PDA

View Full Version : கவிதை எழுதுங்களேன்...!!!!சிவா.ஜி
09-04-2012, 08:52 PM
http://i194.photobucket.com/albums/z250/sivag/b01e7117.jpg

இந்தப் படத்துக்கு கவிதை எழுதுங்கள். நம் மண்ணின் மைந்தனுக்காய் சில வரிகள்....மாயும் ஆதி தொழிலுக்கு நம் ஆத்ம சம்ர்ப்பணமாய் சில வரிகள்...உழவுக்கு வந்தனம் செய்ய சில வரிகள்.......!!!

கீதம்
10-04-2012, 04:32 AM
மானம் பாத்தப் பொழப்பும்
மலையேறிப் போச்சி.
என் மானம் காத்த ஒழவும்
மண்ணாப்போச்சி.
தானமா வந்த தண்ணியும்
திடுக்குனு நின்னுபோச்சி.

வறண்ட பூமி பாத்து
திரண்ட கண்ணீரப் பாத்தும்
இறங்கலையே அந்த ஆகாசமேகமும்.
இரங்கலையே எந்த அரசாளும்மனசும்.

வக்கத்த போக்கு பாத்து
நான்பெத்த மக்களெல்லாம்
வெக்கமத்து என்னை வெட்டிவுட்டு
கக்கத்துப் பொட்டியோட காரேறிப் போயாச்சி.

கெக்கலிக்கிற புழுதிக்காடு பாத்தும்
எக்களிக்கிற எந்திரவிவசாயம் பாத்தும்
துக்கத்தால் தொண்ட விக்கித்துப் போச்சி.

சொல்லி அழவும் நாதியத்தவனா
ஒட்டுத்துணியும் ஒட்டுனவயிறுமா
இத்துப்போன ஏத்தக்காலோரம்
இடிஞ்சிபோயி உக்காந்திருக்கேன்.

மாடா உழைச்ச கழனியெல்லாம்
காடாக்கிடக்கிறதக் காணச்சகியாம,
என்னயக் காடுகொண்டுபோவ
வாடா காலான்னு வழியிலயே காத்திருக்கேன்.

*******

படத்தைப் பார்த்து கவிதை எழுதுவதற்குள் மனசுக்குள் பெரும்பாரம் அழுத்திஎடுத்துவிட்டது. படமே ஆயிரம் கவிதைகளுக்குச் சமம். உங்களுடைய இந்த முயற்சிக்குப் பாராட்டுகள் அண்ணா.

M.Jagadeesan
10-04-2012, 07:36 AM
தலையிலே முண்டாசு ; கையிலே இல்லை காசு
முகத்திலே வெள்ளைமீசை ; வாழ்வதற்கு இல்லை ஆசை
நெஞ்சிலே இருக்கு உரம்; வயலுக்கு இல்லை உரம்
இடையிலே கோமணம்; அடகுக்கடையில் ஆவணம்
சேற்றிலே உழைக்கும் கால்கள்;செருப்பையே அணிந்ததில்லை.
ஆற்றிலே ஓடும் நீரை; அணைகட்டித் தடுத்து விட்டார்
காற்றையே உணவாய்க் கொண்டு காலத்தைத் தள்ளுகிறார்
கூற்றுவனே! உன்கணக்கில் கூடுமடா அந்தஉயிர்!!

இராஜேஸ்வரன்
10-04-2012, 08:09 AM
கவிதை எனக்கு புரியாத ஒன்று.

காலையில் படத்தை பார்த்ததும் எப்படிப்பட்ட கவிதைகள் வரும் என்று மனதில் ஒரு ஆர்வம்.

சகோதரி கீதம் அவர்களின் கவிதை அற்புதம். அதிலும்


மாடா உழைச்ச கழனியெல்லாம்
காடாக்கிடக்கிறதக் காணச்சகியாம,
என்னயக் காடுகொண்டுபோவ
வாடா காலான்னு வழியிலயே காத்திருக்கேன்.

இந்த வரிகள் மனதில் இனம் புரியாத வலியை ஏற்படுத்தின.

பாராட்டுக்கள் சகோதரி.


