PDA

View Full Version : நம்பிக்கைகலையரசி
19-03-2012, 02:05 PM
”நீ என்ன சொன்னாலும் சரி இனிமே நான் அந்த வேலைக்குப் போக மாட்டேன்,” என்றான் முரளி.

”கல்யாணமான இந்த ரெண்டு வருஷத்துல இதோட எத்தினி வேலைக்கு மாறிட்டீங்க? ஒரு இடத்துலயாவது தொடர்ச்சியா ஆறு மாசம் இருந்திருக் கீங்களா?”

”நான் என்ன பண்றது? இந்த மேனேஜர் சரியான முசுடு.
எதுக்கெடுத்தாலும் என்மேல எரிஞ்சு எரிஞ்சு விழறான். எல்லார்க்கும் முன்னால என்னக் கன்னாபின்னான்னு திட்டறான். எனக்குத் தன்மானம் தான் பெரிசு. நீயுமாச்சு ஒன் வேலையுமாச்சின்னு ராஜினாமாக் கடிதத்தை அவன் மூஞ்சுல விட்டெறிஞ்சுட்டு வந்துட்டேன்.”

”இப்படி முணுக்குன்னா ராஜினாமாக் கடிதத்தை விட்டெரிஞ்சிட்டு வந்தா அதனால யாருக்கு நஷ்டம்? நாம சரியா வேலைச் செய்யலேன்னா மேனேஜரா இருக்குறவங்க, கொஞ்சம் சத்தம் போடத் தான் செய்வாங்க. நாம தான் நம்ம முன் கோபத்தை கொஞ்சம் அடக்கிட்டு, அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டுப் போகணும். நாளைக்கே ஒங்க இடத்துல வேற யாராவது வேலையில சேர்ந்துடப் போறாங்க. நாம தான் சாப்பாட்டுக்கு வழியில்லாமத் திண்டாடப் போறோம். அது ஏன் ஒங்களுக்குப் புரிய மாட்டேங்குது?”

”தோ பாரு. தொண தொணன்னு சொன்னதையே சொல்லிக்கிட்டு இருக்காத. என்கிட்ட இருக்கிற திறமைக்கு ஒருத்தன் கிட்டப் போயி கையைக் கட்டி வாயைப் பொத்தி வேலை பார்க்கிறது எனக்குப் புடிக்கலே. அது என்னோட மெண்டாலிட்டுக்கு ஒத்து வராதுன்னு தெரிஞ்சுப் போச்சு. அதனால நானே சொந்தமா ஒரு கம்பெனி ஆரம்பிக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்.”

”அது சரி. இது எப்ப எடுத்த முடிவு? கம்பெனின்னா மொதல் வேணாமா? அவ்ளோ பணத்துக்கு நாம எங்கப் போறது?”

”அதைப் பத்தி நீயொன்னும் கவலைப்பட வேணாம். நானும் என்னோட நண்பனும் சேர்ந்து தான் ஆரம்பிக்கப் போறோம். பண விஷயத்தை அவன் பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டான். மத்ததையெல்லாம் நான் பார்த்துக்குவேன்.”

”உருப்படியா எதையாவது செஞ்சாச் சரி.”

ஒரு மாதம் கழிந்திருக்கும்.

”அம்மா கற்பகம், என்னமோ மளிகை சாமான் இல்லேன்னு சொன்னியே. என்ன வேணும்னு எழுதிக் கொடு. போய் வாங்கிட்டு வரேன்.”

”ஏற்கெனவே எழுதி வைச்சிருக்கேன் மாமா. தோ தர்றேன்.”.

”என்னங்க, சும்மாத் தானே இருக்கீங்க. நீங்களும் மாமா கூட போயிட்டு வாங்களேன். தனியாளாத் தூக்கிட்டு நடக்க ரொம்பச் சிரமப்படுவாரு.”

”இருங்கப்பா, நானும் வரேன்.”

