PDA

View Full Version : புது செருப்பு



M.Jagadeesan
07-04-2012, 07:29 AM
" விசாலம் ! வாசலில் விட்டிருந்த என் செருப்பைக் காணோம்! நீ பாத்தியா?" என்று தன் மனைவியிடம் கேட்டார் தணிகாசலம்.

" நல்லாத் தேடிப் பாருங்க! அங்கதான் இருக்கும்!"

" இல்ல விசாலம்! நல்லாத் தேடிப் பாத்துட்டேன்!எங்கேயும் காணோம்; நீயும் கொஞ்சம் வந்து தேடிப்பாரு !"

இருவரும் ஒரு மணி நேரமாகத் தேடியும் செருப்புக் கிடைக்கவில்லை. தணிகாசலம் மிகவும் வருத்தப்பட்டார். போன மாசம்தான் ஐந்நூறு ரூபாய் கொடுத்து அந்த செருப்பை வாங்கினார். இன்னும் புது மெருகு குலையாமல் இருந்தது.

' போனால் போகட்டும் விடுங்க! பென்ஷன் வந்தவுடன் புது செருப்பு வாங்கிக் கொள்ளலாம்." என்று விசாலம் சொன்னாள்.

செருப்புத் தொலைந்து ஒரு வாரமாயிற்று. " நாளைக்குப் பென்ஷன் வந்துவிடும்; புது செருப்பு வாங்கிக் கொள்ளலாம்." என்று தணிகாசலம் நினைத்துக் கொண்டார்.

மாலை மணி ஐந்து இருக்கும். தணிகாசலத்தைத் தேடி அவரது நண்பர் சுந்தரவதனம் வந்திருந்தார்.

' என்னப்பா! செருப்புக் கிடைத்ததா?"

" இல்லை சுந்தரம் ! "

" விட்டுத் தள்ளு; நாய் ஏதாவது தூக்கிக்கொண்டு போயிருக்கும்! வேற ஒன்னு புதுசா வாங்கிக்க ! சரி வா! கோவிலுக்குப் போயிட்டு வரலாம்!"

இருவரும் கோவிலுக்குச் சென்றனர்.தணிகாசலம் செருப்பில்லாமல் வெறுங்காலுடன் நடந்து வந்தார். சுந்தரம் செருப்பைக் கோவிலுக்கு வெளியில் விட்ட பிறகு இருவரும் கோவிலுக்குள் நுழைந்தனர். சுவாமி தரிசனம் முடிந்த பிறகு , கோவிலில் சிறிது நேரம் அமர்ந்திருந்தனர். பொதுவான சில விஷயங்களைப் பற்றி பேசிக்கொண்டு இருந்தனர்.

இருவரும் வீட்டுக்குப் புறப்பட்டனர். செருப்பை விட்ட இடத்தில் , தணிகாசலத்தின் செருப்பைக்கண்ட சுந்தரம் , மிகுந்த வியப்படைந்தார். தணிகாசலத்தைக் கூப்பிட்டு

" தணிகாசலம்! இதோ பாருப்பா! உன் செருப்பு இங்க இருக்கு !"

மிகுந்த ஆவலுடன் சென்ற தணிகாசலம் , தொலைந்துபோன தன்னுடைய செருப்பு , அங்கே இருக்கக் கண்டு மகிழ்ச்சி அடைந்தார். அதை அணிந்து கொள்ள காலை நீட்டியவர் ,சட்டென்று பின்னுக்கு இழுத்துக் கொண்டார்.

" என்னப்பா ! தணிகாசலம்! தயங்காம போட்டுக்கிட்டு வா! அது உன்னுடைய செருப்பு! என்ன யோசனை ?"

" இல்லப்பா! இது என்னுடைய செருப்பு என்றாலும், தற்போது வேறு ஒருவனுடைய பொறுப்பில் உள்ளது. எனவே இதை எடுத்து நான் அணிந்துகொண்டால், அது திருடியதற்குச் சமம். அப்புறம் அவனுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம் ? மேலும் ஒருவர் அணிந்த செருப்பை மற்றவர் அணிவது சுகாதாரமல்ல! நாளைக்கு வேறு செருப்பை வாங்கிக் கொள்கிறேன் !" என்றார் தணிகாசலம்.

