PDA

View Full Version : எழுதாக் கவிதை.



M.Jagadeesan
05-12-2011, 08:28 AM
காலை வேளை எழுந்தேனா
கவிதை எழுத நினைத்தேனா

காகிதம் எடுத்து வைத்தேனா
கவிதை புனைய முனைந்தேனா

ஐயா ! சாமி ! என்றதொரு
அழுகுரல் தெருவில் கேட்டேனா

ஓடிச் சென்று பார்த்தேனா
ஒல்லிய உருவம் கண்டேனா

பசியின் கொடுமை எல்லாமே
கசியும் கண்களைப் பார்த்தவுடன்

ஓடிச் சென்று அவனுக்கு
ஒருவாய் சோறு போட்டேனா

மீண்டும் கட்டிலில் அமர்ந்தேனா
கவிதை எழுத முனைந்தேனா

வீரிட்டு அழுதது என்குழந்தை
வாரி எடுத்து அணைத்தேனா

கலந்து வைத்த பசும்பாலை
குழந்தை குடிக்கக் கொடுத்தேனா

ஓங்கிய பசியும் அடங்கியதால்
தூங்கிய குழந்தையைக் கண்டேனா

தொட்டிலில் குழந்தையைப் போட்டேனா
கட்டிலில் வந்து அமர்ந்தேனா

மீண்டும் கவிதை எழுதிடவே
முயன்று நானும் பார்த்தேனா

கண்ணைப் பறிக்கும் மின்னலுடன்
விண்ணைப் பிளக்கும் இடியோசை

சூறைக் காற்றும் பேய்மழையும்
கோர தாண்டவம் ஆடியதால்

காகிதம் காற்றில் பறந்ததுவே
கவிதை நெஞ்சமும் முறிந்ததுவே.

jaffer
05-12-2011, 08:59 AM
இவ்வளவு இளகிய மனம் கொண்டவரா? அதான் இடி மின்னல் மழை வைத்து கவி எழுத இயலவில்லையோ??

வெங்கி
05-12-2011, 09:45 AM
'கசியும் கண்கள்' - அருமையான வார்த்தை பிரயோகம் நண்பரே... பாராட்டுக்கள்

M.Jagadeesan
05-12-2011, 10:05 AM
ஜாபர் , வெங்கி ஆகியோரின் பாராட்டுகளுக்கு நன்றி.