PDA

View Full Version : ஆஸ்திரேலியப் பள்ளிகள் - பகுதி 8



கீதம்
21-01-2012, 01:00 AM
(1)


நண்பன் திரைப்படம் பற்றி பலவிதமான விமர்சனங்கள் முன்வைக்கப்படும் இவ்வேளையில் என் பங்குக்கு நானும் அதைப் பற்றி கொஞ்சம் எழுத ஆசை வந்துவிட்டது. இது படத்தைப் பற்றியது அல்ல. படத்தில் சொல்லப்படும் சில கருத்துகள் பற்றிய என் பார்வையும் இந்தியக் கல்வி முறையையும் ஆஸ்திரேலியக் கல்வி முறையையும் ஒப்பிட்டு அலசும் என் பிள்ளைகளின் கருத்துக்களுமே இப்பதிவு.

திரைப்படத்தில் ஒரு காட்சி! ஆண்டு இறுதித்தேர்வுக்குப் பின் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டு புகைப்படம் எடுக்கப்படும். முதல் மாணவனான விஜய் கல்லூரி முதல்வர் சத்யராஜின் அருகில் அமர்ந்திருப்பார். அவரது நண்பர்கள் கடைசி மாணவர்களாகத் தேறியதால் கடைசி வரிசையில் நிற்கவைக்கப்பட்டிருப்பார்கள். மனம் பொறுக்காமல் விஜய் கல்லூரி முதல்வரிடம் கேட்பார்,

“இப்படி ஒரு ஏற்பாடு தேவைதானா? அதனால் அந்த மாணவர்கள் மனம் பாதிக்கப்படாதா? உங்களுக்கு எய்ட்ஸ் இருக்கிறதென்றால் டாக்டர் உங்களிடம் மட்டும் அதைச் சொல்வாரா அல்லது ஊரையேக் கூட்டிச் சொல்வாரா? அதுபோல மாணவர்களுக்குப் படிப்பில் குறையிருந்தால் அதை அவனுக்கு மட்டும் சொல்லாமல் இப்படி எல்லார் முன்னிலையிலும் காட்டி அவமானப்படுத்தத்தான் வேண்டுமா?”

அதற்கு முதல்வர் கோபத்துடன் “என்னை ஒவ்வொருத்தன் காதிலும் போய் நீ இந்த மதிப்பெண் வாங்கியிருக்கிறாய் என்று சொல்லச்சொல்கிறாயா?” என்பார்.

அப்படிதான் ஒவ்வொரு மாணவர் காதிலும் சொல்கிறது ஆஸ்திரேலியக் கல்வித்திட்டம். கடந்த நான்கு வருடங்களாக என் பிள்ளைகள் ஆஸ்திரேலியப் பள்ளியில் படிக்கின்றனர். அதற்குமுன் இந்தியாவில் இந்தியக் கல்விமுறையில் பயின்றவர்கள். அங்கும் இங்கும் பல வித்தியாசங்களை உணர்கின்றனர். முக்கியமாய் அழுத்தமில்லாக் கல்விமுறை.

ஆரம்பப்பள்ளியிலிருந்தே பிள்ளைகளுக்கு கல்வியை ஒரு சுமையாக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக அவரவர் தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ப புகட்டுகிறது. இங்கு தகுதி என்பது குழந்தைகளின் ஆர்வம், புரிந்துகொள்ளும் திறன், நினைவாற்றல், குடும்பச்சூழல், உடற்கோளாறு போன்ற இன்னும் பல காரணிகளை உள்ளடக்கியது.

பொதுவாகவே பள்ளிகள், குறிப்பாக ஆரம்பப்பள்ளிகள் ( முதல் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை)) பாடப்புத்தகங்களை வீட்டுக்கும் பள்ளிக்கும் தினமும் சுமக்கத் தடைபோடுகின்றன. பாடப்புத்தகங்களை பள்ளிகளில் அவரவர்க்கு ஒதுக்கப்பட்டிருக்கும் லாக்கர்களில் வைத்துவிட்டு வீடு வரும் பிள்ளைகள் அடுத்த நாள் காலையில் அங்கிருந்து எடுத்துக்கொண்டு வகுப்புக்குச் செல்கிறார்கள். வீட்டிலிருந்து குழந்தைகள் பையில் எடுத்துச் செல்வது உணவும் தண்ணீர் பாட்டிலும் மட்டும்தான். உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் மாத்திரமே தேவைப்படும் புத்தகங்களை வீட்டுக்குக் கொண்டுவந்து படிக்கின்றனர்.

ஆரம்பக் கல்வி பயிலும் பிள்ளைகளுக்கு பள்ளிகளில் படிக்கும் படிப்பே போதுமானது என்கிறது கல்வி நிர்வாகம்.. பெற்றோர் வீட்டில் அப்பிள்ளைகளைப் படிக்கவைக்க விரும்பினால் அரைமணி நேரம் மட்டுமே படிக்கவைக்கவேண்டும் என்று அறிவுறுத்துகிறது. மற்ற நேரத்தில் அப்பா அம்மாவுக்கு சிறு சிறு வேலைகளில் உதவவும், வெளியில் ஓடியாடிவிளையாடவும், மிதிவண்டிப் பயிற்சி செய்யவும் பள்ளி பரிந்துரைக்கிறது.

மூன்றாம் வகுப்பு முதல், வாரமொருமுறை மட்டும் வீட்டுப்பாடம் கொடுக்கப்படுகிறது. அதுவும் ஒரு அரைமணிநேரத்தில் முடித்துவிடக்கூடியதாக உள்ளது. ஆனால் அதற்கு கொடுக்கப்படும் அவகாசம் ஐந்து நாட்கள். தினமும் நூலகத்திலிருந்து தனக்குப் பிடித்தப் புத்தகத்தை வீட்டுக்கு எடுத்துச் சென்று வாசிக்கவும் பெற்றோர் அதை ஊக்குவிக்கவும் முக்கியமாக அறிவுறுத்துகிறது.

சரி. தேர்வு எப்படி என்கிறீர்களா? மூச்! ஆறாம் வகுப்பு வரை தேர்வென்ற பேச்சுக்கே இடமில்லை. எல்லாமே அஸைன்மெண்ட் தான்.

ஒவ்வொரு கல்வியாண்டும் நான்கு காலாண்டுகளாய்ப் பிரிக்கப்படுகிறது. ஒவ்வொரு காலாண்டுக்கும் ஒரு தலைப்பு அந்தந்த வகுப்புக்கேற்றபடி கொடுக்கப்பட்டு அதன் அடிப்படையிலேயே பாடங்கள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு அரையாண்டுக்கும் பின்னர் அந்த அஸைண்மெண்ட் பற்றிய மாணவர்களின் பார்வை, பங்களிப்பு, புரிதல், செயல்முறை, திருத்தம் போன்ற பலவற்றையும் அலசி ஒரு தனிப்பட்ட ரிப்போர்ட் ஆசிரியரால் தயாரிக்கப்பட்டுக் கொடுக்கப்படுகிறது.

எப்படி? எல்லோர் முன்னிலையிலுமா? ம்ஹூம்….

ஒரு பெரிய கவருக்குள் போடப்பட்டு தபாலில் வீட்டுக்கு அனுப்பப்படுகிறது. நம் குழந்தையின் படிப்பு எந்த நிலையில் இருக்கிறது, எதில் இன்னும் சிரத்தை எடுக்கவேண்டும், பள்ளியில் அவன் ஒழுக்கம் எப்படி, மற்ற மாணவர்களுடன் அவன் பழகும் திறன் எப்படி என்பதையெல்லாம் நாம் மட்டுமே தெரிந்துகொள்ள முடியும். இதனால் படிப்பில் மந்தமாயுள்ள பிள்ளைகள் மற்றப் பிள்ளைகள் முன் தலைகுனியவேண்டிய அவசியமில்லை. இது ஆரம்பப்பள்ளி நிலையில்!

அடுத்து உயர்நிலைப்பள்ளிகளைப் பற்றி! அங்குதான் மாணவர்களுக்கு தேர்வு அறிமுகப்படுத்தப்படுகிறது. அதுவும் எப்படி? இன்று படித்தது நாளைக்குத் தேர்வு என்றில்லாமல் தேர்வு எந்தெந்த பாடத்தில் என்பதையும் எப்போது என்பதையும் இரண்டு வாரங்களுக்கு முன்பே வகுப்பு ஆசிரியர் எழுத்துபூர்வமாக (நோட்டீஸ்) மாணவர்களிடம் வழங்கியிருக்க வேண்டும். இது சாதாரண வகுப்புத் தேர்வுகளுக்கும் பொருந்தும் என்பதுதான் வியப்புக்குரியது.

என் மகள் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கிறாள். அவளுக்கு இன்றுவரை சக மாணவிகளின் மதிப்பெண் என்னவென்று தெரியாது. மாணவ மாணவிகள் தாமாய் முன்வந்து தங்கள் மதிப்பெண்ணை வெளியில் சொல்லாதவரை எவருக்கும் எவர் மதிப்பெண்ணும் தெரிய வாய்ப்பே இல்லை. முதல் மாணவிக்கு பாராட்டு விழாவும் இல்லை. கடைநிலை மாணவிக்கு கடுமையான அர்ச்சனையும் இல்லை. முதல் வகுப்பு பெற்ற மாணவர் யாரென்பதையும் பெற்ற மதிப்பெண் என்ன என்பதையும் பிற மாணவர்கள் அறிய விரும்பும் பட்சத்தில் அவர் அனுமதி பெற்றே வெளியில் சொல்லப்படுகிறது. ஒருவேளை, அவர் மறுத்துவிட்டால் அந்த விவரம் சொல்லப்படாது.

இப்படியிருந்தால் பிள்ளைகளுக்கு எப்படி தன் முன்னேற்றம் தெரிய வரும் என்றுதானே நினைக்கத் தோன்றுகிறது? மொத்த வகுப்பின் தரப்பட்டியலில் தான் எந்த இடம் என்பதை தனிப்பட்ட மாணவரே அறியும் வண்ணம் அவர்களிடம் மட்டுமே தரப்படுகிறது.

இந்த முறை பற்றிதான் அந்தப் படத்திலும் சொல்லப்படுகிறது. அதை நடைமுறைப்படுத்துவதில் சிக்கலெதுவும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. பெற்றோரின் கனவுகள் திணிக்கப்பட்டு விட்டேத்தியாக படிப்பவர்கள் உள்ளனர். எவ்வளவு படித்தாலும் மனத்தில் பதிய வைக்க முடியாத மாணவர்கள் உள்ளனர். பரிட்சை நேரப் பதட்டத்தில் படித்த அத்தனையையும் மறந்து போகும் மாணவர்கள் உள்ளனர். எந்த வகையிலும் தவறு செய்யாத இவர்களைப் போன்றோரை தண்டித்தல் எந்த வகையில் நியாயம்? ராகிங் போன்றதுதான் இதுவும்.

எல்லாம் இருந்தும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் தெனாவெட்டாக சிலர் திரியலாம். அவர்களைப் பற்றிய கவலையை விட்டுவிடுவோம். ஏனெனில் அவர்கள் எதையும் தாங்கும் மனநிலைக்கு எப்போதோ தள்ளப்பட்டிருப்பார்கள்.

தோல்வியால் மனம் உடைந்து தற்கொலைக்கு செல்பவர்கள் பெரும்பாலும் பிரச்சனைகளை சந்திக்கப் பயப்படும் பூஞ்சை மனதுக்காரர்களே.

வகுப்பில் சகமாணவர்கள் முன் தொடர்ந்து மட்டம் தட்டப்படும் பிள்ளைகள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். தனிமனித ஒப்பீடே எப்போதும் காழ்ப்புணர்வையும் சுய கழிவிரக்கத்தையும் தூண்டும் தூண்டுகோல். பள்ளியில் மட்டுமல்ல, வீட்டிலும் பிள்ளைகளுக்குள் ஒப்பீடு தவிர்க்கப்பட வேண்டியது. நம்மூரில் சில வீடுகளில் பிள்ளைகளை மற்றப் பிள்ளையுடன் ஒப்பிட்டு, ‘அவன் மூத்திரத்தைக் குடி! அப்பவாவது உனக்கு புத்தி வருகிறதா என்று பார்ப்போம்’ என்னும் கடுமையான வார்த்தைகளை வீசி அவர்களை மன அதிர்வுக்குள்ளாக்குவதையும் நான் கண்டிருக்கிறேன். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. நம் பிள்ளையின் தன்மானத்தைத் தகர்த்து, அதன்மூலம் நாம் அடைய நினைக்கும் பெருமை ஒருவகையில் அருவருக்கத்தக்கதும் கூட.

ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒரு திறமை உண்டு. அதைக் கண்டறிந்து மேம்படுத்துவதன் மூலம் எந்தப் பிள்ளையின் எதிர்காலத்தையும் ஒளிமயமாக்க பெற்றோராலும் ஆசிரியர்களாலும் முடியும்.

பிள்ளைகளிடம் இருக்கும் தனித்திறமையைக் கண்டறிய, ஆஸ்திரேலியக் கல்விமுறைக் கையாளும் ஒரு வித்தியாசமான முறையை அடுத்தப் பதிவில் விளக்குகிறேன்.

ஆஸ்திரேலியாவில் இருப்பதால் நான் அக்கல்விமுறையைத் தலையில் வைத்துக் கொண்டாடி இந்தியக் கல்விமுறையைக் கேவலப்படுத்துவதாக எவரும் எண்ணுவீர்களாயின் அதற்காக நான் வருந்துகிறேன். நல்லவை எங்கு இருந்தாலும் பாராட்டுவோம். தவறு எங்கிருந்தாலும் சுட்டிக்காட்டுவோம் என்னும் தார்மீக மனப்பான்மையும் நம் கல்விமுறையிலும் இது போன்ற நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டால் பல மாணவர்களின் மனக்குமைவும் மயானப்பயணமும் தவிர்க்கப்படலாமே என்னும் ஆதங்கமும்தான் அடிப்படை. புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

செல்வா
21-01-2012, 01:43 AM
மிக முக்கியப் பதிவு. எல்லாப் பெற்றோர்களும் தெரிந்து கொள்ளவேண்டிய கல்விமுறை பற்றிய விளக்கங்கள் இன்னும் விரிவாக இருந்தாலும் நல்லது. சுருக்க வேண்டாம்.
தொடருங்கள்.

வருந்துவதற்கு ஏதுமில்லை. இரு கல்விமுறைகளை ஒப்புநோக்கி உங்கள் கருத்துக்களை எழுதுகிறீர்கள். கவலைப்படாமல் எழுதுங்கள்.

M.Jagadeesan
21-01-2012, 02:30 AM
இந்தியாவில் இன்னமும் மெக்காலே பிரபு வகுத்துக் கொடுத்த கல்வி முறைதான் பின்பற்றப்பட்டு வருகிறது.இப்பொழுதான் தமிழ்நாட்டில் சில மாற்றங்கள் புகுத்தப்பட்டு வருகின்றன. ஆஸ்திரேலியக் கல்விமுறை சிறப்பாகத்தான் உள்ளது. மாணவன் தாய்மொழியில் கற்கவேண்டும். பாடங்களைச் சுமையாகக் கருதக் கூடாது.அவனுக்கு விருப்பமில்லாத பாடங்களைப் படிக்கச் சொல்லி வற்புறுத்தக் கூடாது. இந்தியாவைப் பொறுத்தவரையில் பள்ளிக் கூடங்கள் மாணவர்களுக்கு சிறைச்சாலைகளாகத்தான் உள்ளன.

கீதம்
22-01-2012, 12:20 AM
மிக முக்கியப் பதிவு. எல்லாப் பெற்றோர்களும் தெரிந்து கொள்ளவேண்டிய கல்விமுறை பற்றிய விளக்கங்கள் இன்னும் விரிவாக இருந்தாலும் நல்லது. சுருக்க வேண்டாம்.
தொடருங்கள்.

வருந்துவதற்கு ஏதுமில்லை. இரு கல்விமுறைகளை ஒப்புநோக்கி உங்கள் கருத்துக்களை எழுதுகிறீர்கள். கவலைப்படாமல் எழுதுங்கள்.

ஊக்கப்படுத்தலுக்கு நன்றி செல்வா. எனக்குத் தெரிந்தவரை எழுத முயல்கிறேன். மாற்றுக்கருத்துகளையும் மனமுவந்து வரவேற்கிறேன்.

கீதம்
22-01-2012, 12:26 AM
இந்தியாவில் இன்னமும் மெக்காலே பிரபு வகுத்துக் கொடுத்த கல்வி முறைதான் பின்பற்றப்பட்டு வருகிறது.இப்பொழுதான் தமிழ்நாட்டில் சில மாற்றங்கள் புகுத்தப்பட்டு வருகின்றன. ஆஸ்திரேலியக் கல்விமுறை சிறப்பாகத்தான் உள்ளது. மாணவன் தாய்மொழியில் கற்கவேண்டும். பாடங்களைச் சுமையாகக் கருதக் கூடாது.அவனுக்கு விருப்பமில்லாத பாடங்களைப் படிக்கச் சொல்லி வற்புறுத்தக் கூடாது. இந்தியாவைப் பொறுத்தவரையில் பள்ளிக் கூடங்கள் மாணவர்களுக்கு சிறைச்சாலைகளாகத்தான் உள்ளன.

தங்கள் கருத்துரைக்கு மிகவும் நன்றி ஐயா. குறிப்பிட்ட சில பள்ளிகளில் மாண்டிசோரி அம்மையாரின் வழியில் செயல்முறைக்கல்வி கற்பிக்கப்படுகிறது. ஆனால் அப்பள்ளிகளுக்கான கட்டணமெல்லாம் சாதாரண மக்களால் நினைத்தும் பார்க்க முடியாத அளவுக்கு இருப்பது வருத்தத்துக்குரியது.

ஆதவா
23-01-2012, 06:23 AM
சிறப்பாக இருக்கிறது. அடுத்த பாகம் எதிர்நோக்கி...

மதி
23-01-2012, 07:12 AM
அழகான பதிவு. பல நேரங்களில் இதைப்பற்றி யோசித்ததுண்டு. கஷ்டப்பட்டு மனப்பாடம் செய்து அப்படியே தேர்வில் கொட்டி.. என்னத்த சாதிக்கப்போறோம்னு..? கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் வரும்.. வரணும்..!

அமரன்
23-01-2012, 08:09 PM
அக்கா..

பதிவைப் படிக்கவில்லை. பின்னூட்டங்களைப் படித்தேன். உங்கள் எண்ணங்கள் இன்னும் பல எண்ணங்களை வரிசைப்படுத்தும் என்றே எண்ணுகிறேன். பயனுள்ள எண்ணப்பகிர்வு.

ஸ்ரீதர்
24-01-2012, 07:38 AM
இது போன்ற கல்வி முறையை பற்றி நீண்ட நாளாய் எனக்கிருக்கும் சந்தேகம் இது :-

1 ) இம்மாதிரியான முறைகளில், உயர் கல்விக்கு செல்லும்போது குறைந்த காலியிடங்கள் இருக்கும் பட்சத்தில் எந்த முறையில் மாணவர்களை தேர்ந்தெடுக்கிறார்கள்?

2 ) அவரவர் தாய் மொழியில் படித்தால் நன்றாக புரியும் என்பதில் ஐயமில்லை .. வெளிநாடு, வெளிமாநிலம் என்று செல்லும்போது மாணவர்களால் பிரகாசிக்க முடியுமா ?

கீதம்
26-01-2012, 12:31 AM
சிறப்பாக இருக்கிறது. அடுத்த பாகம் எதிர்நோக்கி...

ஆர்வமிகுப் பின்னூட்டத்துக்கு நன்றி ஆதவா.


அழகான பதிவு. பல நேரங்களில் இதைப்பற்றி யோசித்ததுண்டு. கஷ்டப்பட்டு மனப்பாடம் செய்து அப்படியே தேர்வில் கொட்டி.. என்னத்த சாதிக்கப்போறோம்னு..? கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் வரும்.. வரணும்..!

நன்றி மதி. கல்வியில் மாற்றம் வருமுன் நம் மனநிலையிலும் மாற்றம் வரவேண்டும்.


அக்கா..

பதிவைப் படிக்கவில்லை. பின்னூட்டங்களைப் படித்தேன். உங்கள் எண்ணங்கள் இன்னும் பல எண்ணங்களை வரிசைப்படுத்தும் என்றே எண்ணுகிறேன். பயனுள்ள எண்ணப்பகிர்வு.

பின்னூட்டத்துக்கு நன்றி அமரன்.


இது போன்ற கல்வி முறையை பற்றி நீண்ட நாளாய் எனக்கிருக்கும் சந்தேகம் இது :-

1 ) இம்மாதிரியான முறைகளில், உயர் கல்விக்கு செல்லும்போது குறைந்த காலியிடங்கள் இருக்கும் பட்சத்தில் எந்த முறையில் மாணவர்களை தேர்ந்தெடுக்கிறார்கள்?

2 ) அவரவர் தாய் மொழியில் படித்தால் நன்றாக புரியும் என்பதில் ஐயமில்லை .. வெளிநாடு, வெளிமாநிலம் என்று செல்லும்போது மாணவர்களால் பிரகாசிக்க முடியுமா ?

உங்கள் சந்தேகங்களுக்கான பதில்களை, வரும் பதிவுகளில் எனக்குத் தெரிந்தவரையிலும் இங்கு பகிர்ந்துகொள்கிறேன். மிகவும் நன்றி ஸ்ரீதர்.

கீதம்
26-01-2012, 12:34 AM
(2)

உயர்நிலைக்கல்வி என்பது ஏழாம் வகுப்பிலிருந்து ஆரம்பம். மொத்தம் எட்டுப் பாடங்கள். ஆங்கிலம், கணிதம், அறிவியல் போன்ற அடிப்படைப் பாடங்களும், கலை, சமூகவியல், தொழில்நுட்பம், மொழி, சுகாதாரம் மற்றும் உடற்கல்வி போன்ற தொழிற்கல்விப் பாடங்களும் கற்றுத்தரப்படுகின்றன.ஆங்கில வகுப்பு இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. தாய்மொழியாக ஆங்கிலத்தைக் கொண்டவர்களுக்கு அதீதமாகவும், ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாய்க் கொண்டவர்களுக்கு மிதமாகவும் ஆங்கிலம் கற்றுத்தரப்படுகிறது. ஐந்து தொழிற்கல்விப்பாடங்களிலும் பல பிரிவுகள் உண்டு. அவற்றை பொருள் பிறழாமல் தரும் நோக்குடன் ஆங்கிலத்திலேயே தந்துள்ளேன். எல்லாப் பள்ளிகளிலும் எல்லாப்பிரிவுகளும் இருக்கவேண்டிய அவசியமில்லை என்றாலும் பெரும்பாலான பள்ளிகள் பெரும்பாலான பிரிவுகளைக் கொண்டுள்ளன. ஆஸ்திரேலியாவில் பத்துக்கு ஒன்பது பள்ளிகள் இந்த முறையில்தான் கல்வியைப் போதிக்கின்றன.


1.தொழில்நுட்பம் (Technology) :

1. Introduction to IT
2. Advanced IT
3. Woodwork
4. Metal craft
5. Food and culture
6. Experience with food
7. People and food
8. Cake mixing and decoration
9. Social occasions
10. Gourmet food
11. Textiles
12. Creative crafts and character
13. Aviation A&B
14. robotics


2. மொழி -LOTE ( Language Other Than English)

1. Japanese A
2. Japanese E
3. Japanese
4. French A
5. French E
6. French
7. Chinese Mandarin
(A – Accelerated, E – Extension)


3. கலை (The Arts):

1. General art
2. Drawing
3. Advanced drawing
4. Costume and set design
5. Ceramics
6. Sculptures
7. Painting
8. Print making
9. Experimental art
10. Drama
11. Media studies
12. Music
13. Advertisements and business graphics
14. Architecture domestic
15. Architecture commercial
16. Visual communication & design
17. Photography
18. Graphics


4. சமூகவியல்(social studies):

1. Australian History
2. American History
3. Asian History
4. Current issues & global studies
5. Australian Geography
6. Environmental geography
7. Teenagers and law
8. Money matters
9. Work life
10. Movies
11. Mind & Meaning


5. சுகாதாரம் மற்றும் உடற்கல்வி (Health & Physical Education)

1. Human sexuality
2. Health & Lifestyle
3. Child development studies
4. General P.E.
5. Advanced P.E.
6. Racquet sports
7. Handball games
8. Stickball games
9. Football games
10. Power sports
11. Sports coaching
12. Leisure studies
13. Outdoor ed. A&B
14. Individual movement
15. Life saving
16. psychology



மேற்குறிப்பிட்ட ஐந்து பிரிவுகளிலிருந்தும் பிரிவுக்கு ஒன்றாக ஐந்து பாடங்களைத் தேர்ந்தெடுத்து ஆறு மாதங்கள் (ஒரு செமஸ்டர்) படிக்க வேண்டும். எதையெதைத் தேர்ந்தெடுப்பது என்பது மாணவனின் விருப்பம். அடுத்த ஆறு மாதங்களுக்கு வேறு ஐந்து பாடங்கள்.ஒருமுறை தேர்ந்தெடுத்தவற்றை மறுமுறை தேர்ந்தெடுக்க இயலாது. படிப்பு என்பது, கோட்பாடு, செய்முறை, செயலறிவு அதற்கான வாய்ப்புகள் என்று எல்லாவற்றையும் உள்ளடக்கியது. இப்படிப் படிப்பதால், பத்தாம் வகுப்பு முடித்த ஒரு மாணவனுக்கு கிட்டத்தட்ட நாற்பது வெவ்வேறு விதமான தொழிற்கல்வியில் பரிச்சயம் உண்டாகியிருக்கும்.

