PDA

View Full Version : என் வழி தனி வழி.



M.Jagadeesan
03-04-2012, 12:57 PM
எதையுமே ஏறுக்கு மாறாகச் செய்வதில் தனி இன்பம் காண்பவர் ஏகாம்பரம்.எல்லோரும் குளித்துவிட்டுச் சாப்பிட்டால் , ஏகாம்பரம் சாப்பிட்ட பிறகுதான் குளிப்பார். காலையில் டிபன் சாப்பிடமாட்டார். சோறுதான் சாப்பிடுவார். அதுவும் முதலில் மோர் சாதம், பிறகு ரசம் சாதம், கடைசியில் சாம்பார் சாதம் என்று சாப்பிடுவார். சாப்பிட்ட பிறகு சிறிதுநேரம் பேப்பர் படிப்பார். பேப்பரை முதல் பக்கத்திலிருந்து படிக்காமல், கடைசி பக்கத்திலிருந்து படிப்பார். குளித்து முடித்தவுடன் அரக்க பரக்க ஆபீசுக்குப் புறப்படுவார். பஸ்ஸில் ஏறும்போது கூட முன்புறம் ஏறுவார்;இறங்கும்போது பின்புறம் இறங்குவார்.மருந்து மாத்திரைகளை சாப்பிடுவதில் கூட , சாப்பாட்டுக்கு முன்பும், சாப்பாட்டுக்குப் பின்பும் எடுக்கவேண்டிய மாத்திரைகளை மாற்றி சாப்பிடுவார். சுப காரியங்களைத் தவறாமல் அஷ்டமி, நவமி நாட்களாகப் பார்த்து செய்வார். இதுபோல எல்லா செயல்களையும் ஏறுக்கு மாறாகச் செய்கிற காரணத்தால் , எல்லோரும் அவரை ," ஏடாகூட ஏகாம்பரம் " என்று அழைக்கத் தொடங்கினார்கள்.

" என்ன இப்படி எதையும் ஏடாகூடமாகச் செய்கிறீர்களே !" என்று யாராவது கேட்டால்
" இந்த உலகம் ஆற்றோடு நீந்துகிறவனைக் கவனத்தில் கொள்ளாது; எதிர் நீச்சல் போடுபவனைத்தான் உற்றுநோக்கும்; மாற்று சிந்தனைக் கொண்டவர்கள்தான் வாழ்க்கையில் வெற்றிபெற முடியும்.
மரத்திலிருந்து விடுபட்ட ஆப்பிள்பழம் ஆகாயத்தை நோக்கிச் செல்லாமல், பூமியை நோக்கி ஏன் வரவேண்டும் என்று நியூட்டன் சிந்தித்ததின் விளைவாகப் பிறந்ததுதான் ஈர்ப்புவிசைக் கோட்பாடு. மின்சாரத்தில் இருந்து காந்தம் தயாரிக்கும் போது, காந்தத்திலிருந்து ஏன் மின்சாரம் தயாரிக்க முடியாது என்று மைக்கேல் பாரடே சிந்தனையில் பிறந்ததுதான் டைனமோ.உலகத்தோடு ஒட்டி வாழவேண்டும் என்பது வள்ளுவர் கொள்கை;ஆனால் உலகத்தோடு வெட்டி வாழவேண்டும் என்பது என்னுடைய கொள்கை. என்வழி தனி வழி " என்று ஏகாம்பரம் பதில் கூறுவார்.

ஏகாம்பரத்துக்கு ஒரேமகள். பெண்ணாக இருந்தாலும் " மாசிலாமணி " என்று பெயர் வைத்து " மாசி " என்று செல்லமாகக் கூப்பிடுவார். மகளை , "வாடா போடா " என்றுதான் கூப்பிடுவார். மாசி வயதுக்கு வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. முப்பது ஆண்டுகள் நிரம்பிய முதிர் கன்னியாக விளங்கினாள். ஏகாம்பரத்தின் பழக்க வழக்கங்களைக் கண்ட ஊரார் அவரிடம் பெண் எடுக்கப் பயந்தனர். உலக வழக்கத்திற்கு மாறாக மாப்பிள்ளை வீட்டாரிடம் வரதட்சிணைக் கேட்பாரோ என்று பயந்துதான் காரணம். ஏகாம்பரமும் பெண்ணின் திருமணத்தைப் பற்றி சிந்தனை இல்லாமல் இருந்தார்.

