PDA

View Full Version : திருந்தா முண்டம்M.Jagadeesan
12-01-2012, 01:18 AM
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால்
மதுரை மாநகரில்
தலையற்ற முண்டம் ஒன்று
தனியே நடந்து வரக்கண்டு
குலைநடுங்கிய மனத்தினராய் மக்கள்
சிதறி ஓடினர் திசைக்கு ஒருவராய்.

அவருள்ளும்
மாடலன் என்னும் பெயர்கொண்ட
மறையோன் ஒருவன் முண்டத்தை அணுகி

"கண்டவர் நடுங்க மதுரை வீதியில்
தண்டமாய் அலையும் முண்டமே! யார் நீ?"
எனக்கேட்க

நீர்வார் கண்ணும் நிமிர்ந்த நடையும்
கார்குழல் விரித்து கண்டவர் நடுங்க
மதுரை வீதியில் முன்னம் ஓர்நாள்
அதிர நடந்து அவைக்களம் ஏகி
காவலன் முன்னே காற்சிலம்பு உடைத்து
கணவன் கொண்ட பழிச்சொல் துடைத்த
கண்ணகி கேள்வன் கோவலன் யானே!
ஆவியை நீத்த அற்றை நாள்முதல்
அமைதி இழந்து தவிக்கின்றேன் யான்
பாவி எந்தன் தலையைக் கொணர்ந்து
பத்திரமாய் என் கைத்தலம் தந்தால்
முண்டம் நீங்கி முழுஉரு பெற்று
கண்டோர் மயங்கும் காளை ஆவேன்

இதைக்கேட்டு
கொலைக்களம் சென்ற மாடல மறையோன்
கோவலன் தலையைத் தேடி எடுத்து
கொண்டுவந்து முண்டத்தின் கைதர

தலையை வாங்கிப் பொருத்திய கோவலன்
நிலைக் கண்ணாடிமுன் தன்உரு கண்டு
பெருகிய மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து
தெருவில் இறங்கி ஓடத் தொடங்கினான்.

அதுகண்டு மாடல மறையோன்
" கண்ணகியைக் காண இத்தனை விரைவா?"
எனக்கேட்க

" இல்லை இல்லை! மாதவி!" என்று உரைத்தது
முண்டம்.

செல்வா
12-01-2012, 03:11 AM
ஞாயம் தானே...
கண்ணகியிடம் திரும்ப வந்ததனால தானே தலை காணாம போச்சு...
மாதவியிடமே இருந்திருந்தா மானம் மட்டும் தானே போயிருக்கும்...
அதான் திரும்ப மாதவியிடமே போயிட்டார் போல...

முண்டம் பேசுவது ??

கவிதைப் பகிர்வுக்கு நன்றி ஐயா...!

தாமரை
12-01-2012, 06:06 AM
நீர்வார் கண்ணும் நிமிர்ந்த நடையும்
கார்குழல் விரித்து கண்டவர் நடுங்க
மதுரை வீதியில் முன்னம் ஓர்நாள்
அதிர நடந்து அவைக்களம் ஏகி
காவலன் முன்னே காற்சிலம்பு உடைத்து
கணவன் கொண்ட பழிச்சொல் துடைத்த
கண்ணகி கேள்வன் கோவலன் யானே!

--------------------------------------------------

முண்டத்திற்கு கண்ணகியின் ஞாபகம் நல்லாவே இருக்கு..

ஆனால் தலைதான் மாதவியை தேடுகிறது..

காரணம் இல்லாமல் இல்லை..

கண்ணகி கணவனுக்கு பணிவிடை செய்ததனால் உடல் மறக்கவில்லை.

மாதவி தன் கலைகளினால் (இசை - காது; நடனம் - கண்; இனிய உணவு - வாய்; நறுமணம் - மூக்கு) மகிழ்வித்ததனால் தலைக்கு மாதவி ஞாபகம்.

M.Jagadeesan
12-01-2012, 07:53 AM
ஞாயம் தானே...
கண்ணகியிடம் திரும்ப வந்ததனால தானே தலை காணாம போச்சு...
மாதவியிடமே இருந்திருந்தா மானம் மட்டும் தானே போயிருக்கும்...
அதான் திரும்ப மாதவியிடமே போயிட்டார் போல...

முண்டம் பேசுவது ??

கவிதைப் பகிர்வுக்கு நன்றி ஐயா...!


முண்டம் பேசுவது கற்பனைதான். இதுபோன்ற இயற்கை இறந்த நிகழ்வுகள் சிலப்பதிகாரத்தில் நிறைய உண்டு.
இடம்பெற்ற கவிதை பகிர்வு அல்ல. சொந்தக் கற்பனையே!

M.Jagadeesan
12-01-2012, 07:59 AM
நீர்வார் கண்ணும் நிமிர்ந்த நடையும்
கார்குழல் விரித்து கண்டவர் நடுங்க
மதுரை வீதியில் முன்னம் ஓர்நாள்
அதிர நடந்து அவைக்களம் ஏகி
காவலன் முன்னே காற்சிலம்பு உடைத்து
கணவன் கொண்ட பழிச்சொல் துடைத்த
கண்ணகி கேள்வன் கோவலன் யானே!

