PDA

View Full Version : ’பள்ளிகொண்டபுரம்’

கலையரசி
02-02-2012, 01:29 PM
கேரளாவில் பணிபுரிந்து ஓய்வு பெற்று இப்போது திருவனந்த புரத்தில் வசித்து வரும் திரு நீல.பத்பநாபன் அவர்கள் எழுதிய ’பள்ளிகொண்டபுரம்,’ நாவலை வாசிக்கும் வாய்ப்பு அண்மையில் கிட்டியது.

’தலைமுறைகள்’, ’பள்ளிகொண்டபுரம்’, ’உறவுகள்’, ’தேரோடும் வீதி’, ’இலையுதிர்காலம்’ உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி யிருக்கும் இவர், சாகித்ய விருது மட்டுமின்றி பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றவர்..

’பள்ளிகொண்டபுரம்,’ நாவலின் முதற்பதிப்பு டிசம்பர் 1970 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. அக்காலத்தில் நனவோடை உத்தியில் எழுதப்பட்ட நாவல் என்ற சிறப்பினையும் இது பெற்றுள்ளது.

கதையின் முக்கிய பாத்திரமான அனந்தன் நாயரின் வாழ்வில் இரண்டு நாட்களில் நடைபெறும் சம்பவங்கள் தான் கதையாக உருப்பெற்றுள்ளது.. அவரது ஐம்பதாவது பிறந்த நாளன்று அதிகாலை கோவிலுக்குச் செல்லும் அனந்தன் நாயர் சந்திக்கும் மனிதர்களும், அவர்களுடனான உரையாடல் களும், இடை யிடையே அவரைப் பின்னோக்கி இழுக்கும் பழைய நினைவுகளுமே நாவல்.

நிகழ்காலமும் இறந்தகாலமும் மாறி மாறி வந்தாலும் முன்னதைப் படர்க்கையிலும் பின்னதைத் தன்மையிலும் கூறி வாசகருக்குக் குழப்பம் ஏற்படாமல் தவிர்த்துள்ளமை, பாராட்டப்பட வேண்டிய ஒன்று. தமது துக்கங்களையும் துயரங்களையும் தமக்குள் சொல்லிச் சொல்லிப் புலம்ப, ஆசிரியரின் எளிய நடை மிக இயல்பாய்ப் பொருந்துகிறது. .

இரண்டு குழந்தைகளைப் பெற்ற பின்பு தம்மை விட்டுப் பிரிந்து இன்னொருவரின் மனைவியான கார்த்தியாயினியின் நினைவி லிருந்து அவரால் விடுபட முடியவில்லை. ”அவரது புற உலகம் அரூபமான போதெல்லாம் அகவுலகம் விழித்துக் கொண்டு உள்ளத்தின் உள்கோடியி லிருந்து அவளது உருவம் மெல்ல மெல்ல எழுந்து வருகிறது.”

“கடவுளின் இந்தப் புனித சன்னிதானத்தில் வந்து உட்கார்ந்த பிறகும், இந்த வயசான காலத்தில் ஒரு காலத்தில் என் கெட்டிய வளாகயிருந்த அந்த நன்றி கெட்டவளை நினைத்துப் பார்க்க வெட்கமாக இல்லையா?” என்று அவரது அந்தராத்மா கேட்டாலும், அவளது விலகலால் ஏற்பட்ட மனக் காயத்தை ஆற்ற முடியாமல், அவளது நினைவுகளைச் சுமந்து அலைகிறார் அனந்தன் நாயர்.

தம்மைப் போலவே பிள்ளைகளும் தம் அன்னையின் மீது கோபத்துடனும் வெறுப்புடனும் இருப்பர் என்று நம்புகிறார். ஆனால் தமக்குத் தெரியாமல் மகன் பிரபாகர், அவளைச் சந்தித்துப் பழகி வந்திருக்கிறான் என்ற உண்மை தெரிய வரும் போது, அவரது உள்ளம் ஆத்திரத்தாலும், அவமானத்தாலும் கொழுந்து விட்டு எரிகிறது.

