PDA

View Full Version : இந்தியா ஆதரவு - இலங்கைக்கு எதிரான சரித்திர தீர்மானம் வெற்றி!



ஆதி
22-03-2012, 11:41 AM
ஜெனீவா: ஐநாவில் போர்க்குற்றவாளி இலங்கைக்கு எதிராகக் கொண்டு வந்த தீர்மானம், இந்தியாவின் ஆதரவுடன் வெற்றி பெற்றது.

தமிழருக்கு எதிராக இலங்கை நடத்திய இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் சர்வதேச அளவில் கவன ஈர்ப்பைப் பெற்றுள்ளது.

ஐநாவில் இன்று இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில், இலங்கையை எதிர்த்து 24 நாடுகளும், இலங்கைக்கு ஆதரவாக 15 நாடுகளும் வாக்களித்தன. இலங்கையை எதிர்த்த முக்கிய நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் வெற்றியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

முன்னதாக விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய க்யூபா நாட்டுப் பிரதிநிதி, இலங்கைக்கு, பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளும் ஆயுதங்களை வழங்கியுள்ளன. எனவே இதில் இலங்கையை குற்றவாளியாக்கக் கூடாது. மேலும் தீர்மானத்தை வரும் செப்டம்பருக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரினார்.

ஆனால் செப்டம்பருக்கு ஒத்தி வைக்க முடியாது என்பதை உறுதியாகக் கூறிவிட்டது அமெரிக்கா.

தொடர்ந்து, தீர்மானத்துக்கு எதிராகப் பேசிய ஈக்வடார், மனித உரிமை விஷயத்தில் அமெரிக்கா இரட்டை நிலை எடுத்துள்ளதாகவும், ஈராக், ஆப்கானிஸ்தானில் நடக்கும் மனித உரிமை பற்றி பேசாதது ஏன் என கேள்வி எழுப்பி, தீர்மானத்துக்கு எதிராக கருத்தைப் பதிவு செய்தது.

நைஜீரியா, உகாண்டா, தாய்லாந்து போன்ற நாடுகளும் இலங்கைக்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்தன. சீனா, பாகிஸ்தான், கிர்கிஸ்தான், மாலத்தீவு போன்ற நாடுகள் இலங்கைக்கு தீவிர ஆதரவை அளித்தன. குறிப்பாக தமிழினப் படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை தேவையில்லை என்று வாதாடியது சீனா.

ஆனால், உருகுவே, பங்களாதேஷ், பெல்ஜியம் போன்ற பெரும்பாலான நாடுகள் அமெரிக்க தீர்மானத்தை உறுதியாக ஆதரித்தன.

இலங்கையின் போர்க்குற்றங்களை நாகரீக சமூகம் ஏற்க முடியாது என வாதாடின.

தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு

இந்தியாவின் பிரதிநிதி பேசுகையில், இலங்கையில் தமிழருக்கு அடிப்படை உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும். நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவை என்று கூறி, அமெரிக்க தீர்மானத்தை ஆதரிப்பதாகக் கூறினார்.

ஆதவா
22-03-2012, 12:16 PM
இதனால் நடக்கவிருக்கும் நன்மை தீமை குறித்து சொல்லுங்களேன்.

செல்வா
22-03-2012, 07:29 PM
இதனால் நடக்கவிருக்கும் நன்மை தீமை குறித்து சொல்லுங்களேன்.

தாமரையண்ணா ஒரு திரியில் அருமையாகச் சொல்லியிருப்பார்கள். விடுதலைப்புலிகளின் தோல்விக்கு மிகமுக்கிய காரணங்களில் ஒன்று. அவர்களது தார்மீகப் போராட்டத்தின் ஞாயத்தை உலக நாடுகள் உணரவைக்கத் தவறிவிட்டனர் என்பதாகும்.

இப்போது அதற்குரிய வாய்ப்பு அதிகமாகியிருக்கிறது என்பது உண்மையே. ஒருங்கிணைக்கப்பட்ட, சமயோசிதமான அரசியல் சதுரங்கக்காய் நகர்த்தல்கள் நிகழ்ந்தால் உலக நாடுகளின் துணையோடே தனியீழம் அமைய வாய்ப்புள்ளது.

சிவா.ஜி
22-03-2012, 08:12 PM
ஆதனின் பதிவில் சில தவறுகள் இருப்பதாய் படுகிறது...சரி பார்க்கவும்...ஆதன்.

தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள்

இந்தியா
அமெரிக்கா
இத்தாலி
சிலி
மெக்ஸிகோ
பெரு
உருகுவே
கொஸ்டாரிக்கா
கௌதமாலா
ஆஸ்திரியா
பெல்ஜியம்
நார்வே
ஸ்பெயின்
சுவிட்ஸர்லாந்து
செக். குடியரசு
ஹங்கேரி
போலந்து
மோல்டோவா
ருமேனியா
பெனின்
கெமரூன்
லிபியா
மொரிஷியஸ்
நைஜீரியா

எதிராக வாக்களித்த நாடுகள்

ரஷ்யா
சீனா
கியூபா
வங்கதேசம்
கத்தார்
தாய்லாந்து
இந்தோனேஷியா
மாலத்தீவு
பிலிப்பைன்ஸ்
காங்கோ
மொரிட்டானியா
உகாண்டா
குவைத்
சவுதி அரேபியா
ஈக்குவடோர்

வாக்கெடுப்பில் பங்கேற்காத நாடுகள்

மலேசியா
அங்கோலா
பொட்ஸ்வானா
புர்கினா பெஸோ
டிஜிபோட்டி
செனகல்
ஜோர்டான்
கிர்கிஸ்தான்

பெரும்பாலான முஸ்லீம் நாடுகள்...இலங்கைக்கு ஆதரவளித்துள்ளன......இன அழிப்புக்கு ஆதரவா...தமிழர்கள் அனைவரும் இந்துக்களே என்ற எண்ணமா....அல்லது விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை முஸ்லீம்களுக்குமான பிரச்சனையில்....அந்த நாடுகள் முஸ்லீம்கள் பக்கமா...தெரியவில்லை.

அமரன்
22-03-2012, 08:41 PM
சிவாண்ணா..

