிடையாது.ஊரைச் சுத்திதான் விவசாயம். சோளம், வேர்க்கடலை, மரவள்ளிக்கிழங்கு இப்படி புஞ்சையும் நெல் வாழை கரும்பு போல நஞ்சையும் உண்டு.

ஊரைச்சுத்தி பனைமரம் என்பதால் அங்கே போனா கள்ளு கிடைக்கும். ஊருக்குள் தெளுவு எனப்படும் பதநீர் கொண்டுவந்து விப்பாங்க. காலை 11 மணி சுமாருக்கு வருகிற பதநீர் குளுகுளுன்னு இருக்கும்.

கீரை, மோர் என எல்லாமே வீட்டுக்கே கொண்டுவந்து காட்டுக்காரங்க தந்திட்டுப் போவாங்க.

முக்கியமான விசயம் கறிக்கடை,

ஊர்ல நிரந்தரக் கறிக்கடை அப்ப இல்ல. கோழி என்றால் சந்தையில் குஞ்சு வாங்கி வந்து வீட்டில் வளர்ப்போம். அப்புறம் முட்டை வச்சா வீட்டிலயே குஞ்சுபொறிக்க வச்சு அந்தக் குடும்பத்தையும் காப்பாத்தி சமயம் வரும்போது நாங்களே அறுத்து கடவுள் மாதிரி ஆக்கல், காத்தல், அழித்தல் என முத்தொழிலும் செய்வோம். ஆட்டுக்கறி சந்தைப் பேட்டையில் வியாழக்கிழமை, ஞாயித்துக்கிழமை மாத்திரம் கிடைக்கும். கல்திட்டில் தென்னை ஓலையை விரித்து அதன் மேல் வாழை இஅலி விரித்து அதன் மேல் கறியை வெட்டிப் போடுவார்கள். கட்டித்தர ஒரு இலை பயன்படுத்துவார்கள் பேர் தெரியலை. ஆட்டை அறுத்து அவர்கள் உரித்து வெட்டிய சதைகளில் துள்ளல் இன்னும் இருக்கும். அந்த அளவுக்கு ஃபிரெஷ்ஷாதான் அப்ப கறியெடுப்பார். சிறுகுடல், பெருங்குடல், தலை, கால், ஈரல், சுத்துக் கொழுப்பு, இரத்தம், நுரையீரல் என ஆட்டின் தோலும் கொம்பும் தவிர எல்லாமும் உண்ணப்படும்.

அப்ப கள்ளச் சாராயமும் ஊர்ல கிடைக்கும். மலையடிவாரத்தில காய்ச்சுவாங்க. அப்பா அப்பப்ப வாங்கி வந்து சாப்பிடுவார், வெளியில் குடிச்சிட்டு வீட்டுக்கு வருகிற மாதிரி இல்லை. யார் வீட்டிலாவதுதான் குடிப்பார்கள். நல்ல காரமா மாமிசம் சமைச்சு வச்சிகிட்டு அப்ப கொஞ்சிக் கொஞ்சி மாமிசம் கொடுப்பார் அப்பா.

அதிக பட்சம் விளையாடியது கில்லி தாணடல் மற்றும் ஓடிப்பிடிக்கும் விளையாட்டு, நொண்டி விளையாட்டுதான். அதிசயமாக ஒரே ஒருமுறை அப்பா பெங்களூரில் இருந்து டென்னிகாய்ட் (அதாங்க வளையம்) வங்கி வந்தார். அதுவும் எங்களுக்கு விளையாட்டு ஆயிடுச்சி. கோலி விளையாட்டு என்பது பெரியவங்க ஆடற 9 குழி விளையாட்டு கிடையாது. ஒரே குழியில் விளையாடும் சின்ன பசங்க விளையாட்டுதான்.

அப்ப வேட்டையாடிய அனுபவமே கிடையாதா என்றால்..

ஒரே ஒரு முறை உண்டு, அது ஓணான் என்று நீங்க நினைச்சா தப்பு. அது பொன்வண்டு.

ஊரோரமா வயல்களைத் தாண்டி வளர்ந்திருந்த புல்லுல பொன்வண்டு இருக்கும்னு பசங்க கூட்டிகிட்டுப் போனாங்க.. ஒரே ஒரு பொன்வண்டைப் புடிச்சி தீப்பெட்டியில் போட்டுகிட்டு திரும்பறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சி மூணு நாளில் அந்தப் பொட்டியே அந்த வண்டுக்குச் சவப்பெட்டி ஆயிருச்சி,

கார்த்திகை தீபம் மிக அருமையாகக் கொண்டாடுவோம். தீபாவளியை விட எங்களுக்குத் தீபம்தான் பிடிக்கும். அப்பவும் பட்டாசு வெடிப்போம். பொங்கல் கூட மூன்றாம் பட்சம்தான். ஏன்னா எங்க ஊர்ல ஜல்லிக்கட்டு கிடையாது. இதுவரை ஜல்லிக்கட்டை நேர்ல பார்த்தது கிடையாது. பொங்கலுக்கு காட்டுக்காரங்க விஷேசமா கொண்டாடுவாங்க. ஆனால் எங்க ஊர்மக்கள் முக்காவாசி சேலத்துக்குப் போயிருவாங்க.. தீபாவளிக்கும் அப்படித்தான்.

பள்ளியைப் பத்திச் சொல்லணும்னா, அது ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளி. அஞ்சாவது வரைதான்.

அதில ஒரு பெரிய ஹால். . சொன்னா கொஞ்சம் வித்தியாசமா இருக்கும்.

அதாவது நடுவில் பாதை. இந்தப் பக்கம் ஒரு பதினைந்து அடிக்கு தாழ்வாரம் மாதிரி இழுத்திருப்பாங்க. அந்தப் பக்கம் ஒரு பதினைந்து அடிக்குத் தாழ்வாரம் மாதிரி இழுத்திருப்பாங்க. அதை மரத்தடுப்புகள் வச்சு வகுப்புகள் பிரிச்சிருப்பாங்க மொத்தம் பத்து வகுப்புகள் இதில. எல்லாம் ஒண்ணாவது இரண்டாவது. ஒண்ணாவது எஃப், இரண்டாவது எஃப் எனது வகுப்பிடங்கள். (அறைன்னு சொல்ல முடியாது) மூணாவது நாலாவது அஞ்சாவதுக்கு மட்டும் தனி வகுப்புகள்..மூணாவது சி யில் காலாண்டு முடியற வரைக்கும்தான் வாழ்க்கை.

இந்த ஊரை விட்டுப் போகும்போது கீதம் சொல்லற மாதிரி ஒரு சின்ன ஃபீலிங் இருந்திருக்கலாம், ஆனால் அந்த அளவுக்கு பெரிய ஃபீலிங் இல்லை. நான் 7 வது படிக்கும் போது அண்ணனுக்கு பொண்ணு இந்த ஊரில் எடுத்ததாலதான் இந்த ஊருக்குத் திரும்பிப்போனேன் என்பதைப் பார்த்தால், அதுவும் நண்பர்கள் யாரையும் இதுவரைச் சந்திக்கவில்லை என்பதையும் பார்த்தால்..

இளமையில் இப்படி அடிக்கடி நகர்வு இருந்தால் செண்டிமெண்டல் அட்டாச்மெண்ட் என்பது வரவே வராது என்பது தெரியும்.

நான் அழுதது மும்பையை விட்டு டெல்லி போனப்ப மட்டுமே.. கல்லூரி முடிந்து போனப்ப கூட நான் அழுதது பிரிவினால் என்பதை விட பயத்தினால் என்று சொல்லலாம்..

சரி அப்புறம் பார்ப்போம்.

கலையரசி
19-04-2012, 02:45 PM
இன்னும் கொஞ்சம் சொல்கிறேன்.....
புறநகர் பெருக்கத்தால் வீக்கம் அதிகமாகி கமலா காமேஷ் இப்போது இருப்பதைப் போல ஆகிவிட்டது என்ற நகைச்சுவையுடன் கிருஷ்ண கிரியைப் பற்றி அருமையான ஒரு துவக்கம்.

சிறுவயதில் செய்த குறும்புகள், மலையேறி இறங்கிய சாகசப்பயணம், மாங்காய் திருடி மாட்டிக்கொண்ட குற்றச்சரித்திரம், ருசித்த சாமைச்சோறு, கம்பங்கூழ் என இளம்வயது நிகழ்வுகள் அனைத்துமே மிகவும் ரசிக்க வைக்கின்றன.

கரடி பெண்களைக்கண்டுவிட்டால் வேகமாக ஓடி வரும் என்ற செய்தி சிரிக்க வைத்ததுடன் வியக்கவும் வைத்தது. அருமையான நடையில் சுவையான ஒரு பதிவு.
பாராட்டுக்கள் சிவாஜி சார். தொடருங்கள்!

கலையரசி
19-04-2012, 02:57 PM
என் ஊர் என்று நான் சொல்லி ஆரம்பிக்கணும்னா முதலில் இளம்பிள்ளையைத்தான் சொல்ல வேண்டும்.

நான் அழுதது மும்பையை விட்டு டெல்லி போனப்ப மட்டுமே.. கல்லூரி முடிந்து போனப்ப கூட நான் அழுதது பிரிவினால் என்பதை விட பயத்தினால் என்று சொல்லலாம்..

சரி அப்புறம் பார்ப்போம்.

அடேயப்பா! எட்டு வருடத்தில் எத்தனை ஊர் சுற்றியிருக்கிறீர்கள்? அடிக்கடி நகர்வு இருந்ததால் செண்டிமெண்ட் அட்டாச்மெண்ட் இல்லாமல் போவது இயற்கைதான்.
இளம்பிள்ளை என்ற ஊரின் பெயரே வித்தியாசமாக உள்ளது. நீங்கள் சொல்லியிருப்பது போல் அக்காலத்தில் கார் வைத்திருப்பவரின் எண்ணிக்கை மிகவும் குறைவு. வீட்டுக்கு வீடு சைக்கிள் தான் இருக்கும்.

அதே போல் அப்போது ரேடியோவுக்கு இருந்த மவுசு இப்போது போயே போச்!
நீங்கள் சுற்றிய மற்ற ஊர்களின் விபரங்களைக் கேட்க ஆவலாயிருக்கிறேன். தொடருங்கள்.

கலைவேந்தன்
19-04-2012, 03:04 PM
தாமரையின் இளமை நினைவுகளும் ஊர் நினைவுகளும் கிட்டத்தட்ட எனக்கும் நேர்ந்துள்ளமை அதிசயம். அதே தறிவேலை. நாடா கோத்துவாங்கும் சிற்றாள் பணி. எல்லாமே என் இளமையை நினைவுக்குக் கொண்டுவந்தது.

என் ஊரைப்பற்றி எழுத இன்னும் ஆர்வம் மிகுந்துவிட்டது கலையரசி சிவா மற்றும் தாமரையின் அனுபவங்களை வாசித்ததும்.

எப்படியோ தம் கட்டி விரைவில் எழுதவே போகிறேன்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
19-04-2012, 04:23 PM
சிவா.ஜி, தாமரை கலையரசி அனைவரின் நினைவலைகள் அபாரமாய் இருக்கிறது. ஏதோ கவிதை என்று சில வரிகள் கிறுக்குகிறேனே தவிர கதைபோல் எழுதவேல்லாம் நான் முயற்சி செய்ததில்லை. உங்களின் அனுபவங்களைப் படிக்கும்போது எனக்கும் எழுதவேண்டும் என்ற ஆவல் தோன்றுகிறது:)

M.Jagadeesan
20-04-2012, 01:35 AM
என்னால் இவ்வளவு கோர்வையாக எழுத முடியாது. ஆகவே மற்றவர்கள் எழுதுவதைப் படித்து ரசிக்கின்றேன்.

கீதம்
23-04-2012, 02:34 AM
என் ஊர் என்று சொல்லும்போதே அதில் தொணிக்கும் பெருமிதத்தை எவராலும் உணரமுடியும். அறியா வயதில் அதுதானே நம் உலகம். அதிலும் பெண்களுக்குப் பிறந்தவீட்டுப் பெருமை பேசவும் கூடுதலாய் ஒரு வாய்ப்பினை வழங்கும் ஊரல்லவா? வாருங்கள். திருச்சி மாநகரம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

என்னைப் பெற்றெடுத்த மண் மன்னை என்றாலும் வளர்த்தெடுத்த மண் திருச்சிராப்பள்ளி என்னும் திருச்சிக்கு உரியது.

காவிரிக்கரையில் அமைந்த இவ்வூரின் சிறப்புக்கானக் காரணங்கள் என்று பலவற்றையும் சொல்லலாம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எவ்வித தொழில்நுட்ப வளர்ச்சியும் இருந்திராத காலத்தில் அதிசயிக்கத் தக்கவிதத்தில் காவிரியின் குறுக்கே அற்புதமாய்க் கட்டப்பெற்று இன்றும் நிலைத்திருக்கும் உறுதி கொண்ட கல்லணை ஒரு பெரும் சிறப்பு. மேலணை எனப்படும் முக்கொம்பு அணைக்கட்டு இன்னுமொரு கூடுதல் சிறப்பு.

நடிகர் திலகம், நடிகவேள், திருச்சி லோகநாதன், லால்குடி ஜெயராமன் , கவிஞர் வாலி, ஷேக் சின்ன மௌலானா போன்ற மற்றும் இன்னும்பிற கலையுலக மற்றும் திரையுலக மாமேதைகளையும், கி.ஆ.பெ. விசுவநாதம், சிறுகதை மன்னன் சுஜாதா போன்ற எழுத்துலக ஜாம்பவான்களைத் தந்திருப்பது திருச்சி மாநகரம். பாரத மிகுமின் நிறுவனம், துப்பாக்கித் தொழிற்சாலை, பொன்மலை ரயில்வே நிலையம் போன்ற பிரதான தொழில் நிறுவனங்களால் மேலும் சீர் பெற்றது திருச்சி மாநகரம்.

ஆன்மீகத்திலும் திருச்சியின் அடையாளங்கள் தனித்தவை. திருச்சியின் மாபெரும் அடையாளமென உறைந்திருக்கும் உச்சிப்பிள்ளையார் கோயில், அருள்மிகு தாயுமானவர் கோயில், திருவரங்கம் அரங்கநாதர் கோயில், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி ஆலயம், வயலூர் முருகப்பெருமான் ஆலயம், மும்மூர்த்திகள் உறைந்திருக்கும் உத்தமர்கோயில், திருவெறும்பூர் எறும்பேசுவரர் மலைக்கோயில், சமயபுரம் மகாமாரியம்மன் ஆலயம், உறையூர் அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோயில் என்னும் இந்துக்களின் வழிபாட்டுத்தளங்கள் அல்லாது, ஆங்கிலேயர் காலத்தில் முதன்முதலாய் கட்டப்பட்டப் பழமைவாய்ந்த கிறித்துவ தேவாலயமும், பொன்மலையின் புனித அந்தோணியார் தேவாலயமும் தவிர சிற்றூர்களுக்கொன்றெனத் திகழும் தேவாலயங்கள் யாவும் பிரசித்தமானவை. இஸ்லாமியர்களின் தொழுகைக்கென பாங்கு ஒலிக்கும் மசூதிகளுக்கும் குறைவில்லை. மதப்பாகுபாடற்ற நட்புணர்வோடும் நல்லிணக்கத்தோடும் திகழும் திருச்சி மக்களிடம் மனிதாபிமானத்துக்கும் மரியாதைக்கும் குறைவில்லை.

திருமணமாகி சென்னை வந்தபுதிதில் என் அம்மா அப்பாவுடன் ஒரு கடைக்கு வீட்டுசாமான் வாங்கச் சென்றிருந்தேன். கடை ஊழியர்களிடம், ‘தம்பி, இங்க வாங்க, அதை எடுங்க, இதைக் காட்டுங்க’ என்று நாங்கள் பேசியதைக் கேட்டுவிட்டு, அந்தக் கடையின் முதலாளி எங்களிடம் வந்து ‘நீங்கள் திருச்சிக்காரர்களா?’ என்றார். எங்களுக்குப் பெரும்வியப்பு. ‘எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?’ என்றதும், ‘உங்கள் தமிழிலும், ஊழியர்களிடம் காட்டும் மரியாதையிலும் தெரிகிறது’ என்றார். ஏன் அப்படிச் சொன்னார் என்பது சென்னையில் தொடர்ந்து குடியிருக்கும்போதுதான் புரிந்தது.

