PDA

View Full Version : அமைதிக்காய் ஆலயத்தில்...



kulirthazhal
24-10-2011, 10:04 AM
நான்
அமைதி தேடி
அமர்ந்திருந்தேன்
ஆலயத்தின் படிமுகட்டில்..,
ஆறுதலாய் அருகமர்ந்தாள்
உறவுக்கார தங்கை..,

என்னிடம்
வார்த்தைகளேதும்
கிடைக்காத போது
நிசப்தமே ஆறுதலாய்..,

அவள்
அனிச்சையாய் வந்தாள்,
அளவாய் பேசினாள்,
குறைவாய் சிரித்தாள்,
புருவங்களை
விழிகளால் முட்டிக்கொண்டு,
தலைகவிழ்ந்து,
பெண்மையோடு இசைந்தது
குழல்.....
இசைத்தது
இதழ்....

போகலாமா
என்று கேட்டு
தங்கையோடு போய்விட்டாள்..
தங்கையை தேடிவந்தவளாய்........

நான்
விழிகளை திறந்தபடி
மேக ஓவியங்களை
வெறித்துக்கொண்டிருந்தேன்
கனவுகளை விரட்டுவதற்கு...

நிஜமும் உறவும்
நெருங்கவேண்டாமென
புலன்களை
முடிச்சிட்டுகிடந்தேன்
பித்தனாக....

ஏதோ ஒரு புரிதல்
பலாத்காரமாய்.....
முடிச்சுக்கயிற்றின்
முனை வழியே
கொடி துளிர்த்து
மலர் மலர்வதாய்...
விழிக்குள் ஏதோ
வாசங்கள் நெருடியதாய்.....

ஏதோ
வசீகரத்தின் ரசாயனங்கள்
காற்றில்
உயிர்குமிழாய்
மனம் பரப்பிகிடப்பதாய்....

ஏதோ
இசை குறிப்பின்
சுரச்சிதறல்
செவிகளுக்காய் அலைந்து
ரீங்காரமிடுவதாய்.....

ஏதோ
ஊண்செயும் விழியம்பில்
நாணம் தோய்த்து
புதுமொழி
புனரப்பட்டதாய்...
இடையிடையே
என்மீதும்
ஏவப்பட்டதாய்....

ஏதோ ஒரு
இதயத்தின் தமிழ்கவிதை
வெட்டவெளியில்
முனகிக்கொண்டு மிதப்பதாய்...

எதையெதையோ
சொல்லிச்சுழல்கிறது
காற்று...

ஆலயத்திலும்
என்
அமைதியை கெடுத்தவள்
அவள்....
ஒரு
சாதிச்சமூகம்
எனக்காய் விதித்த
கசப்பான இன்பம்.,
ரசனையான துன்பம்.,

வேண்டுமென்றே
அவளை
வெறுப்பதற்கு வேண்டிக்கொண்டேன்..,
என் கோயிலுக்குள்
நானே
கடவுள் என்றபோதும் .......

- குளிர்தழல்..,

கீதம்
27-10-2011, 11:01 PM
சாதியின்பால் கொண்ட தீவிர நம்பிக்கை தெறிக்கிறது இறுதி வரிகளில்!

இனத்தின் கட்டுக்குள் அகப்பட்டவன், குணத்தைப் புறக்கணித்து, மனத்தைக் கட்டுவதில் வியப்பென்ன?

ஆயினும் கவிதையைக் கட்டியவிதம் வெகு அருமை.

நடைமுறையை நன்றாக உரைக்கிறது கவிதை. பாராட்டுகள்.

vseenu
28-10-2011, 12:36 AM
நான்
வேண்டுமென்றே
அவளை
வெறுப்பதற்கு வேண்டிக்கொண்டேன்..,
என் கோயிலுக்குள்
நானே
கடவுள் என்றபோதும் .......

அருமையான மனக்குமுறல் அழகான கவிதை வரிகளில்!நன்றி.