”என்னப்பா முரளி, கம்பெனி ஆரம்பிக்கப் போறேன்னு சொல்லி ஒரு மாசம் ஓடிப் போயிடுச்சி. உருப்படியா இன்னும் ஒன்னும்
பண்ணக் காணோம். ஒங்கப் பையனுக்கு நீங்களாவது புத்திமதி சொல்லி ஏதாவது வேலைக்கு அனுப்பக் கூடாதான்னு தினந் தினம் மருமகப் பொண்ணு புலம்பறதைப் பார்த்தா ரொம்பப் பாவமாயிருக்கு. சம்பாதிக்கிற வயசுல நாள் முழுக்க ஒரு ஆம்பிளை இப்டி வீட்டுல வெட்டியா ஒட்கார்ந்திருந்தா யாருக்கும் மனசு கஷ்டமாத் தானே இருக்கும்?

எனக்கு வர்ற சொற்ப பென்ஷன் பணத்துல எவ்வளவு நாளைக்குத் தான் குடும்பத்தை நடத்த முடியும்? முடிவா என்ன தான் செய்யறதா உத்தேசம்? பணம் கொடுக்கறதாச் சொன்ன ஒன் நண்பன் கடைசி நிமிஷத்துல தர மாட்டேன்னு சொல்லிக் கையை விரிச்சிட்டானா?”

”அதல்லாம் இல்லப்பா. என்னோட திறமையிலேயும் உழைப்பிலேயும் என்னை விட அவனுக்கு நம்பிக்கை அதிகமா இருக்குப்பா.”

”அப்புறம் என்ன? ஆரம்பிச்சிட வேண்டியது தானே?”

என்னோட கவலையெல்லாம் மார்க்கெட்டிங் பத்தித் தான். முன்ன மாதிரி இப்ப இல்லப்பா. நான் இறங்க நினைக்கிற துறையில, போட்டி இப்ப ரொம்ப அதிகமாயிடுச்சி. பெரிய பெரிய வெளிநாட்டுக் கம்பெனியெல்லாம் இந்தியாவுக்குள்ள வந்து விற்பனையை ஆரம்பிச்சிட்டாங்க. அந்தப் பெரிய முதலைகளோட போட்டிப் போட்டு இந்தச் சின்ன மீன் குஞ்சால ஜெயிக்க முடியுமான்னு, ரொம்பப் பயமாயிருக்குப்பா. அதனால தான் ஆரம்பிக்கிறதா, வேண்டாமான்னு ஒரே குழப்பத்துல இருக்கேன்.”

”ஒரு நிமிஷம் முரளி. இந்தப் பையைப் புடி. போயி கொய்யாப் பழம் வாங்கிட்டு வந்துடறேன்.”

அடுத்த நிமிடம் அவன் தந்தை, ஷோரூம் வாசலுக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த கிழவியிடம் போய் கொய்யாப் பழத்தை விலை கேட்டுக் கொண்டிருந்தார்.

முரளி அந்தக் கிழவியைப் பார்த்தான். மெழுகுவர்த்தியொன்றை ஏற்றி வைத்துக் கொண்டு, மொத்தமே பத்துப் பனிரெண்டு பழங்களை மூன்று நான்கு கூறுகளாகப் பிரித்து வைத்துக் கொண்டு ’கூறு பத்து ரூபா,’என்று கூவிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

தம் பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுத்து நீட்டி, ஒரு கூறு வாங்கி வந்த தந்தையைக் கோபமாக முறைத்தான் முரளி.

”ஏற்கெனவே வதங்கி அழுகல் நாத்தம் அடிக்குது. இதைப் போயி ஏன் வாங்கினீங்க? காசு கொஞ்சம் அதிகம்னாலும், பக்கத்து ஷோ ரூம்ல பாலீதின் பையிலப் போட்டுப் பிரஷ்ஷா வைச்சிருக்கான். அதை வாங்கியிருக்கலாம்ல? இதைச் சாப்பிட்டா ஒடம்புக்கு ரொம்பக் கெடுதல். தூக்கிக் குப்பையில போடுங்க.”

