PDA

View Full Version : கி.பி 2189



PremM
21-01-2012, 08:08 PM
கி.பி 2189 ஆம் ஆண்டு..
ஆங்காங்கே அண்டிக் கிடக்கும்
இரவுகளை துடைத்தபடி எழுகிறது அந்த சூரியன்..

இனி வரும் இரவுகள்,
நிரந்தரமற்ற ஒர் விடியலை எதிர்நோக்கிப்
பயணிக்கும் என யாரும் அறிந்திருக்கவில்லை..

உறக்கம் புதைத்து உறங்கும் மானிடர்களுக்கு,
அணைத்துக்கொள்ள ஒரு நிரந்தர போர்வை நெய்யப்படுகிறது என யாரும் அறிந்திருக்கவில்லை..


வான் கிழித்து ஒர் ராட்ஷத ஒலி பூமியில் மையம் கொள்ள,
உலகின் நான்முனைகளிலும் கடிவாளம் போடுகிறது ஒர் மின்னல்..

அது இதுவரை யாரும் பார்த்திராத ஒர் விடியல்..
அது இதுவரை யாரும் கேட்டிராத ஒர் அழைப்பு மணி..
அது இதுவரை யாரும் உணர்ந்திடாத ஒர் காலை முத்தம்..

விண்ணில் பரவிய ஒளிச் சுடர்,
விழிகளின் இமை துடைக்க,
கனவுகளின் கதவுகள் அடைக்கப்பட்டன..

விழித்த கணம்,
அப்பேரொளி தன்னை
முழுமையாய் முடிந்திருந்தது ஆகாய மூலைகளில்..

ஏழு கண்டங்களும் அண்ணாந்து பார்க்க,
தன் படைப்பின் சிதைந்த பாகங்களை அலசியது அப்பேரொளி..

சிறிது நேர கால அவகாசத்திற்க்குப் பின்,
தன்னுள் அடுக்கி வைத்த வார்த்தைகள் மெல்லச் சரிய தொடங்கியது..

ஒர் குரல், எல்லா ஜீவராசிகளின் செவிப்பறையில்
முத்தமிட்டு முன்னேறியது..

என் படைப்பின் சிறந்த படிமங்களே..
உங்களை தளர்த்திக் கொள்ளுங்கள்..
அடுத்த சில நிமிடங்களில் பிரமிப்பும்,
ஆச்சர்யமும் உங்களை சூழ்ந்திராமல் பார்த்துக் கொள்ளுங்கள்..

கசப்பான உண்மைகள் சிலவற்றை
சுவைத்துக்கொள்ள உங்கள் செவிமடல்களை,
தயார்படுத்திக் கொள்ளுங்கள்..

பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது
இப்பூவுலகம்..
ஆனால்,
நான் படைத்த உலகம் இதுவல்ல,
நான் படைத்த உயிர்கள் இவையல்ல,
நான் படைத்தக் காதல் இதுவல்ல,
நான் படைத்தக் கண்ணீர்த் துளிகள் இவையல்ல..

இன்று வஞ்சமும் ,துரோகமுமே நான் படைத்தக் காடுகளின் பரப்பளவை
மிஞ்சி நிற்கின்றன..

கடலில் குருதி வாசம்,
கரையில் சிதைந்த பாகங்கள்..

கண்ணீர்க் கொண்டே
இவ்வுலகின் தாவரங்களுக்கு நீர் பாய்ச்சி விடலாம் என்பது என் கணிப்பு..

காதலின் எஞ்சிய அடையாளங்கள்,
காமத்தின் கதவுகளில் மண்டியிட்டு நிற்கின்றன..

ஒசோன் படலம்,
ஒய்வில்லாமல் ஓட்டையாக்கப்பட்டிருக்கிறது..

பறவைகளும்,குருவிகளும்
அடுக்கு மாடி குடியிருப்பில்
கூடுகட்டப் பழகி கொண்டன..

விலங்களும்,மிருகங்களும்
குளிர்சாதனப் பெட்டியில்
தன் ரோமங்களை உலர்த்துகின்றன..

காற்றும் மரமும் கை கட்டி நிற்கின்றன..
பிழைத்து மரங்களின் நிம்மதி பெருமூச்சோ
அதற்கே நஞ்சாகி தன் வேருக்குள் தங்குகின்றன..

எனவே,
நான் படைத்த உலகம் இதுவல்ல,
நான் படைத்த உயிர்கள் இவையல்ல,
நான் படைத்தக் காதல் இதுவல்ல,
நான் படைத்தக் கண்ணீர்த் துளிகள் இவையல்ல..

என்னை நானே திருத்திக் கொள்ளவும்,
கறை படிந்த உலகை சலவை செய்யவும்
எனக்கோர் கால அவகாசம் தேவை..

எழுதிய நிமிடங்கள் இனி திருத்தி எழுதப்படாது..
எனவே இறுதி நிமிடங்கள் இன்று தொடங்குகின்றன..

இன்று பிறக்கப் போகும்
குழந்தையே இப்பூவுலகில்
பூத்திடும் இறுதி உயிர்மலர்..
அவனே இப்பூமியை முத்தமிடும்
என் இறுதி உயிர்ச் சொட்டு..

இனி பிரியப் போகும் உயிர்கள்
அடுத்த நொடிகளின் தொடக்கம் தேடி அலையாது..
இனி முடியப் போகும் நொடிகள்
இறுதி உயிரின் இறப்பின் கணங்களை கணக்கிட்டுக் கொண்டு பயணிக்கும்..

இறுதி உயிர் வெளியேறிய
அந்தக் கணத்தில்,
இங்கே ஒர் தற்காலிக கதவடைப்பு நடந்தேறும்,
ஒர் நிரந்தர இரவு இங்கே மையம் கொள்ளும்..


எல்லாம் தீர்ந்தப் பின்
மீண்டும் ஒர் ஒற்றை சூரியன்
இந்தப் பூமிப் பந்தின் உதடுகளில் முத்தமிடும்..
மீண்டும் உயிரின் வேர்கள் முளைக்கும்..

முடிவுகளின் தொடக்கம் இதோ ஆரம்பம்...

அடுத்த சில நொடிகளில்,
அந்த ஒளிச் சுடர் மறைந்தது..
ஆனால் அதன் வார்த்தைகள்
உயிர்களின் இதயத் சுவர்களில்,
அழுத்தமாய் எழுதப்பட்டிருந்தன..

(..தொடரும்)

PremM
21-01-2012, 08:11 PM
இது "Children Of Men" என்னும் ஆங்கிலப் படத்தின் கதைக் கருவை மையமாய் வைத்து தோன்றிய ஓர் கற்பனை..