PDA

View Full Version : எனது சிலேடை வெண்பாக்கள் - சில



கலைவேந்தன்
08-04-2012, 06:54 AM
1.நாயும் கடலும்

ஓங்கியே ஆர்ப்பரிக்கும் வெண்ணுரை தள்ளிடும்
தீங்கிழைக் குஞ்சில போதினில் - ஆங்கே
இரவிலு றங்கிடும் நன்மை பயக்கும்
அரவந்த ருங்கடல் நாய்.

கடல்:

ஓங்கி ஒலிஎழுப்பி ஆர்ப்பரிக்கும்; வெண்மையான நுரை தரும்; சில போழ்து தீமை பயக்கும்; இரவு நேரத்தில் அமைதியாய் இருக்கும்; நன்மை தரும்;பாம்புகளைக் கொண்டிருக்கும்.

நாய்:

ஓங்கி ஊளையிட்டு ஆர்ப்பரிக்கும்; வேகமாய் ஓடி வாயில் நுரைதள்ளும்; சில ச்மயம் கடித்து தீங்கு பயக்கும்; இரவில் உறங்கிடும்;ஆனாலும் அரவம் தந்து நன்மை பயக்கும்!

கலைவேந்தன்
08-04-2012, 06:57 AM
2.இரயிலும் காதலும்

கூவிய ழைத்திடும் பக்கம்வந் தாலதிரும்
மேவிய வண்ணமாகும் மேன்மையில் - சாவுதரும்
சத்தமே கூடும் வெளிப்படும் போதென்றும்
அத்தகு காதல் ரயில்.

ரயில்:

கூவிவரும்;பக்கம் வரும்போது நம்மையே அதிரவைக்கும்; சிறந்த அழகு தரும்; சாவைத்தரும்;
திருப்பத்திலிருந்து வெளிப்படும்போது சத்தம் அதிகமாகும்.

காதல்:

எதிர்ப்பால் மனிதரைக் கூவி அழைக்கும் காதல் உணர்வு; காதலர் பக்கத்தில் வரும்போது இருவருக்குமே அதிர்வு தரும்; காதல் சிறந்த அழகான ஒன்று; காதல் தோல்வியால் சாவும் உண்டு;
காதல் வெளிப்படும்போது அங்கே பரபரப்பான சூழ்நிலை வரும்.

அத்தகைய சிறப்பை இரண்டுமே கொண்டுள்ளது!

கலைவேந்தன்
08-04-2012, 07:00 AM
3.தமிழும் ஆதவனும்

ஆதியோ டந்தமிலா பேர்பெற் றதினானும்
வேதமுதல் நூல்கூறி வாழ்த்திடவும் - ஓதியே
கூற்றுவனும் சாய்த்திடாச் சீர்பெற் றதினானும்
போற்றுந் தமிழ்க்கதிரோன் நேர்.

தமிழும் ஆதவனும் ஆதியும் அந்தமும் அறிய இயலாத பேர்பெற்றவை. வேதம் முதலான நூல்களால் வாழ்த்தப்பட்டு வந்துள்ளவை. அனைத்தும் அழிக்கும் ஊழியான எமனாலும் அழிக்க இயலாத புகழ் பெற்றவை.இவ்வாறான ஒற்றுமைகளால் தமிழும் ஆதவனும் ஒன்றே!

கலைவேந்தன்
08-04-2012, 07:03 AM
4.காலணியும் கண்ணாடியும்.

பாதா ரவிந்தம் சுமந்திடும் மாற்றினால்
சேதாரம் செய்திடும் மாறியே - மாதருக்கு
ஆர்வமாய் சேவையில் தன்னொளி மாய்த்திடும்
சீர்பா தணியாடி நேர்!

செருப்பு :

பாதம் முதல் உச்சிவரை நம்மைச்சுமந்திடும்! கால் மாற்றி அனிந்தால் இழப்பு நேரவைக்கும்!இடறிவிடும்!
அதிகமாய் பெண்களுக்கு அலங்காரப்பொருளாய் சேவைகள் செய்து தன் பளபளப்பை இழக்கும்! தேயும்!
சிறப்பு மிக்க காலணியும் கண்ணாடியும் ஒன்றே!

கண்ணாடி :

பாதம் முதல் உச்சிவரை நம்மை சுமந்து நம் பிரதிபிம்பம் காட்டிடும்! கண்ணாடியை சற்றே மாற்றினால் நம் உருவம் இழக்கவைத்து விடும்! எப்போதும் பெண்களாலேயே அதிகம் பயன்படுத்தப்பட்டு கண்ணாடி தன் ஒளி இழக்கும்! இவ்வாறாக சிறப்பு மிக்க காலணியும் கண்ணாடியும் ஒன்றாகும்!

M.Jagadeesan
08-04-2012, 07:24 AM
சிலேடை வெண்பாக்கள் அனைத்தும் சிறப்பாக உள்ளன.

aren
08-04-2012, 08:14 AM
வாவ்!!! அருமை!!!

