PDA

View Full Version : கோவில் யானை



M.Jagadeesan
17-03-2012, 07:16 AM
பெருமாள் கோவிலில் மாதாமாதம் நடக்கின்ற சமயச் சொற்பொழிவில் கலந்து கொள்வதற்காகப் புறப்பட்டுக் கொண்டிருந்தேன்.அந்த சமயச் சொற்பொழிவில் வைணவ சம்பிரதாயங்களைப் பற்றியும், ஆழ்வார்களைப் பற்றியும்,அவர்கள் இயற்றிய பாசுரங்களைப் பற்றியும் பரமாசாரியர்கள் பேசுவார்கள்.ஒவ்வொரு மாதமும் தவறாமல் சொற்பொழிவுக்கு சென்றுவிடுவேன்.

நான் ஒரு தீவிர வைஷ்ணவன்.நாராயணனே என் தெய்வம்.என் மூச்சு , பேச்சு எல்லாம் அவனே! உண்ணும் சோறு; பருகும் நீர்,தின்னும் வெற்றிலை எல்லாம் அவனே! காலையில் எழுந்ததும் , காலைக் கடன்களை முடித்தவுடன்,நெற்றி நிறைய திருமண் அணிந்துகொண்டு , கோவிலுக்குச் சென்று பெருமாளை சேவித்த பிறகுதான் உண்ணத் தொடங்குவேன். வைஷ்ணவத்தின்பால் கொண்ட அளவு கடந்த பக்தியின் காரணமாகப் பிற மதங்களை வெறுக்கத் தொடங்கினேன்.குறிப்பாக நான் ஒரு சிவத் துவேஷி.சிவனைக் கண்டாலும் பிடிக்காது; அவன் பக்தர்களைக் கண்டாலும் பிடிக்காது. ஏதாவது ஒரு வேலையாக , சிவன் கோவில் இருக்கும் தெரு வழியாகப் போக வேண்டியிருந்தால் , அதைத் தவிர்த்து மாற்றுப் பாதையில் செல்வேன்.சிவ சின்னங்களைத் தரித்துக்கொண்டு யாராவது என் எதிரில் வந்தால் கண்களை மூடிக்கொண்டு ," நாராயணா! நாராயணா!!" என்று தலையில் அடித்துக் கொள்வேன்.


சமயச் சொற்பொழிவுக்கு நேரமாகிவிட்டது. அவசர அவசரமாகத் தெருவில் இறங்கி நடந்தேன். திடீரென்று ஒரு கூச்சல். " அய்யய்யோ! எல்லோரும் ஓடுங்கள்! கோவில் யானைக்கு மதம் பிடித்துவிட்டது. ஓடுங்கள்! ஓடுங்கள்!!" என்று பொதுமக்கள் கூச்சலிட்டவாறு திசைக்கு ஒருவராக ஓடிக்கொண்டு இருந்தனர்.

எதிரே பார்த்தேன். நெற்றியில் திருநீறு பூசிய சிவன்கோவில் யானை , தும்பிக்கையைத் தூக்கிக் கொண்டு , பயங்கரமாகப் பிளிறிக்கொண்டு , அண்ட சராசரங்களும் நடுங்கும்படியாக வந்துகொண்டு இருந்தது. கண்ணில் பட்ட பொருட்களை எல்லாம் மிதித்து துவம்சம் செய்துகொண்டு இருந்தது.எல்லோரும் அலறி அடித்துக்கொண்டு ஓடினர். கூட்ட நெரிசலில் என்னைக் கீழே தள்ளிவிட்டு ஓடினர்.நான் எழுந்து ஓடுவதற்குள் யானை என் அருகில் வந்துவிட்டது.யானையின் காலால் மிதிபட்டு , வைகுண்டம் போவது உறுதி என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். ஆனாலும் எனக்கு ஒரு வருத்தம். சிவன் கோவில் யானையால் மிதிபட்டு , வைகுண்டம் போவதைவிட , பெருமாள் கோவில் யானையால் மிதிபட்டு வைகுண்டம் போக நமக்குக் கொடுத்து வைக்கவில்லையே! என்று வருத்தப் பட்டேன்.

நடப்பது நடக்கட்டும் என்று கண்களை மூடிக் கொண்டேன் . சிறிது நேரம் சென்றது. யானை என்னை மிதிக்கவில்லை. கண்ணைத் திறந்து பார்த்தேன். யானை அங்கேயே இருந்தது. தன தும்பிக்கையால் , என் நெற்றியைத் தொட்டது. பிறகு என்ன நினைத்ததோ தெரியவில்லை; யானை அமைதியாகத் திரும்பிச் சென்றது.

நான் சிந்திக்கத் தொடங்கினேன்.ஆயிரம் பரமாச்சாரியார்கள் கற்பிக்காத பாடத்தை சிவன் கோவில் யானை எனக்குக் கற்பித்தது. அன்றுமுதல் சமயச் சொற்பொழிவுக்குப் போவதை நிறுத்திக் கொண்டேன்.

ஓவியன்
17-03-2012, 08:25 AM
எம்மதமும் சம்மதம் என்று சொன்ன யானை....!!

மிருகங்கள் பகுத்தறிவு மிக்கவையாக இருக்கின்றன, நாம் தாம் இடைக்கிடை மதம் பிடித்து மாக்களாகிறோமென மீளவும் உணர வைத்த சிறு கதை..!!

வாழ்த்துகள்...!! :)

M.Jagadeesan
17-03-2012, 11:04 AM
நண்பர் ஓவியன் அவர்களின் பாராட்டுக்கு நன்றி.

Dr.சுந்தரராஜ் தயாளன்
17-03-2012, 12:24 PM
இது உங்களின் சொந்த அனுபவமா ஐயா?:)