வெறும் ஏட்டுப்படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லை என்பதை மாணவர்கள் உணர்கின்றனர். கண்முன் விரிந்திருக்கும் மாபெரும் உலகில் வாழ இத்தனை வழிகள் இருக்கின்றன என்பதையும் உணர்கின்றனர். ஒரு வேலை போனால் இன்னொன்று என்று வாழமுடியும் என்னும் நம்பிக்கை கொள்கின்றனர். வாழ வழியில்லாமல் தற்கொலை செய்துகொள்ளும் அபாயத்திலிருந்து அறிவுபூர்வமாக வெளியேறுகின்றனர். சுய விருப்பத்துடன் தங்கள் பாதையைத் தாங்களே தேர்வு செய்து மனநிறைவு பெறுகின்றனர்.

இது போன்ற வாய்ப்புகள் வழங்கப்படாதவரை ஒருவர் தன்னிடம் இருக்கும் திறமையை தானே அறிய இயலாமல் போய்விடுகிறது. இதுவரை ஒரு மாணவன் தான் படித்த பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் ரிப்போர்ட்களின் அடிப்படையில் அவனுக்கு எதில் அதிக நாட்டம் என்பதும் எதில் அவன் முழுத்திறமையும் வெளிப்படுகிறது என்பதும் தெரியவந்திருக்கும். இந்தப் பாடங்களில் தேர்ச்சி சதவீதம் முக்கியமில்லை. மாணவர்களின் திறனைக் கண்டுபிடித்து வெளிக்கொணர்வதும், அத்திறனை மேம்படுத்த ஆலோசனை வழங்குவதுமே ஆசிரியரின் வேலை.

பத்தாம் வகுப்பில் மாணவர்களைப் பாடாய்ப் படுத்தும் பொதுத்தேர்வு இல்லை என்பதும் வியப்பான உண்மை. பத்தாம் வகுப்பு முடிந்ததும், பள்ளி மாணவர்களில் பாதிபேர் பள்ளியை விட்டு விலகுகின்றனர். ஒரு மாணவன் தன் எதிர்காலத்தை நிர்ணயிக்க வேண்டிய கட்டம் இது. படிப்பில் அதிக நாட்டமிருக்கும் பிள்ளைகள் பதினொன்றாம் பன்னிரண்டாம் வகுப்புகளுக்குத் தங்களை தயார் செய்து கொள்ள, தொழிற்கல்வியில் நாட்டமிருக்கும் பிள்ளைகள் பள்ளியை விட்டு விலகி, தொழிற்கல்விக் கூடத்தை நாடுகின்றனர். அதனால் மேற்படிப்பான மருத்துவம், பொறியியல் போன்றத் துறைகளில் தேவையற்ற போட்டிகள் தவிர்க்கப்படுகின்றன. அவற்றுக்குத் தேர்வு செய்யப்படும் மதிப்பெண் வெட்டு விவரத்தை பின்வரும் பதிவுகளில் பதிகிறேன்.

தொழிற்பயிற்சிக் கூடத்துக்குச் சென்ற மாணவர்கள் ஒன்றிரண்டு வருடங்கள் முறையாகப் பயின்று பட்டயம் பெற்று தங்கள் வாழ்க்கையை நிலைநிறுத்திக்கொள்கின்றனர். பெரும்பாலும் பிள்ளைகள் அது ஆணோ, பெண்ணோ, வீட்டை விட்டு வெளியேறும் தருணமும் இதுவே.

கிளிக்கு றெக்கை முளைச்சிடுத்து
ஆத்தவிட்டே பறந்து போயிடுத்து

என்பதுபோல் சுயமாய் சம்பாதிக்கத் துவங்கும் பதினெட்டு வயதில் அவர்கள் பெற்றோர் ஆசிர்வாதத்துடன் தங்கள் வாழ்க்கைப்பயணத்தைத் தனித்துத் துவங்குகின்றனர். குடிக்கவும் புகைக்கவும் சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்ட வயது அது. இரவு நேர கேளிக்கைகளுக்கும் உல்லாச வாழ்வுக்கும் பெற்றோரின் வீட்டில் இடம் இல்லை என்பதால் அவர்கள் நண்பர்களுடனோ தனித்தோ வாழ்கின்றனர்.

மேற்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு படிப்பு முடியும்வரை அரசின் உதவித்தொகை தொடரும். பெற்றோர் அனுமதித்தால் அவர்கள் தொடர்ந்து பெற்றோருடன் தங்குவர். அல்லது வெளியே தங்கி, பகுதி நேர வேலை செய்து அந்த வருமானத்தைக் கொண்டு தங்கள் மேலதிக செலவுகளைக் கவனித்துக் கொள்வர். இனி அவரவர் வாழ்க்கை அவரவர் கையில்!

நம் நாட்டில் இந்த நிலை இல்லையென்பதை நாம் பெருமையுடன் சொல்லிக்கொள்ள வேண்டும். பிள்ளைகள் வளர்ந்து வாழ்க்கையில் செட்டிலான பின் தாய் தந்தையரைக் கைகழுவி விடும் நிலைதான் பல இடங்களில் காணப்படுகிறது. வளரும் பிள்ளைகளைக் கைவிட்ட பெற்றோரைக் காண்பதரிது. படிப்பு மட்டுமல்ல, அதன்பிறகும் வேலை, திருமணம் என்று பிள்ளைகளைத் தம் தோளிலேயே சுமக்கின்றனர் பெற்றோர். ஆண்பிள்ளையாய் இருக்கும்பட்சத்தில் வேலையில்லையென்றால் சில வீடுகளில் சரியான மரியாதை கிடைக்காது. வேலை தேடுவதில் மும்முரமாயில்லை என்று திட்டும் கிடைக்கும். ஆனாலும் பெற்றோர் தங்கள் கடமையை செய்யத் தவறுவது இல்லை.

ஆஸ்திரேலியா போல் எல்லாத் தொழில்களும் சமமாகப் பார்க்கப்பட்டு, வருமானமும் நிகராக இருந்தால், ஒருவேளை, தங்கள் பிள்ளைகள் எந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தாலும் மனமுவந்து வரவேற்கும் நிலை இந்தியாவிலும் இருந்திருக்கும். இங்கோ படித்தவனுக்கு சமுதாயத்தில் இருக்கும் மரியாதையும் அந்தஸ்தும் படிக்காதவனுக்கு இருப்பதில்லை. மேல்நிலையில் உள்ளவனுக்கு இருக்கும் மதிப்பு கடைநிலையில் இருப்பவனுக்கு இருப்பதில்லை.

ஆஸ்திரேலியாவில் உழைப்புக்குத்தான் மதிப்பே தவிர அவன் படித்தவனா இல்லையா என்பதில் இல்லை. அதேபோல் என்ன வேலை பார்க்கிறாய் என்பது பிரச்சனை இல்லை. வேலை பார்க்கிறாயா என்பதுதான் பிரச்சனை. அதனால்தான் ஒரு கட்டுமானப் பொறியாளரும், உணவகத்தில் எடுபிடிவேலை செய்பவரும் திருமணம் செய்துகொள்ள முடிகிறது. ஒரே பள்ளியில் மருத்துவரின் பிள்ளையும், தச்சரின் பிள்ளையும், சாலைப்பணியாளரின் பிள்ளையும் ஒன்றாகப் படிக்க முடிகிறது. வீட்டில் சகல வசதிகளையும் அனுபவிக்க முடிகிறது. காரணம், உழைப்புக்குக் கிடைக்கும் மரியாதையும், அதற்கேற்ற வருமானமும்.

இங்கு பழுதுபட்ட ஒரு தொலைக்காட்சிப்பெட்டியை பழுதுபார்க்கக் கொடுக்கும் தொகைக்கு சற்றே கூடுதல்தான் ஒரு புதிய தொலைக்காட்சிப் பெட்டி! கைப்பை, செருப்பு இவற்றைத் தைக்கக் கொடுப்பதிலும் புதிதாய் வாங்கிவிடலாம். எல்லாம் தனிமனித உழைப்புக்குக் கொடுக்கப்படும் ஊதியம்.

அந்த மரியாதையும் வருமானமும் நம் நாட்டிலும் எல்லா கடைநிலை ஊழியர்களுக்கும் தரப்பட்டால் தன் பிள்ளை இந்தப் படிப்புதான் படிக்கவேண்டும், இந்த வேலைதான் பார்க்கவேண்டும் என்று எந்தப் பெற்றோரும் வற்புறுத்த மாட்டார்கள். தங்கள் பிள்ளைகளுக்கு எதில் நாட்டமோ அதில்தான் மேம்படுத்த முனைவர். நாளை தன் மகனோ மகளோ கஷ்டப்படக்கூடாது என்று பெற்றவர் நினைப்பதில் தவறில்லையே. அந்தக் கவலை மேலைநாட்டுப் பெற்றோர்களைப் பெரிதும் பாதிப்பதில்லை என்பதுதான் உண்மை. இது உன் வாழ்க்கை. அதில் வரும் பிரச்சனைகளை நீயேதான் சமாளிக்கவேண்டும் என்பதே அதிகபட்ச அறிவுரை. பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக வருந்தி வருந்தி சேமிப்பதோ, குறிப்பிட்ட வயதுக்குப் பின் அவர்களைக் கண்டிப்பதோ, அவர்களுடைய அந்தரங்கத்தில் தலையிட்டு ஆலோசனை வழங்குவதோ இல்லை.

பெரும்பாலானோர் வாழ்க்கையை அதன் போக்கிலேயே அனுபவிக்கின்றனர். சம்பாதிப்பதும், அனுபவிப்பதுமே அவர்கள் வாழ்க்கையின் குறிக்கோள். நாம் அப்படியில்லை. தலைமுறைக்கும் சொத்து சேர்க்கும் மும்முரத்தில் நம் வாழ்க்கையை வாழத் தவறிவிடுகிறோம். நம் கனவுகளின் மேல் பெற்றோரின் கனவுகள் திணிக்கப்படுகின்றன. நசுக்கப்பட்ட நம் கனவை மேலெழுப்பி, நம் பிள்ளைகளின் கனவின் மேல் அழுத்தி அதை மூர்ச்சையாக்குகிறோம். நாளை அக்கனவுகள் மேலெழும். அவன் பிள்ளைகளை இம்சிக்கும்.

அவரவர் கனவுகளை அவரவர் வாழ்க்கையிலேயே மெய்ப்படுத்திவிட்டால் காலம் காலமாய் அழுத்தத்தின் பிடியில் அகப்பட்டு அவை அடுத்தத் தலைமுறையின் முதுகு மேல் சவாரி செய்ய காத்திருக்கத் தேவையில்லை. இந்தத் தலைமுறையிலாவது நாம் விட்டுக்கொடுத்துப் போவதன் மூலம் காலந்தவறிய அந்தக் கணக்கை நேர் செய்யமுடியும். நம் பிள்ளைகளை அவர்கள் விரும்பிய துறையில் அனுமதிப்போம். அவர்கள் விரும்பிய வாழ்க்கையை அமைத்துக் கொடுக்காவிடினும், தடுக்காமல் இருப்போம்.

பெற்றோர் மனம் மாறினாலும் கல்வித்துறையில் மாற்றம் வராதவரை மாணவர்களின் கனவு நனவாகும் சாத்தியம் வெகு குறைவே.

இன்னும் சொல்ல ஆசை.

மதி
26-01-2012, 04:06 AM
சொல்லுங்க..

jayanth
26-01-2012, 06:33 AM
அருமையான செய்தி.

ஆதவா
26-01-2012, 07:50 AM
நல்ல விபரமா சொல்லியிருக்கீங்க... இத்தனை துறைகளையும் படிச்சா, முழுசா எதையும் தெரிஞ்சுக்க முடியாதே??

கீதம்
26-01-2012, 10:40 AM
நல்ல விபரமா சொல்லியிருக்கீங்க... இத்தனை துறைகளையும் படிச்சா, முழுசா எதையும் தெரிஞ்சுக்க முடியாதே??

முழுசாத் தெரிஞ்சிக்கிறதுக்கான பாடம் இல்லையே. இப்படியும் ஒரு வேலை இருக்கு. உனக்கு ஆர்வமிருந்தால் இதற்கானப் படிப்பை நீ பத்தாவதுக்குப் பிறகு தொடர்ந்து படிக்கலாம் என்கிற வாய்ப்பை வழிமொழியும் வகுப்புகள்தான் அவை.

என் மகள் ceramics, gourmet food, drama, music, media studies, teenagers and law, introduction to IT, graphics, visual communication and design, health and lifestyle, power sports, life saving போன்ற பல பாடங்களைப் படித்திருந்தாலும் விருப்பமென்னவோ visual communication இல் மட்டுமே இருந்தது. அதில் மட்டுமே மிகவும் ஆர்வம் காட்டினாள். வேடிக்கை என்னவென்றால் நம் இந்திய மனோபாவத்தோடு எல்லாவற்றிலும் முதலாவதாக வர முனைப்பு காட்டியதாலும் அதிக மதிப்பெண் பெறவிரும்பியதாலும், தனக்கு விருப்பமில்லாத பாடத்திலும் கடின உழைப்பைக் காட்டியதால், ஒவ்வொரு ஆசிரியரும் இவள் உண்மையிலேயே அந்தந்த துறைகளில் ஆர்வம் கொண்டிருப்பதாக நினைத்து மேற்படிப்புக்கு அந்தந்தத் துறைகளைப் பரிந்துரை செய்துள்ளனர். இதுதான் நம் கல்விமுறையின் எதிர்மறை விளைவு. மற்றப் பிள்ளைகள் உண்மையிலேயே தங்களுக்கு விருப்பமான பாடத்தில் மட்டுமே முனைப்பு காட்டி, தங்கள் உண்மையான திறமையை வெளிக்கொணர்வதில் நேர்மையாக உள்ளனர்.

கீதம்
03-02-2012, 02:25 AM
(3)

ஆஸ்திரேலியா ஒரே நாடு என்றபோதிலும் மாநிலங்களுக்கிடையிலான செயல்பாடுகளில் சில வித்தியாசங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அதுபோல் நாடு முழுவதும் பொதுவானக் கல்விமுறை பின்பற்றப்பட்டாலும், குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கும் வயது வரம்பு, பள்ளிகளில் கற்பிக்கும் முறை, தேர்வு நடவடிக்கைகள், பயிற்சி வகுப்புகள் போன்றவை மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகின்றன. அதனால் சில குழப்பங்களும் சிக்கல்களும் உண்டாவதை மறுப்பதற்கில்லை.

உதாரணத்துக்கு, குவீன்ஸ்லாந்து, மேற்கு ஆஸ்திரேலியா, வட மண்டலம் ஆகிய மூன்று மாகாணத்திலும் ஒரு குழந்தையை முதல் வகுப்பில் சேர்க்க, அந்த வருடம் ஜூன் 30 ஆம் தேதி அதற்கு ஐந்து வயது முடிந்திருக்கவேண்டும். விக்டோரியா மாநிலத்திலும் ஆஸ்திரேலியத் தலைநகர்ப் பிரதேசத்திலும் ஏப்ரல் 30 இல் ஐந்து வயது நிறைவடைந்திருக்கவேண்டும். நியூ சௌத் வேல்ஸ் எனில் ஜூலை 30. டாஸ்மேனியா எனில் ஜனவரி 1. இதுவே தெற்கு ஆஸ்திரேலிய மாகாணம் என்றால் எந்த மாதம் ஐந்து வயது நிறைவடைகிறதோ அந்தக் காலாண்டில் பள்ளியில் சேர்த்தால் போதுமானது.

என் மகன் மே மாதம் பிறந்ததாலும், என் கணவரின் வேலை நிமித்தம் நாங்கள் குவீன்ஸ்லாந்திலிருந்து விக்டோரியா மாறிய காரணத்தாலும் அவன் மீண்டும் நான்காம் வகுப்பு படிக்கவேண்டிய சூழல் உருவானது. அங்கும் இங்கும் இருந்த விதிகளின் மாறுபாட்டால் பன்னிரண்டு நாட்கள் கணக்கில் உதைத்தது. மனதளவில் அவன் மிகவும் உடைந்துபோனான். காரணம் இந்தியாவில் மூன்றாம் வகுப்பு முடித்தவனை இங்குக் கொண்டுவந்தபோது, குவீன்ஸ்லாந்து விதிமுறைகளின்படி அவன் மறுபடியும் மூன்றாம் வகுப்பு படிக்க நேர்ந்தது. அங்கு மூன்றாம், நான்காம் வகுப்பு முடித்தப்பின் விக்டோரியா மாநிலத்துக்கு மாறியபோது, மீண்டும் நான்காம் வகுப்பு படிக்கவேண்டும் என்றால் மனம் வெறுத்துப்போகாதா?

நல்லவேளையாக அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை பெரியமனது வைத்து நிலைமையைப் புரிந்துகொண்டு அவனுக்கு ஐந்தாம் வகுப்பில் சேர அனுமதி அளித்தார். ஒரே மாநிலத்தில் தொடர்ந்து படிப்பவர்களுக்கு இந்தப் பிரச்சனை இருக்காது.

ஒரு பள்ளியிலிருந்து மற்றொரு பள்ளிக்கு பிள்ளைகளை மாற்றும்போது TC எனப்படும் Transfer Certificate தேவையில்லை என்பது ஒரு ஆறுதல். முன் படித்தப் பள்ளியில் கொடுக்கப்பட்ட ரிப்போர்ட்டே போதுமானது.

ஆஸ்திரேலியக் கல்வித் திட்டப்படி ஒவ்வொரு குழந்தையும் முதல் வகுப்புக்கு முன் Pre-primary என்று இரண்டு வருடங்கள் படிக்கவேண்டும். அது நம் ஊரில் உள்ள kindergarten (LKG, UKG) வகுப்புகளுக்கு நிகரானது. ஆனால் பாடங்களுக்குப் பதிலாக செயல்முறை வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தினமும் புதிது புதிதாய் எதையாவது செய்யக் கற்றுக்கொண்டு வந்து வீட்டில் காட்டும்போது அவர்கள் முகத்தில் தென்படும் மகிழ்ச்சியைப் பார்க்கவேண்டுமே. என் கணவரின் தம்பி குடும்பமும் நாங்களும் ஒன்றாக வசித்ததால் அவர்களுடைய சின்னஞ்சிறு பிள்ளைகள் மூலம் அந்த வகுப்புகள் பற்றியும் அறிய முடிந்தது.

ஆஸ்திரேலியாவில் டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி இம்மூன்று மாதங்கள் கோடைக்காலம் என்பதால் பள்ளிகள் ஜனவரி இறுதியில் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் துவங்குகின்றன. ஒவ்வொரு காலாண்டு முடிவிலும் இரண்டு வார குறுகிய கால விடுமுறை விடப்படுகிறது. டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்திலிருந்து ஐந்து அல்லது ஆறு வாரங்கள் கோடை விடுமுறை விடப்படுகிறது.

கோடைக்காலத்திலும் இலையுதிர் காலத்திலும் பல ஆரம்பப்பள்ளிகள் நீச்சலைக் கட்டாயப் பாடமாகக் கற்றுத்தந்துகொண்டிருந்தன. ஆனால் பெருகிவரும் குடியேறிகளில் பலரது கலாச்சாரம் நீச்சலுடை அணிவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாலும், பல பெற்றோர், பிள்ளைகளின் படிப்பு மற்றும் இதரப் பாடங்களுக்கு ஆதரவுகாட்டும் அளவு, நீச்சலுக்கு ஆதரவு அளிக்காதக் காரணத்தாலும் பல பள்ளிகள் நீச்சல் வகுப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கத் துவங்கிவிட்டன.

இந்த வருடம் கிட்டத்தட்ட ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் 50 மீ. தூரம் கூட நீந்திக் கடக்கத் தெரியா நிலையில் தங்கள் ஆரம்பப்பள்ளிக்கல்வியை முடித்துச் செல்கின்றனர் என்ற தகவலைச் சொல்லி வருத்தம் தெரிவித்துள்ளது, Royal Life Saving Society.

வாழ்க்கைக் கல்வியைக் கற்றுக்கொடுப்பதில் பள்ளிகள் தீவிரமாயிருந்தாலும் பன்முகக் கலாச்சாரம் கொண்ட மக்களின் மனம் அதற்கு உடன்படமறுத்தால் அவை என்ன செய்ய முடியும்? சென்ற வருடத்தில் மூன்றில் இரண்டு பள்ளிகள் நீச்சல் வகுப்புகளைக் கைவிட்டுவிட்டதாகவும் உயிர் காக்கும் நிறுவனம் மேலும் தெரிவிக்கிறது.

கடலால் சூழப்பட்ட இப்பெருந்தீவில் நீர் விளையாட்டுகளின் பங்கு அலாதி. கோடையின் தகிப்பை ஆற்றிக்கொள்ள, ஆழ்கடல் நீந்துதல், படகோட்டுதல், நீர்ச்சறுக்கு போன்ற பல விளையாட்டுகளில் பொழுதைக்கழிக்கும் மக்களுக்கு உயிர்காக்கும் நீச்சல் தெரிந்திருக்கவேண்டியது மிக அவசியமானது. முறையான நீச்சல் அறியாமல், அசட்டுத்துணிச்சலால் பல குழந்தைகளின் மரணம் நேர்வது மிகவும் வேதனைக்குரிய செய்தி! வாழும் சூழலுக்கேற்ப நம் பிள்ளைகளை வளர்க்கவேண்டியது பெற்றோரின் கடமையும் அல்லவா?

உலகிலேயே தோல் புற்றுநோய் அதிகமாக உள்ள நாடு ஆஸ்திரேலியா என்பதால் கோடைக்காலங்களில் பள்ளிகள் மிகுந்த கட்டுப்ப்பாடுகளை குழந்தைகளுக்கு விதிக்கின்றன. தொப்பி (பள்ளிச்சீருடைகளில் ஒன்று) அணியாத எந்தக் குழந்தையும் விளையாட்டுத்திடலில் ஓடி விளையாட அனுமதிக்கப்படுவதில்லை. உள்ளரங்கில் அல்லது நிழற்குடையின் கீழ் விளையாட்டு வகுப்பு முடியும்வரை அமர்ந்திருக்கவேண்டும். இன்னும் சில பள்ளிகளில் குளிர்கண்ணாடிகளும் அணிய வற்புறுத்தப்படுகிறது. வெயில் படும் உடற்பகுதிகளில் சன்ஸ்கிரீன் லோஷனும் கட்டாயம் தடவியிருக்கவேண்டும். பள்ளியிலேயே அதற்கான வசதியும் இருக்கும்.

மூன்றாம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு வாரமொரு முறை show and tell என்றொரு வகுப்பு உண்டு. பிள்ளைகள் வகுப்பு முன், தங்களிடம் உள்ள ஒரு பொருளைக்காட்டி, அதைப்பற்றி ஐந்து முதல் பத்து நிமிடங்கள் பேச வேண்டும். அது குழந்தைகளுக்கு ஆபத்து விளைவிக்காத எந்தப் பொருளாகவேண்டுமானாலும் இருக்கலாம். பெரும்பாலும் குழந்தைகள் தங்கள் பொம்மைகள் அல்லது விளையாட்டுப்பொருட்கள் அல்லது ஏதேனும் பரிசுப்பொருட்கள் இவற்றையே எடுத்துச் செல்ல விரும்புவர்.

அந்த வகுப்பின் அடிப்படை நோக்கம் பிள்ளைகளின் மேடைப்பயம், தயக்கம், கூச்ச சுபாவம் போன்றவற்றை நீக்குதலும், பேச்சுத்திறனை வளர்ப்பதும் ஆகும். ஆஸ்திரேலியர்களிடம் பொதுவாகவே பேச்சுத்திறன் அதிகம். இப்படி பள்ளியில் சிறுவயது முதலே வளர்க்கப்படும் பேச்சுத்திறன் பலர் முன் தயங்காமல், தன் கருத்தை முன்வைக்கும் துணிவைத் தருகிறது என்றால் மிகையில்லை.