ஆற்றிலே ஓடும் நீரை; அணைகட்டித் தடுத்து விட்டார்
காற்றையே உணவாய்க் கொண்டு காலத்தைத் தள்ளுகிறார்

நண்பர் M.Jagadeesan அவர்களின் கவிதையும் நன்றாகவே இருக்கிறது. பாராட்டுக்கள்.

meera
10-04-2012, 08:30 AM
கீதம் அக்கா, நீங்க சொன்ன மாதிரி இந்த புகைப்படமே ஆயிரம் கவிதைக்கு சமம். உங்களின் ஒவ்வொரு வரியும் கண்களில் நீரை வரவைக்கிறது. நெஞ்சை அழுத்தும் வரிகள் அக்கா.

ஐயா அவர்களின் வரிகள் சுருக்கமாய் சுருக்கென தைக்கிறது.


சிவா அண்ணா, நெஞ்சில் வார்த்தைகளுக்கு பதில் வலி தான் வருகிறது.

கீதம்
10-04-2012, 09:36 AM
காற்றையே உணவாய்க் கொண்டு காலத்தைத் தள்ளுகிறார்
கூற்றுவனே! உன்கணக்கில் கூடுமடா அந்தஉயிர்!!

மனம் நெகிழ்த்திய வரிகள். ஒரு ஓவிய வர்ணனை போலே உயிர்ப்பான வரிகளுக்குப் பாராட்டுகள் ஐயா.


கவிதை எனக்கு புரியாத ஒன்று.

காலையில் படத்தை பார்த்ததும் எப்படிப்பட்ட கவிதைகள் வரும் என்று மனதில் ஒரு ஆர்வம்.

சகோதரி கீதம் அவர்களின் கவிதை அற்புதம். அதிலும்இந்த வரிகள் மனதில் இனம் புரியாத வலியை ஏற்படுத்தின.

பாராட்டுக்கள் சகோதரி.


தங்களுடைய ஊக்கமிகுப் பாராட்டுக்கு மிகவும் நன்றி இராஜேஸ்வரன்.


கீதம் அக்கா, நீங்க சொன்ன மாதிரி இந்த புகைப்படமே ஆயிரம் கவிதைக்கு சமம். உங்களின் ஒவ்வொரு வரியும் கண்களில் நீரை வரவைக்கிறது. நெஞ்சை அழுத்தும் வரிகள் அக்கா.


உண்மைதான் மீரா. இன்று உழவையே நம்பியிருப்பவர்களின் நிலை இதுதான். ஊக்கமிகுப் பாராட்டுக்கு நன்றி மீரா.

தாமரை
10-04-2012, 09:52 AM
அன்னையின் நெஞ்சில்
ஆழத் துளையிட்டு
இதயத்திலிருந்து
ஈரத்தையெல்லாம்
உறிஞ்சி எடுத்து
ஊருணி வறண்டது.

எளியவர் வாழ்விலும் கிணற்றிலும்
ஏற்றமும் இற்றது..

ஐந்தும் ஒடுங்கி
ஒட்டிக் கொண்டிருக்கும் ஆவி
ஓடாமல் இருக்கிறது
ஒளருவதவம்

சிவா.ஜி
10-04-2012, 06:18 PM
தங்கை கீதத்தின் கவிதை...ஏற்கனவே படம் பார்த்ததால் கனமான மனதை இன்னும் பாரமாக்கியது. அற்புதமான கவிதைக்கு ஆயிரம் பொற்காசுகள்.

மனம்நெகிழ்ந்த வாழ்த்துக்கள் தங்கையே.

சிவா.ஜி
10-04-2012, 06:19 PM
ஜெகதீசன் ஐயாவின் கவிதை நெஞ்சை உலுக்கிவிட்டது. ஆயிரம் பொற்காசுகள் இந்தக் கவிதைக்கு.

மிக்க வாழ்த்துக்கள் ஐயா.

சிவா.ஜி
10-04-2012, 06:21 PM
தாமரையின் கவிதை...எத்தனையோ சொல்கிறது....ஏனிந்த இடர்பாடுகள்....உணவைக்கொடுக்கும் உழவனுக்கு என்றுதான் வரும் நல்ல நாள் என ஏங்க வைத்தக் கவிதை.

ஆயிரம் பொற்காசுகள் இந்தக் கவிஞருக்கு.

சிவா.ஜி
10-04-2012, 08:00 PM
எரி எண்ணெய்யைக் கொடுத்ததும் இந்த மண்தான்
என் உணவைக் கொடுத்ததும் இந்த மண்தான்
எரி எண்ணையை எடுத்தவனுக்கு கொடுக்கும் மதிப்பை
ஏன் என் எரிவயிறுக்கு உணவு கொடுத்தவனுக்கு இங்கில்லை....