அத்தகு சீர்மிகு திருச்சி மாநகரத்தின் ஒரு பகுதியாய் அமைந்த என் ஊரான பொன்மலை பற்றிச் சொல்ல விழைகிறேன். முன்னுரையே இவ்வளவு பெரியதா என்று மலைத்துவிடாதீர்கள். என்ன செய்வது? பிறந்த ஊர்ப்பாசம் அத்தனை எளிதில் விட்டுவிடுமா?

பொன்மலை என்றதுமே நினைவுக்கு வருவது பொன்மலை ரயில்வே பணிமனையும் அதனைச் சுற்றிக் கட்டப்பட்டிருக்கும் நேர்த்தியான பணியாளர் குடியிருப்புகளும்தான். இந்தியாவில் மிகப்பெரிய இரயில் கட்டுமாணப் பணிமனையான இது, 1897 இல் நாகப்பட்டிணத்தில் துவங்கப்பட்டது. சாதகமான இடம் மற்றும் சூழல்தேர்வு காரணமாய் அது திருச்சிக்கு மாற்றப்பட முடிவெடுக்கப்பட்டு, 1926 இல் பொன்மலையில் அடிக்கல் நாட்டப்பட்டது. 1928 முதல் முக்கால் நூற்றாண்டுக்கும் மேலாக ஓய்வின்றி இங்கு இயங்கிவருகிறது.

சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் விரிந்து கிடக்கும் பொன்மலை ரயில்வே பணிமனை, கிட்டத்தட்ட ஆறாயிரம் ஊழியர்களின் வாழ்க்கையை தன்னுள் அடக்கியது. டீசல் என்ஜின்களைப் பழுதுபார்ப்பதும், நீலகிரி மலைரயில்களை நிர்வகிப்பதும் முக்கியமான வேலை என்றாலும் தென்னக ரயில்வே மற்றுமல்லாது பிற பகுதி ரயில்வேக்களின் பழுது பார்ப்பகமாகவும் இது திகழ்கிறது. என் அப்பா, சித்தப்பா, அப்பாவழித் தாத்தா, அம்மாவழித்தாத்தா, தாய்மாமாக்கள், இவர்கள் அல்லாது பெரும்பாலான உறவினர்கள் இந்தப் பணிமனையில் பணிபுரிந்ததால் என்னவோ இரயில்வே நிர்வாகமே சொந்தம்போல் ஒரு உணர்வு.

புகைவண்டிப் பயணம் இலவசம் என்பதால் அப்போதெல்லாம் எங்கு செல்வதாக இருந்தாலும் ரயில்தான். பேருந்து என்றப் பேச்சுக்கே இடம் கிடையாது. எத்தனை மணிநேரத் தாமதமானாலும் ரயில்நிலையத்திலேயே காத்திருந்து ரயிலில் அழைத்துச் செல்வதுதான் அப்பாவுக்கு மட்டுமல்ல, அனைத்து ரயில்வே ஊழியரின் இரத்தத்திலும் ஊறியப் பழக்கம்.

ஆங்கில வழி மற்றும் தமிழ்வழிக் கல்வி பயிற்றுவிக்கும் வகையில் இரு ரயில்வே பள்ளிக்கூடங்கள், ரயில்வே ஊழியர்களுக்கான கல்யாண மண்டபம் மற்றும் சகலவசதிகளையும் உள்ளடக்கிய மருத்துவமனை என ஊழியர்களின் அனைத்துத் தேவைகளையும் தனக்குள் கொண்ட பொன்மலை, பொன்மலைவாசிகளைப் பொறுத்தவரை ஒரு சிற்றுலகம்தான்.

அந்தத் திருமண மண்டபத்தில்தான் எனக்குத் திருமணம் நடைபெற்றது என்பதும், ரயில்வே மருத்துவமனையில்தான் என் இரு குழந்தைகளும் பிறந்தனர் என்பதும் எனக்கு பொன்மலை மீதான அளவிடற்கரியப் பற்றுக்கு மற்றுமொரு காரணம்.

ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட குடியிருப்புகள், ஊழியர்களின் தகுதிக்கும் வருமானத்துக்கும் ஏற்றபடி A, B, C, D, E, F, G, H என்று வகைப்படுத்தப்பட்டு, படிப்படியாக வசதிப் பெருக்கம் பெறக்கூடிய அளவில் நிர்மாணிக்கப்பட்டிருந்தன. அனைத்தும் இரட்டை அடுக்குச் சீமை ஓடுகள் வேயப்பட்டவையே. அவற்றில் C மற்றும் D வகைக் குடியிருப்புகளில் வசித்த அனுபவம் எனக்கு உண்டு. குடிநீர், கழிப்பறை, குளியலறை, சாக்கடைவசதி, தார்ச்சாலை என சகல வசதிகளுடனும் ஒரு மாதிரிக்குடியிருப்பென கட்டப்பட்டிருந்தவை அவை.

நாற்சதுர வடிவமைப்பில் கட்டப்பட்டிருக்கும் குடியிருப்புகளில் மத்தியில் உள்ள மைதானங்களில் மாலை வேளைகளில் குழந்தைகளும் பெரியவர்களும் குழுமிப் பேசி, பரஸ்பரம் நட்புறவுடன் கெழுமிய நாட்களை நினைவுகூர்கிறேன். இன்று அப்படிப் பேசுவாரும் இல்லை, தெருவிலும் மைதானத்திலும் ஓடியாடும் குழந்தைகளைக் காணமுடிவதும் இல்லை.

விதவிதமான விளையாட்டுகள் விளையாடிக் களித்ததும், வாடகை சைக்கிள் ஓட்டி மகிழ்ந்ததும், விளையாட்டுத்திடலில் கூச்சலும் கும்மாளமுமாய், இருட்டியதும் தெரியாமல் விளையாடி, அம்மா தேடிவரும்போது அலுப்புடன் வீடு திரும்புவதும், கோடை விடுமுறையில் வீட்டுக்கு வீடு வற்றலும் வடகமும் போட்டு கையில் கம்புடன் காவலுக்கு எங்களை இருத்திவைத்து விளையாடப் போகவிடாமல் செய்துவிடும் அம்மாக்களின் செயல்களை எண்ணி நோவதுமாய் எத்தனை அனுபவங்கள்!

திருட்டு சீசன் என்றொரு காலம் உண்டு. மே மாதம், முதல் வாரம் ஊழியர்களுக்கு சம்பளத்தோடு கூடிய விடுமுறைக்காலம். பிள்ளைகளுக்கும் அப்போது விடுமுறை என்பதால் பெரும்பாலான வீடுகளில் வெளியூர் சென்றுவிடுவார்கள். இதற்கெனவேக் காத்திருக்கும் திருடர்கள், அப்போது பல வீடுகளிலும் ஓட்டைப் பிரித்து வீட்டுக்குள் இறங்கி தன் கைவரிசையைக் காட்டிவிடுவர். திருட்டுக்குப் பயந்து எங்கும் போகாமலும் இருக்க முடியாது. இன்னும் சில இடங்களில் வீட்டுக்குள் ஆளிருக்கும்போதே சாமர்த்தியமாக சன்னல் மற்றும் கதவிடுக்குகளின் வழி திருடிச் செல்வோரும் உண்டு. பெரும்பாலும் பித்தளைப் பாத்திரங்கள், அண்டா, குண்டான்கள் போன்றவையே திருட்டுப் போகும். திருடன் என்ற ஒற்றைச் சொல்லுக்குத் தெருவே கூடிவிடும் அபாயம் இருந்தும் துணிந்து திருடவருபவர்கள் மாட்டிக்கொண்டால் அதோகதிதான்.

மக்களின் எண்ணங்களை, சிந்தனைகளை மழுங்கடிக்கும் தொலைக்காட்சி, கணினி, அலைபேசி போன்றவை வாழ்க்கையை ஆக்கிரமிக்காத காலம் அது. சொல்லப்போனால் நான் பத்தாவது முடிக்குந்தருவாயில்தான் தொலைக்காட்சி அறிமுகம் ஆகத்தொடங்கியது. தெருவுக்கு ஒரு வீட்டில் (அதாவது இருபது, இருபத்தைந்து வீடுகளுக்கு ஒன்று என்று) தொலைக்காட்சி இருந்த காலம். கொடைக்கானல் ஒளிபரப்பு நிலையத்தின் உதவியால் வாரமொரு தமிழ்த் திரைப்படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

எங்கள் எதிர்வீட்டிலும் தொலைக்காட்சிப் பெட்டி வாங்கியிருந்தார்கள். அந்த வீட்டினர், திங்களன்று முதலே தெருவிலிருக்கும் எல்லோருக்கும் அந்த வாரக் கடைசியில் தொலைக்காட்சியில் படம் பார்க்கத் தங்கள் வீட்டுக்கு வரச்சொல்லி அழைப்பு விடுக்க ஆரம்பித்துவிடுவர். குறுகிய திண்ணையை அகலப்படுத்தி மேற்கூரை அமைத்திருந்தனர். அதனால் அங்கு ஓரளவு இடம் இருந்தது. பெரும்பாலும் சிறுவர்களும் வயதானவர்களும் தவறாமல் வந்துவிடுவார்கள். இதில் வேடிக்கை என்னவெனில், திரைப்படத்துக்கு இடையில் பட்டாணி, வேர்க்கடலை, முறுக்கு போன்ற நொறுக்குத் தீனிகளையும் சப்ளை செய்வார்கள் அந்த வீட்டு அம்மாவும் ஐயாவும். அந்த அளவுக்கு திறந்த மனமும், தாம் பெற்ற இன்பம் மற்றவர்களும் பெற வேண்டுமென்ற நல்லெண்ணமும் நிறைந்திருந்தது அவர்களிடம்.

வீடுகளின் நெருக்கம் மனங்களையும் நெருக்கியிருந்தது. ஒளிவு மறைவு இல்லாத காலம். கஷ்டம் என்றால் கேட்காமலேயே உதவி கிடைக்கும். ஒரு வீட்டில் ஏதேனும் விசேஷம் என்றால் உறவினருக்கு முன்னால் அக்கம்பக்கத்தினர் முன்வந்து உரிமையுடன் எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டு செய்வர். பண்டிகைகள் யாவருக்கும் பொது. பரவசங்கள் பொது. துக்கமும் பொது, துயரங்களும் பொது.

இந்து, முஸ்லிம், கிறித்துவர் என்று அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களும், தமிழர், மலையாளிகள், தெலுங்கர், கன்னடர், ஆங்கிலோ இந்தியர் என்று பலதரப்பட்ட மொழி பேசுவோரும், பல்வேறு சாதியினரும் ஒற்றுமையாய் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் போல் ஒருவருக்கொருவர் அன்புடனும் நட்புறவுடனும் பழகிய சூழலில் என் குழந்தைப்பருவமும் இளமைக்காலமும் கழிந்தது என்பதை நினைக்கையிலேயே பெருமிதம் நிறைகிறது.

அடிவாரத்தில் பொன்னேஸ்வரி அம்மனும் உச்சியில் முருகனும் குடிவைத்திருக்கும் மலைக்கோவில் பொன்மலையின் மற்றுமொரு சிறப்பு. திரும்பிய இடங்களில் எல்லாம் தேவாலயங்களும், பள்ளிவாசல்களும், கோவில்களும் என்று இங்கும் எல்லா மதத்தினருக்கும் வழிபாட்டுத் தளங்கள் இருந்தாலும் எல்லோரும் எல்லா இடங்களுக்கும் சென்றுவரும் வகையில் ஒற்றுமையின் இருப்பிடமாய்த் திகழ்வது குடியிருப்புவாசிகளின் மனம்.

அதிகாலை வேளையில் துயில் களையும் நேரம் மசூதியின் பாங்கொலி ஒருபுறமும், தேவாலயத்தில் பாதிரியார் பாடலோடு இசைக்கும் பிரார்த்தனை ஒருபுறமும், விநாயகர் கோவிலில் சீர்காழி கோவிந்தராஜனின் கணீர்க்குரல் ஒருபுறமும் ஒலித்து, பறவை மற்றும் கறவைகளின் ஒலியோடு இணைந்து அன்றைய நாளை இனிமையாய்த் துவக்கும்.

மாதாகோவிலில் உப்பும் மிளகும் நேர்ந்துகொட்டுவதிலாகட்டும், பயந்த குழந்தைகளுக்கு ஓதி பயந்தெளிவிக்க பள்ளிவாசல்களுக்குப் படையெடுப்பதிலாகட்டும், கோவில் திருவிழாக்களுக்குக் நன்கொடைகள் வழங்குவதிலாகட்டும் மதங்கள் பற்றிய குறுக்கீடு இல்லாமல் மனங்கள் மட்டுமே ஒன்றி வாழ்ந்த அதிசயம் அது.

திருச்சியில்தான் தந்தை பெரியார் துவங்கிய சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். அதனால் எங்கள் குடியிருப்புகள் சார்ந்த விளையாட்டுத் திடல்களில் திராவிடக் கழகத்தின் கூட்டங்களும் சொற்பொழிவுகளும் அடிக்கடி நடந்தேறும் விரும்பியோ விரும்பாமலோ பல பகுத்தறிவுக் கருத்துகள் ஒலிப்பெருக்கியின் உதவியால் செவி வந்து சேரும். மோதும் கருத்துக்களின் தாக்கத்தின் தீவிரத்தால் வாய்கள் வசைபாடினாலும் மனங்கள் அசைபோடத் தவறுவதில்லை. பின்னாளில் ஒரு பகுத்தறிவுக் குடும்பத்தில் வாழ்க்கைப் பட்டபோது, வாழ்க்கை முறையில் உண்டான மாற்றங்களை, இழப்பாய் இல்லாது, இயல்பாய் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்துக்கான விதையை அக்கூட்டங்களும் சொற்பொழிவுகளும் அன்றே என் மனத்தில் விதைத்திருக்கவேண்டும். மதப்பாகுபாடு அற்ற சூழலின் வளர்ப்பும் அவ்வித்துக்கு உரமளித்திருக்கவேண்டும்.

பொன்மலைவாசிகளுக்குப் பிடித்த விளையாட்டு என்றால் பேட்மிண்டன் என்று சொல்லலாம். சிறியவர் பெரியவர் வேறுபாடு இன்றி, காணும் இடங்களில் எல்லாம் பூப்பந்து விளையாடுவதை இன்றும் பார்க்கலாம். அதிலும் மரத்தால் செய்யப்பட்ட கட்டைபேட் என்று சொல்லப்படும் மட்டையால் அடித்துவிளையாடுவது பலருக்கும் விருப்பம். டேபிள் டென்னிஸ் மட்டையைப் போல் சற்றுப் பெரியதாக இருக்கும் அதை அநேகமாய்த் தாங்களாகவே தயாரிப்பர். என் தம்பி இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாய் எப்படி இன்னும் அதே ஆர்வத்துடன் விளையாடிக்கொண்டிருக்கிறான் என்பது எனக்கு வியப்புதான்.

பணிமனையின் அருகிலேயே ஒரு சந்தை. ஞாயிற்றுக்கிழமை சந்தை. சட்டி பானை முதல் காய்கறி, பழம், கோழி, வாத்து (உயிருடன்தான்) இவற்றுடன் மக்கள் கூட்டத்துடன் காட்சியளிக்கும் அது திருவிழாக்கடைகளை நினைவுபடுத்தும். அங்குக் கிடைக்காதப் பொருட்களே இல்லை என்னும் அளவுக்கு எல்லாமும் கிடைக்கும். அதிலும் சம்பள சந்தை பற்றிச் சொல்லவே வேண்டாம். இங்கு எல்லோருக்கும் ஒரே நாள் சம்பளம் மாதா மாதம் 3 ந்தேதி என்பதால் அன்று மாலைச் சந்தை லாந்தர்களாலும், திரிவிளக்குகளாலும் களைகட்டியிருக்கும். இப்போதும் அப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். (மின்சாரம் வருவதும் தெரியவில்லை, போவதும் தெரியவில்லை என்று கேள்விப்படுகிறேனே...) முன்பே சொன்னதுபோல் அப்பா, சித்தப்பா, மாமா என்று அத்தனைப்பேரிடமிருந்தும் தின்பண்டங்கள் கிடைக்கும் நாள் அது. இன்று நினைத்தாலும் மகிழ்ச்சியில் புரளவைக்கும் நாட்கள் அவை.