மேலும் பள்ளியின் பல நடவடிக்கைகளில் பெற்றோர், மற்றும் முதியவர்களின் பங்களிப்பையும் உட்படுத்துகிறது பள்ளி நிர்வாகம். வாரத்தில் ஒருநாள் பள்ளியின் அருகிலிருக்கும் முதியவர்கள், குறிப்பிட்டக் குழந்தைகளின் வகுப்புகளுக்கு வந்திருந்து அவர்களுடன் தங்கள் நேரத்தை செலவிடுவதையும் தங்களுக்குத் தெரிந்த க்ராஃப்ட் வேலைகளைக் குழந்தைகளுக்குக் கற்றுத்தரவும் பள்ளி ஊக்குவிக்கிறது. அதனால், தனித்து வாழும் முதியவர்களுக்கு ஒருநாள் மகிழ்வாகக் கழிகிறது. குழந்தைகளுக்கு முதியவர்களுடன் பழகும் உன்னதவாய்ப்பும், அவர்களிடமிருந்து புதிய கலைகளைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பும் சேர்ந்தே அமைகிறது.

பள்ளி உணவகங்களில் பெரும்பாலும் பெற்றோரே வாலண்டியராக வந்து வேலை செய்கின்றனர். பள்ளி விழாக்களில் பெற்றோரின் பங்கு அலாதியானது. இதனால் பெற்றோருக்கும் பள்ளி நிர்வாகத்துக்கும் நேரடித் தொடர்பு எப்போதும் உள்ளது.

ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான நட்புறவு பெரிதும் வரவேற்கப்படவேண்டிய ஒரு அம்சம். ஆசிரியர் என்றாலே நாலடி தொலைவில் நின்று பவ்யமாகப் பேசிப்பழகிய என் பிள்ளைகளும் சரி, நானும் சரி, இங்கு வந்த புதிதில் ஆசிரியரைப் பெயர் சொல்லி அழைக்க மிகவும் தடுமாறினோம்.

ஆனால் ஐந்து வயது சிறுவன் கூட அழகாக மிஸ்டர் க்ரீன்ஹில், மிஸஸ் லாசன் என்று அழைப்பதைக் கண்டு வியந்தேன். ஆசிரியர்கள் மாணவர்களை ‘டார்லிங், ஸ்வீட்ஹார்ட், ஹனி, டியர்’ போன்ற அடைமொழிகள் இல்லாமல் பேசுவதே இல்லை. நம் ஊரிலும் சில ஆசிரியர்கள் இப்படி குழந்தைகளிடம் பாசமாக இருக்கிறார்கள். ஆனால் எண்ணிக்கையில் மிகவும் சொற்பமே.

பள்ளி வளாகத்தில் நான் கண்ட ஒரு சம்பவம். ஒரு ஆசிரியர் புல்தரையினூடே ஓடிய ஒரு மாணவனைப் பார்த்து, “Could you please use the proper walkway, darling?” என்கிறார். அவன் “I am Sorry ms. martin” என்று கூறி நடைபாதைக்கு வருகிறான். அதுவரையில் நடந்தவை சரி. அதன்பிறகு அந்த ஆசிரியை அவனிடம் சொன்னதுதான் என்னை வியப்பின் உச்சம் கொண்டு சென்றது. “Thank you, sweetheart” என்று புன்னகை மாறாமல் சொல்லிச் சென்றார். ஈரப்புல் வழுக்கிவிட்டுவிடும் என்பதால் புல்வெளியில் நடக்கக்கூடாது என்பது பள்ளி விதிகளுள் ஒன்று. அதை மீறி ஓடிய மாணவனை கண்டிக்காமல் தன்மையாக உரைத்தது ஒரு ஆச்சரியம். அவன் சரியான பாதைக்கு வந்ததும் அவனைப் பாராட்டியது மற்றொரு ஆச்சரியம்.

நாம் நம் குழந்தைகள் தவறு செய்தால் தவறாமல் கண்டிக்கிறோம். ஆனால் அதே சமயம் அவர்கள் நல்ல விஷயம் செய்தால் மனதுக்குள் மகிழ்ந்தாலும் வாய்விட்டுப் பாராட்டுவதில்லை. கொஞ்சம் இடம் கொடுத்தால் தலையில் ஏறிக்கொள்வார்கள் என்று சர்வ ஜாக்கிரதையாய் இருக்கிறோம். பெற்றோரே இப்படி இருக்கும்போது ஆசிரியர்களும் அப்படி நினைப்பதில் ஆச்சர்யமில்லையே. அந்த எண்ணத்தை முறியடித்து நம் வாய் திறந்து பாராட்டுவதன் மூலம் தான் செய்யும் நல்ல செயல்கள் பற்றிய சிந்தனை அவர்கள் கவனத்துக்கு வரும். மேலும் பல நல்ல செயல்களுக்கு அவை தூண்டுகோலாகும்.

எந்த ஆசிரியரும் யாரிடமும் கடுமையாக நடந்துகொள்வதே இல்லை என்பதுதான் என் பிள்ளைகள் இன்றுவரை என்னிடம் சொல்லிச் சொல்லி வியக்கும் ஒரு விஷயம். இந்தியாவில் அவர்கள் மெட்ரிகுலேஷன் பாடத்திட்டத்தில் சில வருடங்களும், மத்திய அரசுக் கல்வித்திட்டத்தில் (CBSE) சில வருடங்களும் படித்து வந்தவர்கள். பல ஆசிரியர்களிடம் பயின்று வந்தவர்கள். பிடித்த ஆசிரியர்கள் யார் என்று கேட்டால் சிலரை மட்டுமே சொல்லமுடிகிறது. ஆனால் இங்கு பெரும்பாலும் எல்லா ஆசிரியர்களையுமே குறிப்பிடுகிறார்கள்.

நான் படித்த காலத்தை நினைத்துப் பார்க்கிறேன். ஆசிரியர்களிடம் கொண்டிருந்த பயத்தையும் மீறி நமக்குள் இருந்த பாசமும் பக்தியும் நம் நாட்டில் இந்தக்காலத்துப் பிள்ளைகளிடம் தென்படாததன் காரணம் என்ன? ஆசிரியர்களின் அதிகாரப் போக்கா? பிள்ளைகளின் அலட்சியப் போக்கா? பள்ளிகள் தரும் அழுத்தமா? பாடப்புத்தகங்களின் சுமையா? காரணம் எதுவாக இருப்பினும் போட்டி நிறைந்த உலகத்தில் வாழ்வதால் உண்டான பெரும் இழப்பு குழந்தைகளின் குழந்தைமை.

இன்னும் சொல்வேன்…

பாரதி
03-02-2012, 01:38 PM
நீங்கள் கொடுக்கும் விதம் மிகவும் நன்றாக இருக்கிறது. மனப்பாடம் செய்ய வலியுறுத்துவதை நமது பள்ளிகள் எப்போது நிறுத்தும் என்ற ஏக்கமும் வருகிறது. தொடருங்கள்.

செல்வா
06-02-2012, 08:10 AM
நன்றாகச் சொல்கிறீர்கள்.... இன்னும் சொல்லுங்கள்...!

கீதம்
06-02-2012, 09:22 PM
நீங்கள் கொடுக்கும் விதம் மிகவும் நன்றாக இருக்கிறது. மனப்பாடம் செய்ய வலியுறுத்துவதை நமது பள்ளிகள் எப்போது நிறுத்தும் என்ற ஏக்கமும் வருகிறது. தொடருங்கள்.

ஊக்கமளிக்கும் பின்னூட்டத்துக்கும் கருத்துக்கும் நன்றி பாரதி அவர்களே.


நன்றாகச் சொல்கிறீர்கள்.... இன்னும் சொல்லுங்கள்...!

ஊக்கத்துக்கு நன்றி செல்வா. விரைவில் தொடர்கிறேன்.

கீதம்
07-02-2012, 03:27 AM
நமது கல்விமுறையில் மாற்றம் வருவது இருக்கட்டும். முதலில் ஆசிரியர்களிடம் மாற்றம் வரவேண்டும். மாணவர்களிடம் நட்புறவுடன் பழகவேண்டும். தவறு செய்தால் மனம் நோகாமலும் மற்றவர் அறியாமலும் கண்டிக்கவேண்டும். எதற்குமே லாயக்கில்லாதவர்கள் என்று எவரையுமே சொல்ல இயலாது. உடல் குறைபாடு உள்ளவர்களை மாற்றுத்திறனாளிகளாய் மதிக்கும் நாம், மனக்குறைபாடு உள்ளவர்களை மனிதர்களாய்ப் பார்க்கவும் தவறிவிடுவது ஏனோ?

மனக்குறைபாடு என்பது தாழ்வு மனப்பான்மை, தன்னம்பிக்கையின்மை, அதீத தயக்கம், அடுத்தவருடன் பழகவும் பேசவும் கூச்சம், மறதி, கவனக்குறைவு, பதட்டத்தால் நினைவிழத்தல் போன்ற பல குணாதியங்களையும் குறிப்பிடலாம். இப்படிப்பட்ட மாணவர்களுக்கு அன்பும் அரவணைப்புமே தேவை. பள்ளிக்கூடங்கள் வாழும் கலையைக் கற்றுக்கொடுக்காவிடினும் சாகும் எண்ணத்தைத் தோற்றுவிக்கக்கூடாது.
ஏட்டுப்படிப்புடன் வாழ்க்கையைப் பற்றிய அறிவையும், பிரச்சனைகளை சிக்கல்களை துணிவுடன் எதிர்கொள்ளும் திறனையும் பள்ளிகள் போதிக்கவேண்டும். உண்மையில் ஆசிரியர்களுக்குள்ளும் இந்த ஆசைகள் இருக்கலாம். இந்தியக் கல்விமுறை அவர்களையும் அழுத்தத்துக்கு உட்படுத்தியிருக்கலாம். முழுமையான தேர்ச்சி சதவீதம் மட்டுமே ஒரு நல்ல பள்ளிக்கான அளவுகோலாக நம் நாட்டில் கொள்ளப்படுவது மிகவும் துர்பாக்கியமே.

ஏட்டுக்கல்வியையும் மீறிய வாழ்க்கை ஒன்று நம் கண்ணெதிரில் விரிவதை நாம் கவனிப்பதே இல்லை. மாணவர்களின் திறனை எடைபோட தேர்வு மதிப்பெண்களை மட்டுமே அளவுகோலாகக் கொள்ளுதல் சரிதானா? தங்கத்துக்கும் தக்காளிக்கும் ஒரே தராசைப் பயன்படுத்த இயலுமா? சமச்சீர் கல்விமுறை பற்றி நிறைய அலசப்பட்டது. அதில் இன்றும் எனக்கு இருக்கும் சந்தேகம் இதுதான். உணவு, உடை, இருப்பிடம், வாழ்க்கைத்தரம், சுகாதாரம், வருமானம், வசதி என்று பலவிதத்திலும் நகரவாழ்க்கையோடு சமச்சீர் நிலையை அடைந்திராத மக்களுக்கு வெறும் பாடப்புத்தகங்கள் மூலம் அளிக்கப்படும் கல்வி மட்டும் எப்படி சமச்சீர் நிலையை உருவாக்கும்?

சமமான வசதி செய்து தரப்பட்டிருக்கும் ஒரு வீட்டுப் பிள்ளைகளிலேயே ஒரு பிள்ளை நன்றாகப் படிக்கிறது. ஒரு பிள்ளை படிப்பில் நாட்டமில்லாமல் இருக்கிறது. அப்படியிருக்கையில் மின்சார வசதியோ, சரியான உணவோ, கழிப்பிட வசதியோ, சுகாதாரமான சூழலோ, சந்தேகம் கேட்க வீட்டில் வேறு படித்த ஆட்களோ இல்லாத கிராமத்துப்பள்ளி மாணவனை சகலவசதியும் இருக்கும் நகரப்பள்ளி மாணவனோடு ஒப்பிடுதல் எத்தனை அறியாமை? அதிலும் அரசுப்பள்ளிகளைப் பற்றி சொல்லவே வேண்டாம். மற்ற அரசு அலுவலகங்களைப் போலவே அரசுப் பள்ளிகளில் பணிபுரிபவர்களிடம் காணப்படும் மெத்தனம் மிகவும் கண்டிக்கத்தக்கது. நேர்மையான அரசுப்பள்ளி ஆசிரியர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

கல்வித்துறையானது தேர்ந்த கல்வியாளர்களால் நிர்வகிக்கப் பட்டால் ஒழிய அதிலுள்ள களைகள் களையப்படா. பாடத்திட்டங்களும் செயல்முறைகளும் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படவேண்டும். கல்வித்துறையில் அரசின் தலையீடு இருக்கலாம். ஆனால் அரசியல்வாதிகளின் தலையீடு முற்றிலுமாகத் தவிர்க்கப்படவேண்டும். ஆனால் நம் நாட்டில் கல்வியென்னும் பெயரால் வியாபார நிறுவனங்களை நடத்துபவர்களில் பலர் அரசியல்வாதிகளே என்பது எவரும் மறுக்க முடியாத உண்மை. சந்தைகளில் மாடுபிடிப்பது போல் கல்வியும் விலைபேசப்படுகிறது. பொருந்தி வருபவர்க்கு விற்கப்படுகிறது. அங்கு பொருளீட்டும் நோக்கம் மட்டுமே மேலோங்கிநிற்கிறது. தகுதியும் திறமையும் பின்தள்ளப்படுகிறது.

ஆஸ்திரேலியாவிலும் கொள்ளைக் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் இருக்கின்றன. அளவிடற்கரிய சொத்து, அதனால் உண்டாகும் பாதுகாப்புப் பிரச்சனை, அந்தஸ்து, ஆச்சாரத்தின்மேல் பற்று கொண்டவர்களுக்கு அப்பள்ளிகள் உகந்தவை. அதனால் அவற்றைப் பற்றி நான் எதுவும் சொல்வதற்கில்லை. ஆனால் கட்டணம் பற்றி சொல்லியே ஆகவேண்டும். எந்த அளவுக்கு என்றால், அங்கு ஒரு மாணவனுக்கு செலவழிக்கப்படும் தொகையைக் கொண்டு, ஐம்பது மாணவர்களை அரசுப்பள்ளிகளில் படிக்கவைத்துவிடலாம். அரசுப்பள்ளியா என்று முகம் சுளிக்கத்தேவையில்லை.

ஆஸ்திரேலியாவில் அரசுப்பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கு நிகரான கல்வித்தரத்தைக் கொண்டுள்ளது நம்பமுடியாத ஒரு சிறப்பு அம்சம். என் பிள்ளைகள் இங்கு அரசுப்பள்ளிகளில்தான் படிக்கின்றனர். அப்பள்ளிகளின் நடைமுறை, கல்வி, மாணவர்கள்பால் அவர்கள் கொண்டுள்ள சிரத்தை, ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு அத்தனையையும் நேரில் கண்டதாலும் குழந்தைகள் மூலம் அறிந்ததாலும் என்னால் ஆஸ்திரேலிய அரசின் கல்வி நிர்வாகத்தை மெச்சாமல் இருக்க முடியவில்லை.

ஆஸ்திரேலிய அரசியல்வாதிகளின் நேர்மைக்கு உதாரணமாய் சில நிகழ்வுகளை இங்கு நினைவுகூர விரும்புகிறேன்.

1. 2001 - 2006 ஆண்டுகளில் மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தின் முதல்வராய் இருந்தவர் ஜெஃப் கேலோ (Geoff Gallop). இங்கிலாந்தின் அந்நாள் பிரதமர் டோனி பிளேயருடன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்தவர். அவரது திருமணத்தின்போது மாப்பிள்ளைத் தோழனாயிருக்குமளவு நெருங்கிய நண்பர். 54 வயதான இவர் ஒருநாள் தன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

தான் மனச்சிதைவு நோயின் பிடியில் அகப்பட்டிருப்பதாகவும், பதவியிலிருப்பதால் பலருக்கும் பாதிப்பு உண்டாகலாம் என்றும் பொதுநலன் கருதி இந்தமுடிவுக்கு வந்ததாகவும் பத்திரிகை மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் காரணம் தெரிவித்தார். மேலும் சொன்னதாவது, இது குணப்படுத்தக்கூடிய நோய் என்றபோதும், அதற்கான கால அவகாசம் தெரியா நிலையில் பதவியில் நீடித்திருப்பது பல சிக்கல்களை உருவாக்கலாம், தவறான முடிவுகளை எடுக்கத் தூண்டலாம் என்பதால் சிகிச்சை முடியும்வரை அரசியலில் இருந்து விலகி இருக்கப்போவதாகவும் சொன்னார். எத்தனை அரசியல்வாதிகளிடம் இருக்கும் இப்படி ஒரு பெருந்தன்மையும் திறந்த மனமும்! நடக்கவோ, ஓடியாடி செயல்களில் ஈடுபடவோ முடியாத நிலையிலும் படுத்துக்கொண்டாவது பதவியில் நீடித்திருக்கத்தான் பலருக்கும் ஆசை நம் நாட்டில்.

2. ஆஸ்திரேலியத் தொலைக்காட்சியொன்றில் குழந்தைகள் பங்குபெறும் ஒரு சவாலான நிகழ்ச்சி அது. “Are you smarter than fifth grade?” என்பது நிகழ்ச்சியின் பெயர். முதல் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்புக்குள் உட்பட்ட பாடத்திட்டத்திலிருந்து கேள்விகள் கேட்கப்படும். ஐந்தாம் வகுப்பு மாணவனோ மாணவியோ ஒரு பக்கம் பங்கேற்க மற்றொரு பக்கம் வயது முதிர்ந்தவர்கள் (குறைந்த பட்ச வயது 21) எவரேனும் பங்கேற்பர். பெரும்பாலானோரால் பல கேள்விகளுக்குப் பதில் சொல்ல இயலாது. அப்படிப் பதில் சொல்ல இயலாதவர்கள் “I am not smarter than fifth grade” என்று எல்லோர் முன்னிலையிலும் பகிரங்கமாக ஒப்புக்கொண்டு வெளியேறிவிட வேண்டும்.

இன்றைய ஆஸ்திரேலியப் பிரதமர் மிஸ். ஜூலியா கில்லார்ட் (Julia Gillard) என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். இரண்டு வருடங்களுக்கு முன் அவர் துணைப்பிரதமராய் இருந்தபோது அவரும் இந்நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராகக் கலந்துகொண்டார். பல கேள்விகளுக்கான பதில்கள் அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் பார்க்கும் தொலைக்காட்சியில் சற்றும் தயங்காமல் தன் தோல்வியை ஒப்புக்கொண்டு “I am not smarter than fifth grade” என்று புன்னகையுடன் சொல்லி வெளியேறினார். அடுத்தப் பிரதமராய் வருவார் என்று கணிப்பில் இருந்த அரசியல்வாதி அவர். ஆனாலும் நேர்மையாய் தன் தோல்வியை ஒப்புக்கொண்டு வெளியேறினார்.

இதை எழுதும்போது , சமீபத்தில் பத்தாம் வகுப்புத் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து பதவியின் பெருமை குலைத்த முன்னாள் புதுவை கல்வியமைச்சர் கல்யாணசுந்தரம் அவர்கள் ஏனோ நினைவுக்கு வந்துபோகிறார்.

இன்னும் சொல்வேன்…

meera
07-02-2012, 04:03 AM
அக்கா அருமையான தொடரை ஆரம்பித்திருக்குரிர்கள். என்று நம் தவறை தயங்காமல் ஒப்புக்கொள்ளும் மனம் நம்மவர்களிடம் வருகிறதோ அன்று நம் நாடும் முன்னேறிவிடும்.

அதே போல் எல்லா இடங்களிலும் இளைஞ்ர்களுக்கு முன்னுரிமை அளித்து பெரிவர்கள் விலகி நிற்கும் மனப்பான்மை வரும் வரை நம் நிலை இது தான். அப்படியே அவர்கள் விலகி இளைஞ்ர்களுக்கு இடம் கொடுத்தாலும் அது அவர்களின் வாரிசாக தான் இருக்கிறது. :mini023::mini023::mini023:


உலகை அறிய நாங்களும் உங்களோடு வருகிறோம். தொடருங்கள்.

பூமகள்
07-02-2012, 08:16 AM
சிறந்த பதிவு என தலைப்பே கட்டியம் கூறுகிறது... சூழல்.. பதிவை முழுதும் படிக்க இயலவில்லை.. விரைந்து படிப்பேன்..

ஆஸ்திரேலியா வாழ் தமிழ்க் குடும்பங்களுக்கும்.. இனி செல்லவிருப்போருக்கும் மிக மிக பயனுள்ள பதிவு..

எங்கே ஆரென் அண்ணா.. சிங்கப்பூரின் பள்ளிகள் பற்றியும் ஒரு ஆய்வை எழுதினால் பயனுள்ளதாக இருக்குமல்லவா...!! :icon_ush:

இராஜேஷ்
07-02-2012, 09:33 AM
மிகவும் அருமையான தகவல்கள். பகிரிந்து கொண்டதற்கு மிக்க நன்றி

Hega
07-02-2012, 08:42 PM
நல்லதொரு திரி,

நிரம்ப புதிய விடயங்களை அறிந்திட முடிகிறது.

தொடருங்கள் கீதம் அவர்களே..

செல்வா
10-02-2012, 03:04 AM
நேற்றைய சென்னை சம்பவத்திலிருந்து இந்தத் திரிக்கு இன்னும் வலு கூடுவதாக உணர்கிறேன்.

jayanth
10-02-2012, 05:58 AM
சென்னை சம்பவம்
நடந்த சென்னை சம்பவத்தில் பெற்றோர், ஆசிரியர் மற்றும் நண்பர்களின் பங்கும் உண்டு. இதனுடன் பள்ளி மற்றும் வீட்டு சூழலும் ஒரு முக்கிய காரணமாகும். பெற்றோருக்கு பிள்ளை படித்து நல்ல மதிப்பெண்கள் வாங்கவேண்டும். ஆசிரியருக்கு மாணவன் நல்ல மதிப்பெண்கள் வாங்கினால் நல்லபெயர். பள்ளிக்கும் நல்லபெயர். நண்பர்கள் மத்தியில் கதாநாயகன். ஆனால் மன அழுத்தம் மாணவனுக்கு மட்டுமே. எனவே அதிக அழுத்தம் கொடுக்காமல் மனதுக்கு இலகுவாக புரியும்படி சொல்லவேண்டும்.

ஆதவா
10-02-2012, 06:41 AM
மூன்றாம் பகுதியைப் படித்துவிட்டு.,. அரசுப்பள்ளியைப் பற்றி சொல்லுங்கள் என்று கேட்கலாமென்று இருந்தேன். ஆனால் உங்கள் குழந்தைகளே அரசுப்பள்ளியில்தான் படிக்கிறார்கள் என்பது கண்டு மகிழ்ச்சி, வியப்பு.....

ஆங்கிலம் மரியாதை தெரியாத மொழி என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்... ஆனால் உண்மையில் ஆங்கிலம் மரியாதை மிகுந்த மொழி என்பதை ஆங்கிலம் படிக்கும் போதுதான் தெரியும்... அந்தவகையில் தேங்யூ என்று சொன்ன அந்த டீச்சரும் சரி, அந்த மாணவரும் சரி... மரியாதை தெரிந்தவர்கள் தான் இல்லையா?

முதல் பகுதியை கொஞ்சம் சுருக்கமாகக் கொடுத்தாலும்.,. அடுத்தடுத்த பகுதி சிறப்பாகவும் விளக்கமாகவும் இருக்கின்றன..

தொடருங்கள்

கீதம்
11-02-2012, 05:11 AM
அக்கா அருமையான தொடரை ஆரம்பித்திருக்குரிர்கள். என்று நம் தவறை தயங்காமல் ஒப்புக்கொள்ளும் மனம் நம்மவர்களிடம் வருகிறதோ அன்று நம் நாடும் முன்னேறிவிடும்.

அதே போல் எல்லா இடங்களிலும் இளைஞ்ர்களுக்கு முன்னுரிமை அளித்து பெரிவர்கள் விலகி நிற்கும் மனப்பான்மை வரும் வரை நம் நிலை இது தான். அப்படியே அவர்கள் விலகி இளைஞ்ர்களுக்கு இடம் கொடுத்தாலும் அது அவர்களின் வாரிசாக தான் இருக்கிறது. :mini023::mini023::mini023:


உலகை அறிய நாங்களும் உங்களோடு வருகிறோம். தொடருங்கள்.

