PDA

View Full Version : உயிர்ப்பதும் மரிப்பதுமாய்....கீதம்
02-01-2012, 08:29 PM
உயிர்ப்பதும் மரிப்பதுமாய்
தினம் தினம் போராட்டம்
இரவுக்கும் பகலுக்குமிடையே!
இரண்டுக்குமான சமரசம்
இன்னமும் உடன்பாடாகவில்லை.

தீராப்பகையின் தீவிரத்தால் தூண்டப்பெற்று,
ஆழ் உறக்கத்திலிருக்கும் இரவின் அடிவயிற்றை
அதிரடியாய்க் குத்திக் கிழிக்கின்றன
அநேக ஒளிக்கதிரம்புகள்!

செங்குருதி சொட்டும் கிரணங்களைக்
கடலிற் கழுவிப் பரிசுத்தமாக்கி
பவனிவருகின்றது பகற்பொழுது!

பார்வைக்கு அடங்காத பளபளப்போடும்
பலம் வாய்ந்த பெருந்திமிரோடும்
நாளெல்லாம் உலாவருகிறது.

குற்றுயிராய்க் காலடியில் கிடக்கும்
கருங்குவியலின் குறுநகையைக்
கவனிக்கத் தவறிய அது,
கர்வத்தின் பாத்திரத்தைக் கவிழ்த்துப் பருகியபடியே
உச்சந்தலையில் ஏறிய வெஞ்சூட்டு போதையுடன்
தள்ளாடிக்கொண்டிருக்கிறது உச்சிப் பொழுதில்!

சாயுங்காலத் தருணம் பார்த்திருந்த இரவு
சத்தமின்றி அதைச் சாய்த்துக் கிடத்தி
தாளாத வேகத்துடன் அதன் பிடறி கவ்வ…
பீறிட்டுத் தெறிக்கிறது செங்குருதிச் சாயம்!
வீறிட்டலறுகிறது வானம்!
விருட்டென்று பதுங்குகின்றன யாவும்!

மங்கிய இருள் மறைத்திருக்கும் பேராபத்துகளோடு
எங்கும் வியாபித்துக் கிடக்கும் இரவானது,
வெற்றியின் களிப்பில் மெய்மறந்து,
முற்றிய அசட்டையில் மனந்திளைத்தபடி
மென்துயில் கொள்ளத் தொடங்குகிறது,
தன்னைத் தானே மெல்ல உயிர்ப்பித்துக்கொண்டிருக்கும்
பகற்பொழுதைப் பற்றிய பிரக்ஞையற்று!

ஜானகி
03-01-2012, 01:06 AM
ஆம், நமக்குள்ளே மயக்கத்துடன் உறங்கிக்கொண்டிருக்கும் ஜீவசக்தியின் நிலையும் இதுதான்....ஒருவிதத்தில். அறியாமை எனும் இருளுக்கும், மெய்ஞானம் எனும் பகலுக்கும் இடையே இடைவிடா போராட்டம்தான்....

அருமையான வெளிப்பாடு !

அக்னி
04-01-2012, 02:28 PM
வென்றது தோற்கத்
தோற்றது வெல்ல
நின்று போகாச் சுழற்சி...

தோற்றதும் முயற்சிப்பதும்
வெல்லும்வரை போராடுவதுமாய்
வெற்றிக்கு முதற்படியாய்த் தோல்வி...

வெல்லும்வரை முயற்சிப்பதும்,
தோற்கடித்ததும்அலட்சியமாவதுமாய்,
தோல்விக்கு முதற்படியாய் வெற்றி...

இருளும் வெளிச்சமும்
வென்றபடியும் தோற்றபடியும்..,
ஏற்றமும் இறக்கமுமான
வாழ்க்கைக்கு உவமானமாய்...

பாராட்டுக்கள் அக்கா...

ஜானகி அம்மாவின் பின்னூட்டம் உள்ளங்கை நெல்லிக்கனியாய்க் கவிக்கருவைக் காட்டுகின்றது...

*****
உதயமும் அஸ்தமனமும்
பகலுக்கு மட்டுமல்ல,
இரவுக்கும்தான்...

இதுவரை அழகாய்த்தெரிந்த காட்சி மாற்றம்..,
முயற்சி > போராட்டம் > வெற்றி > கர்வம் > அலட்சியம் > தோல்வி > (மீண்டும்) முயற்சி...
இதுவரைக்கும் தெரியவில்லையே இந்தச் சுழற்சியாய்...

இரவும் பகலும் சமரசம் ஆகாவிட்டாலும் சமன்பாடாகின்றது நிலையில்லா வாழ்க்கைக்கு...

மீண்டும் பாராட்டுக்கள் அக்கா...

கீதம்
07-01-2012, 12:09 AM
ஆம், நமக்குள்ளே மயக்கத்துடன் உறங்கிக்கொண்டிருக்கும் ஜீவசக்தியின் நிலையும் இதுதான்....ஒருவிதத்தில். அறியாமை எனும் இருளுக்கும், மெய்ஞானம் எனும் பகலுக்கும் இடையே இடைவிடா போராட்டம்தான்....