ஒவ்வொரு சம்பள சந்தையன்றும் தவறாமல் பெரிய பெரிய அல்வாக்கடைகள் உதயமாகியிருக்கும். பீமபுஷ்டி அல்வா என்று ஒரு பேனரில் ஒருபக்கம் எழுதியிருக்க, மறுபக்கம் ஒரு பயில்வான் உடலை முறுக்கிக்கொண்டு போஸ் கொடுத்திருப்பார். அதற்குப் போட்டியாக மற்றொரு பயில்வான் படத்துடன் காமபுஷ்டி அல்வா என்றொரு கடையும் உதயமாகியிருக்கும். இரண்டு கடையாட்களும் போட்டி போட்டுக்கொண்டு, அல்வா மலையின்மேல் பட்டாக்கத்திபோல் ஒரு வெட்டுக்கத்தியை படார் படார் என்று தட்டி விளம்பரம் செய்வதைப் பார்க்கவே வேடிக்கையாக இருக்கும். ஐயா வாங்க, அம்மா வாங்க என்று போவோர் வருவோரை எல்லாம் அழைத்து சாம்ப்பிள் அல்வா கொடுப்பார்கள். அப்படி யார் எது கொடுத்தாலும் வாங்கக் கூடாது என்பது அப்பாவின் கட்டளை. காசு கொடுத்து வாங்கியதை மட்டும்தான் சாப்பிடவேண்டும். தீபாவளி, பொங்கல் சந்தைகள் இன்னும் விசேஷமாக இருக்கும். நடப்பதற்கும் பாதையில்லாமல் கடைகள் குவிந்திருக்கும்.

தோட்டம் பராமரித்தும் மரங்கள் வளர்த்தும் தம் சுற்றுப்புறங்களைப் பேணுவதில் பெரும் அக்கறை காட்டுவதில் குடியிருப்புவாசிகள் ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளைத் தம் சொந்த வீடு போலத்தான் நினைத்து வாழ்வர். தெருக்களையும் வீடுகளையும் தம் நிழலால் குளிர்விக்கும் மரங்களால் வீடுகளுக்குள் எப்போதும் ஒரு வித குளுமை நிலவிக்கொண்டே இருக்கும். முருங்கை, மாமரங்கள் இல்லாத வீடுகளைக் காண்பது அரிது. இவை தவிர வேம்பு, வாதுமை, தூங்குமூஞ்சி, கொன்றை, உதயன் மரங்களும் சாலையோரங்களில் பல பெயர் தெரியா பெருமரங்களும் சூழ்ந்து, கோடையின் வெம்மையிலிருந்து பொன்மலை மக்களைக் காக்கும்.

குடியிருப்பின் வீடுகளைக் காலி செய்யுமுன் தாம் வளர்த்தவற்றை வெட்டி மரங்களை மொட்டை அடித்தும், வேரோடு பெயர்த்தும், அடுத்து வருபவரை அனுபவிக்க விடாமல் செய்யும் சில அற்ப மனிதர்களும் உண்டு. குடியிருப்புகளில் ஆடு,மாடு,கோழி போன்றவற்றை சிலர் வளர்த்துப் பராமரித்ததால், சாணி நாற்றம், கோழிகள் சீய்த்துத் தோட்டம் பாழ்படுதல், ஆடுகள் தோட்டத்துள் புகுந்து செடிகளைத் தின்றுவிடுதல் என்ற காரணங்களால் சில மனக்கசப்புகளும் எழுவதுண்டு. அவற்றையெல்லாம் புறந்தள்ளிப் பார்த்தால் நினைத்து மகிழ இனிய நினைவுகள் நிறைய உண்டு.

பொழுதுபோகவும், பண்டிகை நாட்களில் மட்டுமல்லாது, தேவைப்படுபவற்றைத் தேவைப்படும் எந்நேரத்திலும் வாங்கவும் திருச்சி டவுன் சென்று, தெப்பக்குளத்தின் சுற்றுப்புறச் சுவர்களையொட்டி நடைபோட்ட நாட்கள், கால்வலிக்க வலிக்க, ஓடி ஓடி மலைக்கோட்டையின் மேலேறிக் கால்வலி மறந்த பால்ய நாட்கள், பேருந்தேறிவந்து, மலைக்கோட்டையை நித்தமும் தரிசித்தபடியே பட்டயப்படிப்பை முடித்த பருவநாட்கள்... திருமணமாகி சென்னை வந்தபின் தாய்வீடு பயணிக்கும் ஒவ்வொரு முறையும் திருச்சி மலைக்கோட்டையைக் கண்டவுடன் சிறு குழந்தையெனக் குதூகலித்து கணவரையும் குழந்தைகளையும் வியப்புக்குள்ளாக்கிய நாட்கள்... வாழ்வில் என்றுமே மறக்கவியலா நாட்கள்.

காலப்போக்கில் சொந்தவீட்டுக் கனவு ஒவ்வொரு பணியாளருக்குள்ளும் குடியேற, குடியிருப்புகள் மீதான மோகமும் குடியிருப்புகளும் கொஞ்சம் கொஞ்சமாய்க் கைவிடப்பட்டுவிட்டன. பொன்மலையைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் இருந்த வயல்கள் எல்லாம் இப்போது வீடுகளாகிவிட்டன. சுடுகாட்டுக் கொட்டகையும் கூப்பிடுதூரத்தில் என்னுமளவில் மனைகளின் விற்பனை பெருகிவிட்டது.

இன்று… அம்மா வீட்டுக்குச் செல்லும்போதெல்லாம் களையிழந்தும் கவனிப்பாரற்றும் இன்னும் சில பகுதிகளில் இடிந்தும் கிடக்கும் குடியிருப்புகளைக் காணும்போது மனத்துக்குள் ஏனோ இனம் புரியாத வலி! வசதிகள் புகுந்துவிட்டன. மக்களின் வாழ்க்கைமுறை மாறிவிட்டது. ஆனாலும் அந்தப் பழைய நாட்களும் வாழ்க்கையும் மனத்தில் என்றும் இனிக்கும் நினைவுகள்தாமே….

M.Jagadeesan
23-04-2012, 04:08 AM
திருச்சிக்கு வடக்கே 30 கல் தொலைவில் இருக்கும் துறையூர்தான் என்னுடைய பிறந்த ஊர் திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில்தான் என்னுடைய இளங்கலைப் பட்டத்திற்கான படிப்பை முடித்தேன். அப்போது பொன்மலையில் உள்ள இரயில்வே பணியாளர்களுக்கான திரை அரங்கில் இதய கமலம் படம் பார்த்தது இன்றும் நினைவில் உள்ளது. கட்டணம் 25 பைசா.

ஞாயிறு தோறும் திருச்சி மலைக்கோட்டைக்கு சென்று வருவேன். தற்போது திருச்சி மாநகரம் மிகவும் மாறிவிட்டது. திருச்சி உறையூரில் நிறைய சொந்தங்கள் உண்டு.

1971 -ல் வேலை நிமித்தமாகச் சென்னைக்கு வந்த நான் இங்கேயே தங்கிவிடுவேன் என்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.
நீங்கள் திருச்சியைச் சேர்ந்தவர் என என்னும்போது, மகிழ்ச்சியாக இருக்கிறது. தற்போது " யாதும் ஊரே! யாவரும் கேளிர்! " என்ற நிலைக்குச் சென்றுவிட்டீர்கள்.

மதி
23-04-2012, 04:26 AM
அட நானும் துறையூரில் தான் பிறந்தேன்.. :) ஆனால் இப்போது திருச்சிக்காரன்.. :)

கலையரசி
23-04-2012, 05:21 PM
என் ஊர் என்று சொல்லும்போதே அதில் தொணிக்கும் பெருமிதத்தை எவராலும் உணரமுடியும். அறியா வயதில் அதுதானே நம் உலகம். அதிலும் பெண்களுக்குப் பிறந்தவீட்டுப் பெருமை பேசவும் கூடுதலாய் ஒரு வாய்ப்பினை வழங்கும் ஊரல்லவா? வாருங்கள். திருச்சி மாநகரம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

ஆனாலும் அந்தப் பழைய நாட்களும் வாழ்க்கையும் மனத்தில் என்றும் இனிக்கும் நினைவுகள்தாமே….

பொன்மலை என்றதுமே ஒரே மாதிரியான வீடுகள் அமைந்த ஊர் தான் நினைவுக்கு வருகிறது. புதிதாய் ஊருக்குள் நுழையும் வெளியூர்க் காரர்களுக்கு வீட்டைக் கண்டுபிடிப்பதற்குள் போதும் போது மென்றாகிவிடும்.

மரியாதையுடன் பேசும் திருச்சி தமிழ், எம்மதமும் சம்மதம் என்கிற அம்மக்களின் சகோதர மனப்பான்மை, திருட்டு சீசன், ரெயில்வே பணிமனை பற்றிய செய்திகள், தொலைக்காட்சி வருவதற்கு முன், பின் மக்களின் வாழ்க்கை முறை என அனைத்து அம்சங்களையும் குறிப்பிட்டு சொந்த ஊரின் அருமை பெருமைகளை அடுக்கியிருக்கும் கீதத்துக்குப் பாராட்டுக்கள்.

அந்த ஊருக்கே உரித்தான சிறப்புச் செய்திகளைச் சுவைபடச் சொல்லி பொன்மலையைச் சுற்றிக் காட்டிய கீதத்துக்கு நன்றி!

சிவா.ஜி
26-04-2012, 09:39 AM
பல மத மற்றும் கலாச்சாரத்துடன் ஒரே குடும்பமாய் பல குடும்பங்கள் வாழும் காலணி வாழ்க்கையை மிக சுவாரசியமாய் சொன்ன தங்கையின் எழுத்து ரசிக்க வைக்கிறது. திருச்சியின் பெருமைகளையும், மக்களின் மரியாதை கொடுக்கும் பழக்கத்தினையும், தான் பிறந்து வளர்ந்த ஊரில் தன் பிள்ளைகளையும் பெற்றெடுக்கும் பாக்கியம் பெற்றதையும் ஒன்றுவிடாமல் சொல்லி தன் ஊர் பாசத்தை வெகு அழகாய் எழுதிவிட்டீர்கள் தங்கையே.

சீக்கிரம் வாங்க...எல்லோரும் உச்சிபிள்ளையார் கோவில்ல ஒரு சந்திப்பு வெச்சுடலாம்.

தாமரை
26-04-2012, 11:53 AM
என்னுடைய அடுத்த ஊர் வேப்பம்பட்டி புதூர். வேம்படிதாளத்திலிருந்து மாட்டு வண்டியில் இளம்பிள்ளை வந்த நாங்கள் லாரியில் சாமான்களை ஏற்றிக் கொண்டு ஒரு காலை வேளையில் கிளம்பினோம். புது வீட்டுக்கு போகப் போறோம்னு தெரியும். ஆனால் அந்த ஊர் எப்படி, வீடு எப்படி, பள்ளிக் கூடம் எப்படி இதையெல்லாம் விட மனசில் வேற பயம் எதுவோ இருந்தது. புதுப்பிரதேசம். தெரிந்த முகங்களே இருக்காது. ஒரே ஆறுதல் நானும் என் அண்ணனும் ஒரே வகுப்பில் படிப்பது. (பள்ளிக் கூடம் போகணும்னு அழுது ஆர்பாட்டம் செய்து நான் அண்ணன் கூடவே பள்ளியில் சேர்ந்தாச்சி.)

இது பனையோலை வேயப்பட்ட வீடு. மண்சுவர்கள். மின்சாரம் கிடையாது. பெரிய கூடம். அதில் குழி வெட்டி ஷாஃப்ட் போட்டு 4 தறிகள், ஒரு வைண்டிங் மிஷின் ஒரு தார் போடும் மிஷின் எல்லாம் அதில் இணைக்கப்பட்டு இருந்தன. வெளியில் தாழ்வாரம் போல இழுத்து அங்கே டீசல் எஞ்சின். இன்னொரு சின்ன வீட்டில் ஒரு வார்ப்பிங் மெஷின். ஒரு முறை பெய்த மழையில் சமையலறை சுவர் இடிந்து விழுந்ததும் உண்டு. விளக்குக்காக கெஞ்சிக் கூத்தாடி தூரத்தில் இருந்த ஒரு வீட்டிலிருந்து வயர் இழுத்து மூன்று விளக்குகள் மட்டும் எரித்துக் கொண்டோம்.

வார்ப்பிங் மெஷினை மூத்த அண்ணன் கவனித்துக் கொள்ள, அக்காமார்கள் வைண்டிங் மிஷினை கவனித்துக் கொள்ள, ஃபிரீயா இருக்கும் போதெல்லாம் தார் போடுவது எங்கள் வேலை.

ஊர் சின்ன ஊர்தான். ஒரு முக்கிய வீதி. சாலை என்றால் ஒரே ஒரு சாலை. அதில் காலையில் ஒரு பஸ் அந்தப்பக்கம் இருந்து இந்தப்பக்கம் போகும். சாயங்காலம் இந்தப்பக்கம் இருந்து அந்தப் பக்கம் போகும். வையப்பமலை - புதன்சந்தை.. இதான் அதன் எல்லைகள். அங்கே போனால் வேறு பஸ் பிடிச்சு வேற ஊர் போகலாம். அந்த பஸ்ஸில் ஒரே ஒரு முறை வேம்படிதாளத்திற்கு பெரியப்பா வீட்டிற்குப் போனேன். ஒரு முறை நாமக்கல போனேன். உமாசங்கர் அந்த பஸ்ஸின் பெயர். அந்தக் கதை அப்புறம்.

ஊர் எல்லையில் முதல் வீடே எங்க வீடுதான். எங்க வீட்டிற்கு பின்புறம் காலியிடம் தாண்டி சாலை. வலது புறம் ஊருக்குள் செல்லும் மண்சாலை. அதன் அடுத்த எல்லையில் மாரியம்மன் கோவில். அங்க இருந்துதான் ஒரு 50 வீடுகள் இருக்கும். ஊருக்குள் ஒரு சின்ன இராமர் கோவில் உண்டு.

மண்சாலை தாண்டினால் முழுக்க சோளக்காடு. சோளக்காட்டு மூலையிலே அப்படின்னு பாட்டு எழுதலாம். பஸ் ஸ்டாப்பில் ஒரு காவியும் புழுதியும் அண்டிய சிமெண்ட் பெஞ்ச் இருக்கும். அதன் இரு கைப்பிடிகளில் வலது பக்கம் உள்ளது எனது குதிரை. இடது பக்கம் என் அண்ணனின் குதிரை.

வீட்டில் பானையில் வைத்திருக்கும் கடலையை கால் சட்டைப் பைகளில் நிரப்பிக் கொண்டு குதிரையேறிப் போருக்கும், வேட்டைக்கும், இராசகுமாரிகளை மீட்கவும் போவோம். சலிக்காமல் கதை. கதை. கதை.,

அப்பொழுது அம்புலிமாமாவில் மஹாபாரதம் முடிந்து வீர ஹனுமான் தொடர் வர ஆரம்பித்திருந்தது. அதுவும் மர்மத் தடாகம் தொடரும் எங்கள் கற்பனைகளைச் சிறகடித்துப் பறக்க வைக்கும். துணிப் பட்டையால் வால் வைத்துக் கொண்டு எத்தனையோ எலி இராட்சசர்களை குச்சிக் கதாயுதத்தால் துரத்தி அடித்திருக்கிறேன்.

இந்த ஊரில் எனக்கு அதிகம் நண்பர்கள் கிடைக்கலை. என் அண்ணனுக்கு மாத்திரம் ஓரிருவர் கிடைத்தனர். சிலமுறை அவர்களுடன் விளையாடப் போவதுண்டு. மற்றபடி வீடே கதி.

எங்கள் பள்ளிக்கு ஏறத்தாழ ஒண்ணரை கிலோமீட்டர் வையப்பமலை நோக்கித் தார்சாலையில் நடக்க வேண்டும். சைக்கிள் கூட அந்த ஊரில் அரிதுதான். விடியற்காலை அல்லது பொழுது சாய்ந்த நேரங்களில் ஒன்றிரண்டு மாட்டு வண்டிகள் போகும். மற்றபடி சாலை எங்களுக்கே..

