PDA

View Full Version : சில கிறுக்கல்கள்M.Jagadeesan
29-11-2011, 01:53 AM
திருநங்கைகள்
===============
படைப்புத் தேர்வில் தோல்வியடைந்த
பிரம்மாவின் விடைத்தாள்.

முதியோர் இல்லம்
==================
தாங்க வேண்டிய விழுதுகள்
தடம் மாறிப் போனதால்
அடங்கிப்போன ஆலமரங்களைப்
பிடுங்கி நடுவதற்கு ஏற்ற இடம்.

திருமணம்
===========
ஒவ்வொரு மனிதனும்
தேடிப்போய் வாங்குகின்ற
தேவையான துன்பம்.

பசி
====
ஏழை பணக்காரன் என்ற
பாகுபாடு இல்லாமல்
எல்லோர் வயிற்றிலும்
எரிகின்ற நெருப்பு.

விதி
======
பத்துகோடி செலவுசெய்து
படிக்காதவன் கட்டிய
பள்ளிக்கூடத்தில்
பத்தாயிரம் ரூபாய்க்காகப்
படித்தவன் பாடம் நடத்துகிறான்.

jaffer
29-11-2011, 02:04 AM
எல்லாமே அருமை. ஒவ்வொன்றும் அற்புதமான விளக்கம்

sarcharan
30-11-2011, 08:57 AM
அருமை ஐயா....

கீதம்
30-11-2011, 11:15 PM
திருநங்கைகள்
===============
படைப்புத் தேர்வில் தோல்வியடைந்த
பிரம்மாவின் விடைத்தாள்.

அதனால்தானோ இன்றும் அவர்கள் வாழ்க்கை கேள்விக்குறிகளாய்?


முதியோர் இல்லம்
==================
தாங்க வேண்டிய விழுதுகள்
தடம் மாறிப் போனதால்
அடங்கிப்போன ஆலமரங்களைப்
பிடுங்கி நடுவதற்கு ஏற்ற இடம்.

இன்றைய விழுதுகள் நாளை விருட்சமாகும் என்னும் யதார்த்தம் மறந்ததால் எழுந்த நிலை!


திருமணம்
===========
ஒவ்வொரு மனிதனும்
தேடிப்போய் வாங்குகின்ற
தேவையான துன்பம்.

காசுகொடுத்தும் வாங்கப்படும் பெண்ணைப் பெற்றவர்களால்!


பசி
====
ஏழை பணக்காரன் என்ற
பாகுபாடு இல்லாமல்
எல்லோர் வயிற்றிலும்
எரிகின்ற நெருப்பு.

எரிவதில் சமத்துவம்! அணைக்கப்படுவதில் மட்டும் பணத்துக்கு முக்கியத்துவம்!


விதி
======
பத்துகோடி செலவுசெய்து
படிக்காதவன் கட்டிய
பள்ளிக்கூடத்தில்
பத்தாயிரம் ரூபாய்க்காகப்
படித்தவன் பாடம் நடத்துகிறான்.

இருவருக்கும் இடையில் மாட்டிக்கொண்டு விழிக்கிறது மாணவர்களின் எதிர்காலம்!

ஓவியங்களைவிடவும் கிறுக்கல்களே அதிகம் பேசப்படும். இந்த நறுக்கானக் கவிக்கிறுக்கல்களும் அப்படியே. ஒவ்வொன்றிலும் உள்ள நேர்த்தியும் நையாண்டியும் ரசிக்கவைக்கின்றன. பாராட்டுகள் ஐயா.

M.Jagadeesan
01-12-2011, 12:06 AM
கீதத்தின் பாராட்டுகளுக்கு நன்றி.

meera
02-12-2011, 11:58 AM
கவிதை ஓவொன்றும் அருமை ஐயா. திருநங்கைகள் பற்றிய உங்கள் பார்வை மிகவும் வித்தியாசமானது.

முதியோர் இல்லம் என்று உச்சரிக்கும் போதே ஏனோ மனம் வலிக்கிறது.

M.Jagadeesan
03-12-2011, 01:19 AM
மீரா அவர்களின் பாராட்டுக்கு நன்றி.

M.Jagadeesan
03-12-2011, 01:45 AM
நோய்
=======
நம்முடனே பிறந்து
நம்முடனே வளர்ந்து
நம்மையே அழிக்கும்
நயவஞ்சகன்.