உலகை உய்விப்பது உணவுதான்
உலகுக்கு உணவுழழ்பவன் நல்வாழ்வு கனவுதான்
ஏனிந்த இழிநிலை....
என்னவாகும் இந்த உழவன் நிலை...???

இந்தக் கிழ உழவனின் ஏக்கம்
எந்த நிலவுலகம் போக்கும் ...??
ஏர் பிடித்து வாழ்ந்தவனின் ஏற்றம்
சீரழிந்து போனதேன்?
வேர் பிடிக்குமா உழவன் வாழ்வு
நேர் செய்யுமா இப் பாழும் உலகு...!!

எந்நாளும் எல்லோருக்கும் உணவளித்த உழவன்
வரும் நாளில் நல் உணவு உண்பானா.....
வெறும் வாழ்வைத் தொடர்ந்தே வாழ்வானா
வரும் காலம் சொல்லட்டும்....விருப்பான செய்தியை...!!!

அமரன்
10-04-2012, 09:04 PM
நெஞ்சைக் கசக்கும் வண்ணத்தில் குழைந்த ஓவியம்.. எண்ணத்தை குழைத்துக் கவிதை செய்ய வைக்கும் நிச்சயம். இந்தக் கொடி நீண்டு போகட்டும்..

நன்றி பாஸ்..

தாமரை
11-04-2012, 01:18 AM
ஒவ்வொரு உழவன் மரணத்திலும்
ஆயிரம் ஏழைகள் பட்டினியில் சாகின்றனர்!
ஆயிரம் பேர் புதிதாய் ஏழைகளாகின்றனர்!!

உன்முறையும் அவன்முறையும்
வெகுதூரத்தில் இல்லை!!!

காலம் பதில் சொல்வதாக இருந்தால்.. இப்படித்தான் சொல்லியிருக்கும் என நினைக்கிறேன்.

கலைவேந்தன்
11-04-2012, 02:42 PM
உலகத்தின் முதுகெலும்பை
எங்கள் முதுகெலும்பை முறித்து..

உணவுக்கூடமாய் திகழ்ந்தது தமிழகம்
இன்று
உலாக்கூடமாய் திரிந்திட்ட நிலை..

அவர் நிலத்தை அவரவர் உழுத காலம் போய்
உவர் நிலமே மிஞ்சியது இன்று..!

அரிசி முதல் பிண்ணாக்கு வரை
அரசின் இலவசம்..
உழவனின் மனம் புண்ணாக்கி
உழுதுபெற்ற வாக்குகள்
அழுதுநிற்கும் நாங்கள்
ஆதரிப்பார் யாரோ..?

காவிரிக்காய் பாலாறுக்காய் வைகைக்காய்
காய்ந்திருந்து காத்திருந்து
மழைத்தாயும் கொஞ்சம் மனம் முறுக்கிப்போனதனால்
உழைத்தாலும் வீணாச்சு எம் வாழ்க்கை பாழாச்சு..

இந்த நிலைக்கொரு இறுதிவரும்
எல்லார் மனதிலும் உறுதிவரும்..
வறண்டு போன நிலையில் உங்கள்
கரன்சியா கூட வரும்..?

சிவா.ஜி
11-04-2012, 06:54 PM
காலத்தின் பதிலில் காரத்தைக் கண்டேன் தாமரை.... என்ன செய்வான் உழவன்.....பாவமென்ற பரிதாபச் சொல்லுக்குள் அடங்கிவிட்டானே....

கரன்சியையா உண்ண முடியும் என்ற கலையின் வார்த்தை உண்மையை அறைந்து சொல்கிறதே.....
http://i194.photobucket.com/albums/z250/sivag/1.jpg

எல்லோரும் எழுவோம்.....உழவனை உயர்த்துவோம்....!!!

கீதம்
11-04-2012, 10:29 PM
தங்கை கீதத்தின் கவிதை...ஏற்கனவே படம் பார்த்ததால் கனமான மனதை இன்னும் பாரமாக்கியது. அற்புதமான கவிதைக்கு ஆயிரம் பொற்காசுகள்.

மனம்நெகிழ்ந்த வாழ்த்துக்கள் தங்கையே.

தங்கள் அன்புக்கும் ஊக்கமளிக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி அண்ணா.

சிவா.ஜி
11-04-2012, 10:57 PM
உங்கள் ஒவ்வொரு வரியும் சிலாகிக்க வைக்கும் சிறப்பு.......அதற்குத்தானம்மா......இந்த அண்ணனின் உரைப்பு......

