PDA

View Full Version : கணினி யுகத்தில் எழுத்துச் சிக்கனம்



jayanth
11-02-2012, 06:21 AM
கணினி யுகம் பிறந்தது தமிழின் பயன்பாட்டில் ஒரு பெரிய தாக்கத்திற்குக் காரணமாகி விட்டது. தொடக்கத்தில் ஆங்கிலம் மட்டுமே கணினி மொழியாக இருந்தது. கணினி அறிவிருந்தால் வெளிநாடுகளில் நிறையச் சம்பாதிக்க முடியுமென்ற எண்ணத்தில் ஏராளமான இளைஞர்கள் ஆங்கில வழியில் படித்துக் கணினி இயலில் பயிற்சி பெற்றனர். 1960 முதலே அமெரிக்காவில் சென்று குடியேறும் விஞ்ஞானிகள், பொறியாளர்கள், கணினி நிபுணர்கள், மருத்துவர்கள் போன்றோரின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது. அவர்களுக்குத் தாய்நாட்டுக் கலாசாரத்தின் பேரிலுள்ள பிடிப்பை விட முடியவில்லை. அதன் காரணமாகத் தமது பிள்ளைகளுக்குத் தாய் நாட்டு இயல், இசை, நாடகக் கலைகளில் பயிற்சியளிக்கிறார்கள்.

கணினியில் தமிழைப் பயன்படுத்துவதற்கான உபாயங்களைக் கண்டுபிடிப்பதிலும் புலம் பெயர்ந்த தமிழர்களே முன்னோடிகளாயிருக்கிறார்கள். இந்தக் கால கட்டத்தில் தான் கணினித் தமிழ் என்று ஓர் ஐந்தாவது வகையான தமிழ் வகையை உருவாக்க வேண்டிய கட்டாயத் தேவை ஏற்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் இதுகாறும் நீள நீளமாகப் பேசுவதும் எழுதுவதும் தான் பாண்டித்தியத்தை வெளிக்காட்டுவதாகக் கருதப்பட்டது.

ஆனால் கணினி யுகத்தில் நீளம் இடைஞ்சல் தருவது. சிக்கனம் தான் சிறந்தது. ஒரு பாராவில் சொல்லுவதை ஒரு வாக்கியத்துக்குள் சொல்லி முடிக்க வேண்டும். ஒரு வாக்கியத்தில் உள்ள விஷயத்தை ஒரே ஒரு சொல்லில் சொல்ல முடிய வேண்டும். ஒரு சொல்லில் உள்ள விஷயத்தை ஒற்றை எழுத்தில் சொல்ல முயல வேண்டும். கணினியைப் பொறுத்த வரை மொழி ஒரு கருவி மட்டுமே. இருக்கிற இடத்தில் முடிந்தவரை அதிகமான செய்திகளைத் திணித்து விட வேண்டும். அதற்குச் சுருங்கச் சொல்லப் பழகுவது அவசியம்.

இதற்காகவே கணினியில் பயன்படுத்தப்படுகிற ஆங்கிலச் சொற்களில் முடிந்தவரை எழுத்துகளைக் குறைத்துக் கொள்கிறார்கள். See You என்பது CU எனச் சுருங்குகிறது. How are You என்பது Hw Ru என ஆகிறது.

