PDA

View Full Version : வற்றுவதற்கவே அல்லது பெருக்கெடுப்பதற்காகவேஆதி
24-11-2011, 01:38 PM
திடீரென முளைத்திருக்கும் இந்நிதியை குறித்த
எந்த தகவலும் எந்த துப்பும் எந்த அறிதலும்
இல்லை என்னிடம்..

காற்றில் கூர்தீட்ட முயலும்
மொன்னை மடிப்புக்களில்
வெளிச்சத்தை மிளிர்த்தி ஓடும்
அதன் வனப்பு என்னை
அதன் மீது வாஞ்சையுற வைக்கிறது

நகரும் மேகங்களையும்
நெளியும் வானத்தையும்
கிழித்துள் பாய்ந்தொரு மீனென மாறிவிடும்
என் எத்தனிப்பை நடுக்கமுற* செய்கிறது
அதன் மர்ம ஆழம் குறித்த அச்சமென்றாகலும்
நீந்துதலெனும் முடிவை திரும்ப பெற்றுக் கொள்ளவில்லை

யாருடையது இந்நதி
யாருடைய கடலில் இது கலக்கிறது
யாரும் இதனுள் ஏற்கனவே நீந்துகிறார்களா
இது என்னுடைய நதிதானா
நான் சேர வேண்டிய கடலுக்குத்தான் போகிறதா
இனி என் நிர்வானத்தை இதுதான் அறிய போகிறதா
என் முழுமையையும் இதுதான் சுவைக்கப்போகிறதா
அல்லது இதன் முழுமையை நாந்தான் சுவைக்க போகிறேனா
என கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்த தருணத்தில்
என் கால்நுனி வரை கரையை நகர்த்தி
தன்னை விரிவு படுத்திவிட்டது இந்நதி

சில்லிடும் ஈரக்கைகளால் கால்களை சுற்றி
பொதுக்கென உள்ளிழுத்து
ஒரு மலைப்பாம்பென விழுங்கி
நகர துவங்குகிறது சிறு சலனத்தோடு
பின்னிதன் சலனமடங்கிய வேளையில்
நீரில் கரைகிற பனிக்கட்டியென*
இதனுள் விரவ ஆரம்பிக்கிறேன்
பிறகு இது என்னுடையதும்
நான் இதனுடையதுமாய் மாறிவிட்ட போதில்
காயாத தன்னீர மணலை என் கைகளில் கொடுத்து
வற்றிவிடுவிட்டது இந்நதி

இதே போன்ற நதியின்
ஒரு கரையில்
நீங்களும் கூட நடந்து கொண்டிருக்கலாம்
காயாத ஈர மணலை கைகளில் ஏந்தியவாறு..

ஒவ்வொருவருக்கும் எங்னேனும்
வாய்க்க பெறுகிறது இதுபோலொரு நதி
பல புதிர்களுடன்
வற்றுவதற்கவே அல்லது
பெருக்கெடுப்பதற்காகவே

மனோன்மணி ராஜபாண்டியன்
24-11-2011, 02:25 PM
கவிதை ஒட்டத்தில் நான் முழுகாமல் தப்பித்துக் கொண்டேன்.. ஆனால் என் மனதால் முடியவில்லை தோழா... அருமை.

கீதம்
24-11-2011, 10:47 PM
தனக்கான நதியைக் கண்டுகொண்டு தாமதிக்காது
அதிலிறங்கி முங்கிச் சுகம்பெறுவோர் சிலர்.
தனக்கானதா இல்லையா என்று அறியுமுன்னரே
தடுமாறி வீழ்ந்து தத்தளிப்போர் பலர்.
நிர்பந்தப்படுத்தப்பட்டு நதிக்குள் தள்ளப்பட்டு
மாய்ந்துபோனவர்களுக்கிடையே
பெருமுயற்சியுடன் மீண்டுவந்து
நதியின் போக்கில் நடப்பவர்களும் உண்டு.
வற்றினாலும் பெருகினாலும்…
நதி நதியாகவே இருக்கிறது.
நதி நதியெனவே அழைக்கப்படுகிறது.

அழகான கருவும் வார்த்தையாடல்களும் மனம் ஈர்க்கின்றன ஆதன்.

அதிலும் நதியைப் பற்றிய வர்ணனை பிரமாதம்.

காற்றில் கூர்தீட்ட முயன்று தோற்று விழும் மொன்னை மடிப்புகளையும்,

நகரும் மேகங்களைக் கிழித்து நதிக்குள் பாயும் விசித்திரத்தையும் மிகவும் ரசித்தேன்.

பாராட்டுகள் ஆதன்.

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
26-11-2011, 01:06 PM
நான் படித்த வரையில் ஆதனின் கவிதைக் கருவிற்கான தலைப்பு அவ்வளவு ஒன்றும் பிரதானமாக இருக்காது. ஆனால் அவரது கவிதையைப் படித்த பின்பு அந்த கருவைத் தவிர வேறென்றும் பிரதானமாக இருக்காது. அதையே நிரூபித்திருக்கிறார் இக்கவிதையிலும். சாதாரண நதிதான். படித்த பின் இன்னமும் மனக் கண்ணில் அதுதான் பெருக்கெடுத்து ஓடுகிறது. நன்றி ஆதன்.