உலக அரங்கில் இலங்கை அரசியல் நகர்வுகள் பன்முகப்படுத்தப்பட்டு இருந்தன. ரஷ்யா, சீனா, கியூபா போன்ற அமெரிக்காவின் எதிரணிகளை இலகுவாக வளைத்தார்கள். இந்த அணியில் இருக்கும் ரஷ்யாவின் நட்பு நாடுகளான சில முஸ்லிம் நாடுகளின் ஆதரவை பெறுவதில் கொஞ்சம் நம்பகத்தன்மை இழந்து, இறுதி யுக்தியாக, இலங்கை வாழ் இஸ்லாமியப் பெருந்தலைகள் ஐ.நா.கூட்டத்தொடரில் பங்குபற்ற வைக்கப்பட்டிருந்தனர். இறுதி நாட்களில் அவர்களின் வாதப்பிரதிவாதங்களும், சபை அநாகரிகங்களும், உப மாநாடுகளை இடையில் நிறுத்தும் அளவுக்கு கூச்சல் குழப்பம் மிக்கவையாக இருந்தன.

அவர்களின் சந்திப்புகளும், மட்டத் தொடர்புகளும் என மத ரீதியான பிரச்சாரங்களும், இலங்கையின் நரித்தன அரசியலும் இணைந்ததில், இலங்கையின் வியூகங்கள் பெரு வெற்றி பெற்றன என்பதில் மாற்றுக்கருத்து எவருக்கும் இராது.

ஊடகங்களில் வெளிவராத உள்ளக நகர்வுகள் நிறையவே நடந்திருக்குண்ணா..

சிவா.ஜி
22-03-2012, 08:52 PM
சிவாண்ணா..
ஊடகங்களில் வெளிவராத உள்ளக நகர்வுகள் நிறையவே நடந்திருக்குண்ணா..

உண்மைதான் அமரன். ஆனால் காலம் இப்படியே போய்விடாது. உண்மை ஒருநாள் விழிக்கும்....அப்போது தவறு செய்தவர்களுக்கு ‘வலிக்கும்’

அமரன்
22-03-2012, 10:26 PM
தாமரையண்ணா ஒரு திரியில் அருமையாகச் சொல்லியிருப்பார்கள். விடுதலைப்புலிகளின் தோல்விக்கு மிகமுக்கிய காரணங்களில் ஒன்று. அவர்களது தார்மீகப் போராட்டத்தின் ஞாயத்தை உலக நாடுகள் உணரவைக்கத் தவறிவிட்டனர் என்பதாகும்.

இப்போது அதற்குரிய வாய்ப்பு அதிகமாகியிருக்கிறது என்பது உண்மையே. ஒருங்கிணைக்கப்பட்ட, சமயோசிதமான அரசியல் சதுரங்கக்காய் நகர்த்தல்கள் நிகழ்ந்தால் உலக நாடுகளின் துணையோடே தனியீழம் அமைய வாய்ப்புள்ளது.

ஆசியாக் கிண்ணத்துக்கான இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது, பங்களாதேசில் மட்டுமல்ல, ஜெனிவாவிலும்தான்..

கொஞ்ச நாட்களாக கடுங்குளிர் தாக்கியபோது கூட கொழுந்து விட்டு எரிந்தது ஜெனிவாக்களம். பல்ரக எதிர்பார்ப்புகள்.. பல்வேறு நகர்வுகள்.. பல் பேச்சுகள்.. அத்தனையையும் மௌனத்தின் துணைகோண்டு எதிர்கொள்ளத்தான் முடிந்தது.

ஏனோ உன் பதிவைப் பார்த்ததும் மௌனம் உடைந்து விட்டது.

விடுதலைப்புலிகளின்/ ஈழத்தமிழரின் தார்மீகப் போராட்டத்தின் ஞாயப்பாடுகளை உலக நாடுகளுக்கு உணர்த்தத் தவறிவிட்டார்கள்.. உண்மைதான்...

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து வெளியேற வேண்டும் எனில் அனுமதி பெற வேண்டும். இந்த ‘பாஸ் பெறும் நடைமுறை’ எவ்வளவு இறுக்கமாக செயற்படுத்தப்பட்டது...!

பதினெட்டு வயதுக்குட்பட்ட குடும்ப அங்கத்தவர் ஒருவர் பிணை நின்றால் மட்டுமே ஏனையோருக்கு கொழும்பு சென்று வர அனுமதி வழங்கப்பட்டது. நிர்ந்தரமாக வெளியேற எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. காலப்போக்கில் வயதுக்கட்டுப்பாட்டுக்குள் அடங்கும் ஒரு குடும்ப உறுப்பினர் பிணை நிற்க ஏனையோருக்கு நிரந்தரமாக வெளியேற அனுமதி வழங்கப்பட்டது.

தனிப்பிள்ளையான நானெல்லாம் வன்னிதாண்டிப் போக முடியுமா என்ற ஏக்கம் வேளைச்சாப்பாட்டுடன் கலந்து சென்று சமிபாடடையாமல் வருத்தும். கொஞ்ச நாட்கள் கடக்க எவர் வேண்டுமானாலும் வெளியேறலாம்.. சரியான காரணங்களைக் கட்டாயம் காட்ட வேண்டும் என்ற கட்டுப்பாடு மட்டும்... இது நடந்தது யாழ்ப்பாணம் சிங்கள இராணுவத்தால் கைப்பற்றப்பட்டு வன்னிப் பெரு நிலப்பரப்புக்கு தமிழர் ஆட்சித் தலைமை மாற்றப்பட்ட 1995 இன் பிற்பகுதி.. இக்காலத்தில் பெருந்திரளான இளையோர் வவுனியாவுக்கு வந்து, இடைத்தங்கல் முகாம்களில் அல்லலுற்று, புலிகளின் பிடியிலிருந்து பெருந்திகை இளைஞர் யுவதிகள் வெளியேற்றம் என்ற அரசியல் ஆதாயப் பரப்புரைகளுக்கு சிங்கள அரசுக்கு உதவி, யார் யாரோ காலைப் பிடித்து, காசு கொடுத்து கொழும்புக்கு வந்து, வெளி நாடுகளில் அரசியல் தஞ்சம் கோரினார்கள். எப்படிப்பட்ட இன்னன்ல்களை அனுபவித்து வெளிநாடுகளுக்கு வந்திருப்பார்கள் என்பதை அக்னியின் பசுமை நாடிய பயணங்களில் அறியலாம்.