”நீ சொல்றது சரிதான்பா. நான் இதைச் சாப்பிடறதுக்காக வாங்கல,” என்று சொன்னவர், அடுத்த நிமிடம் அவற்றைத் தூக்கிக் குப்பைத் தொட்டியில் போட்டார்.

”என்னடா காசைக் கொடுத்து வாங்கி குப்பைத் தொட்டியில போடறானே, இவனுக்கென்ன பைத்தியமா புடிச்சிருக்கு அப்படின்னு தானே நினைக்கிறே? இதை நான் வாங்குனதுக்கு ஒரு காரணம் இருக்கு முரளி.

ஒரு பெரிய ஷாப்பிங் மால் பக்கத்துல, இந்த ராத்திரி நேரத்துல முணுக் முணுக்குன்னு ஒரு மெழுகுவர்த்தியை ஏத்தி வைச்சிக்கிட்டு, அழுகிப் போன கொய்யாப் பழத்தைக் கூடத் தன்னால விக்க முடியுங்கிற அசைக்க முடியாத நம்பிக்கையோட கூவிக் கூவி வித்துக்கிட்டுயிருக்கிற, இந்தக் கிழவிக்கிட்ட நாம கத்துக்க வேண்டிய பாடம் நிறைய இருக்குப்பா.

அவளோட அந்த நம்பிக்கை வீண் போயிடக்கூடாதுங்கிறதுக்காகத் தான் நான் வாங்கினேன்.

இந்த வயசிலேயும் புள்ளைங்களை நம்பாம, உழைச்சிச் சாப்பிடணும்னு நினைக்கிறாளே, அது ரெண்டாவது காரணம்.

முரளிக்கு ஏதோ புரிவது போலிருந்தது.

ஆதவா
19-03-2012, 02:47 PM
சிறு குறு தொழில் ஆரம்பிப்பவர்கள் தயங்காமல் ஆரம்பிக்கவேண்டும் அதேசமயம் கவனமாகவும்...

நம்பிக்கை இருக்கவும்தான் நான் இன்னும் எனது தொழிலிலேயே இருக்கிறேன். திருப்பூர் ”காலி” ஆகிறது என்பது நீங்கள் அறிந்ததுதான்!!!

வசனங்களாலேயே சம்பவத்தை முன்னிருத்தும் எழுத்து. சில்சமயங்களில் அப்பாதான் எல்லா ஆரம்பங்களுக்கும் காரண்மாக இருப்பார். கதையும் அதையே ஃபாலோ செய்கிறது!

கதை நன்றாக இருக்கிறது. தன் நம்பிக்கையுடன்!

தாமரை
19-03-2012, 03:48 PM
அழுகிய பழம்தான் கொஞ்சம் வீச்சமடிக்குது.

மற்றபடி கதை நல்ல கருத்து கொண்டிருக்கிறது..

ஒரு காலத்தில் மரத்தில் இருந்து பழத்தை பறித்து அப்படியே சாப்பிட்டோம்.

காற்றை மாசுபடுத்தி அதை அப்படியே சாப்பிட விடாமல் செய்த்து யார் யோசிக்க வேண்டிய விஷயம்.

வியாபாரப்படுத்த என வீண் செய்யும் மின்சாரம் எவ்வளவு என்பதை யோசித்தால் பெரிய கடைகளில் பொருள் வாங்கவே தயக்கமாக இருக்கும்.

பெருந்தொழில் அதிபர்களிடம் நாடு அடமானம் ஆகிக் கொண்டிருக்கிறது. அடமானம் வைத்து பெற்ற பணம் அன்னிய நாடுகளின் வளத்தைப் பெருக்கிக் கொண்டிருக்கிறது.பெருங்கடைகளின் விளம்பரச் செலவு, அந்த விளம்பரங்களுக்குச் செலவாகும் மின்சாரம், காகிதம், எரிபொருள் என அத்தனையும் இயற்கை வள வீணடிப்பு என்பதை உணர்ந்தால் மெழுகு பூசி பளபளப்பாக்கப் பட்ட பழங்கள் இனிக்காது.

