PDA

View Full Version : முள் மரம்M.Jagadeesan
04-04-2012, 03:27 AM
" என்ன முனியா? கையெல்லாம் இரத்தம்? " என்று கேட்டார் தணிகாசலம்.

" ஐயா! வாசலின் அருகே வளர்ந்திருந்த முள் மரத்தை வெட்டும்போது கையைக் கிழித்துவிட்டது." என்று சொன்னான் முனியன்.

' இதுக்குத்தான் அது செடியாக இருக்கும்போதே வெட்டிவிடு என்று சொன்னேன்; நீதான் கேட்கவில்லை. நகத்தால் கிள்ளி எறிய வேண்டிய செடியைக் கோடரி கொண்டு வெட்டும்படி செய்துவிட்டாய்! அதனால்தான் அது உன் கையைக் கிழித்துவிட்டது. எப்போதும் ஒரு தீமையை , அது முளைவிடும் முன்னரே அழித்துவிட வேண்டும். தீமையை வளரவிட்டால் அது நம்மை அழித்துவிடும்; ஞாபகத்தில் வைத்துக்கொள்." என்று முனியனுக்கு அறிவுரை வழங்கினார்.

பேசிக்கொண்டே இருந்த தணிகாசலம் திடீரென்று இருமத் தொடங்கினார். நெஞ்சில் கையை வைத்துக் கொண்டு இருமிக் கொண்டே வாஷ்பேஸின் அருகில் சென்றார். வாஷ்பேஸினில் எச்சிலைத் துப்பினார். அவர் துப்பிய எச்சிலில் இரத்தம் கலந்து இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அப்பாவின் இருமல் சத்தம் கேட்டு அங்கு வந்த கீதா , அப்பா துப்பிய எச்சிலில் இரத்தம் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தாள்.

" என்ன அப்பா இது? குடிக்கவேண்டாம் என்று டாக்டர் பலமுறை சொல்லியும் கேட்காமல் குடித்துக் கொண்டே இருக்கிறீர்கள்; வியாதியை முற்ற விட்டுவிட்டீர்கள். இப்போது பார்த்தீர்களா?நீங்கள் இருமும்போது இரத்தம் வருகிறது. முனியனுக்கு நீங்கள் கூறிய அறிவுரை உங்களுக்கும் பொருந்தும்.எப்போதும் ஒரு தீமையை, அது முளைவிடும் முன்னரே அழித்துவிட வேண்டும்;தீமையை வளரவிட்டால் அது நம்மை அழித்துவிடும்.ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்." என்றால் கீதா.

கீதா சொல்லி முடிக்கும் முன்பாக , அவளுடைய அம்மா அலறி அடித்துக்கொண்டு ஓடி வந்தாள். " பாவி மகளே! +2 தேர்வில் நீ எல்லாப் பாடத்திலும் பெயிலாகி விட்டாய் ; இப்பதான் இன்டர்நெட்டில் உன்னுடைய ரிசல்டைப் பார்த்தேன்; எதிர் வீட்டுப் பையனுடன் காதல், கத்திரிக்காய் என்று அலையாதேன்னு தலபாடாய் அடிச்சுகிட்டேனே! கேட்டாயா நீ! இந்த லட்சணத்துல அப்பாவுக்கு அறிவுரை சொல்ல வந்துட்டா! அப்பாவுக்கு நீ சொன்ன அறிவுரை உனக்கும் பொருந்தும். ஒரு தீமையை , அது முளைவிடும் முன்னரே அழித்துவிட வேண்டும்; தீமையை வளரவிட்டால் அது நம்மை அழித்துவிடும்.ஞாபகத்தில் வைத்துக்கொள். " என்று கீதாவின் அம்மா பொரிந்து தள்ளினாள்.

இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து.

முட்செடியை முளையிலேயே கிள்ளிவிட வேண்டும்;அது முற்றி வயிரம் பாய்ந்துவிட்டால், வெட்டுபவனின் கையைத் தைத்துத் துன்பப்படுத்தும்.

தாமரை
04-04-2012, 04:14 AM
நல்ல வேளை அந்த அம்மாவுக்கும் இதே மாதிரி பிரச்சனை வருமோன்னு பயந்துகிட்டே இருந்தேன்.

அறிவுரை சொல்வது யார்க்கும் எளிது. அதே போல் வாழ்ந்து காட்டுவது கஷ்டம்.

உங்கள் கதை சிந்தனையைத் தூண்டுவதாக இருக்கு.

Dr.சுந்தரராஜ் தயாளன்
04-04-2012, 05:41 AM
நான்கூட பக்கத்து வீட்டு மாமி ஓடிவந்து இந்த அம்மாவிடம்..."அடப்பாவி, என் புருஷனிடம் இந்தனை நாள் கள்ளத்தொடர்பு வைத்திருக்கிறாயே, என் குடும்பத்தை கெடுத்து விட்டாயே...நீ உருப்படுவியா...எனக்கு எதுத்தாத்து மாமி சொன்னபோதே கேட்டு,முளையிலேயே கிள்ளியிருக்க வேண்டும் " என்று சண்டைக்கு வரமல் இத்துடன் நிறுத்திக் கொண்டீர்கள். நன்றி. சிறுகதை....சிறந்தகதை.:)

Kausalya
04-04-2012, 07:01 AM
நானும் ஏதோ அடுத்தாற்போல் இந்த அம்மா யாரிடமாவது அட்வைஸ் வாங்க போறாங்கனு நினைச்சேன்.

கதைகளில் ஒர் சிறிய செய்தியேனும் புகுத்திவிடுகிறீர்கள். கதை நன்றாக ரசிக்கும்படி இருந்தது. நன்றி!

M.Jagadeesan
04-04-2012, 07:47 AM
தாமரை, தயாளன், கௌசல்யா ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி.

கீதம்
07-04-2012, 03:33 AM
நல்லதொரு கருத்தினைச் சொல்லும் குறள் மேற்கோளும், அதற்கேற்றக் கதையும் மிகவும் அருமை. சிந்தனையைத் தூண்டும் கருத்தானக் கதைக்குப் பாராட்டுகள் ஐயா.

M.Jagadeesan
07-04-2012, 04:00 AM
கீதத்தின் பாராட்டுக்கு நன்றி!

இராஜேஸ்வரன்
07-04-2012, 05:48 AM
எப்போதும் ஒரு தீமையை, அது முளைவிடும் முன்னரே அழித்துவிட வேண்டும். தீமையை வளரவிட்டால் அது நம்மை அழித்துவிடும்

நல்ல கருத்தை உதாரணத்துடன் சொன்னது அருமை. பாராட்டுக்கள்.

M.Jagadeesan
07-04-2012, 07:35 AM
இராஜேஷ்வரனின் பாராட்டுக்கு நன்றி!

arun
07-04-2012, 02:15 PM
அடுத்தடுத்து எல்லாருக்கும் ஒரே மாதிரியான குறள் ஒத்து போகிறது கருத்துள்ள கதைக்கு பாராட்டுக்கள்

கலைவேந்தன்
07-04-2012, 02:53 PM
குறளுக்காகவே கதை புனைந்தது போல் சம்பவங்கள் இயல்பின்றித் தொடர்கின்றன. குறள் விளக்கக் கதையாக எண்ணினால் மிக அருமை.

கதை இலக்கணம் என்று பார்த்தால்... ஐ ஆம் வெரி சாரி..!