M.Jagadeesan
03-12-2011, 01:49 AM
புது மொழி
==========
ஆடையில்லா மனிதன் அரை மனிதன்..
கைபேசி இல்லா மனிதன் கால் மனிதன்.

M.Jagadeesan
03-12-2011, 03:39 AM
காதல்
=======
அணைக்க அணைக்க
கொழுந்து விட்டு எரியும் தீ.

ஆசிரியர்
=========
எப்பொழுதும் படித்துக்கொண்டு
இருக்கும் மாணவன்.

M.Jagadeesan
05-12-2011, 02:03 AM
பாம்பு
======
உன்னைக் கண்டால் மனிதனுக்குப் பயம்
மனிதனைக் கண்டால் உனக்குப் பயம்.

M.Jagadeesan
05-12-2011, 02:12 AM
குடை
=====
தப்பாமல் எப்போதும்
நிழல் தரும் மொபைல் மரம்.

வெங்கி
05-12-2011, 04:19 AM
நல்ல ஒரு சிந்தனை... அருமையான வரிகள்

M.Jagadeesan
05-12-2011, 07:50 AM
வெங்கி அவர்களின் பாராட்டுக்கு நன்றி.

M.Jagadeesan
05-12-2011, 10:11 AM
மழைக்காலம்
============
மருத்துவர்களும் பள்ளி செல்லும்
மாணவர்களும் மகிழ்ச்சியில்
துள்ளும் காலம்.

கௌதமன்
05-12-2011, 01:19 PM
காதல்
=======
அணைக்க அணைக்க
கொழுந்து விட்டு எரியும் தீ.


ஓ! இதுதான் தீயணைப்போ ..?

ஆதவா
06-12-2011, 07:16 AM
ஒவ்வொரு தலைப்புக்கும் வித்தியாசமான கவிதையான விரிவுரை (டெஃபனிஷன்)
சிலசமயம் இந்தமாதிரி கவிதைகள்தான் பெரிய கவிதைகளைக் காட்டிலும் சட்டென மனதில் நிற்கும், பொட்டில் அடிக்கும்...

M.Jagadeesan
06-12-2011, 07:43 AM
ஆதவாவின் பாராட்டுக்கு நன்றி.

அக்னி
06-12-2011, 11:53 AM
கிறுக்க்'கல்'கள் அனைத்தும் நறுக்'கல்'கள்...

தொடரட்டும்... பாராட்டுக்கள்...

M.Jagadeesan
06-12-2011, 01:58 PM
அக்னி, கெளதமன் ஆகியோரின் பாராட்டுகளுக்கு நன்றி.

M.Jagadeesan
06-12-2011, 03:19 PM
தமிழ்
======
எத்தனை பேர் தொட்டாலும்
என்றுமே அவள் கன்னிதான்.

akila_ananthi2006
07-12-2011, 10:08 AM
வறுமை
======
தாய் பாலுக்குப் பின் மீண்டும் பால்
பக்கத்துக்கு வீட்டில் கிரக பிரவேசம்

ஆதவா
07-12-2011, 02:23 PM
தமிழ்
======
எத்தனை பேர் தொட்டாலும்
என்றுமே அவள் கன்னிதான்.

கொஞ்சம் உறுத்தினாலும்.....

தமிழ் தாயென்பதால் புறத்தே அவள் கன்னியல்ல,வறுமை
======
தாய் பாலுக்குப் பின் மீண்டும் பால்
பக்கத்துக்கு வீட்டில் கிரக பிரவேசம்

ரொம்ம்ம்ப்ப்ப வறுமையோ?

இப்போ கிரகபிரவேசத்துக்கும் பால் காய்ச்சறதில்லையாம்.... லிட்டர் என்னா விலையாவறது/???

M.Jagadeesan
08-12-2011, 05:33 AM
நர்ஸ்
======
தூங்குபவனை எழுப்பித்
தூக்க மாத்திரை கொடுப்பவள்.