மனமார்ந்த வாழ்த்துக்கள் தங்கையே.

கலைவேந்தன்
12-04-2012, 03:55 AM
அனைவரது கவிதைகளுமே இதயத்தை நனைத்தது. அனைவருக்கும் பாராட்டுகள்.

எனக்கு பொற்காசு கிற்காசு எதுவும் இல்லீங்களா..? :frown:

சிவா.ஜி
12-04-2012, 06:24 AM
ஆஹா....அதுக்கென்ன...கொடுத்துட்டாப் போச்சு....நெஞ்சை அசைக்கும் கவியெழுதிய நண்பருக்கு ஆயிரம் பொற்காசுகள்...அன்புப் பரிசு.

கலைவேந்தன்
12-04-2012, 06:05 PM
நன்றி சிவா.. பொற்காசுகள் கிடைத்தன.. மகிழ்ந்தேன்..!!

அமரன்
12-04-2012, 09:16 PM
மானம் பாத்தப் பொழப்பும்
மலையேறிப் போச்சி.
என் மானம் காத்த ஒழவும்
மண்ணாப்போச்சி.
தானமா வந்த தண்ணியும்
திடுக்குனு நின்னுபோச்சி.

வறண்ட பூமி பாத்து
திரண்ட கண்ணீரப் பாத்தும்
இறங்கலையே அந்த ஆகாசமேகமும்.
இரங்கலையே எந்த அரசாளும்மனசும்.

வக்கத்த போக்கு பாத்து
நான்பெத்த மக்களெல்லாம்
வெக்கமத்து என்னை வெட்டிவுட்டு
கக்கத்துப் பொட்டியோட காரேறிப் போயாச்சி.

கெக்கலிக்கிற புழுதிக்காடு பாத்தும்
எக்களிக்கிற எந்திரவிவசாயம் பாத்தும்
துக்கத்தால் தொண்ட விக்கித்துப் போச்சி.

சொல்லி அழவும் நாதியத்தவனா
ஒட்டுத்துணியும் ஒட்டுனவயிறுமா
இத்துப்போன ஏத்தக்காலோரம்
இடிஞ்சிபோயி உக்காந்திருக்கேன்.

மாடா உழைச்ச கழனியெல்லாம்
காடாக்கிடக்கிறதக் காணச்சகியாம,
என்னயக் காடுகொண்டுபோவ
வாடா காலான்னு வழியிலயே காத்திருக்கேன்.

*******

படத்தைப் பார்த்து கவிதை எழுதுவதற்குள் மனசுக்குள் பெரும்பாரம் அழுத்திஎடுத்துவிட்டது. படமே ஆயிரம் கவிதைகளுக்குச் சமம். உங்களுடைய இந்த முயற்சிக்குப் பாராட்டுகள் அண்ணா.

முதுமை..

மரணத்தை வரவேற்கும் மனசைத் தரும். வறுமை, ஆற்றாமை, கவலை என பலதும் சுற்றிச் சுழன்றடித்தால், சொல்லவா வேண்டும்.

அதையே செய்கிறது உங்கள் கவிதை..

ஒரு சொல்லோவியமாக விரியும் கவிதையில், இயற்கை, அரசாங்கம், சொந்தம் எல்லாத்தையும் சொல்லி, மண்ணுக்குள் புதைந்த வேரினைப் போன்று தனிமனிதத் தவறை மறைத்துச் சொல்லி உயர்ந்து நிற்குது உணர்வு மரம்.

பாராட்டுகள்.

அமரன்
12-04-2012, 09:22 PM
தலையிலே முண்டாசு ; கையிலே இல்லை காசு
முகத்திலே வெள்ளைமீசை ; வாழ்வதற்கு இல்லை ஆசை
நெஞ்சிலே இருக்கு உரம்; வயலுக்கு இல்லை உரம்
இடையிலே கோமணம்; அடகுக்கடையில் ஆவணம்
சேற்றிலே உழைக்கும் கால்கள்;செருப்பையே அணிந்ததில்லை.
ஆற்றிலே ஓடும் நீரை; அணைகட்டித் தடுத்து விட்டார்
காற்றையே உணவாய்க் கொண்டு காலத்தைத் தள்ளுகிறார்
கூற்றுவனே! உன்கணக்கில் கூடுமடா அந்தஉயிர்!!