வீட்டுக்கு பக்கத்தில் ஒரு 90 டிகிரி திருப்பம், அதில் இருந்து அரை கிலோ மீட்டர் நடந்தால் ஒரு மடம் வரும். அன்கே மறுபடி இரு 90 டிகிரி வளைவுகள். அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை சமயத்தின் மடம். அங்கிருந்த பெரியவர், எங்க அப்பாவின் தாத்தாவின் (நாங்க பெரியப்பா என்று கூப்பிடுவோம்) தம்பி வீட்டில் தான் தினமும் சாப்பிடுவார். அவர்கள் பக்கத்தில் மணலி சேடர்பாளையம் என்ற ஊரில் இருந்தார்கள். எங்கள் பள்ளியும் அந்த ஊரில்தான். பள்ளியில் இடைவேளை நேரத்தில் தாகமெடுத்தால் அவங்க வீட்டில் போய்தான் தண்ணீர் குடிப்போம். அந்த பெரியம்மா (பாட்டி) என் அம்மாவை அச்சில் வார்த்த மாதிரியே இருக்கும். சேடர்? அப்படின்னா ஆதிசேஷனின் பரம்பரையில் வந்தவங்களாம். ஆதிசேஷனின் மகள் நாகதத்தையின் வாரிசுகள் சேடர்கள் என அழைக்கப்படுகின்றனர்.

அமைதியான அந்த மடத்தில் பூச்செடிகள் நிறைய இருக்கும். நாங்களும் மாலை நேரத்தில் தினமும் மடத்தில் பூசைக்கும் பஜனைக்கும் போவோம். திரை விலக்கிக் காணும் ஜோதி தரிசனம் மிகவும் பிடித்த ஒன்று

பள்ளியில் 5 வகுப்புகள் மட்டுமே உண்டு, நாங்கள் மூன்றாம் வகுப்பில் சேர்ந்தோம். ஆசிரியர்கள் வேறு விதமாக பாடம் சொல்லித் தந்தார்கள். ஒரே ஒரு பணக்கார வீட்டுப் பையன் மட்டும் இங்கிலீஸ் நோட்ஸ் வைத்திருந்தான். முதன் முதலாக் நோட்ஸ் என்ற ஒன்று இருக்கிறது என்பது அங்குதான் எனக்குத் தெரியும்.

பசங்க ஒருத்தர் பேரும் இந்த ஊரில் எனக்கு நினைவில் இல்லை. இருந்தது ஒரே வருடம்தான் என்பது ஒன்று. இரண்டாவது எல்லோரும் பள்ளிக்கு வந்து நான் பார்த்ததே இல்லை. வாரத்திற்கு ஒரு நாள் இரண்டு நாள் வருகிற பசங்க நிறையவே இருந்தாங்க. என் அண்ணன் இந்தப் பள்ளியில் சேர்ந்ததில் இருந்துதான் படிப்பை இழந்தார்னு சொல்லலாம். ஆண்டுத்தேர்வை அரை மணி நேரத்தில் எழுதிமுடித்து விட்டு பெரிய மணலி அங்காளபரமேஸ்வரி கோயிலுக்கு, நண்பர்களோடு சென்று விட்டு நான் எழுதி முடித்த போது வந்து சேர்ந்து கொண்டார். இப்படி படிப்பை விட்டு அவர் ஊரைச் சுற்ற ஆரம்பிக்க படிப்பில் இருந்த கவனம் போய்விட்டது.

இளம்பிள்ளையில் இருந்த வரை கோதுமை பிரதான உணவு. கோதுமைக் களி.. வாராவாரம் அரிசிச் சாப்பாடு, கறி என இருந்தோம். ஆனால் இங்கு வந்தபின் சோளம் முக்கிய இடத்தைப் பிடித்தது. கோதுமை அளவிற்கு எனக்கு சோளக்களி பிடிக்கவில்லை. காலையில் கூழாக கரைத்துக் குடிப்பது பரவாயில்லை. வெங்காயம், மிளகாய் புண்ணியத்தில் உள்ளே போய் விடும். ஆனால் மதியம் மற்றும் இரவு வேளைகளில் சோளக்களி என்னை மிகவுமே பாடுபடுத்தியது. ஒரு மாதிரியான சப்பென்ற ருசி சோளத்திற்கு. கூடவே தேங்காய் துவையல் செய்து விட்டால் எனக்குச் சுத்தமா பிடிக்காது.

இதற்காகவே சனி ஞாயிறுகளில் சோளத்தை ரொட்டி போலச் சுட்டுத் தருவார் அம்மா. அவர்களுக்கும் ஒளிந்தது அந்த ஒருநாள்தான். அமாவாசைக்கு மட்டும்தான் இட்லி மற்றும் அரிசிச் சாப்பாடு.

புதூர், சேடர்பாளையம் தவிர மற்ற ஊர்களுக்கு போனதே இல்லை. சுற்றிலும் ஏளூர், கல்லாங்காடு, பெரியமணலி, பேக்காடு எனப் பல ஊர் பெயர்களைச் சொல்லுவார்கள். ஆனால் பெரியமணலியை வேம்படிதாளம் போனபோது கடந்ததோடு சரி. மற்ற ஊர்களுக்கு இன்னும் ஒரு முறை கூட போகவில்லை. இதில் பேக்காடு எங்கள் முன்னோர்களின் சொந்த ஊராம். அதாவது என் தாத்தாவின் தாத்தா அந்த ஊர்க்காரர். பேக்காடு முத்துவீரி செட்டியார் என்று ஒரு நிலப்பத்திரத்தில் படித்ததால் தெரிந்தது.

ராமர் கோவிலும் எங்களுக்கு பிடித்தமான இடம்தான். அங்கு இருந்த பூசாரிக்கு எங்களை ரொம்பவுமே பிடிக்கும். எங்களுக்கு சில மந்திரங்களையும் அவ்வப்பொழுது சொல்லிக் கொடுப்பார். ஓம் இராமய நமஹ என்று ஆரம்பிக்கும் அர்ச்சனை ஸ்துதியை ஒரு முறை மனம் போன போக்கில் சொல்லிக் கொண்டிருந்த போது இராமயி என்னும் பால்கார அக்கா எங்க அம்மாவிடம் உங்க பையன் போட்ட மந்திரத்தில் என் உடம்பு வலி போயே போச்சு என சிலாகித்து பேசியதைக் கேட்டு வெட்கத்துடன் சிரித்து இருக்கிறேன். ஊரில் இருந்த ஒரே கான்கிரீட் கட்டிடம் என இந்த இராமர் கோவிலைச் சொல்லலாம்,

ஒண்ணரை கிலோ மீட்டர் தார்ச் சாலையிலும், ஒரே ஒரு மண்தெருவிலுமே ஒரு வருடம் ஓடிப்போனது. சந்தைக்குக் கூட அழைத்துப் போக மாட்டார்கள். இடையில் மாரியம்மன் பண்டிகை ஒருமுறை வந்தது. அப்போதுதான் கூழ் முதன் முதலில் குடித்தேன். ஆத்தா கூழ்.. என்பதால் இரண்டு நாளைக்கு வயிற்றில் இடம் கொடுத்து வைத்திருந்தேன். கடைசியில் அம்மா விளக்கெண்ணை கொடுத்து அம்மனை என்னிடம் இருந்து பிரிக்க வேண்டியதாய் இருந்தது.

ஏளூர் சந்தைக்கும், பெரிய மணலி சந்தைக்கும் அம்மா அக்காமார்களை அழைத்துக் கொண்டு போய்வருவார். ஒரு முறை மணலி சந்தைக்குப் போய்விட்டு வரும்பொழுது சற்று இருட்ட ஆரம்பித்திருந்தது. திடீரென அம்மா அலறினாராம். காலில் எதுவோ கடித்து விட்டது. அவர் காலை உதற தூர விழுந்து நெளிந்து போன பாம்பை அக்கா பார்த்துவிட்டார். உடனே குறுக்கு வழியில் அம்மாவை இழுத்துக் கொண்டு மடத்திற்குப் போக அவர் காலில் கடி வாய்க்கு மேலே கட்டு போட்டு விட்டு வைத்தியருக்கு ஆள் அனுப்பி விட்டு அம்மாவை மாட்டு வண்டியில் வீட்டிற்கு அழைத்து வந்தார்கள்.

வைத்தியர் அப்பாவின் நண்பரின் அண்ணன்தான். திருமணமாகாத பிரம்மச்சாரி. அவர் ஒவ்வொரு குளிகைகளாக ஏழு குளிகைகளை வெற்றிலையில் வைத்து மடித்துக் கொடுக்க, ஒவ்வொன்றாக மென்று விழுங்கினார் அம்மா.

பின்னர் ஒரு கோழியை பிடித்துவரச் சொன்னார் வைத்தியர். அதன் வயிற்றை பிளேடால் நரசிம்மரைப் போலக் கீறி உள்ளே இருந்து ஈரலைக் கொத்தோடுப் பிடுங்கி அதைக் கடிவாயில் வைத்துக் கட்டினார். பிறகு இரவு முழுதும் தூங்காமல் பார்த்துக் கொள்ளச் சொன்னார்.

ஏறத்தாழ ஊரே எங்கள் வீட்டில்தான். பேச்சு பேச்சு பேச்சு என விடியும் வரை ஊரே விழித்த்டிருந்து அம்மாவைக் காப்பாற்றியது. 48 நாட்கள் உப்புகாரமில்லாமல் பத்தியச் சாப்பாடு. அம்மா பிழைத்ததே எங்களுக்குப் மிகப் பெரிய விஷயம். காலையில் அந்த ஈரல் கறுத்து விஷம் எல்லாவற்றையும் உறிஞ்சி விட்டிருந்தது.

ஒரே ஒரு முறை காட்டுக்கார கவுண்டருடன் வையப்பமலைக்கு மாட்டு வண்டியில் ஔவையார் படம் பார்க்கப் போனோம். வாரம் ஒரு படம் இளம்பிள்ளையில் பார்த்த நாங்கள்தான் வருடம் ஒரு படம் பார்த்தோம் என்பது மிக ஆச்சர்யமான விஷயம்.

ஊரைப் பற்றிச் சொல்லணும்னா வெயிலை முழுதும் நான் அனுபவித்தது இந்த ஊரில்தான். ஏன்னா மரங்கள் ரோட்டில் மட்டுமே உண்டு. மற்றபடி ஊரே ஒரு மாதிரி பொட்டல்தான். சோளக்காடுதான் கண்ணுக்குத் தெரியும் பசுமை. புதையலைப் புதைக்க கூட ஊருக்குள்ள ஒரு மரத்தடி இல்லை. சொம்பு இல்லை. பஞ்சாயத்து இல்லை. அடங்கொப்புரானே அந்த வேப்பம்பட்டி எந்தத் திசையில் இருக்குன்னு கூட இன்னும் எனக்குத் தெரியாது.

இன்னும் எனக்கு நினைவில் இருக்கும் இடங்கள், பள்ளிக்கூடம், மடம், வீடு, மாரியம்மன் கோவில், இராமர் கோவில். அப்புறம் ஒரே ஒரு கழிவு நீர் குட்டை.

அது ஊரில் சாக்கடைகள் வந்து சேரும் பெரிய குழி. அதன் பக்கத்தில் சோளக்காடு வரப்பு. வீராப்பா வரப்பில் கண்ணை மூடிக் கொண்டுவந்து அந்த சாக்கடைக்குள் விழுந்து எழுந்து நாறியிருக்கிறேன்.

அந்த ஊரைப் பொருத்த வரை நினைவிருக்கும் இரண்டு பெயர்கள் தர்மர் மாமா, மற்றும் இராஜமாணிக்கம் மாமா. அவ்வளவுதான். இதில் இராஜமாணிக்கம் என்பவர் அப்பாவின் நம்பர். ஆமாங்க அவரை நம்பித்தான் அப்பா அந்த ஊருக்கே போனாராம். வீடும் சரியில்லை. கரெண்ட் கனெக்ஷனும் கிடைக்கலை. அந்தப் பக்கம் இருந்து ஓயரிழுத்து குண்டு பல்பு எரிய வச்சா அதை யாரோ மின்சார வாரியத்துக்குப் போட்டுக் குடுத்து அதுக்கு கப்பம். அப்புறம் இன்னொரு நிகழ்ச்சி நடந்தது.

ஒரு நாள் காலை. அப்பா அவரோட சொந்தக்காரர் யாரோ காலமாயிட்டார்னு காலையில் சைக்கிளை எடுத்துக் கொண்டு வையப்பமலை போய் அங்கிருந்து பஸ் பிடிச்சி போயிட்டாரு.

திடீர்னு பஸ்ஸில் வந்து இறங்கின அம்மாவோட சொந்தக்காரர் அம்மாவோட அப்பா இறந்திட்டதா தகவல் சொல்ல..

அம்மா, அண்ணன் யார் கையிலும் காசில்லை. எப்படி நாமக்கல் போக?

அம்மா, அக்காமார்கள், அண்ணன்மார்கள், நான் அப்படின்னு எல்லோரும் வீடு வீடா அலைஞ்சோம் ஒரு பத்து ரூபா காசுக்காக. அன்னிக்கு பத்து ரூபா எங்களுக்குக் குடுக்க ஊரில் மனசிருக்கறவங்க கிட்ட காசில்லை. காசிருக்கறவங்க கிட்ட மனசில்லை.

அப்போ அங்க வந்த அப்பாவின் வெளியூர் வியாபாரி நண்பர்தான் கையில 10 ரூபா கொடுத்து உடனே கிளம்புங்க என அனுப்பி வச்சார்.

நாங்கள் புதன் சந்தை வரை நடையும் மாட்டுவண்டியுமா ஓடி ஓடி அங்கிருந்து நாமக்கல் பஸ் பிடிச்சு தாத்தாவை இறுதியாக பாக்கப் போனோம்.

இந்தச் சம்பவம் தான் அப்பாவுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையையும் தகர்த்திடுச்சி. இந்த ஊர்ல இனிமே இருக்கவே கூடாது முடிவு பண்ணி இளம்பிள்ளைக்கு அருகில் காடையாம்பட்டி என்ற ஊருக்கு மாற முடிவெடுத்தார். அப்ப நான் நாலாவது படிச்சுகிட்டு இருந்தேன். காலாண்டு பரிட்சை முடிந்து கொஞ்சநாள்தான் ஆகியிருந்தது.

இளம்பிள்ளையில் இருந்து வந்தப்ப இருந்த பயம் இப்போது எனக்கு இல்லை. நண்பர் இல்லை. பகைவர் இல்லை. நன்மை இல்லை. தீமை இல்லை.. நான் கொஞ்சம் ஞானியாகத்தான் இருந்தேன் அப்போது.

தாமரை
26-04-2012, 04:27 PM
அடுத்த ஊர் காடையாம்பட்டி. அந்த ஊர்க்கதையை இங்கே படிக்கலாம்.

http://www.tamilmantram.com/vb/showthread.php/13624

அதுக்கு மேல சொல்லணும்னா மூணு நாலு விஷயம் இருக்கு. அந்த ஊர் கோவிலுக்குப் பக்கத்தில் கோணப்புளியங்கா மரம் இருக்கும். அதன் பழங்களைப் பறித்துச் சாப்பிட மிகவும் பிடிக்கும். அப்புறம் அந்த ஊர் பள்ளியும் மிக மிகச் சின்னது. சத்துணவு சூப்பரா இருக்கும்.

இளம்பிள்ளையில் கோதுமை, புதூரில் சோளம் போல இங்க எங்களுடைய முக்கிய உணவுதானியம் கேழ்வரகு. சோளம் இல்லை என்பதே எனக்கு மிகவும் ஆறுதலாய் இருந்தது, ஆனால் அதுவும் நீண்ட நாட்கள் நீடிக்கலை, கொடுமையான பஞ்சம். 1976 களில் அந்தக் கொடுமையை அனுபவித்தவர்கள் கலைஞருக்குப் பல காலம் ஓட்டுப் போடவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். உணவுதானியங்கள் கிடைக்கவில்லை. ஊரில் காட்டுக்காரர்களின் வீட்டுக்குத் தேடித் தேடிப் போய் மரவள்ளிக்கிழங்கு கிலோ ஒரு ரூபாய்க்கு வாங்கி வந்து அதை அவித்தே பசியாற வேண்டியக் கட்டாயம் இருந்தது. உணவுத்தானியங்களின் பதுக்கலினால் சோறு என்பதே கனவாகிப் போனது. கடைசியில் அமெரிக்கா புண்ணியத்தில் ரேசன் கடைகளில் மக்காச் சோள ரவை வழங்கப்பட்டது. வயிற்று வலி வரும் என்றாலும் மக்காச் சோள ரவை சுவையாகத்தான் இருந்தது.

