PDA

View Full Version : ஹைக்கு என்றால் என்ன?தமிழ்குமரன்
22-12-2003, 07:40 AM
ஹைக்கு என்றால் என்ன?


.

இ.இசாக்
22-12-2003, 04:47 PM
ஹைக்கூ ஓர் அலசல்
- மரவண்டு

ஜப்பானியத் தயாரிப்பு என்றாலே அந்தப் பொருளுக்கு ஏகக் கிராக்கி தான்.. ஹைக்கூ
கவிதைக்கு மட்டும் இருக்காதா என்ன

ஹைக்கூ என்ற மூன்று வரிக் குறுங்கவிதை கருக்கொண்டது ஜப்பானிய
மண்ணில் தான்.

1. ஹைக்கூவின் தோற்றம்

சங்கம் வைத்து வளர்க்கப்பட்ட மொழிகள் இரண்டு அதில் ஒன்று நமது தமிழ்,
மற்றொன்று ப்ரெஞ்ச்.

தமிழ் இலக்கிய வரலாற்றை சங்கத்தின் அடிப்படையில் முதல் சங்கம், இடைச் சங்கம்,
கடைச் சங்கம் எனப் பிரிக்கிறார்கள்.

ஜப்பானிய இலக்கிய வரலாற்றை அதன் தலை நகர் மாற்றத்தின் அடிப்படையில் ஆறு
பிரிவுகளாகப் பிரிக்கிறார்கள்.

பிரிவு 1 : நாராக் காலம் (கி.பி 700 முதல் 794 வரை)

இக்காலத்தில் சோக்கா என்ற கவிதை வடிவம் வழக்கத்தில் இருந்தது. அடுத்தடுத்த
அடிகள் 5,7 என்ற அசை அமைப்பிலும், கடைசி இரண்டு அடிகள் 7,7 என்ற அசை
அமைப்பிலும் இருந்தது சோக்கா கவிதை. சோக்கா கவிதைக்கு வரி வரம்பு எதுவும்
கிடையாது. மக்கள் இந்தக் கவிதையை விரும்பி ரசிக்கவில்லை.

பிரிவு 2 : ஹயன் காலம் (கி.பி 794 முதல் 1192 வரை)

இக்காலத்தில் சோக்கா என்ற நீண்ட கவிதை தன்கா என்ற 5 வரிப் பாடலாக
சுருங்கியுள்ளது. 5,7,57,7 என்ற அசை அமைப்பில் அமைந்த ஐந்து வரிப் பாடலே
தன்கா கவிதை.

பிரிவு 3 : காமெக்கூரா காலம் (கி.பி 1192 முதல் 1332 வரை)

இக்காலத்தில் ஜாக்கின்சூ என்ற செய்யுள் தொகை வடிவம் பிறந்திருக்கிறது
கடுமையான இலக்கணங்கள். இந்தக் கவிதையும் மக்களிடையே போதைய
வரவேற்பைப் பெறவில்லை.

பிரிவு 4 : நான்போக்குச்சாக் காலம் (கி.பி 1332 முதல் 1603 வரை)

இக்காலத்தில் "நோஹ" என்ற இசை நாடக சமய சமுதாயக் கவிதைகள்
வெளிவந்தன.

பிரிவு 5 : எடோ காலம் (கி.பி 1603 முதல் 1863 வரை)

இக்காலத்தில்தான் சீன ஜப்பான் மொழிக் கலவையாக ஹைக்கூ கவிதை
தோன்றியது. மூன்றே மூன்று அடிகள் 5,7,5 என்ற அசை அமைப்பில் அமைந்தது.

பிரிவு 6 : டோக்கியோ காலம் (கி.பி 1863 க்கு அடுத்தது)

ஹைக்கூ கவிதை பரவலாக அறியப்பட்டு ப்ரெஞ்ச், ஆங்கிலம் என கொடிகட்டிப்
பறந்து தமிழுக்கும் வந்துவிட்டது.

2. ஹைக்கூ பெயர்க் காரணம்

ஆரம்ப காலத்தில் ஹைக்கூ கவிதை ஹொக்கூ என்றே அழைக்கப்பட்டது. பிறகு
ஹைகை என்று திரிந்து ஹைக்கூ என்றாயிற்று. ஹைக்கூ என்றால் அணுத்தூசி
போன்ற சிறிய கவிதை என்று பொருள் கூறுகின்றனர்.

தமிழில் ஹைக்கூ கவிதையானது துளிப்பா, குறும்பா, சிந்தர், கரந்தடி, விடுநிலைப்பா,
மின்மினிக்கவிதை, வாமனக் கவிதை, அணில் வரிக் கவிதை என்று பலவாறாக
அழைக்கப்படுகிறது.

தமிழக ஹைக்கூ கவிஞர் ஓவியர் அமுத பாரதி ஹைக்கூவிற்கு அருமையான
விளக்கம் அளித்திருகிறார்.

ஐ + கூ = ஐக்கூ (ககர ஒற்று மிகுந்துள்ளது !)

ஐ என்றால் கடுகு, கூ என்றால் பூமி,
கடுகளவு உருவில் சிறியதாக இருந்தாலும் பூமியளவு பரந்த விடயத்தை
உள்ளடக்கியது இந்த ஹைக்கூ கவிதை.

தமிழக பெண் கவி மித்ரா அவர்கள் ஹைக்கூவிற்கு நுண்மான் நுழைபுலம் என்று
பொருள் தருகிறார்.