தஞ்சம் கோரியவர்களில் ஆண்கள் பலரும் சிங்கள இராணுவத்தாலும் அரச பயங்கரவாதத்தாலும் தாம் பாதிக்கப்பட்டதாகவும் தம் குடும்பம் பாதிக்கப்படுவதாகவும் முதன்மையாகக் காரணம் காட்டி அரசியல் தஞ்சம் கோரினர். பெண்களோ சிங்கள வெறிக்கு தாம் இரையானோம் என வாக்குமூலம் கொடுத்து, எப்படி எல்லாம் சிதைக்கப்பட்டோம் என்றும் பதிவுப்படுத்தினர். அதன் உண்மைத்தன்மை அலசப்படத்தேவை இல்லை.

இப்படிப் பல நாடுகளில் தஞ்சம் கோரிய ஈழத்தமிழன் தன் போராட்டத்தின் ஞாயப்பாடுகளை சட்டரீதியாக உலகுக்கு அடுக்கினான். அப்படி அடுக்கி வதிவிட உரிமை பெற்று, தாயகம் செல்ல இயலாத சூழ்நிலையில், தாயக மீட்புக்கு நிதிவளம் கொடுத்து உதவினான் என்பது புலிகளின் இரண்டாம் மாங்காய் என்பதும், அவர்களைக் கொண்டு வெளிநாடுகள் பலதில் போராட்ட வித்துகளை விதைத்து ஒன்றைய விருட்சங்களை உருவாக்கினார்கள் என்பது மூன்றாம் மாங்காய் என்பதுமாக பலமாங்காய்களை ஆய வேண்டிய தேவை இப்போது தேவை இல்லை.

அரசுகளுக்கு உணர்த்திய தமிழன் தன் வசிப்பிட பொது மக்களுக்கு உணர்த்த இடர்பட்டான் என்பது நிஜம். அதற்கு உரியவற்றைச் செய்ய நீண்டகாலம் தேவைப்பட்டது. வெளிநாடுகளில் செட்டில் ஆன ஈழத்தமிழனின் பிள்ளைகள் வளர்ந்து, கல்வி கற்று, இளையோர் அமைப்பு என்ற பலம் மிக்க, யூதர்களின் அடிப்படைக் கட்டமைப்ப்பை ஒத்த, இயக்கமாக உருவெடுக்கத் தொடங்கிய காலத்தில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பிள்ளையார் சுழி போடவும் சரியாக இருந்தது.

இளையோர் அமைப்பு முளைத்த வேகமும், எழுந்த வீறும், போராட்டத்தின் வீச்சும் உலக நாடுகளை ஒரு கணமேனும் உறைய வைத்திருக்கும். சிங்களத்தை அச்சம் கொள்ள வைத்தது. உலக நாட்டு மக்களுக்கு ஈழவர் தார்மீகப் போராட்டத்தின் ஞாயப்பாடுகளை உணர்த்தியது..

இளையோர் விட்ட இடத்திலிருந்து பழையவர்கள் தொடர ஜெனிவாவின் இன்றைய பரிணாமத்தில் வந்து நிற்கிறது போராட்டம்..

இந்த நிலையில், அமெரிக்கவினதும், ஐரோப்பாவினதும் நிலைப்பாடு தமிழனின் போராட்ட வெற்றியா?

அன்புரசிகன்
22-03-2012, 10:53 PM
என்னைப்பொறுத்து சும்மா அமெரிக்கா தனது நிலையை ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் உணர்த்த இலங்கை தமிழின படுகொலை பிரச்சனை என்ற பகடைகாயை பயன்படுத்தியுள்ளது. காரணம் சிரியா மீதான பாதுகாப்புசபையின் வாக்கெடுப்பில் இந்த இருநாடுகளும் எதிர்த்துக்கொண்டுள்ளன... ஒருகட்டத்தில் பிரான்சும் பிரித்தானியாவும் தான் கிளர்ந்தெழும்...

இலங்கையில் உள்ள பிரச்சனையை விடுதலைப்புலிகள் உணர்த்ததவறினர் என்ற வாதம் என்னால் முழுமையாக ஏற்கமுடியவில்லை. விடுதலைப்புலிகளை பயங்கரவாதி என்ற பார்வையில் பார்த்தார்களே தவிர வேறு எந்தவிதத்திலும் பார்க்கவில்லை. இந்த விடையத்தில் அந்நாள் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரின் பிரச்சார வெற்றி வெளிப்படையாக தெரியும். உலகிலுள்ள அனைத்து வளர்ந்த நாடுகளுக்கும் அங்கு தமிழர்களுக்கு என்ன நிகழ்கிறது என்று தெரியும். அதற்கு சிறிய உதாரணம்...

இலங்கையில் உள்ள தமிழர்கள் எந்தநாட்டுக்காவது விசாவுக்காக விண்ணப்பித்தால் அது "உங்கள் நாட்டில் இனப்பிரச்சனை உள்ளது. நீங்கள் இங்கே வந்தால் அகதிகளாக விண்ணப்பம் கோரிவிடுவீர்கள். ஆகையால் உங்கள் விண்ணம்பம் நிராகரிக்கப்ப்டுகிறது என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கிறேன்." என்ற சம்பிரதாய வார்த்தைகளுடன் அதற்கு சம்பந்தப்படுத்தி இலங்கையில் தமிழ்ப்பத்திரிக்கையில் வெளியான செய்திகளை பின்னிணைப்பாக இணைத்து அனுப்பிவைக்கும். இதையே ஒரு சிங்களவன் செய்தால் இலகுவாக விசா கிட்டிவிடும்....

எனக்கு அன்று தான் தெரிந்தது இலங்கையிலுள்ள தமிழ்ப்பத்திரிக்கைகளை இந்த மேற்குலகநாடுகளின் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் படிக்கின்றார்கள் என்று... நான் அமீரகத்தில் நல்ல சம்பளத்துடன் வேலைசெய்துகொண்டிருந்தபோது பிரித்தானியாவிற்கு எனது உறவினரின் திருமணத்திற்காக விண்ணப்பித்தபோது கிட்டிய இந்த கடிதமே எனக்கு வந்தது.