ஆப்பிள் விளைவிக்கும் விவசாயி - இந்தியன்
அதை விவசாயியிடம் கொள்முதல் செய்பவன் - இந்தியன்
அது சேகரித்து வைக்கப்படும் இடம் - இந்தியா
அதற்கு குளிர்பதன வசதிக்கு பயன்படுத்தப் படும் சக்தி - இந்தியாவின் வளம்
அதை பல மூலைகளுக்கும் கொண்டு செல்வது - இந்தியர்களும், இந்திய வளங்களும்
அதை விளம்பரப்படுத்த செலவிடுவது - இந்தியாவின் வளங்கள்
அதை விற்பது - இந்தியன், வாங்குவது - இந்தியன்..

ஆனால்..

லாபத்தில் ஒருபங்க கரெக்டா வெளிநாட்டு கம்பெனிக்குப் போயிருது.

அட்டைப் பூச்சி வலியில்லாமல் இரத்தம் உறிஞ்சுவது போல் இப்படி பெரும் திமிங்கிலங்கள் நம் வளத்தை உறிஞ்சுகின்றன.

இதையெல்லாம் இந்தக் கதையில் விளக்கணும்னு நான் எதிர்பார்க்கலை.

ஏழைக் கிழவி அழுகிய பழம்தானா விற்பாள்? அது அழகிய பழமாக பளபளப்பாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அழுகிய பழமாக இருக்காது. அழுகிய பழங்களை சிறிய வியாபாரிகள் அழுகிய பாகத்தை வெட்டி விட்டு தங்கள் பசியை போக்கிக் கொள்ள உபயோகிக்கிறார்கள். பெரிய வியாபரிகள் ஃபுரூட் சாலட் எனப் பெயர் வைத்து அதே துண்டுகளை விற்கிறார்கள்.

ஒரு திரியில் சொல்லி இருப்பேன். கொல்லிமலைத்தேன் வருடம் இருமுறை எங்கள் வீடு தேடி விற்பனைக்கு வருகிறது. முறுக்கு, தட்டுவடை, உளுந்து இனிப்புவடை போல பலகாரங்கள் போன்றவை இன்னும் வீடு தேடி வருகிறது. சிறு வியாபாரிகளின் மூலம். அடிப்படை நம்பிக்கை. பரஸ்பர நம்பிக்கை என்று அதற்குப் பெயர்.

நான் எதிர்பார்த்தது பாட்டியின் வியாபாரத்தில் கிடைக்கும் தனிக்கவனம். பெரிய கடைகளில் அது கிடைக்காது..

அதைக் காட்டி இருந்தால் பெரிய நிறுவனங்களில் கிடைக்காத தனிக்கவனம் சிறு நிறுவனங்களில் கிடைத்தால் அதற்கென வாடிக்கையாளர் கூட்டம் உண்டு என்ற விதையைக் சரியாக நட்டிருக்கலாம்.

அழுகிய பழம் - குப்பைத் தொட்டி எனச் சொல்லி கொஞ்சம் கீழே இறங்கிட்டீங்களே.

Dr.சுந்தரராஜ் தயாளன்
19-03-2012, 04:40 PM
மிகவும் அருமை கலையரசி...அழுகியதாக இருந்தாலும் தன்னம்பிக்கையோடு கூறு போட்டு விற்கும் அந்த கிழவியைப் பாராட்டத்தான் வேண்டும். நன்றி நல்ல கதைக்கு:)

த.ஜார்ஜ்
19-03-2012, 05:45 PM
நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தின் நுழைவாசலருகே நடைபாதையில் அந்த பாட்டி இருப்பார். மஞ்சள் பூசி குளித்த முகம். சுத்தமான கதர் புடவை.

சாக்கு பை விரித்து சப்போட்டாவும், கொய்யாவும் பரத்தி வைத்திருப்பார்.வெயில் காலங்களில் வெள்ளரி பிஞ்சு. கைக்கருகே ஒரு அட்டைபெட்டி இருக்கும். அதற்கு மேலே ஒரு தராசு. எளிமையான தொழிலதிபர்.