சங்கத் தமிழில் பொங்கும் கோபம்..
விரக்தியுடன் தொடங்கும் கவிதை ஆத்திரம்மிகுந்து முடிகிறது.. இடைப்பட்டு நிற்கும் ’கோ’மணம்.... மனம் வலிக்கிறது
அணையை கவிதையில் இணைத்ததமை சமகாலத் தெறிப்பு.

அமரன்
12-04-2012, 09:25 PM
அன்னையின் நெஞ்சில்
ஆழத் துளையிட்டு
இதயத்திலிருந்து
ஈரத்தையெல்லாம்
உறிஞ்சி எடுத்து
ஊருணி வறண்டது.

எளியவர் வாழ்விலும் கிணற்றிலும்
ஏற்றமும் இற்றது..

ஐந்தும் ஒடுங்கி
ஒட்டிக் கொண்டிருக்கும் ஆவி
ஓடாமல் இருக்கிறது
ஒளருவதவம்

பொழிப்புரை கொடுக்காமல் இருந்தால் எப்படி?

ஐந்தில் நான்கு ஆவியைக் கொண்டது.

ஐந்தாவதில் இவனின் ஆவி... (உடம்பு இருப்பதே தெரியலையே)

அமரன்
12-04-2012, 09:30 PM
எரி எண்ணெய்யைக் கொடுத்ததும் இந்த மண்தான்
என் உணவைக் கொடுத்ததும் இந்த மண்தான்
எரி எண்ணையை எடுத்தவனுக்கு கொடுக்கும் மதிப்பை
ஏன் என் எரிவயிறுக்கு உணவு கொடுத்தவனுக்கு இங்கில்லை....

உலகை உய்விப்பது உணவுதான்
உலகுக்கு உணவுழழ்பவன் நல்வாழ்வு கனவுதான்
ஏனிந்த இழிநிலை....
என்னவாகும் இந்த உழவன் நிலை...???

இந்தக் கிழ உழவனின் ஏக்கம்
எந்த நிலவுலகம் போக்கும் ...??
ஏர் பிடித்து வாழ்ந்தவனின் ஏற்றம்
சீரழிந்து போனதேன்?
வேர் பிடிக்குமா உழவன் வாழ்வு
நேர் செய்யுமா இப் பாழும் உலகு...!!

எந்நாளும் எல்லோருக்கும் உணவளித்த உழவன்
வரும் நாளில் நல் உணவு உண்பானா.....
வெறும் வாழ்வைத் தொடர்ந்தே வாழ்வானா
வரும் காலம் சொல்லட்டும்....விருப்பான செய்தியை...!!!

உழுதுண்டு வாழ்வோரை தொழுதுண்டு போன காலம் போன காலம் ஆகிவிட்டது..

உழுது உண்டு எனச் சொல்ல முடியாத அவல நிலை?

வறண்ட நிலத்தின் வெப்பத் தகிப்பு கவிதையிலும்..

அமரன்
12-04-2012, 09:33 PM
உலகத்தின் முதுகெலும்பை
எங்கள் முதுகெலும்பை முறித்து..

உணவுக்கூடமாய் திகழ்ந்தது தமிழகம்
இன்று
உலாக்கூடமாய் திரிந்திட்ட நிலை..

அவர் நிலத்தை அவரவர் உழுத காலம் போய்
உவர் நிலமே மிஞ்சியது இன்று..!

அரிசி முதல் பிண்ணாக்கு வரை
அரசின் இலவசம்..
உழவனின் மனம் புண்ணாக்கி
உழுதுபெற்ற வாக்குகள்
அழுதுநிற்கும் நாங்கள்
ஆதரிப்பார் யாரோ..?

காவிரிக்காய் பாலாறுக்காய் வைகைக்காய்
காய்ந்திருந்து காத்திருந்து
மழைத்தாயும் கொஞ்சம் மனம் முறுக்கிப்போனதனால்
உழைத்தாலும் வீணாச்சு எம் வாழ்க்கை பாழாச்சு..

இந்த நிலைக்கொரு இறுதிவரும்
எல்லார் மனதிலும் உறுதிவரும்..
வறண்டு போன நிலையில் உங்கள்
கரன்சியா கூட வரும்..?

புண்ணாகிப் போன மனதிலிருந்து உதிர்ந்த கவிதை..
ஆங்காங்கே திட்டுத் திட்டாய் உதிரம்..

சிவா.ஜி
12-04-2012, 09:35 PM
அவல நிலை....உழவன் அழும் நிலை
உணவின்றி தவிக்கையில்
உணருவான் அவன்
உழவனுக்களித்த நிலை....!!!