இங்கிருந்தும் சித்தர்கோவில் நடந்து போகிற தூரம்தான். ஒரு நாள் நான்,அண்ணன், அம்மா, அக்காமார்கள் எல்லாம் சித்தர்கோவிலுக்கு சென்றுவிட்டு மலையேறி முருகனை கும்பிட்டு விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தோம். காவடி எடுத்துக் கொண்டு மலையேறிக் கொண்டிருந்தவர் ஒருவர் திடீரென ஆவேசம் வந்தவராக இங்க வாம்மா என அம்மாவைக் கூப்பிட்டார்.

அம்மா அவர் பக்கம் போக, என் எல்லையை விட்டுப் போகப் போறயா நீ என ஆவேசப்பட்டார் அவர்.

இல்லை சாமி என அம்மா பதற, அதெல்லாம் உனக்குத் தெரியாது. போன வாரமே பால்காய்ச்சியாச்சி. வேணும்னா உன் வீட்டுக்காரரைப் போய்க் கேட்டுக்கோ என ஆவேசமாக சாமியாடினார்(!!!)

அம்மா அவர்காலில் விழுந்து எந்த தப்பிருந்தாலும் எங்களை மன்னிச்சுக்குங்க.. நீங்கதான் எங்க கூட இருந்து காப்பாத்தணும் என வேண்ட..

சரி சரி.. நான் முன்னால போறேன் நீ பின்னாடியே வா என ஆடி அருள் புரிந்து விட்டு மலையேறி விட்டது (நிஜமாவே மலைதான் ஏறினார்) சாமி,

வீட்டுக்கு வந்த பின் அம்மா அப்பாவிடம் சொல்ல.. அப்பா அதற்குப் பின்னால்தான் சொன்னார். சேலத்தில் வீடு பார்த்து பால் பொங்கியாச்சி. சித்திரை மாதம் குடி போகிறோம். வீடு ரொம்பப் பெரிசு.. வாசல்ல யார் வந்து கத்தினாலும் சமையலறையில் கேட்காத அளவிற்குப் பெரிசு. இப்படி அவர் சொன்ன விஷயங்களில் எங்கள் கனவு விரிந்தது. என் கனவுகளில் மாடி வீடுதான் வந்தது. கடல் மாதிரி வீடு.. அப்பா வியாபாரம் செய்யப் போகிறார்..

ஆனால் ஒரே பிர்ச்சனை முழு ஆண்டுத்தேர்வுக்கு கொஞ்ச நாள் இருக்கிறது. அப்பா பள்ளியில் சென்று டி.சி கேட்க எங்கள் மீது அதீதப் பாசம் கொண்டிருந்த டீச்சர்கள் தங்கள் வீட்டில் இருந்து தேர்வு எழுதிவிட்டு குழந்தைகள் வரட்டும் என கெஞ்சிக் கேட்டுக் கொண்டனர். அப்பா ஒப்புக் கொள்ளவில்லை. ஊரில் அவருக்கு யார் மீதோ கோபம். ஒரு நாள் கூட யாரும் இனி இந்த ஊரில் இருக்க மாட்டோம் என டி.சி. வாங்கிக் கொண்டு வந்து விட்டார்.

நான்கைந்து மாதங்கள்தான் என்றாலும் இந்த ஊர் மிக உறுதியான மனதைத் தந்தது எனச் சொல்லலாம். கஷ்டப்படத் தயங்காத மனம் இங்குதான் எனக்குக் கிடைத்தது,

கீதம்
27-04-2012, 12:05 AM
திருச்சிக்கு வடக்கே 30 கல் தொலைவில் இருக்கும் துறையூர்தான் என்னுடைய பிறந்த ஊர் திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில்தான் என்னுடைய இளங்கலைப் பட்டத்திற்கான படிப்பை முடித்தேன். அப்போது பொன்மலையில் உள்ள இரயில்வே பணியாளர்களுக்கான திரை அரங்கில் இதய கமலம் படம் பார்த்தது இன்றும் நினைவில் உள்ளது. கட்டணம் 25 பைசா.

ஞாயிறு தோறும் திருச்சி மலைக்கோட்டைக்கு சென்று வருவேன். தற்போது திருச்சி மாநகரம் மிகவும் மாறிவிட்டது. திருச்சி உறையூரில் நிறைய சொந்தங்கள் உண்டு.

1971 -ல் வேலை நிமித்தமாகச் சென்னைக்கு வந்த நான் இங்கேயே தங்கிவிடுவேன் என்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.
நீங்கள் திருச்சியைச் சேர்ந்தவர் என என்னும்போது, மகிழ்ச்சியாக இருக்கிறது. தற்போது " யாதும் ஊரே! யாவரும் கேளிர்! " என்ற நிலைக்குச் சென்றுவிட்டீர்கள்.

தாங்களும் திருச்சியைச் சேர்ந்தவர்தானா? ஒத்த ஊர்க்காரர் என்பதே மகிழ்வைத் தருகிறது ஐயா. தங்களுடைய இளவயதில் பார்த்த திருச்சியைப் பற்றிச் சொல்லுங்களேன்.

ஆரம்பகாலத்தில் சென்னைக்கும் திருச்சிக்கும் உள்ள பரபரப்பு வித்தியாசமே பெரும் வித்தியாசமாய் இருக்கும். இப்போது தாங்கள் சொல்வது போல் திருச்சியிலும் நிறைய மாற்றங்கள். சென்னைக்கு இணையானப் பரபரப்பு தொற்றிக்கொண்டுவிட்டதாக அறிகிறேன்.

கீதம்
27-04-2012, 12:07 AM
அட நானும் துறையூரில் தான் பிறந்தேன்.. :) ஆனால் இப்போது திருச்சிக்காரன்.. :)

இப்படியெல்லாம் ஒற்றை வரியில் ஊர்ப்பெருமையை சொல்லிமுடித்துவிடக்கூடாது. நிறைய சொல்லவேண்டும். காத்திருக்கிறோம். :)

கீதம்
27-04-2012, 12:12 AM
பொன்மலை என்றதுமே ஒரே மாதிரியான வீடுகள் அமைந்த ஊர் தான் நினைவுக்கு வருகிறது. புதிதாய் ஊருக்குள் நுழையும் வெளியூர்க் காரர்களுக்கு வீட்டைக் கண்டுபிடிப்பதற்குள் போதும் போது மென்றாகிவிடும்.

வெளியூர்க்காரர்கள் என்றில்லை அக்கா, பழகிய எங்களுக்கே குழப்பம் வருவது உண்டு. காலனிக்குள் வேறுவீடு மாறினால்கூட நானும் தம்பியும் பள்ளிவிட்டு வரும்போது வீட்டைக் கண்டுபிடிக்க முடியாமல் எங்காவது சுற்றிக்கொண்டிருப்போம். ஏதாவது மரம், வீட்டுக்கதவு போன்ற அடையாளங்களைப் பார்த்துக்கொள்ளச் சொல்லி அப்பா சொல்லித்தருவார்.


மரியாதையுடன் பேசும் திருச்சி தமிழ், எம்மதமும் சம்மதம் என்கிற அம்மக்களின் சகோதர மனப்பான்மை, திருட்டு சீசன், ரெயில்வே பணிமனை பற்றிய செய்திகள், தொலைக்காட்சி வருவதற்கு முன், பின் மக்களின் வாழ்க்கை முறை என அனைத்து அம்சங்களையும் குறிப்பிட்டு சொந்த ஊரின் அருமை பெருமைகளை அடுக்கியிருக்கும் கீதத்துக்குப் பாராட்டுக்கள்.

அந்த ஊருக்கே உரித்தான சிறப்புச் செய்திகளைச் சுவைபடச் சொல்லி பொன்மலையைச் சுற்றிக் காட்டிய கீதத்துக்கு நன்றி!

பாராட்டுக்கு மிகவும் நன்றி அக்கா.

கீதம்
27-04-2012, 12:16 AM
பல மத மற்றும் கலாச்சாரத்துடன் ஒரே குடும்பமாய் பல குடும்பங்கள் வாழும் காலணி வாழ்க்கையை மிக சுவாரசியமாய் சொன்ன தங்கையின் எழுத்து ரசிக்க வைக்கிறது. திருச்சியின் பெருமைகளையும், மக்களின் மரியாதை கொடுக்கும் பழக்கத்தினையும், தான் பிறந்து வளர்ந்த ஊரில் தன் பிள்ளைகளையும் பெற்றெடுக்கும் பாக்கியம் பெற்றதையும் ஒன்றுவிடாமல் சொல்லி தன் ஊர் பாசத்தை வெகு அழகாய் எழுதிவிட்டீர்கள் தங்கையே.

சீக்கிரம் வாங்க...எல்லோரும் உச்சிபிள்ளையார் கோவில்ல ஒரு சந்திப்பு வெச்சுடலாம்.

ஆஹா... தாராளமா செய்யலாம். வரும்போது சொல்றேன் அண்ணா.

உங்கள் ஊக்கமிகுப் பாராட்டுக்கு நன்றி. உங்கள் ஊர்ப் பதிவையும் நேரமிருக்கும்போது தொடருங்கள். அறிந்துகொள்ள ஆவலாய் இருக்கிறோம்.

கீதம்
27-04-2012, 12:30 AM
என்னுடைய அடுத்த ஊர் வேப்பம்பட்டி புதூர். வேம்படிதாளத்திலிருந்து மாட்டு வண்டியில் இளம்பிள்ளை வந்த நாங்கள் லாரியில் சாமான்களை ஏற்றிக் கொண்டு ஒரு காலை வேளையில் கிளம்பினோம். புது வீட்டுக்கு போகப் போறோம்னு தெரியும். ஆனால் அந்த ஊர் எப்படி, வீடு எப்படி, பள்ளிக் கூடம் எப்படி இதையெல்லாம் விட மனசில் வேற பயம் எதுவோ இருந்தது. புதுப்பிரதேசம். தெரிந்த முகங்களே இருக்காது. ஒரே ஆறுதல் நானும் என் அண்ணனும் ஒரே வகுப்பில் படிப்பது. (பள்ளிக் கூடம் போகணும்னு அழுது ஆர்பாட்டம் செய்து நான் அண்ணன் கூடவே பள்ளியில் சேர்ந்தாச்சி.)வேப்பம்பட்டி புதூர் அனுபவங்களில் பல இடங்களில் வேம்பின் ருசி காண்கிறேன். அண்ணனின் பள்ளிக்கூட வாழ்க்கை திசை மாறியது, தினமும் சோளக்களி தின்னும் கொடுமை, அம்மாவுக்கு பாம்பு கடித்தது, அவசரத்தேவைக்கும் பணமில்லாமல் உதவிக்கு அலைந்தது போன்றவை மனத்தை மிகவும் நெகிழ்த்தின.

அதே சமயம், குழந்தைத் தனத்தின் பெரும் வெளிப்பாடாய் அமைந்த நிகழ்வுகள் இனிமை. குதிரை ஓட்டிப் போரிட்டு அரசகுமாரியை மீட்டல், அம்புலிமாமா கதைகளின் தாக்கம், இராமயி அக்காவின் உடல்நோவு தீர்த்த மகிமை போன்றவற்றைப் படிக்கையில் மிகவும் ரசித்தேன். குறுகிய காலமென்றாலும் குறைவில்லாத அனுபவங்களின் தொகுப்பை எழுதிய விதம் அருமை.

தாமரை
27-04-2012, 05:42 AM
சேலம் என் ஊர் என பெருமையுடன் இன்று சொல்லிக் கொள்ளும் ஊர் இதுதான். இதுவரை இருந்த மற்ற ஊர்களெல்லாம் சேலம் மாவட்டத்தைச் சார்ந்ததாகவே இருந்ததாலும், நான் பிறந்தது சேலம் அரசுப் பொது மருத்துவமனை என்பதாலும் அதில் தப்பே இல்லை.

எல்லா மிகப் பெரிய ஊர்களும் எதாவது ஒரு நதியைச் சார்ந்தே இருக்கும். சேலத்தின் மையத்தில் ஓடுவது திருமணிமுத்தாறு. சேலத்தின் கிழக்கே விழுப்புரம் மாவட்டம் கல்ராயன் மலைகளில் உற்பத்தி ஆகும் அது சேலம் வழியே ஓடி கரூர் அருகே காவிரியில் கலக்கும். இது பருவகால நதிதான் என்றாலும் இன்று ஜீவநதி. காரணம் ஊரின் சாக்கடைகள் அனைத்தும் இதில் இணைக்கப்பட்டதே ஆகும். சென்னைக்குக் கூவம் போல சேலத்திற்கு திருமணிமுத்தாறு. இந்த ஆற்றின் நீரில் நெல் விவசாயம் இன்றும் நடக்கிறது.

திருமணி முத்தாற்றை ஒட்டினாற் போலத்தான் சேலத்தின் முக்கியப் பிரதேசங்களான பழைய பேருந்து நிலையம், போஸ் மைதானம், நேரு கலையரங்கம், சேலத்தின் பிரசித்தி பெற்ற கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் கோட்டை பெருமாள் கோவில், பழம்பெருமை பெற்ற சுகவனேஸ்வரர் ஆலயம், ராஜகணபதி ஆலயம் என பல முக்கியஸ்தலங்கள் உண்டு. கோட்டை என்று பெயர் இருக்கே கோட்டை இருக்கா என்று பலரும் கேலி செய்வார்கள். அதையும் கண்டுபிடித்தோம். திருமணி முத்தாற்றில் பழைய நியூ சினிமாவிற்கு எதிர்புறம் உள்ள தொங்கு பாலத்தின் வழியாக நடந்து போனால் கரையில் கருங்கற்களால் அடுக்கப்பட்ட அந்தக் கால கோட்டை மதிலின் சிறு பகுதியைக் காணலாம். பலருக்கு இப்படி ஒன்று இருப்பதே தெரியாது.

திருமணிமுத்தாற்றில் அந்தக்காலத்தில் முத்தும் கோமேதகமும் கிடைக்குமாம். அதனால் அந்தப் பெயர் வந்ததாகச் சொல்வார்கள். இன்னும் கூட திருச்செங்கோடு அருகில் கோமேதகம் கிடைப்பதாகக் கேள்விப்பட்டு இருக்கிறேன்.

சேலத்திற்கே பிரபலம் சினிமா மற்றும் மாம்பழம்.

அண்ணன் சிவா.ஜி சொன்ன மாதிரி மாம்பழம் அதிகம் விளைவது என்னவோ கிருஷ்ணகிரிதான் என்றாலும்..

அந்தக்காலத்தில் கிருஷ்ணகிரி சேலத்தின் பகுதியாகவே இருந்தது. சேலம் மாவட்டத்தின் வடக்கு எல்லை கர்நாடகம், மேற்கில் கோவை மாவட்டம், தெற்கில் திருச்சி மாவட்டம், கிழக்கில் விழுப்புறம் ஆற்காடு மாவட்டங்கள். அதனால்தான் அது சேலம் மாம்பழம் மிகப் பிரசித்தம் என்பது அண்ணனுக்குத் தெரியாமல் இருக்கலாம்.

சேலம் குண்டு மாம்பழம்தான் அல்ஃபோன்ஸா என அழைக்கப்படும் மாம்பழம் ஆகும். இப்படி உள்ளூரில் ஒரு பெயரும் வெளியூரில் ஒரு பெயருமாக மாம்பழங்கள் இருக்கும்.

