PDA

View Full Version : காதலியின் நண்பன்



shibly591
12-04-2012, 04:16 PM
எனக்குப்பிடிக்கவே பிடிக்காத ஒருவனை
தனது உயிர் நண்பன் என்று
அறிமுகம் செய்கிறாள் யாமினி..

சிலவேளை காதலியின் நண்பன்
என்பதால் பிடிக்காமல் இருக்கலாம்
சிலவேளை காதலிக்கு எதற்கு நண்பன்
என்பதால் பிடிக்காமல் இருக்கலாம்..

காதலியின் நண்பனை என்னால்
நண்பன் என்று அழைக்க முடியவில்லை
சகோதரன் என்பதெல்லாம் அதிகபட்சம்
டேய், மச்சி என்றெல்லாம் நட்புறவாட
சத்தியமாய் இஷ்டமில்லை..

அவனுடனான சந்திப்பு
வேண்டா வெறுப்பாகவே நிகழ்கிறது..
அவனது சிரிப்பு
அவனது பேச்சு
அவனது சாதுர்யம்
அவனது பார்வை
எரிச்சல் எரிச்சலாக வருகிறது..

"உங்களுக்கு முன்பே எனக்கு
அவரை தெரியும்"
"எங்கள் வீட்டில்
எல்லோருக்கும் அவரை பிடிக்கும்"
என்றெல்லாம் யாமினி பேசும்போது
காழ்ப்புடன் சிரித்து தொலைக்கிறேன் நான்..

அவளது நண்பனை சந்திப்பதில் இருந்து
அவ்வப்போது லாவகமாக நழுவுகிறேன்..
சந்தேகப்படும்படி அவர்கள் இல்லை எனினும்
அவர்களது நட்பை ஏற்றுக்கொள்ள
ஏனோ என் உள்மனசு ஒப்புதில்லை..

அவன் பற்றிய அவளது பேச்சுக்களை
திட்டமிட்டே தவிர்க்கிறேன்..
ஒரு முதிர்வற்ற மனநிலையில்
என்னை தள்ளிவிடுகிறது அவள் நட்பு.
காதலியின் நண்பனைப்பற்றி
யாரேனும் கேட்கும்போது
காதலியின் நண்பன் என்று அவனை
அறிமுகம் செய்ய தர்மசங்கடமாயிருக்கிறது..

எனது நண்பிகளை இயல்பாக
அணுகும் பக்குவம் யாமினிக்கு இருக்கிறது
ஆனால்
அவளது நண்பனை இயல்பாய் அணுக
போதிய பக்குவம் எனக்கில்லாதது ஏனோ?

காதலியின் நண்பிகளை
எனக்கும் நண்பிகளாக்கிக்கொள்ளும் நான்
அவளது நண்பனை வெறுப்பதன் சூட்சுமம்
புரியவேயில்லை..

எனக்குப்பிடிக்கவே பிடிக்காத ஒருவனை
தனது உயிர் நண்பன் என்று
அறிமுகம் செய்கிறாள் யாமினி..

சிலவேளை காதலியின் நண்பன்
என்பதால் பிடிக்காமல் இருக்கலாம்
சிலவேளை காதலிக்கு எதற்கு நண்பன்
என்பதால் பிடிக்காமல் இருக்கலாம்..

- நிந்தவூர் ஷிப்லி-

கலைவேந்தன்
12-04-2012, 06:12 PM
நிஜங்களைச் சொடுக்கும் சுறுக்கெனும் கவிதை.

எத்தனை பொது உடைமைப்பேச்சு பேசினாலும் தனது காதலியை இன்னொருவன் நண்பியாக்கிக்கொள்வது தாங்கவியலாத சோகம்தான். எத்தனை சமாதானங்கள் மேலாக சொல்லிக்கொண்டாலும் ஆளுமை ஏனோ ஏற்க மறுக்கும்..

அருமையான கவிதைக்கு பாராட்டுகள் ஷிப்லி..!

கீதம்
24-04-2012, 01:36 AM
பொஸஸிவ்னஸ் எனப்படும் அன்பின் தீவிர ஆளுமை காதலின் எந்தப் பக்கம் இருந்தாலும் பிரச்சனைதான்.

நண்பர்கள் என்றில்லாமல் நண்பன் என்னும் ஒற்றை அறிமுகத்தாலும் காழ்ப்புணர்வு உருவாகியிருக்கலாம்.

கண்டுபிடிக்கப்படும் கணம்வரை கண்ணிய முகமூடிதான் காதலின் காவல்.

ஆழ்மனக் குடைச்சலை அழகாய் வெளிப்படுத்தியக் கவிதை. பாராட்டுகள் ஷிப்லி.

ஆதி
24-04-2012, 04:34 AM
இன்றிரவு என் கருத்தை இங்கே பதிவு செய்வேன். நன்றி