இன்னும் கொடுங்கள்.

கலைவேந்தன்
30-06-2012, 09:04 AM
நன்றி நண்பர்களே... விரைவில் இதனைத் தொடர்வேன்.

குணமதி
10-11-2012, 03:31 AM
சிறந்த முயற்சி! பாராட்டு.

jayanth
10-11-2012, 12:38 PM
நன்றி நண்பர்களே... விரைவில் இதனைத் தொடர்வேன்.

கலை...எப்ப தொடரப் போறீங்க...???

கீதம்
15-11-2012, 06:12 AM
சிலேடைகள் ஒவ்வொன்றும் ரசிக்கவைத்தன. காலணியும் கண்ணாடியும் அதிகமாய் ரசிக்கவைத்தது.(பெண்களுக்குப் பிடித்தவை என்பதாலோ? :rolleyes: )

பாராட்டுகள் கலைவேந்தன். இன்னும் நிறைய எழுதுங்கள்.

முரளி
15-11-2012, 08:37 AM
பிரமிக்க வைக்கும் சிந்தனை. மிக சிறப்பாக இருந்தது. 'தமிழும் ஆதவனும்' கவிதையில், இறைவனும் பொருந்தியது போல் தோன்றியது. எனக்கு மிக மிக பிடித்திருந்தது. அருமை கலை வேந்தன் அவர்களே!
எனது அன்பளிப்பாக இ பணம் 200 உங்களுக்கு அளிக்க விரும்புகிறேன்.

ந.க
15-11-2012, 09:38 AM
...பக்கம்வந் தாலதிரும்....காதலுக்கும் தொடருந்துக்குமுள்ள ஒருமைத்தன்மை......சிறப்பு, விவேகம், சிந்தனைக்கு விருந்தாகும் சொல் விளையாட்டு......நன்றி.

அனுராகவன்
16-11-2012, 03:10 PM
சிலேடை அருமை கவிங்கரே!!
தொடருங்க.....

கலைவேந்தன்
06-01-2013, 07:59 AM
5. தூக்கமும் மின்சாரமும்

வாவெனில் வாராது வாய்நொந் தரற்றிடினும்
சாவினைப் போன்றே அலைக்கழிக்கும் - ராவினில்
விட்டத்தை நோக்கியே ஏங்கினும் இட்டமாய்
எட்டிடும் மின்னித் திரை.

சிலேடை நயம்:

தூக்கம் :

வா என்று அழைத்தாலும் வாய் நோக அரற்றி அழைத்தாலும் வந்திடாமல் சாவு போலவே இப்போது அப்போது என அலைக்கழித்து அயரவைக்கும். இரவு நேரத்தில் விட்டத்தை நோக்கி ஏங்கிக் காத்திருந்தாலும் தன் விருப்பமாய் ( இட்டமாய் ) வந்து சேரக்கூடிய தன்மை மிக்கது உறக்கம்.

மின்சாரம் :

பொழுதெல்லாம் எப்போது வரும் எனக் காத்திருந்து வா என்று அழைத்தாலும் வராது போக்குக் காட்டி நிற்கும். மின் தடைகளால் வாய் வலிக்கக் கத்தி அழைத்தாலும் சாவு போல எப்போது வரும் என்று அறிவித்திடாது சட்டென வரும். இரவு நேர இருளில் நாம் விட்டத்தை நோக்கிக் காத்திருந்தாலும் மின்சாரம் தன் இட்டமாய் எப்போது வருமோ அப்போது தான் வரும். அத்தகையது மின்சாரம்.

பொருத்தம் :

உறக்கமும் மின்சாரமும் நாம் எத்தனை வருந்தி அழைத்தாலும் தன் விருப்பம் போல் வருகுதலால் இரண்டும் சிலேடைப் பொருளில் ஒன்றாகப் பொருந்தியதாம்.


தலைப்புக்கு நன்றி ஜான்..!

ஜான்
06-01-2013, 12:25 PM
அருமை அண்ணா

இவ்வளவு சடுதியில் .....ஒரு மணி நேரத்தில் ஒரு வெண்பாவை படைக்க முடிவது.....என்னால் நம்பவே முடியவில்லை ..பிறவித் திறமைதான்

pgk53
07-01-2013, 12:40 AM
அருமையான சிலேடை வெண்பாக்கள். நல்ல முயற்சி ஜான் அவர்களே. மேலும் நிறையக் கொடுங்கள்.

ஜான்
07-01-2013, 04:10 AM
என் முயற்சி எதுவுமில்லை

வெண்பா இயற்றியவருக்கே சிறப்பு

தாமரை
07-01-2013, 12:11 PM
1.நாயும் கடலும்


இரவிலு றங்கிடும் .
!

இரவில் உறங்கும் என்ற ஒரு கருத்து இரண்டுக்குமே பொருந்தாது போல உள்ளது. மற்றபடி இச்சிலேடை நன்று.

vivek viswakarma
23-03-2014, 05:53 PM
அற்புதம் ஐயா.. இன்னும் சில தாருங்கள்