ஆகவே இலங்கையில் தமிழருக்கு என்ன நிகழ்ந்தது நிகழ்கிறது நிகழப்போகிறது என்பது எந்த நாடுகளுக்கும் தெரியாமல் இல்லை. சீனா ரஷ்யாவைப்பொறுது்தவரை அது அமெரிக்காவின் இடத்தை பிடிக்கப்பார்க்கிறது. கூடவே அவைகளின் பொருளாதார வளர்ச்சியில் சிறுபங்கு இலங்கையின் போர் மற்றும் ஆங்காங்கே நடக்கும் சிறு சிறு அபிவிருத்திகள் போன்றவற்றிற்கு தேவைப்படுகிறது. (எல்லாம் இறால் விட்டு சுறாப்பிடிக்கிற வேலை தான்.....) உண்மையை சொல்லப்பேனால் சீனா இலங்கையில் இன்னொரு போரை உருவாக்கத்தான் முற்படுகிறது. என்ன முன்னர் ராவ் காந்தி போன்ற பெயர்கள். இப்ப சங் மங் சுங் என்ற பெயர்களாக இருக்கும்.

பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அன்புரசிகன்
22-03-2012, 10:57 PM
இந்த நிலையில், அமெரிக்கவினதும், ஐரோப்பாவினதும் நிலைப்பாடு தமிழனின் போராட்ட வெற்றியா?

என்று தான் நாம் நினைப்போம். ஆனால் அது நிச்சயமாக இல்லை அமரா.... தலைக்கு மேல் வெள்ளம் போனபின் யாருக்கு வேண்டும் அணை.... இந்த வெற்றியால் அங்கே முள்வேலிக்கு உள்ளே இருப்பவர்களை காப்பாற்ற முடியுமா??? நேரில் சென்ற பான்கிமூனுக்கே அங்கே உள்ள பிரச்சனையை பார்க்க முடியவில்லை. அல்லது அனுமதிக்கப்படவில்லை.


என்னைப்பொறுத்தவரை இந்த பிரச்சனையில் அன்றுமுதல் இன்றுவரை மாறாது இருப்பது ஜெயலலிதா மட்டுமே.... எனது சிறுபராயம் முதல் நான் கேட்ட செய்தி "நான் விடுதலைப்புலிகளை எதிர்க்கிறேன். ஆனால் அங்கிருக்கும் மக்களுக்கு நிச்சயம் என் ஆதரவு" என்பது.


மற்ற அனைவரும் கபட நாடகம் ஆடுபவர்களே...

அமரன்
22-03-2012, 11:12 PM
இதனால் நடக்கவிருக்கும் நன்மை தீமை குறித்து சொல்லுங்களேன்.

சின்ன பிளாஸ்பேக்..

புலிகள், சிங்கள அரசு ஒப்பந்த காலத்தில் மகிந்தா, கோத்தபாய, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் என மேற்குலக நாடுகள் ஒன்றிணைந்து புலிகளை அழிக்கும் திட்டத்தை வகுந்தனர். (இதனை விபரமாக மன்ற நண்பர் ஒருவர் மன்றத்தில் பதிவு செய்ததாக ஞாபகம்) இந்தக் குழுவில் இடம்பெற்ற இரு ஆசிய நாடுகள் யப்பானும் இந்தியாவும். சகல நாடுகளின் உயர் இராணுவ அதிகாரிகளும் கலந்தாய்ந்து, திட்டங்களை வகுத்து, தீட்டி இலங்கையின் வட கிழக்குக்கு தீ மூட்டினர். 2005/2006 என நினைக்கிறேன். வன்னியில் நடைபெற்ற பொங்குதமிழ் நிகழ்வில், விடுதலைப்புலிகளின் போரியல் ஆய்வுக் காப்பகப் பொறுப்பாளர் யோகி அவர்கள் இந்தத் திட்டத்தைச் சொல்லி 2009 க்கு முன்னதாக புலிகளை அழித்தொழிக்க தீர்ப்பெழுதப்பட்டதை பொதுமக்களுக்குப் பகிரங்கபடுத்தியுள்ளார்.

2009 தொடங்கி மாதங்கள் ஒன்றிரண்டு கடந்தும், புலிகள் வீர தீரத்தால், வன்னி மண்ணின் அடங்காப்பற்றுக் குணத்தால், இலக்கை அடைய இயலாத அழித்தொழிப்பு நட்வடிக்கை ஒரு கட்டத்தில், புலம்பெயர் தமிழரின் எழுச்சியால் நிறுத்தப்படவேண்டிய சூழ்நிலைக்கு ஆளானது. இந்த இடத்தில் கசந்தாலும் சொல்ல வேண்டிய விடயம் ஒன்றுண்டு.

பலம் குறைக்கப்பட்ட நிலையில், மேற்குலம் கொடுப்பதை வாங்கும் நிலைக்கு புலிகள் தள்ளப்பட்ட நிலையில், யுத்தத்தை நிறுத்தி மேற்குலகத் தலையீட்டை ஏற்படுத்த முனைப்புகள் மேற்கொள்ளப்பட்டன. அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்று மக்கள் மீட்பு என்ற பெயர்ப் பலகை உடன் இலங்கைக்குள் நுழையத் தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சினா சிங்களத்துடன் கைகோர்க்க, பதிலுக்கும் ஒரு சில நலன்களுக்குமாக இந்தியா சிங்களத்துக்கு கார்டியனாக, புலிகளை விரைவில் அழித்துப், போரை முடிவுக்கு கொண்டு வரவேண்டி அழுத்தம் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் யுத்தநீதிக்குப் புறம்பாக இராசாயண ஆயுதப் பயன்பாடுகள், விலைபேசல்கள் துணையுடன் மே 18 போரை முடித்து வைத்தது..

அதன் பின் இலங்கைத் தீவு முழுமையாக சீனாவின் ஆதிக்கத்தில் வரத் துவங்கியது. சீனாவின் நேச சக்திகளும், பாரம்பரியம்மிக்க மேலைத்தேச, கீழைத்தேச ஆதிக்கப் போட்டிகளும், மேற்குலக எதிர்ப்பு சக்திகளும் ஒன்றிணைந்து மேலாதிக்கத்துக்கு சவால் விடுக்க, மேலாதிக்கம் சற்றே ஆட்டம் கண்டது.

