PDA

View Full Version : தூரமாகிய நான்அக்னி
27-01-2012, 10:23 AM
விலகிச் சென்றதால்
தூரமாகிப்போனேன் என்கின்றேன்..,
விலக்கப்பட்டேன் எனப்
பழி சுமத்த விரும்பாமல்...

பழகிய கணங்களின்
ஞாபகத் திசுக்களை
பழகியதால் வந்த கனதிகள்
நசுக்க,
கசிந்த கலவையில்
நசிந்து மசிந்திருந்த உறவை
வடித்துப் பிரித்து
வைத்திருக்கின்றேன்,
மீண்டும் பொதித்துவிட
விரும்பாமலே...

மீண்டும்
பொதிந்து வைத்துப்
பொசுக்கக் கொடுப்பதிலும்
பாசம் சடலமாகவே
இருந்திடட்டும் என்னிடம்...

பழகாமலே இருந்திருக்கலாம்,
தூரமாகிப் போவேன் எனத் தெரிந்திருந்தால்...

M.Jagadeesan
27-01-2012, 02:51 PM
விலகிச் சென்றீரோ அல்லது விலக்கப்பட்டீரோ உங்கள் காதல் சரியாகப் புரிந்து கொள்ளப்படவில்லை என்றுமட்டும் தெரிகிறது. காதல் கவிதைகள் தொடரட்டும்.

அக்னி
14-02-2012, 12:39 PM
விலகிச் சென்றீரோ அல்லது விலக்கப்பட்டீரோ உங்கள் காதல் சரியாகப் புரிந்து கொள்ளப்படவில்லை என்றுமட்டும் தெரிகிறது. காதல் கவிதைகள் தொடரட்டும்.

இதனைக் காதல் சார்ந்து எழுத நினைக்கவில்லை.
உறவுகளோடான உறவுநிலை சார்ந்தே எழுத நினைத்தேன்.

உறவுகளோடு பாசத்தை மையப்படுத்திப் பழகினால்,
பாசத்தைத் தவிர்த்து, வசதி, பதவி பார்த்து வேறுடுத்திப் போகும் உறவுகள் மீதான வருத்தமே மேற்படி பதிவு.

காதலுக்கும் இது பொருந்தும் என்பது உங்கள் பதிவு தந்த தெளிவு.

நன்றி ஐயா...

ஆதவா
14-02-2012, 02:37 PM
இதை மீண்டும் மீண்டும் படித்து அறிவில் ஆதவனின் மூளையில் கருத்து பிடிபட ”லேட்” ஆகிறது!! கவிதைகள் படித்து வெகுகாலம் ஆகிவிட்டதை உணர்த்துகிறது.

இருப்பினும் “கனதி” என்றால் என்னவென்று புரியவில்லை, விளக்குவீராக.

”வடித்து பிரித்து வைத்திருக்கின்றேன்.” குறிப்பதை அல்லது குறியீடை உள்ளீடு செய்ய இயலவில்லை.

ஐயாம் சரண்டர் அக்னி!

அட்டே.....ன்ஸன்...

அக்னி
14-02-2012, 02:45 PM
ஐயாம் சரண்டர் அக்னி!

அட்டே.....ன்ஸன்...
ஆதவா... இது உங்களுக்கு கொஞ்சம்... இல்லையில்லை... ரொம்பவே ஓவரா தெரியலை...

உங்களுக்கே இக்கவிதை புரியலை என்றால்...

கனதி.., கனம், அதனால் விளைந்த அழுத்தம் என்பவற்றைக் குறிப்பிடப் பயன்படுத்தினேன்...

ஆதவா
14-02-2012, 03:05 PM
ஆதவா... இது உங்களுக்கு கொஞ்சம்... இல்லையில்லை... ரொம்பவே ஓவரா தெரியலை...

உங்களுக்கே இக்கவிதை புரியலை என்றால்...

கனதி.., கனம், அதனால் விளைந்த அழுத்தம் என்பவற்றைக் குறிப்பிடப் பயன்படுத்தினேன்...

புரியாதது என்பதை கொஞ்சம் வேறு மாதிரியாகச் சொல்ல விரும்பினால் “ஏதோ விட்டுப் போய்விட்டதோ” என்று சொல்லத்தோணும்.

விலகிச் சென்றீர்கள் அதாவது விலக்கப்பட்டீர்கள்,
பழகிய ஞாபகங்களை அழுத்த அது கலந்து நசிந்து மசிந்து (!) வந்த உறவை பிரித்து வைத்திருக்கிறீர்கள்,
பிரித்த உறவை பொதித்து விட விரும்பவில்லை

மீண்டும் உறவை “பொதிந்து” வைத்து நாசமாக்க விரும்பவில்லை நீங்கள்

பழகாமல் இருந்திருக்கலாம்
விலக்கப்படுவேன் என்று தெரிந்தால்..

