PDA

View Full Version : ஒரு புல்லாங்குழல் விறகானது..!



கலைவேந்தன்
12-04-2012, 06:08 PM
ஒரு புல்லாங்குழல் விறகானது..!

காமத்தில் உழன்று
ராகத்தை மறந்து
தனது இலக்கினை இழந்ததால்
தனது வனப்பினை இழந்தது
ஒரு புல்லாங்குழல்..!

எடுத்தவன் கையிலெல்லாம்
சுகஸ்வரம் வாசித்த அது
விரும்பியே சென்று
அவளதன் கையில் புகல்ந்து
அவலத்தை அடைந்தது..!

கண்ணனின் கையில் இருக்கவேண்டிய
கட்டுப்பாடான அந்த புல்லாங்குழல்
கேடுகெட்டவளின் கையில்
முதுகு சொரியப் பயன்பட்டது..
தன் பொலிவிழந்த அது
இன்று காமப்பசிக்கு
இரையானது..

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

சில புல்லாங்குழல்கள் இன்னும்
சிறப்பினை இழக்கத் தயாராய் வரிசையில்..
சிதிலமான புல்லாங்குழலின்
சோக கீதம் அவற்றை எட்டவே இல்லை..

சீரழிந்த அந்த புல்லாங்குழல்
இப்போது தனக்காய் இல்லை
இலக்காய் ஆன மற்றவைகளுக்காய்
சோக ஓலம் எழுப்பியது..

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

புல்லாங்குழல்கள்
புளுகத்தெரியாதவை..
சும்மாவாய் வேடமிட்டு
அழுகை கற்காதவை..

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX


அழுக்குத்துணியில் அவலமாய் இருந்த
அந்த மனிதனின் கையில்
சுகமாய் சுவாசிக்கப்பட்ட புல்லாங்குழல்
சின்ன குழந்தைகளின் கைக்கு வந்ததும்
சூம்பிப்போகின்றன..

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

சில புல்லாங்குழல்கள்
செதுக்கத் தெரியப்படாமல்
விறகாய் மாறின..!

சில புல்லாங்குழல்கள்
மூங்கில் காட்டிலேயே
முறிந்து போகின்றன..

சில புல்லாங்குழல்கள்
காமக் கறையான்களால்
கற்பிழக்கின்றன..

புல்லாங்குழலாய்ப் பிறப்பது
பாவம் தான்..

சிவா.ஜி
12-04-2012, 09:48 PM
பலப்பலவற்றை.....இலைமறைக் காயாய் சொல்லும் புல்லாங்குழலின்....பொல்லாநிலை...உணர்த்துகிறது.....அதன் அவல நிலை.

என்ன செய்ய கலை....தன் சிறப்புத் தெரியா அஞ்சனைப் புத்திரர்களே இவர்கள்.

வாழ்த்துக்கள் கலை.

அமரன்
12-04-2012, 09:52 PM
பாலையில் பிறந்தாலும்
துளைகளிட்டு இம்சித்தாலும்
வெளிச்சுவாசக் காற்றை
இனிய கீதமாக்கி
மூச்சில் கலந்து இதம் தரும் புல்லாங்குழல்...

புல்லாங்குழலாய்ப் பிறப்பது
பாவமில்லை..
குழலில் விளையாடும் விரல்கள்
ராக தீபம் ஏற்ற வேண்டும்..

தவறினால்,
தவறியவன் பிறந்தது பாவம்..

ஆதி
13-04-2012, 04:56 AM
தப்பான கரங்களால் தப்பாக வாசிக்கப்பட்ட புல்லாங்குழல்கள்
தப்பான கைகளால் தப்பாக செய்யப்பட்ட புல்லாங்குழல்கள்
தப்பானவைகளால் தனக்கே தப்பான(தப்பு(பறை) + ஆன) புல்லாங்குழல்கள்

இது புல்லாங்குழலின் பாவமல்ல, தப்பான இடத்தில் புல்லாங்குழல் செய்தவனின் பாவம்

vasikaran.g
15-04-2012, 10:55 AM
புல்லாங்குழல் பொல்லா நினைவுகள் போலும்..கவிதை அருமை .