வாங்க மீரா. ஆஸ்திரேலியக் கல்வி, பள்ளிகள், பிள்ளைகள் வளர்ப்பு, வாழ்க்கைமுறை பற்றி ஏதோ எனக்குத் தெரிந்தவரை, வரும் பதிவுகளில் பகிரலாம் என்று இருக்கிறேன். தொடர்ந்துவருவதற்கு நன்றி மீரா.

கீதம்
11-02-2012, 05:14 AM
சிறந்த பதிவு என தலைப்பே கட்டியம் கூறுகிறது... சூழல்.. பதிவை முழுதும் படிக்க இயலவில்லை.. விரைந்து படிப்பேன்..

ஆஸ்திரேலியா வாழ் தமிழ்க் குடும்பங்களுக்கும்.. இனி செல்லவிருப்போருக்கும் மிக மிக பயனுள்ள பதிவு..

எங்கே ஆரென் அண்ணா.. சிங்கப்பூரின் பள்ளிகள் பற்றியும் ஒரு ஆய்வை எழுதினால் பயனுள்ளதாக இருக்குமல்லவா...!! :icon_ush:

நேரமிருக்கும்போது படித்துப்பாரும்மா. சிங்கப்பூர் பள்ளிகள் பற்றியும் பதிவுகள் இருந்தால் நன்றாகத்தான் இருக்கும். கொஞ்சநாளில் நீயே எழுதக்கூடும். பின்னூட்டத்துக்கு நன்றி பூ.

கீதம்
11-02-2012, 05:20 AM
மிகவும் அருமையான தகவல்கள். பகிரிந்து கொண்டதற்கு மிக்க நன்றி

பின்னூட்டத்துக்கு மிகவும் நன்றி இராஜேஷ்.

கீதம்
11-02-2012, 05:26 AM
நல்லதொரு திரி,

நிரம்ப புதிய விடயங்களை அறிந்திட முடிகிறது.

தொடருங்கள் கீதம் அவர்களே..

ஊக்கத்துக்கு நன்றி ஹேகா.

கீதம்
11-02-2012, 05:27 AM
நேற்றைய சென்னை சம்பவத்திலிருந்து இந்தத் திரிக்கு இன்னும் வலு கூடுவதாக உணர்கிறேன்.

அடுத்தப் பதிவில் அதைக் குறிப்பிட உள்ளேன். பின்னூட்டத்துக்கு நன்றி செல்வா.

கீதம்
11-02-2012, 05:29 AM
சென்னை சம்பவம்
நடந்த சென்னை சம்பவத்தில் பெற்றோர், ஆசிரியர் மற்றும் நண்பர்களின் பங்கும் உண்டு. இதனுடன் பள்ளி மற்றும் வீட்டு சூழலும் ஒரு முக்கிய காரணமாகும். பெற்றோருக்கு பிள்ளை படித்து நல்ல மதிப்பெண்கள் வாங்கவேண்டும். ஆசிரியருக்கு மாணவன் நல்ல மதிப்பெண்கள் வாங்கினால் நல்லபெயர். பள்ளிக்கும் நல்லபெயர். நண்பர்கள் மத்தியில் கதாநாயகன். ஆனால் மன அழுத்தம் மாணவனுக்கு மட்டுமே. எனவே அதிக அழுத்தம் கொடுக்காமல் மனதுக்கு இலகுவாக புரியும்படி சொல்லவேண்டும்.

அழகாக சொல்லியுள்ளீர்கள். மதிப்பெண்கள் தரும் அழுத்தமே இம்மாதிரி மனநிலைக்குக் காரணம். பின்னூட்டத்துக்கு நன்றி ஜெயந்த்.

கீதம்
11-02-2012, 05:31 AM
மூன்றாம் பகுதியைப் படித்துவிட்டு.,. அரசுப்பள்ளியைப் பற்றி சொல்லுங்கள் என்று கேட்கலாமென்று இருந்தேன். ஆனால் உங்கள் குழந்தைகளே அரசுப்பள்ளியில்தான் படிக்கிறார்கள் என்பது கண்டு மகிழ்ச்சி, வியப்பு.....

ஆங்கிலம் மரியாதை தெரியாத மொழி என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்... ஆனால் உண்மையில் ஆங்கிலம் மரியாதை மிகுந்த மொழி என்பதை ஆங்கிலம் படிக்கும் போதுதான் தெரியும்... அந்தவகையில் தேங்யூ என்று சொன்ன அந்த டீச்சரும் சரி, அந்த மாணவரும் சரி... மரியாதை தெரிந்தவர்கள் தான் இல்லையா?

முதல் பகுதியை கொஞ்சம் சுருக்கமாகக் கொடுத்தாலும்.,. அடுத்தடுத்த பகுதி சிறப்பாகவும் விளக்கமாகவும் இருக்கின்றன..

தொடருங்கள்

ஊக்கமளிக்கும் பின்னூட்டத்துக்கும் கருத்துக்கும் நன்றி ஆதவா.

கீதம்
11-02-2012, 05:33 AM
ஆஸ்திரேலியப் பள்ளிகள் - சிறு அறிமுகம் 5

பள்ளிகள் வாழும் கலையைக் கற்றுக்கொடுக்காவிடினும் சாகும் எண்ணத்தைத் தூண்டக்கூடாது என்று சென்ற பதிவில் சொல்லியிருந்தேன். கொலை செய்யவும் தூண்டக்கூடாது என்றும் சேர்த்துச் சொல்லும் நிலைக்கு இன்று தள்ளப்பட்டுள்ளேன்.

சென்னையில் பிரபல பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு மாணவன் ஒருவன், வகுப்பறையிலேயே ஆசிரியையைக் கத்தியால் குத்திக் கொன்ற நிகழ்வை ஊடகங்கள் வழி அறிந்தது முதல் மனத்தை அழுத்தும் பாரத்தை எப்படி இறக்கிவைப்பதென்றே தெரியவில்லை.

நிகழ்வு தரும் வேதனை ஒருபுறம் என்றால் அந்நிகழ்வுக்கான காரணங்களாக முன்வைக்கப்படும் பட்டியல்…. பெரும் வேதனை. முக்கியமாய் பெற்றோர் வளர்ப்பு சரியில்லை, தந்தையரின் பணிவெறி, தாயாரின் சின்னத்திரை ஈர்ப்பு, ஒழுங்கின்மையும் ஒழுக்கமின்மையுமே கதாநாயகத்தனமாகச் சித்தரிக்கும் பெரிய திரைகளின் பாதிப்பு, பள்ளிகளின் அச்சுறுத்தல், பாலியல் வக்கிரத் திரைப்படங்கள், தாராளமயமாக்கலால் எழுந்த சமூக மயக்கம் , டாஸ்மார்க் என நீளும் பட்டியலில் முக்கியமான ஒன்றை அனைவருமே தவறவிடுகின்றனர். மதிப்பெண் மட்டுமே ஒருவனை உருப்படவைக்கும் என்னும் மாயை. அதைக் கட்டவிழ்த்துவிட்டுவிட்டு, கத்திக்குத்து வரை ஒரு பிஞ்சின் மனத்தில் நஞ்சை வேரூன்றச் செய்துவிட்டு இப்போது குய்யோ முறையோவென்று கூக்குரலிடுவது என்ன நியாயம்? அதற்காக அவன் செய்தது நியாயம் என்று வாதிடவில்லை. அநியாயத்துக்கான மூலகாரணம் பற்றி மட்டுமே இங்கு பேசுகிறேன்.

ஆசிரியர் அவன் பெற்ற குறைந்த மதிப்பெண்ணை மற்றவர் முன்னிலையில் சுட்டிக்காட்டி மனம் புண்படுத்தாதிருந்தாலோ, பெற்றவர் அம்மதிப்பெண்ணை ஒரு பொருட்டாக எண்ணாது மற்றக் குணங்களைக் கொண்டாடியிருந்தாலோ, பள்ளி நிர்வாகம் தேர்ச்சி விகிதத்தில் காட்டிய அக்கறையை மாணவர் நலனில் காட்டியிருந்தாலோ இப்படி ஒரு சம்பவம், அதுவும் நம் நாட்டில் நிகழ்ந்திருக்க வாய்ப்பே இருந்திருக்காது. இப்படி ஆசிரியர், பெற்றோர், பள்ளி என்று ஒவ்வொருவராய்க் குறை சொல்வதற்கு பதில் மொத்தமாய் நம் கல்விமுறையே காரணம் என்று சொல்வதில் தவறொன்றும் இல்லை.

அமெரிக்காவில், ஐரோப்பாவில், ஆஸ்திரேலியாவில் இப்படி மாணவர்கள் துப்பாக்கியும் கையுமாய் உள்ளே நுழைந்து உடன்படிக்கும் மாணவர்களை, ஆசிரியர்களை, மேலும் கண்ணில் கண்டவர்களையெல்லாம் சுட்டுத்தள்ளிவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்களையெல்லாம் நீ கேட்டதில்லையா? பார்த்ததில்லையா? என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. அவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் என்பதையும், படிக்கக் கட்டாயப்படுத்தப்பட்டவர்கள் இல்லையென்பதையும், படிப்பல்லாத மற்றக் காரணிகளால் மனநலம் பாதிப்படைந்து அதனால் அத்தகைய கொடூரச் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

இதை எழுதிக்கொண்டிருக்கும் வேளையில் இன்னுமொரு கொடிய சம்பவத்தைப் பற்றிய செய்தி என் காதில் விழுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த 14 வயது மாணவன் ஒருவன் தன் சக மாணவர்கள் முன்னிலையில் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறான். இந்தக் கோரச் செயலுக்குக் காரணம் மன அழுத்தம் என்றாலும் அதற்கு அவனது படிப்போ, மதிப்பெண்களோ காரணமாய் இருக்காது என்பதை உறுதியாய்ச் சொல்லமுடியும். குடும்ப வன்முறைகளும், தகாத உறவுகளின் பின்னணியும், மூத்த மாணவர்களால் இழைக்கப்படும் கேலிவதைகளும், அதற்கு அடுத்தக் கட்டமான துயரவதைகளும் காரணங்களாக இருக்க அதிக சாத்தியம் உள்ளது.

ஆஸ்திரேலியா போன்ற மேலைநாடுகளில் பிள்ளைகள் பதினெட்டு வயதில் தங்கள் பெற்றோரைப் பிரிந்து செல்வதற்கு மேற்குறிப்பிட்டக் காரணிகளும் ஒரு காரணம். அவற்றை விளக்குமுன் நம் நாட்டிலும் மேலை நாடுகளிலும் இருக்கும் வாழ்க்கைமுறைகளின் ஒப்பீடு அவசியமானது.

நம் நாட்டைப் பொறுத்தவரை, கூட்டுக்குடும்ப வாழ்க்கைமுறை சிதைந்துபோய்விட்டாலும் குடும்பக் கட்டமைப்பின் மேல் நமக்கு இருக்கும் நம்பிக்கையும் நன்மதிப்பும் இன்னும் முற்றிலுமாகக் குலைந்துபோய் விடவில்லை. குடும்பம், குழந்தைப்பேறு, வளர்ப்பு, படிப்பு, வேலை, திருமணம் என்று தாயும் தகப்பனும் அக்கறை செலுத்துவதோடு தங்கள் வாழ்வையே அதற்கு அர்ப்பணிக்கின்றனர்.

ஒரு நல்ல குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் உண்டாகும் கருத்துவேறுபாடுகள் யாவும் குழந்தைகளின் கண்மறைவாய் வைக்கப்படுகின்றன. மனமொத்துப் போகாநிலையிலும் குழந்தைகளுக்காக, குழந்தைகளின் நலனுக்காக சேர்ந்து வாழும் பல தம்பதியினரைப் பார்த்திருக்கிறோம். இந்த நிலை நம் காலங்களில் இருந்தது. இன்றும் பல குடும்பங்களில் தொடர்கிறது. ஆனால் இன்றைய இளம் தலைமுறையினரிடம் இது போன்ற அர்ப்பண உணர்வுகளைக் காண்பது அரிதாகத்தான் உள்ளது. மேலைநாட்டு மோகம், வளர்ந்துவரும் வசதிப்பெருக்கம், உலகமயமாக்கலின் தாக்கம், ஈகோ மனப்பான்மை என்ற பல காரணிகளைச் சொல்லலாம். அவற்றைப் பற்றி வேறொரு பதிவில் பார்ப்போம்.

இப்போது ஆஸ்திரேலியப் பெற்றோரைப் பார்ப்போம். ஆஸ்திரேலியர்கள் ஆஸ்திரேலியர்கள் என்று வரிக்கு வரி நான் குறிப்பிடுவது ஆஸ்திரேலியப் பூர்வீகக்குடிகளைக் குறிக்காது. அவர்களில் பெரும்பான்மையோர் இன்னும் தங்கள் சமூக, கலாச்சார கட்டமைப்புகளிலிருந்து விடுபடவில்லை. அவர்கள் இன்றும் கூடிவாழ்கின்றனர்.

நாற்பதாயிரம் வருடங்களுக்கும் மேலாக இம்மண்ணில் வாழ்ந்துகொண்டிருக்கும் அப்பூர்வீகக்குடிகளிடமிருந்து சுமார் நானூறு வருடங்களுக்கு முன் இம்மண்ணை ஆளும் உரிமையைக் கைக்கொண்ட ஐரோப்பியர்களின் வாரிசுகளைப் பற்றியே பேசுகிறேன்.

ஆஸ்திரேலியர்கள் பொதுவாகவே நிரந்தரக் குடும்பக் கட்டமைப்பில் நம்பிக்கை அற்றவர்கள். பிறருக்காக தங்கள் விருப்பு வெறுப்புகளை விட்டுத்தர விரும்பாதவர்கள்.. ஒரு குழந்தையைப் பள்ளியில் சேர்த்துக்கொள்ளும் பொருட்டு, விண்ணப்பப் படிவங்களில் வேண்டப்பட்டிருக்கும் தகவல்களே அவற்றுக்கு அத்தாட்சி.

விண்ணப்பப் படிவங்களில் தாய். தந்தை, மாற்றுத்தாய், மாற்றுத்தந்தை, இவர்கள் அனைவரின் பெயர், முகவரி, எந்தெந்த நாட்களில் எந்தெந்த பெற்றோரின் பொறுப்பில் அவன் இருக்கவேண்டும், பிள்ளைக்கு ஏதேனும் விபத்து எனில் முதலுரிமை யாருக்குத் தரப்படவேண்டும், இரண்டாவதாய் யாரைத் தொடர்பு கொள்ளவேண்டும் என்ற விவரங்களைக் கேள்விகளாய்த் தாங்கியிருக்கும் அந்த விண்ணப்பத்தைப் பார்த்தாலே தலைசுற்றும்.

சமீபத்தில் ஓரினத் திருமணங்களை சட்டப்படி செல்லுபடியாக்கச் சொல்லிப் பாராளுமன்றத்தில் சூடான விவாதங்கள் நடந்துகொண்டிருக்கையில் விண்ணப்பப் படிவங்களில் மேலும் திருத்தங்கள். தாய், தந்தை என்பதற்குப் பதில் பெற்றோர்(1) மற்றும் பெற்றோர்(2) என்றும் அவர்களுடைய பாலினம் கேட்டும் கேள்விகள் உள்ளன. அதேபோல் வீடு வாடகைக்கு என்றால் அந்த விண்ணப்பத்தில் கணவன், மனைவி என்று இருக்காது. விண்ணப்பதாரர் மற்றும் அவருடன் சேர்ந்து வாழ்பவர் என்று குறிப்பிட்டு, வாடகையில் இருவரின் தனித்தப் பங்கு பற்றியும் கேட்டிருக்கும். அந்த அளவுக்கு இங்கு குடும்பக் கட்டமைப்பின் அஸ்திவாரம் பலவீனமாக உள்ளது. அவ்வளவு ஏன்? இன்றைய ஆஸ்திரேலியப் பிரதமர் மிஸ். ஜூலியா கில்லார்டும் திருமணம் செய்துகொள்ளாமல் தன் துணைவருடன் சேர்ந்து வாழ்வது திருமண பந்தத்தின் மீதான அவர்களது எதிர்மறை ஈடுபாட்டுக்கு இன்னொரு சான்று.

மற்றொரு அதிர்ச்சிகரமானத் தகவல், ஆஸ்திரேலியாவில் பதின்மவயதுத் தாய்மார்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருப்பதாக ஆஸ்திரேலியக் கல்வி மற்றும் குழந்தைகள் நலத்துறையின் புள்ளியியல் தகவலறிக்கை சொல்கிறது. ஆயிரத்துக்கு பதினெட்டு கர்ப்பங்கள், 15 முதல் 19 வரையிலான பதின்ம வயதுக் கர்ப்பங்கள் என்னும் விகிதாச்சாரத்துடன் உலகவரிசையில் பதினொன்றாவது இடத்தில் ஆஸ்திரேலியா உள்ளது. ஆயிரத்துக்கு 52 என்ற கணக்கில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. ஆயிரத்துக்கு 27 என்று இங்கிலாந்து இரண்டாமிடத்தில் உள்ளது. ஆனால் பெற்றெடுக்கப்படும் குழந்தைகளைக் கொண்டே இப்புள்ளிவிவரம் கணக்கில் கொள்ளப்படுகிறது என்றும் கலைக்கப்படும் கர்ப்பங்களையும் கணக்கெடுத்தால் ஆஸ்திரேலியாவில் பதினெட்டு என்பது முப்பத்திரண்டாக உயரும் என்றும் அவ்வாய்வறிக்கை மேலும் அதிர்ச்சித்தகவல் அளிக்கிறது.

ஆஸ்திரேலியாவில் ஒற்றைப் பெற்றோருக்கு அரசு தரும் அதிகபட்ச சலுகைகளும் இப்படி சிறு வயதில் குழந்தைகளைப் பெற்று வளர்க்க ஊக்கமூட்டுவதாகவும் அவ்வறிக்கை கூறுகிறது. தாங்களே இன்னும் வாழ்க்கையில் முதிர்ச்சி அடையா நிலையில் தாங்கள் பெற்றெடுக்கும் குழந்தைகளை அவர்களால் எப்படி சரியான பாதையில் வளர்க்க இயலும்? சமூக வன்முறைகளுக்கு இதுபோன்ற சூழலில் வளர்க்கப்படும் குழந்தைகளும் ஒரு காரணமாக இருப்பதில் வியப்பென்ன?

படிக்கும் காலத்தில் பெண்பிள்ளைகளின் பாதை திசைமாறிப்போவதைத் தவிர்க்க, குறைந்தபட்சம் குழந்தைப்பேறுகளையும் கர்ப்பங்களையும் தடுக்க பள்ளி நிர்வாகம் பாலியல் கல்வியைப் பள்ளிகளில் கற்றுத்தருகிறது. பாலியல் பிரச்சனைகள், பரவும் நோய்கள், பாதுகாப்பான உடலுறவு போன்றவற்றில் இருபாலாருக்கும் அறிவுரையும் ஆலோசனையும் தரப்படுகிறது.

பத்தாம் வகுப்பு மாணவிகளுக்குப் பிள்ளை வளர்ப்பு பற்றியப் பாடம் ஒன்று உள்ளது. அதில் கரு உருவாவதிலிருந்து தாய்க்கு உண்டாகும் மாற்றங்கள், பிரச்சனைகள் பற்றிக் கற்பிப்பதுடன், வகுப்புக்கு வெவ்வேறு கர்ப்ப காலக்கட்டத்தில் உள்ள இளம் தாய்மார்கள் சிலரை அழைத்துவந்து நேரடியாக அவர்களுடைய உடலியல், மனோவியல் மாற்றங்களையும், அதனால் அவர்கள் அனுபவிக்கும் பிரச்சனைகளையும் பற்றி மாணவிகள் தாங்களாகவே கேட்டுத் தெரிந்துகொள்ள வழிவகுக்கிறது. அதிலேயே பல மாணவிகளுக்கு தாய்மை என்பது அத்தனை எளிதல்ல என்பது புரிந்துவிடுகிறது. அதோடு விடவில்லை. செயல்முறைப் பயிற்சியும் கொடுக்கப்படுகிறது.

ஒரு குழந்தைப் பொம்மை. பொம்மை என்று நினைத்தால் பொம்மைதான். ஆனால் பிறந்த குழந்தைக்குண்டான அத்தனைச் செயல்களையும் செய்யக்கூடிய அளவில் கணினிக் கட்டுப்பாட்டுடன் ஒரு உயிருள்ள குழந்தை போலவே இயங்குகிறது. பாடத்திட்டத்தின்படி அதை ஒவ்வொரு மாணவியும் இரண்டுநாட்கள், பெரும்பாலும் வார இறுதி நாட்களில் வீட்டுக்குக் கொண்டுசென்று வளர்க்கவேண்டும். அந்த இரண்டு நாளும் அம்மாணவியே அதன் தாய். அவள் தன் உண்மைக் குழந்தை போலவே அதைக் கவனித்துக்கொள்ளவேண்டும். சாதாரண விஷயம்தானே என்கிறீர்களா? அதுதான் இல்லை… இந்தக் குழந்தை வளர்ப்பில் குடும்ப உறுப்பினர் எவரும் அவளுக்கு உதவக்கூடாது என்பது பள்ளியின் கட்டாய அறிவிப்பு. எனவே தனியொருத்தியாய் இந்தப் பயிற்சியை மாணவி மேற்கொள்ளவேண்டும். எங்காவது வெளியிடங்களுக்குச் செல்வதானாலும் குழந்தையைக் கையில் கொண்டுசெல்லவேண்டும்.

குழந்தையைப் போலவே அதுவும் அடிக்கடி அழும். அழுவதற்கான சரியான காரணத்தை தாய் அறிந்திடவேண்டும். பசி என்றால் அதற்கு கொடுக்கப்பட்டுள்ள பாட்டிலில் இருக்கும் நீரைப் புகட்டவேண்டும். அதுவும் எப்படி? சரியான முறையில் கையில் ஏந்தி, தலையைச் சற்று உயர்த்தி, மெல்ல மெல்ல, மூச்சு முட்டாமல், புரையேறிக்கொண்டுவிடாமல், வெகு சிரத்தையாகக் கொடுக்கவேண்டும். அது அழுவது பசிக்காக இல்லையெனில் குடிக்காமல் முரண்டு செய்தழும். அடுத்தது அது சிறுநீர் கழித்திருக்கிறதா? அந்த ஈரத்தில் குளிர்ந்து அழுகிறதா என்று அதன் நாப்கினை அகற்றி சோதிக்கவேண்டும். ஈரமாக இருந்தால் உடனே அகற்றிப் புதிய நாப்கினை அணிவிக்க வேண்டும். அதுவுமில்லை. ஆனாலும் அழுகிறது என்றால் வேறென்ன? தூக்கமாக இருக்கலாம். குழந்தையைக் கையிலெடுத்து மார்போடு இதமாக அணைத்து மெதுவாய்த் தாலாட்டியும், தட்டிக்கொடுத்தும் தூங்கவைக்கவேண்டும். இரவில் அடிக்கடி விழித்து அழும். அழுகையின் காரணங்களை மனத்தில் ஓடவிட்டு அதற்கேற்றபடி செயலில் இறங்கவேண்டும். பசியாற்றிய அரைமணி நேரத்தில் அழுதால் அது நிச்சயம் பசிக்கான அழுகை இல்லை என்பதைப் புரிந்துகொண்டிருக்கவேண்டும்.

அழுத்திப் பிடித்தால் மூச்சுத் திணறி, குழந்தை இறந்துவிடும். சரியான நேரத்தில் பசி போக்காவிடில் கத்தி விறைத்துவிடும். இரண்டு நிமிடம் தொடர்ச்சியாக அழவிட்டால் அதன்பின் செயலற்றுப்போய்விடும். என்ன செய்தும் பயனில்லை. நாம் குழந்தையைக் கவனித்துக்கொள்ளும் முறைகள் அந்தக் குழந்தை பொம்மைக்குள் இருக்கும் கட்டுப்பாட்டகத்தில் பதிவு செய்யப்பட்டுக்கொண்டிருக்கும். கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிந்தபின் ஆசிரியர் அதைக் கவனித்து அம்மாணவியின் குழந்தை வளர்ப்பு முறைகளைப் பற்றிய ரிப்போர்ட் தருவார். தாறுமாறாக இருந்தால், நீ தாயாயிருக்கத் தகுதி அற்றவள் என்பது ரிப்போர்ட்டில் பதிவு செய்யப்பட்டுவிடும்.

