PDA

View Full Version : தகவல் அறியும் உரிமைச் சட்டம்er_sulthan
31-03-2012, 09:55 AM
தகவல் அறியும் உரிமைச் சட்டம் தகவல் தராத அதிகாரிக்கு அபராதம்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி கேட்கப்பட்ட தகவல்கள் அளிக்கப்படா விட்டால், நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் முறையீடு செய்யலாம்

எந்தப் புகாருக்கும், வழக்குக்கும் வெற்றிபெற மிக அடிப்படையானது ஆதாரங்களே. இது, நுகர்வோர் வழக்குகளுக்கும் பொருந்தும். நுகர்வோர் வழக்குகளிலும் பெரும்பாலான ஆதாரங்களை நாம் திரட்ட வேண்டும். இந்த வகையில் நுகர்வோர் வழக்குக்குத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ஒரு பேருந்தில் செல்கிறோம். அது, குறித்த நேரத்திற்குச் சென்று சேராமல் தாமதமாகப் போய்ச் சேருகிறது. இதன் காரணமாகப் பள்ளித் தேர்வுக்கோ, நேர்முகத் தேர்வுக்கோ அல்லது முக்கியமாகச் செல்ல வேண்டிய இடத்திற்கோ தாமதமாகச் செல்ல நேரிடுகிறது. இதனால், பொருளாதார நஷ்டமோ, நேர விரயத்தால் இழந்துவிட்ட நல்லதொரு வாய்ப்போ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதற்கு எதிராகப் புகார் அளிக்க வேண்டுமானால், பேருந்து தாமதமாக வந்ததற்கான ஆதாரம் தேவை. இதை எப்படி நிரூபிக்க முடியும்?

முதலில், அன்று பயணம் செய்த டிக்கெட்டை பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருக்க வேண்டும். அடுத்தது, அன்று போக வேண்டிய இடத்திற்கு நேர்முகத் தேர்வின் கடிதம், பள்ளித் தேர்வுக்குச் சென்றிருந்தால் அதன் ஹால் டிக்கெட் அல்லது தேர்வு அட்டவணை, நீங்கள்தான் அந்த நபர் என்பதற்கான அடையாள அட்டை ஆகியவற்றை ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியும். ஆனால், அந்தப் பேருந்து தாமதமாக வந்ததற்கான ஆதாரம் வேண்டுமே. அதை எப்படி நிரூபிப்பது? இந்த இடத்தில்தான் தகவல் அறியும் உரிமைச் சட்டம் நுகர்வோருக்குக் கைகொடுக்கிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு எழுதிக் கேட்கலாம் (அரசு பேருந்துகளுக்கு மட்டும்). எந்த ஊருக்கு எத்தனை மணிக்குப் பேருந்து வந்தது என்ற தகவல், நேரக் கண்காணிப்பு அலுவலகத்தில் பதிவாகியிருக்கும். அதனை உங்களுக்குச் சொல்வார்கள். அதில் குறிப்பிட்டிருக்கும் தகவல் உங்களுக்குக் கூடுதல் ஆதாரம் என்பதை விட, அவசியமான ஆதாரம் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பெறப்படும் தகவல்கள் பொய்யாக இருந்தாலோ, குறிப்பிட்ட காலத்திற்குள் தகவல் அளிக்காமல் இருந்தாலோ, அதிகக் கட்டணம் கேட்பது, கேட்கப்பட்ட தகவலுக்குரிய ஆவணத்தை அழிப்பது, கட்டண விலக்கு உரிமையை மறுப்பது போன்ற நடவடிக்கைகளில் அரசு துறைகள்/ அலுவலர்கள் ஈடுபட்டால், அது குறித்து மாநில / மத்திய தகவல் ஆணையத்திற்குப் புகார் செய்யலாம்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி கேட்கப்பட்ட சில தகவல்கள் அளிக்கப்படாததால் புகாராகி, முறையீடு செய்யப்பட்டு வழங்கப்பட்ட தீர்ப்புகள் குறித்துப் பார்ப்போம்.

