PDA

View Full Version : அப்பாவின் நினைவுagarsree
02-03-2012, 01:19 PM
மே 1 . இன்றுடன் பத்து ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. பத்து ஆண்டுகள் எப்படி ஓடியது என்றே தெரியவில்லை.ஆனால் தினமும் அப்பாவின் நினைவு மட்டும் இருந்து கொண்டே இருக்கிறது...

சிறு வயதில் அப்பாவுடன் விளையாடியது,பூங்காவிற்கு சென்று நேரம் கழிப்பது இப்படி பல விஷயங்கள் இன்றும் மனதில் பசுமையாக உள்ளது.மூன்று பிள்ளைகள் கொண்ட குடும்பத்தில் ஒரே ஆண் பிள்ளை என்பதால் நான் என்றுமே அப்பாவின் செல்லம்.என் வாழ்வில் மறக்க முடியாத என் நண்பன் யார் என்றால் அது அப்பா தான் .தந்தைக்கு தந்தையாக,நண்பனுக்கு நண்பனாக அப்பா எப்போதும் இருப்பார்.அப்பாவின் தோள்களில் சாய்ந்தாலே ,துயரங்கள் துர ஓடி விடும்.பள்ளி பருவத்தில் அப்பா பல ஆலோசனைகள் கூறுவார்.

எந்த பிரச்சனை வந்தாலும்,அப்பாவிடம் மனம் விட்டு பேசுவதில் அலாதி திருப்தி கிடைக்கும்.படிப்பு விஷயத்தில் கூட எது எனக்கு சிறந்தது என்று அப்பாவே முடிவு செய்வார்.அப்பாவின் முடிவு என்றும் சரியான ஒன்றாகவே இருக்கும்.அப்பாவே என் வாழ்வின் வழிகாட்டி.பெரியவன் ஆனதும் ,நல்ல வேலையில் அமர்ந்து,அப்பாவை பெருமை அடைய செய்ய வேண்டும் என்று மனதில் பல கனவுகள்.ஒரு நாள்,அந்த கனவுகள் எல்லாம் கண்ணாடி போல சுக்கு நூறாக உடைந்து போயின.

அன்று ஒரு நாள்,அனைவரும் சந்தோசமாக இருந்தோம்.எப்போதும் போலவே அப்பா காலையில் எழுந்து ,அனைவரிடமும் நன்றாகவே பேசி கொண்டிருந்தார்.அன்று பேசியதே அப்பாவிடம் பேசிய கடைசி வார்த்தை என்று எனக்கு தெரியாமல் போனது.திடிரென்று அன்று அப்பாவிற்கு மாரடைப்பு.எவ்வளவு முயற்சி செய்தும் அப்பாவை காப்பற்ற முடியவில்லை.''விளையாடதிங்க அப்பா எழுந்திருங்கே அப்பா.எழுந்திருங்கே அப்பா,நான் உங்க மகன் சிவன் அப்பா '' என்று நான் கதறியது முதல் முதல் அன்று தான்...அப்பா இருந்த வரை கண்களில் ஒரு துளி கண்ணீர் வந்ததில்லை.அப்பா இல்லை என்ற உண்மையை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை..

திடிரென்று அப்பா மறைந்தது மனதை மிகவும் பாதித்தது.அப்பாவின் மறைவிற்கு பிறகு,அப்பாவின் இடத்தில இருந்து குடும்பத்தின் பொறுப்புகளை கவனித்து கொண்டேன். இந்த பத்து வருடங்ககளில் அப்பா ஆசை பட்டது போலவே நன்றாக படித்து,ஆசிரியர் தொழிலில் அமர்ந்து விட்டேன்.அக்காவிற்கு நல்ல இடத்தில் வரன் அமைந்து அவளுக்கு திருமணமும் செய்து விட்டேன்.தங்கை மட்டும் இன்னும் படித்து கொண்டிருக்கிறாள்.அவளும் நல்ல வேலை கிடைத்து சிறப்பாக இருப்பாள் என்று நம்புகிறேன்.


நாட்கள் உருண்டு கொண்டே ஓடுகின்றது.ஆனால் அப்பாவின் நினைவு மட்டும் அழியவில்லை...நான் பட்டம் பெற்ற போதும் சரி,அக்காவின் திருமணத்தின் போதும் சரி,அப்பா அருகில் இல்லையே என்ற ஏக்கம் இருந்து கொண்டே இருந்தது.இன்று நான் நல்ல நிலைமையில் இருக்கிறேன்.என் வெற்றிகளை அப்பாவுடன் பகிர்ந்து கொள்ள ஆசை படுகின்றேன். ஆனால் அப்பா அருகில் இல்லை

''அப்பா, இப்போது நீங்கள் என் அருகில் இல்லை.ஆனால் என் மனதில் எப்போதும் நீங்கள் இருக்கிறிர்கள்.மறுபிறவியிலும் கூட நான் உங்கள் மகனாகவே பிறக்க வேண்டும்.இந்த பிறவியில் உங்கள் பிரிவை என்னால் தடுக்க முடியவில்லை.அடுத்த பிறவியில் நமக்கு இடையில் பிரிவு என்ற சொல்லுக்கே இடம் இருக்காது. நான் வெற்றி பெரும் ஒவ்வொரு தருணங்களிலும் நீங்கள் என்னுடன் இருக்க வேண்டும்.மீண்டும் நான் என் இன்பங்களையும் துன்பங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். எந்த பிறவியிலும் உங்கள் மகனாக இருப்பதே எனக்கு பெருமை ...''