அவர் என்ன சொல்வது? மாணவியே வெறுத்துப்போயிருப்பாள். ஒரு குழந்தை எப்படியெல்லாம் படுத்துகிறது? தூங்கவிடாமல், தொலைக்காட்சி பார்க்கவிடாமல், குளிக்கவிடாமல், வெளியிடங்களுக்கு செல்லவிடாமல் எப்போதும் அழுது, தன்னையே கவனித்துக்கொள்ளச் சொல்கிறதே… ஒன்றிரண்டு நாட்களே இப்படியெனில்…. மாதக்கணக்கில், வருடக்கணக்கில் ஒரு குழந்தையை வளர்ப்பது எத்தனை சிரமம்? எனவே இப்போதைக்கு குழந்தையே பெற்றுக்கொள்ளக்கூடாது என்ற முடிவுக்கு வந்திருப்பாள். வந்திருப்பாள் என்ன? வந்துவிட்டார்கள் என் மகளின் சிநேகிதிகள். என் மகள் அந்தப் பாடத்தைத் தேர்ந்தெடுக்காததால் அந்த அனுபவம் அவளுக்கு வாய்க்கவில்லை.

இது பதின்மவயதுப் பிள்ளைப்பேறுகளைத் தடுக்க பள்ளிகள் கையாளும் ஒரு சிறு முயற்சியே. இதுபோன்ற நிலை நம் நாட்டில் இன்னும் உருவாகவில்லையென்பதை நினைத்து நாம் நிம்மதிப் பெருமூச்சு விடலாம்.

இன்னும் சொல்வேன்….

ஆதவா
11-02-2012, 02:02 PM
குழந்தை பொம்மை சில ஆங்கில படங்களில் பார்த்திருக்கிறேன், அது படத்திற்காக என்று நினைத்தேன், ஆனால் உண்மையாகவே...

நமக்கு அப்படியொரு பிரச்சனை எழவில்லைதான்... ஆனால் எழும்..... ஒருநாள்..
சிறப்பாகச் செல்லுகிறஹு கட்டுரை

செல்வா
11-02-2012, 11:32 PM
எனக்கென்னவோ அந்த குழந்தை வளர்ப்புப் பயிற்சி நல்லதென்றே தோன்றுகிறது. அதை மட்டும் நமது ஊரிலும் நடைமுறைப் படுத்தலாம். கல்லூரியளவில்.

மதி
12-02-2012, 01:10 AM
உங்கள் எண்ணங்கள் கோர்வையான தொடராய்.. படிக்க படிக்க ஆச்சரியமும் ஏக்கமும்.. இந்தியாவில் எப்போது இம்மாதிரி பாடத்திட்டங்கள் வருமென்று..

தொடர்ந்து சொல்லுங்கள்.!

கீதம்
16-02-2012, 12:23 AM
குழந்தை பொம்மை சில ஆங்கில படங்களில் பார்த்திருக்கிறேன், அது படத்திற்காக என்று நினைத்தேன், ஆனால் உண்மையாகவே...

நமக்கு அப்படியொரு பிரச்சனை எழவில்லைதான்... ஆனால் எழும்..... ஒருநாள்..
சிறப்பாகச் செல்லுகிறஹு கட்டுரை

படங்களில் பார்த்திருக்கிறீர்களா? முழுக்க உண்மைதான்.

பின்னூட்டத்துக்கு நன்றி ஆதவா.


எனக்கென்னவோ அந்த குழந்தை வளர்ப்புப் பயிற்சி நல்லதென்றே தோன்றுகிறது. அதை மட்டும் நமது ஊரிலும் நடைமுறைப் படுத்தலாம். கல்லூரியளவில்.

நம் நாட்டுக்கு அதெல்லாம் தேவைப்படாது என்றே நினைக்கிறேன். இரத்தத்திலேயே அந்தப் பொறுப்பும் அக்கறையும் ஊறியிருக்கும். தேவைப்பட்டால் பெரியவர்களும் உதவுவார்கள் இல்லையா?

பின்னூட்டத்துக்கு நன்றி செல்வா.


உங்கள் எண்ணங்கள் கோர்வையான தொடராய்.. படிக்க படிக்க ஆச்சரியமும் ஏக்கமும்.. இந்தியாவில் எப்போது இம்மாதிரி பாடத்திட்டங்கள் வருமென்று..

தொடர்ந்து சொல்லுங்கள்.!

மனப்பாடம் செய்து ஒப்பித்தாலே அவன் அறிவாளி என்னும் எண்ணம் மாறவேண்டும். புரிந்து படிக்கப் பிள்ளைகளுக்குக் கற்றுத்தரவேண்டும்.

பின்னூட்டத்துக்கு நன்றி மதி.

கீதம்
18-02-2012, 01:47 AM
http://www.tamilmantram.com/vb/photogal/images/5419/large/1_naplan.JPG


ஆரம்பப்பள்ளிப் பிள்ளைகளுக்குத் தேர்வு இல்லையென்றாலும் அவர்களின் கல்வித்தரத்தைப் பரிசோதித்து, அது குறைந்திருக்கும்பட்சத்தில் மேம்படுத்துவதற்கான முயற்சியை ஆஸ்திரேலியக் கல்வி நிர்வாகம் கைவிட்டுவிடவில்லை. ஒவ்வொரு ஆண்டும், மூன்றாம், ஐந்தாம், ஏழாம், ஒன்பதாம் வகுப்புப் பிள்ளைகளுக்கு NAPLAN (National Assessment Program — Literacy and Numeracy) என்னும் தேர்வுகள் The Australian Curriculum, Assessment and Reporting Authority (ACARA) மூலம் நடத்தப்படுகின்றன. இந்நிறுவனமானது கல்வி அமைச்சர்களின் வழிகாட்டுதல் படியும், தேர்ந்த கல்வியாளர்களின் ஆலோசனை மற்றும் பங்களிப்புடனும் வெற்றிகரமாக இயங்கிவருகிறது.

இந்த நாப்ளான் தேர்வுகள் மூலம் மாணவர்களின் எழுத்தறிவும் எண்ணறிவும் சோதிக்கப்படுகிறது. ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் நிலைபெறத் தேவையான அறிவல்லவா இவை!

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்

என்று ஔவையாரும்,

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு

என்று வள்ளுவரும் வாய்மொழிந்தவை இங்கு செயல்படுத்தப்படுகின்றன.

அந்தந்த வயதின் கல்வியறிவுக்கேற்றபடி பொதுக் கேள்வித்தாள்கள் தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் ஒரே நாளில் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. பாடங்கள் படித்து மனப்பாடம் செய்யும் வேலையில்லை. மொழியறிவும், அடிப்படைக் கணித அறிவும் இருந்தால் போதும்.

மொழியறிவுத் தேர்வில் வாசிப்புத் திறன், வாசித்ததைப் புரிந்துகொள்ளும் தன்மை, எண்ணத்தை எழுத்தாக்கும் திறமை, எழுத்துப்பிழை, இலக்கணப்பிழையின்றி எழுதும் வல்லமை, நிறுத்தற்குறியீடுகளைப் பொருத்தமான இடத்தில் பயன்படுத்தும் அறிவு போன்றவையும் எண்ணறிவுத் தேர்வில் அடிப்படைக் கணக்குகள் பற்றிய அறிவும், புதிர்களை விரைவில் புரிந்துகொள்ளும் திறனும் சோதிக்கப்படுகின்றன. எழுத்துத் தேர்வைத்தவிர வேறு எதற்கும் எழுதவேண்டிய தேவையில்லை. ஒவ்வொரு வினாவுக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் நான்கு விடைகளில் பொருத்தமானதைத் தேர்ந்தெடுத்தால் போதுமானது. (நம் TNPSC தேர்வுகளைப்போல்)

இத்தேர்வுகளுக்காக மாணவர்களைத் தயார் செய்யவேண்டாம் என்று கல்வித்துறை பெற்றோருக்கு அறிவுறுத்துகிறது. இது வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் தேர்வு அல்லவென்றும், மாணவர்களின் அறிவு வளர்ச்சியைக் கணக்கிடும் அளவுகோலே என்றும் கூறி மேலும் பெற்றோரும் ஆசிரயர்களும் செய்யவேண்டியவை எனக் குறிப்பிடுவதாவது; பிள்ளைகளுக்கு, தேர்வு பற்றியப் பதட்டத்தை உருவாக்காமல் நல்ல மன அமைதியை உண்டாக்குவதும், தேர்வினை எப்படிச் செய்யவேண்டும் என்னும் வழிமுறையைக் கற்றுத்தருவதுமே!

தேர்வுகளை மாணவர்கள் அவரவர் பள்ளிகளிலேயே எழுதுவார்கள். இதனால் தேவையற்றப் பயம் குறைகிறது. பழகிய வகுப்பு, பழகிய மாணவர்கள், பழகிய ஆசிரியர் என்னும்போது ஏதோ வகுப்புத் தேர்வு எழுதுவது போலவே உணர்வார்கள். ஆனால் தேர்வுக்கான விதிமுறைகளைப் பள்ளிகள் கட்டாயம் கடைப்பிடிக்கவேண்டியது அவசியம்.

தேர்வுகள் பொதுவாக மே மாதத்தில் நடைபெறும். தேர்வுகள் அனைத்தும் (language convention, reading, writing, and numeracy) ஒரே நாளில் நடத்தப்படாமல் ஒவ்வொன்றும் அடுத்தடுத்த நாளில் நடத்தப்படுவதோடு தேர்வுநேரமும் 40 முதல் 45 நிமிடங்கள் வரை மட்டுமே என்பது சிறப்பு.

தேர்வுத்தாள்கள் அனைத்தும் பலத்தப் பாதுகாப்புடன் அகாரா நிறுவனத்துக்கு அனுப்பப்படும். தேர்வு மதிப்பீடுகள் யாவும் படத்தில் காட்டப்பட்டுள்ளபடி ஒரே அளவுகோலின் பத்து பிரிவுகளில் கணக்கிடப்படுகின்றன. ஆண்டு இறுதியில் அந்தந்தப் பள்ளிகளுக்கு அனுப்பப்படும் மதிப்பீட்டு அறிக்கையானது பிறர் பார்வைக்கு மறைவாக கனத்த உறையில் இடப்பட்டு ஒட்டி அனுப்பப்படும். தேவைப்பட்டால் பள்ளி நிர்வாகம் மாணவரின் எதிர்கால நலன் கருதி, பிரித்துப் பார்க்க அனுமதி உண்டு. மாணவர்களின் திறன் ஆசிரயர்களுக்குத் தெரியுமாதலால், பெரும்பாலும் உறைகள் பிரிக்கப்படாமலேயே வீட்டுக்குத் தபாலில் அனுப்பப்படுகின்றன.

நாட்டில் பொதுவாக கணக்கிடப்பட்டிருக்கும் சராசரிக்கல்வி நிலையோடு நம் பிள்ளைகளின் கல்வியறிவை ஒப்பிட்டு அறிவதன் மூலம், பின்தங்கிய பாடத்தில் மேலும் சிரத்தை எடுக்கலாம் அல்லது நம்பிள்ளையின் அறிவுத்தகுதி அறிந்து அதற்கேற்றபடி அவனை அனுசரித்துப் போகலாம்.

ஆஸ்திரேலியக் கல்விமுறையிலும் பெரும் மாற்றம் வரும் வாய்ப்பு உள்ளது என்பதை சமீபத்திய நாளிதழ் செய்தியொன்று கோடிகாட்டுகிறது. ஆஸ்திரேலிய மாணவர்களை ஆசிய மாணவர்களோடு ஒப்பிடுகையில் மூன்றுவருடங்கள் கல்விநிலையில் பின்தங்கியிருப்பதாக க்ராட்டன் கல்வி நிறுவனம் ஒன்று தன் ஆராய்ச்சியின் முடிவில் வருத்தம் தெரிவித்துள்ளது. ஆசியர்கள் என்பது ஆஸ்திரேலியர்களின் பார்வையில் எப்போதுமே கிழக்காசிய நாட்டு மக்களையேக் குறிக்கும். மற்ற ஆசிய நாட்டு மக்களை, சீனர், பாகிஸ்தானியர், இந்தியர் என்று தனித்துக் குறிப்பிடுவர். அதன்படி ஆஸ்திரேலிய மாணவர்களின் கல்வித்தரம் ஷாங்காய் மாணவர்களின் கல்வித்தரத்தைக் காட்டிலும் மூன்றுவருடங்கள் பின்தங்கியிருப்பதாகவும், ஹாங்காங், சிங்கப்பூர் மற்றும் தென்கொரிய மாணவர்களைவிடவும் ஒன்றிரண்டு வருடங்கள் பிந்திய நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நாடுகளின் வெற்றிகரமானத் தேர்ச்சிக்குப் பின்னால் இருக்கும் கல்விமுறைக்கான அடிப்படைத் தத்துவங்கள் ஒத்திருப்பது பெரும் வியப்பளிக்கும் செய்தி.

சிங்கப்பூரில் பயிற்சிநிலை ஆசிரியர்கள் யாவரும் சம்பளம் வாங்கினாலும் பொதுநல ஊழியர்களாகவே கருதப்பட்டு சமுதாயத்தில் உயர்மட்ட அந்தஸ்தைப்பெறுகின்றனர். அவர்கள் தேர்ந்த கல்வியாளர்களால் வழிநடத்தப்படுவதுடன், கற்பிக்கும் முறைகளில் திறனாய்வு செய்யும் ஆராய்ச்சியாளர்கள் போலவே கருதப்படுகின்றனர் என்றும் அத்தகவற்குறிப்பு மேலும் தெரிவிக்கிறது. ( பூமகள் கவனிக்கவும்)

என் மகன் ஏழாம் வகுப்பு என்பதால் இந்த வருடம் நாப்ளான் தேர்வு உண்டு. தினமும் அதற்கானப் பயிற்சிகளை வகுப்புகளிலேயே பள்ளிகள் கற்றுத்தருகின்றன. பயமின்றித் தேர்வெழுதவும், தேர்வுத்தாளைப் படித்துப் புரிந்துகொள்ளவும், குறிப்பிட்ட நேரத்துக்குள் தேர்வை முடிக்கவும் இப்பயிற்சி வகுப்புகள் உதவுகின்றன.

என் மகன் சராசரி மாணவன் என்றாலும் எனக்கு அதைப்பற்றிய கவலையில்லை. அவனிடம் படிப்புத் தவிர ஓவியங்கள் வரைதல், கற்பனாசக்தி, புதியவற்றை உருவாக்கும் ஆர்வம், பூச்சிகள் பற்றிய நுட்ப அறிவு, கணினியில் வரைதிறன் போன்ற திறமைகளுடன், பாசம், ஒழுக்கம், பெரியோரிடத்தில் மரியாதை, அடுத்தவரை மதிக்கும் குணம், நண்பர்களைக் கொண்டாடும் குணம் போன்ற நல்ல குணங்களும் இருப்பதால் படிப்பில் பின்தங்கியிருப்பது என்னைப் பெரிதும் பாதிக்கவில்லை. இந்தியாவில் இருந்திருந்தால் என்னால் இப்படி நிதானமாக யோசித்திருக்க முடியுமா என்று தெரியவில்லை. நான் அழுத்தம் கொடுக்காவிட்டாலும் பள்ளிகள் அழுத்தம் கொடுத்திருக்கும் என்பது உண்மை.

இந்தியாவில் தேர்வு சமயங்களில் பள்ளிகளில் அடிக்கடி பார்க்கும் நிகழ்வு ஒன்று உண்டு. அது மாதத்தேர்வாயிருந்தாலும் சரி, காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளாக இருந்தாலும் சரி, வகுப்பு விட்டுப் பிள்ளைகள் (அது ஒன்றாம் இரண்டாம் வகுப்புக்குள்தான் இருக்கும்) வெளியில் வந்தவுடனேயே, அவர்களை அழைத்துச் செல்ல வந்திருக்கும் பெற்றோர், பெரும்பாலும் தாய்மார்கள் அவர்களது கையிலிருந்து கேள்வித்தாளைப் பிடுங்கி, “இதுக்கென்ன எழுதினே? அதுக்கென்ன எழுதினே?” என்று கேள்விகளால் துளைப்பதும், அதற்கு அந்தக் குழந்தைகள் திருதிருவென விழிப்பதும் மீறி, ஏதாவது பதில் சொன்னால், “சனியனே… நேத்து விடிய விடிய சொல்லிக்குடுத்தேனே… இப்படி மாத்தி எழுதிவச்சிருக்கியே, முண்டம்… முண்டம்” என்று ஆவேசத்துடன் அதன் தலையில் குட்டுவதும், அந்தக் குழந்தையை வேறு எதுவும் பேசவிடாமல் தேர்வைப்பற்றியே கேட்டுக் கேட்டு முகம் வாடவைப்பதுமாய் எத்தனை எத்தனை நிகழ்வுகள்!

நானும் இதுபோல் ஒருகாலத்தில் செய்திருக்கிறேன். வீட்டுக்குள் குழந்தைகள் நுழைந்ததும் எப்போதும் பள்ளியில் நடந்தவற்றைப் பற்றி ஆர்வமாகச் சொல்வார்கள். ஆனால் தேர்வு நேரங்களில் அவர்களைப் பேசவேவிடாமல் முடிந்துபோன தேர்வுத்தாளைக் கையில் வைத்துக்கொண்டு அது பற்றியே பேசி பிள்ளைகள் மனத்தை நோகடித்தவள் என்பதை நினைக்கும்போது எனக்கு மிகவும் வெட்கமாக உள்ளது. என் மாமனாரின் அறிவுறுத்தலின் பேரில் ஆரம்பத்திலேயே அப்பழக்கத்தைக் கைவிட்டேன். தக்க நேரத்தில் தக்க அறிவுரை வழங்கிய அவர் ஒரு ஓய்வுபெற்றத் தலைமையாசிரியர் என்பது வியப்பல்லவா?

ஆஸ்திரேலியாவில் இருக்கும் பல இந்தியப் பெற்றோரின் முகத்திலும் இந்த நாப்ளான் தேர்வுச் சமயம் பதட்டத்தைக் காணமுடியும். இதற்கென்று சிறப்புப் பயிற்சி வகுப்புகளுக்கு பணம் கட்டி அனுப்பும் பெற்றோரையும் பார்த்திருக்கிறேன். எதிலும் முதலாவதாக வரவேண்டும் என்னும் எண்ணம், நம் இந்தியரின் இரத்தத்தில் ஊறியதா என்பது தெரியவில்லை. என் மகளே இதற்கு உதாரணம். அதைப் பற்றி அடுத்தப்பதிவில் சொல்கிறேன்.

Hega
18-02-2012, 01:58 AM
என் மகன் சராசரி மாணவன் என்றாலும் எனக்கு அதைப்பற்றிய கவலையில்லை. அவனிடம் படிப்புத் தவிர ஓவியங்கள் வரைதல், கற்பனாசக்தி, புதியவற்றை உருவாக்கும் ஆர்வம், பூச்சிகள் பற்றிய நுட்ப அறிவு, கணினியில் வரைதிறன் போன்ற திறமைகளுடன், பாசம், ஒழுக்கம், பெரியோரிடத்தில் மரியாதை, அடுத்தவரை மதிக்கும் குணம், நண்பர்களைக் கொண்டாடும் குணம் போன்ற நல்ல குணங்களும் இருப்பதால் படிப்பில் பின்தங்கியிருப்பது என்னைப் பெரிதும் பாதிக்கவில்லை. இந்தியாவில் இருந்திருந்தால் என்னால் இப்படி நிதானமாக யோசித்திருக்க முடியுமா என்று தெரியவில்லை. நான் அழுத்தம் கொடுக்காவிட்டாலும் பள்ளிகள் அழுத்தம் கொடுத்திருக்கும் என்பது உண்மை.


ஆஹா கீதம் அக்கா இதே கருத்து தான் என்னதும்.

பாராட்டுக்கள் அக்கா..

Hega
18-02-2012, 02:01 AM
அவுஸ்ரேலிய பள்ளிகள் குறித்த பதிவுகள் கண்டதும் சுவிஸ் குறித்தும் பகிரலாமோ எனும் ஆர்வம் வருகிறது. ஆனால் இப்படி உங்களை போல் பொறுமையாய் புள்ளி விபரமெல்லாம் சேர்த்து தொகுத்து தட்டச்சிட்டு கொடுக்க முடியாதுக்கா.

அப்படி கொடுத்தால் அது பலருக்கு பயன் படும் என்பதும் நிச்சயமே..

முயற்சிக்கிறேன்..

ஆதவா
18-02-2012, 06:55 AM
என் மகன் சராசரி மாணவன் என்றாலும் எனக்கு அதைப்பற்றிய கவலையில்லை. அவனிடம் படிப்புத் தவிர ஓவியங்கள் வரைதல், கற்பனாசக்தி, புதியவற்றை உருவாக்கும் ஆர்வம், பூச்சிகள் பற்றிய நுட்ப அறிவு, கணினியில் வரைதிறன் போன்ற திறமைகளுடன், பாசம், ஒழுக்கம், பெரியோரிடத்தில் மரியாதை, அடுத்தவரை மதிக்கும் குணம், நண்பர்களைக் கொண்டாடும் குணம் போன்ற நல்ல குணங்களும் இருப்பதால் படிப்பில் பின்தங்கியிருப்பது என்னைப் பெரிதும் பாதிக்கவில்லை. இந்தியாவில் இருந்திருந்தால் என்னால் இப்படி நிதானமாக யோசித்திருக்க முடியுமா என்று தெரியவில்லை. நான் அழுத்தம் கொடுக்காவிட்டாலும் பள்ளிகள் அழுத்தம் கொடுத்திருக்கும் என்பது உண்மை.

இந்தியாவில் தேர்வு சமயங்களில் பள்ளிகளில் அடிக்கடி பார்க்கும் நிகழ்வு ஒன்று உண்டு. அது மாதத்தேர்வாயிருந்தாலும் சரி, காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளாக இருந்தாலும் சரி, வகுப்பு விட்டுப் பிள்ளைகள் (அது ஒன்றாம் இரண்டாம் வகுப்புக்குள்தான் இருக்கும்) வெளியில் வந்தவுடனேயே, அவர்களை அழைத்துச் செல்ல வந்திருக்கும் பெற்றோர், பெரும்பாலும் தாய்மார்கள் அவர்களது கையிலிருந்து கேள்வித்தாளைப் பிடுங்கி, “இதுக்கென்ன எழுதினே? அதுக்கென்ன எழுதினே?” என்று கேள்விகளால் துளைப்பதும், அதற்கு அந்தக் குழந்தைகள் திருதிருவென விழிப்பதும் மீறி, ஏதாவது பதில் சொன்னால், “சனியனே… நேத்து விடிய விடிய சொல்லிக்குடுத்தேனே… இப்படி மாத்தி எழுதிவச்சிருக்கியே, முண்டம்… முண்டம்” என்று ஆவேசத்துடன் அதன் தலையில் குட்டுவதும், அந்தக் குழந்தையை வேறு எதுவும் பேசவிடாமல் தேர்வைப்பற்றியே கேட்டுக் கேட்டு முகம் வாடவைப்பதுமாய் எத்தனை எத்தனை நிகழ்வுகள்!
[/FONT]

உங்கள் மகன் சராசரி மாணவன் என்றெல்லாம் சொல்லவே முடியாது. அதே ஏழாம் வகுப்பில் எனக்கு ஓவியம் வரையத் தெரியாது, கற்பனா சக்தி அவ்வளவாகக் கிடையாது, பூச்சிகளை நசுக்கத் தெரியும். கணிணி என்றால் என்னவென்றே தெரியாது, மற்றபடி பாசம், மரியாதை, ஒழுக்கம் எல்லாம் குடும்பத்தோடு பிறந்தது... என்றால்... நான் ஒரு மக்கு ஸ்டூடண்டாக இருந்திருக்கிறேன் பாருங்கள்.

கல்வி என்பது மூடிக்கிடக்கும் மூளையை திறக்க வைப்பது... அது பாடங்கள் மூலம் மட்டுமல்ல, வாழ்க்கை அனுபவத்தின் மூலமும் உண்டு. என்னைவிட குறைவாக “மார்க்” எடுத்த மக்கு மாணவர்கள் இன்று என்னைவிட மிக உயர்ந்த இடத்தில் இருக்கிறார்கள். என்னைவிட நன்கு படித்த மாணவன் ஒருவன் வாழ்க்கையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறான்... இதில் யார் சிறந்தவர்கள்??

கேள்வித்தாளைப் பிடுங்கி...... சிலசமயம் இது தேவைப்படுகிறது. திட்டாமல் இதுக்கு இந்த பதிலை எழுதியிருக்கலாமே என்று நாம் அறிவுருத்தலாம். தவிர அடிப்படை அறிவு வளரவேண்டும் என்று நினைக்கும் மாணவன் எப்படியும் வளர்த்திக் கொள்வான், விளையாட்டுப்புத்தி உள்ளவனை இப்படி மாற்று வழிக்குக் கொண்டுவருவதுதான் சிரமம். இந்திய கல்விமுறையில் “அழுத்தம்” மட்டுமில்லாமல் இருந்தாலே போதும் என்றே நினைக்கத் தோணுகிறது சிலசமயம்//

கல்விகுறித்த இந்த கட்டுரை மிக அவசியமானது தவிர மன்றத்தில் மிக முக்கியமான கட்டுரை இது!!

