PDA

View Full Version : விழி இழந்தும் ஊமைகளாய்..



கலைவேந்தன்
09-04-2012, 04:09 PM
விழி இழந்தும் ஊமைகளாய்..

http://www.tamilnet.com/img/publish/2009/04/air_strike_25_apr_09_03_79906_445.jpg

இன்று பலநேரம் உறக்கமில்லை
கனவுகளின் தொல்லைகளால்..

கதறிய பிஞ்சுகளின் கண்ணீர்ச் சிதறலில்
உதறித்தள்ளும் கொடுங்கோலர் குதறலில்
குண்டடி பட்டுச்சிதைந்த ஒருமார்பில்
பாலுக்குப் பதிலாய் உதிரம் குடிக்கும் மழலைகள்
சுவைமாறிப் போனதும் தாயின் தலைவருடல் போனதும்
அறியாமல் உணராமல் அலறத்தலைப்பட்டதும்
கால்சிதறிப்போனபின்னும் உயிர்பிழைக்கவெண்ணி
நத்தைபோல் நகரும் வயதானவரின் ஓலமும்

மாறி மாறிவந்து கனவுகளாய்ச் சிதைக்கையில்
பலநேரம் உறக்கம் வருவதே இல்லை..

நிலைமாறும் பாரீர் நல்காலமொன்று வரும்பாரீர்
உலைபொங்கும் காலம் வரும் ஊர்களிக்கும் நேரம்வரும்
மெசையாவைப்போல பலகுரல்கள் ஒலிப்பதும்
அசையாமல் கிடந்து ஈக்களுக்கு உணவளிக்கும்
மறத்தமிழனின் மரத்த உடல்களின்
இறந்தகாலக் கனவுகள் ஆங்காங்கே மினுமினுக்கும்.
ஒருமடக்குத் தண்ணீருக்காய் உடல் மறைத்துப் போராடும்
சகோதரியின் நிலைகண்டு ஊமைச் சகோதரனின்
உதிரம் துடிக்கும் கண்ணீர் அருவியாய்க் கொட்டும்..

இத்தகு கனவுகளுடன் உறக்கச்சாத்தியம் எவ்விதம்..?

இன்று பலநேரம் உறக்கமில்லை
கனவுகளின் தொல்லைகளால்..

சிவா.ஜி
09-04-2012, 08:58 PM
நிலை மாறும்.....கலையின் கனவுகளில் களை தெரியும். வருத்தப்படாதிரு மனமே....வாழ்வின் வெளிச்சம்....வெகு அருகே இருக்கிறது.....இதுவே நம் நம்பிக்கை.

வாழ்த்துக்கள் கலை.

jayanth
10-04-2012, 02:55 AM
கண்டிப்பாக நிலை மாறும். காத்திருப்போம்...

meera
10-04-2012, 08:21 AM
இவை வரிகளாய் தெரியவில்லை. வலிகளாய் தெரிகிறது. இந்த வலிகளும் வரிகளும் நிச்சயம் மாறும் என்று நம்புவோம்.

கலைவேந்தன்
12-04-2012, 06:00 PM
நன்றி சிவா , ஜெயந்த் , மீரா..!

vasikaran.g
22-04-2012, 12:17 PM
இது வருத்தம் நிறைந்த விருத்தம் .நல்ல கருத்து ..

ஆதி
24-04-2012, 09:27 AM
//குண்டடி பட்டுச்சிதைந்த ஒருமார்பில்
பாலுக்குப் பதிலாய் உதிரம் குடிக்கும் மழலைகள்
சுவைமாறிப் போனதும் தாயின் தலைவருடல் போனதும்
அறியாமல் உணராமல் அலறத்தலைப்பட்டதும்
//

நெஞ்சை பதற வைக்கும் வரிகள், கண்கள் என்னை அறியாமல் கலங்கிவிட்டன..

அக்னி
29-04-2012, 01:07 PM
எதை நினைத்து நீங்கள் இதை எழுதினீர்களோ தெரியாது கலைவேந்தரே...
எனக்கோ, முள்ளிவாய்க்காலின் கொடூரக் கணங்கள் தெரிகின்றன.

தீவிரவாதி என்று
கொடுமையாய் அழித்தார்கள்...
கொடூரம் பார்த்து பதைத்த நெஞ்சத்தில்
பொருந்தாமலே எழுந்தது வியப்பும்...
கருவறை விட்டு வருமுன்னே
எப்படி அறிந்தார்கள்
தீவிரவாதி என்று...

ravikrishnan
29-04-2012, 03:04 PM
உங்களின் கவிதையில் உள்ளஒவ்வொரு வரிகள் நெஞ்சை பதறவைக்கின்றன.