பக்கத்திலே இருக்கிற பெரிய பழக்கடையில் அடுக்கி வைக்கப் பட்டிருக்கிற பழங்கள், முகச்சாயம் போட்ட மாதிரி பளபளப்பாக இருக்கும்.சில சட்டை மாட்டியிருக்கும்.சிலவற்றில் கோடு போட்ட ‘ஸ்டிக்கர்’ ஒட்டப்பட்டிருக்கும்.

ஆனாலும் அந்த பாட்டியிடமே பழங்கள் வாங்குவேன்.” வீட்டு தோட்டத்தில விளைஞ்சது மக்களே.. ஒரு கிலோ போடட்டா..” என்பாள்.
”ஒரு துண்டு தின்னு பாக்கியா” கனி தனி சுவையாய்தான் இருக்கும்.
”எல்லாருக்கும் நாப்பது. உனக்கு மட்டும் முப்பது. எத்தனை கிலோ வேணும்” சொல்வதற்குள் தராசை தூக்கி எடை போட தயாராகி விடுவாள்.

பரப்பி வைத்திருப்பவற்றில் பெரிய காய்களாய் தேர்ந்தெடுத்து தராசில் போடுவாள். சிலதை எடுத்து பார்த்துவிட்டு ஒதுக்கி வைப்பாள். சிலசமயம் பக்கத்து அட்டை பெட்டியில் மறைவாய் வைத்திருக்கும் பழங்களை எடுத்து கரிசனையாய் தருவாள். ’பிள்ளையளுக்கு கொண்டு குடு’ என்று எடை போட்ட பின்னும் ஒன்றிரண்டை சேர்த்து தருவாள். சினேகமாய் சிரிப்பாள்.

ஒருதடவை ஒரு பெரிய கடையில் பழங்கள் வாங்க பெரியதாய் பொறுக்கியபோது ‘வந்திட்டாரு.. அள்ளிட்டு போக.. நீ வாங்கினது போதும். நவுரு.. நவுரு‘ வெறுப்பாய் உமிழ்ந்தது நினைவுக்கு வந்தது.
பாட்டியிடம் அரைகிலோ வாங்கபோன என்னிடம் ரெண்டு கிலோ விற்ற பாட்டி மார்கெட்டிங்கில் எந்த பட்டமும் பெற்றதாக தகவலில்லை.

Dr.சுந்தரராஜ் தயாளன்
20-03-2012, 05:17 AM
பாட்டியிடம் அரைகிலோ வாங்கபோன என்னிடம் ரெண்டு கிலோ விற்ற பாட்டி மார்கெட்டிங்கில் எந்த பட்டமும் பெற்றதாக தகவலில்லை.
உண்மை த.ஜார்ஜ் அவர்களே...இதுபோல் நானும் நிறைய முதியவர்கள் எங்கள் ஊர் பேருந்து நிலையம், காய்கறி மார்க்கெட் முன்னால் விற்பவர்களை பார்த்திருக்கிறேன். நன்றி:)

அன்புரசிகன்
20-03-2012, 05:48 AM
நல்ல படிப்பினையை கூறிநிற்கிறது. வாழ்த்துக்கள்.

jayanth
20-03-2012, 06:50 AM
நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தின் நுழைவாசலருகே நடைபாதையில் அந்த பாட்டி இருப்பார். மஞ்சள் பூசி குளித்த முகம். சுத்தமான கதர் புடவை.

அரைகிலோ வாங்கபோன என்னிடம் ரெண்டு கிலோ விற்ற பாட்டி மார்கெட்டிங்கில் எந்த பட்டமும் பெற்றதாக தகவலில்லை.

த.ஜார்ஜ் அவர்களே...இக்கால மார்க்கெட்டிங் மேனேஜர்களுக்கு நல்ல படிப்பினை.