சிவா.ஜி
15-05-2012, 08:17 PM
உழவன் இறவாதவன்....அப்படியே இருக்க வேண்டியவன்....அவன் இறப்பின்.....மற்றுமுளரோரின் இருப்பு கேள்விக்குறி. தொடரவேண்டும் உங்களின் வரிகளை. திரி தொடங்கியவன் என்ற உரிமையில் அல்ல இந்த வேண்டுதல்.....திரிலோகம் காப்பதும் உணவிடுபவனின் கருணையென்பதாலேயே இந்த தூண்டுதல். வாருங்கள் நண்பர்களே....உழவுக்கு வந்தனை செய்வோம்.

அமரன்
17-05-2012, 09:22 PM
பாஸ்..

இந்தப் படம் தினமும் என் மனதில் கனன்று கொண்டே உள்ளது. ஆனால், இன்னொரு நெருப்பின் நடுவில் நின்று ஆடிக்கொண்டிருப்பதனால் உழவனைப் பாட காலம் கனியுதில்லை.. கனிந்தவையை ருசிக்கவும் இயலவில்லை.

சிவா.ஜி
18-05-2012, 12:49 PM
காலம் கனியும்போது கவிதை வரட்டும் பாஸ். காத்திருக்கிறோம்.

அக்னி
19-05-2012, 02:48 PM
முதற் பதிவின் படம் (#1 (http://www.tamilmantram.com/vb/showthread.php/28910-கவிதை-எழுதுங்களேன்-!!!!?p=545645&viewfull=1#post545645)) வார்த்தைகளை எங்கெங்கோ சுழற்றி எறிந்துவிடுகின்றது...
இப்படம் சொல்வதை, எல்லோருமே பதிவிட்டாலும்கூட முழுமையாகச் சொல்ல முடியாது...

*****

தலைக்கும் அரைக்கும்
இத்துண்டும்
இல்லையென்றால்தான்
மானியமாம்...

தந்தவர்களுக்கே தெரியவில்லை,
ஓட்டுக்குத் தந்த
வேட்டியும் சால்வையும்...

(மானியம் என்ற சொல்லை இப்படிப் பயன்படுத்தலாமா...)

*****

விவசாயிகளின் வறுமையை ஒழிப்போம்...
விளைநிலத்தை ஒழித்து
விவசாயத்தை ஒழித்து
விவசாயியை ஒழித்து
விவசாயிகளின் வறுமையை ஒழிப்போம்...

*****

அரை நிர்வாணமில்லா
அரைநிர்வாணம்...

*****

என்ன அப்பூ
சோர்ந்துபோயிட்டியள்...
நான் எண்ட தோட்டத்தை
எப்பிடி வச்சிருக்கேன் தெரியுமா...
உங்களுக்கு உதவட்டுமா...
உங்க facebook ID சொல்லுங்க...

இது நகைச்சுவைக்காக இல்லை... farmvilleவில் பயிர் வாடிப்போகுமே என்று நேரம் கணித்து விதைத்து விளையாடும் பலரில் நானும் ஒருவன். அந்த விளையாட்டிலேயே நேரத்திற்கு அறுவடை செய்ய முடியாதபோது, பயிர்வாடிப்போயிருக்குமா என்று பதைபதைப்பதுண்டு என்றால், உயிர் வாடிவதங்கிப் போன இத்தேகத்தின் பதைபதைப்பும் பரிதவிப்பும் அளவிடத்தான் இயலுமோ...

*****

சிவா.ஜி... அன்பு வேண்டுகோள்...
இப்போதைக்கு வேறு படங்களை இங்கே இணைக்காதீர்கள்.
இந்த ஒரு படத்திற்கே உணர்வுகள் வரிகளாகட்டும்...

*****

ஒவ்வொரு கவிதைகளும் படத்தின் வலியைப் பறைசாற்றுகின்றன.
இப்படம் சார்ந்து இன்னும் உணர்வலைகள் எழுந்து வரட்டும்.