அது மட்டுமின்றிப் ’பெற்ற பிள்ளைகளை விட்டு விட்டு இன்னொரு வருடன் போகும் அளவுக்கு, பர்த்தாவால் வஞ்சிக்கப் பட்டவர்,’ என்று தன் அம்மாவுக்குப் பரிந்து கொண்டு அவரையே நேரிடையாக மகன் குற்றஞ் சாட்டும் போது, நிலைகுலைந்து போகிறார்.

”நாம என்னதான் கழுதையாக் கத்தினாலும் பணம் இல்லாமெ ஒரு இழவும் நடக்காது! பிறகு நான் எதுக்கு அனாவசியமாக உங்கச் சிறகில விடாப் பிடியாய் ஒளிந்திருந்து கொண்டு, உங்கள் தரித்திரத்திலும் பங்கு போட்டவாறு வாழணும்? அம்மாவைப் போல் புதிய மேய்ச்சல் இடம் பார்த்து, நான் போய் விட்டதில் என்ன தப்பு?” என்று இளந்தலைமுறை யின் பிரதிநிதியான பிரபாகர் கேட்கும் போது, அனந்தன் நாயரைப் போலவே நாமும் அதிர்ச்சியடைகிறோம்.

கேரளக் கலாச்சார சூழலில் அமைந்த இந்நாவலின் பெண் கதா பாத்திரங்களின் ஒழுக்கப் பிறழ்வு, இது வெளியான காலத்தில் தமிழக வாசகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கக் கூடும். ஆனால் மேல்நாட்டுக் கலாச்சாரம் இறக்குமதியாகிவிட்ட இந்நாளில், சிறு அதிர்வைக் கூட இது ஏற்படுத்துமா என்பது சந்தேகமே.

திருவனந்தபுரம் தான் பள்ளிகொண்டபுரம். பழவங்காடி பிள்ளை யார் கோவில், ’பிரியப்பெட்ட நாட்டுகாரே’ என்று அரசியல் வாதிகள் முழங்கும் புத்தரிக்கண்டம் மைதானம், புகழ் பெற்ற பத்மநாபசுவாமி ஆலயம், சாலைக்கம்போளம், பெரிய கடைத் தெரு என்று இந்நகரைப் பற்றிய விபரங்கள் துல்லியமாக இந்நாவலில் இடம் பெற்று, இரண்டு நாட்கள் அனந்தன் நாயருடன் சேர்ந்து நாமும் இந்நகரைச் சுற்றிப் பார்த்தது போன்ற அனுபவம் நமக்கு ஏற்படுகிறது.

2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் காலச்சுவடு பதிப்பகத்தால் கிளாசிக் வரிசையில் வெளியிடப் பட்டுள்ள இந்நாவலுக்குச் சுகுமாரன் எழுதியுள்ள முன்னுரையில்,

“ஒரு மனச்சுமை மனிதனின் மனவோட்டங்கள் தாம் பள்ளிகொண்ட புரத்தில் கதையாடலாக விரிவடைகின்றன. ஏற்றுக்கொண்ட மதிப்பீடுகளுக்கும் புதிய மதிப்பீடுகளுக்கு மிடையில் உழலும் சாதாரண மனிதர் அனந்தன் நாயர்.

இலக்கிய புனைவு வெறும் கதையாடல் அல்ல. அதையும் மீறிய நுண்ணுணர்வுகளை வாசக கவனத்தில் ஏற்படுத்துவது என்ற இலக்கிய செயல்பாட்டை இனங்கண்ட தருணங்களில் ஒன்றாக இருந்தது ‘பள்ளி கொண்டபுரம் வாசிப்பு,” என்று சொல்லியிருப்பது, நூறு சதவீதம் உண்மையே..

கீதம்
03-02-2012, 02:09 AM
சுருக்கமாகவும் சிறப்பாகவும் உள்ளது பள்ளிகொண்டபுரம் நாவலுக்கான உங்கள் விமர்சனம். கேரள கலாச்சாரப் பின்னணியில் அமைந்த பெண்பாத்திரங்கள் பற்றியத் தங்கள் கருத்து உண்மைதான். அந்தக் காலம் மாறிவிட்டது.

வாய்ப்பு அமைந்தால் படிப்பேன். பகிர்வுக்கு மிகவும் நன்றி அக்கா.