அருமையான வெளிப்பாடு !

குழந்தையின் கிறுக்கலுக்கும் அழகாய் அர்த்தம் கற்பிக்கும் அன்னையைப் போல என் ஒவ்வொரு கவிதைக்கும் அழகாய் அரும்பதம் உரைக்கும் தங்களுக்கு என் அன்பான நன்றி ஜானகி அம்மா.

வென்றது தோற்கத்
தோற்றது வெல்ல
நின்று போகாச் சுழற்சி...

தோற்றதும் முயற்சிப்பதும்
வெல்லும்வரை போராடுவதுமாய்
வெற்றிக்கு முதற்படியாய்த் தோல்வி...

வெல்லும்வரை முயற்சிப்பதும்,
தோற்கடித்ததும்அலட்சியமாவதுமாய்,
தோல்விக்கு முதற்படியாய் வெற்றி...

இருளும் வெளிச்சமும்
வென்றபடியும் தோற்றபடியும்..,
ஏற்றமும் இறக்கமுமான
வாழ்க்கைக்கு உவமானமாய்...

பாராட்டுக்கள் அக்கா...

ஜானகி அம்மாவின் பின்னூட்டம் உள்ளங்கை நெல்லிக்கனியாய்க் கவிக்கருவைக் காட்டுகின்றது...

*****
உதயமும் அஸ்தமனமும்
பகலுக்கு மட்டுமல்ல,
இரவுக்கும்தான்...

இதுவரை அழகாய்த்தெரிந்த காட்சி மாற்றம்..,
முயற்சி > போராட்டம் > வெற்றி > கர்வம் > அலட்சியம் > தோல்வி > (மீண்டும்) முயற்சி...
இதுவரைக்கும் தெரியவில்லையே இந்தச் சுழற்சியாய்...

இரவும் பகலும் சமரசம் ஆகாவிட்டாலும் சமன்பாடாகின்றது நிலையில்லா வாழ்க்கைக்கு...

மீண்டும் பாராட்டுக்கள் அக்கா...

இறுதியாகச் சொன்னீர்களே... அதைத்தான் எதிர்பார்த்திருந்தேன். அழகாய் சொல்லிவிட்டீர்கள். நிறைவான பின்னூட்டம் நிறைய யோசிக்கவைக்கிறது. நன்றி அக்னி.

கௌதமன்
26-11-2012, 06:14 PM
வீழ்ந்த பகலின் மிச்சங்கள் இரவின்
வீதியெங்கும் இறைந்து கிடக்கின்றன
இரவின் மிச்சங்கள்
இதுபோல விட்டுவைக்கப்படுவதில்லை
என்ற எகத்தாளத்தோடு
ஏழு புரவிகளில் எழுந்து வருகிறான்
எல்லோன்....

ஜான்
27-11-2012, 12:21 AM
நன்மை தீமை,வண்மை மென்மை,மெய்மை பொய்மை ,அறிவு அழிவு .....என்றைக்கும் முரண்பட்டு நிற்கும் இவ வற்றுக்கான குறியீட்டுக் கவிதையோ?

உண்மையும் இன்மையுமாய் சென்றுகொண்டே இருப்பதுதானே பிரபஞ்சத் தன்மை?

குணமதி
27-11-2012, 12:32 AM
//செங்குருதி சொட்டும் கிரணங்களைக்
கடலிற் கழுவிப் பரிசுத்தமாக்கி
பவனிவருகின்றது பகற்பொழுது!//

//சாயுங்காலத் தருணம் பார்த்திருந்த இரவு
சத்தமின்றி அதைச் சாய்த்துக் கிடத்தி
தாளாத வேகத்துடன் அதன் பிடறி கவ்வ…
பீறிட்டுத் தெறிக்கிறது செங்குருதிச் சாயம்!//

பொருந்தும் நல்ல கற்பளை அழகு!
பாராட்டு!

ந.க
27-11-2012, 08:29 AM
வெற்றியின் பின்னர் இரவு இயல்பாய் இளைத்திருக்கிறது ,
பகல் ஆக்ரோசமாய் கர்வமாய் போரிடுகிறது
மீண்டும் இருள் கவ்வுகிறது...

சைவம் சொல்லும் ஆணவம் கன்மம் மாயை அதில் .....ஆணவம் இருளுக்கு ஒப்பிட்டுச் சொல்லப் படுகிறது. ஆயினும் இருளை விட ஆணவம் கொடியதாம்- தன்னைக் காட்டும் இருள்.

இங்கே பகலை கதாநாயகத் தன்மையில் சொல்லப்படவில்லை, கர்வம் கொள்ளும் பகல், அறியாமையின் அடையாளமாக்கப் படுகிறது.
ஞானம் கீதை, வேதாகமப் பொருளின்படி கடவுள் ஆகும். இங்கே அந்த ஆத்மீகப் பொருள் உண்மை பேசப்படவில்லை.

பகலுக்கும் இரவுக்குமான அந்தக் காலமாற்றத்தின் சுழற்சியை போராக்கிப் காட்டும் படப்பிடிப்பு சூடாக்கிக் கொள்ளவைக்கிறது எம் உணர்வை.