Ravee
08-12-2011, 08:12 AM
நர்ஸ்
======
தூங்குபவனை எழுப்பித்
தூக்க மாத்திரை கொடுப்பவள்.அனுபவ வரிகளோ ? ....... அருமை .... அருமை


சில மனைவிமார்களும் அப்படித்தான் எழுப்பி விட்டு என்ன தூங்குறீங்களா சும்மா படுத்து இருக்கீங்கன்னு நெனச்சேன் என்பார்கள் ....... பொறாமை புடிச்சவங்க ....... :traurig001:

Nivas.T
08-12-2011, 09:15 AM
சில மனைவிமார்களும் அப்படித்தான் எழுப்பி விட்டு என்ன தூங்குறீங்களா சும்மா படுத்து இருக்கீங்கன்னு நெனச்சேன் என்பார்கள் ....... பொறாமை புடிச்சவங்க ....... :traurig001:

:lachen001::lachen001::lachen001:
இது அனுபவரிகள்தான் நல்லவே தெரியுது

அப்பாடி இதுவரைக்கும் நமக்கு இந்த தொல்ல இல்லப்பா :rolleyes:

M.Jagadeesan
09-12-2011, 04:15 AM
பெண்ணும் ஆணும்
================
திருமணத்திற்கு முன்பு எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படுபவள் பெண்.
திருமணத்திற்குப் பிறகு எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படுபவன் ஆண்.

sureshteen
10-12-2011, 01:13 AM
கோவில்
தேர்வலம் வீதிவர
ஊர்கூடி இழுக்கிறது
நீ
வீதி வந்து
ஊர் மக்களை
தேர்வடமாய் இழுக்கிறாய்...

sureshteen
12-12-2011, 12:09 PM
பிரம்மன் படைப்பில்
அர்த்த நாரீஸ்வர்கள்
திருநங்கைகள்....

M.Jagadeesan
12-12-2011, 02:30 PM
சுரேஷ்டீன் அவர்களின் பின்னூட்டத்திற்கு நன்றி.

M.Jagadeesan
13-12-2011, 01:12 PM
இரத்தம்
=======
நிற்காமல் ஓடும் நதி
நீரின் நிறமோ சிவப்பு
வற்றாமல் ஓடும் நதி
வற்றிப் போனாலோ அதோகதி.

M.Jagadeesan
18-12-2011, 05:55 AM
அரசியல்வாதி
==============
கல்லறை கட்டுவதிலும்
சில்லறை சேர்ப்பவன்.

கீதம்
18-12-2011, 09:56 AM
அரசியல்வாதி
==============
கல்லறை கட்டுவதிலும்
சில்லறை சேர்ப்பவன்.

நாவீசும் சாட்டை மிக நன்று. என்ன சொன்னாலும் எப்படி சொன்னாலும் அவர்கள் சட்டை செய்வதில்லை என்பதுதான் உண்மை. பாராட்டுகள் ஐயா.

M.Jagadeesan
19-12-2011, 02:13 AM
இடியாப்பம்
===========
ஆதி அந்தம் காணமுடியாத
ஆவியிலே வேகவைத்த
அற்புதமான உணவுப் பண்டம்.

நாஞ்சில் த.க.ஜெய்
19-12-2011, 11:05 AM
அரசியல்வாதி
==============
கல்லறை கட்டுவதிலும்
சில்லறை சேர்ப்பவன்.

அருமையான சாட்டையடி இந்த அரசியல்வாதி...

M.Jagadeesan
22-12-2011, 01:28 AM
தங்கமும் மனிதனும்
====================
எரிக்கப்பட்ட பிறகு மனிதனின் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது. ஆனால் எரிக்கப்பட்ட பிறகுதான் தங்கத்தின் வாழ்க்கை தொடங்குகிறது.

M.Jagadeesan
22-12-2011, 03:56 AM
செல்வம்
==========
சேரும்போது ஒவ்வொன்றாகச் சேரும்
போகும்போது சேர்ந்தே போகும்.

M.Jagadeesan
22-12-2011, 04:48 AM
கடவுள்
========
உண்டு என்று வாதிப்பவர்களால் காட்ட முடியாதது.
இல்லை என்று சாதிப்பவர்களால் தவிர்க்க முடியாதது.

meera
22-12-2011, 05:05 AM
தங்கமும் மனிதனும்
====================
எரிக்கப்பட்ட பிறகு மனிதனின் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது. ஆனால் எரிக்கப்பட்ட பிறகுதான் தங்கத்தின் வாழ்க்கை தொடங்குகிறது.


செல்வம்
==========
சேரும்போது ஒவ்வொன்றாகச் சேரும்
போகும்போது சேர்ந்தே போகும்.


கடவுள்
========
உண்டு என்று வாதிப்பவர்களால் காட்ட முடியாதது.
இல்லை என்று சாதிப்பவர்களால் தவிர்க்க முடியாதது.