ஆதவா
20-03-2012, 07:32 AM
சில கொடுமைகளும் இருக்கின்றன,

அந்த கிழவியிடம் பேரம் பேசுவோம்,
பக்கத்தில் இருக்கும் ஷோ ரூம்ல (வெறூம் ஷோ மட்டும்தானோ?) பேசாம வாங்கிக்குவோம்.

எனக்குத் தெரிந்து திருப்பூரில் பத்து வருடங்களுக்கு முன்னர் ஷோரூமும் கிடையாது கீரூமும் கிடையாது. இன்றும் பெருந்துறை சந்தையில் போய் கூறு கூறாக விற்றுக் கொண்டிருக்கும் கிழவிகளிடமும் கிராமத்து பெண்களிடமும் வாங்குவது சீப் அண்ட் பெஸ்ட் என்பேன்..

நேற்று ஒரு சம்பவம், ஷோரூம் எனச்சொல்லப்படும் ஒரு பழமுதிர் நிலையத்தில் தர்பூசனிப் பழம் வாங்கினேன்.. கடை பெயருக்கு ஏற்ற பழம் முதிர்ந்திதான் போயிருந்தது போலும்.. தண்ணீரைத்தேடும் இக்காலத்தில் பூசணி கூட நீரின்றி வெற்றுடலாக தொங்கிக் கொண்டிருந்தது.. திருப்பிக் கொடுத்தால் வாங்கிக் கொள்ளமாட்டான்!!

தள்ளுவண்டியில் விற்கும் பெரியவரிடம் தினமும் வாங்குகிறேன். அவ்வளவு அருமையான பழம். விலையும் ஒன்றிரண்டு ரூபாய் குறைவு. பழம் சரியில்லை என்றால்கூட வாங்கிக் கொள்வார்.

நமக்குத் தேவை “பளபளப்பு” ஆப்பிலில் ஒட்டப்படும் ஸ்டிக்கர் போல!

கீதம்
21-03-2012, 09:18 AM
மகனின் பொறுப்பின்மையையும் அவநம்பிக்கையையும் நேரடியாய் சுட்டாமல், தளர்ந்த வயதிலும் தளராத நம்பிக்கையுடன் வாழ்க்கை நடத்தும் முதியவளின் மூலம் மகனுக்குப் பாடம் புகட்டும் தந்தையின் நிதானம் பாராட்டுக்குரியது. நல்லதொரு கதைக்குப் பாராட்டுகள் அக்கா.

கலையரசி
21-03-2012, 01:31 PM
[QUOTE=ஆதவா;543917]சிறு குறு தொழில் ஆரம்பிப்பவர்கள் தயங்காமல் ஆரம்பிக்கவேண்டும் அதேசமயம் கவனமாகவும்...

நம்பிக்கை இருக்கவும்தான் நான் இன்னும் எனது தொழிலிலேயே இருக்கிறேன். திருப்பூர் ”காலி” ஆகிறது என்பது நீங்கள் அறிந்ததுதான்!!!

வசனங்களாலேயே சம்பவத்தை முன்னிருத்தும் எழுத்து. சில்சமயங்களில் அப்பாதான் எல்லா ஆரம்பங்களுக்கும் காரண்மாக இருப்பார். கதையும் அதையே ஃபாலோ செய்கிறது!

கதை நன்றாக இருக்கிறது. தன் நம்பிக்கையுடன்![/QUOTE

முதல் பின்னூட்டத்திற்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி ஆதவா!

கலையரசி
21-03-2012, 01:40 PM
[QUOTE=தாமரை;543920]அழுகிய பழம்தான் கொஞ்சம் வீச்சமடிக்குது.

மற்றபடி கதை நல்ல கருத்து கொண்டிருக்கிறது..”

