PDA

View Full Version : ஞானத்தின் விசாலம்Nivas.T
05-01-2012, 12:27 PM
அனைத்தும் அறிந்துவிட்டதாய்
துள்ளிக்குதிக்கிறது ஆணவம்
வக்கிரமும் வாஞ்சையும்
வரிசைகட்டி வந்து நிற்க

தேவையைமிஞ்ச தேடுகிறது ஆசை
அதனை மிஞ்சும் பேரசை
வன்மம் என்பதும் அதர்மம் என்பதும்
பிறப்பெடுக்கும் தருணம்
இதுவாகவே இருக்க
கோபம் பொறாமை கொடிகட்டி நிற்க

மனம் வாடி, துன்பம் தேடி
வாழ்க்கையை உணராமல் வாழ்வதற்கு

ஆறுக்கும் குறைவே நலம்

ஆதவா
05-01-2012, 04:52 PM
இரண்டு தடவை படித்துவிட்டேன், ஏதோ விட்டுப்போனது போல ஒரு உணர்வு.
தவிர தலைப்புக்கும் கவிதைக்கும் தொடர்பு படுத்தி தோற்றுவிட்டேன்.

கவிதை வரிகளை கொஞ்சம் இடமாற்றம் செய்யவேண்டுமோ என்று தோணுகிறது.
ஆசையே எல்லாவற்றிற்கும் காரணம், சும்மாவா புத்தர் சொன்னார்?
ஆசைக்குப் பின்னரே நாம் தேர்ந்தெடுக்கும் பாதை உள்ளது.
நேர்மையையும் ஆசையே தேர்ந்தெடுக்கிறது, அநியாயமும் அவ்வாறே.

தேவையை மிஞ்ச தேடுவது ஆசை அதை மிஞ்சும் பேராசை - கொஞ்சம் குழப்பமான வரிகள், ஆசையில்லாமல் உலகமே இல்லைங்க, பேராசை இல்லாமலும்தான் என்றால் நம்பவா போகிறோம். “அத்தனைக்கும் ஆசைப்படு” என்பது நவீனமொழி. புத்தகங்களை அடுக்கி வைப்பதைப் போல ஆசைகளை அடுக்கிக் கொண்டிருந்தால் அது பேராசை... தப்பில்லை.

ஆசைகளைத் தாண்டி வன்மமும் அதர்மமும் பிறக்கிறது என்கிறது கவிதை, நிராசையில் வன்மமும் நிராகரிப்பில் அதர்மமும் தூக்குகிறது, பேராசை அடைந்தவனுக்கு அதர்மம் தேவையில்லாமல் போய்விடலாம்.

ஆறுக்கும் குறைவே நலம்,

யாருக்கும் என்பதாகவே எடுத்துக் கொண்டேன்... குறைவு என்பது ஒரு எண்ணிக்கைதான், நலம் என்பது அவரவர் மனதில் வைத்திருக்கும் எல்லைக்கோடு! ஆற்றுக்கு குறைவு நலமில்லை என்பதால் நிறைவு என்பதே நலம் என்கிறேன்!

அக்னி
05-01-2012, 05:15 PM
ஆணவம், வக்கிரம், வாஞ்சை, ஆசை, வன்மம், அதர்மம், கோபம், பொறாமை...
இவற்றோடுதான் ஞானமும் என்றால்,
இவையறிந்த ஆறறிவிலும்
அறியாத ஐந்தறிவே மேல்தான்...

ஆதவா
05-01-2012, 05:49 PM
ஆணவம், வக்கிரம், வாஞ்சை, ஆசை, வன்மம், அதர்மம், கோபம், பொறாமை...
இவற்றோடுதான் ஞானமும் என்றால்,
இவையறிந்த ஆறறிவிலும்
அறியாத ஐந்தறிவே மேல்தான்...

அக்னி,

அடுக்கிய இவையனைத்துமே தேவை என்கிறேன். அவரவர் மன எல்லைகளைக் குறைத்துக் கொண்டு அதனாலேயே “யாருக்கும் குறைவே நலம்” என்றேன்.
கர்வத்தின் அதீத வெளிப்பாடு ஆணவம் என்பது என் கருத்து. சிலசமயம் பண்பாடு பாரம்பரிய குணாதிசய வெளிப்பாடுகளில் இவை தேவைப்படலாம்.
சொற்களைக் கலைத்து வக்கிரப்படுத்துதலே கவிதை என்பது போல வக்கிரம் தேவைப்படும், ஒரு டேபிள் ஸ்பூன் அளவு.
ஆனால் “வாஞ்சை” ஏன் வந்தது?
”வன்மம்” மிக அதிக எதிர்பார்ப்பின் உடைப்பில் இருந்து வருகிறது என்றால் அதன்மீது கொண்டுள்ள பற்றினைப் பற்றிய சுயபரிசோதனைக்கு உபயோகம் ஆகும்!
சிலசமயங்களில் தர்மத்தினை வெல்ல அதர்மம் தேவைப்படும் என்று கிருஷ்ணர் கூறுகிறார்.
ரெளத்ரம் பழகு என்பது புதியமொழி. கோபமில்லாத மனிதனுக்கு காரம் தேவையில்லை என்பது என் கருத்து
பொறாமை நிறைய சமயங்களில் அழகாக இருக்கும்.... “உன்னைப் பார்த்து நான் பொறாமைப் படுகிறேன்” என்று பெருமையாக சொல்லப்படுகிறது!!

கமல் சொன்னது மாதிரி கடவுளும் மிருகமும் சேர்த்தால் அது மனிதன். இல்லையென்றால் இரண்டுமில்லை என்றூ சொல்லிவிடுவார்கள். குணங்கள் எல்லாமும் பெற்று அதனதன் எல்லையை வரையறுத்து வாழ்தலே விசாலமான ஞானத்தின் அழகு இல்லையா நிவாஸ்!?

கீதம்
06-01-2012, 09:42 AM
ஆதவா கூறியது போல் வார்த்தைகளில் இடமாற்றம் தேவை. தலைப்பு ஞானத்தின் விலாசம் என்றிருந்திருக்கலாம். வஞ்சம் இருக்கவேண்டிய இடத்தில் வாஞ்சை வழிதவறி வந்ததாய்த் தோன்றுகிறது. மற்றபடி சொல்லியிருக்கும் கருத்தில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. அத்தனையோடும் உடன்பாடே எனக்கு.


பாராட்டுகள் நிவாஸ்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
22-03-2012, 01:30 PM
உங்களை மிகவும் பாராட்டுகிறேன் நிவாஸ்...கவிதை மிகவும் அருமையாக உள்ளது...கடைசி வரியைத் தவிர :mini023: