PDA

View Full Version : அந்த நாளும் வந்திடாதோ?



M.Jagadeesan
24-10-2011, 02:32 PM
குரங்கு பெடல்போட்டு சைக்கிள் கற்கையில்
கரத்திலும் சிரத்திலும் காயம் பட்டு
கண்ணீர் சிந்திய அந்த நாட்கள்

இச்சைக்கினிய நண்பருடன் கூடி
பச்சைக் குதிரைத் தாண்டியபோது
தடுக்கி விழுந்த அந்த நாட்கள்

எப்போது வருமென்று கடையின் முன்னே
கல்கி இதழுக்காகக் காத்துக் கிடந்து
பொன்னியின் செல்வனைப் படித்த நாட்கள்

மார்கழி மாதம் நடுங்கும் குளிரில்
திருப்பள்ளி எழுச்சியும் திருவெம்பாவையும்
தருமபுரம் சுவாமி நாதனின் குரலில்
விருப்பமுடன் கேட்டு மகிழ்ந்த நாட்கள்

காவேரி வெள்ளத்தில் துடுமெனப் பாய்ந்து
ஆவியை அடக்கி அடிவரை சென்று
கைப்பிடி மணலைக் கொண்டு வந்து
காதலி முன்னே காட்டிய நாட்கள்

காளைப் பருவத்தில் கல்லூரி நாட்களில்
விடுதிக் காவலர் தூங்கிய பின்பு
சடுதியில் சுவர்மீது ஏறிக் குதித்து
எம்ஜியார் சிவாஜி நடித்த படங்களை
நண்பர் குழாத்தொடு பார்த்த நாட்கள்

ஆறுரூபாய் கொடுத்து ஆரிய பவனில்
ஆனியன் ரவாவும் ஆவிபறக்கும் காபியும்
ஆசையுடன் சுவைத்த அந்த நாட்கள்

அப்பாய்மென்ட் ஆர்டர் வந்த போது
அப்பாவும் அம்மாவும் வாங்கிப் பார்த்து
ஆசி வழங்கிய அந்த நாட்கள்

பெண்ணைப் பார்க்கச் சென்றபோது
என்னைப் பார்க்கத் துணிவில்லாமல்
கால் பெருவிரலால் நிலத்தைக் கீறி
கடைக் கண்ணால் அவள் பார்த்த நாட்கள்

கீதம்
27-10-2011, 12:46 AM
ரம்யமான, ரசனையான நினைவுகள் கொண்ட தங்கள் பழைய நாட்குறிப்பொன்றைப் படித்தாற்போலொரு உணர்வு. நினைத்தாலே இனிக்கும் இவை போன்ற நினைவுகள்தாமே சோர்ந்து போகும் காலத்தில் சுரம் சேர்க்கின்றன!

கவிதை படிக்கும் ஒவ்வொருவரையும் அவரவர் இளம்பருவத்தை எண்ணி ஏங்கச் செய்துவிட்டீர்கள். அருமையான கவிதைக்குப் பாராட்டுக்கள்.

M.Jagadeesan
27-10-2011, 01:12 AM
பாராட்டுகளுக்கு நன்றி கீதம்.

vseenu
27-10-2011, 09:32 AM
மிக்வும் அருமையான பழமை நினைவுகள்.பெரும்பாலும் அனைவருள்ளும் இம்மாதிரி நினைவலைகள் கண்டிப்பாக இருந்தே தீரும்.பழமை நினைவுகளுக்கு என்னை ஹைஜாக் செய்து விட்டீர்கள்.ஆக்கியோனுக்கு நன்றி

M.Jagadeesan
27-10-2011, 03:37 PM
சீனு அவர்களின் பாராட்டுக்கு நன்றி.

Nivas.T
01-11-2011, 09:57 AM
அருமையான நினைவுகள்

வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டமும் மிக ரசிக்கத்தக்கது

ரசித்து ரசித்து வாழ்ந்தவருக்கே இத்தனை ஏக்கம் இருக்கவே செய்யும்

கவிதை மிக அருமை ஐயா

நாஞ்சில் த.க.ஜெய்
01-11-2011, 10:25 AM
நினைவுகளை கிளரும் அருமையானதோர் கவிதை ...

M.Jagadeesan
01-11-2011, 02:46 PM
நிவாஸ், நாஞ்சில் த.க.ஜெய் ஆகியோரின் பாராட்டுகளுக்கு நன்றி.

அருள்
01-11-2011, 07:38 PM
கவிதை மிக அருமை ....

M.Jagadeesan
02-11-2011, 12:27 AM
பாராட்டுக்கு நன்றி அருள்.