பாரதி
03-02-2012, 01:32 PM
புத்தகங்கள் படிப்பது குறைந்து விட்ட இக்காலத்தில் இது போன்ற விமர்சனங்களாவது படிப்பவர்கள் எண்ணிக்கையைக் கூட்டட்டும். நான் அவரது “தலைமுறைகள்” புத்தகத்தை படித்திருக்கிறேன். வாய்ப்பும் காலமும் அமையும் போது நானும் படிப்பேன். நன்றி.

ஆதவா
04-02-2012, 08:03 AM
மொழிபெயர்ப்பு நாவல்கள் தற்காலத்தில் அதிகமாகிவருகின்றன, பள்ளிகொண்டபுரம் கேள்விப்பட்டிருக்கிறேன், படித்தது கிடையாது. காலச்சுவடு கிளாஸீக் வரிசை என்பதால் நிச்சயம் வாங்கிப் படிக்கலாம்!!! (கிளாஸிக் எனும் அடைமொழியோடு விலையும் அதிகமாக இருக்கிறது)

புத்தக விமர்சனம் எளீமையாகவும் சிறப்பாகவும் இருக்கிறது. தொடர்ந்து இதைப்போல நீங்கள் படிக்கும் புத்தகத்தின் விமர்சனங்களைத் தாருங்கள்!!!

கலையரசி
04-02-2012, 09:32 AM
சுருக்கமாகவும் சிறப்பாகவும் உள்ளது பள்ளிகொண்டபுரம் நாவலுக்கான உங்கள் விமர்சனம். கேரள கலாச்சாரப் பின்னணியில் அமைந்த பெண்பாத்திரங்கள் பற்றியத் தங்கள் கருத்து உண்மைதான். அந்தக் காலம் மாறிவிட்டது.

வாய்ப்பு அமைந்தால் படிப்பேன். பகிர்வுக்கு மிகவும் நன்றி அக்கா.

பாராட்டுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கீதா.

கலையரசி
04-02-2012, 09:34 AM
புத்தகங்கள் படிப்பது குறைந்து விட்ட இக்காலத்தில் இது போன்ற விமர்சனங்களாவது படிப்பவர்கள் எண்ணிக்கையைக் கூட்டட்டும். நான் அவரது “தலைமுறைகள்” புத்தகத்தை படித்திருக்கிறேன். வாய்ப்பும் காலமும் அமையும் போது நானும் படிப்பேன். நன்றி.

தலைமுறைகள் படிக்க வேண்டும் என்று எண்ணியிருக்கிறேன். இன்னும் அதற்கான வாய்ப்பு அமையவில்லை. அதைப்பற்றி உங்கள் விமர்சனத்தை எழுதுங்களேன். கருத்துக்கு மிக்க நன்றி பாரதி அவர்களே!

கலையரசி
04-02-2012, 09:36 AM
மொழிபெயர்ப்பு நாவல்கள் தற்காலத்தில் அதிகமாகிவருகின்றன, பள்ளிகொண்டபுரம் கேள்விப்பட்டிருக்கிறேன், படித்தது கிடையாது. காலச்சுவடு கிளாஸீக் வரிசை என்பதால் நிச்சயம் வாங்கிப் படிக்கலாம்!!! (கிளாஸிக் எனும் அடைமொழியோடு விலையும் அதிகமாக இருக்கிறது)

புத்தக விமர்சனம் எளீமையாகவும் சிறப்பாகவும் இருக்கிறது. தொடர்ந்து இதைப்போல நீங்கள் படிக்கும் புத்தகத்தின் விமர்சனங்களைத் தாருங்கள்!!!

கண்டிப்பாக படியுங்கள். தாங்கள் சொன்னது போல் விமர்சனத்தைத் தொடர்ந்து எழுதுவேன். பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி தம்பி.

சிவா.ஜி
16-02-2012, 07:58 PM
கேரளா சம்பந்தப்பட்ட எதையும் மனசு விரும்புவதில்லைங்க மேடம். தப்பா நினைச்சுக்காதீங்க...உங்க எழுத்தில் எனக்குப் பூரண திருப்தி. ஆனாலும்....இந்த நாவலை நான் படிக்கப்போவதில்லை.

