PDA

View Full Version : ஏங்க வைத்த பொற்காலம்..



கலைவேந்தன்
04-04-2012, 05:47 AM
http://4.bp.blogspot.com/_3Dhy8D3Wenc/TMche90H05I/AAAAAAAAAO0/sUuqU86Ll30/s200/old+mother.jpg

ஏங்க வைத்த பொற்காலம்..!

சற்றே முகம் நோக்கி
முறுவலிக்கும் போதினிலென்
நெற்றிமேல் விழுந்த
கற்றைக்குழல் விலக்கி நீயும்
பற்றோடு பரிந்து தந்த
பகல் முத்தம் மீள் வருமோ...?

சற்றேனும் சிணுங்கி விட்டால்
சட்டெனத்தாவியே
ஒற்றைமுலையில் வெகுவிரைவில்
மூச்சடைக்க முட்டவைத்து
நீதந்த முலையமுதும்
மறந்திடுமோ என் வாயும்..?

கூன் விழுந்து குனிந்து நீயும்
தரைதடவிப் பார்க்கையிலே
யான் விழுந்து மருளுகின்றேன்
தாயுன்னைக் காண்கின்றேன்
அடிவயிறும் கலங்குதம்மா..!

நானிழந்த உன் பாசம்
தேனிழந்த ஈக்களைப்போல்
மேன்மேலும் ஏங்கவைத்து
ஊனிழக்க வைத்து உனை
உருக்குலைந்து பார்க்கையிலே
குலைநடுங்கிப் போகுதம்மா..

உன்நினைவை நீயிழந்து
சுயசிந்தனையும் இழந்து
எங்கோ வெறித்திருக்கும்
உன்முகம் பர்ர்க்கையிலே
எங்கோ வழிதவறிக்
காட்டிடை புகுந்துவிட்ட
குழந்தையாய் தவிக்கின்றேன்..

தங்கமாய் நீஎன்னைத்
தாங்கித் தழுவிநிதம்
பள்ளிக்கு அனுப்பிவைத்த
பொற்காலம் மின்னுதம்மா ...
தற்காலம் உன் மனது
கற்சிலை யாய் ஆனதம்மா..

மின்னசைக்கும் ஒருபோதில்
கண்ணசைத்தே கடிதினில்
உன்வசம் நீமீண்டு
ஓடிவந்து தாவிஎனை
அணைத்திட மாட்டாயா
ஆருயிர் அன்னைநீயே..!

M.Jagadeesan
04-04-2012, 06:56 AM
அன்னையின் பாசத்தை அருமையான வரிகளில் வடித்துள்ளீர்கள்! மீண்டும்,மீண்டும் படிக்கத் தூண்டும் வரிகள்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
04-04-2012, 07:17 AM
கவிதை நன்று கலைவேந்தன் .....குறளடி, சிந்தடி, அளவடி இவை முன்றும் விரவி வருகிறதே?:smilie_abcfra:

கலைவேந்தன்
05-04-2012, 03:29 PM
நன்றி ஜகதீசன் மற்றும் தயாளன்..!

சிவா.ஜி
05-04-2012, 08:37 PM
அன்னையின் அனைத்து நினைவுகளும் பொற்காலங்களே என்பதை....அழுத்தமாய் சொன்ன அழகான கவிதைக்கு வாழ்த்துக்கள் கலை.

கலையரசி
06-04-2012, 06:14 AM
அன்னையின் மடியில் தவழ்ந்த அந்தக் காலம் உண்மையிலேயே பொற்காலம் தான்! மனதைத் தொட்ட கவிதை! பாராட்டுக்கள்!

கலைவேந்தன்
06-04-2012, 06:15 AM
மிக்க நன்றி சிவா மற்றும் கலையரசி..!

கீதம்
07-04-2012, 02:15 AM
தன்னிலை மறந்த தாயின் நிலை கண்டு ஏங்கித் தவிக்கும் மகனின் புலம்பலை வெளிப்படுத்தும் வரிகளில் விரவிக்கிடக்கிறது இன்றேனும் அவள் சுயம் மீளாதா என்று பரிதவிக்கும் ஆவல்.

நான் பெற்ற செல்வமேயென மாரோடு வாரிக்கொள்ள மாட்டாளா என்று மனம் பதைக்கும் வாட்டமும் வாஞ்சையும் ஆதங்கமெனப் பயணிக்கிறது நைந்த ஆசைகளினூடே.

மரிக்கும் நொடி வரையிலும் மனம் கொண்ட நினைவுகள் மரித்திடக்கூடாதென்னும் எண்ணத்தை ஒவ்வொருவருக்குள்ளும் தோற்றுவிக்கும் அற்புதக் கவிதைக்கு என் மனம் நெகிழ்த்தப் பாராட்டுகள். இனிதே தொடருங்கள் இன்கவிகளை.

vasikaran.g
08-04-2012, 10:35 AM
கவிதை நன்று ..

கலைவேந்தன்
08-04-2012, 03:16 PM
அழகான பின்னூட்டத்திறு கீதமுக்கும்,
பாராட்டுக்கு வசிகரனுக்கும்,

நன்றி..!