ஆதவா
18-02-2012, 06:59 AM
அவுஸ்ரேலிய பள்ளிகள் குறித்த பதிவுகள் கண்டதும் சுவிஸ் குறித்தும் பகிரலாமோ எனும் ஆர்வம் வருகிறது. ஆனால் இப்படி உங்களை போல் பொறுமையாய் புள்ளி விபரமெல்லாம் சேர்த்து தொகுத்து தட்டச்சிட்டு கொடுக்க முடியாதுக்கா.

அப்படி கொடுத்தால் அது பலருக்கு பயன் படும் என்பதும் நிச்சயமே..

முயற்சிக்கிறேன்..

உங்களால் முடியும்... நிச்சயமாகப் பகிருங்கள், தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறோம். இந்த கட்டுரை படிக்கும் சிலருக்கு தம் பிள்ளைகளை இப்படியெல்லாம் படிக்க வைக்கலாம் என்ற ஆசை உண்டாகும்.. எழுதுங்கள் ஹேகா

M.Jagadeesan
18-02-2012, 07:44 AM
மனிதனிடம் மறைந்து கிடக்கின்ற திறமைகளை வெளிக்கொணர்வதுதான் கல்வியின் நோக்கமாக இருக்கவேண்டுமே தவிர , மதிப்பெண்களை எடுப்பது நோக்கமாகஇருக்கக்கூடாது. .இந்தியாவில் படித்தவர்கள்தான் அதிக பாவங்களையும், குற்றங்களையும் செய்கிறார்கள்.இதற்குக் காரணம் ஒழுக்கமில்லாத கல்விதான்.நீங்கள் குறிப்பிட்டது போல நம் குழந்தைகள் சராசரி மாணவனாக இருந்தாலும் அல்லது படிப்பில் பின் தங்கி இருந்தாலும் கவலையில்லை. நல்லதொரு குடிமகனாக வளர்ந்தாலே போதும்.

மாணிக்கவாசகர் குறிப்பிட்டதுபோல

கற்றாரை யான் வேண்டேன்
கற்பனவும் இனி அமையும்.

கல்வியை வாழ்நாள் முழுவதும் கற்கலாம் ஆனால் நல்ல பழக்க வழக்கங்கள் சிறுவயதிலேயே உருவாக வேண்டும்.

கீதம்
18-02-2012, 10:57 PM
ஆஹா கீதம் அக்கா இதே கருத்து தான் என்னதும்.

பாராட்டுக்கள் அக்கா..

நன்றி ஹேகா. உங்கள் ஒத்தக் கருத்தும் என்னை மகிழ்விக்கிறது.


அவுஸ்ரேலிய பள்ளிகள் குறித்த பதிவுகள் கண்டதும் சுவிஸ் குறித்தும் பகிரலாமோ எனும் ஆர்வம் வருகிறது. ஆனால் இப்படி உங்களை போல் பொறுமையாய் புள்ளி விபரமெல்லாம் சேர்த்து தொகுத்து தட்டச்சிட்டு கொடுக்க முடியாதுக்கா.

அப்படி கொடுத்தால் அது பலருக்கு பயன் படும் என்பதும் நிச்சயமே..

முயற்சிக்கிறேன்..

கொஞ்சம் சிரமப்பட்டுத் தகவல்கள் திரட்டிக் கொடுத்தாலும் பலருக்கும் பயனிருக்கும் என்பதால் நீங்கள் செய்யலாம் என்பது என் கருத்து. பல நல்ல செய்திகளை அழகாகத் தொகுத்து வழங்கிய உங்களால் இதையும் தெளிவாக, அழகாகத் தொகுக்கமுடியும். நேரமிருக்கும்போது எழுதிப் பதியுங்கள். முயற்சிக்குப் பாராட்டு ஹேகா.

கீதம்
18-02-2012, 11:09 PM
உங்கள் மகன் சராசரி மாணவன் என்றெல்லாம் சொல்லவே முடியாது. அதே ஏழாம் வகுப்பில் எனக்கு ஓவியம் வரையத் தெரியாது, கற்பனா சக்தி அவ்வளவாகக் கிடையாது, பூச்சிகளை நசுக்கத் தெரியும். கணிணி என்றால் என்னவென்றே தெரியாது, மற்றபடி பாசம், மரியாதை, ஒழுக்கம் எல்லாம் குடும்பத்தோடு பிறந்தது... என்றால்... நான் ஒரு மக்கு ஸ்டூடண்டாக இருந்திருக்கிறேன் பாருங்கள்.

இந்த நாப்ளான் தேர்வுகளின் அடிப்படையில் பார்த்தால் அவன் ஒரு சராசரி மாணவன்தான் ஆதவா. அதனால்தான் அப்படிக் குறிப்பிட்டேன்.


கல்வி என்பது மூடிக்கிடக்கும் மூளையை திறக்க வைப்பது... அது பாடங்கள் மூலம் மட்டுமல்ல, வாழ்க்கை அனுபவத்தின் மூலமும் உண்டு. என்னைவிட குறைவாக “மார்க்” எடுத்த மக்கு மாணவர்கள் இன்று என்னைவிட மிக உயர்ந்த இடத்தில் இருக்கிறார்கள். என்னைவிட நன்கு படித்த மாணவன் ஒருவன் வாழ்க்கையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறான்... இதில் யார் சிறந்தவர்கள்??

படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லையென்று சொல்லத்தானே இக்கட்டுரையையே எழுதத் தொடங்கினேன். நீங்களும் அதைத்தான் உறுதிப்படுத்துகிறீர்கள்.


கேள்வித்தாளைப் பிடுங்கி...... சிலசமயம் இது தேவைப்படுகிறது. திட்டாமல் இதுக்கு இந்த பதிலை எழுதியிருக்கலாமே என்று நாம் அறிவுருத்தலாம். தவிர அடிப்படை அறிவு வளரவேண்டும் என்று நினைக்கும் மாணவன் எப்படியும் வளர்த்திக் கொள்வான், விளையாட்டுப்புத்தி உள்ளவனை இப்படி மாற்று வழிக்குக் கொண்டுவருவதுதான் சிரமம். இந்திய கல்விமுறையில் “அழுத்தம்” மட்டுமில்லாமல் இருந்தாலே போதும் என்றே நினைக்கத் தோணுகிறது சிலசமயம்//

தன்மானம் என்பது பெரியவர்களுக்கு மட்டுமல்ல, குழந்தைகளுக்கும் இருக்கிறது என்பதை நாம் உணரவேண்டும். சக வகுப்பு மாணவிகள் முன் அவர்களைப் பெற்றோரே திட்டி அடித்துக் கண்டித்தால் ஒன்று தாழ்வு மனப்பான்மை வளரும். இல்லையெனில் அடாவடித்தனம் வளரும். இரண்டுமே குழந்தைகளின் எதிர்கால நலனுக்கு உகந்தது அல்ல. நீங்கள் சொல்வது போல் அழுத்தமில்லாக் கல்விமுறையே இன்றையக் காலக்கட்டத்துக்குத் தேவை. பாடச்சுமைகளின் பாரம் மாணவர்களை அழுத்தி, ஆசிரியர்களை அழுத்தி, பெற்றோரை அழுத்தி மறுபடி எல்லா அழுத்தமும் குழந்தைகள் மீதே செலுத்தப்படுகிறது. அவர்கள் பாவமில்லையா?


கல்விகுறித்த இந்த கட்டுரை மிக அவசியமானது தவிர மன்றத்தில் மிக முக்கியமான கட்டுரை இது!!

தொடர்ந்து படித்தும், பின்னூட்டங்கள் அளித்தும் மேலும் மேலும் எழுத ஆர்வமுண்டாக்குவதற்கு நன்றி ஆதவா.

கீதம்
18-02-2012, 11:37 PM
மனிதனிடம் மறைந்து கிடக்கின்ற திறமைகளை வெளிக்கொணர்வதுதான் கல்வியின் நோக்கமாக இருக்கவேண்டுமே தவிர , மதிப்பெண்களை எடுப்பது நோக்கமாகஇருக்கக்கூடாது. .இந்தியாவில் படித்தவர்கள்தான் அதிக பாவங்களையும், குற்றங்களையும் செய்கிறார்கள்.இதற்குக் காரணம் ஒழுக்கமில்லாத கல்விதான்.நீங்கள் குறிப்பிட்டது போல நம் குழந்தைகள் சராசரி மாணவனாக இருந்தாலும் அல்லது படிப்பில் பின் தங்கி இருந்தாலும் கவலையில்லை. நல்லதொரு குடிமகனாக வளர்ந்தாலே போதும்.

மாணிக்கவாசகர் குறிப்பிட்டதுபோல

கற்றாரை யான் வேண்டேன்
கற்பனவும் இனி அமையும்.

கல்வியை வாழ்நாள் முழுவதும் கற்கலாம் ஆனால் நல்ல பழக்க வழக்கங்கள் சிறுவயதிலேயே உருவாக வேண்டும்.

தங்கள் ஊக்கமிகு வார்த்தைகளுக்கும் எடுத்துக்காட்டிய திருவாசக வரிகளுக்கும் மனமார்ந்த நன்றி ஐயா.

minbaraj
24-02-2012, 03:39 PM
சுருங்கச் சொல்லி பெரிதாக விளக்கி இருக்கிறீர்கள் நன்று

கீதம்
24-04-2012, 11:53 PM
என் மகளைப் பற்றிச் சொல்கிறேன் என்று முந்தைய பதிவில் சொல்லியிருந்தேன். ஆஸ்திரேலியாவுக்கு வந்தபோது அவள் இந்தியாவில் எட்டாம் வகுப்பு முடித்திருந்தாள். ஆனால் கல்வியாண்டு துவங்கும் கால வித்தியாசத்தால் இங்கு மீண்டும் ஆறு மாதங்கள் (ஒரு செமஸ்டர்) எட்டாம் வகுப்புப் படிக்கும் நிலை உருவானது. வேறு வழியில்லை என்பதால் அவளைப் பள்ளியில் எட்டாம் வகுப்பில் சேர்த்தோம். உயர்நிலைப்பள்ளிகளில் தேர்வுகளை விடவும் அஸைன்மெண்ட் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒரு தலைப்பு கொடுக்கப்பட்டுவிட, அந்த செமஸ்டர் முழுவதும் அதைப்பற்றிதான் விளக்கமாகப் படிப்பார்கள்.

கொடுக்கப்பட்டத் தலைப்புப் பற்றிய விவரங்களைப் பிள்ளைகள் சரிவரப் புரிந்துகொண்டார்களா? தாங்கள் புரிந்துகொண்டவற்றை மற்றவர்க்கு வெளிக்காட்ட இயல்கிறதா? வெளிப்படுத்துவதில் என்னென்ன சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள்? என்று பல கோணங்களில் இந்த அஸைன்மெண்ட்கள் பரிசீலிக்கப்பட்டு அதற்கேற்ப ரிப்போர்ட் வழங்கப்படும். இதில் வேடிக்கை என்னவெனில் சில பிள்ளைகள் ஒரு வேலையை முடிக்க, பிரம்ம பிரயத்தனம் செய்திருப்பார்கள். ஆனால் முடிவு என்னவோ எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது. இதையும் ஆசிரியர்கள் கவனிக்கத் தவறுவதில்லை. ரிப்போர்ட்டில் ஒரு மாணவன் செய்ய நினைத்தவை, செய்தவை, செய்யவேண்டியவை என்று எல்லாவற்றையும் அலசி எழுதுவார்கள். செய்துமுடித்தக் காரியத்தை விடவும் அதைச் செய்ய முனைந்த முயற்சிகள் பெரிதல்லவா?

கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது.

படைச்செருக்கினைப் பறைசாற்றும் இக்குறளும் கூட முயற்சியின் பெருமைக்குச் சான்றாய் நினைவுக்கு வரும்.

நோக்கம் உயர்வாக இருக்கவேண்டும் என்பதற்கு சொல்லப்படும் பழமொழி ஒன்று.

சூரியனைக் குறிவைத்து அம்பெய்தால்தான் அது பனைமர உயரமாவது செல்லும்.

அதைப்போல் பெரும்பிரயத்தனப்பட்டு செய்யும் காரியங்களில் முயற்சிக்கான முழுப்பலனும் கிட்டாவிட்டாலும் பலனே கிட்டாமல் இராது. பலன் மட்டுமே பெரிதாய்ப் பேசப்படாமல் முயற்சியும் பாராட்டப்படும்போது அடுத்தமுறை இதனினும் அதிகமான முயற்சியை மேற்கொள்ளவேண்டுமென்னும் உத்வேகம் பிறக்குமல்லவா?

ஆஸ்திரேலியக் கல்விமுறையில் இப்படி முயற்சிகளுக்கான ஊக்கமும் பாராட்டும் கிடைப்பது மாணவர்களுக்கு கிடைக்கும் மற்றொரு அனுகூலம். சாதாரணமாகவே என் மகளுக்கு வகுப்பில் எப்போதும் முதலாவதாக வரவேண்டுமென்ற எண்ணம் அதிகம். அத்துடன் இப்படியொரு ஊக்குவிப்பும் சேர்ந்தால்…. சொல்லவா வேண்டும்!

அவள் பள்ளியில் சேர்ந்த முதல் காலாண்டில் கொடுக்கப்பட்டிருந்தத் தலைப்பு ஆஸ்திரேலியாவில் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள பெரும்பாலான பூர்வகுடி மக்களின் பிரச்சனைகளும், அலசல்களும் தீர்வுகளும். இவளுக்கோ அஸைன்மெண்ட் என்றால் என்னவென்றே தெரியாது. இந்தியாவில் மனப்பாடம் செய்து தேர்வெழுதி முதல் மதிப்பெண்கள் பெற்று முதல் மாணவியாய் வகுப்பில் பெருமையுடன் வலம்வந்தவளுக்கு இங்கு தான் பின்தங்கிப் போய்விடுவோமோ என்னும் பயம் வந்துவிட்டது. கல்விமுறை பிடிபடாததால் என்னாலும் அவளுக்கு உதவ இயலவில்லை.

இங்கேயே மேற்படிப்பு படித்து, தாவர மரபணுவியல் ஆராய்ச்சியில் முனைவர் பட்டமும் பெற்று, அதே துறையில் ஆராய்ச்சியாளராகப் பணிபுரியும் அவளுடைய சித்தப்பாவிடம் உதவிகோரினாள். அவரோ சிறிதும் தாட்சண்யமின்றி மறுத்துவிட்டார். ‘ஒருமுறை நான் உதவி, நல்ல மதிப்பெண்கள் பெற்றுவிட்டால் மதிப்பெண்களுக்காக, மீண்டும் மீண்டும் அடுத்தவர் உதவியை எதிர்பார்க்கும் எண்ணம் வந்துவிடும். இது மதிப்பெண்ணுக்கான தேர்வு இல்லை. இந்தியாவில் புரிந்தும் புரியாமல் படித்தமுறையை மறந்துவிடு. இங்கு உனக்குப் புரிந்ததை மட்டுமே நீ வெளிக்காட்டவேண்டும். அதுதான் உன் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்’ என்று அறிவுரையுடன் விலகிவிட்டார்.

மிகவும் வருத்தத்துடன் ஏனோதானோவென்று அரைகுறையாக முடித்துக் கொண்டுபோனாள். பார்த்ததுமே ஆசிரியருக்குப் புரிந்துவிட்டது. அவர் இவளுக்கு தனிச்சிரத்தை எடுத்து எப்படிச் செய்யவேண்டும் என்று போதித்துள்ளார். அதுவரை கணினியை உபயோகித்திராத அவளிடம் கணினியை உபயோகித்து பாடத்தலைப்புகளுக்கான விவரங்களைத் தேர்ந்தெடுப்பது, அவற்றிலிருந்து தேவையான விவரங்களை மட்டும் வடிகட்டுவது, முறைப்படுத்துவது, அதை கட்டுரை வடிவில் தயாரிக்கும் முறை, அளிக்கும் முறை என்று எல்லாவற்றையும் பொறுமையாகச் சொல்லிக்கொடுத்தார். ஒவ்வொரு கட்டத்திலும் இவளுக்கு எழும் சந்தேகங்களை நிவர்த்தி செய்தார். வீட்டுக்கு வந்தபின் எழும் சந்தேகங்களுக்கும் உடனடியாக விடை கிடைத்தது. எப்படி என்று வியப்பாயுள்ளதா?

அப்பள்ளியின் ஒவ்வொரு ஆசிரியரும் தனக்கென்று ஒரு இணையதளத்தை உருவாக்கி வைத்துள்ளனர். மாணவர்கள் அங்கு சென்று சந்தேகம் கேட்கலாம், குழு விவாதங்களில் ஈடுபடலாம், படிப்பு தொடர்பான எந்த உதவியும் உடனுக்குடன் கிடைக்கும் வகையில் வழி செய்யப்பட்டிருந்தது. எட்டாம் வகுப்புக்கே இந்த அளவு ஈடுபாட்டுடன் ஆசிரியர்கள் நடந்துகொண்டது பெரும் வியப்பை அளித்தது.

செய்முறை பிடிபட்டபின் சொல்ல வேண்டுமா? எல்லாவற்றிலும் முழுஅளவில் ஈடுபாடு காட்டி, எல்லா ஆசிரியர்களிடமிருந்தும் பாராட்டுப் பெற்றாள்.

உதாரணமாக, இவளுக்கு வரலாற்றுப்பாடத்தில் அத்தனை ஆர்வம் கிடையாது. இரண்டாம் உலகப்போர் பற்றிய அஸைன்மெண்ட்டில் அதற்கான விவரங்களைத் திரட்டிக் கட்டுரைகள் தொகுப்பதிலும், அது தொடர்பான படங்களையும் அப்போதைய செய்தித்தாள்களில் வந்த விவரங்களையும் வெட்டி ஒட்டி, scrap note தயாரிப்பதிலும், power point இல் அது தொடர்பான காட்சிகளைத் தொகுத்து presentation அளிப்பதிலும் இவள் எடுத்துக்கொண்ட முயற்சிகளைப் பார்த்து ஆசிரியர் மலைத்துவிட்டார். நீ தொல்பொருள் துறையிலோ, வரலாற்றுத் துறையிலோ செல்லத்தக்கவள், அதற்கானப் படிப்பைப் பின்னாளில் தேர்ந்தெடுத்தால் உன் வருங்காலம் சிறப்பாக இருக்கும் என்பது போல் பாராட்டி ரிப்போர்ட்டும் கொடுத்துவிட்டார். teenage and law படித்தபோது நீ வழக்குரைஞர் ஆகத்தகுதி நிறைந்தவள் என்று ரிப்போர்ட். அதேபோல் எடுத்துக்கொள்ளும் ஒவ்வொரு பாடத்திலும் அது ceramic art ஆகட்டும் gourmet cooking ஆகட்டும், அதில் இவளுக்கு முழுத்திறமையும் ஆர்வமும் உள்ளது. எதிர்காலத்தில் இந்தத்துறையையே இவளுக்குப் பரிந்துரைக்கிறேன் என்று ரிப்போர்ட் வந்துவிடும்.

இவளுக்கு அவற்றில் உண்மையான ஆர்வம் இல்லை என்பதுதான் உண்மை. முன்பே சொன்னதுபோல் மாணவர்களின் திறமையும் ஆர்வமும் எந்தெந்தத்துறையில் இருக்கிறதெனக் கண்டுபிடிக்கும் முயற்சியில் மற்ற மாணவர்கள் நேர்மையாய்த் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த, இவள் மட்டும் தனக்குப் பிடிக்காத, விருப்பமில்லாத துறைகளிலும் பெரும் சிரத்தை எடுத்து ஆசிரியர்கள் இவளைப் பற்றியத் தவறான மதிப்பீட்டை நிர்ணயிக்கும் வகையில் போலியான ஆர்வத்தைக் காட்டி நன்றாகவே நம்பவைத்துவிட்டாள். தான் செய்வது சரியல்ல என்று உணர்ந்தபோதும் தன்னை மாற்றிக்கொள்ள அவளுக்கு மனமில்லை.

எட்டு, ஒன்பது ஆகிய இரண்டு வருடங்களில் கல்வி, பள்ளி, மற்ற மாணவர்களுடன் பழகும் முறை, ஆசிரியர்களிடம் நல்ல பெயர் என்று எல்லாவற்றிலும் நல்ல தேர்ச்சி பெற்று பள்ளியில் குறிப்பிடத்தக்க மாணவியாகிவிட்டாள்.

அவள் பத்தாம் வகுப்பு சேரவிருந்த சமயம் கணவரின் வேலைநிமித்தம் குவீன்ஸ்லாந்திலிருந்து விக்டோரியா மாறினோம். அரசுப்பள்ளி என்பதால் பள்ளி மாறுவதில் எந்த சிக்கலும் இல்லை. எந்த ஏரியாவில் வசிக்கிறோமோ, அந்த ஏரியாவில் உள்ள அரசுப்பள்ளியில் நம் குழந்தைகளை எளிதில் சேர்த்துவிடமுடியும். இடமில்லை என்று பள்ளிகள் சொல்லமுடியாது. சொல்லவும் கூடாது. இது அரசின் விதிமுறை. அதன்படி ஒரு பள்ளிக்கு விண்ணப்பிக்க, நேர்முகத்துக்கு வருமாறு அழைப்பு வந்திருந்தது. நேர்முகம் என்பது ஒரு சம்பிரதாயம்தான் என்று அறிந்திருந்தாலும் உள்ளுக்குள் பயம் இருந்தது.

அன்று நான், கணவர், மகள் மூவரும் பள்ளி சென்றோம். மாணவியிடம் அவள் தேர்ந்தெடுக்கவிருக்கும் பாடங்கள் பற்றிய அலசலுக்கான நேரமே அது என்பது பிறகுதான் புரிந்தது. (இதற்குமுன்னும் இந்தச்சலுகை இருந்தாலும் குறிப்பிட்ட எல்லாப் பாடங்களையும் கட்டாயம் ஒரு செமஸ்டரிலாவது படித்திருக்கவேண்டும் என்று விதிமுறை உண்டு. இப்போது அப்படியில்லை.)

தலைமை ஆசிரியை எங்களை முகமன் கூறி வரவேற்றதோடு சரி. அதன்பின் தவறியும் எங்கள் பக்கம் திரும்பவில்லை. முழுக்க முழுக்க என் மகளிடமே பேசிக்கொண்டிருந்தார். பள்ளியின் சட்டதிட்டங்கள், சீருடை, தேர்ந்தெடுக்கவிருக்கும் பாடங்கள், புத்தகங்கள் என்று எல்லாவற்றையும் பொறுமையாக அவளுக்கு எடுத்துக்கூறி, மேற்கொண்டு தகவல்கள் தேவைப்பட்டால் தொடர்பு கொள்ள, உதவித்தலைமையாசிரியரை அணுகக்கோரி அவரையும் தன் அறைக்குள் அழைத்து அறிமுகப்படுத்திவைத்தார். இறுதியில் இன்ன தேதியில் பள்ளி துவங்குகிறது. முழுச்சீருடையுடன் உங்கள் மகளை அன்றிலிருந்து பள்ளிக்கு அனுப்புங்கள் என்று மட்டும் எங்களிடம் சொல்லி விடைபெற்றுக்கொண்டார்.

அவ்வளவுதானா என்று வியப்புடன் வெளியேறினோம். படிப்பது மாணவர்களின் பொறுப்பு. அதனால் விருப்பப்பாடங்களைத் தேர்ந்தெடுப்பதும் அவர்களது முழு உரிமை என்பதை அந்தத் தலைமையாசிரியையின் செய்கையால் உணர்ந்தோம். பெற்றோர் தலையீடு இல்லாமல் மாணவியையே தேர்ந்தெடுக்கச் சொன்னது சிறப்பு.

இன்றுவரை பள்ளி மற்றும் பாடங்கள் தொடர்பான அவளது பொறுப்புகளை அவளே நிறைவேற்றிக்கொள்கிறாள். தன் முயற்சியின் பலனாய், இரண்டு வருடங்களுக்கு முன் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தின் Kwong Lee dow young scholars program க்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறாள். இந்த ஸ்காலர்ஷிப்பானது, பதினொன்றாம், பன்னிரண்டாம் வகுப்புகள் மற்றும் பல்கலைக்கழகத்தின் முதலாமாண்டு ஆகிய மூன்று வருடங்களுக்கான கல்வியியல் வழிகாட்டியாகவும் ஆலோசனை மையமாகவும் செயல்படும்.