கிழவி அழுகிய பழம் மட்டுமே விற்பாள் என்று நான் சொல்ல எண்ணவில்லை. பெரிய ஷோ ரூம் பக்கத்தில் இருந்தும் காலையிலிருந்து விற்றதில் நல்ல பழங்கள் அனைத்தும் விற்பனையாகிவிட்டன. அவளுக்கென்று வாடிக்கையாளர்கள் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அழுகத் தயாரான நிலையில் இருக்கும் மீதமுள்ள பழங்களையும் தன்னால் விற்று விட முடியும் என்ற நம்பிக்கையுடன் அவள் இரவிலும் தொடர்ந்து விற்றுக் கொண்டிருக்கிறாள்.

அதைக்கூட விற்று விட முடியும் என்று அவள் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கு அழுத்தம் கொடுக்கவே அப்படி எழுதினேன்.
மற்றபடி ஷோ ரூமில் மட்டுமே நல்ல பழங்கள் கிடைக்கும், கூடைக்காரியிடம் கிடைக்காது என்று சொல்ல வரவில்லை.

எழுதியிருக்கும் முறை அப்படி எண்ண வைத்து விட்டது என எண்ணுகிறேன். தவறினைச் சுட்டிக் காட்டியதற்கும் ஆக்கப் பூர்வ விமர்சனத்துக்கும் மிக்க நன்றி!

கலையரசி
21-03-2012, 01:41 PM
மிகவும் அருமை கலையரசி...அழுகியதாக இருந்தாலும் தன்னம்பிக்கையோடு கூறு போட்டு விற்கும் அந்த கிழவியைப் பாராட்டத்தான் வேண்டும். நன்றி நல்ல கதைக்கு:)

பின்னூட்டத்திற்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி தயாளன் சார்!

கலையரசி
21-03-2012, 01:44 PM
நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தின் நுழைவாசலருகே நடைபாதையில் அந்த பாட்டி இருப்பார். மஞ்சள் பூசி குளித்த முகம். சுத்தமான கதர் புடவை.

சாக்கு பை விரித்து சப்போட்டாவும், கொய்யாவும் பரத்தி வைத்திருப்பார்.வெயில் காலங்களில் வெள்ளரி பிஞ்சு. கைக்கருகே ஒரு அட்டைபெட்டி இருக்கும். அதற்கு மேலே ஒரு தராசு. எளிமையான தொழிலதிபர்.

பக்கத்திலே இருக்கிற பெரிய பழக்கடையில் அடுக்கி வைக்கப் பட்டிருக்கிற பழங்கள், முகச்சாயம் போட்ட மாதிரி பளபளப்பாக இருக்கும்.சில சட்டை மாட்டியிருக்கும்.சிலவற்றில் கோடு போட்ட ‘ஸ்டிக்கர்’ ஒட்டப்பட்டிருக்கும்.

ஆனாலும் அந்த பாட்டியிடமே பழங்கள் வாங்குவேன்.” வீட்டு தோட்டத்தில விளைஞ்சது மக்களே.. ஒரு கிலோ போடட்டா..” என்பாள்.
”ஒரு துண்டு தின்னு பாக்கியா” கனி தனி சுவையாய்தான் இருக்கும்.
”எல்லாருக்கும் நாப்பது. உனக்கு மட்டும் முப்பது. எத்தனை கிலோ வேணும்” சொல்வதற்குள் தராசை தூக்கி எடை போட தயாராகி விடுவாள்.

பரப்பி வைத்திருப்பவற்றில் பெரிய காய்களாய் தேர்ந்தெடுத்து தராசில் போடுவாள். சிலதை எடுத்து பார்த்துவிட்டு ஒதுக்கி வைப்பாள். சிலசமயம் பக்கத்து அட்டை பெட்டியில் மறைவாய் வைத்திருக்கும் பழங்களை எடுத்து கரிசனையாய் தருவாள். ’பிள்ளையளுக்கு கொண்டு குடு’ என்று எடை போட்ட பின்னும் ஒன்றிரண்டை சேர்த்து தருவாள். சினேகமாய் சிரிப்பாள்.