தொடர்பறுந்தது போலத் தோன்றும் இன்னொரு கிளை..

ரஷ்யாவை உடைத்த பிறகு தனிக்காட்டு ராஜாவாக இருந்த அமெரிக்காவுக்கு புட்டினின் ஆளுகைக்குள் வந்த ரஷ்யாவும், ரஷ்யாவின் புட்டினின் காத்திரமான, ஆர்ப்பாட்டமில்லாத நகர்வுகள் ஆசியாவில் மேலாதிக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கத் துவங்கியது. இலங்கைத் தீவில் அமெரிக்காவின் வில்லூன்றலில் இரத்த ஆறு ஓடத்துவங்கிய 2007 ஆம் ஆண்டு ஜேர்மனியில் புட்டின் பேசிய பேச்சு அமெரிக்காவை நேரடியாகத் தாக்கி இருக்கும். அமெரிக்கா தன் எல்லை தாண்டி தலையீடுகளை மேற்கொள்கிறது. ஒரு துருவ அரசியல் மாதிரி என்பது உலகில் சாத்தியம்மில்லை. ரஷ்யா அதற்கு இடங்கொடுக்கப் போவதுமில்லை.... இந்த இடத்தில், எகிப்து, லிபியா, சிரியா, பிலிப்பீன்ஸ் போன்ற ரஷ்யாவின் நேச நாடுகளுடன் ராசபக்சா ஒட்டி உறவாடியதை நினைவு கூரலாம்.

மேற்சொன்ன நாடுகளில் அண்மைக்காலத்தில் ஏற்பட்ட மாற்றங்களைப் பார்த்தோமானால், புரட்சி என்ற பூதத்தை ஏவிவிட்டு, அந்நாடுகளின் பொருளாதாரங்களைச் சிதைத்து, மேலாதிக்கக் கைப்பாவைகளாக அந்நாடுகளை கட்டி எழுப்புவதில் மேற்குலகம் கங்கணம் கட்டி நிற்கிறது. இன்றைய நிலவரம் சிரியாவின் சிவில் யுத்தம்.. இன்றைய தேதியில் மக்கள் அழிவைக் காரணம் காட்டி, சிரியாவில் போர் நிறுத்த அறைக்கூவலை ஐ.நா. விடுத்திருக்கிறது. இதன் அடுத்தடுத்த கட்டங்கள் எப்படி இருக்கும் என்பதுக்கு ஆப்கானிஸ்தான், லிபியா போன்றன எடுத்துக்காட்டுகள்.

தவிர்த்து, ஆசியாப்பரப்பில் ரஷ்யாவைச் சுற்றி, நிரந்தர ஏவுகணை வேலி அமைக்கும் முனைப்பில் உள்ளது அமெரிக்கா. ரஷியாவின் எல்லை நாடுகளில் நிலையான தளங்களை அமெரிக்கா அமைத்து வருவது, ரஷியாவை கட்டுப்படுத்தி, கீழைத்தேசத்தில் மேல் ஆதிக்கத்தை நிலைநாட்டும் ஒரு முயற்சியே.. இங்கே எங்கே நுழைந்தது இலங்கை...

கீழைத்தேச மேலாதிக்கத்திக்கச் சந்தை இப்போது இலங்கைதான். அமெரிக்காவின் பொருளாத நேரெதிரி சீனாவும், ஏகாதிபத்திய எதிரி ரஷ்யாவும், தம் நேச சக்திகளுடன் இணைந்து இலங்கையை அடிமைப்படுத்த நினைக்க, அமெரிக்கா வலுப்பெற முயலும் ஆசியாக் கூட்டமைப்பு சிதைக்க முனைய இலங்கையில் பகடைகளாக உடுட்டப்படுகின்றது தமிழர் பிரச்சினை.. எந்த நாடுகள் அழிவுக்குக் காரணாமக இருந்தனரோ அந்த நாடுகளே பிரேனணையை ஆதரித்ததும், அமைகாத்த நாடுகள் பிரேனணையை எதிர்த்ததும் இதனால் என்றே நான் கருதிகிறேன்..

கிட்டத்தில் ரொபேட் பிளேக் சொன்ன கருத்தையும் மேற்கொளிடலாம். இலங்கை இன்னும் காலம் தாழ்த்தினால், மீண்டும் இலங்கையில் போராட்டம் வெடிக்கும்..

தன் பாவையாக இலங்கை இயங்க மறுத்தால், லிபியா, சிரியா நிலைக்கு இலங்கையை மேலாதிக்கம் தள்ள முயற்சிக்கும்.. லிபியா, சிரியா வரிசையில், இலங்கை, ஈரான் என நாடுகள் நிலைமாறி, ஆசியாக்கூடமைப்பு வலுவிழந்து போகாது தடுக்க கீழைத்தேசம் முயலும்.. இந்த இழுபறியில் ஈழத்தமிழனுக்கு ஏதாவது கிடைக்க வாய்ப்பிருக்கும்..

தமிழனின் தலையாய பண்பு அப்போது தலை எடுக்கும்...

aren
23-03-2012, 02:01 AM
என்னுடைய நண்பர் ஒருவரிடம் கடந்த வாரம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் சொன்ன விஷயம் என்னவென்றால் சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் அதிகமாகிவிட்டது அதை கட்டுப்படுத்தவே அமெரிக்க இந்த விஷயத்தை இலங்கைக்கு எதிராக எடுத்துக்கொண்டிருக்கிறது. இலங்கை சீனாவின் ஆதிக்கத்தை குறைக்கவேண்டிவரும், அப்படி நடந்தால் இந்த பிரச்சனை வெளியே வராமல் அமுங்கிவிடும் என்றார். இதுவும் உண்மையாக இருக்கலாம் என்று எனக்குப்பட்டது.

இந்த தீர்மானத்தால் என்ன நடக்கப்போகிறது இலங்கை தமிழர்களுக்கு?