சேலத்தின் முக்கியப் பொழுது போக்கு சினிமாதான். அந்தக்காலத்திலேயே சேலத்தில் 55 தியேட்டர்கள் இருந்தன. தமிழ் நாட்டில் அப்பொழுது தியேட்டர்களின் எண்ணிக்கையில் இரண்டாம் இடம் சேலத்திற்கு. சேலத்தின் மாடர்ன் தியேட்டர்ஸ் பல கலைஞர்களை வளர்த்து விட்டிருக்கிறது. சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் வழியில் இருந்த அந்த ஸ்டுடியோவில் பல வெற்றிப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இன்று ஒரே ஒரு நினைவுச் சின்னம் மட்டுமே பாக்கி. சேலத்தில் ஒரு கிலோமீட்டர் பரப்பளவில் ஓரியண்டல், சக்தி ஓரியண்டல், கைலாஸ், பிரகாஷ், சந்தோஷ், சப்னா, சாந்தம், சங்கம், சங்கம் பாரடைஸ், சித்ரா, சாந்தி, சங்கீத், நாகா, ஜெயா, நியூ சினிமா, விக்டோரியா, பாரத், கல்பனா, தேவி என தியேட்டர்கள் வரிசையாக இருக்கும். இந்தப் பக்கம் போனால் கண்டிப்பாக எதாவது ஒரு சினிமா பார்த்து விட்டுத் திரும்பலாம். சிவாஜி படங்கள் எப்பொழுதும் சாந்தி தியேட்டரில்தான் ரிலீஸ் ஆகும். போஸ் மைதானத்திற்கு அந்தப் பக்கம் கல்லாங்குத்து என்ற பகுதி உண்டு. சினிமா வினியோகஸ்தர்களின் அலுவலகங்கள், கரகாட்ட, நையாண்டி மேள, நாடக கலைக் குழுக்கள் அங்கேதான் இருக்கும். சேலத்தின் கலைமையம் அது.

போஸ் மைதானம் : கண்காட்சி, சர்க்கஸ், பொதுக்கூட்டம் என இம்மைதானம் ஒரு மிகப் பெரிய பொழுது போக்கு இடம். இதை ஒட்டி இருக்கும் நேரு கலையரங்கத்தில் நாடகங்கள் நடைபெறும். ஆர்.எஸ். மனோகர், எஸ்.வி.சேகர், சோ, ஒய்.ஜி. மகேந்திரன் இப்படிப் பல சினிமாக் கலைஞர்களின் நாடகங்கள் இங்கே நடக்கும்.

கோட்டை மாரியம்மன் கோவிலில் இருந்து இராஜகணபதி கோவில் வரையிலான ஒரு நீண்ட முக்கோணப் பகுதி முதல் அக்ரஹாரம் என அழைக்கப்படும். இதுதான் சேலத்தின் முக்கிய வியாபர மையம். சேலத்தின் ரங்கநாதன் தெரு, உஸ்மான் ரோடு என்று சொல்லலாம்.

ராஜகணபதி கோவில் தாண்டினால் இரண்டாவது அக்ரஹாரம். மொத்த விலைக் கடைகள், மருத்துவமனைகள் என இதுவும் பரப்பான இடம்தான். இரண்டிற்கும் மத்தியில் இருப்பது வ.உ.சி. மார்க்கட்.

இது சென்னைக் கொத்தவால் சாவடி போல. எல்லாவகைக் காய்கறி, பூக்கள் என எல்லாமே விடியற்காலை இங்கே வந்து இறங்கும். லாரியிலிருந்தே ஏலம் விடப்பட்டு சில்லரை வியாபாரிகளுக்கு விற்கப்படும். மற்ற இடங்களை விட இங்கே காய்கறி விலை மிக மிகக் குறைவாக இருக்கும் வெளியில் வெங்காயம் கிலோ விலை 2:00 ரூபாய் என்றால் காலை ஏல விலை 20 பைசா அளவில்தான் இருக்கும். பின்னர் அங்கேயே 50 பைசா என விலையேறி பின்னர் உள்ளூருக்கு வரும்பொழுது 2:00 ரூபாயாக இருக்கும். இன்னும் எந்த விழா என்றாலும் இங்கு ஏலத்தில் காய்கறி வாங்குவதே நடக்கிறது.

சேலத்தின் வடக்கு எல்லையில் வீற்றிருப்பவர் வெண்ணங்கொடி முனியப்பன். வடக்கு நோக்கிச் செல்லும் அத்தனை வாகனங்களுக்கும் இவர்தான் செக்கிங் இன்ஸ்பெக்டர். தென்னெல்லை பத்ரகாளியம்மன். மேற்கில் கரிமேடு கரிவரதராஜ பெருமாள் கிழக்கில் யார் தெரியலை. இவங்கதான் காவல் தெய்வங்கள்.

இன்னும் வரும்

சிவா.ஜி
08-05-2012, 06:38 PM
எங்கள் ஊருக்கும் சில சரித்திர பெருமைகள் உண்டு. கிருஷ்ணகிரி சோழர்கள் காலத்தில் நிகரிலி சோழ மண்டலம் மற்றும் விதுகதழகி நல்லுர் எனவும் அதற்கு முன்பே எயில் நாடு எனவும், நுளம்பர்கள் காலத்தில் நுளம்பாடி எனவும் அழைக்கப்பட்டது. கிருஷ்ண என்றால் கறுப்பு கிரி என்றால் மலை. கறுப்பு கிரானைட் கற்கள் நிறைந்த பிரதேசம் என்பதால் இப்போதைய பெயர் என ஒரு கருத்தும், கிருஷ்ணதேவராயரின் ஆட்சிக்கு உட்பட்ட பிரதேசமானதால் இந்தப் பெயர் எனவும் சொல்லப்படுகிறது. ராபர்ட் கிளைவ் கவர்னராக இருந்த சமயத்தில் கிருஷ்ணகிரிக்கு அருகில் இருக்கும் காவேரிப்பட்டிணத்தில்தான் திப்புசுல்தான் படைகளுடன் பெரும் போர் நிகழ்ந்தது. அதில் ஆங்கிலேயர்கள் தோற்றுப்போன வெற்றிச் சரித்திரமும் இருக்கிறது.


மேலும் “பாரா மஹால்” எனப்படும் பனிரெண்டு கோட்டைகள் உள்ள பிரதேசமாகவும் இருந்துள்ளது. இந்த பனிரெண்டு கோட்டைகளில் ஒன்றான ஜெகதேவிக் கோட்டை எங்கள் வீட்டிலிருந்து பத்துக் கிலோமீட்டர்கள். சைக்கிளில் நானும் என் நண்பன் நாகராஜனும் அந்த ஊருக்குப் போவோம். அவனுடைய அக்கா வாழ்க்கைப்பட்ட ஊர். அவரைப் பார்க்கப்போவோம். அப்படியே கோட்டைக்குள் போய் ஒவ்வொரு பகுதியாய் சுற்றிக் களைத்துத் திரும்பி, ஊரில் அப்போதிருந்த மூன்று டெண்ட் கொட்டகைகளில் ஏதாவது ஒன்றில் படமும் பார்ப்போம். நாகராஜனின் அப்பா பார்பர் ஷாப் வைத்திருந்ததாலும், இவனும் படிப்பு ஏறாமல் அதே கடையில் வேலை செய்ததாலும் காசு அவனிடம் கொஞ்சம் தாராளமாகவே புழங்கும்.


சில சமயங்களில் சைக்கிளிலேயே 42 கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் தர்மபுரிக்குப் போய் சினிமா பார்த்ததும் உண்டு. அப்போது தர்மபுரிதான் எங்கள் மாவட்டம். தற்சமயம் ஆனந்த் என்ற பெயருள்ள சினிமா தியேட்டர் இருக்கும் இடம் அப்போது பன்றிகள் மேயும் ஒரு குட்டை. அதனையொட்டிதான் அப்போதே பல லட்சங்கள் செலவில் கட்டப்பட்ட வீடுகளும் இருந்தன. அவற்றில் ஒன்றுதான் என் பால்ய நண்பன் ரிஸ்வானின் வீடு. பெரும்பாலான நேரங்கள் அவன் வீட்டில்தான் இருப்பேன். ஐந்தாவது படிக்கும்போதே அவனுடன் சேர்ந்து பீடி குடித்துவிட்டு பீடா போட்டுக்கொண்டு வீட்டுக்குப் போய் அம்மாவிடம் அடி வாங்கி அதோடு அதனை விட்டக் கதையும் நடந்தது.


அப்போதெல்லாம் ஒரு தள்ளுவண்டியில் பெரிய பெட்டியைப்போல இருக்கும் பயாஸ்கோப் எங்கள் ஊரின் தெருக்களில் வலம் வரும். சின்ன பிள்ளைகள் மட்டுமே அதற்குள் நுழைந்து உட்கார முடியும். சிறிய கதவைத் திறந்து ஐந்தாறு பொடுசுகளை அதற்குள் அனுப்பி, கதவை அடைத்துவிட்டு படம் காண்பிப்பார்கள். சந்தோஷமாய்ப் பார்த்துவிட்டு வெளியே வரும்போது மன்னன் படம் ரஜினியைப்போல முழுக்க வியர்வையால் நனைந்து வெளியே வருவோம்.


நான் படித்த ஆரம்பப்பள்ளியின் பெயர் சப்ஜெயில் ஸ்கூல். வெள்ளையர் காலத்தில் சப்ஜெயிலாக இருந்ததை பள்ளியாக மாற்றியதால் அந்தப் பெயர். இப்போதும் அந்த சாலையின் பெயர் சப்ஜெயில் ரோடுதான். அந்தப்பள்ளியில் ஐந்தாவது படிக்கும்போது என் வகுப்புத்தோழி அருணா. ஒரு வழக்கறிஞரின் மகள். குண்டு முகம். உப்பியிருக்கும் கண்ணங்கள், கல்லுக்குளீரம் அருணாவைப்போலவே குண்டுக் கண்கள் அழகாய் இருப்பாள். அவள் என்னுடன் நெருக்கமாய் பழகியதைப் பொறுக்காத சிலர் வேண்டுமென்றே வம்பிழுத்து, பி.டி பிரீயடில் அவர்களுடன் கட்டிப்புரண்டு சண்டை போட்டு, அந்த சண்டைக்கான காரணம் தெரிந்து, அடுத்த வாரம் பள்ளிச் சுற்றுலாவுக்காக செஞ்சிக்கோட்டைக்குப் போன போது அருணா இன்னும் நெருக்கமாகி என் கை கோர்த்துக்கொண்டே என்னுடன் சுற்றியது....மறக்கமுடியா மலரும் நினைவுகள்.


அப்போதெல்லாம் பள்ளிக்கூட வாசலில் ஒரு கிழங்கு விற்பார்கள். இடுப்பு உயரத்தில் ஆரஞ்சுக் கலர் தோல், வெளிர் மஞ்சள் நிற உட்புறம் என்று பார்க்கவே பிரமாண்டமாய் இருக்கும். கத்தியால் சின்னச் சின்னத் துண்டுகளாய் சீவியெடுத்து 3 பைசாவுக்கு ஒன்று என விற்பார்கள். இப்போது அந்தக் கிழங்கு காணக்கிடைக்கவேயில்லை. எப்படி மறைந்தது என்றே தெரியவில்லை. மதியச் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டு திரும்பப்போகும் போது என் அப்பாவும் சாப்பிட்டுவிட்டுக் குட்டித்தூக்கம் போட்டுக்கொண்டிருப்பார். பட்டனில்லாத ஜிப்பா போன்ற பக்க வாட்டில் பாக்கெட் வைத்த சட்டையைத்தான் அவர் அணிவார். அவர் தூங்குகிறாரா என்பதை உறுதி படுத்திக்கொண்டு நைஸாக அந்தப் பாக்கெட்டில் கையைவிட்டுக் கிடைக்கும் சில்லறையை அள்ளிக்கொண்டு பறந்துவிடுவேன். நீண்ட நாட்களாய் நான் செய்து வந்த இந்தத் திருட்டு அவருக்குத் தெரியாது என்ரே நினைத்துக்கொண்டிருந்தேன்...ஆனால் எல்லாவற்ரையும் தெரிந்து கொண்டே தூங்குவது போல பாசாங்கு செய்து வந்திருக்கிறார் என்று பிறகுதான் தெரிந்தது. எனக்காகவே அதில் சில்லறையைப் போட்டு வைத்திருப்பார் என்று அம்மா சொல்லித்தான் தெரியும். நான் அப்பாவுக்கு செல்லப்பிள்ளை என்பதால்..இந்தத் திருட்டு சந்தோஷமாய் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.


ஒருமுறை ஐந்து ரூபாய்க் கொடுத்து எண்ணை வாங்கிவர என் அம்மா அனுப்பினார். ரவுண்டானா பக்கத்திலிருக்கும் கடையில் எண்ணை வாங்கிக்கொண்டு, திரும்பி வந்துகொண்டிருந்தேன். அங்கே குதிரை வண்டிகள் அதிகமாய் நிற்கும். இப்போதைய ஆட்டோ ஸ்டாண்டைப் போல அது குதிரை வண்டி ஸ்டாண்ட். குதிரைகளுக்கு புல் விற்றுக்கொண்டிருக்கும் பெண்களும் அங்கே வரிசையாய் அமர்ந்திருப்பார்கள். நான் அந்த இடத்தைக் கடந்துகொண்டிருக்கும்போது ஒரு வேட்டி கட்டிய ஆள் சடாரென்று புல் விற்றுக்கொண்டிருந்த ஒரு பெண்ணை முடியைப் பிடித்து எழுப்பிக் கையில் வைத்திருந்தப் பையிலிருந்து அருவாளை எடுத்து ஒரே வெட்டில் தலையைத் துண்டாக்கி, ஏதோ காய்கறியைப்போல அந்தத் தலையை தான் கொண்டு வந்திருந்தப் பையில் போட்டுக்கொண்டு சாவகாசமாய், ரத்தம் ஒழுகும் அருவாளை ஒரு கையிலும், தலை இருக்கும் பையை இன்னொரு கையிலும் பிடித்துக்கொண்டு நடந்து போனான். காவல்நிலையத்துக்குப் போய் சரண்டராகிவிட்டான் என பிறகு பரபரப்பாகப் பேசப்பட்ட ஒரு சம்பவம் அது.


இதைப்பார்த்த நான் கையிலிருந்த எண்ணைக் கிண்னத்தை ரோட்டில் போட்டுவிட்டு அலறியடித்துக்கொண்டு வீட்டுக்கு ஓடி அம்மாவைப் பிடித்துக்கொண்டு அழுதேன். இப்போதும் அந்த இடத்துக்குப் போனால் அந்த நினைவுகள் எட்டிப்பார்ப்பது நிற்கவில்லை.


எங்கள் ஊரில் இருக்கும் காட்டினாயனப்பள்ளி (நாங்கள் காட்னாம்பட்டி எனச் சொல்லுவோம்) முருகன் கோவிலில் நடக்கும் தைப்பூசத் திருவிழாவிற்காக வருடம் முழுதும் காத்திருப்போம். அந்தக் கோவிலின் தேர் உலா நகருக்குள் வரும்போது நடக்கும் கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் அனைத்தையும் ஓடி ஓடிச் சென்று பார்ப்போம். தேரின் மீது பொரியும் சில்லறைக் காசுகளும் வீசுவார்கள் அந்தக் காசுகளை பொறுக்க பெரிய ரகளையே நடக்கும்.(அப்படியும் கணிசமா நாங்க தேத்திடுவோம்ல...)
கோவிலில் நிறைய கடைகள் முளைத்திருக்கும். வாண்ண விளக்கு தோரணங்கள், கவரிங் ந்கைகள், கலர்கலராய் சீனிமிட்டாய்கள், பஞ்சுமிட்டாய், ஜவ்வுமிட்டாய் என அந்தத் திருவிழா நடக்கும் ஏழு நாட்களும் எங்கள் முன்னிரவு நேரங்கள் அங்கேயேதான் கழியும். ஒவ்வொருநாளும் ஒரு கச்சேரி இருக்கும் டி.எம்.சவுந்திரராஜனெல்லாம் அங்கு கச்சேரி நடத்தியிருக்கிறார். திருவிழாவின் கடைசி நாளில் நடக்கும் வாணவேடிக்கை மிக அற்புதமாக இருக்கும். இப்போதும் அந்தத் திருவிழா நடக்கிறது...ஆனால் அந்த சந்தோஷம் இல்லை. பெரும்பாலவர்களின் முன்னிரவுகளை நெடுந்தொடர்கள் ஆக்ரமித்துக்கொள்வதால், யாரும் அதிகமாய் வருவதில்லை. விழாக் குழுவினரும் உற்சாகமிழந்து ஏதோ பேருக்கு நடத்துகிறார்கள்.