அன்று அஸைன்மெண்ட்டுக்கு உதவ மறுத்த சித்தப்பாவுக்கு இன்று நன்றி சொல்கிறாள். அவரும் இவள் வளர்ச்சியில் பெருமையுறுகிறார். அடுத்தக் கட்டத்துக்குத் தன்னைத் தீவிரமாகத் தயார்படுத்திக்கொண்டிருக்கும் அவளுக்கு இப்போது முதலிடத்தின் மீதான மோகம் குறைந்திருக்கிறது. ஆனால் ஆர்வம் குறையவில்லை.

பத்தாம், பதினொன்றாம், பன்னிரண்டாம் வகுப்புகளில் ஆசிரியர் பாடம் நடத்தும் நேரம் தவிர, மற்ற நேரங்களில், பின்னணியில் மெல்லிய அளவில் இசையோ பாடலோ கேட்கும்படி எல்லாப் பள்ளிகளிலும் ஏற்பாடு உள்ளது. இசை கேட்டுக்கொண்டே படிப்பதன் மூலம் மூளையில் பதியும் வேகம் அதிகரிக்கிறது என்பதாலும், மற்ற இடையூறுகள் இருந்தாலும் படிப்பில் கவனம் சிதையாமலிருக்கும் பயிற்சிக்காகவும் இவ்வாறு செய்கிறார்கள். இப்படிப் பழகிவிடுவதால் வீட்டில் இயங்கும் தொலைக்காட்சி, வானொலி இவற்றால் படிக்கும் சிந்தனை தடைப்படுவதில்லை. நம்மூரில் செய்வது போல் பிள்ளைகள் பத்தாம் வகுப்பு வந்தவுடனேயே வீட்டில் கேபிள் தொடர்பு தடை அல்லது தொலைக்காட்சியை மூட்டை கட்டி வைப்பது போன்ற தேவைகளும் ஏற்படவில்லை.

மேலும் மாணவர்கள் ஒரே இடத்தில் பொம்மை போல் அமர்ந்திருப்பதை ஆசிரியர்கள் விரும்புவதில்லை. படிக்கும்நேரத்தில் தங்கள் விருப்பப்படி வகுப்பறையில் ஆசிரியர் அனுமதியின்றி மற்ற மாணவர்களின் இருப்பிடம் செல்லவும் அவர்களோடு கூடிப் படிப்பதையும், வீட்டில் இருப்பது போலவே இயல்பாய் இருப்பதையும் ஊக்குவிக்கின்றனர்.

இது தொடர்பாக என் மகளின் வகுப்பில் நடந்த ஒரு சம்பவம். வட இந்தியாவிலிருந்து ஒரு ஆசிரியை ஆஸ்திரேலியக் கல்விமுறைக்கானப் பயிற்சிக்கென இவள் பள்ளிக்கு மூன்று மாதங்கள் வந்திருந்தார். அவர் ஒரு வகுப்பை நிர்வாகிக்கும் சமயம், மாணவிகளை அங்குமிங்கும் திரும்பவிடாது, ஒருவரோடு ஒருவர் பேசவிடாது, நம் ஊர்ப் பள்ளிகளில் இருக்கும் சட்டதிட்டங்களின்படி மிகவும் கண்டிப்பாகவும் கறாராகவும் இருந்திருக்கிறார். இதுவரை இப்படியொரு கட்டுப்பாட்டை அனுபவித்திராத மாணவிகள் அவர் வகுப்பு முடிந்து போனபின் அவரைப் பற்றிப் பேசிக்கொண்டதைக் கேட்க மிகவும் வருத்தமாக இருந்தது என்றாள் மகள்.

‘இவரை இங்கிருக்கும் கல்விமுறைப் பற்றிப் பயிற்சி எடுக்க அனுப்பினால் இவர் தன் நாட்டுப் பயிற்சி முறையில் நமக்கு வகுப்பெடுக்கிறார். இப்படி ஆசிரியர்கள் இருந்தால் இந்திய மாணவர்களின் நிலை மிகவும் பரிதாபம்’ என்று கிண்டல் செய்தார்களாம். தானும் ஒரு இந்தியப் பிரஜை என்ற வகையில் என் மகள் மிகவும் நாணினாள். அந்த ஆசிரியையின் செயல் அறிந்து நானும் வருந்தினேன். இவரைப்போல் மற்ற நாடுகளிலிருந்து வந்திருந்த பயிற்சி ஆசிரியர்கள் இங்கிருக்கும் முறையைப் பின்பற்றினர் என்பதால் இந்திய ஆசிரியரின் அணுகுமுறை மட்டும் கேலிக்காளானது.

இன்னும் சொல்வேன்…

meera
25-04-2012, 05:34 AM
அக்கா, ஒவ்வொரு விஷயமும் படிக்கும் போது நம் கல்வி முறையின் தவறுகளும் ஆசிரியரின் தவறுகளும் கண்முன் வருகிறது.



நானும் ஒரு கல்லூரியில் ஒன்றரை ஆண்டுகள் ஆசிரியையாய் பணியாற்றிய காலத்தில் நீங்கள் குறிப்பிட்ட அந்த இந்திய ஆசிரியையாய் தான் இருந்தேன். முதல் நாள் வகுப்பெடுக்க செல்லும் முன்பே நமக்கு வகுப்புகள் எடுத்து தான் அனுப்புவார்கள். மாணவர்களிடன் அன்பாய், சகஜமாய் பழகக்குடாது என்று. என்ன செய்ய இந்தியாவில் எல்லாம் கனவாய் தான் போகிறது.

தன் கையே தனக்குதவி என்று குழந்தைக்களுக்கு சரியான நேரத்தில் சரியான விதத்தில் புரியவைப்பது பெற்றோரின் கடமை என்பதை உங்கள் கொழுந்தனார் சரியாய் செய்திருக்கிறார்கள்.:icon_b::icon_b:

இன்னும் எழுதுங்கள் தெரிந்துகொள்ள ஆவலாய் இருக்கிறது.

கீதம்
25-04-2012, 06:03 AM
உங்கள் ஊக்கமிகுப் பின்னூட்டத்துக்கு நன்றி மீரா. நேரம் கிடைக்கும்போதெல்லாம் தொடர்வேன்.

கீதம்
25-04-2012, 06:04 AM
சுருங்கச் சொல்லி பெரிதாக விளக்கி இருக்கிறீர்கள் நன்று

பாராட்டுக்கு நன்றி நண்பரே.

மதி
25-04-2012, 11:42 AM
அந்நாட்டு கல்விமுறையைப் படிக்கும் போது ஆச்சர்யமாக இருக்கிறது.. இதெல்லாம் இங்கு கிடைக்கவில்லையே என்ற ஆதங்கமும் இருக்கிறது.

கீதம்
11-08-2012, 01:30 PM
அந்நாட்டு கல்விமுறையைப் படிக்கும் போது ஆச்சர்யமாக இருக்கிறது.. இதெல்லாம் இங்கு கிடைக்கவில்லையே என்ற ஆதங்கமும் இருக்கிறது.

பின்னூட்டத்துக்கு நன்றி மதி. அந்த ஆதங்கம்தான் என்னை எழுதவும் தூண்டியது.

கீதம்
11-08-2012, 01:32 PM
ஆஸ்திரேலியப் பள்ளிகள் - 8

ஆஸ்திரேலியாவில் ஏழாம் வகுப்பிலிருந்துதான் உயர்நிலைக் கல்வி துவங்குகிறது என்று முன்பே குறிப்பிட்டிருந்தேன். சூர்யா இப்போது சேர்ந்திருப்பது ஆண்கள் உயர்நிலைப் பள்ளி. இப்பள்ளியில் சேர்ந்த புதிதில் அவனுக்கு உண்டான வேடிக்கையான அனுபவம் ஒன்றைக் கூறுகிறேன்.

நம் ஊர்ப் பள்ளிகளில் பிள்ளைகளுக்கு வருடந்தோறும் ஒரு வகுப்பறை ( 7A. 7B. 7C. 8A…. என்று) ஒதுக்கப்பட்டிருக்கும். பாட அட்டவணைப்படி அந்தந்த பாடவேளையில் அதற்குரிய ஆசிரியர் வந்து பாடம் எடுப்பார். மணி அடித்ததும் அடுத்த பாடவேளைக்கான ஆசிரியர் வருவார்.

முற்றிலும் தலைகீழ் நிகழ்வு இங்கே. பள்ளியின் ஒவ்வொரு ஆசிரியருக்கும் நிரந்தரமாய் ஒரு வகுப்பறை ஒதுக்கப்பட்டிருக்கும். மாணவர்கள் தங்கள் பாட அட்டவணைப்படி ஒவ்வொரு வகுப்பிற்கும் சென்று பாடம் கற்றுவரவேண்டும். புத்தகங்களை பள்ளியின் லாக்கர்களில் வைத்துவிட்டு ஒவ்வொரு பாடத்துக்கேற்ற புத்தகங்களை மட்டும் எடுத்துக்கொண்டு செல்லவேண்டும். அதற்காகவே ஒவ்வொரு பாட இடைவேளையிலும் ஐந்து நிமிட அவகாசம் அளிக்கப்படும். அதற்குள் மாணவர்கள் வரிசையாய் தாங்கள் செல்லவேண்டிய வகுப்பறைக்குச் சென்றுவிடவேண்டும்.

புதிய பள்ளி, புதிய மாணவர்கள் என்பதால் பழகுவதற்காக ஏழாம் வகுப்பு மாணவர்கள் அனைவரையும் பள்ளி துவங்கிய முதலிரண்டு நாட்கள் ஒரே வகுப்பில் அமர்த்தியிருந்தனர். சூர்யாவுக்கு எவரும் பரிச்சயமில்லாத நிலையில் ஒன்றிரண்டு மாணவர்களுடன் பழகி ஓரளவு பயம் தணிந்திருந்தான். மூன்றாம் நாள் ஒவ்வொரு மாணவனின் பெயருக்கும் தனித்தனியே பாட அட்டவணை கொடுக்கப்பட்டுவிட்டது. இன்னும் லாக்கர் ஒதுக்கப்படாதக் காரணத்தால் அனைவரும் புத்தகப்பையை சுமந்துகொண்டே எங்கும் செல்லும் நிலை.

நான்காம் நாள் சூர்யா பள்ளிக்குச் சென்றதும் முதல் வகுப்பு ஆங்கிலம் என்று ஒரு ஆசிரியர் மாணவர்களை அழைக்க, அனைத்து மாணவர்களும் அவர்பின் செல்கின்றனர். இரண்டாம் பாடவேளை மணி அடித்ததும், கணித ஆசிரியர் அங்கு வந்து என் வகுப்புக்கு வரவேண்டிய மாணவர்கள் என்னுடன் வாருங்கள் என்று சொல்ல… மாணவர்கள் அவரைத் தொடர்ந்து சென்று அந்த வகுப்பறையைக் கண்டுகொள்கின்றனர்.

அதற்கடுத்து அறிவியல், அடுத்து தொழில்நுட்பம் என்று அதற்குரிய ஆசிரியர்கள் வந்து அழைத்துச் செல்ல சூர்யாவும் மற்ற மாணவர்களைத் தொடர்ந்தே அந்தந்த வகுப்புகளுக்குச் சென்றுவருகிறான். ஆசிரியர் வந்து அழைக்கக்காரணம், அவ்வளவு பெரிய பள்ளி வளாகத்தில் சரியான வகுப்பறைகளைக் கண்டுபிடித்துப் போவதென்பது புதிதாய் வந்துள்ள மாணவர்களால் இயலாது என்பதுதான்.

ஒரு வாரம் ஓடிவிட்டது. மறு திங்களன்று முதல் பாடவேளை! ஒரு ஆசிரியர் சூர்யா இருக்கும் ஆங்கில வகுப்பறைக்கு வந்து சொல்கிறார், ‘என்னுடைய மாணவர்கள் மூவரைக் காணவில்லை. அவர்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன். யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்’ என்று சொல்லி மூன்று பெயர்களைப் படிக்கிறார். மூவரும் நாங்கள் இங்கே இருக்கிறோம் என்று எழுந்து நிற்க, ஆசிரியர், வியப்புடன், ‘நீங்கள் மூவரும் இந்நேரம் என் வகுப்புக்கு வந்திருக்கவேண்டும், ஏன் இங்கு அமர்ந்திருக்கிறீர்கள்?’ என்று கேட்க, மூவரும் விழித்துக்கொண்டு நிற்க, ஆசிரியர் அவர்களிடம் உங்களுடைய பாட அட்டவணையைப் பாருங்கள் என்றாராம். அதில் முதல் வகுப்பு புவியியல் என்றிருக்க, இவர்களுக்கு திகைப்பு. பின்புதான் தெரியவந்திருக்கிறது. வேறுபட்ட பாடங்களைத் தேர்ந்தெடுக்கும் வசதி இருப்பதால் ஒவ்வொரு மாணவனுக்கும் வேறுபட்ட அட்டவணை தரப்பட்டிருக்கிறது என்ற செய்தி.

தங்கள் அட்டவணைகளைப் பார்க்காமல் எல்லோருக்கும் ஒன்றேதான் என்ற நினைப்பில் இருந்ததால் இப்படி முந்தைய நாட்களில் தங்களுக்கில்லாத வகுப்புகளில் எல்லாம் இவர்கள் மாறி மாறி அமர்ந்திருக்கின்றனர். ஆசிரியர் விளக்கிவிட்டு, சரி, இப்போது என்னைப் பின்தொடர்ந்து என் வகுப்புக்கு வாருங்கள் என்று முன்னே செல்ல, பின்தொடர்ந்த பிள்ளைகள், ஒரு திருப்பத்தில் அவரைக் காணாமல் வேறுவழி சென்றுவிட்டனர்.

வழிதவறிய ஆட்டுக்குட்டிகள் போல் வராந்தாவில் சுற்றி சுற்றி வந்தவர்களை, வேறொரு ஆசிரியர் விசாரித்து உரிய வகுப்பில் கொண்டுவிட முயல, புவியியல் ஆசிரியரே மறுபடியும் தேடிக்கொண்டு வந்துவிட்டாராம். ஒருவழியாக வகுப்புக்குச் சென்றதுடன் அடுத்தவேளை என்ன பாடம் என்பதை தனித்தனியாக தங்கள் அட்டவணையைப் பார்த்து முடிவெடுத்துப் போகவும் கற்றுக்கொண்டுவிட்டனர். வழிதவறிய மூன்று ஆட்டுக்குட்டிகளில் சூர்யாவும் ஒன்று என்பதை சொல்லவும் வேண்டுமா?

இந்த நிகழ்வைச் சொன்னதோடு அவன் வியந்த விஷயம், எந்த ஆசிரியரும் அவர்களைக் கோபிக்கவில்லை என்பது. பிள்ளைகளுக்கு எதனால் இந்தக் குழப்பம் உண்டானது என்பதை சொல்லிப் புரியவைத்தார்கள் என்றான்.

சமீபத்தில் நிகழ்ந்த மற்றொரு நிகழ்வு. ஆண்பிள்ளைகள் மட்டுமே படிக்கும் பள்ளி என்பதால் சற்றே அடாவடித்தனம் மிகுந்து காணப்படுவது உண்மை. சின்ன சின்ன வாய்த்தகராறுகளும், கைகலப்புகளும் அவ்வப்போது உண்டாகிறது என்றாலும் அது எல்லை மீறும்போது ஆசிரியர்கள் தலையிட்டுத் தீர்த்துவைக்க முயல்கின்றனர். சூர்யா தற்போது படிக்கும் பள்ளியில் மாறுபட்ட கலாச்சாரத்தைச் சார்ந்த பல்வேறு மாணவர்களும் படிக்கின்றனர் என்பதால் பலவிதங்களில் கருத்து வேறுபாடு அவர்களுக்குள் அடிக்கடி உண்டாவதுண்டு.

சூர்யாவின் வகுப்பைச் சேர்ந்த இரு மாணவர்களுக்குள் ஒருநாள் வகுப்பு இடைவேளையில் பலத்த சண்டை. ஒருவரையொருவர் தகாத வார்த்தைகளால் திட்டிக்கொண்டதாகவும், அடித்துக்கொண்டதாகவும் புகார். அவர்கள் இருவரையும் பள்ளி அலுவலகத்துக்கு அழைத்து தனித்தனியே தாள் கொடுக்கப்பட்டு சண்டைக்கான காரணம். தான் செய்த தவறு, எதிராளி செய்த தவறு எல்லாவற்றையும் எழுதச் சொன்னார் தலைமை ஆசிரியர். அத்துடன் நிற்காமல், வகுப்பின் மற்ற மாணவர்களிடமும் ஆளுக்கொரு தாள் தந்து, தங்கள் பெயரைக் குறிப்பிடாமல், இந்தப் பிரச்சனை பற்றி அவர்களுக்கு என்னென்ன தெரியுமோ அவற்றை எழுதச் சொன்னார். எதுவும் தெரியாது என்றால் தெரியாது என்றும் எழுதலாம். சண்டையிட்ட மாணவர்கள் பேசிய மொழி அறிந்தவர்கள் இருந்தால் அந்தப் பேச்சில் தகாத வார்த்தைகள் இருந்தால் அவற்றையும் குறிப்பிடும்படி கேட்டுக்கொண்டார்.

அதன்பின் பிரச்சனையின் அடித்தளத்தை உணர்ந்து அதற்கேற்ப மாணவர்களுக்கு அறிவுரை சொல்லியும் எச்சரிக்கை விடுத்தும் அனுப்பியுள்ளார்.

ஆசிரியர்கள் மாணவர்களிடம் பழகும் விதமும், தவறு செய்பவர்களைத் தனிமையில் கண்டிக்கும் செயலும் மிகவும் குறிப்பிடத்தக்கவை. மேலும் பெற்றோர்களிடம் பிள்ளைகளின் ஆண்டறிக்கை வழங்கும் சமயம், படிப்பை விடவும் பண்புக்கும், நடத்தைக்குமே முக்கியத்துவம் தந்து பேசுவதும் வியப்பளிக்கும்.

சென்றவாரம், சூர்யாவின் பள்ளியில் open day. அனைத்து மாணவர்களின் பெற்றோரும் அரங்கத்தில் நிறைந்திருக்க, மாணவர்கள் தங்களுடைய project, assignment, posters போன்றவற்றை காட்சிக்கு வைத்திருந்தனர். மிக சுமாரான ஒரு ப்ராஜக்டையும் ஆசிரியர்கள் சிலாகித்துப் பாராட்டினர்.

மேடையேறிய ஒரு மாணவன் பயத்தாலோ, சபைக் கூச்சத்தாலோ presentation ஐ ஒழுங்காக செய்யாமல் சொதப்பிய பின்னும் அவனை, மேடையில் மெச்சினார் தலைமை ஆசிரியர். இத்தனைப் பேருக்குமுன் இவன் இந்த அளவு செய்தது மிகவும் பாராட்டவேண்டிய விஷயம் என்றார். குறைகளைப் புறம்தள்ளி நிறைகளை மட்டுமே கணக்கிலெடுத்துக்கொள்ளும் பள்ளி நிர்வாகத்தைப் பார்க்க வியப்போடு ஒரு கேள்வியும் எழுந்தது.

இதுபோன்று நம் நாட்டில் எத்தனை ஆசிரியர்கள் மாணவர்களை ஊக்குவிக்கிறார்கள்? அவனா? அவன் சொதப்புவான், நீ பேசு என்று நன்றாய்ப் பேசும் மாணவனைதான் presentation செய்ய அனுமதிப்பார்கள், இல்லையா? மேடையில் ஒருவன் சொதப்பினாலும் பள்ளியின் மானமே போய்விட்டது என்று புலம்புவார்கள். இல்லையென்று எவராலும் மறுக்கமுடியாது.

நான் ஆறாம் வகுப்புப் படிக்கும்போது, நடந்த நிகழ்வொன்று நினைவுக்கு வருகிறது. பள்ளிக் கலைவிழா. நாட்டியத்தில் எனக்கும் ஒரு பங்கு. அதற்குப் பட்டுப்புடவை வேண்டுமென்று கடைசிநேரத்தில்தான் ஆசிரியர் சொன்னார். என் அம்மாவிடம் பட்டுப்புடவை இல்லை என்று சொல்ல, அத்தனை மாணவர்கள் முன்னும், ‘பட்டுப்புடவை இல்லாத வீடு ஒரு வீடா? பட்டுப்புடவை இல்லாமல் யாராவது இருப்பார்களா? ஏன் பொய் சொல்கிறாய்?’ என்று ஆசிரியர் கேலிபேசிக் கடிந்ததோடு, என்னை நாட்டிய நிகழ்விலிருந்து நீக்கிவிட்டார். ஒரு மாத காலத்துக்கும் மேலாய் ஒத்திகை பார்த்து, பரவசத்துடன் எதிர்பார்த்திருந்த அந்நாளில் ஒரு பார்வையாளராய் அமர்ந்திருந்தபோது என் மனம் பட்ட பாடு சொல்லி மாளாது. இதுபோல் பல சூழல்களை சந்தித்தக் காரணமோ என்னவோ, மாணவர்களைப் பலர்முன் கடியாத ஆசிரியர்களின் போக்கு மனதை மிகவும் கவர்ந்துவிடுகிறது.

வெண்ணிலாவின் பள்ளியில் நடந்த ஒரு நிகழ்வையும் குறிப்பிட விரும்புகிறேன். வெண்ணிலாவின் உயிரியல் பாட வகுப்பு அது. அவள் படித்துக்கொண்டிருக்கிறாள். ஆசிரியை அவளருகில் வந்து அவள் காதோரம் குனிந்து ஒரு கேள்வியை மிகவும் ரகசியமாய்க் கேட்கிறார்.

‘வெண்ணிலா, நீ ஒரு இந்துப்பெண்தானே?’

‘என்ன?’

‘மன்னிக்கவேண்டும் வெண்ணிலா, இப்படிக் கேட்பதால் என்னை இனவெறியாளர் என்று நினைத்துவிடாதே… நீ ஒரு இந்துப்பெண்தானே?’

‘ஆ..ஆமாம்..’

‘அடுத்தவாரம் பரிசோதனை வகுப்பில் நாம் கண்ணின் குறுக்குவெட்டுத்தோற்றம் பற்றிப் படிக்கவிருக்கிறோம். தெரியும்தானே?’

‘ம். தெரியும்’

‘அதற்கு உனக்கு சம்மதமா?’

‘ஆமாம்.’

‘நீ ஒரு இந்துப்பெண் என்பதால்தான் கேட்கிறேன். பசுவின் கண்ணைத்தான் அறுத்துப் படிக்கப்போகிறோம்’

‘அதனால் என்ன?’

‘உனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லையா?’

‘எனக்குப் புரியவில்லை, டீச்சர். அதில் என்ன பிரச்சனை இருக்கிறது?’

‘இந்துக்கள் பசுவைத் தெய்வமாக கும்பிடுவதால் அதன் கண்ணை ஆராய்ச்சிக்கெனவும் அறுக்கத் தயங்குகிறார்கள் இந்துப்பெண்கள். மூன்று மாணவிகள் என்னிடம் தனியே வேண்டியதால் நான் அவர்களுக்கு ஆட்டின் கண்களை ஆர்டர் செய்துவிட்டேன். மற்ற அனைவருக்கும் பசுவின் கண்கள் கிடைக்கும். நீயும் ஒரு இந்துப்பெண் என்பது இப்போதுதான் எனக்கு நினைவுக்கு வந்தது. நீ ஒருவேளை கேட்க மறந்துவிட்டாயோ அல்லது தயங்குகிறாயோ என்றுதான் நான் கேட்கிறேன்.’

‘பாடத்தில் நான் இறை நம்பிக்கையைத் திணிப்பதில்லை, டீச்சர், அதனால் எனக்கு பசுவின் கண்களையே கொடுங்கள்.’

‘மிகவும் மகிழ்ச்சி வெண்ணிலா. மாட்டின் கண்களை விட ஆட்டின் கண்கள் விலை அதிகம் என்பதை விடவும், அளவில் முன்னது பெரியதாய் இருப்பதால் குறுக்குவெட்டுத்தோற்றம் பற்றிப் படிக்க எளிதாய் இருக்கும். நன்றி வெண்ணிலா. உன் மதம் பற்றிப் பேசியதற்கு என்னை மன்னித்துவிடு’

அவ்வளவுதான். விலகிவிட்டார் ஆசிரியை. இந்நிகழ்வு பற்றி என்ன சொல்ல? தனியொரு மாணவியின் மத நம்பிக்கைக்கு இடையூறு வந்துவிடக்கூடாது என்று நினைத்து, அதை மற்ற மாணவிகள் முன் பகிரங்கமாய்க் கேட்காமல் தனியே விசாரித்ததோடு, அப்படிக் கேட்டதால் அவள் மனம் புண்பட்டிருக்குமோ என்று மன்னிப்பும் கேட்ட ஆசிரியை பற்றி என்ன சொல்வது? ஒரு நல்லாசிரியரின் இலக்கணம் அல்லவா அது?