சிவா.ஜி
02-03-2012, 02:17 PM
கண்களை மட்டுமல்ல....இதயத்தையே கலங்கவைக்கும் பதிவு. அப்பாவின்மேல் கொண்ட ஆழ்ந்த அன்பை உணர்த்தும் பதிவு. அருவமாய் இருந்தாலும், உங்கள் வாழ்க்கையின் அனைத்துக் கட்டங்களிலும், உருவமாய் உங்கள் தந்தையின் ஆசி கிட்டும்.

அன்பான வாழ்த்துக்கள்.

ஆதவா
02-03-2012, 02:56 PM
பத்து வருடங்கள் கழித்தும் இன்னும் ஞாபகத்தில் வைத்திருக்கும் உங்களுக்கு ஒரு ராயல் சல்யூட்...

சொந்த தாத்தா பெயரையே மறந்துவிடும் காலம் இது. எத்தனை பேர் வீட்டில் தாத்தா புகைப்படம் தொங்குகிறது என்று தெரியவில்லை, இன்னும் கொஞ்சம் நாட்களில் அப்பாவுக்கும் அந்த கதிதான்... இச்சூழ்நிலையில் இந்த பதிவும் அது காட்டும் பரிவும் உண்மையும் நெகிழவைக்கிறது!!

அமரன்
02-03-2012, 08:44 PM
நல்வரவு அகர்ஸ்ரீ!

மன்றத்தில் உங்கள் முதற்பதிவை, உங்கள் பெயரின் முதல் எழுத்துக்கு உரியவரின் நினைவாக அமைந்தமை நெகிழ்ச்சி.

நினைவு தினங்களே மறக்கடிக்கப்படும் நிலையில், தினமும் நனைக்கும் அப்பாவின் நினைவுகளுடன் நீங்கள் பயணிப்பது பெருமை கொள்ள வைக்கிறது.

மூதாட்டிகளை அம்மா என்று அழைக்கும் பழக்கம் கொண்ட நாம், முதியவரை அய்யா என்றுதான் அழைக்கிறோம். அப்பா என்றழைப்பதில்லை..

அத்தகைய சிறப்பு மிக்க தகப்பன் உங்களில் வாழ்கிறார்.

Hega
02-03-2012, 10:00 PM
அப்பாவைகுறித்த நெகிழ்ச்சியான் பகிர்வு

பத்துவருடங்களானாலும் இழப்பின் வேதனை சற்றும் அகலவில்லை என்பது தங்கள் எழுத்தில் தெரிகிறது. காலம் அனைத்துக்கும் மருந்தாகும் என்பது பொய்யோ..

அப்பாவின் ஆசையை நிறைவேற்றிய தங்களுக்கு தொடர்ந்தும் அப்பாவின் வழிகாட்டல்கள், நல்லாசிகள் கிடைக்கும்.

தொடர்ந்து பயணியுங்கள்....

ஜானகி
02-03-2012, 11:28 PM
என்ன தவம் செய்தாரோ... உங்களை மகனாக அடைவதற்கு...அந்த தகப்பன்....

ஓவியன்
03-03-2012, 03:37 AM
வாருங்கள் அகர்ஸ்ரீ முதல் பதிவினை உங்கள் உள்ளத்தால் எழுதியிருக்கிறீர்கள் உங்கள் தந்தையின் முகமாக, அவரது முகம் பார்த்திராத எங்களுக்கு உங்கள் எழுத்துக்கள் அவர் முகம் காட்டுகின்றன....

உங்கள் தந்தையின் ஆசி உங்களுடன் தான் இருக்கிறது, உங்களை ஒவ்வொரு வெற்றியை நோக்கியும் வழி நடத்தியபடி, வாழ்த்துகள் நண்பரே..!!

Dr.சுந்தரராஜ் தயாளன்
03-03-2012, 05:37 AM
வழிந்தோடும் கண்ணீரோடு வருகவென வரவேற்கிறேன்

jayanth
04-03-2012, 01:49 PM
மனதை நெகிழ வைத்துவிட்டீர்கள். கண்ணீர் மல்க உங்களை வரவேற்கின்றேன். நானும் என் தந்தையாரை இழந்து 40 வருடங்கள் 07 மாதங்கள் ஆகின்றது. அவருடன் கைபிடித்து நடந்த அந்த நாட்கள் இன்னும் மனதில் பசுமையாக இருக்கின்றது. மறக்க முடியுமா அந்த நாட்களை ???

leomohan
04-03-2012, 07:34 PM
மனம் நெகிழ்ந்தேன்.

சிவா.ஜி
04-03-2012, 07:38 PM
மோகன்....நானும் இப்பொது பஹ்ரைனில்தான்....உங்கள் அலைபேசி எண்ணை தனிமடலில் அனுப்பமுடியுமா?

aren
05-03-2012, 06:24 AM
முதல் பதிவே ஆயிரம் முத்துக்களுக்குச் சமம். அவ்வளவு அழகாக உங்களுடைய அப்பாவின் மேல் இருக்கும் அன்பை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.

ஆமாம் அப்பா மிகப்பெரிய சொத்து, அவரை இழந்தவர்களுக்குத்தான் அந்த சொத்தின் மதிப்பு தெரியும்.

அருமையான மனதைத் தொடும் பதிவை இங்கே கொடுத்து ஆரம்பித்திருக்கிறீர்கள். தொடருங்கள்.

arun
13-03-2012, 02:26 PM
முதல் பதிவிலேயே மனதை உருக்கி விட்டீர்கள்

அப்பாவின் நினைவுகள் என்றென்றும் மறக்க முடியாதது அந்த விதத்தில் தங்களின் இந்த பதிவுக்கு தலை வணங்குகிறேன்