`கருங்குவியல்` இப்பதப் பிரயோகம் மிக ஆழமாய் குவிகிறது.

வெறுமனவே வார்த்தகைகளைக் கோர்க்காமல் ,
உணர்வோட்டத்தொடு சொல்லப்பட்டுள்ளது,

இந்தச் சுழற்சியை உண்ட உணர்வுக்குவியலின் திருப்தியில்... பாராட்டுக்கள்.

கீதம்
27-11-2012, 10:54 AM
வீழ்ந்த பகலின் மிச்சங்கள் இரவின்
வீதியெங்கும் இறைந்து கிடக்கின்றன
இரவின் மிச்சங்கள்
இதுபோல விட்டுவைக்கப்படுவதில்லை
என்ற எகத்தாளத்தோடு
ஏழு புரவிகளில் எழுந்து வருகிறான்
எல்லோன்....

வெகு நாட்களுக்குப் பிறகான தங்கள் வருகையையும் பின்னூட்டத்தையும் கண்டு மிகவும் மகிழ்ச்சி கௌதமன். உங்கள் தொடர்வருகையை எதிர்பார்த்திருக்கிறேன்.

கீதம்
27-11-2012, 10:55 AM
நன்மை தீமை,வண்மை மென்மை,மெய்மை பொய்மை ,அறிவு அழிவு .....என்றைக்கும் முரண்பட்டு நிற்கும் இவ வற்றுக்கான குறியீட்டுக் கவிதையோ?

உண்மையும் இன்மையுமாய் சென்றுகொண்டே இருப்பதுதானே பிரபஞ்சத் தன்மை?

ஊக்கமளிக்கும் பின்னூட்டத்துக்கு மனமார்ந்த நன்றி ஜான் அவர்களே.

கீதம்
27-11-2012, 10:56 AM
//செங்குருதி சொட்டும் கிரணங்களைக்
கடலிற் கழுவிப் பரிசுத்தமாக்கி
பவனிவருகின்றது பகற்பொழுது!//

//சாயுங்காலத் தருணம் பார்த்திருந்த இரவு
சத்தமின்றி அதைச் சாய்த்துக் கிடத்தி
தாளாத வேகத்துடன் அதன் பிடறி கவ்வ…
பீறிட்டுத் தெறிக்கிறது செங்குருதிச் சாயம்!//

பொருந்தும் நல்ல கற்பளை அழகு!
பாராட்டு!

தங்கள் பாராட்டு கண்டு மகிழ்ந்தேன். நன்றி ஐயா.

கீதம்
27-11-2012, 10:58 AM
வெற்றியின் பின்னர் இரவு இயல்பாய் இளைத்திருக்கிறது ,
பகல் ஆக்ரோசமாய் கர்வமாய் போரிடுகிறது
மீண்டும் இருள் கவ்வுகிறது...

சைவம் சொல்லும் ஆணவம் கன்மம் மாயை அதில் .....ஆணவம் இருளுக்கு ஒப்பிட்டுச் சொல்லப் படுகிறது. ஆயினும் இருளை விட ஆணவம் கொடியதாம்- தன்னைக் காட்டும் இருள்.

இங்கே பகலை கதாநாயகத் தன்மையில் சொல்லப்படவில்லை, கர்வம் கொள்ளும் பகல், அறியாமையின் அடையாளமாக்கப் படுகிறது.
ஞானம் கீதை, வேதாகமப் பொருளின்படி கடவுள் ஆகும். இங்கே அந்த ஆத்மீகப் பொருள் உண்மை பேசப்படவில்லை.

பகலுக்கும் இரவுக்குமான அந்தக் காலமாற்றத்தின் சுழற்சியை போராக்கிப் காட்டும் படப்பிடிப்பு சூடாக்கிக் கொள்ளவைக்கிறது எம் உணர்வை.

`கருங்குவியல்` இப்பதப் பிரயோகம் மிக ஆழமாய் குவிகிறது.

வெறுமனவே வார்த்தகைகளைக் கோர்க்காமல் ,
உணர்வோட்டத்தொடு சொல்லப்பட்டுள்ளது,

இந்தச் சுழற்சியை உண்ட உணர்வுக்குவியலின் திருப்தியில்... பாராட்டுக்கள்.

கவிதையை அலசி மிக அழகான விமர்சனத்துடன் பாராட்டிய தங்களுக்கு என் மனம் நெகிழ்ந்த நன்றி.

lenram80
05-12-2012, 06:04 PM
மென்துயில் கொள்ளத் தொடங்குகிறது,
தன்னைத் தானே மெல்ல உயிர்ப்பித்துக்கொண்டிருக்கும்
பகற்பொழுதைப் பற்றிய பிரக்ஞையற்று!
அருமை கீதம்!

பவர் கட் பண்ணி கட் பண்ணி
பகல் இரவு என வெளிச்சம் மாற்றி மாற்றி கிடைக்கும்
இந்த ஒட்டு மொத்த பூமியும் என்ன தமிழகமா?