Dr.சுந்தரராஜ் தயாளன்
23-03-2012, 05:19 AM
எப்படியிருந்தாலும் ஒரு மாற்றம் நிகழ்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. இது ஈழத் தமிழரின் நன்மைக்கே என்று நம்புவோம்.:)

arun
23-03-2012, 09:58 AM
லேசான ஒளி கீற்று பரவி உள்ளது இதே நிலை தொடரட்டும் தமிழர்களின் வாழ்வு சீக்கிரம் சிறக்கட்டும் ..

குவைத் இன்னும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் தானே உள்ளது எப்படி எதிர்த்து வாக்களித்தது ? ..

Dr.சுந்தரராஜ் தயாளன்
23-03-2012, 03:18 PM
https://www.facebook.com/photo.php?fbid=277696405639618&set=at.117599014982692.21859.100001977827438.100000452742946&type=1&theater
இப்படி ஒரு அவலத்தை நாம் எங்கு பார்த்திருக்கிறோம். புத்தமதத்தைப் போற்றும் சிங்களன் செய்து காண்பித்திருகிறான்.:sprachlos020:

இளகிய மனம் கொண்டோரும், இருதய நோயாளிகளும் பார்ப்பதைத் தவிர்ப்பது நலம்..

jayanth
29-03-2012, 07:36 AM
ஐ.நா போலீசிடம் வாங்கிக்கட்டிய இலங்கை குழுவினர்

அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்துக்கு உள்நாட்டில் பெரும் கண்டனத்தை எழுப்பிய இலங்கை அரசுத் தரப்பினர், ஐ.நா. மனித உரிமை ஆணையத்திலும் அத்துமீறி நடந்து கொண்டு, அசிங்கப்பட்டுத் திரும்பி இருக்கிறார்கள்.

ஜெனீவா நகரில், பிப். 27-ம் தேதி தொடங்கிய ஆணையத்தின் 19-வது கூட்டத் தொடர், மார்ச் 23-ம் தேதி முடிவு அடைந் தது. இதில், இலங்கை அரசுத் தரப்பினர் நடந்து கொண்ட விதம், உலக நாடுகளின் பிரதிநிதி களை முகம் சுளிக்க வைத்தது. இந்த நிகழ்வுகள் நடந்தபோது நேரில் பார்த்த சாட்சிகளில் ஒருவர் பேராசிரியர் ராமு மணிவண்ணன். இவர், சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறையின் பேராசிரியர். அந்த அடிப்படையில் ஜெனீவா சென்ற அவர் நம்மிடம் விவரிக்கிறார்.

''இலங்கையில் இருந்து வந்த மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும், உயிரைப் பாதுகாக்க வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள இலங்கைப் பத்திரிகையாளர்களும் போர் குற்றம் பற்றி உலக நாடுகளின் பிரதிநிதிகளுக்கு எடுத்துக் கூறினார்கள். இவர்கள் எங்கு சென்றாலும் இலங்கை அரசின் நிழற்படை பின்தொடர்ந்தபடியே இருந்தனர். இல ங்கை அரசின் குற்றங்களை எடுத்துச்சொன்ன இவர்களை, வெறித்துப் பார்த்தபடி, தொல்லை கொடுத்துக் கொண்டே இருந்தது ஒரு கும்பல். அதுமட்டுமின்றி, செயற்பாட்டாளர்களைப் புகைப்படம் எடுத்தார்கள். இந்தப் படங்களை வைத்து, இலங்கைப் பத்திரிகைகளில், இவர்களைத் தேசத்துரோகிகள் என்று செய்தி வெளியிட்டனர். இதற்காகவே, இலங்கையில் இருந்து அரசுத் தரப்பில் 72 பேரை அழைத்து வந்தனர். ஐ.நா. போன்ற சர்வதேச அமைப்புகளின் நிகழ்வுகளில் இதுவரை எந்த நாடும் இந்த அளவுக்கு அநாகரிகமாக நடந்து கொண்டது இல்லை.

இலங்கை அரசுத் தரப்பை நியாயப்படுத்துவதற்காக, அவர்கள் தரப்பில் இரு துணை மாநாடுகள் நடத்தப்பட்டன. இரு மாநாடுகளிலும் இலங்கை அரசுக்கு எதிராகப் பல தரப்புகளிலும் கடுமையான கேள்விக்கணைகள். '77 முதல் இனக் கலவரங்களைப் பற்றி விசாரித்த ஆணைக் குழுக்களின் அறிக்கைகளை முழுமையாக வெளியிடவும் இல்லை. வெளியிட்ட தையும் செயல்படுத்தவும் இல்லை. 87-ம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தப்படி உருவாக்கப்பட்ட, வட-கிழக்கு மாகாண இணைப்பையும் இலங்கை உச்ச நீதிமன்றத்தின் மூலம் ரத்து செய்து விட்டீர்கள். இறுதிப்போர் தொடர்பான நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை எப்படிச் செயல்படுத்துவீர்கள்?’ என்று பல நாடுகளும் கிடுக்கிப்பிடியாகக் கேட்டபோதும், அவர்களிடம் இருந்து முறையான பதில் இல்லை.

ஐ.நா-வில் நீண்ட காலம் பணியாற்றி ஓய்வுபெற்ற சட்ட வல்லுநரான விலி, 'இலங்கையில் சுதந்திரம் வந்து இத்தனைக் காலம் ஆகியும் ஜனநாயக மாற்றம் கொண்டு வருவதற்கான அடையாளமே தெரியவில்லை. இப்போது மட்டும் எப்படிச் செயல் படுத்துவீர்கள் என்பதைச் சொல்லுங்கள்?’ என்று கேட்டார். லண்டனில் இருந்து வந்திருந்த ஒரு மனிதஉரிமை செயற்பாட்டாளர், 'தீர்மானத்தின்படி நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரையைச் செயல்படுத்தாவிட்டால், இலங்கை அரசின் மீது நட வடிக்கை எடுக்க முடியுமா?’ என்று கேட்டார். எந்த கேள்விக்கும் நேரடியான பதில் கிடைக்கவில்லை.