மைசூரைச் சேர்ந்த மருத்துவர் எஸ்.பி.திருமலா ராவ். அவரது மருத்துவமனைக்குமுன் உள்ள நடைபாதையில் தொலைபேசிக் கம்பி வடங்களை பதிப்பதற்காக ஒரு தனியார் தொலைபேசி நிறுவனம் குழி ஒன்றைப் பறித்திருந்தது. பணி முடிந்தபின் அதை மூடி, முன்பிருந்ததைப்போல் செய்யாமல் விட்டுவிட்டது. பல நாட்கள் இப்படியே சரி செய்யப்படாமல் இருப்பதை கண்ட திருமலா ராவ், இதற்குக் காரணமான அத்தொலைபேசி நிறுவனத்திடம் இது தொடர்பான விவரங்களைக் கேட்டு, மைசூர் மாநகராட்சியின் பொதுத் தகவல் அலுவலருக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி ரூ.10/- கட்டணம் செலுத்தி விண்ணப்பம் செய்தார். ஆனால், அவருக்குத் தகவல் கொடுப்பதற்கென தகவல் சட்டம் நிர்ணயம் செய்துள்ள 30நாட்கள் அவகாசம் முடிந்தும் எந்தத் தகவலும் வழங்கப்படவில்லை.

இவ்வாறு தகவல் தராமல் இருப்பது ஒரு சேவைக் குறைபாடாகும். எனவே, தனக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று திருமலா ராவ்,மைசூர் மாநகராட்சி ஆணையருக்கு எதிராக மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகார் செய்தார். மாநகராட்சி நிர்வாகம், ‘அதிகப்படியான பணிச்சுமையின் காரணமாக தகவல் வழங்க முடியவில்லை‘ என்று சமாதானம் சொன்னது. ஆனால், இதை மைசூர் மாவட்ட மன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. ‘இப்பிரச்சினையில் புகார்தாரர் ஒரு ‘நுகர்வோராக’ நுகர்வோர் மன்றத்தை அணுக உரிமை உண்டு. எனவே, தகவல் அறிதல் என்ற மதிப்புமிக்க உரிமையை அங்கீகரிக்கும் வண்ணம் புகார்தாரருக்கு மைசூர் மாநகராட்சி, பெயரளவு இழப்பீடாக ரூ.500/- அளிக்க வேண்டும்‘ என்று தீர்ப்புக் கூறியது.

இத்தீர்ப்பை எதிர்த்து மைசூர் மாநகராட்சி, கர்நாடக மாநில நுர்கர்வோர் குறைதீர் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தது. அங்கு, ‘தகவல் அறியும் சட்டப்படி கேட்ட தகவல் அதற்குரிய கால வரம்பிற்குள் தரப்படவில்லையானால், அதற்கான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகக் கருதப்பட வேண்டும். இதை எதிர்த்து அடுத்துள்ள மேல்நிலை அதிகார அமைப்பிடம் மேல்முறையீடு செய்வதே இதற்கான தீர்வாகும். அப்படியிருக்க, இதற்காக நுகர்வோர் மன்றத்தை நாடக்கூடாது‘ என்று கூறி, மாவட்ட மன்றத்தின் ஆணையை ரத்து செய்து, திருமலா ராவின் புகாரை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.

கர்நாடக ஆணையத்தின் தீர்ப்பை, ராவ் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர், தேசிய ஆணையத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தார். அங்கு கர்நாடக மாநில குறைதீர் ஆணையத்தின் தீர்ப்பு ரத்து செய்யப்பட்டு, மைசூர் மாவட்ட குறைதீர் மன்றத்தின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது.

