PDA

View Full Version : சும்மா



M.Jagadeesan
25-03-2012, 05:43 AM
வாசலில் நிழலாடியது. யாரென்று பார்த்தேன். பக்கத்துத்தெரு பத்மநாபன் கையில் ஒரு பையுடன் நின்றுகொண்டு இருந்தார்.

" வாங்க! பத்மநாபன்! என்ன இவ்வளவு தூரம்?"

" ஒண்ணுமில்ல சார்! சும்மா உங்கள பாத்துட்டுப் போலாம்ணு வந்தேன் "

" அதென்ன கையில பை ?"

" பெரியவங்களைப் பார்க்கப் போகும்போது சும்மா கைய வீசிக்கிட்டுப் போகக்கூடாது. ஏதாவது பழங்கள் வாங்கிக்கிட்டுப் போ! " ன்னு அப்பா சொன்னார்.அதான் ஆப்பிள் வாங்கியாந்தேன்." என்று சொல்லிவிட்டுப் பையிலிருந்த பழங்களை எடுத்து மேஜையின் மீது வைத்தார்.மொத்தம் 13 பழங்கள் இருந்தன.

" அதென்ன 13 பழங்கள் ! இது என்ன கணக்கு ? " என்று கேட்டேன்.

" சார்! நான் ஒரு டஜன் பழங்கள் தான் வாங்கினேன்; கடைக்காரன் ஒரு பழத்தை சும்மா கொடுத்தான்."

சிறிதுநேரம் பேசியபின் நான் பத்மநாபனைப் பார்த்து," அது சரி ! பத்மநாபன்! என்ன விஷயமாக என்னைப் பார்க்க வந்தீர்கள்? "

" நீங்கள் வேலை பார்க்கும் கல்லூரியில் ஏதாவது வேலை காலியாக உள்ளதா? என் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்குமா ? "

" பத்மநாபன்! இப்ப நீங்க என்ன வேலை செய்றீங்க ?"

" சும்மாத்தான் இருக்கேன் சார்! "

' சும்மாவா இருக்குறீங்க? உழைக்கவேண்டிய வயசுல இப்படி சும்மா வீட்டுல உக்காந்து இருக்கலாமா? " Idleness is Devil's mind " ன்னு இங்கிலிஷ்ல ஒரு பழமொழி சொல்லுவாங்க! அதாவது சோம்பேறிகளின் உள்ளம் சாத்தானின் புகலிடம். கோவிச்சுக்காதீங்க! சும்மா ஒரு பேச்சுக்குச் சொன்னேன்."

அப்பொழுது வாசலில் என்மனைவி பத்மா யாருடனோ சண்டை போட்டுக்கொண்டு இருந்தாள். அவள் வந்தவுடன்,

" பத்மா! யாருடன் சண்டை போட்டுக்கொண்டு இருந்தாய் ? "

காலையில பிச்சைக்காரனுக்கு நாலு இட்லி கொடுத்தேன். இப்ப மறுபடியும் சாப்பாட்டுக்கு வந்திட்டான்! நாலு வீட்ல போய் கேட்க வேண்டியதுதானே! சும்மா சும்மா ஒரே வீட்டுக்கு வந்தா பிச்சைக்கேட்பாங்க? அதான் சத்தம் போட்டு அனுப்பினேன்." என்று சொன்னாள்.

இதைக்கேட்டவுடன் என் மனதில் தோன்றிய எண்ணம்.


செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்
சும்மாயிரு சொல் லற என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே.

பெரியவங்க சும்மாவா சொன்னாங்க?ஆனா எனக்குத்தான் " சும்மா " என்ற சொல்லுக்குப் பொருள் தெரியவில்லை..

மதி
25-03-2012, 06:11 AM
நானும் சும்மா தான் இருக்கேன்.. ஆனா அந்த சொல்லுக்கான அர்த்தம் தான் தெரியல.

M.Jagadeesan
25-03-2012, 06:49 AM
நானும் சும்மா தான் இருக்கேன்.. ஆனா அந்த சொல்லுக்கான அர்த்தம் தான் தெரியல.


மதி! நீங்கள் சும்மா இருப்பதை விட , அந்த சொல்லுக்கான பொருளைக் கண்டுபிடிப்பது நல்லது.

கீதம்
26-03-2012, 01:36 AM
பிரதாப முதலியார் சரித்திரத்தில் அவர் சூது விளையாடுமுன் பந்தயம் என்னவென்று கேட்க 'சும்மா' என்பார்கள் விளையாடுவோர். இவரும் சும்மாதானே என்று விளையாடி முடித்து எழுகையில் 'சும்மாவைக் கொடுத்துவிட்டுப்போ!' என்று வம்படி செய்ய, அவர் என்ன செய்வதென அறியாமல் விழித்து நிற்கும் காட்சி நினைவுக்கு வந்துவிட்டது, இந்தக் கதை படித்து. :)

சும்மா என்னும் சொல் எத்தனை வகையாகப் பயன்படுகிறது! காரணமற்று, பொருளற்று, விலையற்று, வேலையற்று, வேறிடம் போதலற்று, சிந்தனையற்று என்று ஏராளப் பொருள் தரும் சும்மாவை சும்மா (பெருமையற்றதென) நினைக்கலாமோ என்று எண்ணும் வகையில் ஒரு அழகான கதை. பாராட்டுகள் ஐயா.

Dr.சுந்தரராஜ் தயாளன்
26-03-2012, 03:26 AM
சும்மாவும் சும்மாதான் சும்மாதான் சும்மாவாம்
சும்மாவே சும்மாசும் மா
:)சும்மா....ஒரு விளையாட்டுக்கு எழுதினேன் ஐயா :)

M.Jagadeesan
26-03-2012, 04:49 AM
கீதம், தயாளன் ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி!

அன்புரசிகன்
26-03-2012, 04:53 AM
சும்மா இருக்கிறது எவ்வளவு கஷ்டம் என்பதை ஒருபடத்தில் வடிவேலு காட்டுவார். அது தான் ஞாபகம் வந்தது....

வாழ்த்துக்கள் ஐயா...

-----------
நானும் சும்மா விக்கியில் தேடினேன். வந்த பதில்கள் இவை::D

1)quiet =அமைதியாக
2)in fact =உண்மையில்
3)idle =வீணாக
4)free of cost =இலவசமாக
5)lie =பொய்
6)without use =உபயோகமற்று
7)very often =அடிக்கடி
8)always =எப்போதும்
9)just =தற்செயலாக,வெறுமே
10)empty =காலி
11)repeat =மறுபடியும்
12)bare =ஒன்றுமில்லாமல்
13)lazily =சோம்பேறித்தனமாக
14)leisurely =களைப்பாறிக்கொண்டு
15)just for fun =விளையாட்டிற்கு

M.Jagadeesan
26-03-2012, 05:16 AM
சும்மா என்ற கதையைப் படித்தவுடன் சும்மாயிராமல் ," சும்மா " என்ற சொல்லுக்குப் பல பொருள் உண்டு என்று கண்டறிந்த அன்புரசிகன் அவர்களுக்குப் பாராட்டு.