ஆஸ்திரேலியப் பள்ளிகள் பற்றி நான் எழுதியதை என் வலைப்பூ மூலம் படித்த ஒருவர், தான் ஒரு ஆசிரியர் என்றும், இப்பதிவின் மூலம் தான் பல உபயோகமானக் கருத்துகளை எடுத்துக்கொண்டு அதன்படி மாணவர்களிடம் நடந்துகொள்வதாகவும், தலைமை ஆசிரியரிடம் பரிந்துரைத்து பல நல்ல திட்டங்களை அடுத்தக் கல்வியாண்டிலிருந்து செயல்படுத்த இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதைவிடவும் மகிழ்வும் மனநிறைவும் வேறெதில் எனக்குக் கிடைக்கக் கூடும்?

(இன்னும் சொல்வேன்)

கலைவேந்தன்
19-08-2012, 04:01 PM
(1)

ஆஸ்திரேலியாவில் இருப்பதால் நான் அக்கல்விமுறையைத் தலையில் வைத்துக் கொண்டாடி இந்தியக் கல்விமுறையைக் கேவலப்படுத்துவதாக எவரும் எண்ணுவீர்களாயின் அதற்காக நான் வருந்துகிறேன். நல்லவை எங்கு இருந்தாலும் பாராட்டுவோம். தவறு எங்கிருந்தாலும் சுட்டிக்காட்டுவோம் என்னும் தார்மீக மனப்பான்மையும் நம் கல்விமுறையிலும் இது போன்ற நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டால் பல மாணவர்களின் மனக்குமைவும் மயானப்பயணமும் தவிர்க்கப்படலாமே என்னும் ஆதங்கமும்தான் அடிப்படை. புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

மிக அருமையான கல்விபற்றிய அலசலை வாசிக்க நேர்ந்தமைக்கு பெருமைப்படுகிறேன். நீங்கள் சொல்லும் ஆஸ்திரேலியக் கல்விமுறை இங்கும் இருந்தால் எத்தனையோ மாணவர்களின் தற்கொலைகளையும் மன அழுத்தத்தால் மரத்துப்போய் முடமாகும் பிஞ்சுகளையும் காப்பாற்றலாம்.

அடுத்த பகுதியும் வாசிக்கிறேன். பாராட்ட சொற்களே இல்லை கீதம்..

கலைவேந்தன்
20-08-2012, 05:49 PM
இன்று இரண்டாம் பகுதி வாசித்தேன். ஆஸியில் கல்விமுறை அங்கே வழங்கப்படும் பல்வித வாய்ப்புகள் அனைத்தும் கண்டு வியந்தேன். இதை எல்லாம் பலமுறை வெளிநாடுகள் சென்று வரும் நம் அரசியல்வாதிகள் கண்டு அதனை இந்தியாவிலும் நடைமுறைப்படுத்த முன்வரமாட்டார்களா என்று ஏங்க வைக்கும் படி இருந்தது.

இன்னும் மனனம் செய்யும் கல்விமுறையைக் கட்டி அழும் இந்திய கல்வியாளர்கள் மறுபரிசீலனை செய்யவேண்டும்.

இன்னும் வாசித்து கருத்து அளிப்பேன் கீதம்..

நாஞ்சில் த.க.ஜெய்
20-08-2012, 06:14 PM
கல்விமுறை சிறப்பானதாக இருந்தாலும் இது இக்கரைக்கு அக்கறை பச்சை என்பதில் மாற்றமேதும் இல்லை ...இருக்கும் இடத்திற்கேற்றவாறு சூழ்நிலை அமையும்மென்பது நிஜம் ..இங்கே அது சாத்தியாமாவது கனவு...தொடருங்கள் கீதம் அவர்களே....

A Thainis
21-08-2012, 09:54 PM
"ஆசிரியர்கள் மாணவர்களிடம் பழகும் விதமும், தவறு செய்பவர்களைத் தனிமையில் கண்டிக்கும் செயலும் மிகவும் குறிப்பிடத்தக்கவை. மேலும் பெற்றோர்களிடம் பிள்ளைகளின் ஆண்டறிக்கை வழங்கும் சமயம், படிப்பை விடவும் பண்புக்கும், நடத்தைக்குமே முக்கியத்துவம் தந்து பேசுவதும் வியப்பளிக்கும்."

இந்த வரிகள் ஆரோக்கியமான கல்வி முறைக்கு நிச்சயம் வழிவகுக்கும். அருமையான கருத்துக்களை, புதிய கல்வி முறைக்கு பகிர்ந்து வரும் கீதம் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

கீதம்
23-08-2012, 05:38 AM
மிக அருமையான கல்விபற்றிய அலசலை வாசிக்க நேர்ந்தமைக்கு பெருமைப்படுகிறேன். நீங்கள் சொல்லும் ஆஸ்திரேலியக் கல்விமுறை இங்கும் இருந்தால் எத்தனையோ மாணவர்களின் தற்கொலைகளையும் மன அழுத்தத்தால் மரத்துப்போய் முடமாகும் பிஞ்சுகளையும் காப்பாற்றலாம்.

அடுத்த பகுதியும் வாசிக்கிறேன். பாராட்ட சொற்களே இல்லை கீதம்..


இன்று இரண்டாம் பகுதி வாசித்தேன். ஆஸியில் கல்விமுறை அங்கே வழங்கப்படும் பல்வித வாய்ப்புகள் அனைத்தும் கண்டு வியந்தேன். இதை எல்லாம் பலமுறை வெளிநாடுகள் சென்று வரும் நம் அரசியல்வாதிகள் கண்டு அதனை இந்தியாவிலும் நடைமுறைப்படுத்த முன்வரமாட்டார்களா என்று ஏங்க வைக்கும் படி இருந்தது.

இன்னும் மனனம் செய்யும் கல்விமுறையைக் கட்டி அழும் இந்திய கல்வியாளர்கள் மறுபரிசீலனை செய்யவேண்டும்.

இன்னும் வாசித்து கருத்து அளிப்பேன் கீதம்..

ஆஸ்திரேலியப் பள்ளிகள் பற்றிய தொடரைப் படித்தும் கருத்திட்டும் ஊக்கமளிக்கும் தங்களுக்கு மனம் நிறைந்த நன்றி கலைவேந்தன். தங்கள் பாராட்டுகளுக்கு மிகவும் நன்றி.

கீதம்
23-08-2012, 05:41 AM
கல்விமுறை சிறப்பானதாக இருந்தாலும் இது இக்கரைக்கு அக்கறை பச்சை என்பதில் மாற்றமேதும் இல்லை ...இருக்கும் இடத்திற்கேற்றவாறு சூழ்நிலை அமையும்மென்பது நிஜம் ..இங்கே அது சாத்தியாமாவது கனவு...தொடருங்கள் கீதம் அவர்களே....

நீங்கள் சொல்வது உண்மைதான். மற்ற விஷயங்களில் மாற்றம் ஏற்பட வழியில்லையென்றாலும், ஆசிரியர்களும் பெற்றோர்களும் மாணவர்களைக் கையாளும் விதத்திலும், கண்டிப்பு காட்டும் நேரத்திலும் சற்றே அவர்களின் மனநிலையறிந்து செயல்படுதல், சாத்தியமற்ற செயலில்லையே... ஊக்கமிகுப் பின்னூட்டத்துக்கு நன்றி ஜெய்.

கீதம்
23-08-2012, 05:47 AM
"ஆசிரியர்கள் மாணவர்களிடம் பழகும் விதமும், தவறு செய்பவர்களைத் தனிமையில் கண்டிக்கும் செயலும் மிகவும் குறிப்பிடத்தக்கவை. மேலும் பெற்றோர்களிடம் பிள்ளைகளின் ஆண்டறிக்கை வழங்கும் சமயம், படிப்பை விடவும் பண்புக்கும், நடத்தைக்குமே முக்கியத்துவம் தந்து பேசுவதும் வியப்பளிக்கும்."

இந்த வரிகள் ஆரோக்கியமான கல்வி முறைக்கு நிச்சயம் வழிவகுக்கும். அருமையான கருத்துக்களை, புதிய கல்வி முறைக்கு பகிர்ந்து வரும் கீதம் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இந்தத் தொடரைப் படித்ததுடன் கருத்திட்டு ஊக்கமளிக்கும் தங்களுக்கு மனமார்ந்த நன்றி தைனிஸ்.

நாஞ்சில் த.க.ஜெய்
23-08-2012, 03:29 PM
சுய சிந்தனையை மழுங்கடித்துவிட்டு புத்தக கல்வியினை வாழ்வென கொண்டு இன்றைய இயந்திரமாக உலவும் பெற்றோர் இதனை படித்துணர்ந்தாலும் நாளைய தலைமுறையை புரிந்து கொள்ள பரவ வேண்டும் இந்த கல்வி முறையின் பயன் மற்றும் அதனால் எவரும் தோல்வியுறவில்லை என்ற உண்மையும்(?) ...

ஆசிரியர்களும் பெற்றோர்களும் மாணவர்களைக் கையாளும் விதத்திலும், கண்டிப்பு காட்டும் நேரத்திலும் சற்றே அவர்களின் மனநிலையறிந்து செயல்படுதல், சாத்தியமற்ற செயலில்லையே...
அக்கா இங்கே இன்று கல்விமுறையில் மருத்துவம் பொறியியல் இவ்விரண்டிற்கும் உள்ள வாய்ய்பு மற்றும் இதன் மூலம் பெற்றோர் காணும் கனவு ஒரு வீடு இரண்டு கார் ...இதனை மற்ற கல்வி துறையிலும் ஈடுபட்டாலும் பெற முடியும் என்ற எண்ணம் மேலோங்கும் வரை எவ்வித முனேற்றமும் கிடையாது ...அது வரையிலும் இந்த அழுத்தம் வரும் தலைமுறைக்கு தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் ..அதே நேரம் குழந்தைகளின் விருப்பம் அறியும் பெற்றோர் இது போல் குழந்தைகளின் விருப்பதிற்கேற்றார் போல் நடந்து கொள்ளவும் வாய்ப்புண்டு..

கலைவேந்தன்
24-08-2012, 04:05 AM
மூன்றாம் பகுதி இன்று வாசித்தேன். அசந்துவிட்டேன். மாநிலங்களுக்கிடையில் பிறந்த தேதி விதிமுறைகள் மாறுபட்டாலும் புரிதல் தன்மையும் இருந்ததைக் கண்டு வியந்தேன்.

நீச்சல் மற்றும் விளையாட்டுகளுக்கு மாணவர்களுக்கு கணிசமான நேரம் ஒதுக்கவேண்டும் என்பது ஓர் ஆசிரியராக நான் பெரிதும் சிபாரிசு செய்யும் விடயம். உடல் நலம் மேம்பட்டால்தான் அறிவு வளர்ச்சி அதிகரிக்கும் என்பது எனது திண்மையான கருத்து. இன்று இந்தியாவில் விளையாட்டுக்கு பெரிதாக இடம் ஒதுக்காமை வருந்தத்தக்கது. ஆஸியில் விளையாட்டுக்கும் முக்கியமாக உயிர்காக்கும் நீச்சலுக்கும் முக்கியத்துவம் தருதல் போற்றத்தக்கது.

என்றாலும் நீச்சல் உடை விடயத்தில் சற்று இளகல் தன்மையுடன் முழு ஸ்விம் சூட் ( உடலின் பாகம் தெரியாமல் அதே சமயம் நீச்சலுக்கும் இடையூறு இல்லாமல் உடை ) அறிமுகப்படுத்தினால் வரவேற்பு கூடலாம். பொதுவாக சிறுமியர்கள் இந்தமாதிரி நீச்சல் உடை அணிவது சற்று தயங்கவேண்டிய விடயமாயிருப்பினும் நல்ல விடயங்களுக்காக பெற்றோர்கள் கொஞ்சம் தாராளம் காட்டலாம்.


பள்ளி வளாகத்தில் நான் கண்ட ஒரு சம்பவம். ஒரு ஆசிரியர் புல்தரையினூடே ஓடிய ஒரு மாணவனைப் பார்த்து, “Could you please use the proper walkway, darling?” என்கிறார். அவன் “I am Sorry ms. martin” என்று கூறி நடைபாதைக்கு வருகிறான். அதுவரையில் நடந்தவை சரி. அதன்பிறகு அந்த ஆசிரியை அவனிடம் சொன்னதுதான் என்னை வியப்பின் உச்சம் கொண்டு சென்றது. “Thank you, sweetheart” என்று புன்னகை மாறாமல் சொல்லிச் சென்றார். ஈரப்புல் வழுக்கிவிட்டுவிடும் என்பதால் புல்வெளியில் நடக்கக்கூடாது என்பது பள்ளி விதிகளுள் ஒன்று. அதை மீறி ஓடிய மாணவனை கண்டிக்காமல் தன்மையாக உரைத்தது ஒரு ஆச்சரியம். அவன் சரியான பாதைக்கு வந்ததும் அவனைப் பாராட்டியது மற்றொரு ஆச்சரியம்.

இந்த சம்பவம் மிக மிக வியப்பைத்தந்தது. இந்தியாவிலும் என்னைப்போன்ற சில ஆசிரியர்கள் நல்லதை மனமுவந்து பாராட்டி ஊக்குவிக்கும் வண்ணம் இருந்தபோதிலும் முழுமையாக அனைத்து ஆசிரியர்களும் கடைபிடிக்கவேண்டிய கொள்கை இது.

பேச்சு நாகரிகம் என்பது பள்ளியில் தான் துவங்குகிறது என்பேன். பல நேரம் மாணவர்களை நீங்கள் ( ஆப் ) வாருங்கள் ( ஆயியே ) புத்தகம் திறவுங்கள் ( கிதாப் கோலியே ) போன்ற அவை நாகரிகம் பொருந்தியவண்ணம் நான் பேசினாலும் மற்ற ஆசிரியர்களின் தூ தூ மே மே ( நீ வா போ ) முறைகளினால் பழக்கப்பட்ட மாணவர்கள் என்னை அதிசயமாய் பார்க்கும்போது கொஞ்சம் சங்கடம் வருவதுண்டு. இருப்பினும் தனித்து தென்படுவதுதானே சிறப்பு என எண்ணி நான் தயக்கம் காட்டுவதே இல்லை.

மொத்தத்தில் பண்பாடு பழக்க வழக்கம் ஆகியன பள்ளியில் பெறும் மாணவர்கள்தான் சமூகத்தில் சிறந்த குடிமகன்களாக திகழமுடியும்.

மிக அருமையான கட்டுரைத்தொடருக்கு மீண்டும் நன்றி கீதம். இனி அடுத்த பகுதி தொடர்கிறேன். ( நேரம் கிடைப்பது அரிதாகையால் மெல்ல மெல்ல வாசிக்கிறேன் )

செல்வா
25-08-2012, 05:30 AM
மன்றத்தின் முத்துக்களில் தலைசிறந்த நன்முத்து இது.
இந்தத் திரிக்கு முன்னுரிமை தந்து தொடருமாறு அன்புடன் கேட்கிறேன் அக்கா.

கீதம்
25-08-2012, 06:54 AM
சுய சிந்தனையை மழுங்கடித்துவிட்டு புத்தக கல்வியினை வாழ்வென கொண்டு இன்றைய இயந்திரமாக உலவும் பெற்றோர் இதனை படித்துணர்ந்தாலும் நாளைய தலைமுறையை புரிந்து கொள்ள பரவ வேண்டும் இந்த கல்வி முறையின் பயன் மற்றும் அதனால் எவரும் தோல்வியுறவில்லை என்ற உண்மையும்(?) ...

அக்கா இங்கே இன்று கல்விமுறையில் மருத்துவம் பொறியியல் இவ்விரண்டிற்கும் உள்ள வாய்ய்பு மற்றும் இதன் மூலம் பெற்றோர் காணும் கனவு ஒரு வீடு இரண்டு கார் ...இதனை மற்ற கல்வி துறையிலும் ஈடுபட்டாலும் பெற முடியும் என்ற எண்ணம் மேலோங்கும் வரை எவ்வித முனேற்றமும் கிடையாது ...அது வரையிலும் இந்த அழுத்தம் வரும் தலைமுறைக்கு தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் ..அதே நேரம் குழந்தைகளின் விருப்பம் அறியும் பெற்றோர் இது போல் குழந்தைகளின் விருப்பதிற்கேற்றார் போல் நடந்து கொள்ளவும் வாய்ப்புண்டு..

தங்கள் கருத்துநிறைப் பின்னூட்டத்துக்கு நன்றி ஜெய்.

கீதம்
25-08-2012, 06:57 AM
மூன்றாம் பகுதி இன்று வாசித்தேன். அசந்துவிட்டேன். மாநிலங்களுக்கிடையில் பிறந்த தேதி விதிமுறைகள் மாறுபட்டாலும் புரிதல் தன்மையும் இருந்ததைக் கண்டு வியந்தேன்.

நீச்சல் மற்றும் விளையாட்டுகளுக்கு மாணவர்களுக்கு கணிசமான நேரம் ஒதுக்கவேண்டும் என்பது ஓர் ஆசிரியராக நான் பெரிதும் சிபாரிசு செய்யும் விடயம். உடல் நலம் மேம்பட்டால்தான் அறிவு வளர்ச்சி அதிகரிக்கும் என்பது எனது திண்மையான கருத்து. இன்று இந்தியாவில் விளையாட்டுக்கு பெரிதாக இடம் ஒதுக்காமை வருந்தத்தக்கது. ஆஸியில் விளையாட்டுக்கும் முக்கியமாக உயிர்காக்கும் நீச்சலுக்கும் முக்கியத்துவம் தருதல் போற்றத்தக்கது.

என்றாலும் நீச்சல் உடை விடயத்தில் சற்று இளகல் தன்மையுடன் முழு ஸ்விம் சூட் ( உடலின் பாகம் தெரியாமல் அதே சமயம் நீச்சலுக்கும் இடையூறு இல்லாமல் உடை ) அறிமுகப்படுத்தினால் வரவேற்பு கூடலாம். பொதுவாக சிறுமியர்கள் இந்தமாதிரி நீச்சல் உடை அணிவது சற்று தயங்கவேண்டிய விடயமாயிருப்பினும் நல்ல விடயங்களுக்காக பெற்றோர்கள் கொஞ்சம் தாராளம் காட்டலாம்.



இந்த சம்பவம் மிக மிக வியப்பைத்தந்தது. இந்தியாவிலும் என்னைப்போன்ற சில ஆசிரியர்கள் நல்லதை மனமுவந்து பாராட்டி ஊக்குவிக்கும் வண்ணம் இருந்தபோதிலும் முழுமையாக அனைத்து ஆசிரியர்களும் கடைபிடிக்கவேண்டிய கொள்கை இது.

பேச்சு நாகரிகம் என்பது பள்ளியில் தான் துவங்குகிறது என்பேன். பல நேரம் மாணவர்களை நீங்கள் ( ஆப் ) வாருங்கள் ( ஆயியே ) புத்தகம் திறவுங்கள் ( கிதாப் கோலியே ) போன்ற அவை நாகரிகம் பொருந்தியவண்ணம் நான் பேசினாலும் மற்ற ஆசிரியர்களின் தூ தூ மே மே ( நீ வா போ ) முறைகளினால் பழக்கப்பட்ட மாணவர்கள் என்னை அதிசயமாய் பார்க்கும்போது கொஞ்சம் சங்கடம் வருவதுண்டு. இருப்பினும் தனித்து தென்படுவதுதானே சிறப்பு என எண்ணி நான் தயக்கம் காட்டுவதே இல்லை.

மொத்தத்தில் பண்பாடு பழக்க வழக்கம் ஆகியன பள்ளியில் பெறும் மாணவர்கள்தான் சமூகத்தில் சிறந்த குடிமகன்களாக திகழமுடியும்.

மிக அருமையான கட்டுரைத்தொடருக்கு மீண்டும் நன்றி கீதம். இனி அடுத்த பகுதி தொடர்கிறேன். ( நேரம் கிடைப்பது அரிதாகையால் மெல்ல மெல்ல வாசிக்கிறேன் )

மிகவும் ஆழ்ந்து வாசித்துக் கருத்தினைப் பகிர்வதற்கு நன்றி கலைவேந்தன். மாணவர்களை மதிக்கும் விதமாய், ஒரு நல்ல ஆசிரியருக்கு முன்னுதாரணமாய் விளங்குவதற்குப் பாராட்டுகள். நேரம் கிடைக்கும்போது வாசியுங்கள். தாங்கள் வாசிப்பதே எனக்கு மகிழ்வைத் தருகிறது. பின்னூட்டமிட்டு கருத்தினைப் பகிர்வதற்கு மிகவும் நன்றி.

கீதம்
25-08-2012, 06:58 AM
மன்றத்தின் முத்துக்களில் தலைசிறந்த நன்முத்து இது.
இந்தத் திரிக்கு முன்னுரிமை தந்து தொடருமாறு அன்புடன் கேட்கிறேன் அக்கா.

உங்கள் ஊக்கமிகுப் பின்னூட்டத்துக்கு நன்றி செல்வா. பகிரத் தோன்றும் எண்ணங்கள் தோன்றுந்தோறும் நிச்சயம் தொடர்வேன்.

கலைவேந்தன்
28-08-2012, 03:32 AM
நான்காம் பகுதி வாசித்தேன்.


ஏட்டுக்கல்வியையும் மீறிய வாழ்க்கை ஒன்று நம் கண்ணெதிரில் விரிவதை நாம் கவனிப்பதே இல்லை. மாணவர்களின் திறனை எடைபோட தேர்வு மதிப்பெண்களை மட்டுமே அளவுகோலாகக் கொள்ளுதல் சரிதானா? தங்கத்துக்கும் தக்காளிக்கும் ஒரே தராசைப் பயன்படுத்த இயலுமா? சமச்சீர் கல்விமுறை பற்றி நிறைய அலசப்பட்டது. அதில் இன்றும் எனக்கு இருக்கும் சந்தேகம் இதுதான். உணவு, உடை, இருப்பிடம், வாழ்க்கைத்தரம், சுகாதாரம், வருமானம், வசதி என்று பலவிதத்திலும் நகரவாழ்க்கையோடு சமச்சீர் நிலையை அடைந்திராத மக்களுக்கு வெறும் பாடப்புத்தகங்கள் மூலம் அளிக்கப்படும் கல்வி மட்டும் எப்படி சமச்சீர் நிலையை உருவாக்கும்?

சமச்சீர்கல்வி குறித்த எனது கருத்து முழுக்க முழுக்க இதுவேதான் கீதம். வியப்படைகிறேன்.கருத்து ஒற்றுமையைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன்.

அங்குள்ள கல்விநிறுவனங்களின் நிலைமையையும் அரசியல் புகுந்திடாத நேர்மையையும் அங்கிருக்கும் அரசியல்வாதிகளின் நேர்மை மற்றும் பதவிப்பித்தில்லாத தன்மை ஆகியன அறிந்து வியந்தேன்.

கோமாவில் இருந்தாலும் கூட பதவி விலகாத அரசியல் வாதிகள் இருக்கும் நம் நாட்டில் இருந்துகொண்டு பெருமூச்சு விடத்தான் முடிகிறது.

பாராட்டுகள் கீதம். இனி ஐந்தாம் பகுதி வாசித்துக் கருத்து உரைப்பேன்.

கீதம்
06-09-2012, 10:44 PM
நான்காம் பகுதி வாசித்தேன்.



சமச்சீர்கல்வி குறித்த எனது கருத்து முழுக்க முழுக்க இதுவேதான் கீதம். வியப்படைகிறேன்.கருத்து ஒற்றுமையைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன்.

அங்குள்ள கல்விநிறுவனங்களின் நிலைமையையும் அரசியல் புகுந்திடாத நேர்மையையும் அங்கிருக்கும் அரசியல்வாதிகளின் நேர்மை மற்றும் பதவிப்பித்தில்லாத தன்மை ஆகியன அறிந்து வியந்தேன்.

கோமாவில் இருந்தாலும் கூட பதவி விலகாத அரசியல் வாதிகள் இருக்கும் நம் நாட்டில் இருந்துகொண்டு பெருமூச்சு விடத்தான் முடிகிறது.

பாராட்டுகள் கீதம். இனி ஐந்தாம் பகுதி வாசித்துக் கருத்து உரைப்பேன்.

தங்கள் தொடர் வாசிப்பும் அதற்கானக் கருத்துப்பகிர்வுகளும் மிகுந்த மகிழ்ச்சியையும் நிறைவையும் தருகின்றன. நல்லதொரு அலசலின் அடிப்படையில் இடும் கருத்துகள் மேலும் எழுதும் ஆர்வத்தைத் தூண்டுகின்றன. மனமார்ந்த நன்றி கலைவேந்தன்.