3. ஹைக்கூ கவிதையின் அளவு வரையறை

ஹைக்கூ கவிதை என்பது முதல் வரியில் 5 அசையையும், இரண்டாவது வரியில்
7 அசையையும், மூன்றாவது வரியில் 5 அசையையும் தாங்கி நிற்கும் மூன்று வரிக்
கவிதை. அசை என்னும் சொல் ஆங்கிலத்தில் சில்லபிள் என்று அழைக்கப்படுகிறது.
ஜப்பானிய மொழியில் ஒஞ்சி என்றழைக்கப்படுகிறது. ஜப்பானிய மொழியில்
ஒவ்வொரு எழுத்தும் ஓர் அசை என்ற கணக்கில் தான் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
தமிழ் யாப்பிலக்கணத்தில் அசையானது நேரசை, நிரையசை என இருவகைப்படும்.

ஜப்பானிய மொழியின் ஒஞ்ஜி என்பது தமிழில் உள்ள நேரசைக்குச் சமம். ஒற்று
எழுத்துக்கள் கணக்கில் அடங்கா. (இது ஜப்பானிய மொழிக்கும் தமிழுக்கும்
பொருந்தி வரும் விதி!)

ஆரம்ப காலத்தில் இந்த 5,7,5 என்ற அசை அமைப்பு முறையாக கடை
பிடிக்கப்பட்டது. காலப் போக்கில் இந்த 5,7,5 என்ற அளவு கோலைத்
தூற எறிந்து விட்டார்கள்.

தமிழ் அசை மரபின் 5,7,5 என்ற அசை (நேரசை, நிரையசை) வடிவில் அமைந்த
ஹைக்கூ கவிதைகளை ஓவியக் கவிஞர் வெளியிட்டார் (காற்றின் கைகள்)

4. ஹைக்கூ கவிதையின் வளர்ச்சி

புத்த மதத்தின் கிளைப் பிரிவான ஜென் தத்துவத்தைப் பரப்புவதற்கு ஒரு நல்ல
ஊடகமாக ஹைக்கூ கவிதையானது பயன்படுத்தப்பட்டது.

ஜப்பானிய கவிஞர்கள் மோரிடேகே (1473-1549) மற்றும் சோகன் (1465-1553)
ஆகியோர் ஹைக்கூ கவிதையின் முன்னோடி என்றழைக்கப் படுகிறார்கள்.
உதிர்ந்த மலர் / கிளைக்குத் திரும்புகிறதோ ? / வண்ணத்துப் பூச்சி (மோரிடேகே)
நிலவிற்கு ஒரு / கைப்பிடி வைத்தால் / எத்துனை அழகான கைவிசிறி (சோகன்)

ஹைக்கூ முன்னோடிகளை அடுத்து ஹைக்கூ நால்வர்கள் தோன்றினார்கள்

1. மட்சுவோ பாஸோ (1465-1553)
2. யோசா பூசன் (1716-1784)
3. இஸ்ஸா (1763-1827)
4. சிகி (1867-1902)

இவர்களைப் பற்றி அடுத்த கட்டுரையில் (பாகம்- 2) விரிவாகக் காண்போம்...

கொசுறுச் செய்தி :

ஜப்பானியர்கள் பெண் பார்க்கும் படலத்தில் பெண்ணிற்கு ஆடத் தெரியுமா?
பாடத் தெரியுமா? என்றெல்லாம் கேள்வி கேட்க மாட்டார்களாம்..
"பொண்ணுக்கு ஹைக்கூ எழுத வருமா? அப்படின்னுதான் கேப்பாங்களாம்!

நன்றி:http://www.tamiloviam.com/html/Kavioviam48.Asp

ஆர்வமுள்ள தோழர்கள் முடிந்தால்
நேரடியாக தமிழோவியம் வலைதளத்தில் வாசிக்கவும்.
இக்கட்டுரையில் உள்ள செய்திமட்டுமே
அய்க்கூவுக்கான முழுவிவரம் அல்ல. தீர்வும் அல்ல.

அய்க்கூ வலைதளங்களை ( ஆங்கிலத்தில் ) படிக்க
http://groups.yahoo.com/group/thulippaa/links

பாரதி
22-12-2003, 05:01 PM
மிகவும் விளக்கமாக பதில் அளித்த அன்பு இசாக்குக்கு என் நன்றி.

இளசு
22-12-2003, 06:14 PM
தமிழ்குமரன்..

இங்கே சென்று பாருங்கள்..
http://www.tamilmantram.com/board/viewtopic.php?t=1081

இளவல் இசாக்கிற்கு நன்றி..
அச்சிதழினும் மின்னிதழின் கூடிய பலம்.. சுட்டிகள்
எனும் கோடங்கி கட்டுரை சொன்னதை
மெய்ப்பிக்கும் பப்பி, இசாக், பிரபா (கோவை)...
பாராட்டுகள்.


(ஏற்கனவே இருக்கும் இழையில் பதிவுச்சரங்கள் தொடர்ந்து தொடுங்களேன்..

இந்த இழையை முடிச்சு போட்டுவிடலாந்தானே..?)

aren
23-12-2003, 01:30 PM
நான் இன்றைக்குத்தான் இதைப் பற்றி சொல்லிக்கொடுங்கள் என்று நம் மன்றத்தில் கேட்டேன். அதற்குள் இங்கே விளக்கங்களுடன். பலே பலே. தொடருங்கள்.

Nanban
23-12-2003, 02:49 PM
ஹைகூ பற்றிய விரிவான விவாதம் நடைபெற்றுள்ளது. இளசு கொடுத்த் சுட்டியின் மூலம் அதை அடையலாம்.

இசாக் கொடுத்த தகவல்கள் இதுவரையிலும் கிடைத்த தகவல்களுக்கும் கூடுதல் ஆனவை.......

நன்றி.........

(இசாக்கின் தகவல்களையும் அங்கே பதிந்து வைக்கிறேன்.....)