இந்த ஒவ்வொரு கிறுக்கலும் எல்லா மனிதனுக்கும் புரிய வேண்டிய, உணர வேண்டிய வரிகள் ஐயா. :icon_b::icon_b:

தொடர்ந்து தாருங்கள்.

M.Jagadeesan
22-12-2011, 05:59 AM
மீரா அவர்களின் பாராட்டுரைக்கு நன்றி.

M.Jagadeesan
22-12-2011, 06:01 AM
முல்லைப் பெரியாறு
=====================
இரு மாநிலங்கள் பற்றி எரிகின்றன- நீரினால்.

sarcharan
22-12-2011, 07:25 AM
முல்லைப் பெரியாறு
=====================
இரு மாநிலங்கள் பற்றி எரிகின்றன- நீரினால்.

அட அருமை :D:D;)

M.Jagadeesan
22-12-2011, 11:36 AM
சர்சரண் அவர்களின் பாராட்டுக்கு நன்றி

M.Jagadeesan
22-12-2011, 11:38 AM
இட்டலி
========
தட்டிலே உதிக்கும் நிலா
பிட்டு வைத்தால் பிறைநிலா.

M.Jagadeesan
22-12-2011, 11:40 AM
பல்
====
இடையிலே வந்து
இடையிலே பிரியும்
வழிப்போக்கன்.

M.Jagadeesan
25-12-2011, 12:26 PM
கறிவேப்பிலை
==============
தூக்கி எறிந்தாலும் துக்கப்படாமல்
ஆக்கி வைத்த உணவிற்கு
அறுசுவை சேர்க்கும்
தியாகத்தின் திருஉரு.

M.Jagadeesan
26-12-2011, 11:34 AM
முதுமை
==========
நோய்களின் புகலிடம்
பாயே இருப்பிடம்
வாய்க்கு ருசியான
உணவினைத் துறந்து
மாய்க்கும் மருந்தே
உணவாய்க் கொள்ளும்நிலை

நாஞ்சில் த.க.ஜெய்
26-12-2011, 12:08 PM
முதுமை
==========
நோய்களின் புகலிடம்
பாயே இருப்பிடம்
வாய்க்கு ருசியான
உணவினைத் துறந்து
மாய்க்கும் மருந்தே
உணவாய்க் கொள்ளும்நிலை

அனுபவங்களின் புகலிடம்
வாழ்வில் வேண்டும் இனிமை

இன்றே அதற்கு தேவை
உடல் உழைப்பு உணவு கட்டுபாடு

கடமையென தொடர்ந்தால்
படவேண்டாம் இந்த பெரும்பாடு ...

ஆதவா
26-12-2011, 03:55 PM
சிறூசிறு கவிதைகளும் நன்றாக இருக்கின்றன!!


ஒரு குட்டி விமர்சனம்!!


இட்டலி
========
தட்டிலே உதிக்கும் நிலா
பிட்டு வைத்தால் பிறைநிலா.

தின்றுவிட்டால் அமாவாசையா?

இந்த நிலா எனக்காக
குப்பைத்தொட்டியிலும்
உதிப்பதுண்டு!

நிலாவுக்கும் உணவுக்கும் ஒரு தொடர்பு உண்டு இல்லையா?
நிலாவை மல்லிகைப்பூவையெல்லாம் கொண்டுவரச் சொன்னவர்கள்தானே நாம்...
இப்பொழுதெல்லாம் குழந்தைகள் நிலவைப் பார்ப்பதேயில்லை!!பல்
====
இடையிலே வந்து
இடையிலே பிரியும்
வழிப்போக்கன்.

வாயிலதான் பல்லு வரும்னு கேள்விப்பட்டிருக்கேன்.

சாலை நகர்கிறது
மரங்கள் ஓடுகின்றன
விரல்கள் புதைந்து நிற்கிறது
நான்.


கறிவேப்பிலை
==============
தூக்கி எறிந்தாலும் துக்கப்படாமல்
ஆக்கி வைத்த உணவிற்கு
அறுசுவை சேர்க்கும்
தியாகத்தின் திருஉரு.

உயிர் உணவுக்கு
உடல் குப்பைக்கு!!

கறிவேப்பிலைக்கு ஒரு சுவை
அதைப் போட்டு சமைச்சுவை!!