கலையரசி
17-02-2012, 02:09 PM
கேரளம் சம்பந்தப்பட்ட எதையும் படிக்கப் போவதில்லை என்ற உங்கள் கொள்கையைப் பாராட்டுகிறேன். உங்களது தமிழ் இனவுணர்வு போற்றத்தக்கது.
கேரளச் சம்பந்தப்பட்ட கதையென்றாலும் அதை எழுதியவர் தமிழர் தான். நம் தமிழ் இலக்கியத்துக்குத் தம் அரிய படைப்புக்கள் மூலம் வளம் சேர்த்திருக்கிறார்.

உங்களுக்கு மனத்துக்குத் தோன்றியதை வெளிப்படையாகத் தெரிவித்தது மிகவும் பாராட்டுக்குரியது. இதில் தப்பாக நினைக்க எதுவுமேயில்லை சிவாஜி சார்!

Dr.சுந்தரராஜ் தயாளன்
12-03-2012, 05:42 PM
பேராசிரியர் மனோன்மணியம் சுந்திரம்பிள்ளை அவர்களும் ஒரு தமிழர் தான். நமது தமிழ் இலக்கியத்தில் பாதிக்குமேல் இன்றைய கேரளாவில் வாழ்ந்த சேரநாட்டுப் புலவர்களால் பாடப்பட்டவை தான். நமது சரித்திரத்தை நினைவுகூரும் பொது கொடுங்கல்லூர் கல்வெட்டுக்களை ஓதிக்கிவிட முடியாது.

கலையரசி
18-03-2012, 11:49 AM

நீங்கள் கூறுவது மிகவும் சரி. பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி தயாளன் சார்!

கௌதமன்
18-03-2012, 05:13 PM
இன்றைய கேரளம் நேற்றைய தமிழரின் சேர நாடு. மலையாளம் என்கிற மொழி சமஸ்கிருதம் அதிகமாக கலந்த தொல் தமிழ். தமிழ் இலக்கியத்தில் மட்டுமே காணப்படும் தூயத்தமிழ் சொற்கள் இன்றும் மலையாள மொழியில் பேச்சு வழக்கில் உள்ளது.

கௌதமன்
18-03-2012, 05:15 PM
பள்ளிகொண்டபுரம், விஷ்ணுபுரம் இப்போது தாண்டவபுரம் என தமிழ் இலக்கியம் தற்சமயம் 'புரங்களில்' வாழ்கிறது.

கலையரசி
26-03-2012, 02:02 PM
இன்றைய கேரளம் நேற்றைய தமிழரின் சேர நாடு. மலையாளம் என்கிற மொழி சமஸ்கிருதம் அதிகமாக கலந்த தொல் தமிழ். தமிழ் இலக்கியத்தில் மட்டுமே காணப்படும் தூயத்தமிழ் சொற்கள் இன்றும் மலையாள மொழியில் பேச்சு வழக்கில் உள்ளது.

நீங்கள் சொல்வது மிகவும் சரி. பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி கெளதமன்.

இராஜேஸ்வரன்
26-03-2012, 02:37 PM
நிகழ்காலமும் இறந்தகாலமும் மாறி மாறி வந்தாலும் முன்னதைப் படர்க்கையிலும் பின்னதைத் தன்மையிலும் கூறி வாசகருக்குக் குழப்பம் ஏற்படாமல் தவிர்த்துள்ளமை, பாராட்டப்பட வேண்டிய ஒன்று. தமது துக்கங்களையும் துயரங்களையும் தமக்குள் சொல்லிச் சொல்லிப் புலம்ப, ஆசிரியரின் எளிய நடை மிக இயல்பாய்ப் பொருந்துகிறது.

உங்களின் விமர்சனம் மிகவும் எளிமையாகவும் சிறப்பாகவும் இருக்கிறது. பாராட்டுக்கள்.

கலையரசி
09-06-2012, 02:49 PM
உங்களின் விமர்சனம் மிகவும் எளிமையாகவும் சிறப்பாகவும் இருக்கிறது. பாராட்டுக்கள்.

தங்களது பாராட்டுக்கு மிக்க நன்றி.

vasikaran.g
16-06-2012, 11:23 AM
அருமையான தெரியாத தகவல்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி கலை அரசி மேடம் ..

கலையரசி
26-06-2012, 01:14 PM
அருமையான தெரியாத தகவல்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி கலை அரசி மேடம் ..
பின்னூட்த்திற்கு மிகவும் நன்றி வசீகரன்!