ஒருதடவை ஒரு பெரிய கடையில் பழங்கள் வாங்க பெரியதாய் பொறுக்கியபோது ‘வந்திட்டாரு.. அள்ளிட்டு போக.. நீ வாங்கினது போதும். நவுரு.. நவுரு‘ வெறுப்பாய் உமிழ்ந்தது நினைவுக்கு வந்தது.
பாட்டியிடம் அரைகிலோ வாங்கபோன என்னிடம் ரெண்டு கிலோ விற்ற பாட்டி மார்கெட்டிங்கில் எந்த பட்டமும் பெற்றதாக தகவலில்லை.

ஆம் ஜார்ஜ்! நீங்கள் சொல்லும் இந்த அனுபவம் எனக்கும் உண்டு. பூ வாங்கும் போது இதைப் போன்ற கரிசன வார்த்தைகள் அவள் எங்கிருந்தாலும் தேடி வாங்கச் சொல்லும்.
பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி ஜார்ஜ்!

கலையரசி
21-03-2012, 01:47 PM
சில கொடுமைகளும் இருக்கின்றன,

அந்த கிழவியிடம் பேரம் பேசுவோம்,
பக்கத்தில் இருக்கும் ஷோ ரூம்ல (வெறூம் ஷோ மட்டும்தானோ?) பேசாம வாங்கிக்குவோம்.

எனக்குத் தெரிந்து திருப்பூரில் பத்து வருடங்களுக்கு முன்னர் ஷோரூமும் கிடையாது கீரூமும் கிடையாது. இன்றும் பெருந்துறை சந்தையில் போய் கூறு கூறாக விற்றுக் கொண்டிருக்கும் கிழவிகளிடமும் கிராமத்து பெண்களிடமும் வாங்குவது சீப் அண்ட் பெஸ்ட் என்பேன்..

நேற்று ஒரு சம்பவம், ஷோரூம் எனச்சொல்லப்படும் ஒரு பழமுதிர் நிலையத்தில் தர்பூசனிப் பழம் வாங்கினேன்.. கடை பெயருக்கு ஏற்ற பழம் முதிர்ந்திதான் போயிருந்தது போலும்.. தண்ணீரைத்தேடும் இக்காலத்தில் பூசணி கூட நீரின்றி வெற்றுடலாக தொங்கிக் கொண்டிருந்தது.. திருப்பிக் கொடுத்தால் வாங்கிக் கொள்ளமாட்டான்!!

தள்ளுவண்டியில் விற்கும் பெரியவரிடம் தினமும் வாங்குகிறேன். அவ்வளவு அருமையான பழம். விலையும் ஒன்றிரண்டு ரூபாய் குறைவு. பழம் சரியில்லை என்றால்கூட வாங்கிக் கொள்வார்.

நமக்குத் தேவை “பளபளப்பு” ஆப்பிலில் ஒட்டப்படும் ஸ்டிக்கர் போல!

நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. பெரிய ஷாப்பிங் மாலில் என்ன விலையென்றாலும் வாயைத் திறக்காமல் வாங்கும் மக்கள், கீரைக்காரியிடம் ஒரு ரூபாய், , இரண்டு ரூபாய்க்குப் பேரம் பேசிக் கொண்டு நிற்பார்கள்.
போலி பளபளப்பும், மினுமினுப்பும் தாம் மக்களைக் கவர்கின்றன.

கலையரசி
21-03-2012, 01:49 PM
நல்ல படிப்பினையை கூறிநிற்கிறது. வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்கு மிக்க நன்றி அன்புரசிகன்!

கலையரசி
21-03-2012, 01:50 PM
மகனின் பொறுப்பின்மையையும் அவநம்பிக்கையையும் நேரடியாய் சுட்டாமல், தளர்ந்த வயதிலும் தளராத நம்பிக்கையுடன் வாழ்க்கை நடத்தும் முதியவளின் மூலம் மகனுக்குப் பாடம் புகட்டும் தந்தையின் நிதானம் பாராட்டுக்குரியது. நல்லதொரு கதைக்குப் பாராட்டுகள் அக்கா.

பாராட்டுக்கு மிக்க நன்றி கீதம்!