PDA

View Full Version : பாழடைந்த வீடு..



PremM
14-01-2012, 07:41 AM
திறக்காத கதவுகளின் பின்னால்,
கற்பனைகளும்,
கதைகளும் வாசல் முட்டி
நிற்கின்றன...

காற்றோ ,
வெளிச்சமோ
தீண்டாத சுவர்களில்,
சுவாரஸ்யமான பலப் பொய்கள்
படிந்து கிடக்கின்றன..


காலுடைந்தக் கிழவன்
கயிற்றுக் கட்டிலில் காத்திருக்கிறான்..- இது பாட்டி

இரு தலைகளோடு,
இரும்புக் கரங்களும்,
அவனது உருவமென
என்னுள் திணித்தாள்
சோற்றுப் பருக்கையோடு.. இது அம்மா

இமைகள் இல்லாத கண்களுடனும்,
நகங்கள் இல்லாத விரல்களுடனும்
இரவில் கண்டதாய்
அள்ளித் தெளித்தான் முத்து..
அதனை அவரசமாய் ஆமோதித்தான்
வரதன்..

உறைந்த ரத்தத்தோடு,
கால்கள் இரண்டு,
மேஜை மேல் கிடந்ததாய் கடைசிச் செய்தி..

ஆண்டுகள் கடந்தும்,
திறக்கப்படாத அந்த கதவுகளைக் கண்டதும்
"ஏன் அப்பா அந்தக் கதவு மூடியே இருக்கு?" - இது மகன்

என்னுள் தயாராகிக் கொண்டிருந்தது
அடுத்த பொய்..

கீதம்
18-01-2012, 04:29 AM
பாழடைந்த வீடுகளுக்கான கதைகளும் கற்பனைகளும் தலைமுறைக்கும் தவறாமல் கடத்தப்படும் யதார்த்தம். இக்கதைகளுக்கு முடிவு கட்ட இரண்டே வழிகள்தாம். ஒன்று அடிப்படையற்ற நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்ட பகுத்தறியும் திறனை அடுத்த தலைமுறையிடம் உருவாக்குவது அல்லது ரியல் எஸ்டேட் காரர்கள் அவ்விடத்தை ஆக்கிரமித்து பன்மாடிக்கட்டடங்களை உருவாக்குவது.

(சென்னையில் நாங்கள் குடியிருந்த தெருவில் பதினைந்து வருடங்களாக பாழடைந்து கிடந்த வீடு ஒன்று இப்படித்தான் இரண்டாவது வழியில் பேய்வீடு என்ற பெயரிலிருந்து சூப்பர் வீடாக மாறியது. )

ஜானகி
19-01-2012, 12:11 AM
பாழடைந்த வீடானாலும், கற்பனைகள் பலவற்றைத் தன்னிலிருந்து பிறக்கவிட்ட வீடாயிற்றே....? கவனிக்கத்தான் வேண்டும்...

M.Jagadeesan
19-01-2012, 12:21 AM
பாழடைந்த வீடாக இருந்தாலும் அல்லது பேய் வசிக்கும் வீடாக இருந்தாலும் வாடகைக்கு விட்டால் வந்து விடுவார்கள். கற்பனையும், கவிதையும் மிகவும் நன்று.

PremM
21-01-2012, 08:03 PM
நன்றி கீதம்,ஜானகி & ஜகதீசன்..

உண்மை தான்..இந்தக் கவிதையும் அப்படி ஓர் பாதிப்பில் உருவானதே..
குழந்தைப் பருவத்தில் நான் கண்டதோர் பாழடைந்த வீட்டின்
நினைவுகள் இன்னமும் ஆங்காங்கே தங்கி இருக்கின்றன..