இத்தீர்ப்பில், ‘தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி தகவல் கோரும் ஒருவர், அதற்கான கட்டணமாக ரூ. 10/- செலுத்துகிறார். எனவே அவர், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டப்படி ஒரு நுகர்வோர் ஆகிறார். இங்கு புகார்தாரரும் இவ்வாறு கட்டணம் செலுத்தி தகவல் கேட்டுள்ளார். ஆனால், அது அவருக்கு வழங்கப்படவில்லை. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின்படி சேவைகளைப் பெறும் ஒருவருக்கு அச்சேவை வழங்கப்படவில்லையானால், அது சேவைக் குறைபாடாகும்’ என்று கூறி தேசிய ஆணையம், ராவின் மேல்முறையீட்டை அனுமதித்தது. அத்துடன், ‘தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி கேட்ட தகவல் தரப்படவில்லை என்றால், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 2(1)(ஓ)- வின்படி சேவை என்பது, பயன்படுத்த வாய்ப்பு உடையவர்களுக்கு கிடைக்கச் செய்யப் பெறும் எந்த வகையான சேவையும் என்று பொருள்படும். தகவல் தராத அலுவலர்களுக்கு, அபராதம் விதிக்க தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 20-ல் வகை செய்யப்பட்டிருந்தாலும், தகவல் கோரி அது வழங்கப்படாத நுகர்வோர்களுக்குச் சேவைக் குறைபாட்டிற்காக இழப்பீட்டின் வடிவில் எந்தத் தீர்வும் வழங்க அதில் வகை செய்யப்பட வில்லை என்றும் தேசிய ஆணையம் கூறியது.

தேசிய ஆணையத்தின் இந்தத் தீர்ப்பை முன்னுதாரணமாகக் கொண்டு, திருநெல்வேலியில் பல நுகர்வோர் புகார்களுக்கு சிறப்பான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முதன்முறையாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் அளிக்கப்படாமைக்கு அபராதம் விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது திருநெல்வேலியில்தான்.

இதுகுறித்து வழக்கறிஞர் ஆறுமுகராஜ், "திருநெல்வேலியில் செல்லப்பாண்டியன் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. முதலில் இந்த மேம்பாலம் கிழக்கு மேற்குத் திசையில் கட்டுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால், வியாபாரம் பாதிக்கும் என்று பாலம் கட்டப்பட இருக்கும் இடத்தின் அருகாமையில் இருக்கிற பெரிய நிறுவனங்களின் பணபலத்தால் தீர்மானம் மாற்றப்பட்டு, எதிர்த்திசையில் ட்ராஃபிக் இல்லாத இடத்தில் பாலம் கட்டப்பட்டுள்ளது. பைபாஸ் பாதையிலேயே இது அமைந்துள்ளதால் பயனில்லை. இதுகுறித்த தகவல்களை மாநகராட்சியிடம் கேட்டபோது, தகவல் தரவில்லை. ஒரு நுகர்வோரா எனக்கு இது பாதிப்பு ஏற்படுத்தியது என்று நான், நுகர்வோர் மன்றத்தில் புகாரளிக்க... நீதிபதி ராமச்சந்திரன் தகவல் கொடுக்க உத்தரவிட்டார். ஆனால், தீர்மானமே போடவில்லை என பொய்யான தகவல் தந்திருக்கின்றனர். இப்போது அவர்கள் மேல், நடவடிக்கை எடுக்கக் கோரி தகவல்கள் சேகரித்து வருகிறேன். தகவல் உரிமைச் சட்டத்தின் மூலம் முப்பது நாட்களுக்கு மேலாகியும் தகவல்கள் கிடைக்கவில்லையென்று நுகர்வோர் மன்றத்திற்கு வந்த புகார்களுக்கு நல்ல தீர்ப்பை நீதிபதி ராமச்சந்திரன் வழங்கியிருக்கிறார். சில வழக்குகளில் புகார்தாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக 10,000ரூபாயும் இன்னும் சில வழக்குகளில் 20,000ரூபாயும் அபராதம் விதித்ததுடன், தகவலை உடனடியாகக் கொடுக்க வேண்டும் என்ற உத்தரவும் வழங்கியுள்ளார். பெரும்பாலான வழக்கில் நுகர்வோருக்குச் சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது வரவேற்க வேண்டிய விஷயம்" என்று கூறுகிறார்.

(பொங்குவோம்)பெட்டிச் செய்தி: தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்படி தகவல்வேண்டுவோர் கவனிக்க வேண்டியவை..