இணைய வலைமூலம் அனுப்புகிற செய்தியின் நீளமும் எழுத்துகளும் அதிகமானால் அதிக நேரமும், அதிகப் பணச்செலவும் பிடிக்கும். செய்தி சுருக்கமாயும் வேகமாயும் செலவு குறைந்ததாகவும் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பல சொற்களின் எழுத்துகள் குறைக்கப்படுகின்றன. கடைசி எழுத்துகள் வெட்டப்படுகின்றன. மின்னஞ்சலிலும் மின்னரடடையிலும் இணைய வலை மொழியிலும் goin, doin என்றெல்லாம் சொற்கள் முடமாக்கப்படுகின்றன. குறைவான இடத்தில் நிறையச் செய்திகளைத் திணிக்க வேண்டும். செய்தியில் பொருள் விளங்கினால் போதுமானது. " நான் சொல்லுவது உனக்குப் புரிய வேண்டும். நீ சொல்லுவது எனக்குப் புரிய வேண்டும். மொழியின் பயன்
அது மட்டுமே. மொழி அதற்கான ஒரு கருவி மட்டுமே" என்பதே இன்றைய இளைய தலைமுறையின் எண்ணப் போக்காக மாறிவிட்டது.

தொலைபேசித் தொடர்புகளும் இணைய வலைத் தொடர்புகளும் அபிவிருத்தியடைந்த பின் கணினியில் கடிதத் தொடர்பு கொள்வது அதிகமாகி வருகிறது. செய்திகளைச் சொல்வதில் பல புதிய புனைவுகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. I LOVE YOU என்பதை 143 என எழுதுகிறார்கள். கேசவன் K - 7 என்று கையெழுத்திடுகிறார். ஆயிரத்தை K என்று சுருக்கி விட்டார்கள்.

ஆங்கிலத்துக்கு ஏற்பட்டது தமிழுக்கும் எற்படும். இந்த நிலையில் தமிழாசிரியர்கள் தமது போதனை முறைகளை மாற்றிக் கொள்ள வேண்டும். இலக்கணம் சிதையாமல் சிறு சிறு வாக்கியங்களில் விஷயத்தைச் சொல்லவும் எழுதவும் மாணவர்களுக்குப் பயிற்சியளிக்க வேண்டும். சுருங்கச் சொல்லுவதற்கு ஆத்திச்சூடியும் திருக்குறளும் நல்ல முன்னுதாரணங்கள். பழைய பாடல்களிலிருந்து ஓரிரு எழுத்துகள் கொண்ட ஆ, மா, பா, ஆய், ஞாய், எந்தை உந்தை, எம்பி, உம்பி, என்பன போன்ற சொற்களைத் திரட்டி ஒரு பேரகராதியை உருவாக்குவது அவசரமான தேவையாகி விட்டது.
தமிழ் அறிஞர்கள் சரியான நடவடிக்கை எடுக்கத் தவறினால் ஆளாளுக்கு இஷ்டப்படி யெல்லலாம் சொற்களைச் சிதைத்து, வெட்டி, குறுக்கி எழுத ஆரம்பித்து விடுவார்கள்.

பின் வரும் உரையாடலைக் கவனியுங்கள்.

ஹய் சின் - ஹய் மீன்; சாப்டாச்சா - ஆச்; என்ன சாப்டே - சப்தி, உப்மா; தொட்க - பச்டி, குர்மா;

தூங்னியா - னேன். (தூங்கினியா? தூங்கினேன்)

குள்சியா - கலை (குளிச்சியா? குளிக்கலை)

பீச் போலாமா - லாம் (பீச் போகலாமா - போகலாம்)

கடிதங்கள் தந்தி நடையில் "ஹய் டாட், நா ஓகே நீங்க ஓகேயா - பணம் வேணும் - 10 கே அனுப். ஜல்தி - செக், டிடி நோ - எம்ஓ அனுப். மம்கு லவ் - உன்கு லவ் - பாட்டிகு லவ் - ஹெல்த் பாத்கோ" என்று இருக்கும். இது தேவையா?


நன்றி: கே.என். ராமசந்திரன்

susibala.k
11-02-2012, 09:57 AM
படிக்கும் போதே பயமாய் இருக்கிறது , எதையோ இழந்துவிட்ட துக்கம் ஏற்படுகிறது.இப்படி ஒரு நிலைமையும் கூட வந்துவிடுமா !!!!!முன்னோடிகள் சற்று விளக்க வேண்டுகிறேன் .