PDA

View Full Version : காத்திருப்பு...



PremM
15-10-2011, 09:01 PM
கலைந்தவள் கரை சேர்கிறாள் இன்று..
அவள்,
கனவிலும் எனைக் கரைத்தவள்..

கண் ஜாடைகளின்
மை தீர்ந்துப் போனதோ?
வார்த்தைகளின் வாசல்
வரைச் சென்றுவிட்டாள்?

உதிர்ந்திடும் முதல் வார்த்தை ,
உடையாமல் உதிர்ந்திடுமா?
உடைந்தாலும் பரவாயில்லை,
உதிராமல் மறுத்திடுமோ?

தூரத்து நிலவொன்று என் வானம் தேடி வருகையிலே,
கண்ணாடி மேகங்களை கடனாய்க் கேட்கிறேன்,
வண்ண நட்ச்சத்திரங்களை வாடகைக்குப் பார்க்கிறேன்..

சாத்தியம் இல்லாதபோதும் மன்றாடிப் பார்ப்பேன்,
உன்னை படைத்தவன் மறுத்தால் அதை பொறாமை என்பேன்..

உனைப் படைத்தவனை எண்ணி தினமும் நான் வியக்க,
அவனாக நானிருந்தால் உனை பூமியில் தர மறுப்பேன்..


அடிவயிற்றின் கதகதப்பில் காத்திருக்கும் குழந்தைப் போல,
அடிநெஞ்சின் கதகதப்பில் காத்திருக்கும் என் காதல்..

அவள் பார்வையின் கணம் வார்த்தைகளுக்கும் இருந்திடுமோ?
பார்வையின் மொழி போல வார்த்தைகளும் இனித்திடுமோ?

இப்படி புரியாத புதிர் போல பல கேள்வி என்னுள்ளே,
பதில் தேடும் எண்ணமில்லை,
புதிர்களையே காதலித்தேன்...

வார்த்தைகளை வடிகட்டி
கவிதை ஒன்றை எழுத நினைத்தேன்,
சுமைத் தாங்க முடியாது,
முழுவதுமாய் கொட்டித் தீர்த்தேன்..

உன் கண்ணிமைகளைப் படித்தபடி கவிதைகளை நான் வடித்தேன்,
உன் காலடி கொலுசுகளாய் கவிதைகளை நான் கோர்ப்பேன்..

மரணிக்கும் நொடிகளெல்லாம் கல்லறைக் கட்டிக் கொள்ள,
காத்திருக்கும் நொடிகள் மட்டும் காதலில் பரிசாகும்,,

வானத்து நிலவாய்,
தரை இறங்கி வருகின்றாள்,
கவிதைகளே கொஞ்சம் தள்ளி இருங்கள்,
அவள் அழகின் நெடி உங்களையே வீழ்த்திவிடக் கூடும்..

vseenu
16-10-2011, 12:23 AM
உனைப் படைத்தவனை எண்ணி தினமும் நான் வியக்க,
அவனாக நானிருந்தால் உனை பூமியில் தர மறுப்பேன்..
கற்பனை அற்புதம். கவிதை அருமை. நன்றி

கீதம்
20-11-2011, 10:39 PM
காத்திருக்கும் நேரத்தில் கடவுளிடமும் காதலியிடமும், கவிதையிடமும் முன்வைக்கப்படும் கோரிக்கைகளின் பட்டியல் பார்த்தாலே பரவசப்படுகிறதே உள்ளம். ஆழமான காதலின் அற்புத வெளிப்பாடாயொரு அழகுக் கவிதை. பாராட்டுகள் PremM.

PremM
14-01-2012, 08:02 AM
தங்கள் பின்னூட்டத்திற்க்கு நன்றி seenu... :)

பாராட்டுக்கு நன்றி கீதம்..

தங்களின் பின்னூட்டங்கள் எல்லாம் எழுதும் பேனாவில் மை ஊற்றிவிட்டே போகிறது..

govindh
14-01-2012, 11:26 AM
"பதில் தேடும் எண்ணமில்லை,
புதிர்களையே காதலித்தேன்...!"

காத்திருப்பு...
காதல் பொறுப்பு...!

கவி அழகு..
வாழ்த்துக்கள் பிரேம்.