சிவா.ஜி
19-05-2012, 03:26 PM
அற்புதமான வரிகள் அக்னி. விவசாயத்தை அழித்து...மாணியமாம்....எதற்கு...விவசாயியின் குழிமேட்டுக்கா.....அரசாங்கமும், அரசும் கைவிட்ட உழவனின் நிலை....உணவில்லாமல் தவிக்கும்போது உணர்வார்கள்.

vasikaran.g
26-05-2012, 12:20 PM
கோவணம
மாறினாலும்
அறுந் தோடினாலும்
கொள்கையில்
மாறாத
குணம் ,
மண்மணம் ,
அதைவிட்டு
மாறாத
மனம் ,
இறந்தாலும்
வாழ்ந்தாலும்
எங்கும்
போக
ஒவ்வாத
மனம் ,
மண்ணில்
வளம்
இருந்தும்
கண்ணில்
நிரந்தர
குளம் ,
கையில்
வறுமையின்
நிறம் ,
இருந்தும்
சொல்லில்
இன்னும்
உண்மையின்
நிறம் !

வேறென்ன சொல்ல ..

சிவா.ஜி
26-05-2012, 02:00 PM
மிக அருமை வசீகரன். மண்ணில் வளம் இருந்தும் கண்ணில் குளம்...இருந்தும் உழவை விடாத உழவன் உறுதி. அரசாங்கத்தின் தவறான கொள்கைகள் இங்கே உணவிடுபவனை உணவுக்கு கையேந்தும் நிலைமைக்கு மாற்றியிருக்கிறது. காலம் மாறுமென நம்புவோம்.

வாழ்த்துக்கள் வசீகரன்.

கீதம்
27-05-2012, 03:00 AM
கோவணம மாறினாலும்
அறுந் தோடினாலும்
கொள்கையில் மாறாத குணம் ,
மண்மணம் ,
அதைவிட்டு மாறாத மனம் ,
இறந்தாலும் வாழ்ந்தாலும்
எங்கும் போக ஒவ்வாத மனம் ,
மண்ணில் வளம் இருந்தும்
கண்ணில் நிரந்தர குளம் ,
கையில் வறுமையின் நிறம் ,
இருந்தும்
சொல்லில் இன்னும் உண்மையின் நிறம் !

வேறென்ன சொல்ல ..

கவிதையின் உயிர்ப்பை மறைத்து மடங்கியிருந்த ஒற்றை வரிகளை, விரித்ததும் அழகாய் மனம் விரியவைக்கும் விந்தை.

உழவனின் உளைச்சலைவிடவும் அவன் உறுதியை அழகாய்ச் சொல்லும் கவிதை. பாராட்டுகள் வசீகரன்.

கீதம்
27-05-2012, 03:02 AM
முதுமை..

மரணத்தை வரவேற்கும் மனசைத் தரும். வறுமை, ஆற்றாமை, கவலை என பலதும் சுற்றிச் சுழன்றடித்தால், சொல்லவா வேண்டும்.

அதையே செய்கிறது உங்கள் கவிதை..

ஒரு சொல்லோவியமாக விரியும் கவிதையில், இயற்கை, அரசாங்கம், சொந்தம் எல்லாத்தையும் சொல்லி, மண்ணுக்குள் புதைந்த வேரினைப் போன்று தனிமனிதத் தவறை மறைத்துச் சொல்லி உயர்ந்து நிற்குது உணர்வு மரம்.

பாராட்டுகள்.

விமர்சனத்துக்கும் பாராட்டுடனான ஊக்கத்துக்கும் நன்றி அமரன்.

கீதம்
27-05-2012, 03:08 AM
*****

தலைக்கும் அரைக்கும்
இத்துண்டும்
இல்லையென்றால்தான்
மானியமாம்...

தந்தவர்களுக்கே தெரியவில்லை,
ஓட்டுக்குத் தந்த
வேட்டியும் சால்வையும்...

(மானியம் என்ற சொல்லை இப்படிப் பயன்படுத்தலாமா...)

*****

விவசாயிகளின் வறுமையை ஒழிப்போம்...
விளைநிலத்தை ஒழித்து
விவசாயத்தை ஒழித்து
விவசாயியை ஒழித்து
விவசாயிகளின் வறுமையை ஒழிப்போம்...

*****

அரை நிர்வாணமில்லா
அரைநிர்வாணம்...

*****

என்ன அப்பூ
சோர்ந்துபோயிட்டியள்...
நான் எண்ட தோட்டத்தை
எப்பிடி வச்சிருக்கேன் தெரியுமா...
உங்களுக்கு உதவட்டுமா...
உங்க facebook ID சொல்லுங்க...