அம்னெஸ்டி இன்டர்நேஷனல், ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் ஆகிய சர்வதேச மனித உரிமை அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கும் இலங்கை அரசுத் தரப்புக்கும் கடுமையான வாக்குவாதம் நடந்தது. 'அப்பாவி மக்களை வெள்ளை வேனில் கடத்தும் இலங்கை அரசின் குணத்தை ஐ.நா. ஆணை யத்திலும் காட்டுகிறீர்களா?’ என்று சர்வதேச மனித உரிமை அமைப்பினர் கடுமையாகக் கண்டித்தனர். இதனால், அங்கு அமளி ஏற்பட்டது.

லண்டனில் தஞ்சம் புகுந்துள்ள 'இலங்கையில் ஜனநாயகத்துக்கான பத்திரிகையாளர்கள்’ அமைப் பின் சுனந்த தேசப்ரிய மீது சிங்கள இனவெறியர்கள் தாக்கும் அளவுக்கு நிலைமை படுமோசமானது. ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நவநீதம் பிள்ளை பங்கேற்ற கூட்டத்திலேயே இலங்கை அரசுத் தரப்பினர் எல்லை மீறினார்கள்.

ஐ.நா. போலீஸ் வந்து, அவர்களைக் கடுமையாக எச்சரித்து, வெளியேற்றினார்கள்'' என்று சொன்னவர், ''ஈழத் தமிழினத்தின் நீதிக்கான போராட்டத்தில் இப்போதைய தீர்மானம், முதல் வெற்றிப்படி'' என்று நம்பிக்கையுடன் சொன்னார்.

ஈழத் தமிழினத்துக்கு நீதி கிடைக்கவேண்டும் என்பதுதானே எல்லாத் தமிழர்களின் எதிர் பார்ப்பும்!



''வெற்றிக்குக் காரணம் தமிழ்நாடு!''

ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை அமர்வில் இலங்கை தொடர்பான தீர்மானத்தை அமெரிக்கா சமர்ப்பித்ததும், ராஜதந்திரப் போர் தொடங்கியது. இந்த தீர்மானம் ஆழமாக எந்த ஒரு விஷயத்தையும் ஆராயாவிட்டாலும், இது இலங்கை ஆட்சியாளர்களுக்கு எதிரான தாக்குதலின் ஆரம்பப்படி. இந்தக் கட்டத்தை எட்டுவதற்கு தமிழ்நாடுதான் ஊக்கமாக அமைந்தது என்று புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் பேச்சுக்கள் எழுந்துள்ளன!

இப்படி ஒரு தீர்மானத்தைக் கொண்டுவர வேண்டும் என்று அமெரிக்கா முடிவு எடுத்தபோது, இலங்கையில் இருக்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எம்.பி-க்கள் மற்றும் தலைவர்களையே முதலில் அழைத்துப் பேசி இருக்கிறது. இந்தப் பேச்சுவார்த்தை கடந்த நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

வாஷிங்டனில் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் பேச்சு வார்த்தை நடத்தியது. தங்களின் இந்தத் தீர்மானம் தொடர்பான வரைவுகளைத் தயாரித்தபோது, தமிழ் எம்.பி-யான சுமந்திரனை இரண்டாவது தடவையாக அமெரிக்காவுக்கு அழைத்தது. 'ஒன்றுபட்ட இலங்கைக்குள் இருந்துகொண்டு தீர்வு எட்டுவதுதான் சரியானதாக இருக்கும். முதல்கட்டமாக இலங்கை அரசாங்கம் அமைத்த விசாரணைக் குழுவின் அறிக்கையை வைத்தே விசாரணையைத் தொடங்கலாம்’ என்று அமெரிக்கா சொன்னது.

அமெரிக்கா இந்த முயற்சி எடுப்பதை இலங்கை அரசு தெரிந்து கொண்டு, தன்னுடைய பிரதிநிதிகளை அனைத்து நாடுகளுக்கும் அனுப்பியது. இது அமெரிக்காவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. பெரும்பான்மை நாடுகளின் ஆதரவை தீர்மானத்துக்கு ஆதரவாக வாங்குவது கடினம் என்று அமெரிக்கா நினைத்தது.

இலங்கையைப் போலவே, தன்னுடைய நாட்டுப் பிரதி நிதிகள் 50 பேரை அனைத்து நாடுகளுக்கும் அமெரிக்கா அனுப்பி வைத்து ஆதரவு திரட்டும் காரியத்தில் இறங்கியது. இந்த முயற்சி அனைத்தையும் ஹிலாரி கிளிண்டன்செய்தார்.

இதில் பெரும்பான்மை நாடுகள், 'இந்தியா இந்தத் தீர்மானத்தை ஆதரித்தால் மட்டும்தான் நாங்களும் ஆதரிப்போம். இல்லை என்றால் நடுநிலை வகிப்போம்’ என்று சொன்னது இது, அமெரிக்காவுக்குப் புதிய சிக்கலை உருவாக்கியது. இந்த சூழ்நிலையில், தமிழக அரசியல் கட்சியின் செயற்பாட்டாளர்கள் பலரையும் அமெரிக்கத் தூதரகத்துக்கு வரவழைத்துப் பேசி னார்கள். தமிழகக் கட்சிகள், அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரித்தன. மக்கள், போராட்டங்கள் நடத்தினர். தமிழக முதல்வர், பிரதமருக்குக் கடிதம் எழுதினார். காங்கிரஸின் பிரதானக் கூட்டணிக் கட்சியான தி.மு.க.வும் இந்த தீர்மானத்தை ஆதரித்தது. இதனால், தீர்மானத்தை ஆதரிக்கும் நிலைப் பாட்டுக்கு இந்தியா வந்தது.

''தமிழகம் மட்டும் இந்த நிலைக்கு ஆதரவான போராட்டத்தை நடத்தி இருக்கா விட்டால், இந்தியா இந்த முடிவுக்கு வந்திருக்காது. உலக நாடுகளும் தீர்மானத்தை ஆதரித்திருக்காது.'' என்பது புலம் பெயர்ந்த தமிழர்களின் எண்ணமாக உள்ளது!