எங்கள் ஊரின் ஒவ்வொரு அங்குலத்தையும் என் கால்கள் அளந்திருக்கின்றன. அவ்வளவு அலைந்திருக்கிறேன். இப்போதும் என் மகளுடன் இரு சக்கர வண்டியில் சில சந்து பொந்துகளில் நுழைந்து பயணிக்கும்போது, வருஷக்கணக்கா வெளியிலயே இருந்திருக்கீங்க...நாங்க இங்கேயே இருக்கோம் எங்களுக்குக் கூட இந்த இடமெல்லாம் தெரியாதே நீங்க எப்படி டாடி ஞாபகம் வெச்சிருக்கீங்க என என் மகள் கேட்பாள். இது வைத்துக்கொண்ட நினைவுகள் இல்லை...பதிந்துவிட்ட நினைவுகள்ன்னு சொல்வேன்.


அடுத்து நான் ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்புவரை படித்த ஆடுதுறையைப் பற்றி சொல்கிறேன்.

கீதம்
09-05-2012, 03:17 AM
சில சமயங்களில் சைக்கிளிலேயே 42 கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் தர்மபுரிக்குப் போய் சினிமா பார்த்ததும் உண்டு.


அப்போதெல்லாம் ஒரு தள்ளுவண்டியில் பெரிய பெட்டியைப்போல இருக்கும் பயாஸ்கோப் எங்கள் ஊரின் தெருக்களில் வலம் வரும்.


ஐந்தாவது படிக்கும்போதே அவனுடன் சேர்ந்து பீடி குடித்துவிட்டு பீடா போட்டுக்கொண்டு வீட்டுக்குப் போய் அம்மாவிடம் அடி வாங்கி அதோடு அதனை விட்டக் கதையும் நடந்தது.


அடுத்த வாரம் பள்ளிச் சுற்றுலாவுக்காக செஞ்சிக்கோட்டைக்குப் போன போது அருணா இன்னும் நெருக்கமாகி என் கை கோர்த்துக்கொண்டே என்னுடன் சுற்றியது....மறக்கமுடியா மலரும் நினைவுகள்.

சினிமாவின் மீதான உங்கள் ஈர்ப்பை அச்சுப்பிசகாமல் பறைசாற்றும் காரியங்களின் பட்டியலைப் படித்துவிட்டு மெலிதாய் இழையோடுகிறது புன்னகை.


நான் படித்த ஆரம்பப்பள்ளியின் பெயர் சப்ஜெயில் ஸ்கூல்.

பள்ளியின் பெயரைக் கேட்டாலே பகீரென்றது. காரணம் புரிந்து ரசித்தேன்.


அப்போதெல்லாம் பள்ளிக்கூட வாசலில் ஒரு கிழங்கு விற்பார்கள். இடுப்பு உயரத்தில் ஆரஞ்சுக் கலர் தோல், வெளிர் மஞ்சள் நிற உட்புறம் என்று பார்க்கவே பிரமாண்டமாய் இருக்கும். கத்தியால் சின்னச் சின்னத் துண்டுகளாய் சீவியெடுத்து 3 பைசாவுக்கு ஒன்று என விற்பார்கள். இப்போது அந்தக் கிழங்கு காணக்கிடைக்கவேயில்லை.

பனங்கிழங்கா அண்ணா?


எல்லாவற்ரையும் தெரிந்து கொண்டே தூங்குவது போல பாசாங்கு செய்து வந்திருக்கிறார் என்று பிறகுதான் தெரிந்தது. எனக்காகவே அதில் சில்லறையைப் போட்டு வைத்திருப்பார் என்று அம்மா சொல்லித்தான் தெரியும். நான் அப்பாவுக்கு செல்லப்பிள்ளை என்பதால்..இந்தத் திருட்டு சந்தோஷமாய் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

அப்பாவின் அளவிட இயலாத அன்பை வெளிப்படுத்திய வரிகள். பிள்ளை ஏமாறக் கூடாது என்னும் எண்ணத்தோடு, இங்கே இல்லையெனில், வேறு எங்காவது கை போய்விடப்போகிறது என்னும் அக்கறையும் கூட காரணமாக இருக்கலாம்.


நான் அந்த இடத்தைக் கடந்துகொண்டிருக்கும்போது.......

இதைப்பார்த்த நான் கையிலிருந்த எண்ணைக் கிண்னத்தை ரோட்டில் போட்டுவிட்டு அலறியடித்துக்கொண்டு வீட்டுக்கு ஓடி அம்மாவைப் பிடித்துக்கொண்டு அழுதேன். இப்போதும் அந்த இடத்துக்குப் போனால் அந்த நினைவுகள் எட்டிப்பார்ப்பது நிற்கவில்லை.

மிகவும் அதிர்ச்சியில் உறையவைத்த நிகழ்வு. சிறுவயதில் இது போன்ற சம்பவங்கள் எந்தவித மன உளைச்சலைத் தரும் என்று நினைத்தாலே விதிர்ப்பு உண்டாகிறது.


நீங்க எப்படி டாடி ஞாபகம் வெச்சிருக்கீங்க என என் மகள் கேட்பாள். இது வைத்துக்கொண்ட நினைவுகள் இல்லை...பதிந்துவிட்ட நினைவுகள்ன்னு சொல்வேன்.

ஆழப் பதிந்த நினைவுகளும் பிரமாதம். பாராட்டுகள்.


அடுத்து நான் ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்புவரை படித்த ஆடுதுறையைப் பற்றி சொல்கிறேன்.

காத்திருக்கிறோம். விரைவில் வாங்க அண்ணா.

jayanth
09-05-2012, 03:32 AM
கிருஷ்ண"கிரி"வலம் வந்தேன்...

எண்ணக் கோர்வை அருமை...

jayanth
09-05-2012, 03:35 AM
சினிமாவின் மீதான உங்கள் ஈர்ப்பை அச்சுப்பிசகாமல் பறைசாற்றும் காரியங்களின் பட்டியலைப் படித்துவிட்டு மெலிதாய் இழையோடுகிறது புன்னகை.பள்ளியின் பெயரைக் கேட்டாலே பகீரென்றது. காரணம் புரிந்து ரசித்தேன்.பனங்கிழங்கா அண்ணா?அப்பாவின் அளவிட இயலாத அன்பை வெளிப்படுத்திய வரிகள். பிள்ளை ஏமாறக் கூடாது என்னும் எண்ணத்தோடு, இங்கே இல்லையெனில், வேறு எங்காவது கை போய்விடப்போகிறது என்னும் அக்கறையும் கூட காரணமாக இருக்கலாம்.மிகவும் அதிர்ச்சியில் உறையவைத்த நிகழ்வு. சிறுவயதில் இது போன்ற சம்பவங்கள் எந்தவித மன உளைச்சலைத் தரும் என்று நினைத்தாலே விதிர்ப்பு உண்டாகிறது.ஆழப் பதிந்த நினைவுகளும் பிரமாதம். பாராட்டுகள்.காத்திருக்கிறோம். விரைவில் வாங்க அண்ணா.


அருமையான பின்னூட்டம் கீதம் அவர்களே.

தாமரை
09-05-2012, 12:42 PM
சேலத்திற்கு பல சிறப்புகள் உண்டு. சேலத்தில் ஆடி மாதத் திருவிழா மதுரை சித்திரைத் திருவிழாவிற்கு ஒப்பானது.

சேலம் கோட்டை மாரியம்மன் இருக்காங்களே, சுத்து பட்டு எட்டு ஊர்களுக்கு அவள்தான் கண்கண்ட தெய்வம், ஆடி பதினெட்டு முடிந்து வரும் செவ்வாய்,புதன், வியாழன், வெள்ளி என நான்கு நாட்கள் திருவிழா. சேலத்தில் பல மாரியம்மன் கோவில்கள் உண்டு. அத்தனைக்கும் தலைமையிடம் கோட்டை பெரியமாரியம்மன். குகை மாரியம்மன், (செவ்வாய்)பேட்டை, அன்னதானப்பட்டி மாரியம்மன், தாதகாப்பட்டி மாரியம்மன் என எல்லாக் கோவில்களிலும் ஒரே நேரத்தில் திருவிழா. ஊரே மிக பரபரப்பாய் இருக்கும் காலம் ஆடி மாதம்.

பதினைந்து நாட்கள் ஊரே ஜேஜேன்னு இருக்கும். பட்டிமன்றங்கள், நாடகங்கள், சினிமா, ஆர்க்கெஸ்ட்ரா என தினம் எதாவது நிகழ்ச்சி இருக்கும். பத்தாதற்கு போஸ் மைதானத்தில் அரசு பொருகாட்சி. இதுவரை இவ்வளவு பெரிய கண்காட்சியை நான் வேற எங்கும் பார்த்ததில்லை. கண்காட்சியிலும் தினம் ஒரு நாடகம், தினம் ஒரு சினிமா உண்டு.

மாரியம்மன் பண்டிகையில் செவ்வாய் கிழமை சக்தி அழைப்பு மற்றும் உருளு தண்டம், புதன் பூமிதித்தல், வியாழன் வண்டி வேடிக்கை, வெள்ளி வாணவேடிக்கை மற்றும் சத்தாபரண ஊர்வலம், சனிக்கிழமை கம்பம் விடுதல் என ஊரே அல்லோலகல்லோலப்படும். நையாண்டி மேளம், கரகாட்டம் என கிராமியக் கலைகளும் உண்டு. வண்டி வேடிக்கைதான் ஹைலைட். மக்கள் புராண காட்சிகள் போல அலங்கரிக்கப்பட்ட மின்னொளி வண்டிகளில் குகை மாரியம்மன் கோவிலுக்கு வருவார்கள். மாடரன் தியேட்டர்ஸ், புலிக்குத்தித் தெரு நண்பர்கள், கார்கானா நண்பர் குழு, ஜிக்க பக்கா நண்பர் குழு என பல பெரிய பெரிய குழுக்கள் இதில் பங்கேற்க சிறந்த அலங்கார வண்டிகளுக்குப் பரிசளிக்கப்படும். இரவு பனிரெண்டு மணிவரை கூட இலட்சக்கணக்கான மக்கள் கூடியிருந்து களிக்கும் நாட்கள் அவை.

பள்ளிகளுக்கும் இந்தக் காலத்தில் விடுமுறை என்பதால் எங்களை வீட்டில் சாப்பாட்டு நேரத்தில் மட்டுமே பார்க்க முடியும். இரவு முழுவதும் ஊர்சுற்றி நல்ல நல்ல நிகழ்ச்சிகளை தவறாமல் கண்டு களிப்போம். கண்காட்சி நுழைவுக் கட்டணம் 50 பைசாதான் என்பதால் போரடிக்கும் பொழுதெல்லாம் கண்காட்சி செல்வோம். கண்காட்சி கண்கொள்ளா காட்சிதான். ஒவ்வொரு வருடமும் புதுவகை ஃபேன்சி ஐட்டங்கள், பொம்மைகள், உபகரணங்கள், டெல்லி அப்பளம், மிளகாய் பஜ்ஜி, பல அரசு துறைகளின் காட்சியகங்கள், பலப்பல இராட்டினங்கள் என பார்க்க பார்க்க அலுக்காத உயிரற்றவைகள் ஒருபுறம். பட்டாம் பூச்சிகளாய் பலப்பல வண்ணங்களில் மகளிர் ஒருபுறம். பொருட்காட்சி 45 நாட்கள் முதல் இரண்டு மாதங்கள் வரை இருக்கும்.

சேலத்தில் கொண்டாடப்படும் இன்னும் சில முக்கியப் பண்டிகைகள்

ஆடி 1 - தேங்காய் உருட்டி நார்நீக்கி, ஒரு கண்ணை மட்டும் நோண்டி அதில் அரிசி, வெல்லம், பருப்பு இட்டு நெருப்பில் சுட்டு பிள்ளையாருக்குப் படைப்பது.

ஆடி பதினெட்டு - மேட்டூர், பவானி, சித்தர்கோவில், கந்தாசிரமம் போன்ற நீருள்ள இடங்களுக்குச் சென்று நீராடுவது.

ஆடி இருபத்தி எட்டு - மேட்டூர் முனியப்பன் கோவில் விழா.

ஆவணி - ஆவணி அவிட்டம், விநாயகர் சதுர்த்தி - விநாயகர் சதுர்த்தியும் இரண்டு நாட்கள் விழாவாக கொண்டாடப்படும். நாடகம் பட்டி மன்றம் ஆர்க்கெஸ்ட்ரா என அமர்க்களப்படும்.

புரட்டாசி - ஐப்பசி ஆயுத பூஜை / தீபாவளி. தீபாவளி என்றாலே வெடி. இரவு முழுக்க வெடி. தீபாவளி அன்று சினிமா பார்க்காதவர்களுக்கு மோட்சம் கிடையாது.

கார்த்திகை தீபம் -

மார்கழி மாதம் முழுக்க அனைத்துக் கோவில்களிலும் ஆன்மீக கதாகாலட்சேபம் உண்டு. காலை திருப்பாவை திருவெம்பாவை போன்றவையும் மாலையில் இராமாயணம், மகாபாரதம், கந்தபுராணம் என புராணக் கதாகாலட்சேபங்களும் நடக்கும். தினமும் தவறாமல் செல்பவர்களில் நானும் ஒருவன்.

தை மாதம் பொங்கலோடு சௌடேஸ்வரி அம்மன் பண்டிகையும் வெகு விமர்சனமாகக் கொண்டாடப்படும், இதுவும் நான்கு நாட்கள் பண்டிகைதான். மாரியம்மன் பண்டிகைக்கு அடுத்த பெரிய விழா எனச் சொல்லலாம்.

மாசி மாத சிவராத்திரி மயானக் கொள்ளை சேலம் மாவட்டத்தில் மிகப் பிரசித்தம்.

பங்குனி உத்திரம் - முருகன் கோவில்களில் மிக மிக சிறப்பாகக் கொண்டாடப்படும். தைப் பூசத்தை விட பங்கு உத்திரம் சேலம் பக்கத்து முருகன் கோவில்களின் மிக முக்கியப் பண்டிகை.

சித்திரையில் பெரிய பண்டிகைகள் கிடையாது, ஆனால் வைகாசி மாதம் மூலைக்கு மூலை உள்ள முனியப்பன் கோவில்களில் விழா நடக்கும். ஆனி மாதமும் அமைதியாகப் போகும்.

இப்படி விழாக் கொண்டாடுவதில் மிக ஆர்வமான ஊர் சேலம். ஆடி, தை, தீபாவளி மூன்றிற்கும் குறைந்தது ஒரு வாரம் தொழில்கள் நிறுத்தப்பட்டு விடும்.

சேலத்தில் சிலபல நல்ல இடங்கள் உண்டு.

1. குண்டு போடும் தெரு - பயந்துடாதீங்க. அந்தக் காலத்தில சரியா மதிய உணவு நேரத்தில ஒரு பீரங்கியை வெடிக்க வைப்பாங்களாம். அதுதான் மத்தியான ஆலைச் சங்கு மாதிரி. அதனால அந்தத் தெருவிற்கு அப்படிப் பெயர்

2. ஷெட் - தொற்று நோய் பரவிய காலத்தில் இங்கு அமைக்கப் பட்ட கூரைகளுக்குக் கீழ் நோய் பாதித்தவர்களை வைத்து சிகிச்சை அளித்தார்களாம். அதான் ஷெட். இன்று இது சேலத்தின் முக்கியப் பகுதி.

3. ஃபேர்லேண்ட்ஸ் - அழகாபுரம் என்று அழைக்கப்பட்ட இது இன்று மிகவும் பணக்கார ஏரியா. தமிழை ஆங்கிலம் விழுங்கியதைப் போல இன்னிக்கு யாருக்கும் அழகாபுரம்னா தெரியாது. ஃபேர்லேண்ட்ஸ்தான் தெரியும்.

4. குகை - இதனோட பேர்காரணம் யாருக்குமே தெரியாது. ஆனால் ஜவுளித் தொழில் செய்யும் மக்கள் அதிகம் வாழும் இடம். அந்தக் காலத்தில் இங்கே கைத்தறி நெசவு முக்கியத் தொழில். இன்று ஏற்றுமதித் துணி தயாரிப்பவளும் வியாபாரிகளும் வாழுமிடம்.