இது நகைச்சுவைக்காக இல்லை... farmvilleவில் பயிர் வாடிப்போகுமே என்று நேரம் கணித்து விதைத்து விளையாடும் பலரில் நானும் ஒருவன். அந்த விளையாட்டிலேயே நேரத்திற்கு அறுவடை செய்ய முடியாதபோது, பயிர்வாடிப்போயிருக்குமா என்று பதைபதைப்பதுண்டு என்றால், உயிர் வாடிவதங்கிப் போன இத்தேகத்தின் பதைபதைப்பும் பரிதவிப்பும் அளவிடத்தான் இயலுமோ...
விரக்தி மேலிட்டால் ஒரு சிரிப்பு வரும். சிரிப்பைக் கண்டு மட்டும் அவர் மகிழ்வுடனிருக்கிறார் என்று தப்புக்கணக்கு போட்டுவிட முடியாது. அப்படித்தான். உங்கள் கவிதையூடே காணப்படும் நையாண்டியும். உழவனின் வேதனையின் வெளிப்பாடாய் அமைந்த வரிகளின் கூர்மை மனவாழம் தோண்டும் யதார்த்தம். பாராட்டுகள் அக்னி.

vasikaran.g
03-06-2012, 07:32 AM
கவிதை ..

கோடை தென்றல் ..

திரை இசை அன்று
ஆலமரம்
ஆழமான விழுது
பொழுதும் போக்கலாம்
அழுதும் பார்க்கலாம்
அனைவரும் சேர்ந்தும் கேட்கலாம் ,

இன்று ,
வக்கிரம்
தற்குறி
பொறுப்பின்மையின்
மொத்த முழக்கம் ,
இடை இடையே
தேனிசையும்
கலந்த கலவை .

தாமரை
24-04-2017, 01:18 PM
பொழிப்புரை கொடுக்காமல் இருந்தால் எப்படி?

ஐந்தில் நான்கு ஆவியைக் கொண்டது.

ஐந்தாவதில் இவனின் ஆவி... (உடம்பு இருப்பதே தெரியலையே)


பூமி நமது அன்னை. நீர் வேண்டின் இயற்கையாய் அமைந்த ஆறுகள் குளங்கள் எத்தனையோ இருந்தும் இன்று நாம் செய்வது ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தலே.

ஆழ்துளைக் கிணறுகளை எங்கெங்கும் அமைத்து நீரை உறிஞ்சுகிறோம். இது எப்படி இருக்கிறதென்றால் அன்னை முலை சுவைத்து அமுதப் பாலுண்ணாமல் இதயத்தில் துளையிட்டு இரத்தத்தை உறிஞ்சுவது போல.

இப்படி உறிஞ்சி உறிஞ்சு ஊரில் உள்ள அத்தனை ஏரி குளங்களையும் வற்ற வைத்தோம்.

இதனால் என்ன நடந்தது?

கிணறுகளில் நீர் வற்றியது. கிணற்றில் இறைக்க நீர் இல்லாததால் ஏற்றம் பயனின்றிப் போனது. இற்றுப் போனது.

இற்றுப் போனது கிணற்றில் இருந்த ஏற்றம் மட்டுமல்ல. அதைச் சார்ந்து வாழ்ந்த ஏழைகளின் வாழ்விலும்தான்.

கண்கள் ஒடுங்கின
காதுகள் அடைக்கின்றன
மூக்கு வழி சுவாசமும் குறைந்து கொண்டிருக்கிறது
தன் நிலையை சொல்லி அழக் கூடத் திராணியின்றி வாயும் அடங்கி விட்டது
உடலும் வலுவிழந்து ஒடுங்குகிறது.

இப்பை வற்றிப் போன தேகத்தில் ஓடிவிடாமல் ஊசலாடிக் கொண்டிருக்கும் உயிர் தவம் செய்கிறது

ஔருவம் - நீர் - அதாவது மழைக்கான தவம்.

lenram80
25-04-2017, 02:35 PM
அந்த ஒரிஜினல் படத்திற்கான எனது கவிதை....


வான் வருவான்!
==========

எல்லாமே என்னை மறந்து விட்டன!
ஆட்டிப் படைத்த அவள்!
தீட்டி வளர்த்த மகன்!
ஊட்டி வளர்த்த மகள்!

என் முதுமையும், வறுமையும்
என்னை மறக்கவே இல்லையே?

எவனாவது ஒரு வரம் தருவானா?
அவனாவது ஒரு தரம் வருவானா?
வறுமை ஒழிக்கும் அருமைத் தலைவன்
எருமை மேலே இப்போதே வருவானா?