திலகேஸ்வரன், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்


உறுதியாக யாருக்கு அனுப்புவது என்று தெரியாவிட்டாலும் பரவாயில்லை. மிக உத்தேசமாக எந்த அலுவலரிடம் இருந்து தகவல் கிடைக்கலாம் என நம்புகிறீர்களோ, அந்த அலுவலர் முகவரிக்கு உரிய கட்டணத்துடன் விண்ணப்பம் அளிக்கலாம். நாம் அனுப்புகிற விண்ணப்பத்தை அந்த அலுவலருக்கானது அல்ல என்றாலும் அதைப் பெறும் பொதுத்தகவல் அலுவலர், அதனை சம்பந்தப்பட்ட அலுவலருக்கு ஐந்து நாட்களில் மாற்றம் செய்து அனுப்பி வைக்க வேண்டும். இதுகுறித்து விண்ணப்பித்தவருக்கும் தகவல் அளிக்க வேண்டும்.தகவலைக் கேட்கும் காரணத்தைத் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. தகவலைக் கேட்கும் விண்ணப்பத்தை தமிழில் எழுதலாம். எந்த வடிவிலும் (நகல், அச்சிட்ட படிவம், மின்னஞ்சல், பிளாப்பி, சி.டி.) எந்த வகையிலும் தகவலைப் பெற உரிமை உண்டு.

தகவலுக்கான ஒவ்வொரு விண்ணப்பமும் 10ரூபாய் கட்டணத்துடன் அனுப்பப்பட வேண்டும். இது ரொக்கமாகவோ, வரைவுக் காசோலையாகவோ, கருவூலச் சீட்டு அல்லது வங்கி வரைவோலையாகவோ, நீதிமன்றக் கட்டண ஸ்டாம்பாகவோ இருக்கலாம். வறுமைக்கோட்டிற்குக்கீழ் வாழ்பவருக்குக் கட்டணம் இல்லை.கேட்கப்படும் தகவல்கள் A4, A3அளவுத்தாளில் இருந்தால், ஒவ்வொரு பக்கத்திற்கும் இரண்டு ரூபாய் அச்சிடப்பட்ட படிவத்தில் தகவல் அல்லது மின்னணு வழியான சி.டி. போன்றவற்றிற்கு ஏற்றாற்போல் கட்டணம் வேறுபடும். குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தகவல் அளிக்கத் தவறினால், மேற்கண்ட கட்டணமின்றி விண்ணப்பதாரருக்கு அத்தகவலை இலவசமாக வழங்க வேண்டும். இக்கட்டணத்தை முன்கூட்டி திட்டமிட்டோ அல்லது தகவல் அளிக்கப்படும்போதோ அனுப்பலாம்.மத்திய அரசு தரவேண்டிய தகவல் என்றால், டி.டி., போஸ்டல் ஆர்டரிலும், மாநில அரசென்றால் நீதிமன்றக் கட்டண ஸ்டாம்ப்., டி.டி., போஸ்டல் ஆர்டர் எடுத்தும் அனுப்ப வேண்டும்.விண்ணப்பத்தில் அனுப்புநரான உங்களது பெயர் உட்பட முழு முகவரி எழுத வேண்டும், என்ன காரணத்திற்காக என்று குறிப்பிட வேண்டிய அவசியமில்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி இந்தத் தகவலைக் கோருகிறேன் என்று என்று குறிப்பிட வேண்டும். பெறுநரில் மாநில/ மத்திய பொதுத்தகவல் அதிகாரி என்று குறிப்பிட்டு, தகவல் கிடைக்கும் உரிய முகவரியைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.

விலக்களிக்கப்பட்ட பட்டியலில் உள்ள நாட்டின் இறையாண்மையை பாதிக்கக் கூடிய வகையில் கேட்கப்படும் தகவல்கள், குற்றப்புலனாவுத் துறை, கடலோரக் காவல்படை, விஜிலென்ஸ் துறை போன்ற குறிப்பிட்ட துறை சார்ந்த தகவல்களைப பெற அனுமதி இல்லை.

Engr.Sulthan

Dr.சுந்தரராஜ் தயாளன்
31-03-2012, 10:12 AM
இப்போது எங்கும் பற்றி எரிந்துகொண்டு இருக்கும் தலைப்பு இதுதான். வெறும் பத்து ரூபாயில் தகவல் அறிந்துகொள்ள முடியும். அறியத்தந்தமைக்கு நன்றி சுல்த்தான்.:)