PDA

View Full Version : வேரா(றா)கும் விழுதுகள்..!!



பூமகள்
15-03-2012, 03:20 AM
வேர்கள் வேறிடமிருக்க
எங்கோ வந்த விழுதுகள் நாங்கள்..

விண்முட்டும் கட்டிடங்களுக்கிடையில்
கண்முட்டும் களைப்போடு
திண்டாடும் கண்பொறிகள் நாங்கள்..

சொந்த மண்ணின் மணம்
நெஞ்சில் நிறைத்து
வேற்று மண்ணில் வேரூன்ற கலங்கும்
முதல் வேர் நாங்கள்..

அருகிருப்பர் அறிய முடியாத துயர்..
சொந்தம் தொலைவிருக்கையில்
அறிந்தவர்கள் நாங்கள்..

பெருஞ்செய்தி வந்த போதும்..
பேரருவியாய் அழுத போதும்..
விரைந்தோட வழியின்றி
கண்ணிலழுந்தும் தூசியாய்
வலியோடு தான் வாழ்வெங்கும் நாங்கள்..

இத்தனை இருந்தும்
ஏனிந்த துயர் பயணம் என்பீர்கள்..

கல்விக்கடன் தீர்க்க..
கன்னித் தங்கை கரையேற்ற..
பட்ட கடன் அடைக்க..
அடகான வீடு திருப்ப..
பெற்றவர் பெருமனை புகுக்க..
இன்னும் பலவாய்
பலரின் துயர் துடைக்க..

பல்லாயிரம் மைல் கடந்து
அறுந்துவிட்ட பட்டமாய்
தாமாகவே தொலைத்துக் கொள்வோர் நாங்கள்..

பணம் மட்டுமே உயிர்ப்பாய் இங்கே..
உண்மை தான்..

காலணா காசிற்கு
ரேசன் அரிசி உறுதி நம்மூரிலேனும்..
காலணா காசின்றி
கால்படி அரிசிக்கும் வழியின்றி கிடப்போம் நாங்கள்..

இழப்பின் வலி
இன்மையில் நன்குணர்ந்தவர்கள்
நாங்கள்..

சேர்ப்பதில் உச்சம் பணமென்று கொள்வோரே..
நாங்கள் சேர்ப்பதில் ஏழை என்று
உணர்வீரோ உண்மையில்??!!

கீதம்
16-03-2012, 12:48 PM
பாழுங்கண்ணுக்கு பட்டெனத் தெரிகிறது
பணமும் படாடோபமும்!
வாழும் வழியும் வலியும் அறியவிடாது
வழி மறிக்கிறது வறட்டு கௌரவம்!
சொல்லிப் புரியவைத்து நமக்கென்ன லாபம்?
சொன்னாலும் பரிகசிக்கப்படும் நமக்கு வாய்த்த யோகம்!

வேரைப் பிரிந்த விழுதுகள் நாம் வேதனை தாங்கி
சாதனை செய்கிறோம் விலகி நின்றும் விருட்சம் தாங்கி!

மனம் தொட்டக் கவிதைக்குப் பாராட்டுகள் பூமகள்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
16-03-2012, 01:58 PM
மிகவும் சிந்திக்க வைக்கும் வேராகும் விழுதுகள் குறித்து வேதனையான கவிதையை எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள். கீழ்க்கண்ட திரியில் நானும் வேரும் - விழுதுகள் குறித்து முற்றிலும் வித்தியாசமான ஒரு கவிதையை எழுதியுள்ளேன். பார்க்கவும்.
http://www.tamilmantram.com/vb/showthread.php?p=543729#post543729
:aktion033::aktion033:

சிவா.ஜி
16-03-2012, 02:21 PM
நாட்டை விட்ட வெளிப்போந்தல்களின் விளக்க உரையாய் வந்தக் கவிதை...நானும் அதிலொரு அங்கம் என்பதால்...அதிகம் பாதித்த தங்கையின் கவி வரிகள். வலிக்குதும்மா.

பூமகள்
16-03-2012, 03:04 PM
கண் முன் நிரம்பி
என்னுள் வியாபிக்கும்
எண்ணிலா நட்புகளின்
வலியான வாழ்வு
விழி கண்டதால்

பணத்தால் எம்மை எடைபோடும்
பொறாமைப் பார்வைகளுக்கும்
பொறுக்காத மனங்களுக்கும்
புரியவைக்கும் புது முயற்சி..

புரிந்தாலும் பரிகசித்தாலும்
அவர் வரும் நாளில்
அறிவார்..

புரிந்தவர் நட்பு கூடி
புரியாதவர் நட்பு விட்டு ஓடி
வாழ்வோம் கீதம் அக்கா...

அழகு பின்னூட்டம்.. உங்கள் பின்னூட்டம் தான் முதலில் வரும் என்று எதிர்பார்த்தேன். :)

பூமகள்
16-03-2012, 03:06 PM
நன்றிகள் டாக்டர். தயாளன் அய்யா.. உங்கள் கவிதையை நிச்சயம் பார்க்கிறேன். :)

பூமகள்
16-03-2012, 03:09 PM
வெளிப்போந்தல் - புதுச் சொல் எனக்கு.. நன்றி சிவா அண்ணா..

உண்மை தான்.. வெளி நாட்டில் இருந்தாலே பணம் நமக்கு மரத்தில் காய்ப்பது போலவே எண்ணம் எல்லோர் மனதிலும் திரையோடுகிறது.. அவர்கள் மனம் மாற வேண்டும் என்பதே என் விருப்பம்.. அதற்காக கொஞ்சம் வலியான கவிதை வடித்துவிட்டேன் என்று விளங்குகிறது.. ஆனாலும், உண்மை வரிகள் இல்லையா அண்ணா??!!

உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றிகள் சிவா அண்ணா. :)