--------------------------------------------------

முண்டத்திற்கு கண்ணகியின் ஞாபகம் நல்லாவே இருக்கு..

ஆனால் தலைதான் மாதவியை தேடுகிறது..

காரணம் இல்லாமல் இல்லை..

கண்ணகி கணவனுக்கு பணிவிடை செய்ததனால் உடல் மறக்கவில்லை.

மாதவி தன் கலைகளினால் (இசை - காது; நடனம் - கண்; இனிய உணவு - வாய்; நறுமணம் - மூக்கு) மகிழ்வித்ததனால் தலைக்கு மாதவி ஞாபகம்.


முண்டத்தின் சிந்தனைக்கும், தலையின் சிந்தனைக்கும் உள்ள வேறுபாட்டைத் தாங்கள் விளக்கிய விதம் மிகவும் நன்று. ஏற்றுக்கொள்ளத் தக்கதே!

கீதம்
12-01-2012, 10:15 AM
திருந்தா முண்டமென்று தீர்ப்பு எழுதியபின் என்ன சொல்ல? இந்த முண்டத்துக்காகவா ஊரையே எரித்தாள் என்று கண்ணகியின் மேல் பச்சாதாபம்தான் எழுகிறது.

நல்ல கற்பனை. அதை கவியாக்கிய விதமும் நன்று. பாராட்டுகள் ஐயா.

தாமரை அவர்கள் சொன்ன காரணமும் ரசிக்கவைத்தது.

தாமரை
12-01-2012, 10:34 AM
தாமரை அவர்கள் சொன்ன காரணமும் ரசிக்கவைத்தது.

இதை நான் சொல்லலீங்க.. சங்கப்பாடலில் சொன்னதை "திருவிளையாடல்" படத்தில் ஏ.பி. நாகராஜன் சொன்னதைத்தான் நான் சொன்னேன்.

இடம் செண்பகப் பாண்டியன் அந்தப்புரம். தன் மனைவியிடம் சங்கப்பாடலளைப் பற்றி உரையாடுமிடத்தில்...
-----------------------------------------------------------------------

மேலோர் நினைப்பர் , கீழோர் மறப்பர் என்பதற்கு என்ன பொருள்?

நல்ல குணமுள்ள மேம்பட்ட மக்கள் நாம் செய்த உதவிகளை நினைவில் எப்பொழுதும் கொண்டிருப்பார்கள்.. ஆனால் கீழ்குணமுள்ளவர்கள் அதனை மறந்து விடுவார்கள்..

அது அவ்வளவு எளிதானதல்ல தேவி.. இதனை இடத்தைக் கொண்டு பொருள் கொள்ளுதல் வேண்டும்.

கணவன் பொருளீட்டுவதற்காக விடைபெற்றுக் கொண்டுச் செல்கிறான். போக மனமின்றித் திரும்பிப் பார்த்துக் கொண்டேச் செல்கிறான். தலைவி எண்ணுகிறாள்...

கீழே இருக்கும் அந்தக் கால்களுக்குத் தான் நான் எத்தனை பணிவிடைகள் செய்திருப்பேன். அவையோ அதையெல்லாம் மறந்து என்னை விட்டு என் தலைவனை நெடுந்தொலைவிற்கு அழைத்துச் செல்கின்றன. ஆனால் மேலே இருக்கும் அந்தக் கண்களுக்கு நான் செய்த பணிவிடைகள் மிகவும் சொற்பம்தான். இருந்து, என்னை திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே செல்கின்றனவே...

என்ன இருந்தாலும் மேலோர் நினைப்பர், கீழோர் மறப்பர்தான்
-----------------------------------------------------------------------

சில வசனங்கள், கவிதைகள் நம்மை விட்டு அவ்வளவு எளிதில் அகன்று விடுவதில்லை. அதன் பாதிப்பே இது..

அக்னி
13-01-2012, 10:28 AM
" இல்லை இல்லை! மாதவி!" என்று உரைத்தது
முண்டம்.

இதுவே கண்ணகி என்ற பதிலுரைத்திருந்தால்,
முன்னாள் முண்டம் என்று கவிஞர் வரைந்திருப்பாரோ...

"இல்லை இல்லை! மாதவி!" என்று உரைத்தததனால்
மீண்டும் முண்டம் ஆகப்போகின்றதோ முன்னால் முண்டம்...???

M.Jagadeesan
13-01-2012, 11:37 AM
கோவலன் "பட்டும் திருந்தவில்லை " என்பதை குறிக்கவே " முண்டம் " என்று எழுதினேன்.

பென்ஸ்
06-02-2012, 05:49 PM
நல்ல ரசிக்க, சிந்திக்க வைத்த கவிதை...
தாமரையின் வரிகள் வழக்கம் போலவெ ரசிக்க வைத்தன

M.Jagadeesan
07-02-2012, 01:31 AM
பென்ஸ் அவர்களின் பாராட்டுக்கு நன்றி.

Dr.சுந்தரராஜ் தயாளன்
01-04-2012, 04:25 PM
மிகவும் அருமையான கவிதை....சிந்திக்கத்தக்கது:)

vasikaran.g
02-04-2012, 03:39 AM
முண்டம் கவிதை தண்டம் போகவில்லை .கவிதை நன்று ..