வேப்பிலையும் கறி
வேப்பிலையும் வீட்டில் வளர்த்தல் நல்லதாம்முதுமை
==========
நோய்களின் புகலிடம்
பாயே இருப்பிடம்
வாய்க்கு ருசியான
உணவினைத் துறந்து
மாய்க்கும் மருந்தே
உணவாய்க் கொள்ளும்நிலை

பெருகியோடும் காதலை வெளிப்படுத்தவிய்லாத நிலையும் சொல்லலாமே?
இறப்பின் இனிய வரவை
எதிர்நோக்கி நிற்கும் நிலை!

காய்ந்த இலை
காற்றில் சித்திரம் பேசி மடிகிறது
மரம் அழவில்லை!

தொடர்ந்து எழுதுங்கள்!!!

M.Jagadeesan
29-12-2011, 12:30 PM
ரவா உப்புமா
=============
எளிமையானவன் எல்லோர்
வெறுப்புக்கும் ஆளானவன்
அவசரத்திற்கு உதவும் ஆபத்பாந்தவன்.

M.Jagadeesan
31-12-2011, 10:40 AM
கோலங்கள்
============
வளைக்கரங்கள் வாசலிலே
வரைகின்ற ஓவியம்
வானவில்லும் நாணுகின்ற
வர்ணஜால காவியம்.

govindh
31-12-2011, 11:35 AM
சில கிறுக்கல்கள்.....

சிறு சிறு கவிதைகள்....
பெரும் சிந்தனைகள்...

அனைத்தும் அருமை...
பாராட்டுக்கள் ஐயா..

M.Jagadeesan
31-12-2011, 01:08 PM
கோவிந்த் அவர்களின் பாராட்டுக்கு நன்றி.

M.Jagadeesan
03-01-2012, 12:26 AM
சட்டம்
=======
திட்டமிட்ட கொலைக்குத் தூக்குத் தண்டனை
சட்டப்படி சரியே எனச்சொன்ன நீதிபதி
வட்டமிட்ட கொசுவை தன்னிரு கரத்தால்
பட்டெனவே தட்டி அடித்துக் கொன்றார்.

அக்னி
04-01-2012, 09:35 AM
தொடரும் கிறுக்கல்கள் அனைத்தும் வித்தியாசமான பார்வையில்...
மிக்க நன்று... பாராட்டுக்கள்...

ஆதவாவின் குட்டி விமர்சனம் :icon_b:...

M.Jagadeesan
04-01-2012, 01:35 PM
தானே புயல்
=============
கண்ணே ! உன்னிரு கண்களை மூடிக்கொள் !
கண்களைத் திறந்து காளையரை நோக்காதே!
ஏனெனில்
மானே! உன்கண்கள் ஒவ்வொன்றும் "தானே"

M.Jagadeesan
05-01-2012, 01:36 AM
சிவபெருமான்
==============
கல்லால் அடிபட்டான் ஒருவனால்
கண்ணில் இரத்தம் ஒருவனால்
சொல்லால் அடிபட்டான் ஒருவனால்
சொந்தம் அவனுக்கு இல்லையோ?

M.Jagadeesan
05-01-2012, 06:16 AM
சறுக்கலும் கிறுக்கலும்
======================
சறுக்கல்கள் ஆயிரம் நேர்ந்தாலும்
சளைக்காது கிறுக்களைத் தொடர்ந்திடுவீர்
சறுக்க சறுக்கத்தான் பாதை உண்டாகும்
கிறுக்க கிறுக்கத்தான் கவிதை உண்டாகும்.

M.Jagadeesan
05-01-2012, 06:23 AM
இதயம்
========
நமக்குள்ளே இருக்கின்ற வீடு
நான்கு அறைகள் கொண்டுள்ள வீடு
ஓயாமல் ஒலிக்கின்ற வீடு
ஓய்ந்துவிட்டால் நிரந்தரமாய்க் காடு.

M.Jagadeesan
05-01-2012, 06:28 AM
இலக்கியம்
===========
காலத்தைக் காட்டுகின்ற கண்ணாடி
கவிஞர்தம் படைப்புக்கு முன்னோடி
வாழும் உலகுக்கு வழிகாட்டி
வளமான வாழ்க்கையின் உயிர்நாடி.

கீதம்
07-01-2012, 12:02 AM
சறுக்கலும் கிறுக்கலும்
======================
சறுக்கல்கள் ஆயிரம் நேர்ந்தாலும்
சளைக்காது கிறுக்களைத் தொடர்ந்திடுவீர்
சறுக்க சறுக்கத்தான் பாதை உண்டாகும்
கிறுக்க கிறுக்கத்தான் கவிதை உண்டாகும்.

