PDA

View Full Version : முதுபெருங் கிழவன்M.Jagadeesan
23-01-2012, 02:25 AM
கத்துகடல் சூழ் கிராமம் ஒன்றின்
சத்திரம் தன்னில் தங்கி இருக்கையில்

அன்பினைக் கோரி அருகினில் யாரோ
அழைப்பது போலே நான்உணர்ந் தேனே

எண்பது வயது முதுபெருங் கிழவன்
கண்கள் குழிந்து காதுகள் அடைத்து
உண்ணவும் இன்றி உடுக்கவும் இன்றி
தண்ணெனும் குளிரில் மேனி நடுங்கி
தன்னிரு கையால் உடம்பினைப் போர்த்தி
என்னை அழைத்து ஏதோ சொன்னான்.

முதுபெருங் கிழவோய் ! அழைத்த காரணம்
எதுவெனக் கேட்க கிழவன் சொன்னான்.

"தம்பி! சற்றே தயைசெய் திடுவீர்!
இம்மியும் விலகா இருமல் நோயுடன்
தும்மலும் சேர்ந்து துயரப் படுத்த
நாளை எண்ணி வாழ்கின் றேன்யான்
ஏழை எனக்கு உதவி செய்வீர்!

என்றலும் அவனை நோக்கி,

திருத்தகு பெரியோய் ! உம்நிலை கண்டு
வருத்த மடைந்தேன் ஆனால் ஒன்று
முதுமை வயதில் பணிவிடை செய்ய
வதுவை செய்த வார்குழ லாளொடு
பெற்ற பிள்ளைகள் பெருகிய சுற்றம்
எங்குற் றனர்கொல் ! என்றே வினவ,

நற்றமிழ் நம்பி! நானோர் தனியாள்!
குற்ற மிழைத்தேன் கழுவாய் அறியேன்
மானேர் விழியாள் மங்கை தனக்கும்
தேனார் மொழியாள் திருமகள் தனக்கும்
தீங்கு விழைத்தேன் தீயன மொழிந்தேன்
யாங்கு சென்றுஎன் குற்றம் களைவேன்?
கங்கை யாடினும் காவிரி யாடினும்
பொங்கு மாக்கடல் தண்துறை ஆடினும்
திங்களில் பட்ட தீராக் கறைபோல்
என்னுடன் இருந்து என்னை வருத்தும்.

அருகே வந்து சற்றே அமர்ந்து
உருக்கும் என்கதை கேட்பீர் விரைந்து
தென்னையும் பனையும் கமுகும் சூழ்ந்த
நன்னிலம் என்னும் சிற்றூர் அதனில்
நானும் மனையும் மகளுடன் சேர்ந்து
வானூர் மதியமும் உடுக்களும் போல
வளம்பெற நலமுடன் வாழ்ந்து வந்தோம்.
அருமை மகளிடம் அன்பு செலுத்தி
விரும்பிய யாவும் வாங்கித் தந்தேன்.
பன்னிரண் டாண்டு நிறைவுறும் நாளில்
பருவம் எய்தினள் அழகுப் பாவை
திருமகள் கொல்லோ ஊர்வசி கொல்லோ
தேரினில் வலம்வரும் தெய்வம் கொல்லோ
என்றே ஊரார் வியப்புடன் நோக்க
பெற்ற நாளினும் அற்றை நாளில்
பெருமிதம் கொண்டோம் அவளை எண்ணி.

தெய்வ குற்றமோ முன்வினைப் பயனோ
செய்தவப் பெரியோர் பிழைத்த குற்றமோ
கணிகை ஒருத்தியின் காதலில் விழுந்து
கைப்பொருள் இழந்தேன் கடமையும் மறந்தேன்
செய்வன வற்றை செய்யா தொழிவதும்
செய்வன அல்ல செய்து முடிப்பதும்
உய்யும் வழிக்கு உறுகண் ஆமெனும்
பொய்யில் புலவன் பொருளுரை மறந்தேன்.
கட்டிய மனைவி காதலைத் துறந்து
வெட்டிய விழியாள் வீடகம் சென்றேன்.
வாடகை கொடுக்கவும் வழியில் லாமல்
ஆடல் பாடலில் அனைத்தையும் தொலைத்தேன்.
பெற்ற தனைத்தும் துய்த்து முடித்தபின்
அற்ற குளத்துப் பறவை போல
கணிகை நீங்கினள் என்னை விட்டு.

( தொடரும்)

கீதம்
19-03-2012, 12:47 AM
அட, இப்படியொரு தொடர்க(வி)தையைத் தாங்கள் துவக்கியதும் அறியாமல் இருந்திருக்கிறேனே...

வளமான சொற்களால் வசீகரிக்கும் அழகுக் கவிதை. பாராட்டுகள் ஐயா.

முதுபெருங்கிழவனின் முந்நாள் வாழ்க்கையை முழுதும் அறிந்திட ஆவல். கதைக்காக கொஞ்சம், கவிதைத் தமிழுக்காய் கொஞ்சம்.

தொடர்ந்து க(வி)தைத்(தந்)தால் மகிழ்ந்து தொடர்வேன்.

செல்வா
19-03-2012, 02:18 AM
அழகிய கவிதையில் நெடுங்கதை ஒன்று.
உங்களால் நான் கற்ற புதிய வார்த்தைகள் இரண்டு "உடுக்கள், வதுவை"
மீண்டும் தொடருங்கள் ஐயா.