5. செவ்வாய்பேட்டை.

மொத்த வியாபாரஸ்தலம். இந்தப் பகுதியில் மொத்த வியாபாரம் மிக அமோகமாக நடக்கும். அரிசி மண்டிகள், வெல்லமண்டிகள், ஹார்டு வேர் கடைகள் என இங்கு தினமும் நடக்கும் வியாபாரம் பல கோடிகள். இந்தப் பகுதியில் வீடுகள் மிகக் குறுகலாக இருக்கும். ஐந்தடி அகலம் 80 அடி நீளம் கொண்ட வீடுகள் கூட உண்டு. இங்கு வெள்ளிக் கொலுசு செய்யும் தொழிலும் அமோகமாக நடக்கும். தமிழகத்தின் பல்வேறு பகுதிக்கும் இங்குத் தயாராகும் கொலுசுகள் விற்பனைக்கு அனுப்பப் படுகின்றன. அடுத்த முறை கொலுசு வாங்கும் பொழுது செவ்வாய் பேட்டை உங்களுக்கு கண்டிப்பாக நினைவிற்கு வரும். அடுக்கு மாடி வீடுகள் இன்னும் அதிகம் வரவில்லை. செவ்வாய் பேட்டை முழுவதுமே கடை வீதிதான். இதுவும், அருகே இருக்கும், லீ பஜாரும் தமிழகத்தின் புகழ் பெற்ற மொத்த வியாபார இடம்தான்

ஆலைகளில் இருந்து சரக்கை கொண்டு வரும் லாரிகளும், இங்கிருந்து விற்பனை ஆகி செல்கின்ற பொருட்களை ஏற்றி செல்கின்ற லாரிகளுமாய் வீதிகள் எப்பொழுதும் வண்டிகளால் நிறைந்திருக்கும் .குறிப்பாய், செவ்வாய் மற்றும் சனிக் கிழமைகளில் வீதிகளில் நடக்கக் கூட இடம் இருக்காது. முழுவதும் லாரி மற்றும் மாட்டு வண்டிகளால் ஆக்கிரமிக்கப் பட்டிருக்கும்.

கடை வீதியில் இருந்து திரும்பும் இடத்தில் செவ்வாய் பேட்டை மாரியம்மன் கோவில் இருக்கிறது. சேலத்தில் அமைந்திருக்கும் ஒவ்வொரு மாரியம்மனும் ஒரு சில விஷயங்களுக்கு புகழ் பெற்றவை. செவ்வாய் பேட்டை அம்மன் அலங்காரத்துக்கு புகழ் பெற்ற கோவில். குகை மாரியம்மன் மக்களை அதிகம் பெற்ற கோவில். பேட்டை மாரியம்மன் வியாபாரிகள் அதிகம் இருக்கும் இடத்தின் காரணமாகவோ என்னவோ, நகைகளின் நடுவே ஜொலிப்பாள். பொதுவாக, மாரியம்மன் என்றால் முகம் மட்டும் தெரியும் வண்ணமே அமைக்கப் பட்டிருக்கும் மூலவர் சிலை. ஆனால் இங்கு அம்மன் பீடத்தின் மேல் ஒரு காலை மடக்கி, மறு காலை தொங்கவிட்டு அமர்ந்திருப்பாள். வீதியில் இருந்து பார்த்தாலே அம்மனின் முகம் நன்கு தெரியும்.

அம்மனை தரிசித்து மேலே சென்றால், முதலில் நீங்கள் பார்ப்பது , பருப்பு பஜார், அதன் பின் அரிசி பஜார் பின் வெல்ல பஜார். ரொம்ப பேஜாரா இருக்கில்ல. ஆனால் சேலத்தின் வியாபார மையம் இது.வெல்ல பஜாரின் முடிவில் அமைத்திருப்பது வண்டிப் பேட்டை. முன்பு வெளியூரில் இருந்து வண்டிக் கட்டிக் கொண்டு வணிகம் செய்வ வருவோ தாங்கள் வண்டிகளை நிறுத்தும் இடமாக இருந்தது. இப்பொழுது லாரிகளும், வேன்களும் நிறுத்தும் இடமாக மாறி விட்டது. செவ்வாய்பேட்டையில் இருந்து சேலம் ரயில் நிலையம் செல்லும் வழியில் அமைத்து இருப்பது லீ பஜார். அனைத்து விதமான உணவு தான்யங்களும் இங்கு மொத்த விலையில் விற்கப் படுகிறது. இது பொதுவாக, குடோன்கள் அமைந்தப் பகுதி. மிகப் பெரிய பரப்பளவில் அமைத்துள்ளது.

செவ்வாய்பேட்டை அந்தக் காலத்தில் சேலத்தின் மேற்கெல்லை. இங்க இருக்கிற காளியம்மன் சாந்த சொரூபி.


6. சின்னகடை வீதி,முதல் அக்ரஹாரம், இரண்டாம் அக்ரஹாரம்

நகைகள், துணிகள், மருத்துவமனைகள் என மிக அதிக வியாபாரத் ஸ்தலங்கள் உள்ள இடங்கள். இது உள்ளூர் மக்கள் அதிகம் பொருள்களை வாங்குகிற இடம்.


சேலம் எனக்கு பலப்பல வாய்ப்புகளைத் தந்ததுன்னு சொல்லலாம். இருந்தாலும் சேலத்தை அந்த அளவிற்கு என்னால் அறிய முடியலை என்கிற வருத்தம் எனக்கு உண்டு. 4 வதிலிருந்து 12 வது வரை எட்டு வருட வாழ்க்கைதான் இங்க சேலத்தில். சேலத்தை முழுசா அனுபவிக்க இது கொஞ்சம் கூட பத்தாது, ஏன்னா சேலம் வெறும் ஊர் அல்ல. சேலம் ஒரு பலலைக் கழகம் மட்டுமல்ல. சேலம் ஒரு உலகம். சேலத்தை பற்றி ஆழமாக நினைத்துப் பார்த்தால் இந்த ஊரை ஒரு மாதம் சுத்திப் பார்த்தா வாழ்க்கை மிக எளிதாகப் புரிஞ்சிடும்னு சொல்லலாம்.

ஆன்மீகத்தில் சேலம் பெரிசா பேசப்படறதில்லை. ஆனாலும் ஆன்மீகம் இங்க ஆழமாக உண்டு.
வியாபாரத்தில் சேலம் பெரிசா பேசப்படறதில்லை. ஆனாலும் அதுவும் இங்க ஆழமாக உண்டு.
தொழிற்சாலைகளில் சேலம் பெரிசா பேசப்படறதில்லை. ஆனாலும் அதுவும் இங்க ஆழமாக உண்டு.
கலைகளில் சேலம் பெரிசா பேசப்படறதில்லை. ஆனாலும் அதுவும் இங்க ஆழமாக உண்டு.
சுற்றுலாத் தளங்களில் சேலம் பெரிசா பேசப்படறதில்லை. ஆனாலும் அதுவும் இங்க உண்டு.

ஆமாங்க சேலத்தில் இல்லாதது இல்லைன்னு சொல்லலாம்.

இன்னும் வரும்

சிவா.ஜி
09-05-2012, 07:22 PM
தாமரையின் ஊர் நினைவுகள் பாரதிராஜாவின் படம் பார்த்ததைப்போன்ற மனசுக்கு நெருக்கமான உணர்வுகளை அளிக்கிறது. எவ்ளோ அழகா சொல்றாரு. தான் வசித்த ஊர்களின் பெருமை சொல்லும் இந்த பதிவுகளால் அந்தந்த ஊர்களின் பெருமை சொல்கிறார்...மேலும்....தன் வாழ்க்கையின் அங்கம் சொல்லி ஆனந்தப்படுத்துகிறார். ரொம்ப நல்லாருக்கு தாமரை. நிறைய கேள்விப்படாத சுவாரஸியமான தகவல்களுடன் உங்க ஊர்...ஊர்களின் செய்தி....படிக்கப் படிக்க பரவசப்படுத்துது.

சிவா.ஜி
09-05-2012, 07:25 PM
ரொம்ப நன்றிம்மா கீதம். ஒவ்வொரு பகுதியாய் பிரித்து...நான் ரசித்து வாழ்ந்த வாழ்க்கையை...ரசித்து எழுதிய பின்னூட்டம். நன்றிம்மா தங்கையே.

சிவா.ஜி
09-05-2012, 07:26 PM
மிக்க நன்றி ஜெயந்த்.

கீதம்
10-05-2012, 02:12 AM
சேலம் பற்றிய இனிய நினைவுகள் அசர வைக்கின்றன. பாராட்டுகள் தாமரை அவர்களே.

ஒவ்வொரு மாதங்களிலும் சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிகைகளே சொல்கின்றன, மக்களின் மகிழ்வான மனநிலையையும் விழாக்கள் மீதான ஆர்வத்தையும்.

குண்டு போடும் தெரு பெயர்க்காரணம் அறிந்து ரசித்தேன்.

செவ்வாய்ப்பேட்டையில் ஐந்தடி அகலம், எண்பதடி நீளம் கொண்ட வீடுகள் பற்றியறிந்து வியந்தேன். கொலுசு வாங்கும்போது செவ்வாய்ப்பேட்டையோடு உங்களுடைய பதிவும் நினைவுக்கு வரும்.

திருச்சியிலும் அரசுப் பொருட்காட்சி பார்த்திருக்கிறேன். அந்த அப்பளம் அதுதான் அங்க ஹைலைட். ஆனால் பல சமயம் ஒவ்வாமல் வயிற்றுவலி வந்துவிடும்.

மனமொன்றி எழுதிய எழுத்துக்களில் பதிந்திருக்கும் நினைவலைகளை மிகவும் ரசித்தேன். சேலம் பற்றி நிறைய அறிந்துகொள்ள முடிந்தது இந்தப்பதிவால்.

தொடரும் பகுதிகளுக்காகக் காத்திருக்கிறோம்.

கீதம்
10-05-2012, 02:13 AM
அருமையான பின்னூட்டம் கீதம் அவர்களே.பின்னூட்டத்தையும் ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு மிகவும் நன்றி ஜெயந்த்.

சொ.ஞானசம்பந்தன்
12-05-2012, 06:45 AM
சேலத்தை இண்டு இடுக்கு விடாமல் சுற்றிக் காட்டியதற்கு நன்றி , தாமரை அவர்களே ! அது ஓர் உலகம் எனச் சொல்வது பொருத்தம் தான் . அந்த ஊருக்கு ஒரே ஒரு முறை , அதுவும் ஒரு நாள் மட்டும் , போயிருக்கிறேன் .

M.Jagadeesan
12-05-2012, 06:58 AM
சேலத்தை அழகாகப் படம் பிடித்துக் காட்டிய தாமரை அவர்களுக்கு நன்றி. அங்கு அம்மாப்பேட்டை பகுதியில் எங்கள் இனத்தவர் , கைத்தறி நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். தெருவோர சிற்றுண்டிக் கடைகளுக்கு சேலம் மாநகரம் மிகவும் பிரபலம். குறைந்த செலவில் தரமான சிற்றுண்டி அங்குக் கிடைக்கும்.

ராஜா
17-07-2012, 05:27 PM
சிவாவின் எழுத்துநடை பிரமிக்கவைக்கிறது..

மிக அற்புதமான தொடர் சிவா.. பாராட்டுகள்..!

சிவா.ஜி
17-07-2012, 07:14 PM
ஆகா....ராஜா சாரை நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி. வாங்க வாங்க....நலமாய் இருக்கீங்களா?


ரொம்ப நன்றி ராஜா சார்.

ராஜா
18-07-2012, 04:06 AM
நலமே சிவா.. நன்றி..!

jasminet
30-03-2014, 06:16 AM
தாமரை,
சேலம் பற்றி சொன்னதற்கு நன்றி..! பேர் லேண்ட்ஸ் ன் தமிழ்ப் பெயரைச் சொன்னதற்கும்...

சிவா.ஜி
19-06-2014, 10:43 PM
அன்பு உறவுகளுக்கு மீண்டுமோர் வேண்டுகோள்....புதிதாய் மன்றத்தில் இணைந்த உறவுகள் தங்கள் ஊர்களைப் பற்றியும் எழுதலாமே....கலையரசி மேடம், கீதம் தங்கை, தாமரை போன்றோரின் ஊர்வாசனைக்குப் பிறகு உங்களூர் வாசமடிக்கட்டுமே....வாருங்கள் நண்பர்களே...!!!

கீதம்
23-06-2014, 12:04 AM
சிவாஜி அண்ணாவின் கருத்தை நானும் வழிமொழிகிறேன். புதிய உறவுகள் உங்கள் ஊர்களைப் பற்றி அனைவரும் இங்கு அறியத் தாருங்களேன்.

கும்பகோணத்துப்பிள்ளை
29-07-2014, 12:17 PM
சிறுவயதில் எங்கள் அத்தை சொல்லித்தந்த பாடல்
...மாம்பழமாம் மாம்பழம்! பாடலில்
...சேலத்துமாம்பழம்...தித்திக்கும் மாம்பழம்.. என்ற வரிகளைப்பாடும் போதே எச்சில் வழிந்து மற்றவர்கள் சிரித்தது நினைவுக்கு வருகிறது.
சேலம்பற்றி திகட்டாத தித்திப்பாய் பகிர்ந்தீர்கள்! தாமரை அவர்களே!
சுவையோ சுவை!

கும்பகோணத்துப்பிள்ளை
29-07-2014, 01:27 PM
பிறந்தது கொரடாச்சேரி பின் தந்தையின் பணிமாற்த்தினால் சன்னாநல்லூர், குளிக்கரை, பூதமங்கலச்சேரி, பாலையூர், என பலவிடங்கள் மாறி நான் ஜந்தாம் வகுப்பு படிக்கும் போது மன்னை (மன்னார்குடி) வந்து பின் கல்லுரி வரை அங்கிருந்தது சிஏ படிக்க சென்னை வந்தது, எனது பெற்றோர் கும்பகோணம் திப்பிராஜபுரத்தில் குடிபுகுந்தது, நான் வேலையின் போது இருந்த புதுக்கோட்டை, திருச்சியில் அடைந்த அனுபவங்கள், ஆடிட்க்காக (தணிக்கைக்காக) பல ஊர்கள் பல நாடுகள் சுற்றித்திரிந்தாலும் மன்னையும், திருச்சியும் எனக்கு கிடைத்த மகத்தான பாக்கியங்கள், எதைச்சொல்ல வார்த்தைகள் அடைக்கின்றன ஆனால் எழுதத்தெரியவில்லை!
பாமினி ஆற்றங்கரையும், காவிரி ஆற்றங்கரையும் என்னற்ற அனுபவங்களைப்பதித்திருக்கின்றன என்னுள். மன்னையின் ஒவ்ஒரு தெருவும் கதைகள் சொல்லும் என் வாழ்வில். திருச்சி பாலக்கரை, பொன்மலை ரயில்வே காலனி F மற்றும் H குடியிருப்பு, தில்லைநகர் என பல நினைவிடங்கள். நான் அங்ககெல்லாம் வாழவில்லை என் எதிர்கால நினைவுகளைச்சேகரித்திருந்தேன் என்றே சொல்வேன் பிற்காலத்தில் அசைபோட! மல்லிகைப்பந்தலின் கீழ் அனுபவித்த வாசனையை வார்த்தைகளில் வடிக்கத்தெரியவில்லை!

நாஞ்சில் த.க.ஜெய்
31-07-2014, 03:38 AM
நினைவுகளின் கோர்வையினை தொகுப்பது என்பது கடினம் தான் .சில வருட நினைவுகள் என்றேனும் ஏதேனும் நிகழ்வுகள் நிகழும் போது நினைவுக்கு வரும் பல நினைவுகள் ஓய்வு நேரத்தில் அசை போடும் போது நினைவுக்கு வரும் வரும் நினைவுகளை எழுத்தேட்டில் பதிப்பது இன்னும் கடினம் .தங்கள் ஊர் நினைவுகள் மூலம் சில ஊர்களை பார்வைக்கு கொண்டு வந்தமைக்கு நன்றி கும்பகோணத்து பிள்ளை அவர்களே!

கும்பகோணத்துப்பிள்ளை
01-08-2014, 08:59 AM
புரிதலுக்கு நன்றி நாஞ்சிலாரே!