திடீரென்று ஒருநாள் மாசி , தன மனதுக்குப் பிடித்தவனை திருமணம் செய்து கொண்டு , மாலையும் கழுத்துமாகத் தந்தையின் முன்னே வந்து நின்றாள். அதைக்கண்ட ஏகாம்பரம் அதிர்ச்சி அடைந்தார். தன மகளைப் பார்த்து, " என்னடா! மாசி இப்படி பண்ணிட்டே?" என்று கேட்டார்.

" அப்பா! தப்பாக நான் எதையும் செய்யவில்லை. நான் உங்களுடைய பெண். நீங்கள் வளர்த்த வளர்ப்பு. உங்களுடைய கொள்கைதான் என்னுடைய கொள்கையும். அரேஞ்சுடு மேரேஜ் என்பது உலக வழக்கம்;அது உங்களுக்குப் பிடிக்காது. எனவேதான் காதல் திருமணம் செய்து கொண்டேன். அப்பா! உங்களைப் போலவே , " என் வழியும் தனி வழி " என்று முடித்தாள் மாசி.

பேச வழியில்லாமல் வாயடைத்து நின்றார் ஏகாம்பரம்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
03-04-2012, 01:09 PM
நல்ல சிறுகதை...மிகவும் நன்று.:)

M.Jagadeesan
03-04-2012, 01:14 PM
பாராட்டுக்கு நன்றி தயாளன் அவர்களே!

இராஜேஸ்வரன்
03-04-2012, 03:11 PM
"அப்பா! தப்பாக நான் எதையும் செய்யவில்லை. நான் உங்களுடைய பெண். நீங்கள் வளர்த்த வளர்ப்பு. உங்களுடைய கொள்கைதான் என்னுடைய கொள்கையும். அரேஞ்சுடு மேரேஜ் என்பது உலக வழக்கம்;அது உங்களுக்குப் பிடிக்காது. எனவேதான் காதல் திருமணம் செய்து கொண்டேன். அப்பா! உங்களைப் போலவே , " என் வழியும் தனி வழி " என்று முடித்தாள் மாசி.

ஒன்று சொன்னாலும் சிறப்பாக சொன்னாள் மாசி. நல்லதொரு சிறுகதை. பாராட்டுக்கள்.

M.Jagadeesan
04-04-2012, 01:05 AM
இராஜேஸ்வரன் அவர்களின் பாராட்டுக்கு நன்றி!

Kausalya
04-04-2012, 05:03 AM
சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது இச்சிறுகதை! நன்றி!

M.Jagadeesan
04-04-2012, 06:49 AM
கௌசல்யாவின் பாராட்டுக்கு நன்றி.

கீதம்
07-04-2012, 02:30 AM
என் வழி தனிவழி என்று சொன்னாலும் கூட, அப்பாவின் வழியிலேயே சென்று அவரை மடக்கிய மகளின் சாமர்த்தியம் அருமை.

எந்தெந்த விஷயங்களில் மாறுபட்ட சிந்தனை கொண்டிருக்கவேண்டுமென்ற எண்ணம் இல்லாது எல்லாவற்றுக்கும் ஏடாகூடமாய் சிந்திப்பவருக்கு நல்ல பாடம்.

சுவாரசியமானக் கதைக்குப் பாராட்டுகள் ஐயா.

M.Jagadeesan
07-04-2012, 03:01 AM
கீதத்தின் பாராட்டுக்கு நன்றி!