பிரமாதமான வரிகள். முற்றிலும் உண்மை.


இதயம்
========
நமக்குள்ளே இருக்கின்ற வீடு
நான்கு அறைகள் கொண்டுள்ள வீடு
ஓயாமல் ஒலிக்கின்ற வீடு
ஓய்ந்துவிட்டால் நிரந்தரமாய்க் காடு.

இந்த வீட்டின் இயக்கம் ஓய்ந்துவிட்டால் அந்த வீட்டுக்கு குடிபெயர்ந்திடவேண்டியதுதான். நன்றாகச் சொன்னீங்க.


இலக்கியம்
===========
காலத்தைக் காட்டுகின்ற கண்ணாடி
கவிஞர்தம் படைப்புக்கு முன்னோடி
வாழும் உலகுக்கு வழிகாட்டி
வளமான வாழ்க்கையின் உயிர்நாடி.

கிறுக்கல் கொண்ட கருக்கள் யாவும் அற்புதம். பாராட்டுகள் ஐயா.

ஜானகி
07-01-2012, 12:40 AM
கிறுக்கள்கள் வெளிப்படுத்தும் உட்பொருள் மார்கழிமாதத்து வண்ணக் கோலங்களாக மிளிர்கின்றன...அருமை

M.Jagadeesan
07-01-2012, 02:13 AM
கீதம், ஜானகி ஆகியோரின் பாராட்டுகளுக்கு நன்றி

M.Jagadeesan
07-01-2012, 06:27 AM
இந்தியக் கிரிக்கெட் அணி
=========================
மானம் கப்பலேற
மதியுடையார் ஒப்புவரோ?
கப்பலிலே கடல்கடந்து
கங்காரு நாடுசென்று
மானத்தை விற்கின்ற
ஈனச்செயல் கண்டு
கூனிக் குறுகியே
நிற்கின்றார் நம்நாட்டார்.

M.Jagadeesan
17-01-2012, 02:32 AM
மனம்
======
தினமும் அழுக்குகள் சேர்ந்துகொண்டே இருக்கின்றன
தூய்மை செய்ய துடைப்பம் தேவை
எங்கு கிடைக்கும்?

vasikaran.g
30-01-2012, 03:11 AM
எல்லா கவிதைகளும் அருமை ..வாழ்த்துக்கள் ..

M.Jagadeesan
30-01-2012, 03:22 AM
வசீகரனின் பாராட்டுக்கு நன்றி.

susibala.k
30-01-2012, 03:48 AM
கிறுக்கல்கள் அனைத்தும் ஆழமாய்ப் பாயும் ஆழ்துழைக் கிணறுகள் என்று படித்துக் காயம் பட்ட எங்களுக்கல்லவா தெரியும் !!! அனைத்தும் அருமையான வரிகள் !!!! வணக்கங்களுடன் வாழ்த்துக்கள்.

M.Jagadeesan
30-01-2012, 08:27 AM
சுசிபாலா அவர்களின் பாராட்டுக்கு நன்றி.

M.Jagadeesan
03-02-2012, 11:34 AM
தாவும் கலை
===========
மரத்துக்கு மரம் தாவும் குரங்கு
மலருக்கு மலர் தாவும் வண்டு
குளத்துக்கு குளம் தாவும் நாரை
கூடுவிட்டு கூடு தாவும் சித்தர்
இவர்களைக் கண்டுதான்
கட்சிவிட்டுக் கட்சி தாவும் கலையைக்
கற்றுக் கொண்டானோ அரசியல்வாதி?

M.Jagadeesan
13-02-2012, 06:52 AM
சென்னையில் ஆசிரியை கொலை
================================
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்.-அந்தக்காலம்.

எழுத்தறிவித்தவன் கழுத்தை அறுப்பது- இந்தக்காலம்.

அக்னி
14-02-2012, 01:16 PM
தாவும் கலையும், அறுத்த கொலையும் காலத்திற்கேற்ற விளாசல்கள்...

தொடரட்டும்...

Dr.சுந்தரராஜ் தயாளன்
06-03-2012, 08:50 AM
அரசியல்வாதியின் தாவும் கலைக்கு நல்ல நல்ல உதாரணங்கள்...நன்றி :)