அப்போது கோவிலுக்கு உள்ளே இருந்து வந்த இருவரில் ஒருவன் , தணிகாசலத்தின் செருப்பை அணிந்துகொண்டு புறப்பட்டான். சிறிதுதூரம் சென்ற பிறகு அவன் தன் நண்பனைப் பார்த்து,

" அந்தப் பெரிசுங்க என்னோட செருப்பைப் பாத்து ஏதோ பேசினதைக் கவனிச்சுயா? நல்லவேளை! சரியான நேரத்துல வந்துட்டோம்! இல்லன்னா அந்தப் பெருசுங்க என்னோட செருப்பைத் தள்ளிகிட்டு போயிருப்பானுங்க !"

இதைக்கேட்ட தணிகாசலம், தன் நண்பரிடம்," சுந்தரம்! இதுதான் உலகம்! புரிந்துகொள்!" என்றார்.

அமரன்
07-04-2012, 07:51 AM
கதையின் கடைசி வரி... இதுதான் உலகம்... எவ்வளவு நிஜம்.

கோவிலில் கழட்டி வைத்த செருப்பை எவனாவது களவெடுப்பான் என்பது எல்லார் மனதிலும் பதிந்துவிட்ட ஒன்று. அதன் வெளிப்பாடே இளையோரின் சொல்வெளியேற்றம்.

கோவிலில் செருப்புக் களவை அவர்களின் மனதில் பதிய வைத்ததில் பெரும் பங்கு மூத்தவர்களுக்கு, அதாவது தணிகாசலம் காலத்தவர்களுக்கு உண்டு.

இளையோரின் செயல்கள் பலதில் மூத்தோர் மறைமுகப் பங்காளர்களாக உள்ளார்கள் என்ற கசப்பை ஏற்றுத்தான் ஆக வேண்டும்.

இதுதான் உலகம்...

தணிகாசலம் தன் காலத்தோர் தன் போல் ஒழுக்கவாதிகளாக இல்லை என்பதுக்காவும் கவலைப்படட்டும்.

புத்தி புகட்டும் கதைக்கு பாராட்டு ஐயா.

Dr.சுந்தரராஜ் தயாளன்
07-04-2012, 08:55 AM
அருமையான சிறுகதை, அழகிய முடிவு..:aktion033::aktion033:

இராஜேஸ்வரன்
07-04-2012, 09:24 AM
"இல்லப்பா! இது என்னுடைய செருப்பு என்றாலும், தற்போது வேறு ஒருவனுடைய பொறுப்பில் உள்ளது. எனவே இதை எடுத்து நான் அணிந்துகொண்டால், அது திருடியதற்குச் சமம். அப்புறம் அவனுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம் ? மேலும் ஒருவர் அணிந்த செருப்பை மற்றவர் அணிவது சுகாதாரமல்ல! நாளைக்கு வேறு செருப்பை வாங்கிக் கொள்கிறேன் !" என்றார் தணிகாசலம்.

பெரியவர் எவ்வளவு அழகாக சொல்லிவிட்டார். நல்லதொரு கதையை கொடுத்ததற்கு பாராட்டுக்கள்.

கலைவேந்தன்
07-04-2012, 12:50 PM
தலைமுறை இடைவெளியை மட்டுமல்ல மனிதனுக்கு மனிதன் சிந்தனையின் வேறுபாட்டையும் அனாயாசமாய் எடுத்துச் சொன்ன கதை. பாராட்டுகள் ஜகதீசன்..!

arun
07-04-2012, 01:10 PM
மனதை மிகவும் யோசிக்க வைத்த கடைசி வரிகள் பளிச்சென மனித இயல்புகளை சொல்லி விட்டீர்கள் பாராட்டுக்கள்

சிவா.ஜி
07-04-2012, 01:23 PM
நிதர்சனம் சுடுகிறது...நாளைய தலைமுறையை நினைத்து யோசிக்க வைக்கிறது கதையின் முடிவு. வாழ்த்துக்கள் ஜகதீசன் ஐயா.

M.Jagadeesan
08-04-2012, 04:21 AM
பாராட்டு நல்கிய அமரன்,தயாளன், இராஜேஸ்வரன், கலைவேந்தன் ,அருண்,சிவா.ஜி ஆகியோருக்கு நன்றி.

அன்புரசிகன்
08-04-2012, 09:40 AM
தணிகாசலத்தாரின் எண்ணங்களில் முதிர்ச்சி. அது அனுபவத்தால் வந்திருக்கும். மாஸ்லோவின் தத்துவம் வெளிப்படுகிறது.

வாழ்த்துக்கள் ஐயா...

M.Jagadeesan
08-04-2012, 09:48 AM
அன்புரசிகனின் வாழ்த்துக்கு நன்றி!