இது நான் உங்கள் கவிதையிலிருந்து பிரதியெடுத்து கொள்ளும் பொருள்.

ஞாபக திசுக்களை ஒரு புறவயமான வஸ்துவாக எடுத்து நசுக்கி மசுக்கி எல்லாம் செய்தி மீண்டும் பொதித்து வைக்க விரும்பவில்லை என்பது ஒரு மாயம் மிக்க புனைவாக இருப்பதாகப் பார்க்க முடிகிறது. ஆனால் ஞாபகத்திலிருந்து உதறிவிடுதல் எனும் கோணத்தில் பார்த்தால் “பொதித்துவிட” எனும் சொல் தொக்கி நிற்கிறது. உங்கள் ஞாபகங்களில் உள்ள உறவை நீங்கள் மீண்டும் பொதிக்க வேண்டிய அவசியம் ஏற்படாதில்லையா? அல்லது பொதித்து வைத்தல் என்ற சொல் ஏதாவது ஒரு இடத்தில் பதுக்கல் என்பதாகிறது. அது ஞாபகம் என்று மட்டுமல்லாமல் ”மகிழ்ச்சி”, ”துக்கம்” போன்ற உணர்வுகளிலோ, எழுத்து, பேச்சு போன்ற “வடிவ”த்திலோ இருக்கலாம். அல்லது வேறுபலவும். இருப்பினும் அது ஏற்கனவே பொதிக்கப்பட்டது என்பது அறீவீர்.

இது கவிதை எனக்குள் உள்ளேற மறுப்பதைப் போன்று இருக்கிறது என்பதால் எனக்குப் புரியவில்லை என்றேன். வாசிப்பின் கோளாறும் காரணமாக இருக்கலாம், மறுப்பதற்கில்லை!

உங்கள் விளக்கவுரையிலிருந்து உங்கள் கவிதையை விளங்கிக் கொள்வோமாயின் அது கவிதை ”ஒன்றை” நன்கு பேசமுயலுகிறது என்று கொள்ளலாம்..

அன்புடன்
ஆதவா.

அக்னி
14-02-2012, 03:13 PM
ஆதவா,
உங்கள் முற்பாதிதான் நான் கொண்ட எடுபொருள்.

நினைவிலிருந்து, அல்லது நினைவுறையும் திசுக்களிலிருந்து,
நான் கொண்ட பாசம்,
அதன் மேல் விழுந்த கனமான அழுத்தங்களால்
சிதைந்த கலவையாகி வெளியேற,
வெளியேறிய கலவையிலிருந்து வடித்தெடுத்த அந்தப் பாசத்தை
மீண்டும் அதனிடத்தில் மீளிருப்புச் செய்து
திரும்பவும் நசுக்கச் சந்தர்ப்பம் தராமல்
எனக்குள் வைக்காது, என்னோடே வைத்துக்கொண்டேன்...

சிவா.ஜி
15-02-2012, 06:23 PM
உடனிருக்கும் உறவுகளும், உடன் சேர்ந்த உறவுகளும்....விலகிச் சென்று....விடுபடும் உணர்வளித்தால்....உறவு வேண்டிய உள்ளம் என்ன செய்யும்.....

இப்படிக் கவிதையில் புலம்பும்......அழகாய்......பொருளாய்.....!!!

வாழ்த்துக்கள் அக்னி.

கீதம்
16-02-2012, 12:38 AM
பழி சுமத்தவிரும்பாத பழகிய மனது,
பழக்கத்துக்கு அடிமையான பாழ்மனது...
சடலம் காத்தல் எத்தனைநாள் சாத்தியம்?

உயிரோடு இணைதல் அசாத்தியமெனில்
உடலைப் பொசுக்குதல் நியாயவாதமே.

பாசத்தின் வெற்றுக்கூடுகளைப் பராமரிக்க
மனமொரு பரிசோதனைக்கூடம் இல்லையே....

மனம் தொட்ட கவிதைக்குப் பாராட்டு அக்னி.

susibala.k
16-02-2012, 10:13 AM
பழகாமலே இருந்திருக்கலாம்,
தூரமாகிப் போவேன் எனத் தெரிந்திருந்தால்...

எதிர்காலம் கணித்தேதான்
எச்செயலும் இயலாதே !
இன்பம் வரும் துன்பம் வரும்
என்றெல்லாம் தயங்காதே !
காலத்தின் மாட்சியது
காயங்களைக் கவிதையாக்கும் !
கலங்காத மனதினையும்
கலங்க வைக்கும் அக்னியின் கவிதையாகும் !!!

அழகான வரிகளுக்கு அடிமையானேன் அன்பருக்கு !!! வாழ்த்துக்கள் !!!!