PDA

View Full Version : மக்கட்பேறுஆதி
11-12-2011, 01:38 PM
இருட்டான ஒரு பாதையில் இருந்து
தப்பித்து வெளியேறும்
பயத்தோடே இருக்கிறது
இன்றைய கலவியெல்லாம்

பதினைந்தாண்டாக
குழந்தை இல்லாததின் பழியை
இம்முறையேனும் அகற்றவேண்டும்
எனும் முனைப்போடே நிகழ்வதனால்
பரவசத்தை காட்டிலும் பெரும்பாலும்
பதட்டமே பெருக்கெடுக்கிறது

பாலியல் புத்தகமனைத்தும்
பக்கம் மிஞ்சாமல் கற்று
ஊழியல் பார்த்து
உதிரம் கழியும் விடாய் பார்த்து
காமம் பழகி
அடுத்தமுறை அடிவயிறு பிடித்து
அவள் அமரும் போது
சவ ஊர்வலம் போன தெருவில் வீசுகிற
மரணம் வாசமே பரவுகிறது
வீடு முழுக்க

காதலுமில்லாமல்
காமமுமில்லாமல்
கட்டாயத்திற்காக
சுவாரஸ்யமற்று மாத்திரையின் உந்துதலால் நிகழும் விரவுதல்
வெறுமையானதாகவும்
விரக்தியானதாகவும்
தோல்வியை நினைந்த அச்சகரமானதாகவும்
தன் பிறப்புறுப்பு தெரிவதறியாமல்
தாந்தோன்றியாய் அலையும்
மனபிறழ்ந்தவனின் நீக்க முடியாத
மன அழுத்தை பாய்ச்சுவதாகவும்
இருக்கிறது

குழந்தையின்மை இந்த துக்கம்
ஒவ்வொரு பிள்ளையில்லாதவருக்கும்
பகலை காட்டிலும்
இரவே பீதியுண்டாக்குவதாய் இருக்கிறது
தனிமையே அமைந்துவிட கூடாதென்னும்
பிராத்தனை உடையதாகவும்
கலவியே நிகழ்ந்துவிட கூடாதென்னும்
பயமுடையதாகவும் இருக்கிறது

காமம் பழகுதல்
மன அழுத்தத்தை குறைக்குமெனும்
விஞஞான கூற்று
குழைந்தையற்றோற்கு பொருந்துவதே இல்லை
காமம் அவர்களின் மன அழுத்தத்தை அதிகரிக்கவே செய்கிறது..

விழாக்களும்
சந்திப்புக்களும்
தெரிந்தே மறக்கப்பட வேண்டியதாக இருக்கின்றன
"எத்தனை குழந்தைகள் ? அல்லது
இன்னும் பிள்ளை இல்லையா ? "
எனும் கேள்விக்களுக்காகவே

கீதம்
18-12-2011, 10:42 AM
நாகரிகமற்ற கேள்விகள் கேட்கப்படும் சமுதாயத்தின் இடையில் சிக்கிக்கொண்டு உழன்றுகொண்டிருக்கும் மனங்களைப் பிரதிபலிக்கும் கவிதை.

சுய விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்ட, சமுதாயத்தின் மீதான பயத்தையே பிரதானமாய் வெளிப்படுத்துகின்றன கவி வரிகள்.

அடுத்தவர் அந்தரத்துக்குள் மூக்கை நுழைக்கும் சில அதிகப்பிரசங்கிகளால் சின்னாபின்னப்படும் சிலரது அந்தரங்கத்தை அம்பலப்படுத்தும் வரிகளில் பொதிந்துகிடக்கிறது அடர்ந்த துயரம்.

கூடு விட்டுக் கூடு பாய்வதுபோல் அபாரமாயொரு ஆழ்மனம் பாய்ந்திருக்கிறீர்கள் ஆதன். பாராட்டுகள்.

meera
19-12-2011, 06:58 AM
கவிதையின் ஆழமும் வார்த்தையின் வலியும் சிறிது நேரம் அப்படியே உறைந்துவிட செய்தது.

இந்த கவிதை வரிகள் எத்தனை பெண்களின் வேதனையும் கண்ணீரும் பிரதிபலிக்கிறதோ.?

நாகரிகம் எத்தனை வளர்ந்தாலும் சமுதாயத்தின் பார்வையும் கேள்வியும் அதே நிலையில் தான் இன்றும் இருக்கிறது.

மனதில் வலியை தரும் கவி வரிகள் ஆதன்.

நாஞ்சில் த.க.ஜெய்
19-12-2011, 11:27 AM
அருமை ஆதன் அருமை ..ஒவ்வொருவரிகளும் பிரதிபலிக்கும் வார்த்தைகள் பாதிப்புக்குள்ளானோரின் துடிப்பு....

தாமரை
04-01-2012, 09:53 AM
இரசிக்க முடியாத கவிதை
ருசிக்க முடியாத சொற்கள்
சகிக்க முடியாத காட்சிகள்
சுகிக்க முடியாத ரசம்
கரு இல்லையென
ஒரு கரு...