நன்றி : thedipaar.com

Dr.சுந்தரராஜ் தயாளன்
29-03-2012, 09:26 AM
பதிவுக்கு மிகவும் நன்றி ஜெயந்த அவர்களே:)

வியாசன்
29-03-2012, 02:12 PM
வெற்றிக்காரணமான தமிழக அரசியல்தான் 40000 க்கு அதிகமான தமிழர்களின் அழிவுக்கு உதவியாக இருந்தது என்பதை மறந்துவிட்டீர்கள். எழுச்சி ஏற்படுத்திய (இதை ஆதரிக்கவில்லை) தியாகி முத்துக்குமாரனின் தியாகத்தை இழிவுபடுத்திய தி.மு.க வும் திருமாவளவனும் மெளனமாக இருந்திருந்தால் தமிழகம் வரலாறு காணாத ஒரு எழுச்சியை கண்டிருக்கும். இதை தமிழக மாணவர் சமுதாயம் சாதித்திருக்கும். அதை இரும்புக்கரம் கொண்டு தடுத்தது கலைஞர் அரசு. அவர்களுக்கு தேர்தல் வெற்றி ஒன்றேதான் குறிக்கோளாக இருந்தது. கலைஞரின் மாயமான் உண்ணா விரதத்தை நம்பியது தமிழக மக்களின் முட்டாள்தனம். இவையெல்லாம்தான் இவ்வளவு உயிழப்புக்கும் காரணமாக இருந்தது. தற்போது கூட மக்களவையில் ஒரு தீர்மானம் கொண்டுவர அ.தி.மு.க வோ அல்லது கம்யூனிஸ்ட் கட்சியோ முயற்சித்தபோது தி.மு.க அவையில் இல்லாமல் வெளியே நின்றது. இலங்கையை பாருங்கள் சிங்களவர்கள் தமிழர்களை அழித்தபோதும் இப்போது ராஜபக்ஷவை காப்பற்றுவதற்கும் எவ்வளவு ஒற்றுமையாக இருக்கின்றார்கள் .எதிரிகளாக இருந்தாலும்

jayanth
30-03-2012, 09:30 AM
பதிவுக்கு மிகவும் நன்றி ஜெயந்த அவர்களே:)

பின்னூட்டத்திற்கு நன்றி Dr.சுந்தரராஜ் தயாளன் அவர்களே.

jayanth
30-03-2012, 11:02 AM
வெற்றிக்காரணமான தமிழக அரசியல்தான் 40000 க்கு அதிகமான தமிழர்களின் அழிவுக்கு உதவியாக இருந்தது என்பதை மறந்துவிட்டீர்கள். ................
ராஜபக்ஷவை காப்பற்றுவதற்கும் எவ்வளவு ஒற்றுமையாக இருக்கின்றார்கள் .எதிரிகளாக இருந்தாலும்

நடந்ததை நினைத்து வருத்தப்படுவதைவிட நடக்கவிருக்கும் நல்லவைகளை, கட்சிகளுக்கு அப்பாற்பட்டு வரவேற்போமே...!!!

வியாசன்
30-03-2012, 01:12 PM
நடந்ததை நினைத்து வருத்தப்படுவதைவிட நடக்கவிருக்கும் நல்லவைகளை, கட்சிகளுக்கு அப்பாற்பட்டு வரவேற்போமே...!!!

ஜயந்த் தமிழர்களாகிய நாங்கள் சுயநலவாதிகள் என்பதைதான் குறிப்பிட்டேன். தகுந்த நேரத்தில் சரியான முடிவை எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே. இப்போது கூட தங்கள் நலன் சார்ந்துதானே முடிவெடுக்கின்றன அரசியல் கட்சிகள்

jayanth
30-03-2012, 02:59 PM
ஜயந்த் தமிழர்களாகிய நாங்கள் சுயநலவாதிகள் என்பதைதான் குறிப்பிட்டேன். தகுந்த நேரத்தில் சரியான முடிவை எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே. இப்போது கூட தங்கள் நலன் சார்ந்துதானே முடிவெடுக்கின்றன அரசியல் கட்சிகள்

எல்லா கட்சிகளை சேர்ந்த அரசியல்வாதிகளும் சுயநலவாதிகள்தான். இது மறுக்க முடியாத உண்மை...!!!

அமரன்
30-03-2012, 09:57 PM
ஜயந்த் தமிழர்களாகிய நாங்கள் சுயநலவாதிகள் என்பதைதான் குறிப்பிட்டேன். தகுந்த நேரத்தில் சரியான முடிவை எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே. இப்போது கூட தங்கள் நலன் சார்ந்துதானே முடிவெடுக்கின்றன அரசியல் கட்சிகள்

நடந்ததைக் கதைத்தே காலங்களைக் கரைத்து விட்டோம்.. இன்னுமா அதைத் தொடரப்போகிறோம்..!!!!!!

அரசியல் கட்சிகள் தங்கள் நலன் சார்ந்து முடிவெடுக்கட்டும். அதில் நாம் நம் நலன் சார்ந்து ஏதாவது செய்ய முடியுமா என்று பார்ப்போமே...!!!!

வியாசன்
08-04-2012, 11:07 AM
நடந்ததைக் கதைத்தே காலங்களைக் கரைத்து விட்டோம்.. இன்னுமா அதைத் தொடரப்போகிறோம்..!!!!!!

அரசியல் கட்சிகள் தங்கள் நலன் சார்ந்து முடிவெடுக்கட்டும். அதில் நாம் நம் நலன் சார்ந்து ஏதாவது செய்ய முடியுமா என்று பார்ப்போமே...!!!!

தவறுகள் திருத்தப்படாவிடின் நாம் முன்னேறமுடியாது அமரன். அவர்கள் திருந்தமாட்டார்கள். திருத்தப்படவேண்டியவர்கள்

அமரன்
11-04-2012, 10:54 AM
வியாசரே...!!

தலைவரின் மாவீரர் நாள் உரையை மறந்திருக்க மாட்டீர்கள். போராட்டத்தி அடுத்த கட்ட வெற்றி நகர்வு இளையோர் கையிலும், புலம்பெயர் தமிழர் கையிலும் இருப்பதோடு மட்டுமல்லாது இந்தியாவை நம் நட்பு நாடாக்கிக் கொள்பதிலும் தங்கி உள்ளது... * *முன்னது இரண்டும் நடந்தேறி விட்டது. பின்னது??*

அதுக்கான சமிக்கை என நினைத்து நகரவேண்டிய காலத்தில்,.....